Advertisement

அத்தியாயம் 21
அன்று வருணாவின் பிறந்தநாள் ஆகையால் அதிகாலையிலே கோவிலுக்குச் சென்றிருந்தாள் மகிழ்நிரதி. ரிஷி அப்பொழுது தான் விழித்திருந்தான். பூ, புடவையோடு நெற்றியில் விபூதி, குங்குமம் கையில் பிரசாதக்கூடையோடு மகிழ் உள்ளே வர, ஜாக்கிங் உடையோடு ரிஷி  அறையிலிருந்து எதிரே வந்தான். அவள் வழியை மறைத்தபடி அவன் நிற்க, அவளோ சிறிது குங்குமத்தை எடுத்து அவன் நெற்றியில் ஏங்கி வந்தாள்
நின்று நிதானமாக வழிமறித்து அவள் அழகை ரசித்துக்கொண்டிருக்க, அவள் மேலும் நெருங்கி வந்ததில் தன்னை தழுவிய பூவுடலை இறுக்கி அணைக்கும் ஆசை தோன்றியது. அவனிடமிருந்து விலக்கியவள் உள்ளே செல்ல, சட்டென அவள் கரம்பற்றி தன்னருகே இழுத்தவன் அவள் கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தம் பதித்துவிட்டு நொடியில் விலகிச் சென்றிருந்தான்
இதை எதிர்பாராது உணர்வற்று அதிர்ந்து நின்றவள் அவன் விலகவும் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஒரு பெருமூச்சோடு உள்ளே சென்றுவிட்டாள். மலர்ந்த முகத்தோடு வெளியில் வந்த ரிஷி தங்கள் ரிஷப்ஷனிற்கு முன் மீண்டும் ஒரு முறை வருணாவிடம் அவள் சிகிச்சை குறித்து பேச வேண்டும் என்றெண்ணினான்
வருணாவிற்கு பிரசாதம் கொடுத்துவிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தாள் மகிழ். ரிஷிக்கு கூட்டத்தைக் கூட்டி கொண்டாடுவதில் விருப்பமில்லை. வருணாவும் வேண்டாமென மறுத்துவிட்டாள்
அலுவலகம் செல்ல கிளம்பியவன் வருணாவை பார்த்து வாழ்த்துக்கள் தெரிவித்துவிட்டுச் சென்றான். வருணாவிற்கு பிடித்த உணவுகளை சமைத்துக் கொடுத்த மகிழ், அவள் சிறுவயதிலிருந்து இப்போது வரையிலான குடும்ப ஆல்பத்தை எடுத்து பார்த்தபடி இருவரும் கதை பேச அந்த நாள் வழக்கம் போல சென்றது
வருணாவின் பிறந்தநாள் நண்பர்கள் அனைவருக்குமே நினைவிலிருக்க, தங்களுக்குள் திட்டமிட்டுக்கொண்டு மாலை நேரம் அனைவரும் அவளைப் பார்க்க பிறந்தநாள் கேக்கொடு வந்திருந்தனர். மகிழ் இன்முகமாக அனைவரையும் வரவேற்க, ஆரவாரமாய் வருணாவின் அறைக்குள் நுழைந்தனர்
சிறு துணியைக் கொண்டு பிடிவாதமாக வருணாவின் கண்களைக் கட்டிவிட்டு பின் வாழ்த்து ஸ்டிக்கர்ஸ், ரோசஸ், பலூன் கொண்டு அவள் அறையை முற்றிலும் அலங்கரிக்கத் தொடங்கினர். கண்களைக் கட்டிய போது அவர்கள் ஏற்பாடு செய்யும் ஓசைகள் அதிலும் அருணும், சுபியும் கிஷோரை, “டேய் அறுந்தவாலு அங்க பிங்க் கலர் பலுன்டா, ஜன்னல் மேல தானே ஓட்ட சொன்னேன் இந்த ஸ்டிக்கர்கிஸை” எனத் திட்டுவதையும், அப்படியும் அவன் சொதப்புவதையும் கவி சரி செய்வதையும் கேட்டுச் சிரித்தாள். 
