Advertisement

அத்தியாயம் 12
சிவப்பும் அல்லாது அரக்கும் அல்லாது குங்குமம் நிறத்தில் தேன் கலந்தது போன்று ஜொலிக்கும் பட்டு. அதன் முந்தியில் அன்பால் இணைந்தது போன்று இரு அன்னங்கள் தத்துரூபமாக நெய்திருக்க, பார்த்ததும் மனம் கவர்ந்தது. மகிழ்நிரதிக்காவே பிரத்யேகமாக நெய்யப்பட்டது. ரிஷியின் தனித்துவமான ரசனையின் அழகை ரசித்தவள் தன்னை மறந்து சில நொடிகள் நின்று விட்டாள். 
கதவு தட்டும் ஓசையிலே சுயநிலை திரும்பியவள் வருவதாய் குரல் கொடுத்துவிட்டு, தான் நிற்கும் நிலை எண்ணி நாணத்துடன் கைகளில் இருந்த புடவையை பொன்மேனியில் சுற்றினாள். கட்டியதும் கண்ணாடியில் தன்னை பார்க்க அலங்காரம் இல்லாமலும் அழகு கூடியது போன்றிருந்தது. தளிர்மேனியில் தன்னவனே தீண்டியதை போன்ற சிலிர்ப்பை உணர்ந்தாள். 
கிடைக்கவே கிடைக்காது என்றெண்ணிய காதல் கை சேர்ந்து திருமணம் வரை வந்தது மகிழ்ச்சி என்றால் அதனை ரிஷியே செயல் படுத்தினான் என்பது மகிழ்ச்சியின் உச்சம். தவம் போல் ஏங்கி கிடைந்தவளுக்கு சொர்க்கமே கிடந்தது போன்றிருந்தது. இந்நாளில் ரிஷியுடன் தனக்கு திருமணம் என நினைக்கையில் பரவச அலைகள் இனிய அவஸ்தையாக தோன்றியது. நிரந்தரமாக செம்மை பூசிக்கொண்டதோ அந்த கன்னங்கள்! அழகு, வெற்றிக்கொண்ட காதல் தந்த அழகு அவளை பேரழகியாக்கியது. 
மீண்டும் கதவு தட்டியதும் சென்று திறக்க, நித்தியா, சரஸ்வதியும் உடன் இரண்டு பேரும் வந்து அவளுக்காகன மணப்பெண் அலங்காரம் செய்யத் தொடங்கினர். மழை பெய்த மண் தரை போலே குளிர்ந்து கிடந்தது மகிழின் மனம்! 
அன்னையை வணங்கிக்கொள்ள, நல்லநேரம் பார்த்து அனைவரும் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்குக் கிளம்பினர். எதிர்வீட்டினரும் தாய்மாமன் குடும்பமும் வந்திருக்க கோவிலில் குணசீலனின் அலுவலக நண்பர்கள் சிலர் காத்திருந்தனர். 
ரிஷி தன் வீட்டிலிருந்து அதிகாலை தான் கிளம்பினான். வருணாவிடம் முன்னே தான் திருமணம் செய்து கொள்ள இருப்பது குறித்து அறிவித்திருந்தான் ஆனால் மணப்பெண் யார் என்று மட்டும் செல்லவில்லை. 
ரிஷி திருமணம் செய்துகொள்கிறான் என்பதே வருணாவிற்கு மகிழ்வைத் தர, அவளும் அதற்கு மேல் விசாரிக்கவில்லை. இனியேனும் அண்ணனின் வாழ்க்கை இன்பமாய் இருக்கட்டும் என்ற வேண்டுதலை அன்னையிடம் வைத்தாள். 
அனைவரும் வந்து சில நிமிடங்கள் காத்திருக்க, அதன் பின்னே ரிஷி வந்து சேர்ந்தான். அவன் சார்பாக அங்கிருக்கும் அலுவலக உதவியாளர் ரமேஷ் மட்டுமே வந்திருந்தார். 
