Advertisement

அத்தியாயம் 25 
கோலாகலக் கொண்டாட்டமாக மூன்று நாட்கள் விமரிசையாக கொண்டாட்டங்களோடு நடந்து முடிந்தது வருணா, ஸ்ரீதரின் திருமணம். தன் திருமணத்தில் செய்யாத அத்தனைக்கும் சேர்த்து வைத்து இரு மடங்காய் கொண்டாடினான் ரிஷி. நிச்சியகார்தம், முகூர்த்தம், வரவேற்பு என மூன்று நாட்கள் உறவுகளும், நட்புகளும் நிரம்பி வலிய, அனைவரும் ஆசிர்வதித்து வாழ்த்திச் சென்றனர். ரிஷியும் மகிழ்நிரதியும் தம்பதிகளாக நிறைந்த மனதோடு முன்னின்று சடங்குகளை செய்தனர்.
ஸ்ரீதர் வீட்டிலிருந்து விருந்துக்கு வந்திருந்தவர்கள், விருந்து முடிந்து கலிபோர்னியா கிளம்புவதாக இருந்தது. ஸ்ரீதருக்கு அவசர வேலை வருணாவும் இரண்டு வாரத்தில் அங்குக் கல்லூரியில் சேர இருப்பதால் இருவருமாகக் கிளம்பினர். நேனோ டெக்னாலஜியில் ஆர்டிபிசியண்ட் இண்டலிஜெண்ட் செயற்கை கைகால் உருவாக்குவது குறித்த ஆராய்ச்சியில் இருந்தது வருணாவின் ஆர்வம்.
நிச்சியகார்தம் மட்டும் முடித்து விட்டுச் செல்வதாக ஸ்ரீதர் எண்ணியிருக்க, மகிழ் தான் வருணாவின் படிப்பு பற்றியும் அவளுக்கு அங்கு கல்லூரியில் இடம் கிடைத்திருப்பதால் உடன் அழைத்துச் செல்லுமாறு உரைத்து திருமண பேச்சு வார்த்தைகளையும் ஆரம்பித்து வைத்தாள். 
அறையில் வருணா அவள் உடைமைகளை ஒரு முறை சரி பார்த்துக்கொண்டிருக்கக் குளியலறையிலிருந்து வந்தான் ஸ்ரீதர். 
பிளாக் டாப், ப்ளூ ஜீன்னில் இருந்தவளின் அருகே வந்தவன் பின்னிருந்து தன்னோடு அணைத்தான். சில நிமிடங்கள் மௌனமாக அவன் தோள் சந்திருந்தவள், “ஸ்ரீ டைமாச்சு கிளம்ப வேண்டாமா?” என்றாள் மென் குரலில். 
வேண்டாமே..என ராகமாக இழுத்தவன் புது மனைவியின் கழுத்து வளைவில் முகம் புதையக் கொஞ்சினான். 
பிளைட்க்கு டைமாச்சு..கதவு திறந்திருக்கு ஸ்ரீ..மகி வரா பாருஎன ஆரம்பித்த வருணாவின் குரல் மெல்ல மெல்லக் குறைந்தது அவனிட்ட நீண்ட இதழ் முத்தத்தில். 
இந்த தொடக்கத்தின் முடிவு எவ்வாறிருக்கும் என அவளறிவாள் ஆகையால் தன்னிடமிருந்து அவனை விலக்கியவள் தன் கையிலிருக்கும் ஸ்டிக்கால் அடித்துக் கிளம்புமாறு உரைக்க, “உங்க வீட்டுன்னு மிரட்டுற? அங்க வாடி உன்னை கவனிச்சிக்கிறேன்என சிரிப்புடன் கண்ணடிக்கச் சிவந்த முகத்துடன் திரும்பினாள். 
