Advertisement

அத்தியாயம் 18
ரிஷி நிற்பதைச் சிறிதும் எதிர்பாராத மகிழ் சிரிப்புடன் அவனருகே செல்ல, “அதென்ன விஷயன்னு சொல்லிட்டுச் சிரிச்சா நானும் கூட சேர்த்து சிரிப்பேனே!” என அவள் சிரிப்பதைக் குறிப்பிட்டுக் கேட்டான். 
“அது ஒன்னும் பெரிய காமெடியெல்லாம் இல்லைங்க, நேத்து ஷாப்பிங் போயிருந்த போது எங்க சீனியரை பார்த்தேன்னு சொன்னேனே அவர் தான் கால் பண்ணியிருந்தாரு, அவருக்கு நான் தான் வருணாவோட அண்ணின்னு தெரியாது பட் எனக்காக அவர் வருணாவை தேடிக்கிட்டு இருக்காரு” என்றாள் சிரிப்புடன். 
ரிஷிக்கு சிறிதும் சிரிப்பு வரவில்லை ஆனால் எரிச்சல் அதிகமானது. “உனக்கு கல்யாணமானதையே நீ சொல்லலையா?” எனக் கேட்க, “சொல்லிட்டேன், ஆனால் வருணாவோட அண்ணின்னு சொல்ல மறந்துட்டேங்க” என்றாள். 
‘சீனியர்னா வயசுல பெரியவன் தானே அண்ணன்னு சொன்னா ஆகாத’ என மனதில் புகைந்துகொண்டு தலையாட்டினான். 
“சரி சாப்பிட வாங்க” என மகிழ் அழைக்க, அவள் பின்னே சென்றான். அவனுக்கு பரிமாறிய பின் வருணாவையும் கவனித்து வந்தாள். மகிழைக் கேலி, கிண்டல் செய்து, கோபப்படுத்தி, சண்டையிழுத்து பார்த்தாள் வருணா. மகிழ்நிரதியாலும் அதற்கு மேல் பிடிவாதத்தைப் பிடிக்க முடியாது போக பேசிவிட்டாள். ஆனாலும் வருணாவை எப்படிச் சம்மதிக்க வைப்பது என்ற யோசனையிலே அந்த இரவு கழிந்தது. 
இளங்காலை நேரம் ரிஷிநந்தன் ஜாக்கிங் முடித்துவிட்டு தினசரியை புரட்டியவாறு ஹாலில் அமர்ந்திருக்க, அந்த காலை நேரமே ஸ்ரீதர் வந்துவிட்டான். 
மகிழ் சென்று வரவேற்க, ரிஷியும் லேசான புன்சிரிப்புடன் கரம் குலுக்கினான். திருமண வாழ்த்து தெரிவித்து, கொண்டு வந்திருந்த பூங்கொத்தை அவர்களிடம் நீட்ட இருவரும் வாங்கிக்கொண்டனர். ஸ்ரீதர் அமர, ரிஷி அவனைப் பார்வையால் அளவிட்டபடி எதிரே அமர்ந்தான். 
ரிஷியின் அளவிடும் பார்வையைக் கவனிக்காது எதையோ தேடி ஸ்ரீதரின் விழிகள் சுழல, அவன் முன் வந்து காஃபியை நீட்டினாள் மகிழ். கவனம் கலைந்தவன் நன்றி சொல்லி எடுத்துக்கொண்டு, “ஏன் மகி உன் திருமணத்துக்குச் சொல்லவே இல்லை?” என்றான். 
அவன் அழைப்பே ரிஷிக்கு எரிச்சலைத் தர, “அது நெக்ஸ்ட் மந்த் ரிஷப்ஷன் இருக்கு அப்போ சொல்லிக்கலாம்னு நினைச்சிருப்பா” என ரிஷி பதில் தர, அவன் புறம் திரும்பினான். 
இருவரும் வேலை குடும்பம் பற்றி பொதுவாகப் பேசிக்கொள்ள, சில நிமிடங்களிலே அலுவலகம் கிளம்ப வேண்டுமென ரிஷி எழுந்து சென்றுவிட்டான். 
