Advertisement

அத்தியாயம் 14
தன்னறைக்குள் அழைத்து வந்த ரிஷி மகிழை மெத்தையில் அமர்த்தி அவனும் அருகே அமர்ந்தான். “எப்படிங்க இப்படியாச்சி? எங்கிட்ட ஏன் சொல்லலை?” என அழுது கொண்டே தான் கேட்டாள். 
ரிஷி நடந்த நிகழ்வுகளை உரைக்க, அவனுக்கும் கண்கள் கலங்கியது. கேட்டுக்கொண்டிருந்த மகிழ் எப்போது அவன் தோளில் சாய்ந்தாளோ மீண்டும் ஏங்கி ஏங்கி அழுது அவன் சட்டையை நனைத்தாள். 
“மகிழ், வருணாவுக்கு ஆறுதல் சொல்லாம நீயே இப்படி அழலாமா? எங்க தைரியமே நீ தானே?” என்றவாறு அவள் தலையை தடவிக்கொடுத்தான். 
அவளோ மேலும் அவன் நெஞ்சிக்குள் புதைந்துகொண்டு கைகளால் அவன் நெஞ்சை வருடியவாறு, “எப்படி ரிஷி இவ்வளவு கஷ்டத்தையும் மனசுல வைச்சிக்கிட்டு குடும்பம், தொழிலையும் பார்த்துகிட்டு என்னையும் தேடியிருக்கீங்க? பாவம்ங்க நீங்க” என்றாள் பரிதாபம் பொங்க. 
தன்னெஞ்சில் வருடிய அவள் பட்டு விரலின் மெல்லிய ஸ்பரிசம் சுகமாக இருந்தது. அவள் ஆறுதல் தேடுகிறாளா? ஆறுதல் தருகிறாளா? என்றே தெரியவில்லை. 
பதில் பேச இயலாது மேலும் அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான். உண்மையை தெரியப்படுத்தாமல் திருமணம் செய்து கொண்டதற்கு கோபம் கொள்வாள் என எதிர்பார்க்க, அவளோ அவனுக்காக அனுதாபப்பட்டாள். அந்த நொடி ரிஷிக்கு மகிழை பிடித்திருந்தது.  
ஆகையால் தானோ என்னவோ அவள் கற்பனையை உடைத்து, உண்மையை உரைத்து அவள் பார்வையில் கீழிறங்க விரும்பவில்லை. மேலும் அவர்கள் உறவை இறுக்கமாக பற்றிக்கொள்ள தோன்றியது. 
நிமிடங்கள் கடக்க அழுது அழுது அசதியில் அவன் நெஞ்சிலே உறங்கி இருந்தாள். அவளை நிமிர்த்தி நேராக படுக்க வைத்தவன், நெற்றியில் புரண்ட முடிகளை ஒதுக்கிவிட்டு கீழே வந்தான். 
ஹாலில் அமர்ந்தவன் லேப்டாப்பை எடுத்து மடியில் வைக்க, அங்கு வந்த செவிலியர், “சார், மேம் உங்களை பார்க்கணும்னு சொன்னாங்க” என்றார். 
சரியென்று தலையாட்டிவிட்டு வருணாவின் அறை நோக்கிச் சென்றான். அவனுக்கு தெரிந்திருந்தது தன் தங்கையிடமிருந்து கேள்விகள் வரும் என, அதற்காகவே திருமணத்திற்கு முன் சொல்லாது தவிர்த்திருந்தான். எதுவாக இருந்தாலும் சமாளிப்போம் என்ற எண்ணத்தில் உள்ளே சென்றான்.
அருகே வர, “யூ ஆர் அ ஷெல்பிஷ் அண்ணா, எனக்காக தானே மகியை மேரேஜ் செஞ்சி கூட்டிட்டு வந்திருக்க?” என கோபமாக அவன் முகம் பார்த்துக்கேட்டாள்.
“நோ வருணா, நாங்க முன்னவே லவ் பண்ணோம் தான். இப்போ அவள் சம்மதம், அவங்க அப்பா சம்மத்தோட தான் இந்த மேரேஜ் நடந்தது” என்றான் சமாதானமாக.
ஒருவேளை இருவரும் தனக்கே தெரியாமல் காதலித்திருப்பார்களோ! என ஒரு நொடி யோசித்தாலும் வருணாவின் மனதிற்கு சற்று நெருடலாக தான் இருந்தது. 
“அப்போ சந்திரிக்கா கூட என்கேஜ்மென்ட் வரைக்கும் போனையே அது என்ன அண்ணா?” என்றாள் குறையாத கோபத்துடன். 
