Advertisement

அத்தியாயம் 20
ரிஷி மகிழ் இருவருக்குமே இந்த ஒருநாளே மிகவும் மன அழுத்தமாக, போராட்டமாக இருந்தது. ரிஷிக்கு தவறு செய்த குற்றவுணர்வு ஒரு வலியைக் கொடுக்க, எப்போதும் மகிழின் அன்பை மட்டுமே அறிந்தவனுக்கு அவள் தன்னை தவிர்க்கின்றாள் என்பது மேலும் அதிக வலியைக் கொடுத்தது
இரவு ரிஷி வீட்டிற்குள் வருகையில் ஹாலில் அமர்ந்திருந்த மகிழைப் பார்த்தான். தன்னை தவிர்ப்பவளிடம் சென்று பேச மனமின்றி வருணாவின் அறை நோக்கி சென்றான். மகிழும் அவன் பின்னே சென்றாள்.
ஸ்ரீதர் கொடுத்துச் சென்ற புத்தகங்களை அணைத்தபடி வருணா உறங்கிக்கொண்டிருக்க, அதை எடுத்து வைத்த ரிஷி அவள் தலை தடவியபடி மௌனமாக நின்றான். அவன் பின்னே வந்த மகிழ் அதை பார்த்துவிட்டு, “இன்னைக்கு சீனியர் வந்தாரு, அவர் கொடுத்த புக்ஸ் தான் இதுஎன்றாள்
அந்தக் குரலோசையில் திரும்பி அவளைப் பார்க்க, அவன் பார்வையின் அர்த்தம் அறியாது,”நா..நான் இன்வைட் பண்ணலை, அவ..அவரா..தான் வந்தார்..”என்றாள் திக்கித்திணறி
குரலிலுள்ள அவள் பயத்தை சரியாக கண்டுகொண்ட ரிஷி வேதனையோடு அவளை பார்த்தான். எதுவும் சொல்லாமல் வெளியேறியவன் தன்னறைக்குச் சென்று விட்டான். அவன் அமைதியாக சென்றதில் தன்னை நம்பவில்லையோ என நினைத்த மகிழுக்கு கண்கள் இரண்டும் கலங்கி கண்ணீர் வந்தது.  
அறைக்குள் வந்த ரிஷி உடைமாற்ற நினைத்து சட்டை பட்டனை கழற்றிக் கொண்டிருக்க, மகிழ் உள்ளே வந்தாள். அவன் அருகில் வந்தவள் அவன் பின் நின்றபடி, “நான் அழைக்காமல் தான் ஸ்ரீதர் வந்தாங்க, வருணா கூட நல்லா தான் பேசிக்கிட்டு இருந்தா வருத்தப்படலைஎன விளக்கினாள்
கேட்காமலே வந்ததிலிருந்து ஸ்ரீதர் பற்றியே பேச, சற்றே உள்ளுக்குள் எரிச்சல் பரவியது! தன்னை பற்றி என்ன நினைக்கிறாள் இவள்? என்ற கேள்வியோடு திரும்பியவன் அவள் உதட்டின் மீது விரல் வைத்து, “உஷ்..ஷ்..”என்றான்
தன்னை நம்பவும் மறுக்கிறான், தன் விளக்கத்தை கேட்கவும் மறுக்கிறான் என நினைத்த மகிழ் மீண்டும் கலங்க, ரிஷியால் தாங்க முடியவில்லை. அவள் முகத்தை கைகளில் ஏந்தி கண்ணீரைத் துடைத்தவன், “போதும் மகிழ், நீ நல்லது தான் செஞ்ச அதுக்காக என்னை பாவியாக்காத!” என்றான்
இல்லைங்க..” என தேம்பியபடி அவள் பேச வர,”ப்ளீஸ் மகிழ்! ஐம் ரியலி சாரி! வருணா சந்தோஷமா இருப்பான்னு எனக்குத் தெரியாது, அத்தனை பேருக்கு நடுவுல அவ இருக்கும் போது அவளை குறையா நினைச்சிப்பா, ஹர்ட் ஆகிடுவான்னு நானா நினைச்சிகிட்டேன். அந்த இடத்துல ஒரு நிமிஷம் நின்னு பார்த்திருந்தாளே அவள் சந்தோஷம் எனக்குத் தெரிந்திருக்கும் ஆனால் அத்தனை பேரை கூட்டமா பார்க்கவும் எனக்கு கோபம் வந்துடுச்சு. அந்த கோபத்துல உன்னை தப்பு சொல்லிட்டேன், சாரி மகிழ்!” என்றவன் வெகு அருகில் நின்றிருந்தவளை அவன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.
