Advertisement

அத்தியாயம் 22
ரிஷப்ஷனிற்கான ஏற்பாடுகளை தொடங்கியிருந்த ரிஷி அன்று மகிழை அலுவலகத்திற்கு அழைத்து வந்திருந்தான். தன் அறைக்குள் அழைத்து வந்தவன் வலதுபுற சோஃபாவில் மகிழை அமர்த்திவிட்டு அவள் கைகளைப் பற்றியபடி அருகில் அமர்ந்தான். 
வாசலிலிருந்து அவன் அறை வரையிலும் கட்டிடத்தின் பிரம்மாண்டத்தையும் அழகையும் ரசித்தபடி வந்தவள் அறைக்குள்ளும் பார்வையை சுழற்றியபடி இருந்தாள். சாக்லேட் மற்றும் வெண்மை நிறத்தில் இன்டிரியர் செய்யப்பட்ட குளிரூட்டப்பட்ட கண்ணாடி அறை. சந்தனம் மற்றும் சாக்லேட் நிறத்தில் திரைச்சீலைகள் இருக்கைகள் மற்றும் அவன் இருக்கைக்கு மேல சுவரில் ராயல் டெக்டைல்ஸ் என்பதை குறிப்பது போன்ற அவர்கள் நிறுவனத்தின் இலச்சினை அதன் கீழே மாலையிடப்பட்ட அவன் தந்தையின் புகைப்படமிருந்தது. அறையின் ஒருபுறம் மற்றுமொரு கதவும் மறுபுறம் இறக்கைகள் கொண்ட ஊதா நிறத்தில் பறக்கும் பந்தயக் குதிரை போன்ற வித்தியாசமான ஓவியமும் மாட்டப்பட்டிருந்தது. அறை முழுவதும் ஆங்காங்கு பொம்மை மற்றும் தாங்கிகளில் மேலைநாட்டு உடை மாதிரிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. 
மகிழ் அவைகளை பார்த்தபடி இருக்க, “என்ன சாப்பிடுற?” எனக் கேட்டான் ரிஷி. அவள் எதுவும் வேண்டாமென மறுக்க, கேட்காதவன் வேலையாளிடம் இருவருக்கும் காஃபி சொல்லிவிட்டு அவன் தொழில் பற்றி அவளுக்கு விளக்கினான். அவள் ஆர்வமோடு கேட்க, அவன் மேலும் ஆர்வமோடு விளக்கினான். 
முதன்மை ஆடை வடிவமைப்பாளரை அழைத்தவன் மகிழை அறிமுகப்படுத்தினான், பின் மகிழின் உடை அளவுகளைக் குறித்துக்கொள்ளுமாறு அவளோடு அனுப்பினான். 
தன் இருக்கையில் வந்தமர்ந்தவன் அவன் வேலைகளை கவனிக்க, சில நிமிடங்களில் அறைக்குள் வந்த மகிழ் அவன் அருகே வந்து நின்றாள். ரிஷப்ஷனிற்கான உடை தயாரிப்பு தான் என அவளுக்குத் தெரியும், அவர்கள் திருமணம் எளிமையாக நடந்த போதும் அவளுக்காக உடையும் நகையும் தனித்துவமாக, உயர்ரக வடிவமைப்பாக இருந்தது. 
அவன் அருகே நின்றிருந்தவள் “எதுக்கு ரிஷி?” என்க, “ம்ம், உன்னை மாதிரியே ஒரு பொம்மை செஞ்சு வைச்சிக்க?” என்றான் கணினியில் இருந்து முகத்தை திருப்பாமலே. 
அந்த பதிலை எதிர்பாராத மகிழ் யோசனையோடு நிற்க, நிமிர்ந்து அவள் முகம் பார்த்தவன் சட்டென எழுந்து மேசையில் சாய்ந்தபடி அவள் கைகளைப்பற்றி அருகே இழுத்து  அணைத்துக்கொண்டான். எதிர்பாராது திணறி மகிழ் விலக முயன்றபடி, “விடுங்க யாராவது வந்திடப் போறாங்க” என்றாள் மெல்லிய குரலில். 
“உஷ், எங்கிட்ட பெர்மிஷன் கேட்காம யாரும் உள்ள வர மாட்டாங்க” என அதட்டலிட்டவன் மேலும் இறுக்கி அணைத்துக்கொண்டான். 