ஸ்ரீதரின் உதவியால் நண்பர்கள் அனைவரிடமும் பேசிவிட்ட மகிழ்ச்சியில் இருந்த மகிழ் அவனுக்கு நன்றி கூற, தலையாட்டியபடி அவன் பார்வை தேடலாய் ஒருமுறை சுழன்று திரும்பியது. 
பெருமூச்சுடன், “உன் ப்ரண்ட்டை உன் வீட்டுலையே வைச்சிக்கிட்டு ஊரெல்லாம் என்னைத் தேட விட்டியே மகி, இது நியாயமா?” என்றான். 
நாக்கை கடித்தபடி சிரித்தவள், “சாரி சீனியர் சொல்ல மறந்துட்டேன்” என்க, “எங்க வருணா? ஜாகிங் போயிருக்காளா?” என்றான் எதிர்பார்ப்புடன். 
சட்டென முகம் வாடிய மகிழ், மென்குரலில் வருணாவை பற்றி உரைக்க, கேட்டுக்கொண்டிருந்த ஸ்ரீதர் பெரிதும் அதிர்ந்தான். அத்தனை வலிகளையும் மலர்மேனியவள் எவ்வாறு தாங்கினாளோ! என மனம் வருந்தினான். 
துள்ளியோடும் புள்ளிமானைக் காணவே ஆசையில் வந்தவன் தற்போது அவள் நிலை கேட்ட பின் பார்க்கும் சக்தியின்றி திரும்பிச் செல்லவே நினைத்தான். அதற்குள் மகிழ், “வாங்க சீனியர்” என அழைத்தபடி வருணா அறை நோக்கி எழுந்து சென்றாள். 
இனி மறுக்கவும் இயலாது என்பதால் கனத்த மனதுடன் எழுந்து அவள் பின்னே சென்றான். வருணா சற்று முன் தான் எழுந்திருக்க, செவிலியர் அவளைக் கவனித்து கொண்டிருந்தார். மகிழ் ஸ்ரீதரோடு உள்ளே செல்ல, அவர் வெளியேறினார். வருணாவும் அப்போ தான் சற்றே தலையுயர்த்தி அவனைக் கண்டாள். 
இத்தனை வருடங்களுக்குப் பின் பார்த்த போதும் நொடியில் அவனைக் கண்டுகொண்டவள், “சீனியர்! வாங்க..வாங்க” என தன் காதோர முடிகளைக் கோதியபடி வரவேற்றாள். 
அடையாளமே தெரியாது அழகைத் தொலைத்த நிலையில் அந்தக் குரல் மட்டுமே அவளை அடையாளம் காட்ட, சற்றே நொறுங்கிப்போனான். விழி இரண்டும் கலங்கியது அதைக் காட்டாது முயன்று உதட்டை இழுத்து வர வைத்த புன்னகையுடன் அருகே வந்தான். 
“எப்படி இருக்கீங்க வருணா?” என்க, “எனகென்ன குறை? எனக்குன்னே ஒரு அடிமை கிடைச்சிருக்கா! அவளை நல்லா வேலை வாங்கிக்கிட்டு நான் படுக்கையில சுகமா இருக்கேன்” என மகிழை வம்பிழுத்தபடி இலகுவாகப் பதிலுரைத்தாள். 
அவள் முகம் துடைத்து, முடிகள் அனைத்தையும் சுருட்டி கொண்டையாக்கி கிளிப் மாட்டிக்கொண்டிருந்த மகிழ் அவள் தலையில் மெல்லியதாய் கொட்ட, தலையை தெய்த்தபடி வாங்கிக்கொண்டாள். 
ஸ்ரீதரின் பார்வை அவளிடமே இருக்க, “ஏன் சீனியர் நான் நல்லாயில்லையா?” என அவனிடமே கேட்க, திணறி விழித்தான். 