“ஐயோ என் கண்ணத்திறந்து விட்டா இந்த காமெடிய நானும் பார்த்து சிரிப்பேன்ல?” என வருணா கேட்க, “எது? நான் மீதி வாங்குறதும் அடி வாங்குறதும் உனக்கு காமெடியா?” என கிஷோர் கேட்டான்.
“சப்ரைஸ் கெட்டுடும் சும்மா இருடி” எனக் கவி அதட்ட, “ஓஹோ இதுக்கு பேரு தான் சப்ரைஸ்ஸா? நடத்துங்க நட்டத்துங்க” எனச் சிரித்தாள் வருணா. 
இரவு உணவிற்கு அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்யுமாறு வேலையாட்களிடம் சொல்லிவிட்டு மகிழ் வருவதற்குள் அவர்கள் ஏற்பாடுகள் அனைத்தும் முடித்திருந்தனர். 
கவி கேக் எடுத்து வர, அருண் அதில் கேண்டில்ஸ் ஏற்றிக்கொண்டிருக்க, “டேய் என்னடா நீ? புது பொண்ணு விளக்கேத்துற மாதிரி தடவிக்கிட்டு இருக்க? சீக்கிரம் ஏத்துடா?” என்றான் கிஷோர். 
“உனக்கு என்னடா அவசரம்? கண்ணைக் கட்டிக்கிட்டு அவளே அமைதியா இருக்கும் போது” என்ற அருண் கேட்க, “பர்த் டே தான் அவளுக்கு பட் கேக் எனக்கு!” என்க, சுபி கிஷோரை அடிக்க அனைவரும் சிரித்தனர். 
அருண் கட்டை விரலை உயர்த்திக் காட்ட, மகிழ் வருணாவின் கண்களைத் திறக்க, அவள் முன் கேக்கை நீட்டிய படி அனைவரும் நின்றிருந்தனர். அனைவரையும் ஒருபார்வை பார்த்துவிட்டு அறைச் சுற்றியும் ஒரு பார்வை பார்த்தவள் அவர்கள் அன்பில் ஒருநொடி நெகிழ்ந்தாள். அனைத்தையும் தாண்டி அவள் கண்கள் ஸ்ரீதரைத் தேடியது. தன் பிறந்தநாள் அவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என மனதை சாமாதனாப்படுத்த முயன்ற போதும் சிறு ஏமாற்றம் பரவியது. 
மகிழ் உதவியோடு வருணா கேக் கட் பண்ண, அந்த நொடிக்காகவே காத்திருந்ததது போல் வாழ்த்து பாடலோடு அவள் கன்னத்தில் கேக் பூசி, அணைத்துக் கொண்டு அள்ளி ஊட்டி முகமெல்லாம் பூசிக் கொண்டாட, மகிழும் அவர்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்டு சில நொடிகள் திண்டாடிப் போனாள். 
“கடைசியில எனக்கு இது தான் மிச்சமா?” என கைகளிலிருந்த சாக்லேட் கிரீமை சப்பியபடி கிஷோர் விலக, வருணாவின் முகத்தில் பிளாஸ் லைட்ஸ் அடித்தது. என்னவென்று நிமிர்ந்து பார்க்க, கையில் கைபேசியோடு ஸ்ரீதர் நின்றிருந்தான்.
“ஹே சீனியர், ஹலோ சீனியர் அண்ணா” எனக் கூட்டம் மொத்தமும் அவனைச் சூழ்ந்து கொண்டது. அவனைக் கண்ட நொடி வருணாவிற்கு முகம் மலர, இதயம் தடதடத்தது. ஐயோ இப்படியா தன்னை பார்க்க வேண்டுமென நெளிந்தவள், “மகி அந்த டிஷ்யூவை கொஞ்சம் எடுத்துக்கொடுடேன்” என வருணா கேட்க, அதற்குள் முன் வந்து வெள்ளை ரோஜாக்கள் நிறைந்த பூங்கொத்தை நீட்டி பிறந்தநாள் வாழ்த்தை உரைத்தான் ஸ்ரீதர். 