“ஏன் மகிழ் நீ என்னை விரும்புற தானே?” என்க, அவள் பதில் சொல்லாமல் மௌனமாய் விழி மூடினாள். 
“எனக்குத் தெரியும், ஆனால் ஒன்னு மட்டும் புரியலை. கல்யாணத்துக்கு முன்ன உன் காதைல வெளிப்படுத்த தயங்கின சரி, இப்போ ஏன் அப்படியே இருக்க?” என்க, “அப்படியெல்லாம் ஒன்னும்மில்லைங்க” என மறுத்தாள் அவள். 
“அப்படி தான், நீயா என்னை ஒரு தடவை கூட கிஸ் பண்ணதில்லை, ஹக் பண்ணதில்லை” என அவன்  வாய்விட்டே கேட்க, சிவந்த முகத்தோடு அவனிடமிருந்து விலகியவள் திரும்பி நின்றாள். 
அருகே வந்தவன் அவள் பின் நின்றபடி மெல்லிய குரலில், “வீட்டுக்குப் போவோமா மகிழ்?” என்றான். என்னவென்று பதில் சொல்லுவாள்? அப்போதும் அவள் திரும்பியபடியே நிற்க, சீண்டுதலை விட்டுவிட்டு, “ரிலக்ஷ் மகிழ்” என்றபடி சற்று தள்ளி நின்றான். 
அதன் பின்னே ஒரு நிம்மதி பெருமூச்சோடு திரும்பியவள், “எங்க? என் சாரி டிசைன் அண்ட் மாடல் காட்டுங்க, நான் பார்க்கணும்” என்க, அவன் மறுப்பாய் தலையசைக்க, உதட்டை சுளித்தாள் மகிழ்.
“சரி, வந்த வேலை முடிந்ததுல அப்போ நான் கிளம்புறேன்” என அவள் உரைக்க, சரியெனத் தலையாட்டியவன் அவனே அழைத்து வந்தான். ஹோட்டலில் மதிய உணவை முடித்துவிட்டு வீட்டில் விட்டுவிட்டுச் சென்றான். 
தன்னை விரும்புகிறாள் ஆனால் நெருங்குவதில்லை. அன்போடு கவனிக்கிறக்கிறாள் ஆனால் ஆசையோடு அணைத்ததில்லை. தன்னை நெருங்குவதில் அவளுக்கிருக்கும் தயக்கம் தான் என்ன? என சில நாட்களாக யோசித்துக்கொண்டிருந்தான் ரிஷி.
திருமணமான புதிதில் ஆர்வமில்லாமல் இருந்தவன் தான் ஆனால் தற்போது அவளை, அவள் விரும்பு வெறுப்புகளை கவனிக்க தொடங்கினான். முதல் முதலாக அவன் தங்கை மற்றும் அவன் தொழில் தவிர்ந்து வேறொன்றின் மீது அவன் கவனம் பதிந்தது. 
மகிழ் மனதில் உள்ள உணர்வுகளை அவ்வளவு எளிதாக வெளிப்படுத்திவிட மாட்டாள். அவனை நேசித்தாள் தான் ஆனால் அதை அவனிடம் வெளிப்படுத்த வேண்டுமென்று தோன்றவில்லை. திருமணமான முதல் நாளே ரிஷியை எதிர்பார்த்தாள், ஆனால் அதை வெளிப்படுத்தவில்லை ஆகையால் அவனும் கவனிக்கவில்லை. அன்று உணர்ந்த சிறு ஏமாற்றம் ரிஷியை நெருங்கும் எண்ணத்தையே அவளுக்கு தவறவில்லை. நெருங்குவதற்கான எண்ணமே தோன்றாத போது தயக்கம் எவ்வாறு வரும்? இந்த பந்தத்தில் அவளால் ஒரு இறுக்கத்தை உணர முடியாது போக, எதிர்காலம் பற்றிய எண்ணமே அவளுக்கு எழவில்லை. 