அவளே அவள் முகத்தைப் பார்த்து சில வாரங்கள் ஆகியிருந்தது. மகிழ் வந்த பின் அந்த அறையில் அவள் கண் காணும் தூரத்தில் எங்கும் கண்ணாடிகளே கிடையாது. அவ்வப்போது அவளாக முகத்தைத் தொட்டுப்பார்த்துக் கொள்வாள், காயங்கள் ஆறியபோதும் தழும்புகள் உண்டு என்பதை உணர்ந்திருந்தாள்.
“சிலபஸ்லையே இல்லாத கஷ்டமான கொஸ்டீனை கேட்டதால முழிக்கிறீங்களா சீனியர்?” என்க, சிறு சிரிப்புடன் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தான். 
ரிஷி அலுவலகம் கிளம்பிக்கொண்டிருக்க காலை உணவு உண்ணாமல் சென்றுவிடுவானோ என நினைத்து அவனைக் கவனிக்க மகிழ் ஓடினாள். 
செல்பவளைச் சிரிப்புடன் பார்த்திருந்த வருணா, “இத்தனை நாள் தலைமறைவா எங்க போனீங்க சீனியர்? நல்லாயிருக்கீங்களா?” என அவனைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினாள். 
அவளை எதிர்கொள்ளும் துணிவே இன்றி மனம் கனக்கத் தயங்கி ஓட நினைத்தவன் அவள் இலகுவான பேச்சில் சற்றே தளர்ந்து அமர்ந்தான். அவள் கேள்விகளுக்குப் பதில் கொடுக்க, வெகு நாட்களுக்குப்பின் புதியவனைப் பார்த்த உற்சாகத்தில் அவளும் உரையாடிக் கொண்டிருந்தாள். 
அவள் உற்சாகம் ஸ்ரீதரையும் பற்றி இழுக்கச் சளைக்காமல் பதில் உரைத்தான். கலகலப்பாகப் பேசுபவள் எனத் தெரியும் ஆனால் இப்படி மூச்சுவிடாமல் எதிராளிக்கு மூச்சுமுட்டும் அளவிற்குப் பேசுபவள் என்பதை இப்போ தான் புரிந்து கொண்டான். கல்லூரியில் இத்தனை அருகே அவள் முகம் பார்த்ததில்லை இன்று தான் நெருக்கத்தில் பார்க்க, கைகளால் வருடிப் பார்க்கும் ஆசை கொண்டான். 
முயன்று கைகளைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தவன் மகிழ் வரும் வரைக்கும் பேசிக் கொண்டிருந்தான். பின் அவள் வர, மற்றொரு நாள் வருவதாக இருவரிடம் விடைபெற்றுக் கொண்டு கனத்த இதயத்துடன் கிளப்பினான். ஆனால் வருணாவோ வழக்கத்தை விடவும் உற்சாகமாக இருந்தாள். 
அவள் உற்சாகத்தில் மகிழ்ந்த மகிழ், வார இறுதியில் நண்பர்கள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்தாள். 
ரிஷி தான் மகிழ்நிரதியிடம் இறுதி வரை உண்மையை உரைக்காமல் அழைத்து வந்துவிட்டானே தவிர, மகிழ் நண்பர்களிடம் ஆரம்பத்திலே வருணாவை பற்றிச் சொல்லியிருந்தாள்.
நண்பர்கள் சிலர் சென்னையில் வேலை செய்ய, சிலர் அங்கு தான் உயர்கல்வியிலிருந்தனர். மகிழ் அழைக்கவும் வார இறுதி சனிக்கிழமை என்றதால் வருணா மட்டுமல்லாது அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு எனக் கிளம்பிவிட்டனர். 