திருமண உடையில் காரிலிருந்து இறங்கியவன் மெல்லிய புன்னகையோடு உள்ளே வந்தான். மகிழின் பார்வையோ இன்னும் எதிர்பார்ப்போடு பார்த்திருந்தது. வருணாவையும் அவன் அன்னையின் வருகையையும் தான் பெரிதும் எதிர்பார்த்தாள். 
அன்று நகையெல்லாம் கொடுத்து அனுப்பியவர் இன்று ஏன் வரவில்லை? ரிஷியின் திருமணத்தில் மகிழ்வில்லையோ? அவர் சரி, வருணா ஏன் வரவில்லை? ஒருவேளை இவன் திருமணத்தைக் குறித்து வீட்டில் தெரியப்படுத்தவே இல்லையோ? என பல கிளைகளாக குழப்பம் விரிந்தது. அதுவரை திருமணப் பூரிப்பில் மலர்ந்திருந்த அவள் முகம் குழப்பத்தில் கலையிழந்தது. 
குணசீலன் அர்சகரிடம் பேசிக்கொண்டிருக்க, பெண்கள் கூட்டத்தோடு நின்றிருந்த மகிழையே உற்று நோக்கினான். தூசு படாத புது கண்ணாடிப் பாவையாக அழகில் மிளிர்ந்தவளின் செம்மை கன்னமும், மைவிழியும் மயக்கமூட்டியது. ஆனால் இவை அனைத்தையும் தாண்டி குருநகை தொலைத்த இதழும் சுருங்கிய நெற்றியும் மகிழின் சிந்தனை வேறெங்கோ உள்ளது என தெரியப்படுத்தியது. 
தன்னை காட்டிலும் தன்னை நேசித்த அவளுக்கு இந்நொடிகள் அனுபவிக்க வேண்டிய இன்பமான நொடிகள், நினைவில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டிய பொக்கிஷமான நொடிகள் என நினைத்திருந்தான்.  
அதற்குள் இருவரையும் முன்னே அழைத்த அர்ச்சகர் கையில் மங்களமாலையைத் தந்தார். தெய்வ சந்நிதியில், உளமார வாழ்த்தும் உறவுகள், நட்புகள் முன்னிலையில் இருவரும் மாலையிட்டுக் கொண்டனர். 
மகிழின் தாய்மாமா கைகளால் மாங்கல்யத்தைத் தர, வாங்கி மகிழ்நிரதியின் கழுத்தில் கட்டினான் ரிஷிநந்தன். கிடைந்த வாழ்வை விட இவ்வுறவானது ஏழேழு ஜென்மத்திற்கும் நிலைக்க வேண்டுமென மகிழ் அந்த நொடி வேண்டிக்கொள்ள, தன் அன்னையும் தந்தையும் போலே மணமொத்த தம்பதிகளாக வாழ வேண்டும் என ஆசை கொண்டான் ரிஷி. விரும்பியதில்லை எனினும் மகிழை மனைவியாக முழுமனதாக ஏற்றான். 
மனமுருக மகிழ் கரம்கூப்பி கடவுளை வேண்டி முடிக்க, அர்ச்சகர் கொடுத்த குங்குமத்தை மகிழின் நெற்றி வகிட்டிலும், நெற்றியிலும் ரிஷி கரங்களால் இட்டான். பின் அனைவருமாக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். 
திருமணத்தையும் உடனே பதிவு செய்துவிட குடும்பத்தாருடன் பதிவாளர் அலுவகம் சென்றனர். குணசீலலும் மற்றவர்களும் முன்னே செல்ல, பின்னே வந்த ரிஷியும் மகிழும் வாசலில் நின்றனர். 
இன்னும் கலையிழந்திருக்கும் அவள் முகத்தை காண ரிஷிக்கு என்னவோ போல் இருந்தது. தன்னைக் காட்டிலும் இந்த நிமிடங்களா மகிழ்வாய் இருக்க வேண்டியது அவள் தானே என நினைத்தான். 
அருகே நின்றிருந்தவளை நோக்கி சற்றே குனிந்து மென்குரலில் “இந்த சேரியில உன்னை கற்பனையில பார்த்ததை விட கண்ணால பார்க்ககும் போது இன்னும் அழகா இருக்க மகிழ்” என்றான். 