இரவு உணவிற்குப் பின் ரிஷி அவர்களை ஏர்போர்ட் வரை அழைத்துச் செல்ல கிளம்ப, ஸ்ரீதர் உடைமைகளோடு முன்னே செல்ல வருணா மகிழிடம் விடைபெற்றாள். கலங்கிய விழிகளோடு மகிழ் வருணாவை இறுக அணைத்துக் கொள்ள, வருணாவிற்கும் விழிகள் கலங்கியது. உறவு தாண்டிய அவர்கள் நட்பு தானே இருவரையும் இணைத்து வைத்திருந்தது. 
மகி நீ எனக்கு அண்ணியா மட்டுமில்லாம அம்மாவா இருந்தும் எல்லாம் செஞ்சிட்ட, இதுக்கெல்லாம் தேங்க்ஸ் செல்ல மாட்டேன். நீ செஞ்சதுக்கெல்லாம் திருப்பி செய்யவும் என்கிட்ட எதுவுமில்லை! ஆனால் உங்கிட்ட இன்னும் கேட்கிறதுக்கான உரிமை இருக்குன்னு நினைக்கிறேன்என அவள் தோள் சாய்ந்திருந்தபடி கேட்டாள். 
அவளை நிமிர்த்தியவள் விழிநீரைத் துடைத்தபடி என்னவென விழிகளால் கேட்க, “ரிஷியை பார்த்துக்கோ! அவன் எனக்கு அண்ணன் மட்டுமில்லை எனக்குன்னு எங்கம்மா விட்டுவிட்டுப் போன ஒரே உறவும் அவன் தான். எப்பவும் அவன் நினைப்பெல்லாம் என்னோட நலனைப் பத்தி தான் இருக்கும். அவனைப் பத்தி யோசிக்கக் கூட மாட்டான், எப்பவும் வேலை வேலைன்னு சுத்துவான், இனி நீ தான் அவனை கவனிச்சிக்கணும் உனக்குத் தான் அதுக்கான உரிமையும் இருக்கு. இதை நான் சொல்லவேண்டிய அவசியமில்லலை நீ ரிஷியை நல்லா பார்த்துப்பேன்னு எனக்குத் தெரியும். நான் அடிக்கடி வந்து பார்க்கிற தூரத்துல இல்லை, எங்கம்மாவும் இல்லை, இனி நீ தான் அவனுக்கு எல்லாமுமா இருந்து பார்த்துக்கணும்என அவள் கைகளைப் பற்றினாள் வருணா. 
மகிழுக்கு நெஞ்சில் கணமெறியது போல் வலிக்க, விழிகளிலிருந்து கண்ணீரும் வழிந்தது. வருணாவை கலங்க வைக்கக் கூடாதென நினைத்தவள் தலையாட்டி விடை கொடுத்தாள். 
தங்கை கூறிய அதே வார்த்தைகளை வெளியே ஸ்ரீதரிடம் ரிஷி உரைத்துக் கொண்டிருந்தான். மகிழ் வாசல் வரை வந்து இருவருக்கும் விடை கொடுக்க ரிஷி அழைத்துக் கொண்டு ஏர்போர்ட் கிளம்பினான். 
மாலை வரை ஸ்ரீதரின் அன்னை, நண்பர்கள் என அனைவரும் அவர்களோடு தான் இருந்தனர். மாலை அனைவரும் விடை கொடுத்தது கிளம்பிவிட, தற்போது இவர்களும் கிளம்பிவிட வீடே அமைதியாக இருந்து. ரிஷி திரும்பி வர சில மணி நேரங்கள் வரையேனும் ஆகும். 
மகிழ் அவள் உடைமைகளை எடுத்த வைத்துவிட்டு அமைதியோடு பால்கனி ஊஞ்சலில் சென்று அமர்ந்தாள். ஆளற்ற நிசப்தமும் இரவின் இருளும் எதுவுமே அவளின் கருத்தில் பதியவில்லை. மனதில் நிறைந்திருந்ததெல்லாம் ஒன்று தான், இங்கு தனக்கான வேலை முடிந்து விட்டதாக எண்ணினாள். 