மாலைநேரம் வருணாவின் அறையே ஆரவாரமாய் இருந்தது. சுபிக்ஷா, கிஷோர், அருண், கவி என ஒரு கூட்டமே வந்திருக்க மகிழ் அனைவரையும் வரவேற்றாள். வெகுநாட்களுக்குப் பின் நண்பர்கள் அவனைவரும் கூடியதால் உற்சாகமாக, நலம் விசாரிப்புகள் அனைத்தும் முடிந்து கேலி, கிண்டல் என உரையாடல் தொடர்ந்து திசை மாறியது. வேலையாள் உதவியோடு அனைவருக்கும் காஃபியும் சிற்றுண்டியும் கொண்டு வந்து கொடுத்த மகிழ் அவர்களோடு அவளும் அமர்ந்தாள். 
அனைவரும் கேட்பது போலே மகிழின் திருமணத்திற்கு தங்களை அழைக்கவில்லை எனக் கவி குறைபட்டுக்கொள்ள, “நீ வேற கவி! அவ இருந்த காதல் மயக்கத்துல என்னையே மறந்துட்டா!” என்றாள் வருணா. 
அனைவரும் சிரிக்க, மகிழ் வருணாவை முறைக்க, “அதை விட இதை கேளு வருணா, சண்டக்கோழிங்க ரெண்டும் காதல் கிளிங்களா மாறிட்டாங்க” என்ற கவி சுபியையும் கிஷோரையும் கை காட்டினாள். 
மகிழ் ஆச்சரியத்துடன் பார்க்க, “ஏய் சொல்லவே இல்லை, பாருடா காலேஜ்ல நமக்கு தெரியாம இன்னும் எத்தனை கதை ஓடிச்சோ!” என்றாள் வருணா. 
“இவன் எங்கிட்டையே சொல்லலையே வருணா” என சுபி பெருமூச்சு விட்டுக்கொள்ள, “அப்போ அன்னைக்கு சொல்லவேயில்லையா?” என அருண் கேட்டான். 
சுபிக்ஷா சொல்ல வரும் போதே “ஐயோ வேண்டாம் சுபி சொல்லாதடி” என கிஷோர் எழுத்து சென்று அவள் வாயை மூட முயற்சிக்க, அருண் அதற்குள் அவனைப் பிடித்துக்கொண்டான். 
“காலேஜ் முடிச்சி ரொம்ப நாள் கழிச்சி தான் இவனைப் பார்த்தேன். அவன் ஆபிஸ் ப்ரண்ஸ்சோட பாண்டிச்சேரி வந்திருந்தான். அப்போ எங்க அக்காவுக்கு மேரேஜ், இவனைப் பார்த்ததும் இன்வைட் பண்ணேன். ரிஷப்ஷன் முடியவும் பார்ட்டி நல்லா கொண்டாடிட்டு தெளிவில்லாம வந்தான். நானும் அப்பாவும் பேசிக்கிட்டு இருந்தோம் எங்க கிட்ட வந்தவன் என் கண்ணு முன்னாடியே எங்கப்பாவுக்கு ப்ரபோஸ் பண்ணான். 
எங்கப்பா டென்ஷனாகிட்டாரு, அவர்கிட்ட இருந்து இவனை காப்பாத்த கிட்டப்போனா அக்கான்னு நினைச்சி நீங்க கல்யாணப்பொண்ணு கையில இருக்குற மருதாணி அழிஞ்சிடும் போங்கன்னு விரட்டுறான். எங்கப்பாவை ஹக் பண்ணிக்கிட்டு காலேஜ் உன்னைக் கேலி பண்ணதெல்லாம் சும்மா தான், உன் மேல இருந்த உரிமையில தான், நீனா எனக்கு ரொம்ப பிடிக்குன்னு டயலாக் விட, எங்கப்பா என்னை கொலைவெறியில முறைக்க, இவனை இழுத்துட்டு வரதுக்குள்ள ஒரு வழியாகிட்டேன்” என்ற சுபி பெருமூச்சு விட்டுக்கொண்டாள். 
மகிழ், வருணா அனைவருமே கற்பனை செய்து அடக்க முடியாமல் சிரிக்க, “அதான் நான் உங்கிட்ட ப்ரப்போஸ் பண்ணலையே பின்ன நீ ஏன் என் பின்ன வந்த?” என கிஷோர் பல்லைக் கடித்தான். 
