Advertisement

அத்தியாயம் 17
ஸ்ரீதரிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பிய மகிழ்நிரதி வரும் வழியில் தான் ரிஷியின் அழைப்புகளை கவனித்தாள். ரிஷிடமிருந்து வந்திருந்த அழைப்புகள் அதுவும் இத்தனை முறை வந்திருக்க ஏதேனும் முக்கியமான விஷயமாக இருக்குமோ கவனிக்காமல் விட்டுவிட்டேனே என நொந்துகொண்டவள் படபடப்புடன் மீண்டும் அவனுக்கு அழைத்தாள். ஆனால் இம்முறை அழைப்புகள் சென்றும் ரிஷி ஏற்காமல் இருக்க கோபம் கொள்வானோ என மேலும் கலவரமானவள் விரைந்து வீட்டிற்குச் சென்றாள். 
வீட்டிற்குள் வரும் போதே ரிஷியின் கார் நிற்பதை கவனித்தவள் அலுவலகத்தில் இருந்து வந்துவிட்டான் என புரிந்துகொண்டு விரைவாக அவள் அறைநோக்கிச் சென்றாள். அறைக்குள் செல்ல, ரிஷி மொத்த அறையும் கலைத்துப்போட்டு எதையோ தேடிக்கொண்டிருக்க படபடப்போடு அவன் அருகே சென்றாள். 
“ரிஷி என்ன தேடுறீங்க? என்ன வேணும்?” என் மெல்லிய குரலில் கேட்க, “எங்க போனே நீ? ஒரு கால் அட்டென் பண்ண முடியாத அளவுக்கு அவ்வளவு பிஸியா?” என கோபமாகக் கேட்டவன் தன் தேடலைத் தொடர்ந்தான். 
“சாரி கவனிக்கலைங்க” என மகிழ் இறங்கிய குரலில் வேண்ட, “தள்ளு, வழிய மறைச்சிக்கிட்டு” என அவளை விலக்கிவிட்டு மேலும் தேட, “எதுக்கு கால் பண்ணீங்க? என்ன தேடுறீங்க? ஆபீஸ்ல இருந்து எப்போ வந்தீங்க?” என கேள்வியாகக் கேட்டாள். 
அவள் முன் வந்து கைகட்டிக்கொண்டு நின்றவன், “வருணாவோட ரிப்போர்ட்ஸ் எல்லாம் எங்க? அன்னைக்கு எடுத்தியே திரும்பி பைல்ல வைக்கலையா? அதை தான் தேடுறேன், டாக்டர் வந்திருந்தாங்க, அதான் உனக்கு கால் பண்ணேன்” என்றவன் பற்களை கடிக்க, மகிழ் தன் நெற்றியில் தானே அறைந்துக்கொண்டாள். 
“அது இங்கில்லை கீழ வருணா ரூம்ல தான் இருக்கு” என்றவள் கீழே செல்ல, அவள் பின்னே ரிஷியும் வந்தான். தன்னறையில் இல்லாத ரிப்போர்ட்ஸை தேடி வீணாக நேரம் விரையம் என நினைத்தவன் கடுப்பானான். 
நொடியில் வருணாவின் அறைக்குள் இருந்து ரிப்போர்ட்ஸை எடுத்துக்கொண்டு வந்தவள் எதிரே வந்த ரிஷியின் கரத்தில் கொடுத்துவிட்டு, “சாரி ரிஷி” என்றாள் கொஞ்சலாக. வெடுக்கென பிடுங்காத குறையாக வாங்கிக்கொண்டவன் அவள் முன் உச்சில் ‘நங்’ என்று கொட்டினான். பற்களை கடித்துக்கொண்டு தலையை தேய்த்தாள் மகிழ். 
“நான் டாக்டரை பார்த்திட்டு வரேன்” என ரிஷி கிளம்ப, அவன் பின்னே ஓடி வந்தவள், “நானும் வரேன்” என்றாள் மூச்சிவாங்கியபடி. திரும்பி அவளை ஒருபார்வை பார்த்தவன் என்ன நினைத்தானோ “வா..” என உடன் அழைத்துச் சென்றான். 