மாலை நேரம் வருணாவின் அறைக்குச் செல்ல, அவளோ வாடிய முகத்தோடு சோர்ந்து போய் படுத்திருந்தாள். அவள் உடலுக்கு என்னவோ என நினைத்தபடி நெற்றியில் கை வைத்துப் பார்க்க, கண் விழித்த வருணா, “நல்லா தான் இருக்கேன் மகி” என்றாள். 
“இல்லை முகமே ஒரு மாதிரி இருக்கு? பசிக்கிறதா? சாப்பிட ஏதாவது எடுத்துவிட்டு வரட்டுமா?” என்க, மறுப்பாய் தலையசைத்த வருணா, “நீ எதுக்கு வந்த?” என்றாள்.
“இன்விட்டேஷன் மாடல் அனுப்பிருக்கார், நீயும் பாரேன்” என வருணாவிடம் அலைபேசியை நீட்டியபடி மகிழ் அருகே அமர, அவள் வாங்கிப்பார்த்துக் கொண்டிருந்தாள். 
ஆனாலும் அதில் கவனம் பதியாது, “எல்லாமே நல்லா இருக்கு மகி, உங்களுக்கு பிடித்ததை செலக்ட் பண்ணிக்கோங்க” என்க, அவளை முறைத்த மகிழ், “எனக்கும் எல்லாமே பிடிச்சிருக்குன்னு தானே உன்னை செலக்ட் பண்ண சொன்னேன்” என்றாள். 
மீண்டும் வருணா அலைபேசியில் பார்வையை பதித்தபடி, “நம்ம ப்ரண்ட்ஸ் எல்லாரையும் மறக்காம இன்வைட் பண்ணிடுங்க மகி” என்றாள். 
ரிஷப்ஷனே அனைவருக்கும் தங்கள் திருமணத்தை அறிவிக்க தானே! என்றெண்ணிய மகிழ் சரியென தலையாட்ட, “அப்படியே ஸ்ரீதரையும் இன்வைட் பண்ணிடுங்க” என்றாள் வருணா. 
சீனியர் என்றல்லாது புதிதாக ஸ்ரீதர் என்றுரைத்ததில் மகிழ் குழப்பமோடு வருணாவை பார்க்க, தான் ஏதும் தவறாக உளறிவிட்டோமோ எனப் படப்படப்போடு அவள் மகிழைப் பார்த்தாள். 
“சீனியர் தான் இங்க இல்லையே!” 
“இல்லையா? எங்க போனார்?”
“லீவ் முடிச்சி, கலிபோர்னியா கிளம்பிட்டாரே, உன் பர்த் டே அன்னைக்கு எல்லார்கிட்டையும் சொல்லிட்டு தானே கிளம்பினார். உங்கிட்ட சொல்லலையா?” 
“இல்லை..!” என்றவளின் குரலும் முகமும் வெறுமையாய் இருக்க, உள்ளுக்குள் பெரும் ஏமாற்றத்தின் வலி! 
மகிழ் கூர்மையான பார்வையோடு அவளை ஆராய, அழைப்பிதழ் ஒன்றை தேர்ந்தெடுத்து அலைபேசியை மகிழிடம் கொடுத்து விரட்டிவிட்டாள் வருணா. 
அன்று ஸ்ரீதர் கிளம்பும் போது மகிழிடம், “எனக்காக கொஞ்சம் வருணாவை கவனிச்சிக்கோ மகி” என்க, “ஏன் நான் கொடுமைக்கார அண்ணியா?” என்றாள் முறைப்புடன். 
“இல்லை, அப்படி சொல்லலை. முன்பைவிட இன்னும் அழுத்தமாகி விடுவாளோ இல்லை அழுது கரைவாளோ என்ற பயம் தான், கொஞ்சம் அருகில் இருந்து கவனித்து கொள்” என்றான். அதென்ன முன்பைவிட? இப்போது அவளிடம் என்ன வேறுபாடு? அது மட்டுமின்றி இவருக்கு என்ன தனிப்பட்ட முறையில் இவ்வளவு அக்கறை? என அன்றே எண்ணினாள். 
அவள் நண்பர்கள் அனைவருமே அவனை சீனியர் என்றும் அவன் இல்லாத போது தயிர்சாதமென்றும் கேலி செய்வார்களே தவிர ஸ்ரீதர் எனப் பெயர் சொல்லி அழைத்ததில்லை. இன்று வருணா அவளையும் அறியாமல் அவன் பெயரை சொல்லியதையும், ரிஷப்ஷனிற்கு அழைக்கும்படி சொல்லியதில் அவன் வருகையும் எதிர்பார்க்கிறாள் வருணா என்பதை மகிழ் உணர்ந்து கொண்டாள். 
