Advertisement

PicsArt_06-04-10.37.32.jpg

அத்தியாயம் 10

அன்று விடுமுறை நாள் என்பதால் குணசீலன் வீட்டிலே இருந்தார். காலையிலே ரிஷி வந்து சென்றிருக்க, அதன் பின் ஹாலில் யோசனையில் அமர்ந்தவர் தான் எழவில்லை. மகிழோ தந்தை ஏதாவது கேட்பார் என எதிர்பார்த்தாவாறு அங்குமிங்கும் நடந்துக்கொண்டிருந்தாள். அதையும் கவனித்தவர் எதுவும் சொல்லாதிருக்க, அமைதியாக அறைக்குள் சென்று அடைத்துக் கொண்டாள். 

ரிஷியிடம் கம்பீரம் என்பதை தாண்டி ஒரு வசீகரம் இருந்தது. அது குணசீலனையும் வசீகரிக்கத் தவறவில்லை. தன் மகளுக்குப் பொருத்தமான ஜோடியாக இருப்பான் என எண்ணினார். ஒற்றை மகளின் மகிழ்ச்சியை தவிர வேறென்ன முக்கியம், மகிழை அழைத்தவர் காலை உணவை எடுத்து வைக்க இருவரும் உண்டனர். 

ரிஷியின் மீது உண்டானது சிறு சலனம் தானே கால வெள்ளம் அதை தாண்டி கரை சேர்த்து விடும் என்ற குருட்டு நம்பிக்கையில் தந்தைக்காக அசோக்குடனான திருமணத்திற்கு சம்மதம் சொன்னாள். ஆனால் விதி உணர்த்தியது அவள் நேசத்தின் ஆழத்தை. அன்றை பிரிவிற்கு பின்னான தவிப்பில் ரிஷியின் மீது கொண்டது சிறு சலனமல்ல, உடலோடு கலந்த உதிரம் போலே, உயிரோடு கலந்த நேசம் என்பதை அவளே உணர்ந்துக்கொண்டாள். 

“மகிம்மா, இப்போ நீ கல்யாணம் பண்ணிக்காட்டியும், இரெண்டு வருஷம் கடந்தாவது அப்பா கல்யாணப் பேச்சை ஆரம்பிப்பேன் தான். ஏன்னா எனக்கு பின்னால உனக்கொரு பாதுகாப்பு வேணும். ஒருக்கொரு குடும்ப அமைப்பை உருவாக்கிக்கொடுப்பது என்னோட கடமைடா. ரிஷிநந்தன் கேட்டதுல உனக்கு சம்மதமா சொல்லு? உன் விருப்பமில்லாமா அப்பா எதுவும் செய்யப்போறதில்லை” என்றவர் மகளின் பதிலைக் கேட்டார். 

“உங்க விருப்பம் ஏதோ அது படியே செய்யுங்கப்பா” என்றாள் அமைதியுடன். தந்தை ரிஷியை நிராகரிக்க வாய்ப்பில்லை என்பதை அறிவாள்.  

“இல்லை, உன் சம்மதத்தை வாயால சொன்னா தான் எனக்கு நிறைவா இருக்கும். போன முறை கேட்ட போதும் உங்க விருப்பம்னு சொல்லிட்டு கடைசியில வேண்டாம்னு சொன்னையே, அப்பவும் உன் விருப்பத்துக்கு எதிரா இருக்கலை இப்பவும் அப்படி தான், அதானால உன் விருப்பம் என்னனு சொல்லும்மா” என்றார். 

முதல்முறை தான் திருமணத்தை நிறுத்தியது இன்றும் தந்தையின் மனதில் வேதனையாக நிறைந்திருக்கிறது என புரிந்துக்கொண்டவளுக்கு மீண்டும் ஏமாற்றும் எண்ணமில்லை. அதை தாண்டியும் ரிஷியை தவிர வேறொருவனை கற்பனையில் கூட ஏற்கயியலாது என்ற உண்மையை அவளே சோதனைக்கு உட்பட்டு கண்டுகொண்டது தானே! 

தந்தையின் எதிர்பார்ப்பை அறிந்தவள், “ரிஷி சொன்னது உண்மை தான் அப்பா, எனக்கும் அவரை பிடிக்கும்” என்றாள் குனிந்த தலையுடன். மகளின் தேர்வு தவறாக வாய்ப்பில்லை என்ற எண்ணத்தில் மென்மையாக அவள் தலை தடவினார் குணசீலன். தந்தையின் மனம் புரிந்தவள் எட்டாத சிகரம் கிட்டிய கனவில் இன்முகத்துடன் எழுந்து சென்றாள். வெகு நீண்ட நாட்களுக்கு பின் மகளின் முகத்தில் இளநகையை கண்டவர் உள்ளம் நிறைந்தார். 

