Advertisement

அத்தியாயம் 23
பொன்மாலை நேரம் பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஹாலில் ரிஷி நந்தன், மகிழ்நிரதியின் வரவேற்பு நடைபெற்றுக்கொண்டிருந்தது. வண்ண மலர் மேடையின் நடுவே மலர்ந்த முகத்தில் நிறைந்த புன்னகையோடு ரிஷி, மகிழ் நின்றிருந்தனர். வருபவர்கள் அத்தனை பேரையும் நின்று கவனிக்க வைத்தது அவர்கள் உடுத்தியிருந்த பிரேத்தேக உடைகள் தான். ரிஷி ராயல் ப்ளூ நிறத்தில் கோட் சூட்டும், அதே நிறத்தில் ஆடை முழுதும் பொன்னிற நுண்ணிய வேலைப்பாடுகள் நிறைந்த லேகங்காவும், அதற்குப் பொருத்தமான நீலக்கல் பொறிக்கப்பட்ட வைர நகைகளும், சிகையலங்காரத்துடன் தேவதையாய் மின்னினாள் மகிழ்நிரதி. 
ஒருபுறம் மெல்லிய இசை இசைத்துக்கொண்டிருங்க, கீழே வட்ட வடிவ மேசைகளில் தனித்தனியாக விருந்தினர்கள் அமர்ந்திருந்தனர். பல மாநில உணவு வகைகளும் விருந்தாய் பரிமாறப்பட, முதல் மேசையில் வருணாவும் அவள் தோழிகளும் அமர்ந்திருந்தனர். மறுபுறம் மகிழின் தந்தை குணசீலனும் அமர்ந்திருந்தார். 
ரிஷியின் உறவினர்கள், பள்ளிக்கால நண்பர்கள், தொழில் வட்டார நண்பர்கள், பெற்றோர்களின் நண்பர்கள், அலுவலக நண்பர்கள் என அத்தனை பேரும் வந்திருக்க, ஒவ்வொருவராய் வந்து வாழ்த்திச் சென்ற வண்ணம் இருந்தனர். வாழ்த்தியவர்களையும் இருவரின் முகத்திலிருந்த புன்னகையும் காண அவள் தந்தைக்கு மனம் நிறைவாய் இருந்தது. ரிஷிக்குப் பொருந்தமான மகிழின் அழகு, வருணாவின் இந்நிலையிலும் அவனை ஏற்றுக்கொண்ட அவள் அன்பு என மகிழ் நிறைவாய் இருக்க, அவர்களால் ஒருவார்த்தை கூட குறைவாகச் சொல்ல இயலவில்லை. அதுமட்டுமன்றி காதல் திருமணம் எனக் கேள்வியுற்றதால் ரிஷியின் விருப்பத்திற்குறியவளை உறவாய் ஏற்றனர். 
வரவேற்பு, விருந்து முடிவடைந்து வீடு வர நள்ளிரவாகியது. பொதுவான உறவினர்கள் சென்றிருக்க, மகிழின் தந்தையும் உறவினர் அறையில் உறங்கியிருந்தார். மிகுந்த களைப்போடு வந்திருந்த மகிழ் நேராக தங்கள் அறைக்குச் சென்று குளித்து உடை மாற்றிக்கொண்டிருந்தாள். 
முதலில் வருணாவின் அறைக்கு வந்த ரிஷி அவள் உறங்குவதைக் கவனித்துவிட்டு தங்கள் அறைக்குள் வந்தான். மகிழும் அப்போது தான் குளியலறையிலிருந்து வெளியே வர இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். 
அவள் முகத்திலே அசதியும் களைப்பும் தெரிய ரிஷி அமைதியாக குளியலறைக்குள் சென்றுவிட, மகிழ் படுக்கையில் விழுந்தாள்
ரிஷி மிகுந்த உற்சாகத்தில் இருந்தான். திருமணமன்று கூட சிறு சலனமும், மனபாரமும் இருக்க, ஆனால் இன்று முற்றிலும் மனநிறைவாக உணர்ந்தான். மகிழை தன் மனைவியாக அத்தனை பேருக்கும் அறிமுகப்படுத்தி அனைவரின் வாழ்த்துக்களை வாங்கிக்கொண்டதில் மனம் நிறைந்திருந்தான். இவை அனைத்தையும் விட பெரிய மகிழ்ச்சி அவன் வரவேற்பில் வருணா நலமோடு கலந்து கொண்டது தான்!