“பைத்தியமா பின்னாடி சுத்தியிருக்கானேன்னு கொஞ்சம் பாவம் பார்த்து நானே சொன்னேன்” என அவள் முறுக்கிக்கொண்டாள். 
“ஏய் யாரை பைத்தியம்னு சொல்லுற?” என அதட்டலிட, “ஆமாம் ஆமாம் நீ பைத்தியமில்லை சரியான பயந்தாங்கோலில” என்றாள் சிரிப்புடன். 
“ஓஹோ அப்படியா அதுக்கு எதுவும் கதையிருக்கா?” என வருணா ஆர்வமுடன் கேட்க, அவனைவரும் சிரித்தனர். 
“சுபி வேண்டாம், எல்லார் முன்னவும் சொல்லாத” என கிஷோர் மீண்டும் மிரட்டிக் கொண்டு வர, “நீ பொறு மச்சி, என்ன நடந்ததுக்குற ரகசியத்தை நீ சொல்லும்மா சுபி” என்றான் அருண். 
“ஒருநாள் ஈவ்னிங் கெமிக்கல் எலேக்ட்ரோனிக்ஸ் லேப்ல யாருமில்ல நாங்க மட்டும் தான் இருந்தோமா…” 
“நீயும் கிஷோரும் மட்டும் தனியாவா…? என்ன நடந்துச்சுடி” எனக் கவி கண்சிமிட்டியபடி கேட்டாள்.  
“ஒன்னும் பெருசா கற்பனை பண்ணிக்காத, நான் உள்ள இருந்ததை இந்த லூசு கவனிக்கலை. லேப் இருட்டா இருந்துச்சு அதுவும் நான் லாஸ்ட் கார்னர் டோர்கிட்ட இருந்தேன். கை தவறி டெஸ்ட்டூப் கிளாஸ்ஸ கீழ போட்டேன், கிளாஸ் நொறுங்குன சத்தத்துலையே பயந்து அரண்டு டோரை பார்த்து அவன் ஓடி வரும் போது வொயிட் கோட் லாங் ஹேரோட நான் திரும்பி நிற்கிறேன் என்ன சுத்தி ஒரே புகையா இருக்கவும், ஏதோ பேய்ய பார்த்த மாதிரி கத்தி மயங்கியே விழுந்துட்டான்” 
“டேய் கிஷோர் அன்னைக்கு பசிமயக்கம்னு சொன்னியே அது பயத்துல வந்த மயக்கமா மச்சான்?” என அருண் கேட்க, அனைவரும் தாங்க மாட்டாமல் சிரித்தனர்.  
“இதுக்கு பேரு தான் அழகுல மயங்குறது போல?” என மகிழும் இணைத்து சுபியை கேலியுரைக்க, “அழகா…? க்கூம், நிஜமாவே பேய்ய பார்த்திருந்தா கூட நான் இவ்வளவு பயந்திருக்க மாட்டேன் மகி, அவ்வளவு பயங்கரமா இருந்தா” என்றான் கிஷோர். பார்வையாலே முறைத்த சுபிக்ஷா, அவன் முதுகில் அடிக்க விதியே என வாங்கிக்கொண்டான்.  
அலுவலகத்தில் இருந்து வந்த ரிஷி வருணாவின் அறையிலிருந்து கேட்கும் பேச்சுக்குரலை உணர்ந்து அங்கே சென்றான். தேவகி இருந்த போதும் வருணாவின் நண்பர்கள் வந்து செல்வார்கள் ஆகையால் அனைவருக்கும் ரிஷி அறிமுகமானவன் தான் ஆனால் அதிகம் பேசியதில்லை. 
அனைவரும் ஒருநிமிடம் அமைதியாகிவிட திரும்பிய மகிழ் வாசலில் நிற்கும் ரிஷியைப் பார்த்தாள். அவனோ சிறு சிரிப்புடன் பொதுவான ஒரு வார்த்தையில் வரவேற்று தன்னறை நோக்கிச் சென்றுவிட்டாள். 