“அப்போ மகிழுக்கு மேரேஜ் ஆகிடுச்சின்னு தவறா புரிஞ்சிகிட்டு கோபமா இருந்தேன். உனக்கும் தெரியும் தானே அந்த டைம் மகிழுக்கு மேரேஜ் பிக்ஸாகியிருந்தது?” என்க, கோபம் குறைந்து குழம்பமான நிலையில் ஆமென்பது போல் தலையாட்டினாள். 
“நாங்க காதலிச்சோம் தான் ஆனால் இரண்டுபேரும் அதை வெளிப்படுத்திக்கலை, அவளை டிஸ்டர்ப் பண்ணக்கூடாது, படிப்பு முடியவும் சொல்லிக்கலாம்னு நினைச்சிருந்தேன். அதுக்குள்ள மகிழுக்கு மேரேஜ் பிக்ஸ் பண்ண, நமக்கும் கஷ்டமான நேரம். அது மட்டுமில்லாம அவ ஒன்னுமே சொல்லாம போய்ட்டா. அவளுக்கு மேரேஜாகிடுச்சின்னு தான் நினைச்சிகிட்டு இருந்தேன். இப்போ ரீஸன்டா காஞ்சிபுரம் போன போது தான் எனக்கு உண்மையே தெரிய வந்திச்சிடா. இதுக்கு மேலையும் வெய்ட் பண்ண வேண்டாம்னு தான் சிம்பிளா மேரேஜ் பண்ணிக்கிட்டேன். உனக்கு ஒன்னும் இதுல வருத்தமில்லையே?” என மென்மையாகக்  கேட்டான். 
அவன் சொல்லிய விதம் உண்மை என ஏற்கும் விதமாக இருக்க, அரைமனதாக தலையாட்டினாள் வருணா. 
“மகி ரொம்ப சாப்ட் அவளை எந்த விதத்திலும் நீ கஷ்டப்படுத்திடக் கூடாது. நம்ம வீட்டுக்கு வந்திருக்கா நம்ம அம்மா இருந்திருந்தா அவளை எப்படி நடத்துவாங்களோ அந்த மாதிரி பார்த்துக்கணும். அதை விட மகி சின்ன வயசுல இருந்து அம்மாயில்லாம வளர்ந்தவ, ஆனால் அதுக்காக அவ ஏங்குனதில்லை இனி ஒருநாளும் அந்த ஏக்கம் வந்துடக்கூடாது. அவளை சந்தோஷமா பார்த்துக்கோ அண்ணா” என்க, சிறு சிரிப்புடன் தலையாட்டினான் ரிஷி. 
“இதுக்கும் மேல என்ன வேணும்? அவளுக்கு என்ன கஷ்டம் வந்திடப் போகுது?” என்றான் ரிஷி. அவளையே அறியாதவன் அவள் எதிர்பார்ப்புகள் ஆசைகளை எங்கே அறிய! 
அவன் பதில் என்னவோ வருணாவிற்கு ஏற்புடையதாக இல்லை, விடைபெற்றுக்கொண்டு வாசல் வரை வந்திருக்க, மீண்டும் ரிஷியை அழைத்தவள், “அண்ணா மகி சந்தோஷத்துல தான் என் சந்தோஷமிருக்கு பார்த்துக்கோ” என்றாள். 
ஒருநொடி அழுத்தமாய் பார்த்தவன் அவள் வார்த்தைகளை மனதில் பதித்துக்கொண்டு வெளியே வந்தான். 
இரவு உணவு நேரமும் மகிழ் எழவில்லை, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அதிகம் அழுதிருந்தாள், உடல் சோர்வோ மனச்சோர்வோ எதுவோ அழுத்தியது. அதை தாண்டி கேட்ட உண்மைகளை ஏற்கவே அவளின் மெல்லிய மனதிற்கு வெகு நேரம் தேவையாக இருந்தது. நிஜத்தின் உண்மைகளை விட எதுவும் அறியாத உறக்கநிலை சுகமானதல்லவா! 
மகிழ் விழிக்கும் அறிகுறியே தெரியாது போக, தங்கையை கவனித்து, தானும் உண்டுவிட்டு அறைக்குள் வந்தான் ரிஷி. மெத்தையில் அழ்ந்த உறக்கத்தில் இருந்தவளின் முகத்தைப் பார்த்தவாறு அருகே அமர்ந்தான். 
வருணா உரைத்ததே அவன் நினைவில் தோன்ற, அதே எண்ணத்தில் மகிழை இமைக்க மறந்து சில நொடிகள் பார்த்துக்கொண்டிருந்தான். குழந்தைத்தனம் மாறாத அழகு முகமும் உதட்டை சுளித்துக்கொண்டு உறங்கும் அழகும் அவனை குற்றம்சாட்டுவது போன்றிருந்தது. என்னவோ இவள் ஆறுதல் சொல்லுவாள், வருணாவை கவனித்துக்கொள்வாள் என்றெல்லாம் நினைத்து அழைத்து வர, வருணா தான் இவளுக்காக அவனை மிரட்டினாள். அவள் கண்ணீரால் நனைந்த சட்டையின் இடதுபுறம் வருடியபடி நினைத்துப் பார்த்து மென்மையாக சிரித்தவன் அதே சிரிப்புடன் விழிமூடினான். 
