Advertisement

அத்தியாயம் 13
கையில் தண்ணீர் டம்ளர் மாத்திரைகளுடன் அருகே வந்த மகிழ், “இந்தாங்கப்பா..” என நீட்ட அமைதியாக வாங்கி இட்டுக்கொண்டார் குணசீலன்.
தந்தையின் அருகே அமர்ந்தவள், “நாளையில இருந்து நீங்களே மாத்திரை போட்டுக்கணும், டைமுக்கு சரியா சாப்பிடணும். அதிகம் வெளிய சுத்தமா வீட்டுக்கு வந்திடணும். நான் வாங்கிக் கொண்டுத்த புக்ஸ் எல்லாம் வாசிக்கணும் நான் தினமும் போன் பண்ணி விசாரிப்பேன் சரியாப்பா?” என்ற பட்டியல் வாசித்து கட்டளையிட்டாள். 
மகிழ் ஹாஸ்டல் செல்லும் போதெல்லாம் இத்தனையும் அவர் சொல்லியனுப்புவது, இன்று அத்தனையும் அவருக்கே திருப்பிச் சொன்னாள். திருமணம் முடித்த ஒரே நாளில் தன் மகள் இத்தனை பக்குவமாக மாறிவிட்டாளா! என வியந்து நோக்கினார். நாளைய பிரிவை எண்ணி இன்றே அவர் கண்கள் கலங்க, மெல்ல அவள் தலையை தடவிக் கொடுத்தார். 
முகம் மலர்ந்து சிறித்தவள், “என்னப்பா…?” என்க, “இல்லை நீயும் உடம்பை பார்த்துக்கணும். புகுந்த வீட்டுல எல்லாரையும் பொறுமையோடு பார்த்துக்கணும், விளையாட்டுத்தனத்தை எல்லாம் விட்டுடணும், டெய்லி கால் பண்ணனும் என்ன சரியா?” என்றார். ரிஷியின் தற்போதைய குடும்பநிலையை பற்றி அறிந்திருந்தவர் மகளிடம் டீல் பேச, கட்டைவிரல் இரண்டையும் உயர்திக் காட்டி தலையாட்டியவள், “டீல் டீல்…” என்று சிரித்தாள். 
“சரி போம்மா, மாப்பிள்ளை வெய்ட் பண்ணுவார்” என அனுப்பி வந்தவர் தன்னறை நோக்கி எழுந்து சென்றார். 
மாலையில அவள் அத்தை சொல்லிச் சென்ற அறிவுரைகள் எல்லாம் ஒரு நொடியில் நினைவில் வர, கால்கள் தான் நடக்கிறதே தவிர இதயம் விண்வெளியில் பயணித்துக் கொண்டிருந்தது. தன்னறை தான் ஆனால் உள்ளே செல்வதற்கு சிறு தயக்கம்! 
கதவைத் தட்டிவிட்டு உள்ளே வர, மகிழின் புத்தகம் ஒன்றை வெகு தீவிரமாக வாசித்தவாறு கட்டிலில் அமர்ந்திருந்தான் ரிஷி. சில நொடிகள் கடந்த பின்னும் அவன் நிமிர்ந்து பாராது போக, அவள் மனம் வாடியது. 
லக்கேஜ் பேக்கை எடுத்தவள் தனது உடைகள், உடமைகளை அடுக்கத் தொடங்கினாள். ஓசை எழும்படி அனைத்தையும் தட் தட்டென்று எடுத்து வைக்க, அதில் கவனம் கலைந்தவன் நிமிர்ந்துப் பார்த்தான். 
“ஹே மகிழ் எப்போ வந்த? நான் கவனிக்கவே இல்லை” என்றவாறு ரிஷி புத்தகைத்தை மூடி வைத்துவிட்டு எழ, “இப்போ தான் வந்தேன்” என்றவள் தன் வேலையை கவனிப்பது போலே திரும்பிக் கொண்டாள். 
தன் செவிகளில் அதிகரித்து வரும் காலடி ஓசையில் அவன் தன்னை நெருங்கி வருவதை உணர, மெல்லிய இதயம் படபடக்கத் தொடங்கியது. தன்னை நெருங்கி வரவே சட்டென திரும்பி கஃபோர்டில் சாய்ந்து நின்றாள் மகிழ். 
மேலும் அருகே நெருங்கி வந்தவன் அவள் கைகளில் இருந்த உடையை வாங்கிக் கொண்டு, “உனக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக்கொடு நான் பேக் பண்றேன்” என்றபடி சென்று அடுக்கினான். 