கரம் கோர்த்து அணைத்துக்கொண்ட மகிழ் அவன் நெஞ்சில் சாய்ந்து மெல்லிய விசும்பலுடன், “என் மேல கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லையா? நான் வருணாவை வருந்த வைப்பேனா? நான் என்ன கொடுமைக்கார அண்ணியா? உறவு எல்லாம் இப்போ வந்தது தானே, அதுக்கு முன்னவே நாங்க ப்ரண்ட்ஸ் இல்லையாஎன்றாள்
தான் சொல்லிய ஒரு வார்த்தைக்கு இவ்வாறெல்லாம் அர்த்தம் கற்பித்துக்கொண்டு அழுத்திக்கொள்வாள் என ரிஷி சிறிதும் எதிர்பார்க்கவில்லை
நான் கோபத்துல தெரியாம சொல்லிட்டேன், அதுக்குன்னு அழுது கரைவியா? பதிலுக்கு பதில் பேசி சண்டை போட வேண்டாமா?” என அதட்டலாகக் கேட்ட போதும் சமாதானமாக முதுகை தட்டிக்கொடுத்தான்
எப்படி?” என்றவள் நிமிர்ந்து அவன் முகம் பார்க்க, “அன்னைக்கு நீங்க தானே சொன்னீங்க ஒவ்வொன்னுக்கும் எங்கிட்ட பெர்மிஷன் கேட்டுகிட்டு இருக்க வேண்டாம், உன் விருப்பம் போல செய்யுன்னு, அப்படி சொல்லிட்டு இப்போ எப்படி திட்டலாம்? இல்லை என் விருப்பப்படி தான் செய்வேன்னு உறுதியா, பிடிவாதமா பேச வேண்டாமா? சண்டை போட வேண்டாமா?” என்றான்
நேசமோ நெருக்கமா அவன் காட்டாது அவள் எவ்வாறு உரிமை எடுத்துக்கொள்வாள் என்பதை ரிஷி உணரவில்லை
சண்டையா! அதெல்லாம் எனக்குத் தெரியாதுஎன அப்பாவியாக உரைத்தவள் அணைப்பில் இருந்து விலக, “ஐம் அ லக்கியஸ்ட் பேர்சன்எனச் சிரித்தவன் அவள் முகம் நிமிர்த்தி நெற்றியில் இதழ் பதித்தான்
பெருவிரலால் கன்னக்களை மென்மையா வருடியபடி “என்னை அவ்வளவு பிடிக்குமா உனக்கு?” என பதிலறிந்தும் கேட்க, பதிலின்றி அழுத்தமாக அவனுள் சாய்ந்தாள் அவள். 
தன்னை தவறாக நினைத்துவிட்டானோ என பதைப்பதைப்போடு வந்தவளிடம் அவன் தவறுக்கு மன்னிப்பு வேண்டியது, கணம் குறைந்து போன்றிருக்க, அவன் முத்தத்தில் நெகிழ்வாய் உணர்ந்தாள்
நேற்று இருந்த மனபாரத்தில் உறக்கமால் தவித்த ரிஷி இன்று நிறைவாய் உறங்க, முற்றிலும் உறக்கம் தொலைத்தாள் மகிழ்
தற்போது எல்லாம் ரிஷி மகிழை கவனிக்க தொடங்கிருந்தான். வீட்டிற்குள் அவள் நடமாடுகையில் ஒரு முறையாவது திரும்பி பார்த்துவிடுவான், அவள் உடுத்தும் உடையிலிருந்து விரல் நுனியில் இருக்கும் நெயில்கலர்ஸ் வரை தினமும் கவனித்தான்
கவனிக்க மட்டுமே தொடங்கியவனை ரசிக்க வைத்தது மகிழ்நிரதியின் அழகு. காலை தேநீரும் இரவு உணவும் இருவரும் இணைந்து உட்கொள்வர். அந்த நிமிடங்கள் அவர்களுக்கானது
ஸ்ரீதர் குறித்த யோசனையில் இருந்தாள் வருணா. அவன் கூறிய போது குரலில் குறும்பு இல்லை ஆனால் முகத்தில் ஒரு உறுதி இருந்தது. எப்போதிலிருந்து இப்படி? ஆரம்பத்திலிருந்தே என் மீது ஆர்வமா? நான் தான் கவனிக்கத் தவறிவிட்டேனோ? இல்லை இப்போது என்னைப் பார்த்த பின் பரிதாபத்தில் வந்த நேசமா? இல்லை இதெல்லாம் என் அதீத கற்பனையா? வேலைவெட்டி எதுவுமில்லாது நானாக தான் குழம்பிக்கொள்கிறேனோ? அவனை அழைத்துக் கேட்டுவிடுவோமா என்றெல்லாம் தன் சிந்தனையிலே நாட்கள் கழிய ஸ்ரீதரோ இரு வாரமான பின்னும் வரவில்லை. 