இரவு அரைத்தூக்கத்தில் விழித்தவன் அருகில் மகிழ் அமர்ந்திருப்பதை பார்த்து பதறி எழுந்தான். லைட்டை ஆன் செய்தவன், “வாட் ஹேப்பன் மகிழ்? ஏன் இப்படி உக்காத்திருக்க?” என அதே பதட்டத்துடன் கேட்க, அவன் பதட்டத்தில் அவள் பயம் கொண்டாள். 
பயத்தில் வார்த்தைகள் வர மறுக்க, வயிற்றை கட்டிக்கொண்டு அவனையே நிதானமாக நோக்கினாள். அவள் செய்கைகள் அவனுக்குப் புரியவில்லை, எவ்வாறு கேட்பதென்றும் தெரியவில்லை. 
“ஆர் யூ ஒகே?” என்க, மறுப்பாய் தலையசைத்தவள் மெல்ல இதழ் மலர்ந்து, “பசிக்குது….?” என்றாள். 
ரிஷிக்கு மொத்தமாக தூக்கம் கலைந்திருக்க, சிறுசிரிப்புடன் மணியை பார்த்தான் இரண்டு மணி. வருணா கூட தன்னை இவ்வளவு இம்சிக்கவில்லை ஒரே நாளில் காலையிலிருந்து எவ்வளவு பாடாய் படுத்துகிறாள் என்ற எண்ணத்தில் எழுந்தவன் கிட்சன் நோக்கிச் சென்றான். 
எதுவும் சொல்லாமல் செல்லவே, மகிழும் மெல்ல எழுந்து அவன் பின்னே வந்தாள். கிட்சனுகுள் சென்றவன் பிரிட்ஜை திறந்தபடி மகிழை நோக்கி, “என்ன சாப்பிடுற…?” என்றான். 
“என்ன இருக்கு…?” என அவள் கேட்க, “எதுவுமில்லை….?” என மறுப்பாய் தலையசைத்தான். 
மகிழ் அவனைப் பார்க்க, “அது…இல்லை சமைக்கணும், நைட்டே உனக்கு எடுத்து வைக்க சொல்ல மறந்துட்டேன்” என்றான். 
மகிழ் உள்ளே வர ரிஷி விலகினான், அவளாகவே பால் பாக்கெட்டை எடுத்து கட் பண்ணி உற்றி அடுப்பில் வைத்துவிட்டு, வெங்காயம் எடுத்து கட் பண்ணத் தொடங்கினாள். மகிழுக்கு நன்றாக தெரியும் ரிஷி சமையலறை இருக்கும் திசை கூட அறியாதவன் என. 
நான்கு ப்ரட் துண்டுகளை எடுத்து ரோஸ்ட் செய்துவிட்டு, முட்டையை எடுத்து கலக்கி உற்றி ப்ரட் ஆம்லேட் போட்டுவிட்டு, பாலையும் சூடுபடுத்தி கப்பில் உற்றினாள். 
பார்த்துக்கொண்டு அமைதியாக நின்றவன், “முன்ன தான் எங்கிட்ட பேசத் தயங்கிக்கிட்டு இருப்ப, இப்போ என்ன? ஏதா இருந்தாலும் கேட்டுப் பழகு” என்றான் அதட்டலாக. 
உண்டுக்கொண்டிருந்தவள் சரியென்று தலையாட்ட, “அங்கிள் கால் பண்ணியிருந்தாரு, நீ தூங்கிக்கிட்டு இருந்ததால எழுப்பலை” என்றான். 
அவள் மணியை பார்த்தவாறு யோசிக்க, “காலையில பேச சொல்லுறேன்னு சொல்லியிருக்கேன்” என்க, அதற்கும் தலையாட்டி வைத்தாள். 
“சரி, வருணா நம்ம மேரேஜ் பத்தி உங்கிட்ட கேட்டா என்ன சொல்லுவா?” என்றான் கைகளைக் கட்டிகொண்டு.
குனித்து சாப்பாட்டில் கவனமாக இருந்தவள் “என்ன சொல்லணும்?” என்றாள். அவன் எதிர்பார்ப்பு என்ன என அறிந்துகொள்ள கேட்டாள். 
அவனோ அதை உணராது இதை கூடவா சொல்லிக்கொடுக்க வேண்டும் என மூச்சு விட்டுக்கொண்டான், “ஆமா உன் ஏஜ் என்ன? வருணா கிளாஸ்மேட் தானே நீ?” என்க, “எதுக்கு…?” என்றாள் அவள்.