அசோக்குடனான திருமணத்தை நிறுத்தியதும் மயங்கி விழுந்தவள், தெளிந்து வர ஒருநாள் ஆனது. ஆனால் அதன் பின்னும் எதையோ இழந்தவள் போன்றே இருந்தாள். அவள் முகத்தில் புன்னகையை கண்ட நாட்களே அரிது. ஏதோ அவர் கவனிப்பில் சிறிது உண்டாலும் உடல் நலிந்துக்கொண்டே சென்றாள். தன்னிடம் காரணம் ஏதும் சொல்லாது போக, தன் மனைவி இருந்திருந்தால் நன்றாக கவனித்திருப்பாளோ என்றே வருந்தினார் குணசீலன். ஆனால் மகிழின் ஒற்றை புன்னகை கண்ட பின் பழைய மகிழை மீட்டு வரும் சக்தி ரிஷியிடம் தான் உள்ளது என்பதை அவருக்கு உறுதிபடுத்தியது. தன் அறைக்குச்சென்று உடைமாற்றியவர் வெளியில் கிளம்பினார். 

அதே காஞ்சிபுரத்தில் ரிஷியின் அலுவகத்தில் வேலை செய்யும் உறவினர் ஒருவரிடம் ரிஷியைப் பற்றி விசாரிக்க, அவரோ சிறுவயதிலே ரிஷியின் கடின உழைப்பு, வெற்றி என அவன் தொழில் திறமைகளை புகழ்ந்துக் கூறினார். தனிப்பட்ட முறையிலும் ரிஷியின் பண்பு, நலன்களை நல்விதமாக கூற மனம் நிறைந்தார் குணசீலன். அதேநேரம் சென்னையில் இருக்கும் தன் நண்பர் ஒருவரின் மூலமாக ரிஷியின் பழக்க வழக்கங்கள் பற்றி விசாரிக்கவும் தவறவில்லை. ஏற்கனவே திருமணம் பேச்சுவார்த்தை இருந்து அதையும் அவனே நிறுத்திய உண்மையை சொல்லியதில் அவன் நேர்மை கண்டு பெருமைக்கொண்டார். வருணாவை பற்றியும் ரிஷியே சொல்லியிருக்க பரிபூரணமாக ரிஷியை ஏற்றவர் திருமணத்திற்கு தங்கள் சார்பாக சம்மதம் தெரிவித்தார். 

மகிழ் சந்தோஷ வானில் மிதந்து வந்து கொண்டிருந்தாள். மெல்ல மெல்ல கல்யாணக் கனவுகள் சிறகு விரிக்கத் தொடங்கியது. நாட்கள் அல்லாது மணி நேரத்தையும் மனது கணக்கிடத் தொடங்கியது. என் மீது அவனுக்கும் காதால அதனால் தானோ சொல்லாமலே என் காதலை அவனால் உணர முடிந்திருக்கிறது என்றே நினைத்திருந்தாள். 

நண்பர்களுடனான தொடர்புகளை துண்டித்துக் கொண்டதாலே தன்னை தேடி வர ரிஷிக்கு ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது போலும்? பாவம் இந்த ஐந்து மாதங்களில் எவ்வாறெல்லாம் வருந்தி தன்னை தேடினானோ? என ரிஷியின் மேல் பரிதாபம் கொண்டாள். தன்னவன் தன்னை தேடி வந்திருக்கிறான் என்பது ஏழுலகும் பரிசாய் பெற்றதை போன்ற ஆனந்ததை தந்தது. தன் காதல் சொல்லாமலே கைக்கூடியதில் மகிழுக்கு பெரும் உவகை.  

அந்த வார இறுதியில் திருமணம் குறித்து உறுதி செய்துக்கொள்வதற்கு உதவியாளர் கணேஷ் மற்றும் அவர் மனைவியோடு வந்திருந்தான் ரிஷி. வேலையாளாக இருந்தாலும் ரிஷியின் குடும்பத்தோடு ஆரம்பம் முதலே நல்ல நட்பு இருந்தது அவர்களுக்கு. அதனாலே உறவினர்களை அழைக்காது அவர் குடும்பத்தை மட்டும் அழைத்து வந்திருந்தான். உறவினர்கள் வந்தால் அவர்களை விட வசதி குறைவான இடத்தில் சம்பந்தம் பேசுவது குறித்த சலசலப்பு வரும் அல்லது தங்கள் புகழ் பாடுவர் ஆகையால் தவிர்த்தான். 