அனைவரின் முன்பும் மறுக்கமுடியாது அவள் வாங்கிக்கொள்ள, நண்பர்கள் கூட்டம் மொத்தமும் அவனையும் அமர்த்தி அவர்கள் கச்சேரியை ஆரம்பித்துவிட்டனர். அவர்களுக்கு இனிப்புகளைப் பரிமாறிவிட்டு மகிழ்நிரதியும் அமர, “ஹே மகிழ், சீனியர் இரண்டுபேரும் ஒரு பாட்டுப்பாடுங்களேன். உங்க வாய்ஸ் கேட்டே ரொம்ப நாளாச்சு” என்றாள் சுபி. 
“அதான் என் பேபி கேட்குறாளே, ஒரு நல்ல லவ்ஸ் சாங்க பாடுங்க” என கிஷோர் அதிகாரமாகக் கேட்க, “பாடுறவுங்களையும் பாட விடாம செய்யறடா நீ” என உரைத்தாள். 
“உனக்காக தான் கேட்டேன்” என அவன் உரைக்க, “எனக்காக முதல்ல அரியர்ஸ் கிளியர் பண்ணி எங்கப்பாகிட்ட வந்து பேசு” எனச் சண்டையிட இருவருக்குள்ளும் வழக்கம் போதும் வாக்குவாதம் தோன்றியது. 
அனைவரும் சிரிப்புடன் அவர்கள் சண்டையைச் சுவாரஸ்யமாக பார்த்துக்கொண்டிருக்க, “சீனியர் பர்த் டே சாங் பாடலை லேட்டா தானே வந்தீங்க அதுக்கு பனிஷ்மெண்டா இப்போ ஒரு சாங் பாடிடுங்க” எனக் கவி கேட்க, “பார்த் டே பேபி வருணாவுக்காக பாடுங்க சீனியர், ரெடி ஸ்டார்ட்” என்றான் அருண். 
அவன் அமர்ந்ததிலிருந்து வருணாவையும் அவன் ஒரு பார்வையையே எதிர்பார்த்திருக்க ஸ்ரீதர் திரும்பியும் பார்க்கவில்லை. அவன் பார்வை அவனைக் காட்டி கொடுத்துவிடும் என்றெண்ணி பார்க்கவில்லையா? இல்லை தன்னை தவிர்கிறானா? என குழம்பினாள். இருக்கும் போது தவிக்க வைக்கிறான், இல்லாத போது ஏங்க வைக்கிறான் மாயவன் என நினைத்துக்கொண்டிருக்கும் போதே, அவன் சிந்தனையை நிறுத்தியது அவன் குரல். 
யே சினாமிகா சீரும் சினாமிக்க
நீ போனால் கவிதை அனாதிகா
ஹே ஹே ஹே ய்யா
நீ என்னை நீங்காதே நீ என்னை நீங்காதே
நீ என்னை நீங்காதே நீ என்னை நீங்காதே…
இமைகளின் தாழ்வில் உடைகளின் தளர்வில்
என்னோடு பேச மட்டும் குயிலாகும் உன் குரலில்
வறண்ட உதட்டின் வரிப் பள்ளங்களில்
காதல் தானடி என் மீது உனக்கு! 
பாடத் தொடங்கியவன் கடைசி வரி பாடும் போதே அவள் புறம் திரும்பி அவள் விழி பார்த்து கேள்வியாய் புருவம் உயர்த்தினான். 
காதல் தானடி என் மீது உனக்குஅவ்வரியை மீண்டும் பாடியபடி அவள் முகம் பார்த்திருக்க, காதல் தான் இருந்தும் ஏற்றுக்கொள்ள மனமின்றி சட்டென அவள் முகம் திருப்பிவிட்டாள். 
கைத்தட்டி குதூகலித்த கூட்டம் தற்போது மகிழின் புறம் திரும்பிப் பாடச்சொல்ல, அவள் மறுக்க அவர்கள் விடுவதாய் இல்லை. அதே நேரம் அலுவலகத்திலிருந்து வந்த ரிஷியும் வருணாவின் அறையில் கேட்ட சத்தத்தில் அவள் அறைவாசலில் வந்து நின்றான். ரிஷி யாரும் கவனிக்காது போக அவன் வாசலிலே நின்றுவிட்டான். நண்பர்களின் இம்சை தாங்காது மகிழும் பாடத்தொடங்கினாள். 
உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
பொடவ மடிக்கையில்
உன்னதான் மடிக்கிறேன்
ஒரு நூறு வருஷம் பேச நெனச்சு
தோளில் தூங்கிடுவேன்
மகிழ் படி முடிக்க, ரிஷி உருகி நின்றான். எப்போதும் அவள் பாடுகையில் குரலின் இனிமையும் பாடலின் அழகையும் மட்டுமே ரசித்திருந்தவன் இன்று அதிலுள்ள அவள் அன்பையும் கண்டுகொண்டான். தனக்காக வாழும் அவளின் அளவில்லா அன்பில் வியந்தவனுக்கு அவளை நெஞ்சோடு அணைத்துக்கொள்ளும் ஆசை பிறந்தது. 
அவன் ஆசையை நிறைவேற்றுவது போலே சுபியும், கவியும் மகிழ்நிரதியை கட்டிக்கொள்ள, ரிஷி உள்ளே வந்தான். மகிழின் அருகில் அமர்ந்தவன் அவர்கள் உரையாடலில் கலந்து கொண்டு, கேலி கிண்டலில் மனமார சிரிக்க, அவனை இவ்வளவு சிரித்துப் பார்த்திடாத மகிழுக்கு உள்ளம் நிறைத்தது. 
கலைத்த வருணாவின் முகத்தையும், விழி மூடத் துடிக்கும் கண்களையும் கண்ட மகிழ் கொண்டாட்டம் போதுமென அனைவரையும் இரவு உணவிற்கு மகிழ் அழைத்துச் சென்றாள். ரிஷியும் உடை மாற்றிவிட்டு வந்தமர, மகிழின் அலைபேசி அழைத்தது. 
வருணாவிடமிருந்து அழைப்பு வந்திருக்க அட்டன் செய்ததும், “மகி சீனியர் அவர் மொபைலை வைச்சிட்டு போயிட்டாரு வந்து எடுத்துக்கச் சொல்லு” எனக் கட் செய்தாள். 
மகிழ் தான் சென்று எடுத்து வருவதாகக் கிளம்ப, தன் சட்டைப்பையில் இருக்கும் அலைபேசியை ஒரு முறை தொட்டுப் பார்த்துக்கொண்ட ஸ்ரீதர், “நான் போய் எடுத்துக்கிடுறேன், நீ பரிமாறு மகி” என்ற எழுந்து சென்றான். மகிழுக்கு முதல் முறையாக இருவர் நடத்தையிலும் சிறு சந்தேகம் தோன்றியது. 
மீண்டும் வருணாவின் அறைக்குள் வந்தவன், “எதுக்கு வரச் சொன்ன?” என்றான். குரலில் ஒரு அழுத்தமும் முகத்தில் ஒரு இறுக்கமும் இருப்பதை அவளும் கண்டுகொண்டாள். 
“என் மேல கோபமா ஸ்ரீதர்?”
“ப்ச், நான் எதுக்கு உங்கிட்ட கோபப்படப் போறேன்?” என எதிர் கேள்வி கேட்டான். 
“இல்லை அன்னைக்கு உங்களை ஹர்ட் பண்றமாதிரி பேசிட்டேன் போல, அதான் நீங்க எங்கிட்ட பேச மாட்டிக்கீங்க!” 
“ஏய், வந்ததும் வாழ்த்து சொன்னேன், இப்போ வரைக்கும் பேசிக்கிட்டு தானே இருக்கேன். நான் எப்போ பேசாம இருந்தேன்?” 
“இல்லை நீங்க சரியா பேச மாட்டிக்கீங்க, நான் தான் தப்பு செஞ்சிட்ட மாதிரி என்னை தவிர்க்குறீங்க” 
“ப்ச், எனக்கு என் காதலை சொல்ல உரிமை இருக்கும் போது பிடிக்கலைனா மறுக்குற உரிமை உனக்கும் இருக்கு. இதுல நீ எதுவும் தப்பு செய்திடவில்லை”
“அதுக்கு தான் எங்கிட்ட முகம் கொடுத்துப் பேச மாட்டிக்கீங்களா?” 