வருணாவிற்காக தானே தன்னை அழைத்து வந்தான், தற்போது தான் என் தேவை இங்கு இல்லையே! இனி இங்கிருக்க வேண்டிய அவசியம் தான் என்ன? இங்கிருந்து கொண்டு ஒவ்வொரு நாளும் கிடைக்காத அவன் அன்பிற்கும் அணைப்பிற்கும் ஏங்க வேண்டுமா
கிளம்பும் போது வருணா கூட அவள் அண்ணன் குறித்து எண்ணினாலே தவிர, தன்னை பற்றி கவலைப்படவில்லை என்ற இயலாமையும் ஏக்கமும் அவளை அழுத்த அவளையும் மீறி அழுது கொண்டிருந்தாள். ரிஷியிடம் என்ன சொல்லிவிட்டுச் செல்வது, சொல்லாமல் சென்றிடுவோமா? தந்தை கேட்டால் என்ன சொல்வது? என்றெல்லாம் மனம் கேள்வி சுழலோடு சுழல அப்படியே கண்ணயர்ந்திருந்தாள்.
உடலெல்லாம் வலித்தது, கன்னங்களும் கழுத்தும் கதகதப்பாய் எரிந்தது. இமைகளிரண்டும் இம்மியளவும் திறக்க முடியாது அழுத்த மேலும் சுருண்டு படுத்தாள். இடுப்பில் இருந்த கையின் அழுத்தமும் கன்னத்தில் உணர்ந்த உஷ்ணமும், ஈரமும், வியர்வையின் கசகசப்பும் மகிழை விழிக்கச் செய்தது. 
விழிக்கையில் தான் உணர்ந்தாள் ரிஷி இழுத்தணைத்திருக்க, அவன் மார்பில் தான் படுத்திருப்பதை! அவனுடல்  உஷ்ணத்தையும் தன்னுடல் குழுமையும் உணர, ரிஷிக்கு காய்ச்சல் என்பது மகிழுக்குப் புரிந்தது. நெற்றியிலும் கழுத்திலும் கை வைத்து பார்க்க லேசான உஷ்ணமிருந்தது. மாத்திரை எடுத்திருந்திருந்திருப்பான் போலும் மார்பு உடல் முழுவதும் வியர்த்திருந்தது. 
அவன் சட்டையைத் தளர்த்தியவள் துடைக்க எண்ணி தன் புடவையை இழுக்க அப்போதே தான் இரவு உடையில் இருப்பதை உணர்ந்தாள். ஊஞ்சலில் உறங்கியது வரை மட்டும் தான் மகிழுக்கு நினைவிலிருந்தது. எழுத்து மணியைப் பார்க்க அதிகாலை மூன்று. ஒரு டவலை ஈரப்படுத்தி அவன் நெற்றியில் வைத்தவள் உடை தளர்த்தித் துடைத்தும் விட்டாள். 
அப்போதும் உறக்கத்திலிருந்தவன் அவள் கைகளின் உஷ்ணம் மேலும் வேண்டி அவளை இழுத்து அணைத்துச் சுருண்டு படுத்தான். மகிழுக்கு அன்றைய நாள் நினைவில் வந்தது, அன்று போல் இன்றும் சுயநினைவின்றி அணைத்ததாகத் தான் நினைத்தாள். இவனை விலக நினைக்கும் நிலையில் ஏன் இந்த நெருக்கமென விதியை நொந்தாள்
ஆனால் ரிஷி நன்றாக மகிழை உணர்ந்திருந்தான். அவள் ஸ்பரிசம் அன்றே அவனறியது அவன் அணுக்களில் எல்லாம் படிமமாய் படிந்து விட்டது, அவள் சிறு வருடலையும் சுயநினைவின்றியும் அவனால் அடியாழம் காண முடியும். ஆனால் இன்றோ சுயநினைவோடு தானிருந்தான். தான் ஒரு பெண்ணுடலை அணைத்திருப்பதை ரிஷியால் உணர முடிந்தது, ஆனால் அது மகிழ் என்பதாலோ அமைதியா ஏற்றவன் அமைதியாக அவள் கழுத்தில் முகம் புதையத் தோள் சாய்ந்து உறங்கினான். 