புஸ்சென்று இருந்தவளின் முகம் காற்றுப்போன பூரி போலே மாற, மெல்லிய கோபம் ரிஷியை நோக்கி எழுந்தது. 
“நீங்க எதுவும் செய்ய வேண்டாம் நானே பார்த்துக்கிடுறேன்” என்றாள், அதுவும் வெறும் வாய் வார்த்தைக்கு மட்டுமே! 
ஆனால் ரிஷிக்கு அவள் கோபம் கொள்கிறாள் என்பதே புரியாது போக, “இருக்கட்டும் நான் சும்மா தானே இருக்கேன், ஹெல்ப் பண்ணுறேன்” என்றான். 
‘சரியான கான்கீரிட் மண்டை, கொஞ்சமாவது என் கோபம் புரியுதா!’ என மனதின் புலம்பலோடு அமைதியானாள். இருவருமே பேக்கிக் வேலைகளை மட்டும் செய்ய அவ்வறை நிசப்தத்தில் நிறைந்திருந்தது. 
வேலைகள் முடிய, “குட் நையிட்…” என்றவன் ஒரு ஓரம் மெத்தையில் சென்று படுத்துவிட்டான். மகிழின் மெல்லிய கோபம் பாடர் தாண்டிச் சென்று மேலும் அதிகரித்தது. கோபத்தைக் கூட வெளிப்படையாய் காட்டும் அளவு அவனிடம் நெருக்கமோ பழக்கமோ இல்லாததால் விட்டுவிட்டாள். 
ரிஷி என்னவோ பசியாறிய குழந்தை போன்று கவலையற்று நிம்மதியாய் உறங்கி விட, மகிழ் உறக்கம் வராது உருண்டுக் கொண்டிருந்தாள். 
முதலில் தன் கேள்விக்கு பதிலலிக்காது தவிர்த்தது, நாளையே கிளம்ப வேண்டுமென்றது, தன்னைக் குறித்து தன் தந்தையிடம் ஆறுதலோ நம்பிக்கையோ உரைக்காதிருப்பது என அனைத்தும் அவன் மீது மெல்லிய சினமாக சேர்ந்திருந்தது. 
அதிகாலையிலே குணசீலன் எழுந்து விட, நன்கு விடிந்த பின் ரிஷி மட்டும் எழுந்து வந்தான். வெகு தாமதமாக உறங்கியதால் மகிழ் இன்னும் எழவில்லை. 
வெளிவாசலுக்கு வந்து தினசரியை புரட்டியவாறு மூங்கில் நாற்காலியில் அமர்ந்தான் ரிஷி. சில நிமிடங்களிலே அவனுக்கான காபியுடன் அவன் அருகே வந்தமர்ந்தார் குணசீலன். 
நன்றியுடன் வாக்கிக் கொள்ள, இருவரும் பொதுவான விஷயங்களை பேசத் தொடங்கினர். 
பின் மெல்லிய தயக்கத்துடன், “சொல்றதை தவறா நினைச்சிக்க வேண்டாம் மாப்பிள்ளை, மகிக்கு எனக்கு பின்ன யாருமில்லை அவள் விருப்பப்படி அகளுக்கான ஒரு குடும்பத்தை அமைச்சிக்கணும்ன்னு தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதித்தேன். 
சின்ன வயசுல இருந்தே அம்மா இல்லாம வளர்த்த பொண்ணு, அதனால தான் என்னவோ அவளாவே எல்லா விஷியத்துலையும் அதிக பொறுப்போடு நடந்துக்குவா ஆனால் மனசுல என்ன இருக்குன்னு யார்கிட்டையும் அவ்வளவு ஈஸியா பகிர்ந்துக்க மாட்டா. உங்க காதலே நீங்க வந்து சொல்லவும் தான் எனக்கு தெரிஞ்சது, அவ எங்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலை. இனி நீங்க தான் அவளைப் பார்த்துக்கணும்” என குரல் இறங்க வேண்டினார். 
அன்னையை இழந்த தானே இந்த ஐந்து மாதத்தில் மிகவும் வலுவிழந்து திண்டாடிப் போக, ஆண்டாண்டுகளாக மகிழ் எவ்வளவு ஏங்கிருப்பாள் என நினைத்தான். 
ஆறுதலாய் அவர் கையைப் பற்றியவன், “நீங்க சொல்லணுமா அங்கிள், எனக்கு தெரியாதா மகிழைப் பற்றி?” என்றான். மனமோ இன்னும் அவளை பற்றி உனக்கு எதுவும் தெரியாதேடா! என்றது. 