அவன் வார்த்தைகளை விட மூச்சுக்காற்றே அனலாய் வீச, காது மடல்களும் கன்னமும் கூசிச் சிவந்தது. பொது இடத்திலா இவ்வாறு இவன் உரைக்க வேண்டும் சிறு படபடப்பு பற்றிக்கொள்ள சட்டென ஒரு நொடி பின் நகர்ந்தாள். 
“மகி அண்ணாவை கூட்டிட்டு வருவியாம்” என நித்தியா குரல் கொடுக்க விலகி முன்னே நடந்தாள். 
மகிழ்ச்சியை மஞ்சளாய் குலைந்து பூசியது போன்று மலர்ந்த முகமாய் வரும் மகளையயும், அவளுக்கு சற்றும் குறைவில்லாத அழகோடு கம்பீரமாய் வரும் ரிஷியும் தம்பதிகளாக இணைத்துப் பார்த்ததில் கண்கள் மட்டுமல்லாது மனமும் நிறைத்தது குணசீலனுக்கு. 
என்றும் சிறு பெண்ணாய் தோன்றுபவள் இன்று தான் வளர்ந்த பெண்ணாய் தோன்றினாள். மகளின் மகிழ்ச்சியில் தானும் மகிழ்ந்தார். 
இருவரும் திருமண பதிவேட்டில் கையெழுத்திட்டனர். பெரியவர்கள் தம்பதிக்கு ஆசிகள் வழங்க, நித்தியா, அணு என சிறியவர்கள் இனிப்பு ஊட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். 
அனைவரும் மகிழின் வீட்டிற்கு வர, மகிழின் அத்தை ஆரத்தி சுற்றி திருஷ்டி கழித்து வீட்டிற்குள் வரவேற்றார். சரஸ்வதி மணமக்களுக்கு பால், பழம் கொடுக்க இருவரும் உண்டனர். இடையிடையில் நித்தியாவின் கேலிகளும், அணுவின் குறும்புகளும் அனைவரையும் சிரிக்க வைக்க, மகிழை சிவக்க வைத்தது. 
இதிலே மதிய உணவு நேரம் வந்துவிட, விருந்திற்கு குணசீலன் ஹோட்டலில் ஆர்டர் கொடுத்திருந்த உணவு வகைகளும் வந்து சேர்ந்தது. அனைவரும் உண்ண சரஸ்வதியும், மகிழின் அத்தையும் உணவு பரிமாறினர். 
ரிஷி சிறிது நேரம் ஓய்வெடுக்கவென மகிழியின் அறைக்குள் சென்றுவிட, பெண்கள் அவர்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சரஸ்வதி அவள் வீட்டிற்கு சென்று விட, மாலை நேரம் உறவினர்களும் கிளம்பினர். 
கிளம்பும் முன் மகிழையும் அலங்கரித்து ஏகப்பட்ட அறிவுரைகள் வழங்கிவிட்டே சென்றார் அவள் அத்தை. 
மகிழ்நிரதிக்கு அனைத்தும் அதிவேகத்தில் நடப்பது போன்றே இருந்தது. ஐந்து மாதங்களாக ஓடாத தன் வாழ்வியல் கடிகாரம் இன்று திடீரென ஒரே நாளில் அதிவேகமாக சுற்றுவது போன்றிருந்தது. சுகமான நொடிகள் மட்டும் விரைவாக கடந்திடுமோ என்னவோ! 
தன் வீட்டில் இருக்கும் செவிலியருக்கு அழைத்து தங்கையின் நலம் விசாரித்திவிட்டு படுத்த ரிஷி தன்னையும் மறந்து உறங்கி விட்டான். 
மாலை எழுந்து வெளியே வர, வீடே அமைதியாக இருந்தது. மெல்ல வீட்டைச் சுற்றிப்பார்த்தவாறு மாடிக்குச் சென்றான். சிறிய வீடுதான் ஆனால் கட்டியிருந்த விதமும் அதிலிருந்த அழகு நயமும் மிகவும் ஈர்த்தது.