மகிழ் தான் தவித்துக் கொண்டிருந்தாள். இவன் இல்லாது எவனையும் ஏற்க இயலாதென திருமணத்தை நிறுத்த, இவனோ தான் இல்லாது எந்த பெண்ணையும் ஏற்கும் நிலையில் இருக்கிறான். வருணாவிற்காக பொய் சொல்லி மணந்தவனிடம் காதலை எதிர்பார்த்து முட்டாளாகி இருக்கிறேன். எங்கோ ஏன் தூய அன்பு பொய்த்து விட்டது, இவன் மீதான என் என்னை பலவீனப்படுத்திக்கொண்டு அடிமைப் படுத்திக்கொண்டே இருக்கிறது. அவனை விலக நினைத்து அவள் யோசித்துக் கொண்டிருக்க அவன் மீசை கன்னத்தில் உரசிய சிறு தீண்டலுக்கும் அவளுடல் சிலிர்த்தது. 
இவன் அருகாமை தானே என்னை உறுகச் செய்கிறது, இந்த எதிர்பார்ப்பு தானே என்னை ஏமாற வைக்கிறது 
என்றெண்ணியவள் கண்ணீரோடு ரிஷியை விட்டு விலகி எழுந்தாள். ரிஷியைத் தொட்டுப்பார்க்க உறக்கத்திலிருந்தான் காய்ச்சல் முற்றியிலும் குறைந்திருந்தது. 
அவள் உடைகள் எடுத்து வைத்திருந்த பை திறந்திருக்கஅதிலிருந்து ஒரு புடவையை எடுத்துச் சென்றவள் குளித்து உடைமாற்றி வந்தாள். தலைவாரி கிளம்பியவள் தன் உடைமைகளையும் பேக் செய்து விட்டு கண்ணாடி முன் அமர்ந்தாள். ஒரு நொடி யோசித்தவள் ஒரு பேப்பர் பேனாவை எடுத்துக் கொண்டு கண்ணாடி முன் அமர்ந்தாள். 
என்ன எழுதுவதென்று தெரியாது கண்ணீர் வழிய கைகளால் துடைத்த நொடி, “என்ன செய்கிறாய் மகிழ்?” எனக் கேட்டபடி ரிஷி படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தான். 
சற்றும் எதிர்பாராது அதிர்ச்சியோடு திரும்பிய மகிழ் ஒரு நொடி தயங்கி நிற்க, ரிஷி அவள் முகத்தையும் அவள் பைகளையும் பார்த்தான். அவன் பார்வை உணர்ந்து சற்றே குரல் எழ, “ஊருக்கு போறேன்என்றாள். 
ம்ம், எப்போ வருவ?” என்ற அவன் கேள்வியே அவள் இல்லாது தன்னால் இருக்க இயலாது என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தியது. நேற்றிரவே அவள் பைகளைப் பார்த்து விட்டான். ஊருக்குச் சென்றால் அங்கிருக்கும் உடைகளைப் பயன்படுத்திக் கொள்வாள் இல்லை ஒன்றிரண்டு உடைகள் எடுத்துச்சென்றாலும் போதும் இப்படி மொத்த உடைகளையும் ஏன் எடுத்து வைத்துள்ளாள் எனக் குழப்பிப் போயிருந்தான்.
சொல்லாதே என்றாலோ ஏன் செல்கிறாயே என்றாலோ பதில் சொல்லலாம் எப்போது வருவாய் என்றால் என்னவென்று சொல்வாள்? மகிழ் அமைதியோடு நிற்க ரிஷி எழுந்து வந்து அவள் முன் நின்றான். அவள் கைகளிலிருந்த காகிதத்தை வாங்கி கசக்கி எறிந்தான். 