அவன் கரம் பற்றி உரைத்த ஆறுதலில் நிம்மதி கொண்டவர் மெல்லிய புன்னகை சிந்தினார். இனி எதுவாகியும் ரிஷி கவனித்துக்கொள்வான் என்ற நம்பிக்கை வந்தது. 
ரிஷி கரத்தை விலகிக்கொள்ள, “ஐயையோ அடுப்புல சாம்பார் வைச்சிருந்தேனே, இந்த நேரம் தீஞ்சிருக்குமே மாப்பிள்ளை!” என பதட்டத்தோடு குணசீலன் எழுந்து உள்ளே சென்றார். ரிஷியும் சிறுநகையுடன் அவர் பின்னே வந்தான். 
குளித்துப் முடித்து புதுப்புடவையில் மஞ்சளும் குங்குமமும் மின்ன கோவில் சிற்பமாய் நின்று கொண்டு மெல்லியதாய் பாடல் ஒன்றை முணுமுணுத்தபடி சமையலை கவனித்துக் கொண்டிருந்தாள் மகிழ்.
“சாம்பார் வைச்சிருந்தேனே! ஸ்டவ் ஆஃப் பண்ணிட்டியாம்மா?” என குணசீலன் கேட்க, “ஏன்ப்பா முதல் முதல உங்க கையால தீஞ்ச சாம்பாரை தான் உங்க மாப்பிள்ளைக்கு கொடுக்கணும்னு வேண்டுதலா?” என்றாள் குறுநகையுடன். 
“பேசிக்கிட்டுக்கிட்டு இருந்ததுல மறந்துட்டேன் மகிம்மா” என்க, திரும்பிய மகிழ் கிட்சன் வாசலில் நின்றிருந்த ரிஷியைக் கண்டாள். 
“இரண்டுபேரும் உக்காருங்க டிஃபன் எடுத்து வைக்கிறேன்” என்றாள். 
குணசீலன் வெளியேறி வர, இருவரும் அமர்ந்தனர். இருவருக்கும் பரிமாறிவிட்டு பின் தானும் உண்டாள். 
சாமி கும்பிட்டுவிட்டு மகிழ் வர, அவளறையில் இருந்து லக்கேஜோடு வெளியே வந்தான் ரிஷி.  இருவரும் கிளம்ப, குணசீலன் வாசல் வரை வழியனுப்ப வந்தார். 
நேற்று இரவு தந்தைக்கு அறிவுரை உரைத்த மகிழ் தற்போது கலங்கி நின்றாள். கண்ணீரோடு குணசீலனின் கைகளை இறுக்கப் பற்றியவள் விடவில்லை. நான் போகமாட்டேன் என வாய் வார்த்தையாக சொல்லவில்லை ஆனால் அவள் செயல் அதைத்தான் சொல்லியது. 
குணசீலனும் நெகிழ்ந்திருக்க, அவராலும் அவள் கைகளை விலக்கிவிட இயலவில்லை. மகிழின் தோள்களை ஆறுதலாய் பற்றிக்கொண்டு, “என்ன மகிழ் இது? நீ இப்படி கண்கலங்குனா அங்கிள் எப்படி உன்னை சந்தோஷமா வழியனுப்புவார்? கண்ணைத் தொட?” என்றான் ரிஷிநந்தன். 
குணசீலனே கைகளை விலக்கிவிட்டு அவள் கண்ணீரை துடைத்தவாறு, “சந்தோஷமா போயிட்டு வாடா” என்றார். 
“அடுத்த வருஷம் ரிட்டையர்மெண்ட் வாங்கவும் அங்கிளும் நம்ம கூட வந்திடுவாரு. இந்த பிரிவு கொஞ்ச நாளைக்கு தான்ம்மா” என ரிஷி உரைக்க, அவன் முகத்தை நிமிர்ந்துப் பார்த்தாள். 
நிஜமாக தான் என்பது போல் உறுதியாக அவன் தலையாட்ட, நம்பிக்கையுடன் அவர் கைகளை விட்டுவித்தாள். பின் நேற்று இரவு கூறிய அத்தனை அறிவுரைகளையும் மீண்டும் நினைவுப்படுத்த, மென்னகையுடன் தலையாட்டிய குணசீலன் இன்முகமாக வழியனுப்பினார்.
ரிஷி வண்டியோட்ட மகிழ் அமைதியாக அமர்ந்திருந்தாள். ரிஷியும் எதுவும் கேட்காது போக, அமைதியாகவே இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். 