வருணா நலமடைந்தில் ரிஷிக்கு எல்லையில்லாத ஆனந்தமும் நிம்மதியும்! அத்தனைக்கும் காரணமாக மகிழை எண்ணினான். அவளை கொண்டாடி கொஞ்சும் அளவுக்கு உள்ளம் பொங்கியது. எப்போது  அரும்பியது என்றே தெரியாத மகிழ் மீதான காதல் தற்போது பெரு வெள்ளமாய் தேங்கி பெருகியது. அத்தனைக்கும் மேலாக தன் தேர்வு சரிதான் என்பதில் தனி கர்வம்
ரிஷி வந்து படுக்கையில் மகிழ் உறங்கியிருந்தாள். அவள் அழகு முகம் பார்த்தபடி படுத்திருந்தவனுக்கு இருந்த உற்சாகத்தில் உறக்கம் துளியும் வரவில்லை. நீல வானில் வெள்ளி நிலவாய் மின்னும் அவள் மதிமுகம் அவனை மயக்கியது. அவளை நெருங்கி நெற்றியில் இதழ் மென்மையாய் இதழ் பதிக்க, மெல்லிய சிணுங்கலுடன்  திரும்பிப் படுத்துக் கொண்டாள்
இன்னைக்கு பார்த்தா இப்படி தூங்கணும்! என நினைத்து மெல்லிய சிரிப்போடு திரும்பியவன், அலைபேசியில் சிறிது நேரம் கவனம் பதிக்க, சில நிமிடங்களிலே அவனும் விழி மூடினான்
ஸ்ரீதர் சொல்லாமல் சென்றதிலிருந்து வருணாவின் எண்ணமும் ஏக்கமும் அவனாகவே இருந்தான். அதற்காகவே அவள் அறுவைசிகிச்சைக்கும் சம்மதித்தாள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவள் மனம் வெகுவாக ஸ்ரீதரை அவன் அருகாமையைத் தேடியது. நண்பர்கள், உடன் பிறந்தவர்கள், மகிழ் அனைவரும் அவளுக்குத் தைரியம் சொல்லிய போதும், அவள் தேடல் ஸ்ரீதர் தான். 
மகிழுக்கு அவள் ஆற்றாமையும் அலைப்புறுதலும் நன்றாகப் புரிந்தது. அதுமட்டுமின்றி வருணாவின் நலன் குறித்து அவ்வப்போது மகிழிடம் விசாரித்துக் கொண்டிருந்தான். அவன் விசாரிக்கும் பண்பிலே வருணாவின் மீதான அக்கறையும் பாசமும் அவளுக்குப் புரிந்தது, ஆனால் அவளிடம் பேசாமல் தவிக்க விடுவது தான் ஏனென்றே தெரியவில்லை. 
சில நிமிடங்களில் “உனக்காகக் காத்துக்கிட்டு இருக்கேன் வருணா மாறாக் காதலுடன்!” என்ற மெசேஜ் மட்டும் ஸ்ரீதரிடமிருந்து வந்திருந்தது. என்னை நிராகரித்ததால் இனி வேண்டுமென்றால் நீ தான் தேடி வரவேண்டுமென்ற மறைபொருளை அவளும் புரிந்துகொண்டாள். அவள் அழைக்கையில் அழைப்புகள் ஏற்கப்படவில்லை. வருணாவிற்கு சரியான கோபம், கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டு தற்போது என்ன காத்திருக்கிறானாம்! இருக்கட்டும் இதற்காகவேணும் விரைவில் குணமடைந்து வருகிறேனடா என நினைத்தாள். 