காலைநேரமே வருணா யோசனையிலே இருக்க, மகிழ், ரிஷியின் வருகையைக் கவனிக்கவில்லை. மகிழ் அழைத்ததும் நிமிர்ந்தவள் இருவரையும் பார்க்க, வெளியில் செல்வதைப் போல் இருவரும் தயாராகி வந்திருந்தனர். 
கேள்வியாய் அவள் பார்த்தபடி இருக்க, “காஞ்சிபுரம் போறோம் வருணா, மாமாவை பார்த்துட்டு நைட்குள்ள ரிட்டனாகிடுவோம்” என்றான் ரிஷி. 
“சூப்பர், இங்க வந்ததுல இருந்து போகவே இல்லை, இரண்டுநாள் கூட இருந்து வாங்க, அங்கிள் சந்தோஷப்படுவார்” என மகிழ் கரங்களைப் பற்றினாள் வருணா. 
“ம்ம், ரிஷப்ஷன் வைக்கலாம்ன்னு இருக்கேன், மாமாட்ட இன்பார்ம் பண்ணிட்டு,டேட் பிக்ஸ் பண்ணிட்டு வரேன். அதுக்கு தான் போறோம்” என்றான். 
தலையாட்டியவள் மகிழிடம் திரும்பி, “அங்கிளை நலம் விசாரித்ததா சொல்லு” என்றாள். சரியென்று இருவரும் விடைபெற்றுக் கிளம்பினர். 
வெளியாட்களிடம் நேரத்திற்கு என்னென்ன கொடுக்க வேண்டுமென்று கூறியவள் ஆயிரம் அறிவுரைகளையும் கட்டளைகளையும் சொல்லிச்சென்றிருந்தாள். என்னவோ கைக்குழந்தையை விட்டுச்செல்லும் தாய் போன்ற அவள் அலப்பறைகளைப் பார்த்துச் சிரித்த போதும் உள்ளுக்குள் ரசிக்கவே செய்தான். 
மகிழின் கொலுசொலியும் வளையோசையும் இல்லாமல் அந்த வீடே நிசப்தமாய் இருக்க, அவள் குரல் கேட்காமல் நேரம் நகரவில்லை வருணாவிற்கு. ரிஷி வெளியூர் சென்ற போதெல்லாம் இவ்வாறு உணர்ந்ததில்லை ஆனால் மகிழ் இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க முடியவில்லை. காலையிலே நண்பர்கள் யாரையாவது அழைத்திருக்கலாமே என நொந்து கொண்டாள். வேலையாட்கள் அவர்கள் வேலையைக் கவனித்துக்கொண்டிருக்க, எப்போதும் போலே பாடல் கேட்டபடி உறங்கி இருந்தாள். 
மாலை நேரம் ஸ்ரீதர் வருகை தந்தான். மகிழ் வீட்டிலில்லாது அறிந்தவனுக்கு வருணாவை எவ்வாறு எதிர்கொள்வது ஒரு நொடி யோசனை! இருந்தும் அவள் அறைக்குள் சென்றான். அன்று சொல்லியதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிடுவாளோ? இல்லை கோபப்படுவாளோ? தன்னை தவிர்ப்பாளோ? முகம் திருப்பிக்கொள்வாளோ? இல்லை அழுது கரைவாளோ? என்றெல்லாம் யோசித்த போதும் இவ்வாறு தான் ரியாக்ட் செய்வாள் என உறுதியாக யூகிக்கமுடியவில்லை. இதுவே முன்னர் இருந்த வருணாவாகின் கையில் ஹாக்கி ஸ்டிக்கை தூக்கியிருப்பாள் என நினைத்துச் சிரித்தான். 
அதே சிரிப்புடன் அவள் அறைக்குள் செல்ல, “வாங்க சீனியர்” என அவளும் இன்முகமாக வரவேற்றாள். அவள் சிரிப்பின் பின் என்ன வருமோ என நினைத்துப் பயந்த போதும் அமைதியாக அருகில் அமர்ந்தான். 