அவள் முகம் பார்த்து, “அன்னைக்கு சொல்லாம போனேன்ன ஒன்னு என்னைத் தவறா நினைச்சி இருக்கலாம், இல்லை உன்னைத் தவற நினைச்சிடுவேனோன்னு எண்ணியிருக்கலாம். ஆனால் இப்போ ஏன் மகிழ் சொல்லாம கிளம்புற? அவ்வளவு தானா? நமக்கு உறவுக்குத் தான் அர்த்தம் என்ன?” என்றான் வேதனையுடன். 
அவன் கேள்வி என்னவோ அவளைக் குற்றவாளியாக்க நான் ஏன் இனி இங்க இருக்கணும்?” என்றாள்.
ரிஷி புரியாத பார்வையுடன், “ஏன் மகிழ்? இவ்வளவு நாள் இல்லாம திடீரென கிளம்பி இருக்க? என் மேல எதுவும் கோபமா? அன்னைக்கே கேட்டேனே?” என்றான் பொறுமையாக. 
அதன் வருணா மேரேஜ் பண்ணி போயிட்டாளே இனி நான் இங்க இருக்க வேண்டிய அவசியம் என்ன?” எனக் கேட்கும் போதே மகிழ் கலங்கி அழுதிட, ரிஷிக்கு முகத்தில் அடித்தது போன்றிருந்தது. 
அப்போ வருணாவுக்காக தான் இங்க இருந்தியா?” என்ற ரிஷிக்கு அவள் நேசம் எங்கே சென்றது என்ற கேள்வி. ஏதோ ஒரு இடத்தில் தன் செயலால் அவள் காயம் கொண்டுள்ளாள் என்பது புரியப் பொறுமையோடு விலக்க முயன்றான். 
ஆனால் நீங்க வருணாவுக்காக தானே என்னைக் கல்யாணம் செஞ்சிக்கிட்டீங்க?” என மனம் தாங்க ஆதங்கத்தோடு மகிழ் வெடித்தாள். அத்தனை நாள் ஆற்றாமையும் ஆதங்கமும் அழுகையாக வெடித்தது. அப்போதும் அவளுக்குக் கோபம் வரவில்லை, இயலாமையில் தவித்தாள். 
ரிஷிக்கு இந்த வார்த்தைகள் பெரும் அதிர்ச்சியாக இருக்க, அவன் அழுகை வேறு குற்றவுணர்வை தர, மகிழை நெருங்கி அவள் தோள்களைப் பற்றி முகம் நிமிர்த்தினான்.
நான் வருணாவுக்காக உன்னைக் கல்யாணம் பண்ணேனா? யாரு அப்படி சொன்னா சொல்லு? நான் எப்போவாவது வருணாவை கவனிச்சிக்க சொல்லி, அவளுக்கு பணிவிடை செய்யச் சொல்லியிருக்கேனா? என்னைக்காவது உன்னை அப்படி ட்ரீட் பண்ணியிருக்கேனா?” 
மகிழ் சில நிமிடங்கள் யோசித்து நின்றாள். ஒரு போதும் ரிஷி அவ்வாறு அவளிடம் சொல்லியதுமில்லை, கீழாக நடத்தியதுமில்லை. அவளாகச் செய்கையில் தடுக்கவுமில்லை. 