முன்னே சிறிய கேட், காம்பவுன்டை ஒட்டி நட்டு பராமரிக்கப்பட்ட பூச்செடிகள் மாலை நேரத்தில் மலர்ந்து வாசம் பரம்பிக்கொண்டிருந்தது. முன் கூடத்தில் ஒரு முங்கில் நாற்காலியும் சிறிது இடமும் இருக்க, அருகே குணசீலனின் வண்டி நின்றுகொண்டிருந்தது. 
சதுர வடிவிலான சிறிய ஹால் அதில் ஆங்காங்கு இருக்கும் மகிழின் சிறுவயத்திலிருந்து இப்போது வரையிலான புகைப்படம், ஒருபுறம் கிச்சனும் அருகே ஒரு படுக்கை அறையும், இடையில் வளைந்து செல்லும் மாடிப்படி அதற்கு அருகில் மற்றோரு படுக்கை அறை. மாடியில் தொட்டிச்செடிகளும் அதில் ரோஜாக்களும் மலர்ந்திருந்தன. சிறுவீடாக இருந்த போதும் அனைத்தும் பிடித்திருக்க ரசித்துப் பார்த்தான். 
மேற்குவானில் கீழிறங்கும் சூரியன் வெண்முகிலிலை செந்நிறமாய் தீட்டிக்கொண்டிருந்தது. சுற்றிலும் கட்டிடங்களுக்கு மத்தியில் உயர்ந்த கோபுரங்கள். எத்திசை திரும்பினாலும் அத்திசையில் சூரியனுக்கு நிகராய் மின்னிக்கொண்டிருக்கும் காஞ்சியின் கோவில் கோபுரங்களும் அதில் ஒளித்துக்கொண்டிருந்த பக்தி பாடலும் மனதை வருடும் மாலைப் பொழுதாக்கியது. கண்கள் நிறைந்தும் ரிஷியின் மனம் நிறையவில்லை.  
அன்னை இருந்திருந்தால் இந்தத் திருமணத்தை எவ்வளவு ஆடம்பரமாக செய்து கண்குளிர கண்டிருப்பார். வருணா நலமோடு இருந்திருந்தால் எவ்வளவு துள்ளி குதித்து ஆடி மகிழ்ந்திருப்பாள்! அன்னையும் தங்கையும் இல்லாமல் தன் திருமணம் முழுமையடையாததைப் போன்றிருந்தது ரிஷிக்கு. 
மெல்ல கண்களை மூடினான் அதற்குள் அவன் பின்னே, “காபி…?” என மகிழ் குரல் கேட்க, சட்டென திரும்பினான். கையில் காபிக் கோப்பையுடன் நின்றிருந்தாள் மகிழ்நிரதி. தற்போது பச்சைப்பட்டுடன் புது அலங்காரத்தில் பொன்மாலை நேர மரகதமாய் மின்னினாள். 
மருதாணி இட்டுச் சிவந்த கரங்களை பார்வையால் வருடியவாறு சிறு சிரிப்புடன் வாங்கிக்கொண்டு திரும்பினான். இரண்டு அடியெடுத்து வைத்து அவன் அருகே வந்து நின்றவள், “வருணா ஏங்க? ஆன்ட்டி ஏன் வரலை?” என்றாள். 
மீண்டும் அவள்புறம் திரும்பிப் பார்க்க, அவன் பார்வை புரியாது ‘கேட்கக்கூடாதது எதுவும் கேட்டுவிட்டோமா?’ என நினைத்து குழம்பினாள். 
ரிஷி மௌனமாக காபியை உரிச்சியவாறு தொலைவில் தெரியும் கோபுரத்தை பார்த்துக்கொண்டிருக்க, அந்த சில நொடிகளிலே தன் கேள்வியை அலட்சியம் செய்கிறானே என நினைத்து மனம் வாடினாள் மகிழ்.
“இல்லை, எக்ஸாம்க்கு அப்பறம் நான் வருணாக்கிட்ட பேசவேயில்லை, அவளாலையும் எங்கிட்ட பேசமா இருக்க முடியாதே அதான்…” என மெல்ல தங்கள் நட்பை கோடிட்டுக் காட்டினாள். 