மகிழைப் பற்றி விசாரித்தபடி உரையாடத் தொடங்கினான். ஒரே நிலையில் வெகுநேரமாக படுத்திருந்தவள் சற்றே நிமிர்ந்து படுக்க முயற்சிக்க, சட்டென எழுந்து வந்து அவளை அணைத்துப் பிடித்துக்கொண்டு முதுக்குப்பின் இரண்டு தலையணைகளை வைத்து நிமிர்த்திப் படுக்க வைத்தான். 
“தேங்க்ஸ் சீனியர், ஒரு நாளே என்னை கவனித்துக்கொள்வது ரொம்ப கஷ்டம் தான்” என்க, “யார் சொன்னா? சுகமா தான் இருக்கு” என்றான். இன்னும் அவளை அணைப்பிற்குள் வைத்துக்கொண்டு ஒன்றைக் கண்சிமிட்டியபடி. 
அவன் அணைப்பிலிருந்து விலகியவள், “ஈரமண் மாதிரி கொஞ்சம் இந்த பரிதாபம் ஒட்டிக்கொண்டு இருக்குற வரைக்கும் தான் சீனியர், ஈரம் காய்ந்தால் விட்டுடும்” என்றாள் விரக்தி சிரிப்போடு. 
அதே கட்டிலில் அவளருகிலே அமர்ந்தவன், “என்னதிது? ஈரமண்ணு, பரிதாபம், வெங்காயம், வெள்ளரிக்காய்ன்னு பீச்சில சுண்டல் விக்கிற பாட்டி மாதிரி பேசிக்கிட்டு இருக்க?” என்றான் சிரிப்புடன். 
அதில் அவள் முறைத்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொள்ள, “கொஞ்சம் என்னை பாரேன்” என்றபடி அவள் முகத்தைப் பற்றி தன்னை நோக்கித் திருப்பினான். 
“என் முகத்தை நல்லா பார்த்து சொல்லு, என்னோட ரொமண்டிக் லுக் பரிதாபமா லுக் மாதிரியா இருக்கு? ப்ச், அப்போ என் பர்மான்ஸ் வேஸ்டா? இன்னும் இம்ரூவ் பண்ணணுமோ?” என்றான் அமைதியான முகத்துடன். 
அதில் நொடியில் சிரித்தவள் அவன் பார்வையை ஆராய்ந்து கொண்டிருந்தாள். அவன் நேசம் ஏற்கனவே ஆராய்ந்து அறிந்த உண்மை தான் ஆனாலும் அவளால் ஏற்க முடியவில்லை. இமைக்காது வெறித்த பார்வையில் இருப்பவளின் முகத்தை கைகளில் ஏந்தி, “இது பரிதாபம் இல்லை, இப்போ வந்ததுமில்லை! காலேஜ் டைம்ல இருந்தே இருந்த பீல் தான். நான் தான் எக்ஸ்டாபிலிஸ் பண்ணிக்கிட்டதில்லை” என்றான். 
“ஏன்?” எனக் கேள்வியாகக் கேட்ட போதும் உள்ளுக்குள் குறைபட்டுக்கொண்டவள் அவன் கைகளை விலக்க முயற்சிக்க, “காலேஜ் டைம்ல இருந்து காதல் தான்! அப்பா இல்லை, வீட்டுக்கு மூத்த பையன் கல்யாணமாகத் தங்கை இருந்தா, கடமைகள் இருந்தது, எனக்கு வேலையில்லை. இதெல்லாத்துக்கும் மேல எதிர்காலம் எப்படின்னு தெரியாத நிலையில உனக்கொரு பொய்யான நம்பிக்கையைக் கொடுத்துக் காத்திருக்க வைக்க விருப்பமில்லை” என்றான் கைகளை விலக்காது. 
“அப்போ இப்போ சொல்லுறது என் மேல வந்த அனுதாபத்துல தானே?” என வருணா கேட்க, அவள் முகத்தை கைகளில் பற்றியிருந்தவன் சட்டென நெருங்கி இதழோடு இதழ் பதித்தான். அவள் கேள்விகளுக்குப் பதிலாய், காதல் நிறைந்த ஆசையோடு அழுத்தமான நீண்டதொரு முத்தம்! முதலில் எதிர்த்தவள் நொடிகளில் கரையத்தொடங்கினாள், இறுகிய உடல் தளர, மூச்சுக்குத் திணறி, கண்களில் கண்ணீர் வழிய கண்மூடியபடி உருகியிருந்தாள். 
மெல்ல விலகியவன், “இது சாம்பிள் தான், இன்னும் டன் கணக்குல உன் மேல ஆசையிருக்கு! அனுதாபம், பரிதாபம்னு லூசு மாதிரி உளறாத!” என்றான் அதட்டல் குரலில். 