என்னால பத்து நர்ஸ் ஐந்து டாக்டர் வைத்து வருணாவை கவனித்துக் கொள்ள முடியும். அப்படியே நீ தான் வேணும்னாலும் உன்னையும் வேலைக்கு வைக்க என்னால முடியும். அப்படி இருந்தும் உன்னை ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு யோசிக்க மாட்டியா? கல்யாணம் லைப் டைம் கமிட்மெண்ட், வருணாவுக்கு மட்டுமில்லை எனக்கும் நீ வேணும், என் வாழ்க்கை முழுக்க நீ வேணுங்குற சுயநலம் தான்” 
உங்க சுயநலத்தால என் மெல்லிய உணர்வுகளை கொன்னுட்டீங்களே! முன்ன உங்கிட்ட எதிர்பார்ப்புகள் எதுவுமில்லை, ஆனால் எப்போ நீங்களும் என்னை விரும்புறதா சொன்னீங்களோ அப்போயிருந்தே சின்ன சின்னதா ஆசைகளை வளர்த்துக்கிட்டேன், காதல் கல்யாணமென்னு கனவுல இருந்தேன்.  ஒரு மனைவியா உங்களை நோக்கி சின்ன சின்ன எதிர்பார்ப்புகளோட நான் இருந்தது தவற? உங்க தங்கச்சி, உங்க வீடு, உங்க நிம்மதின்னு இருந்துட்டு என்னைப் பத்தி யோசிக்கவே இல்லையே நீங்க
உங்க சுயநலத்துல என்னை ஏங்க வைச்சிட்டீங்க, உங்களோட இல்லாத போது கூட உங்க நினைவோடு இருந்தேன், நான் அப்படியே இருந்திருப்பேனே! ஏன் என்னை இப்படி தவிக்க வைச்சீங்க? நீங்க சொன்ன ஒரு பொய் எனக்கு எவ்வளவு பெரிய ஏமாற்றம் வலி தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலை ரிஷி,நெஞ்செல்லாம் வலிக்குது! ஏன் என்னைக் காதலிக்கிறதா பொய் சொல்லி கல்யாணம் செய்தீங்க?” அவன் சட்டையை பிடித்து அழுகையோடு விம்மிக்கொண்டே கேட்டாள். 
மகிழின் கண்ணீர் அவன் நெஞ்சைக் கசக்கிப் பிழிய வேதனையோடு அவளை நெஞ்சோடு அணைத்தான்.பொய் தான் மகிழ். அப்போ உன் மேல எனக்குக் காதல் இல்லை, உங்க அப்பாகிட்ட பொய் சொல்லித் தான் உன்னைக் கல்யாணம் செய்தேன். அந்த பொய் தவிர நம்ம கல்யாணம் நடக்குறதுக்கு வேற ஆப்ஷன்ஸ் இல்லை, அதான் அப்படி சொன்னேன். நீயே நல்லா யோசித்து பாரு, வேற என்ன சொல்லிக் கேட்டாலும் உங்க அப்பா நம்ம கல்யாணத்தை ஏத்துப்பாரா
பொய் தான் சொன்னேன் ஆனால் உன்னை ஏமாத்தணும்னு நினைக்கலை. அந்த பொய்ய உண்மையாக்கிக்க தான் நினைச்சேன். கல்யாணத்துக்கு முன்ன உன் மேல காதல் இல்லை, நீ கடைசிய இந்த வீட்டு இன்விடேஷன் கொடுக்க வந்த போது கூட அவ்வளவு தானா உன் காதல்னு உன்னைத் தான் இளக்காரமா பார்த்தேனே தவிர பொறாமை வரலை.  அன்னைக்கு நைட் நீ என்னை கவனிச்சிக்கட்டது என் நினைவில இல்லை, ஆனால் என்னுள்ள பதிச்சி இருக்குன்னு இப்போ சில மணி நேரத்துக்கு முன்ன தான் நானே உணர்ந்தேன். 
எங்க அம்மாவை இழந்த போது அன்புக்காக தவிச்சேன், வருணாவை படுக்கையில பார்க்கும் போது நான் உடைச்சே போய்ட்டேன். எனக்கே ஒரு நம்பிக்கையும் தைரியமும் தேவையா இருந்தது. அப்போ ஒரு பைத்தியக்காரன் மாதிரி குழம்பிப் பொய் என்னென்னவோ தவறான முடிவுகள் எல்லாம் எடுத்தேன். எங்க அம்மா தர அரவணைப்பை உங்ககிட்ட மட்டும் தான் என்னால உணர முடியுமென்னு புரிஞ்சிகிட்டேன். உன்னைக் காதலோடு தேடலை அதற்கும் மேல எங்க அம்மாவிற்கு நிகரான பேரன்பிற்காக தேடுனேன். வருணாவுக்காகன்னு சொன்னது என்னைய நானே சமாதானப்படுத்திக்க தான். இதுவே உனக்குக் கல்யாணமாகி இருந்தா நான் உன்னை தொந்தரவு செய்திருக்க மாட்டேன். 