குடும்ப மருத்துவரின் பரிந்துரையில் எலும்புமுறிவு சிறப்பு மருத்துவரிடம் வந்திருந்தான் ரிஷி. வருணாவிற்கு விபத்தான ஆரம்பநாளில் சிகிச்சை அளித்தது இவர் தான். முதல்முறை மகிழோடு வந்திருந்தவன் அவரிடம் மகிழை தன் மனைவி என அறிமுகப்படுத்திவிட்டு தற்போதைய வருணாவின் நிலையை கேட்டுவிட்டு மேற்சிகிச்சை குறித்த அறிவுரைகளை கேட்டான். 
மகிழும் அவர்கள் பேசுவதை கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். முதுகுத்தண்டு எலும்பு இணைப்பு, மற்றும் கால் எலுப்பு மாற்று அறுவைசிகிச்சைகளை பரிந்துரைத்தவர் அது குறித்து விளக்க, இருவரும் கவனமுடன் கேட்டுக்கொண்டனர். ரிஷி அறுவைசிகிச்சையை ஏற்றுக்கொள்ள, ஒரு மருத்துவ பரிசோதனைக்குப் பின் அடுத்தவாரத்தில் அறுவைசிகிச்சைக்கான தேதி முடிவு செய்வதாக உரைக்க, சரியென்றவர்கள் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினர். 
அப்போது தான் சற்றே மனம் தளர்வாக இருந்த ரிஷி, “உன் மொபைல் என்னாச்சி? எங்க போறேன்னு சொல்லாம வேற போயிட்ட? இதென்ன பழக்கம்?” என்றான் வண்டியோட்டியபடி. 
“சைலன்ட் மோட்ல இருந்ததால கவனிக்கலை, ஷாப்பிங் தான் போயிருந்தேன். அங்க தான் எதிர்ச்சியா எங்க சீனியரை பார்த்தேன், ரொம்ப வருஷம் கழிச்சி பார்த்தால பேசிக்கிட்டு இருந்தேன் மறந்துட்டேன். சாரி ரிஷி” என மீண்டும் மன்னிப்பு வேண்ட, அதன் பின் தான் ரிஷிக்கு இறங்கிய கோபம் ஏறுவது போன்றிருந்தது. 
‘சீனியரா யாரவன்?’ என மனதில் பொரிந்து கொண்டிருந்த போதும் மகிழிடம் காட்டிக்கொள்ளவில்லை. பிளேயரை ஆன் செய்தவன் மௌனமாக வர, மகிழ் எப்போதும் போலே அப்பாடலோடு பின் குரலாய் மெல்ல முணுமுணுத்தவாறே வந்தாள். 
வீட்டிற்கு வந்ததும் மகிழ் இறங்க சட்டென அவள் கைகளை எட்டிப்பிடித்தான். ஒரு நொடி மகிழுக்கு திக்கென்று இருக்க, இதயம் வேகமெடுத்துத் துடிக்கத் தொடங்கியது. நிமிர்ந்து அவன் முகம் பார்க்க, அவள் வலது கரத்தை தன்னிரு உள்ளகைக்குள் இறுக்க பற்றிக்கொண்டவன், “சர்ஜரி பத்தி வருணாகிட்ட நீயே இன்போர்ம் பண்ணிடுறியா?” எனக் கேட்டான்.
வாடிய முகத்தையும் வேண்டிய கண்களையும் பார்த்தவளால் மறுக்க முடியாது போக, மெல்லத் தலையாட்டினாள். சட்டென அவளை இழுத்து நெஞ்சோடு அணைத்து நிம்மதி பெருமூச்சொன்றை விட்டுக்கொண்டவன், “மேலும் மேலும் அவளை காயப்படுத்துற மாதிரி பீல் பண்ணுறேன்” என்றான். 