அவன் குரல் உள்ளுக்குள் சிலிர்க்கச் செய்து பற்றிக்கொள்ளச் சொல்லிய போதும் தவிர்த்து கண்களைத் திறந்தவள், “இது..நா..நான் எப்படி? வேண்டாம் ஸ்ரீ!” எனக் கண்ணீரோடு வார்த்தை இன்றி திணறினாள். “என்ன?” எனக் கண்ணீரைத் துடைத்தபடி ஆதரவாய் மெல்லிய குரலில் கேட்டான்.
“நான் உனக்கு பாரமா இருக்க விருப்பலை” 
“நான் உரிமையோட பார்த்துக்க விரும்புறேன்”
“நீ என்னை பலகீனப்படுத்துற!”
“நான் உன் பலமா இருக்க விரும்புறேன்”
“நான் வேண்டாம், உனக்கு பொறுத்தமான நல்ல பொண்ணை பார்த்துக்கோங்க” 
“இதை விட பொறுத்தமான பொண்ணு எனக்குத் தெரியலை” என அன்று அவளோட எடுத்துக்கொண்ட புகைப்படத்தைக் காட்டினான்.
“ப்ச், நான் செட்டாக மாட்டேன் ஸ்ரீதர்” 
“ஏன்? காரணம் சொல்லு?” 
முறைத்தவள், “உங்களுக்கு பிடிச்சா போதுமா? எனக்குப் பிடிக்க வேண்டாமா?” என்றாள். 
“கரெக்ட்..” என எழுந்தவன் மேசையிலிருந்த பூஜாடியில் இருந்த பூங்கொத்தை எடுத்துக்கொண்டு அவள் காலடியில் மண்டியிட்டு அவள் முன் நீட்டியவன், “ஐ லவ் யூ பேபி, உனக்கு என்னை பிடிச்சிருக்கா?” என்றான். 
தன் காலடியில் ஒருகாலை ஒன்றி ஒருகாலால் மண்டியிட்டு பூங்கொத்தை நீட்டியபடி, வலதுபுறம் தலைசாய்த்து, முகம் மலர பல்வரிசை தெரியச் சிரிப்போடு கேட்டவனை இமைக்காது பார்த்தவளுக்கு முழுதாய் கொள்ளையிட்டுக் கொள்ளும் அளவிற்குப் பிடித்திருந்தது.
எழுந்து மீண்டும் அவள் அருகில் அமர்ந்தவன் உள்ளங்களைப் பற்றிக்கொண்டு “சரியா ப்ரபோஸ் பண்ணலையோ? ரெட் ரோஸ் கொடுத்திருக்கணுமோ? நீளமான டயலாக் சொல்லணுமோ? நெக்ஸ்ட் டைம் மெமரி பண்ணிட்டு வந்து சொல்லுறேன். இப்போ பிடிச்சிருக்குன்னு சொல்லு” என்றான். 
மறுப்பாய் தலையசைத்தவள், “பிடிக்கலை..!” என்றாள். 
“பிடிக்காம தான் என் வாழ்கையைப் பத்தி கவலைப்படுறீயாக்கும்?” என்க, அவளிடம் வார்த்தையில்லை, அதற்கு மேல் அவனோட வாதிடவும் முடியாது பெருமூச்சோடு விழி மூடினாள். அமைதியானவன் படுக்கையிலிருந்து எழுந்து இருக்கையில் அமர, விலகிய அவன் கைகளை இறுக்கப்பற்றினாள். 
வருணாவின் முகத்தை நிமிர்ந்து பார்க்க, அழுத்தமான முகத்தில், சுருங்கிய நெற்றியும், நெரிந்த புருவமும், மூடிய இமைகளுக்குள் நிலையில்லாது உருண்டோடிய கருமணிகளும் அவனைக் கலங்கச் செய்தது. தன்னை ஏற்க முடியாமல் அவளுக்குள்ளே அவள் போராடுவதை அவனால் உணரமுடித்தது. 
சில நிமிடங்கள் அவள் முகத்தையே பார்த்திருந்தவன், மேனி தழுவும் மென் காற்றை போன்ற மெல்லிய குரலில் பாடத்தொடங்கினான். 
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்
பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே
அள்ளி அணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனே
ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி
ஆடித் திரிதல் கண்டால் உன்னைப்போய் ஆவி தழுவுதடி”
பாரதியின் வரியோ இல்லை பாடியவனின் தேன்பாகான குரலோ எதுவோ அவளை வருட, அவள் முகத்தின் அழுத்தங்கள் மெல்ல மெல்லத் தளர, நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்திற்குள் அமிழ்ந்தாள். 

Advertisement