இருவருக்குள்ளும் என்னவோ? ஒருவேளை நான் தான் தவறாகக் கற்பனை செய்கிறேனா? இது மட்டும் ரிஷிக்குத் தெரிந்தால் என்னிலை? எவ்வாறாயினும் வருணாவின் மகிழ்ச்சியும் நலமும் தான் எனக்கு முக்கியம் என எண்ணிக்கொண்டிருந்தாள் மகிழ்நிரதி.
ஸ்ரீதர் சொல்லாமல் சென்றதில் வருணாவிற்கு மனம் தாங்க முடியவில்லை. தனியாக தன்னை பார்த்துச் சென்ற போதும் சொல்லவில்லை, வேண்டுமென்றே தன்னிடம் சொல்லாமல் சென்றுள்ளான். போகிறான் அவனில்லாமல் என்னக்கென்ன கஷ்டம்? என இரண்டு நாட்களாக அவன் மீதான கோபத்தில் எரிந்து கொண்டிருந்தவள் மூன்றாம் நாளே ஏங்க ஆரம்பித்துவிட்டாள். 
நான் பிடிக்கவில்லை என்று சொன்னால் என்னைச் சமாதானம் செய்யாமல், ஈர்க்க முயற்சிக்காமல் அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிடுவானா? அவ்வளவு தானா அவன் காதல்? இருக்கட்டும் கவனித்துக்கொள்கிறேன். இப்படி பாதியில் விட்டுச் செல்பவன் ஏன் வரவேண்டும்? காதலைச் சொல்ல வேண்டும்? என்னைத் தவிக்க வைக்க வேண்டும்? என்னை இவ்வாறு தவிக்க வைத்துவிட்டு அவன் மட்டும் அங்கே இன்பமாய் இருக்கிறானோ? நான் வேண்டாம் என்று சொல்லவும் வேறு பெண்ணின் மீது கவனம் திரும்பி விட்டானோ? இவ்வாறு மட்டும் நடக்கட்டும் என் கையாலே அவனைக் கொன்றுவிடுகிறேன்! என உள்ளுக்குள்ளே விம்மிக்கொண்டிருந்தாள். 
திட்டினாலும் முற்பொழுதும் அவள் நினைவெல்லாம் அவனாகிவிட்டான். அவன் கொடுத்துச் சென்ற கவிதை நூட்களை வாசித்தாள். அதிலும் அவன் அடிக்கோடிட்டுக் காட்டிய கவிதைகள் எல்லாம் அவளுக்காக அவன் பாடுவது போன்றிருந்தது. அதிலிருக்கும் சிறு குறிப்புகளையும் அவன் கையெழுத்துகளையும் ரசித்துப் பார்த்தாள். சில நேரங்களில் அவனும் தன்னை விட்டுச் சென்றுவிட்டானே எனத் தவித்து அழுது கரைந்தாள். 
இங்கிருக்கும் போது அவன் பயன்படுத்திய அலைபேசி எண் பயன்பாட்டில் இல்லாமல் இருக்க, அவனிடம் தன் அலைபேசி எண் இருக்கும் தானே, அவனாகத் தன்னை தொடர்புகொள்ள மாட்டானா? என ஏங்கினாள். ஒரே வாரத்தில் உடல் மெலியும் அளவிற்கு நலிந்து போனாள். 
மகிழ் நன்றாகக் கவனித்துக் கொண்டாள் இருந்தும் அதிகம் பேசாது தவிர்க்கவே, மகிழின் சந்தேகம் இன்னும் அதிகமாகியது, அவள் கேட்டுப்பார்த்தும் வருணா சொல்லாது போக, ரிஷியைப் பேசுமாறு அனுப்பினாள் மகிழ்.  
ஏற்கனவே அவள் சிகிச்சை குறித்து ஒருமுறையாவது பேசி பார்க்க வேண்டுமென்ற எண்ணத்திலிருந்த ரிஷி இரவு அவள் அறையில் அமர்ந்திருந்தான். 