காதல் இல்லாம தான் கல்யாணம் பண்ணேன் ஆனால் என் வாழ்க்கை உன்னோட தாங்கிற உறுதியோட தான் இருந்தேன். என் பேரன்ஸ் மாதிரி நாமளும் வாழங்கிறது தான் அப்போதைய என் வேண்டுதல். நான் எப்படியோ நீ என்னை நேசித்து உண்மை அந்த நொடிகளில் நீயாவது சந்தோஷமா அனுப்பிவிக்கணும்னு  தான் உங்கிட்டையும் உண்மைய சொல்லாம வருணாவோட நிலை பற்றியும் சொல்லாம இருந்தேன். என்னால உனக்குச் செய்ய முடிச்சது அது தான்! 
ஆனால் நான் சொன்ன ஒரு பொய் உன்னை இவ்வளவு காயப்படுத்தும்னு எனக்குத் தெரியாது, என்னை மன்னிச்சிடு மகிழ்என்றபடி விழியிரண்டும் கலங்க அவள் மண்டியிட்டான். 
மகிழ்நிரதி  உறைந்து போய் சிலையாய் நிற்க, “இத்தனை நாள் என்கூட இருந்தும் என் நேசம் உனக்கு புரியலைக்குறது திரும்ப நீ லெட்டர் எழுத உக்காந்திருக்கிறதுலே தெரியுது. நீ போகணும்னா தாராளமா போ, நான் தடுக்க மாட்டேன். அம்மா, தங்கச்சின்னு எல்லாரும் போயிட்டாங்க நீயும் போயிடுஎனக் கத்தினான். 
யாருமற்ற நிலையில் வாடுபவனை நீயும் விட்டுச் செல்வாயா? அவள் காதல் மனது அவனுக்காக கேள்வி கேட்டது. மண்டியிட்டு அமர்ந்த மகிழ் அவனை இழித்து அணைக்க, சிறுவன் போலே அவள் தோள்களில் சாய்ந்தே சரணடைந்தான். தளர்ந்திருந்தவனை இறுக்கி அணைத்தவள், முதுகில் தட்டிக்கொடுக்க, நிமிர்ந்த ரிஷி என்னை விட்டுப் போக மாட்டில்ல?” என்றான்அவளிடமிருந்து உறுதியான பதிலை எதிர்பார்த்து. 
மகிழ் மறுப்பாய் தலையசைத்து அவன் நெற்றியில் இதழ் பதிக்க, விழி மூடி அதை அனுமதித்தவன் ஆழ்ந்து அனுபவித்தான். ரிஷியின் சூடான கன்னங்களில் முத்தமிட்டு இதழ்களைக் கடக்க, அவன் மூச்சுமுட்டும் அளவிற்கு முத்தமிட்டத் துவங்கினான். கண்ணீர் வழிந்த கன்னங்கள் முழுவதும் சிவக்க, மெல்லத் தன்னை மறந்த நிலையில் பறக்கத் தொடங்கினாள் மகிழ். 
ரிஷி மகிழை மலர்க்குவியலாய் நெஞ்சோடு அள்ளி கட்டில் நோக்கி நடக்க, சற்றே விழித்திறந்தவள் அவன் சட்டையை இறுகப் பற்றிக்கொண்டு, “ஐயோ இறக்கி விடுங்க ரிஷி பயமா இருக்குஎனக் கத்தினாள். 
பயமா இருந்தா இன்னும் என்னை இறுக்கி அணைச்சி பிடிச்சிக்கோஎன அவன் காதல் ரகசியமாகப் பேச,பேசியது தன் கணவன் தானா என்ற வியப்பில் வாயடைத்துப்  போக பார்த்தவள், “இதெல்லாம் இல்லை, உங்களுக்கு ஏற்கனவே உடம்புக்கு முடியலை இறக்கி விடுங்க ரிஷிஎன்றாள். 