வேலையாள் கமலா ஆரத்தி எடுத்து வரவேற்க்க, ரிஷியின் முகத்தையே நிமிர்ந்து நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் மகிழ். ஏனெனில் அவள் எதிர்பார்த்தது தேவகியைத் தான். 
நேராக தன்னறைக்கு அழைத்து வந்து, “ரெஃப்ரஷாகிட்டு கீழ வா மகிழ்” என்றவன் அறையில் இருந்து வெளியேறிவிட்டான். 
மகிழுக்கு அவன் செயல்கள் வித்தியாசமாகத் தெரிந்தாலும் அவள் இருந்த அசதியில் என்னவென்று ஆராயவில்லை. வேலையாள் வந்து அவள் உடமைகளை வைத்துச் செல்ல அந்த அறையைச் சுற்றிப்பார்த்தாள். 
எதுவும் மாறவில்லை அன்று அவள் விட்டுவிட்டுச் சென்றது போல் அப்படியே இருந்தது. கண்கள் அசதியில் சுழன்ற போதும் ரிஷி வரச்சொல்லி சென்றதால் ரெடியாகி கீழே சென்றாள். 
லேட்டாப்போடு ஹாலில் அமர்ந்திருந்தவனின் முன் சென்று நிற்க, நிமிர்ந்து பார்த்தவன், “கமலாக்கா…” என உள்ளே குரல் கொடுத்துவிட்டு “போய் சாப்பிட்டுவா மகிழ்…” என்றான்.  
அவளுக்கும் பசித்தது தான் இருந்தும், “நீங்க சாப்பிடலையா…?” எனக் கேட்டாள். சிறு சிரிப்புடன் மீண்டும் நிமிர்ந்து பார்த்தவன், “நான் பிறகு சாப்பிட்டுகிறேன், நீ போ” என்றான். 
அவளும் சென்று உண்டு வர, எழுந்தவன், “வா மகிழ்….” என அழைத்தபடி முன்னே சென்றான். புரியாமல் அவளும் பின்னே செல்ல, ஓர் அறைக்குள் அழைத்துச் சென்றான். 
கதவை திருந்தும் சோஃபாவில் அமர்ந்து புத்தகம் வாசித்துக் கொண்டிருந்த செவிலியர் கண்ணில் பட, பார்வையை திரும்ப கட்டிலில் மூடிய விழியோடு வருணா படுத்திருப்பதைக்  கண்டாள். வருணா தனா என சந்தேகம் கொள்ளும்படியாக அவள் தோற்றம் இருக்க மேலும் உற்றுப் பார்த்தாள் மகிழ். 
அதற்குள் ரிஷியின் கண்ணசைவில் செவிலியர் அறையில் இருந்து வெளியேற, தங்கையின் அருகே சென்றவன், மெல்லிய தலை வருடலோடு “வருணாம்மா…வருணா” என மெல்லிய குரலில் எழுப்பினான். 
அவள் கண்விழிக்க தன்னருகே பார்க்க, மகிழ் இல்லை. திரும்பிப் பார்த்தான் இன்னமும் வாசலில் தான் நின்று கொண்டிருந்தாள். “உள்ளே வா மகிழ்…” என அழைக்க, வருணா எட்டிப் பார்த்து விட்டு, “ஏய் மகி….! வாடி இப்போ தான் என்னை பார்க்க வரணும்னு தோனுச்சா?” என்றாள் குதுகலமாக. 
வெகுநாட்களுக்குப் பின் தோழியை பார்த்ததில், அதிலும் அவள் தன்னைப் பார்க்க வந்ததில் அளவில்லா ஆனந்தம் கொண்டிருந்தாள் வருணா. ஆனால் வருணாவை முற்றிலும் இப்படியானதொரு நிலையில் எதிர்பாரத மகிழ் அதிர்ந்தாள். விழியிரண்டும் கண்ணீரில் நிறைய அருகே வந்தவள் அவள் முகம் முழுவதும் தன் கைகளால் மெல்ல வருடி அவள் நெற்றியில் முகம் புதைத்து அழுதபடி “என்னாச்சி வருணா? ஏன் இப்படி…” என அவள் வலியை வார்த்தையில் கேட்க முடியாது திண்டாடினாள். 