கால் எலும்பு முறிவு, தண்டுவட முறிவுக்கு என இரு அறுவைசிகிச்சைகளும் நல்லபடியாக நிறைவடைய, பத்துநாள் மருத்துவர் கண்காணிப்பிற்குப் பிறகு வீடு வந்தாள். தற்போது அமரும் நிலையிலிருந்தவள் சக்கரநாற்காலியிலே வீடு முழுவதும் ஆனந்தமாய் சுற்றிவந்தாள். பல நாட்களுக்குப் பின் தன்னறை தாண்டி வெளிக்காற்றைச் சுவாசித்ததும், இதமான சூட்டையும் கதகதப்பையும் உணர்ந்ததில் புதிதாய் பிறந்ததை போன்று துள்ளலுடன் குதூகலமானாள். அருகில் நின்றிருந்த மகிழின் வயிற்றோடு அணைத்துக்கொண்டாள். 
அதில் வருணாவைவிட பலமடங்கு சந்தோஷம் ரிஷிக்குத் தான். பல மாதங்கள் தவம் போலே காத்துக்கிடந்து இதற்குத் தான் என்பது போல் அப்படியொரு நிம்மதி, மகிழ்ச்சி. வருணாவின் மாற்றத்திற்கு மகிழ்நிரதியே காரணம் என்றெண்ணி மகிழ்ந்தான். அன்றிரவு ரிஷியும் அணைத்து ஆயிரம் முத்தங்களால் அவன் சந்தோஷத்தை அவளுக்கு வெளிக்காட்டினான். மகிழே தன் வாழ்வின் மகிழ்ச்சி என்பதை முழுதாக உணர்ந்திருந்தான். 
அதன் பின் வருணா பிஸியோதெரபி சிகிச்சையும், உயர்கல்வி செல்வதற்கான நுழைவுத்தேர்விற்கும் படிக்கத்தொடங்கினாள். அதுவும் ஸ்ரீதர் இருக்கும் பகுதிக்கே செல்ல நினைத்ததால் நண்பகர்கள் உதவியோடு அதற்கான பாடங்கள் குறிப்புகளைத் தயார் செய்து கொண்டு முழு கவனமுடன் படிக்கத்தொடங்கிவிட்டாள். மகிழும் அவ்வப்போது உதவ, ரிஷிக்கு மனம் நிறைந்தது இனி அவள் எதிர்காலம் குறித்த கவலை இல்லை. 
தங்கை நலமடைந்த உடனே அவர்கள் ரிஷப்ஷனிற்கும் ஏற்பாடு செய்து நன்முறையில் நடத்தியும் முடித்துவிட்டான். 
காலையில் நேரம் உணவு மேசையில் வந்த அமர்ந்த ரிஷி, “மகிழ், அங்கிள், வருணா எங்க?” என்றான். 
“இதோ வந்திடுவாங்க” என்றவள் தந்தையை அழைத்து வந்தாள். 
காலையில் இரண்டு மணி நேரங்கள் பிசியோதெரபி பயிற்சிகள் முடிய, சக்கர நாற்காலியில் தானாகவே உணவு மேசைக்கு வருணா வர, மகிழும் அவள் தந்தையோடு அறையிலிருந்து வந்தாள். மகிழ் பரிமாற அனைவரும் உணவுண்டு முடித்தனர். 
குணசீலன் ஊருக்குக் கிளம்புவதாக சொல்ல, “ஒரு இரண்டு நாள் இருந்து போகலாமே அங்கிள்” என்றான் ரிஷி மகிழ் முகத்தைப் பார்த்தவாறு. 
“இல்லை மாப்பிள்ளை, ஆஃபீஸ் இரண்டு நாள் தான் லீவ் சொல்லி இருக்கு. வீக்கெண்ட் எல்லாரும் ஊருக்கு வாங்க” என்றார். 
சரியென்று விடைகொடுக்க, அனைவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினார். அவர் சென்ற பின் ரிஷி அலுவலகம் செல்ல தயாரானான். 
கிளம்பி வந்த ரிஷி, வருணாவின் அறை நோக்கிச் செல்ல, “வா அண்ணா” என்றவள் பார்த்துக் கொண்டிருந்த புத்தகத்தை வேகமாக மூடி வைத்தாள். 