தங்கையின் வாடிய முகத்தை வேதனையோடு பார்த்தவன், “இன்விடேஷன் மாடல் பார்த்தியா? உனக்கு பிடிச்சிருக்கா வருணா?” என்றான். 
“ம்ம்..” எனத் தலையாட்டியவளிடம் மறுவார்த்தை இல்லை. 
“எங்க மேரேஜ் தான் நீ பார்க்கலை, ரிஷப்ஷனுக்காவது நீ இருக்கணும்னு ஆசைபடுறேன் வருணாம்மா” என்க, “ஏன் அண்ணா? நீங்க சந்தோஷமா இருக்குறதை பார்த்தா போதும்” என்றாள்.
நீ ஆபரேஷன்க்கு சம்மதம் சொல்லுறதுல தான் இருக்கு, எங்க சந்தோஷம்! பிளீஸ் வருணா என அவள் கை பிடித்து வேண்ட, அவள் சரியென்றாள். மகிழ்ச்சியில் முகம் மலர்ந்த ரிஷி அப்போதே மருத்துவரிடம் பேச அலைபேசியோடு எழுந்து சென்றான். 
மறுநாள் ரிஷி மருத்துவரைப் பார்க்கக் கிளம்ப, மகிழும் உடன் சென்றாள். ஏற்கனவே அவள் அறுவை சிகிச்சை குறித்து முன்பே ரிஷி பேசியிருந்ததால் நாளை பரிசோதனைக்கு வருணாவை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு உரைத்தார். மருத்துவரின் நம்பிக்கையான வார்த்தைகளில் இருவருமே மன மகிழ்வோடு திரும்பினர். வழியில் கோவிலைக் கண்ட மகிழ் சாமி கூம்பிடவேண்டுமென்று கேட்க, அவனே அழைத்துச் சென்றான். 
ரிஷி மகிழ் இருவருக்குமே மனம் நெகிழ்ந்திருக்க, விரைவில் வருணா நலமடைந்து வர வேண்டினர். மருத்துவமனையிலிருந்து கிளம்பிய நேரமே வானம் இருள் சூழ்ந்து மேகமூட்டமாக இருக்க, கோவிலிலிருந்து வெளியே வரும் நேரம் மழை கொட்டிக்கொண்டிருந்தது. ரிஷி காரை எடுப்பதற்கு முன் சில நொடிகளிலே இருவரும் நனைந்திருந்தனர்
வருணாவின் அறை மூடி இருக்க, வேலையாட்கள் வேலையில் கவனமாக இருக்க, இருவரும் அவர்கள் அறைக்குள் சென்றனர். நனைந்த உடையோடு முதலில் அறைக்குள் வந்த மகிழ் முதல் ஆளாக குளியலறைக்குள் புகுந்து கொள்ள, ரிஷி இருள் வானில் கொட்டும் மழையை வெறித்தபடி பால்கனி நின்றுவிட்டான்
மகிழும் பின்னே வந்த ரிஷியும் மின்விளக்கை போடாமல் இருக்க, அறை முற்றிலும் இருளாய் இருந்தது. குளியலறையிலிருந்து வெளியே வந்த மகிழ் என்ன செய்கிறான் இவன்? என்றெண்ணி ரிஷியின் அருகே வந்தாள்
அருகில் வந்தவள் ரிஷியின் தோள் தொட அவன் சில்லென்ற தேகம் சிலிர்த்தது. திரும்பியவன் அரை இருளில் அவள் அழகு முகம் அருகே பார்த்து, மேலும் அவளை அருகே இழுத்தான்
அதை எதிர்பாராது தடுமாறியவள் அவன் நெஞ்சில் விழ, மென்மையாக அணைத்துக்கொண்டான். அன்றொரு மழை நாளில் அவள் ஓர் அணைப்பில் கட்டுண்ட போது உணர்ந்த அதே கதகதப்பை தற்போதும் அவன் உடல் உணர்ந்தது