மென்மையான சருமங்கள், வடுக்களோடு சொரசொரப்பாய் மாறியிருக்க, தன்னை எழுந்து அணைக்காது படுக்கையில் இருப்பவளின் நிலையை நினைத்த மகிழுக்கு வேதனை தாங்காது நெஞ்சை பிழிய கட்டுப்படுத்த இயலாது அழுதாள். வருணாவின் காலில் ஏற்பட்ட சாதாரண சுளுக்கிற்க்கே கண் கலங்கியவளை அறிந்தவள் தானே வருணா.
தன் நெற்றியில் அவள் கண்ணீரின் ஈரம் படர்வதை உணர்ந்தவள், தன் கழுத்தைக்கட்டிக் கொண்டிருந்தவளின் கைகளை தட்டிக்கொடுத்தபடி, “மகி, எனக்கு ஒன்னுமில்லை, நான் நல்லாயிருக்கேன், அழதா!” என்றாள் ஆறுதலாக.
அப்போதும் அவள் அழுகை நிற்காமல் இருக்க, “இப்படி அழ தான் என்னை பார்க்க வந்தியா? மூச்சு முட்டுது விடு மகி” என அதட்டலாகச் சொல்லி பின்னும் அவள் அழுகை நிற்காமல் இருக்க, ரிஷி மகிழை நிமிர்த்தி அருகில் இருந்த நாற்காலியில் அமர வைத்தான். 
கண்களில் கண்ணீரோடு துடைக்கவும் தோன்றாமல் வருணாவின் கன்னத்தையே வருடிக்கொண்டிருக்க, அவளோ இவளை ஆராந்தாள். கழுத்தில் பளீச்சென்ற மஞ்சள் கயிறு, நெற்றி வகுட்டில் குங்குமம், கை நிறைய கண்ணாடி வளையல், மருதாணியிட்ட விரல்கள்  என புதுப்பெண்ணிற்கான அத்தனை அடையாளங்களோடும் இருந்தாள் மகிழ். 
சற்றே நிமிர்ந்து பார்க்க அவள் தோளில் கைவைத்தபடி ரிஷி நின்றிருந்தான். அதை பார்க்கவும் தான் நேற்று நடந்திருந்த அவன் திருமணம் வருணாவின் நினைவிற்கு வந்தது. முதலில் மகிழை பார்த்ததும் தன்னை நலம் விசாரிக்க வந்த தோழியாக தான் நினைத்தாள் ஆனால் தற்போது தான் தமையன் திருமணம் செய்து அழைத்து வந்துள்ள பெண் என்பதை உணர்ந்தாள். 
தேவகியின் மாலையிட்ட புகைப்படத்தையும் அவள் அறைக்குள் பார்த்துவிட்ட மகிழுக்கு மேலும் அழுகை பொங்கி வந்தது. வருணாவிற்கு பார்க்க பரிதாபமாக இருந்தது. 
அதற்குள் ரிஷி, “என்ன மகிழ் இது? அவளுக்கு அறுதல் சொல்லாம நீ அழுதா எப்படி?” என்றான் சமாதானமாக. இத்தனை மெல்லிய மனம் படைத்தவளா என்றும் எண்ணினான். 
இன்னும் அவள் கைகள் தன் கழுத்தை கட்டிக்கொண்டு, கன்னத்தை வருடிக்கொண்டிருக்க, “அண்ணா அவளை ரூம்க்கு கூட்டிப் போ, அப்பறம் பேசிக்கலாம்” என இருவரையும் அனுப்பி வைத்தாள் வருணா. 
தற்சமயம் மகிழ்நிரதியின் அழுகையும் நிற்காது என்பதை உணர்ந்தவன், அவளை எழுப்பி தன்னறை நோக்கி அழைத்துச் சென்றான். 
இங்கிருந்த ரிஷி எவ்வாறு மகிழை திருமணம் செய்தான்? அவள் எவ்வாறு ஏற்றுக்கொண்டாள்? தான் அறிந்த வரை இருவருக்குள் காதல் என்ன பேச்சிவார்த்தைகள் கூட கிடையாது. மகிழுக்கு திருமணம் முடிவாகி இருந்தது, அண்ணனும் சந்திரிக்காவுடன் நிச்சியம் வரை சென்றவன், இடையில் நடந்து தான் என்ன? என யோசிக்கத் தொடங்கினாள். 
ரிஷியிடம் இது பற்றி பேச வேண்டுமென தன்னை மறந்து அவர்கள் இருவரை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள். எது எப்படியாகினும் மகிழ் தங்கள் வீட்டிற்கு வந்தது வருணாவிற்கு மனம் நிறைந்த மகிழ்ச்சியை கொடுக்கத் தவறவில்லை!

Advertisement