மகிழ்நிரதியும் வேலையாளிடம் ரிஷிக்கு காஃபி கொடுக்கும்படி உரைத்துவிட்டு நண்பர்களுடனே அமர்ந்துவிட்டாள். கேலி, கிண்டலென நேரம் கரைய அனைவரும் விடைபெற்றுச் சென்றனர். 
மகிழ் அறைக்குள் வர, ஆறிய காஃபி கப் அப்படியே இருக்க, அருகில் லேப்டாப்போடு அமர்ந்திருந்தான் ரிஷி. உடை கூட மாற்றாமல் இருக்கிறானே என்ற எண்ணத்தில் அருகில் வந்தாள். 
“வேற காஃபி எடுத்துட்டு வரட்டுமாங்க?” என்றபடி மேசையிலிருந்த காஃபி கப்பை எடுக்க, “என்னவோ ஒவ்வொன்னையும் எங்கிட்ட கேட்டு செய்ற மாதிரி தான்! தேவையில்லை..” என்றான் சட்டென. 
அவன் குரலிலே கோபம் தெரிய, அவன் வந்ததும் அவனை கவனிக்காமல் நண்பர்களோடு அமர்ந்துவிட்டதால் தான் உரிமையாகக் கோபம் கொள்கிறானோ என நினைத்து அவனையே பார்த்தபடி மகிழ் நிற்க, சட்டென எழுந்து அவள் தோள்களைப் பற்றியவன், “இத்தனை நாள் வராத உன் ப்ரண்ட்ஸ் இன்னைக்கு எப்படி வந்தாங்க?” என்றான். 
அவன் கேள்வி மகிழுக்கு ஏமாற்றத்தைத் தர, “நான் தான் இன்வைட் பண்ணேன்” என்றவளின் குரல் தான் செய்தது தவறோ என்ற எண்ணத்தில் மெல்லிய காற்றாய் வந்தது. 
ரிஷி இருந்த கோபத்தில் அவளைச் சிறிதும் கவனிக்காதவன், மேலும் அவள் கைகளை அழுத்தியபடி, “யாரைக் கேட்டு அவங்களை எல்லாம் அழைத்தாய்?” என்றான். 
அவனுக்கு நன்கு அறிமுகமானவர்கள், எப்போதும் வந்து செல்வர்கள் தானே என நினைத்தவளுக்கு அவன் கேள்விகள் அவளுக்கான உரிமைகளிலிருந்து அவளைத் தள்ளி வைப்பது போன்றிருக்கக் கலங்கினாள். தொண்டை அடைத்துக்கொண்டு வார்த்தை வராது தடுமாறியவள் மெல்லிய குரலில், “ஏன் தப்பாங்க?” என்றாள். 
செய்த தவறை உணராது தவறா? எனக் கேட்டது மேலும் அவன் சினத்தை அதிகப்படுத்த, “என் தங்கை ஒன்னும் காட்சிப்பொருள் அல்ல! இப்படி எல்லாரையும் கூட்டிக் காட்சிப்படுத்த” எனக் கத்தினான். 
மகிழுக்கு அந்த வார்த்தைகள் நெஞ்சில் அடித்தது போல் வழிக்க, தாங்காது சட்டெனக் கண்கள் கலங்கி கண்ணீர் வழிந்தது. என்ன வார்த்தை சொல்லிவிட்டான்! மனம் ஆற்றாமையில் விம்மியது. 
அவள் கண்ணீரில் சற்றே சினமிறங்க, “வருணாவை ஹர்ட் பண்ற எதையும் என்னால அனுமதிக்க முடியாது, டோன்ட் டூ திஸ் அகேன் மகிழ்” என்றபடி அறையிலிருந்து வெளியேறினான். 
என்னவோ அவள் தவறு செய்தது போன்றும் அவன் மன்னித்தது போன்றும் உரைக்க, அதையும் மகிழ்நிரதியால் தாங்க முடியவில்லை. 

Advertisement