அந்தநாள் நினைவில் வர, அன்று அவளை தவறாக நினைத்துவிட்டோமே என்றெண்ணி குற்றவுணர்வின் அதுவரை வேதனையில் இருந்தவனை நெஞ்சில் விழுந்த சுகம் சிதைத்தது. ரிஷிக்கு அந்த நாள் நினைவில் இல்லாத போதும் அவன் உடலால் நன்கு உணர முடிந்தது
அவன் சிந்தனை முற்றிலும் செயலிழக்க,வெளியிலிருந்து வரும் குளிர்காற்றிற்கு மாறாக அவன் உடல் உஷ்ணமெறியது. அணைப்பின் இறுக்கத்தை அதிகரித்தவன் அவள் முகம் நிமிர்த்தி இமைக்காது பார்த்தான்
இமை மூடி அவன் அணைப்பில் சுகமாய் சாய்ந்து கிடந்தவள் முகம் நிமிர்த்தவும் விழி திறந்தாள். அவன் சட்டையின் ஈரம் அவள் முகத்தில் படர்ந்ததால் வெளிறிய முகத்தோடு நடுங்கிய இதழ்களோடு நிற்க, சட்டென ரிஷியின் இதழ்கள் அவள் கன்னத்தில் பதிந்தது. அவள் மறுக்கவோ விலகவோ இல்லை, மீண்டும் மறு கன்னத்தில் இதழ் பதித்தபடி மேலும் இறுக்கி அணைத்தான்
அவள் முகம் முழுதும் நிதானமாக முத்தமிட்டான், அணையின் இறுக்கத்தை மேலும் அதிகப்படுத்தினான். அவள் மென்மையும் குளுமையும் அவனுள் கிறக்கத்தைக் கூட்ட, அவன் கவனம் மெல்லிய சிதறியது. அத்தனை முத்தங்களும் அவன் வெப்பத்தை மேலும் அதிகப்படுத்த அவள் செவ்விதழில் இதழ் பதித்து மதுரமான சுவையை முதல் முறையாக ருசித்தான்
மகிழ் உருக்கினாள், ஆனால் அணைப்பை அதிகப்படுத்தவில்லை. அவன் சட்டையை பற்றியிருந்தவள் அவனை அணைக்கவில்லை. அவள் உணர்வுகளை ஆராய்ந்திருந்தவனுக்கு முடிவுகள் நிறைவாய் இல்லாமல் இருக்க, அதற்கு மாறாய் தன் மயக்கம் அதிகரிப்பதை உணர்ந்து திணறலோடு விளக்கினான்
அவள் முன் வராமல் அவன் முன்னேற விரும்பவில்லை, நெருக்கினால் அனுமதிப்பாள் ஆனால் அனுபவிப்பாளா? ஏற்கனவே அவளால் கொண்ட குற்றவுணர்வுகளே போதுமென்று எண்ணி விலக்கினான்
லென்ஸ் வைத்து பார்க்கும் அளவிற்கான லேசான வெட்கப்புன்னையோடு வெளியே பார்த்தபடி முகம் திரும்பி விலகி நின்றவளையே பார்த்தான் ரிஷி. தன் மீதான அவள் காதல் ஏன் இந்த உணர்வை அவளுக்கு தர தவறியது. தான் விலக்கினாளும் அவள் விலகாது அணைத்திருக்க வேண்டும் என்றெதிர்பார்த்தது அவன் உள்ளம்
அவளிடம் ஏமாற்றமோ, எதிர்பார்ப்போ இல்லாது அனுபவித்த வரை போதுமென்ற நிறைவான வெட்கப்புன்னகையோடு நின்றிருந்தவளை பரிதாபமாக பார்த்தான்
அவள் முகத்தை தன்னை நோக்கி திரும்பியவன் மெல்லிய குரலில்எங்கிட்ட ஏதாவது சொல்லணுமா மகிழ்என்றான்
இன்னும் ஈரச்சட்டையோட இருக்கீங்க, உங்க உடம்புக்கு சுத்தமா ஒதுக்காதுஎன்றாள்
அதை எதிர்பாராதவன் அவள் நெற்றியில் தட்டியபடி இதழ் விரிய சிரிக்க, விலகிச் சென்றவள் அவனுக்கான மாற்றுடையைக் கொண்டு வந்து அவன் கைகளில் திணித்தாள். மாறாத சிரிப்புடன் மறுக்காமல் வாங்கிக்கொண்டு நகர்ந்தான் ரிஷி.

Advertisement