“பிடிக்கலைன்னு ஒரு பொண்ணு சொன்ன பிறகு அந்த பொண்ணை தொந்தரவு செய்றது எந்த வகையில கண்ணியமான செயல்?”
“இல்லை, முன்ன மாதிரி ப்ரண்ட்ஸாவே இருக்கலாம்” 
“நான் எப்போ உங்கிட்ட ப்ரண்ட்லியா பேசியிருக்கேன்?”
“நீங்க எங்கிட்ட பேசுனா தானே? மகிக்கிட்ட மட்டும் தான் பேசுவீங்க. நாங்க தான் எல்லாரும் கிண்டல் செய்வோம்”
“ம்ம், அப்போல இருந்து இந்த நொடி வரைக்கும் உன்னை ப்ரண்டா பார்க்கவேயில்லையே! என்னால முடியவும் முடியாது. ஒவ்வொரு நாளும் நீ போட்டுட்டு வர ட்ரெஸ்ல இருந்து காதுல ஆடுற ஜிமிக்கி வரைக்கும் ரசிச்சிருக்கேன். எத்தனையோ நாள் நீ ஸ்போர்ட்ஸ் ப்ராக்டிஸ்ல இருக்கும் போது ஸ்டேடியம்ல உக்காத்து ரசிச்சி பார்த்திருக்கேன். உன் கை பிடிச்சி நடக்கணும், உன்னை டைட்டா ஹக் பண்ணிக்கணும், அன்னைக்கு கொடுத்த மாதிரி நாளொன்றிக்கு ஆயிரம் முத்தம் கொடுத்துக்கணும், உன் வெற்றியை கொண்டாடணும், தீராத அன்போட வாழ்ந்து அழகான குழந்தைகளை பெத்துக்கணும். வயசாகி நீ தள்ளாடுற போதும் என் நெஞ்சில் தாக்கிக்கணும். இன்னும் இன்னும் நிறைய ஆசைகளும் கனவுகளும் இருக்கு. பாதி சொன்னதுக்கே திறந்த வாய் மூடாம கேட்குற முழுசா கேட்க மயங்கிடுவ” 
சட்டென வாயை மூடிக்கொண்டவள் அப்போதும் வியப்பில் விரிந்த கண்களோடு அவனையே பார்த்திருந்தாள். தவிர்க்காது தான் ஏன் கொஞ்சிக்கொண்டிருக்கிறோம்? என நினைக்கையில் அவளுக்கே அவள் மீது கோபம் வந்தது. 
“என்னை கெஞ்ச வைக்கிற நீ?” அவள் கத்த,
“ஏன்? சரி நான் பேசலைன்னா உனக்கு என்ன பாதிப்பு?” என்றான். 
“ஒன்றுமில்லை, என் கண்ணு முன்னாடி நிற்காத போயிரு?” மேலும் கத்தினாள். 
உள்ளுக்குள் சிரித்துக்கொண்டவன் “நானா வந்து என் காதலை சொன்னதால அலட்சியப்படுத்துற? ஸ்ஓகே, எங்கிருந்தாலும் மஞ்சள் குங்குமத்தோட நல்லாயிருன்னு வாழ்த்தி அனுப்பக்கூடாதா!” என்றான்.
அவள் கொலைவெறியில் முறைக்க, “இப்போ எதுக்கு முறைக்குற? நண்பனா மட்டும் என்னால பார்க்க முடியாது, அதுக்கு பார்க்காமலே இருந்துக்கிறேன். பை, டேக் கேர்” என கையசைத்துவிட்டு திரும்பி நடந்தான். 
மிகுந்த எரிச்சலிலிருந்த வருணா அவன் கொடுத்துச் சென்ற பூங்கொத்திலிருந்த மலர்களைப் பிய்த்து எரிந்து கொண்டிருந்தாள்.  

Advertisement