பெர்கிலியில் உள்ள யூனிவர்சிட்டி ஆஃப் கலிபோர்னியாவில், நேனோ டெக்னாலஜி எம்.டேக் படிப்பதற்கு கடைசி வருடமே தயாராக்கிக் கொண்டிருந்தாள் வருணா, ஆகவே அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்டாள் மகிழ்நிரதி. 
காபி கோப்பையை மாடிச்சுவற்றில் வைத்தவன் மகிழின் கரம் பற்றி அருகே இழுத்தான். சிறிதும் இதை எதிர்பாராத மகிழ் தடுமாறி அவன் மேல் விழாது சுவரில் கையோன்றி அருகே நின்றாள். 
“எங்கிட்ட கேள்வி கேட்குற தைரியம் எப்போதுல இருந்து வந்தது உனக்கு?” என்றான் புருவத்தையும் ஏற்றியிறங்கி. 
‘நீ தாலிகாட்டியதுல இருந்து தான்’ என மனதில் நினைத்தவள், “என் கேள்விக்கு இந்த கேள்வி இல்லையே பதில்” என்றாள். பின் வேகமாய் நாக்கைக் கடித்துக்கொள்ள, நாதக் குரலும் சிணுங்கலோடு இனிமையாக வந்தது. 
பொங்கிய சிரிப்பை உதட்டோரம் தள்ளியவன், “நாளைக்கு தான் நம்ம வீட்டுக்கு போய்டுவோமே, அங்க போய் சொல்லுறேன்” என்றான். பற்றியிருந்த கைகளை விடவில்லை, பட்டைவிட மென்மையான கைகளா இவை என அப்போதும் ஆராய்து கொண்டிருந்தான். 
“நாளைக்கே கிளம்பணுமா…?” என்றவளின் குரலில் ஆச்சரியமும், சிறு வருத்தமும் நிறைத்திருக்க நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான். 
“அப்போ இப்போவே கிளம்பலாமா?” எனக் கேட்க, அவனை முறைக்கும் தைரியம் இல்லாது மனம் சுணங்கினாள். 
அவள் வேதனை அறிந்திருந்தும் கிளம்ப வேண்டுமென்றான். வருணாவின் மகிழ்ச்சிக்கான திறவுகோல் மகிழ்நிரதி ஆகவே அவளை விரைவில் வருணாவிடம் சேர்ப்பது கடமையாக நினைத்தான். 
இருள் சூழ்ந்த போதும் தன்னை மறந்து இருவரும் நின்றிருக்க, அணுஷி வந்து அவள் அன்னை அழைப்பதாக உரைத்துச் சென்றாள். கீழே செல்ல டைனிங் ஹாலில் அனைவரும் அமர்ந்திருந்தனர். 
“வாங்க தம்பி, நாளைக்கே கிளம்புறேன் சொல்லிடீங்க இன்னைக்கு டின்னர் நம்ம வீட்டு விருந்து தான்” என்றார் சரஸ்வதி. அனைவருடமும் சொல்லிவிட்டானா தந்தை என்ன என்னுவாரோ என அவரைத் தேடினாள் மகிழ்.
ரிஷி மெல்லிய சிரிப்பை உதிர்த்தவாறு மகிழை நோக்க, “ப்ரஷப் ஆகிட்டுவாங்க, சாப்பிடலாம்” என மகிழ் அழைத்தாள், சரியென்று உள்ளே சென்றான். 
அனைவரும் ஒன்றாக இரவு உணவினை உண்டு முடிக்க, சிறிது நேரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். ரிஷிக்கு அழைப்புகள் வர எழுந்து சென்றுவிட்டான். 
சிறிது நேரத்தில் சரஸ்வதியும் குடும்பத்தாருடன் சென்றுவிட, மகிழும் குணசீலனும் மட்டுமே இருந்தனர். காலையே மகள் புகுந்தகம் செல்லயிருக்கிறாள் என்பது குணசீலனை சற்று தளரச் செய்தது. 

Advertisement