நேத்து தான் காய்ச்சல், அப்போவே உன்னை ஊஞ்சல்ல இருந்து கட்டில் வரைக்கும் தூக்கிட்டு வந்தேனே! இப்போ உன் கவனிப்புல நல்லா தானே இருக்கேன் அப்பறம் என்ன? சும்மா நான் உன்னை விரும்பலை  உன் மேல ஆசையே இல்லைன்னு நீயா நினைச்சிக்க வேண்டியது ஆனால் நேசத்தை காட்டுற வாய்ப்பே கொடுக்கிறதில்லை நீ!என்றான் இதழ் குவித்தபடி அவள் நெற்றியில் உரசி. 
மீண்டும் மகிழ் ஏதோ சொல்லவர அவள் இதழ் சிறைப்படுத்தியவன் மெல்ல அவள் காதலில் கரையைத் தொடங்கினான். நெகிழ்ந்திருந்த இருவருமே ஒருவர் ஆளுகையில் ஒருவரெனச் சுகமாய் கரைந்தனர். மயக்கத்தில் கூட தன் வாழ்வின் மகிழ்ச்சி அவள் தானென உருகினான். மகிழ் எதிர்பார்ப்பிற்கும் மேலாக அவளைக் கொஞ்சிக் கொண்டாடி மகிழ் தீராத மயக்கத்தில் மூழ்கினாள். காத்திருந்து சேமித்த காதலை வெளிப்படுத்துவதில் கொடுப்பதும் எடுப்பதுமாகத் தீரா காதலில் அமிழ அந்த முழுநாளும் அவர்களுக்கான நாளாகியது. 
மறுநாள் காலைநேரம் ஜாக்கிக் முடித்து வைத்து தோட்டத்து நாற்காலியில் அமர்ந்திருந்தான் ரிஷிநந்தன். அவனைக் கவனித்த மகிழ் கையில் இருவருக்குமான காஃபியோடு அருகே வந்தாள். 
வருணா கால் ஆர் மெசேஜ் பண்ணாலா?” என்க, “ம்ம், ரீச் ஆகிட்டதா மெசேஜ் பண்ணா, வீட்டுக்கு போயிட்டு கால் பண்ணச் சொன்னேன்என்றபடி அவன் முன் காஃபி கோப்பையை நீட்ட, வாங்கி கொண்ட ரிஷி அவள் அருகில் அமர இருப்பதை உணர்ந்து சட்டென அவள் கரம் பற்றி மடியில் அமர்த்தினான்
அவன் மூக்கோடு மூக்கை உரச, “இன்னைக்கு ஆபீஸ் போகலைஎன்க, “ஏன்..?” என்றாள் மகிழ். 
அதான் பேக்கிங் எல்லாம் முடிச்சிட்டியே இப்படியே மணலி கிளம்பிடுவோம், இப்போ நல்ல சீசன்எனக் காதோரம் உரைத்தபடி அவள் கன்னத்தில் முத்தமிட,
இப்போ கோவிலுக்கு போய்ட்டு அப்படியே அப்பாக்கிட்ட போய் சொல்லிவிட்டுக் கிளம்பலாம்என நிறைந்த மனதாய் அவள் உரைக்க உற்சாகமானான் ரிஷி. 
ரிஷி கடந்து வந்த வலிகளுக்கு முன்  அவள் ஏமாற்றம் சிறிதாகிவிட அவன் உரைத்த பதில்கள் அவன் நிலையில் ஏற்புடையதாக இருக்க ஏற்றுக்கொண்டாள் மகிழ். அவன் உரைத்த பொய்யை மெய்யாக்கிட நிறைந்த மனதோடு ஏற்றாள் மகிழ்நிரதி. அவன் மீதா அவள் பேரன்பின் முன் பிரபஞ்சமும் சிறிதாகத் தெரிந்திடக் காலம் முழுவதும் காதலோடு அந்த அன்பை அனுபவிக்கத் தொடங்கினான் ரிஷிநந்தன்
***நன்றி***

Advertisement