“கால் எப்படி இருக்கு, வலி இருக்கா?”
“ம்ம்,கொஞ்சமா..சீக்கிரம் சரியாகிடுமாம்”
“ம்ம்”
“நேத்து ரிஷப்ஷன் நல்லா என்ஜாய் பண்ணேன். அதுவும் என் ப்ரண்ட்ஸோட!” என்னும் போதே அவள் முகத்தில் இருந்த உற்சாகம் அவனுக்கு மகிழ்ச்சியை தந்தது.
“மகிழ் இல்லாமல் உன்னால ஒரு இரண்டு நாள் மேனேஜ் பண்ணிக்க முடியுமா?”
“யெஸ், ஐ வில் மேனேஜ், என்ன பிளான்?”
“அவளுக்கு ஒரு சப்ரைஸ்!” என்னும் போதே ரிஷியின் முகம் லேசாக சிவந்தது. 
அதைக்கண்டு சிரித்தவள், “சப்ரைஸ் அவளுக்கு தானே? எங்கிட்ட என்னனு சொல்லு அண்ணா” என்றாள்.
அவன் மறுப்பாய் தலையசைக்க, “அப்போ இது மகிகிட்ட சொல்லிடுவேன்” என்றாள் மிரட்டலாக.
“தாயே! உங்கிட்ட எதுவும் மறைக்க முடியுமா?”
“அதன் தெரியுதே அப்போ சொல்லு”
“நெஸ்ட் வீக்கெண்ட் மூணாறு ட்ரிப் பிளான் பண்ணியிருக்கேன். நேத்து தான் முடிவு பண்ணேன்”
“வாவ்…என்ஜாய், போயிட்டு வாங்க”
“அவகிட்ட இப்போ சொல்லிடாத” என்க, சரியென அவள் தலையாட்டியதும் விடைபெற்று அலுவலகம் கிளம்பினான். 
தன் நலனை தாண்டி அவன் வாழ்வை கவனிக்க தொடங்கியதும், மகிழை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயல்வதில் மகிழ்ந்தாள் வருணா. 
இதில் எதிலும் கவனமின்றி மகிழ் மட்டும் வருணா, ஸ்ரீதர் குறித்த ஆராய்ச்சியில் இருந்தாள். ஸ்ரீதர் விரும்புகிறான் என்பது தெளிவாக புரிந்தது ஆனால் வருணாவின் மனதை கணிக்க முடியவில்லை. தன்னிடம் எப்பொழுதும் வருணா பற்றியே ஸ்ரீதர் விசாரிக்க, ஆனால் இவளோ அவனின் நினைவே இல்லாது போன்றிருந்தாள். மகிழிடமும் சரி நண்பர்களிடமும் அவன் பற்றி அவள் கேட்டுக்கொண்டதே இல்லை. 
அவள் கவனம் முழுவதும் படிப்பில் மட்டுமே இருந்தது. இப்போதைய அவள் எண்ணமெல்லாம் ஸ்டேண்ட் யூனிவேர்சிட்டியில் நுழைவுத்தேர்வில் தேர்வாவதில் மட்டுமே இருக்க,விரைவில் வரவிருக்கும் தேர்வுக்கு தயாராகிக்  கொண்டிருந்தாள். அவள் பிசியோதெரபி சிகிச்சை எல்லாம் மகிழும் மருத்துவரும் தான் பெரும்பாலும் கவனித்தனர். அவர்களுக்காக உடன் பட்டாலும் அசராது வலியோடு போராடினாள் வருணா. 
காலையில் மகிழ் கண்விழிக்கையிலே ரிஷி பரபரப்போடு அலுவலகம்  கிளம்பிக்கொண்டிருந்தான். எப்போதும் கிளம்பும் நேரத்தை விடச் சற்று முன்னதாகவே கிளம்புகிறான் என்பதை அறிந்தவள் எழுந்து வந்து அவனுக்கு உதவி செய்து கொண்டிருந்தாள். 
“என்ன ரிஷி இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டீங்க?” என்றாள் அவனுக்கு தேவையானதை எடுத்துக்கொடுத்து உதவியபடி. 