“இல்லை, உங்க அப்பா நீ ரொம்ப பொறுப்பான பொண்ணுன்னு சொன்னாரு, பார்த்தா அப்படி தெரியலையே அதான்” என்றான்.
எதற்கோ கேட்பதாக நினைத்தவள் கடைசியில் தன்னை கேலி செய்யவே நிமிர்ந்து முறைத்தாள். 
“நீங்க ரொம்ப பொறுப்பு தானே! என்ன சொல்லணும்ங்கிற பதிலையும் சொல்லிக்கொடுத்துட்டு போங்க” என்க, இரண்டடி விலகி எதிரே கை கட்டிக்கொண்டு நின்றிருந்தவன் அவளை நெருங்கினான். 
வெகு அருகே நெருங்கியவன் அவளின் இருபுறமும் சமையலறை மேடையில் கையூன்றி சிறைபடுத்தினான். மகிழின் இதயம் படபடக்கத் தொடங்கியது, கைகால் நடுங்க கையிலிருந்த பிளேட்டை இறுக்கப் பற்றினாள். ரிஷியின் மூச்சுக்காற்று தன்னை தீண்டுவதை உணர முடித்தது, அதை தாண்டியும் அவளுக்கு அதிகமாக மூச்சு வாங்கியது. ஆளில்லாத நிசம்பதமான வீட்டில் கிட்சனுக்குள் எரிந்து கொண்டிருந்த விளக்கின் சிறு ஒளியில் இருவரின் மூச்சுக்காற்றின் சத்தங்கள் எதிரொலியாய் அவர்களுக்கே கேட்டது. 
“எங்கிட்ட சொல்லாத உன் காதலை அவகிட்டையாவது சொல்லு” என காதருகே குனிந்து மெல்லிய குரலில் உரைத்தவன் அவளுக்கு பின் சமையல் மேடையில் இருந்த கப்பை எடுத்துக் கொண்டு விலகினான். 
முகமெல்லாம் செந்நிறமாய் சிவக்க, தலையாட்டியவள் சமையலறையிலிருந்து வெளியே வந்தாள். சமையலறை விளக்குகளை அணைத்துவிட்டு அவள் பின்னே வந்த ரிஷி மணியை பார்க்க மணி மூன்று, இதற்கு மேல் படுத்தாலும் நித்திரை வராது என உணர்ந்தவன் உடற்பயிற்சி அறையை நோக்கிச் சென்றுவிட்டான். தன் பின்னே வருபவனை அவள் எதிர்பார்க்க, அவன் அறைக்குள் வராது கடந்து சென்றதும் மௌனமாக உள்ளே சென்று படுத்துவிட்டாள். 
மகிழ் மீண்டும் நல்ல தூக்கத்தில் இருக்க, தன் காலை வேலைகள் அனைத்தையும் முடித்தவன் காலை ஆறுமணிக்கெல்லாம் அலுவலகம் கிளம்பிச் சென்று விட்டான். 
ஏழுமணிக்கு எழுந்து கிளம்பிய மகிழ்நிரதி அதன் பின்னே கீழே வந்தாள். வேலையாள் வந்து அவளுக்கான காஃபியை கொடுத்துவிட்டு அன்றைக்கு என்னென்னே சமைக்க வேண்டுமென்று கேட்டு நின்றனர். 
அவர்களுக்கு பதில் கொடுத்தவள் வருணாவின் அறைநோக்கிச் சென்றாள். செவிலியர் அப்போது தான் வருணாவிற்கு பணிவிடடைகள் செய்து கொண்டிருக்க, தானும் உடன் இருந்து உதவியவள் வழக்கமாக காலை அவள் உண்ணும் சத்துமாவு கஞ்சியை ஊட்டினாள். 
மகிழ் உள்ளே வந்த போதே வருணா அவள் விசாரணையை ஆரம்பித்திருந்தாள். மகிழ் தான் ரிஷியை விரும்பியதும் அவனிடம் அதை உரைக்காததையும், தன் வீட்டில் நடந்த திருமண ஏற்பாடு, பின் அதை தடைபட்டது, ரிஷி தன்னை தேடி வந்தது தங்கள் திருமணம் நடந்தது என அனைத்தையும் உரைத்தவள் அவள் கேள்விகளுக்கும் பதில் கொடுத்தாள். 
மகிழ்,ரிஷி இருவர் சொல்லியதும் ஒரே கதையாக இருக்க, அதன் பின்னே ஏற்றுக்கொண்டாள் வருணா. அதன் பின் தோழிகள் இருவருக்கும் பேசுவதற்கு நிறைய இருக்க, நேரம் பாராது பேசியதில் அந்த நாள் கரைந்தது. மகிழ் இருந்த உற்சாகத்தில் தந்தையிடம் பேசவேண்டும் என்பதையே மறந்து போனாள். 

Advertisement