உரசிய நெஞ்சாக்கூட்டின் அதிர்வில் அவன் படபடப்பை உணர்ந்தவள் அணைத்திருந்த படியே மெல்ல அவன் பின் முதுகில் ஆறுதலாய் தட்டிக்கொடுத்தாள். அச்செயலில் ஆறுதல் உணர்ந்தவன் மேலும் அழுத்தமாய் அணைத்தபடி அவள் கழுத்து வளைவு தோளில் முகம் சாய்த்துக்கொண்டு மூச்சுவிட்டான்.
ஆனால் மகிழுக்கோ நெஞ்சம் அறைந்து நின்றுவிட மூச்சேமுட்டுவது போன்றிருந்தது. “எல்லாம் அவள் நல்லதுக்கு தானே!” என மேலும் அவன் முதுகை மென்மையாய் வருட, கண்மூடி அந்த சுகத்தை ஒரு நொடி அனுபவித்தவன், “தேங்க்ஸ் மகிழ்” என்றபடி அணைப்பில் இருந்து விலகினான்.  
மறுநாள் ரிஷி அலுவலகம் சென்ற பின் வருணாவிற்கு காலை உணவை கொடுத்துவிட்டு அவள் அறையில் இருந்தாள் மகிழ்நிரதி. 
“ஏதாவது கதை சொல்லேன் மகிழ்? உங்க லவ் ஸ்டோரியே சொல்லு நானும் தெரிஞ்சிக்கிடுறேன்” எனக் கேட்டாள் வருணா. 
“தெய்வமே ஆளை விடு, லவ் ஸ்டோரின்னு ஒன்னு இருந்தா தானே சொல்லுவேன்” என மகிழ் கேட்க, “தப்பிச்சிக்கிட்டே இருக்க நீ” என வருணா சிரித்தாள். 
“நேத்து ஒரு புக் படிச்சேன். உன் ஹீரோ பியர் கிரில்ஸ் லைப் ஹிஸ்டரி (BEAR GRYLLS) அது வேணா சொல்லட்டுமா?” என்றாள் மகிழ்நிரதி. 
“எங்க அண்ணன் கூட சேர்த்ததுல இருந்து நீயும் அவனை மாதிரியே மாறிக்கிட்டு வர, சரி சொல்லு கேட்போம்” என்றாள் சலிப்பாக. 
“பியர் கிரில்ஸின் இயற்பெயர் எட்வர்ட் மைக்கேல் கிரில்ஸ். பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவரான இவர் ஒரு சாகச விரும்பி. அதே நேரம் தொலைக்காட்சி தொகுப்பாளரும் கூட, பல மலைகள், அடர் காடுகளுக்குள் அசாத்தியமாக சென்று வருபவர். அவர் இளமை கால கனவு இமயமலையின் எவரஸ்ட் சிகரத்தில் ஏற வேண்டுமென்பது தான். ஆனால் அதற்கு முன் சாகச பயணத்தில் ஏற்பட்ட விபத்தொன்றில் அவர் முதுகெலும்புகள் உடைபட படுத்த படுக்கையானார். அவர் உயிர் பிழைத்ததே அபூர்வம் என்ற மருத்துவர்கள் இனி வாழ்க்கையானது படுக்கையில் தான் என்று கூறிவிட அவரால் அதை ஏற்றுகொள்ளவே முடியவில்லை. கனவுகள் உறங்க விடுவதில்லை, மிகுந்த மன தைரியத்துடன் போராடியவர் பதினெட்டு மாதத்தில் எவரஸ்டில் ஏறி சாதனைப் படைத்தார். இன்றும் அவர் சாதனைகள் தொடர, அவர் அனுபவங்களில் அவர் எழுதிய புத்தகங்கள் உலக நாடுகளில் அனைத்திலும் விற்பனையாகிறது. கனவுகளுக்கு உடல் பலகீனம் தடையல்ல, மன தைரியமே பெரும் சக்தி” என்றாள்.