“ஆபீஸ்ல கொஞ்சம் வொர்க் மகிழ்”
“ம்ம், கொஞ்சம் பேசனுங்க”
“ட்ரவல் டைம்ல கால் பண்ணுறேன், இல்லை எவனிங் பேசிக்கலாம்” 
“எவனிங் பேசிக்கலாம்” என அவள் பதில் சொல்லும்போதே கிளம்பியிருந்தான். வண்டியில் சென்று கொண்டிருக்கும் போதே அவளிடமிருந்து மெசேஜ் வந்திருக்க எடுத்துப்பார்த்தான். மறக்காமல் காலை உணவை உட்கொள்ளுமாறு சொல்லியிருக்க மெல்லிய சிரிப்போடு சென்றான். அவள் அக்கறையில் நெஞ்சம் நெகிழ்ந்தான். 
வருணா சில புத்தகங்களை வாங்கி வரச் சொல்லியதால் மாலை நேரம் ஷாப்பிங் சென்றிருந்தாள் மகிழ்நிரதி. ரிஷியிடமிருந்து அழைப்பு வரவே அட்டன் செய்தாள். 
“காலையிலே ஏதோ பேசணும்னு சொன்னீயே? இப்போ ப்ரீயா இருக்கேன் சொல்லு மகிழ்” என்றான். 
”வருணா கொஞ்சம் புக்ஸ் கேட்டிருந்தா அதான் நான் ஷாப்பிங் வந்திருக்கேன்” 
“எங்க இருக்க?” என்றதும் அவள் இடம் சொல்ல சரியென அழைப்பைத் துண்டித்தான்.
வருணா கூறிய புத்தகங்களை வாங்கி முடித்து விட்டு தனக்குத் தேவையானதைப் பார்த்துக்கொண்டிருக்க, “ஹேய், மகிழ்நிரதி எப்படிம்மா இருக்க?” என்ற குரல் கேட்டுத் திரும்பினாள். 
ஒரு நடுத்தர வயது பெண்மணியும் அருகே இளம்பெண்ணும் நின்றிருந்தனர். அவர்களை யாரென்று மகிழ் பார்த்திருக்க, “என்னை நியாபகமில்லையாம்மா? ரிஷப்ஷன்ல பார்த்தோமே!” என்றார். 
அன்று எத்தனை பேரை அறிமுகப்படுத்தினான் அதில் இவர்களை யாரென்று நினைவில்லை.
அவள் முகத்திலே அதை உணர்ந்து கொண்டவர் “நான் விமலா, ரிஷிக்குச் சொந்தம் தான்! இது என் பொண்ணு சந்திரிக்கா” என அறிமுகப்படுத்த அவர் பெயர் மட்டும் நினைவில் வர, புன்னகை முகமாக கரம் குலுக்கினாள் மகிழ். சந்திரிக்காவை இப்போது தான் முதல் முறையாகப் பார்க்கிறாள். 
“சாரி ஆண்ட்டி..” என மகிழ் வேண்ட, அவள் கரம் பற்றியபடி, “பரவாயில்லை! வருணா நல்லாயிருக்காளா?” என நலம் விசாரித்தார். 
ரிஷியின் உறவு என்றதால் “ம்ம், நல்லாயிருக்கா, ஒருநாள் வீட்டுக்கு வாங்களேன்” என வரவேற்றாள். 
“ம்ம், நெக்ஸ்ட் வீக் வரோம், என் பொண்ணோட மேரேஜ் இன்விடேஷனோட” என்க, சந்திரிக்காவை பார்த்து, வாழ்த்தினாள் மகிழ். 
அவளோ சற்றே பரிதாபமாக பார்ப்பது போல் பார்த்து, “நீங்க ரொம்ப கிரேட்ங்க, ரிஷி அவருக்கான மனைவியைத் தேடலை அவர் தங்கையை கவனிச்சிக்க தான் பொண்ணு தேடினார். எனக்கு உங்க அளவுக்கு மனசுயில்லைங்க அதனால தான் ரிஜெக்ட் பண்ணிட்டேன் மகிழ்நிரதி” என்றாள். அவள் ரிஷப்ஷனிருக்கு வராததால் இவர்கள் திருமணம் பெரியவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் என நினைத்திருந்தாள்.
சந்திரிக்கா சொல்லவதை சரிவர புரிந்து கொள்ள முடியாமல் மகிழ் குழம்பி நின்றாள். அவள் முக மாற்றத்தைக் கவனித்து விட்ட விமலா “அதான் இரண்டு பேருக்குமே நல்ல வாழ்க்கை அமைத்துள்ளதே இப்போது எதற்கு அதைப் பத்தி பேசிக்கிட்டு, நாங்க வரோம் மகிழ்” என மகளையும் அழைத்துக்கொண்டு சென்றாள். 
தன்னை விரும்புவதாகவும், மறக்க முடியவில்லை என்றும் சொல்லித் தானே தன் தந்தையிடம் வந்து பெண் கேட்டான்? இவர்கள் ஏன் இவ்வாறு சொல்கிறார்கள்? என ஏற்கமுடியாமல் நெஞ்சில் வலியோடு நின்றாள். 
மீண்டும் மகிழுக்கு ரிஷியிடமிருந்து அழைப்பு வர, வெளியே வந்தாள். பார்கிங்கில் காத்துக்கொண்டிருந்த ரிஷி அவள் வாடிய முகத்தைப் பார்த்துவிட்டு அவளை அழைத்துக்கொண்டு அருகே இருக்கும் ஹோட்டலுக்குச் சென்றான். இருவருக்குமான உணவை ஆடர் செய்துவிட்டு அவள் முகத்தையே பார்த்தபடி சில நிமிடங்கள் அமர்ந்திருந்தான். 
ஸ்ரீதரைப் பற்றிச் சொல்லி விட எண்ணிருந்தவளுக்கு தற்போது எதுவும் நினைவில் இல்லாது போக, அவள் மனதில் உள்ள குழம்பங்களோடு மௌனமாய் அமர்ந்திருந்தாள். 
“மகிழ் என்னாச்சு?” என அவன் கேட்க, பதறியபடி நிமிர்ந்தவள் திருதிருவென அவனையே பார்த்தாள். அவள் மனதில் இருந்ததெல்லாம் ஒரே கேள்வி தான், இவன் என்னை விரும்பவில்லையா? 
அவள் பதறியதும் கைகளைப் பற்றி அமைதிப்படுத்தியவன், ஒரு கிளாஸ் தண்ணீரையும் எடுத்துக்கொடுத்தான். அவள் குடித்து முடிக்கவும், “இப்போ சொல்லு என்ன?” என்றான். 
அவன் கேள்வி புரியாமல் அவள் பார்க்க, “எங்கிட்ட பேசணும்னு சொன்னியே மறந்துட்டியா?” என்றான் ஒரு நிம்மதி பெருமூச்சோடு. 
“அப்பாவை பார்க்கணும் போல இருக்கு, நான் காஞ்சிபுரம் போறேன்” 
“ஹேய்! இப்போது தானே அங்கிள் வந்திட்டு போனாங்க!” என்னும் போதே அவள் முகம் மேலும் வாட, “சரி வீக்கென்ட் கூட்டிட்டு போறேன்” என்றான். 
“இல்லை, நானே போகிறேன்” என்க, ஏதோ அவளிடம் உள்ள பிடிவாதத்தைக்கண்டு கொண்டான். அது மட்டுமின்றி முதல் முறையாக அவளாக தன்னிடம் ஒன்றைக் கேட்கவே சரியெனத் தலையாட்டினான். 
ஆனால் இதையும் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தான் போறேன் என்க, இவன் சரியென்கிறானா? என் பிரிவு இவனை சிறிது கூட பாதிக்காதா? என் மீது காதலில்லையோ! என நினைத்தவள் மேலும் குழம்பினாள். 
மேசையில் வைக்கப்பட்ட உணவுகளை தலைகுனிந்தபடி உண்டு முடித்தவள் மௌனமாக அவனோடு வீடு வந்தாள். 
 
 
 

Advertisement