மகிழ் சொல்லி முடிக்க கேட்டுக்கொண்டிருந்த வருணாவிற்கு மெய் சிலிர்த்தது. அவர் மன தைரியத்தை எண்ணி வியந்தாள். பொதுவாக புதிய சவாலான விஷயங்களை முயன்று பார்ப்பதில் அவளுமே ஆர்வமிக்கவள் தான். 
“நேத்து டாக்டரை பார்க்க போனமே என்னனு நீ கேட்கவே இல்லை” என மகிழ் கேட்க, “உங்கிட்ட இருந்து எதுவும் குட் நியூஸ் எதிர்பார்க்கலாமா?” என வருணா கண் சிமிட்டினாள். 
ஒரு நொடி புரியாமல் குழம்பி விழித்த மகிழ், அர்த்தம் புரிந்ததும் எக்கி அவள் கன்னத்தில் கிள்ள, “விடுடி ராட்ஷசி நீ சொல்லலைனா போ, ரிஷிகிட்ட கேட்டுகிடுறேன்” என அவள் கைகளை தட்டிவிட்டு மிரட்டினாள் வருணா. 
“பிச்சிடுவேன் உன்னை, கற்பனை கதவை கொஞ்சம் மூடிக்கோ! நேத்து உனக்காக தான் டாக்டரை பார்க்கப்போனோம். நெக்ஸ்ட் வீக்ல உனக்கு சர்ஜரி இருக்கு, அதை உங்கிட்ட இன்போர்ம் பண்ண சொன்னாரு” என்றாள் மகிழ். 
“அதெல்லாம் வேண்டாம் மகிழ், நான் இருக்குற வரைக்கும் இப்படியே இருந்திடுறேன். என்னை கஷ்டப்படுத்தாதீங்க” என்றாள் விரக்தியாக. 
கேட்ட மகிழுக்கு தான் கஷ்டமாக இருந்தது, எப்படி இருந்த இவள் இப்படி மாறியதேனோ? அவளுக்கு தைரியம் தரத் தவறி விட்டோமோ என வருத்தினாள். நல்லவேளையாக ரிஷி கேட்கவேயில்லை. கேட்டிருந்தால் தன்னை விடவும் அதிக வேதனை கேள்வான். இதை எதிர்பார்த்தே தன்னை பேசச் சொல்லினான் போல என அப்போதும் ரிஷியை நினைத்தே வருத்தினாள். 
“சரி உன் விருப்பம் பட் நீ சர்ஜரிக்கு ஓகே சொல்லுற வரைக்கும் நான் பேசமாட்டேன், இது என் விருப்பம்” என மகிழ் உறுதியுடன் உரைக்க, பரிதாபமாகப் பார்த்தாள் வருணா. 
சிறிதும் பிடிவாதத்தை விட்டுவிடக்கூடாது சற்றே இறங்கினாலும் அவள் பிடிவாதம் பிடிக்கத்தொடங்கிவிடுவாள் என நன்கு அறிந்திருந்தாள் மகிழ். எப்போதும் கலாகலப்பாக பேசிக்கொண்டிருப்பவள் தற்போது மௌனமாகிவிட வருணாவால் தாங்க முடியவில்லை. என்னென்னவோ செய்து பார்த்தாள் மகிழ் சிறிதும் பிடிவாதத்திலிருந்து தளரவில்லை. 
அன்று வெள்ளிக்கிழமை ஆகையால் மாலை நேரம் பூஜையறை சுத்தப்படுத்தி, விளக்கேற்றிக் கொண்டிருந்தாள் மகிழ்நிரதி. அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய ரிஷி வருணாவின் அறையில் அமர்ந்திருந்தான். 
பூஜையறையிலிருந்து வெளிவந்த மகிழிடம், “தம்பி வந்திடுச்சி காபி கேட்டுச்சு, வருணா ரூம்ல இருக்கு கொடுத்திடுமா” என வேலையாள் கொடுத்துச் சென்றார். சில மணி நேரங்களாக அவள் அறைப்பக்கம் செல்லாமல் இருந்தவள் தற்போது ரிஷிக்காக சென்றாள். 
அண்ணனும் தங்கையும் அன்றைய நாளை பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். மகிழ் தன்னிடம் பேச மறுக்கிறாள் என்ற புகாரை வாசித்துக்கொண்டிருக்க, அதே நேரம் மகிழும் உள்ளே வந்தாள். 
வருணா உரைத்தது அவள் காதுகளிலும் விழ,“என்னை சொன்னா உங்களுக்கும் தான், நீங்களும் இனி அவ கூட பேசக்கூடாது” என்றாள் கட்டளையாக. 
இதென்ன சிறுபிள்ளைத்தனம் என நினைக்கையில் ரிஷிக்கு சிரிப்பு தான் வந்தது. இருவரையும் விட்டுக்கொடுக்க விரும்பாதவன், “உங்க சண்டையில என்னை இழுக்காதீங்க” என்றான் மழுப்பலாக.
“அப்போ பேசுவீங்க, அப்படி தானே?” என மகிழ் ஏமாற்றமாய் கேட்க, “அது அப்படியில்லை மகிழ், வருணா பாவமில்லை?” என்றான். 
“சரி அப்போ எங்கிட்ட பேச வேண்டாம்” என்க, ரிஷி பரிதாபமாகப் பார்க்க, வருணா வாயை மூடிக்கொண்டு சிரித்தாள். காபியை கீழே வந்துவிட்டு மகிழ் மௌனமாய் நகர்ந்தாள். 
“மகி கோபமா போறா, போய் சமாதனப்படுத்து அண்ணா” என வருணா உரைக்க, “எப்படி?” பட்டென கேட்டான். 
‘ஐயோ இவனை வைச்சிடுக்கிட்டு மகிழ் தான் பாவம்’ மனதில் நினைத்தவள் தன் நெற்றியில் அறைந்து கொள்ள சிறு சிரிப்புடன் எழுந்து சென்றான் ரிஷி. 
மகிழ் அறைக்குள் வரும் போதே அவள் அலைபேசி அதிர்ந்தது. ஸ்ரீதரிடமிருந்து அழைப்பு வந்திருக்க,”சொல்லுங்க சீனியர்” என்றபடி பால்கனி பக்கம் சென்று நின்றாள். 
“உன் ப்ரண்ட்ஸ் எல்லார் நம்பரையும் கண்டுபிடிச்சிட்டேன், உனக்கு வாட்சாப் பண்ணிருக்கேன் பார்த்துக்கோ மகி. அன்ட் சாரி எல்லார் நம்பரும் கிடைச்சிடுச்சு பட் உன் பேஸ்ட் ப்ரண்ட் வருணா நம்பர் மட்டும் கிடைக்கலை அவளும் உன்னை மாதிரியே ப்ரண்ட்ஸ் சர்கில் கான்டேக்ல இல்லையாம்” என்றான். 
“ஐயோ சீனியர் இதெல்லாம் நான் கேட்டதே வருணாவுக்காக தான்” என்க, “தெரியும் மகி, நீ பீல் பண்ணாத அவ அட்ரெஸ் கிடைச்சிடுச்சு, நாளைக்கு போய் நான் பார்த்துட்டு உனக்கு இன்போர்ம் பண்ணுறேன்” என்றான். 
‘இவனுக்கு வருணா வைத்த தயிர்சாதம் என்றே பெயர் பெருத்தாமாக தான் உள்ளது’ என நொந்துகொண்ட மகிழ், “அதே அட்ரெஸ் தான், நாளைக்கு வீட்டு வாங்க பேசிக்கிடலாம்” என சிரிப்புடன் அழைப்பை துண்டித்தாள். 
அதே சிரிப்புடன் மகிழ் திரும்ப, கைகளை கட்டிக்கொண்டு அழுத்தமான பார்வையோடு ரிஷி நிற்பதை கண்டாள். 

Advertisement