மகிழ் வீட்டிலும் அவள் தாய்மாமா குடும்பம் மற்றும் எதிர் வீட்டினர் வந்திருந்தனர். மகிழ் அறையில் தாய்மாமா மகள் நித்தியா மற்றும் சரஸ்வதியும் அவளை அலங்கரித்துக் கொண்டிருந்தார். 

அணுஷி, “மகி நான் போய் மாமா எப்படி இருக்காருன்னு பார்த்துட்டு வந்து சொல்லவா?” என கேட்க, “அட பெரிய மனுஷி கொஞ்ச நேரம் சும்மா இருடி அதெல்லாம் அவங்க ஆல்ரெடி பார்த்துகிட்டவுங்க தான்” என அடக்கினார் சரஸ்வதி. 

“ஓஹோ அன்னைக்கும் இந்த மாதிரி சேலைக் கட்டி, பூ வைச்சு அழகா இருந்தியா? என்னை ஏன் கூப்பிடவேயில்லை?” என்றாள் அணு. உலக வரலாற்றுலையே ஈர ஸ்கர்ட்டோட பொண்ணுப்பார்க்க நின்னது நானா இருப்பேன் என நினைத்து மெல்லியதாய் சிரித்துக்கொண்டாள் மகிழ்.

அதற்குள் அவள் அத்தை வந்து அவளை அழைத்துச் செல்ல, அதே மெல்லிய சிரிப்போடு மலர்ந்த முகமாக வெளியில் வந்தாள். மற்றவர்களுக்கு அவள் பின்னே வர, ஹாலுக்கு வந்தவள் கைக்கூப்பி அனைவருக்குமாக ஒரு வணக்கத்தைத் தெரிவித்தாள். அவள் அத்தை ரிஷிக்கு எதிரே கணேஷனின் மனைவி அருகே அமர வைத்தார். அனைவரையும் ஒருமுறை பார்த்தவள் நடுவில் தந்தைக்கு அருகே அமர்ந்திருக்கும் ரிஷியையும் ஒருமுறை பார்வையால் வருடிக்கொண்டாள். 

வேகவேகமாக பட்டுப்பாவாடை சரசரக்க ஓடி வந்த அணு மகிழின் கைகளைப் பற்றிக்கொண்டு, “மகி உனக்கு மறந்துப் போச்சா, அன்னைக்கு நாம ஐஸ்க்கிரீம் கொட்டுன அங்கிள் தான் இவரு எங்கம்மாகிட்ட சொல்லிக்கொடுக்க தான் வந்திருக்காரு, வா நாம ஒளிஞ்சிக்கலாம்” என்றாள். 

அத்தனை பேரும் மென்னகையோடு அவர்களைப் பார்க்க, “உஷ்…” என அவள் வாயை மூடிய மகிழ் தன்ருகே அமர்த்திக்கொண்டாள். பேசச் சொல்லும் போது பேசமாட்டாளே என நொந்துக்கொண்ட மகிழ் குனிந்து அவள் காதருகே, “அடியே கொஞ்ச நேரத்துக்கு பேசாம இரு, அப்பறம் உன்னை ஐஸ்க்கீரிம் மழையிலே குளிக்க வைக்கிறேன்” என உறுதி அளித்தாள். 

அவளும் அமைதியாக அமர்ந்து விட, நிமிர்ந்தவள் தன் மீது இருக்கும் ரிஷியின் பார்வையை கண்டாள். அவன் ஒற்றை பார்வையிலே பரவச அலைகள் எழுந்து படபடக்கச் செய்தது, கன்னங்கள் குங்குமமாய் சிவந்து மேலும் அவள் அழகைக் கூட்டியது.

“கல்யாணத்துக்கு முன்ன ஒரு விஷியம் கேட்கணும் மாப்பிள்ளை” என குணசீலன் பேச்சை ஆரம்பிக்க, அவர்புறம் பார்வையைத் திரும்பினான் ரிஷி. மனதிற்குள்ளே அப்படி என்ன கேட்டுவிட போகிறார் என்ற கேள்வியும் எழுந்தது. 

“எங்க பக்கத்துல பொண்ணு வீட்டுல தான் கல்யாணம் வைச்சுப்போம், அது மட்டுமில்லாம எனக்கு இருக்கிறதும் ஒரே பொண்ணு அவளுக்கு செஞ்சு பார்க்கணும்குறதான் என் ஆசை” என்றார் எதிர்பார்புடன்.

“அதனால என்ன அங்கிள் தாரளாம உங்க விருப்பப்படியே செய்யுங்க, இங்கையே ரிஜிஸ்டர் ஆஃபிஸ்லையாவது இல்லை கோவில்லையாவது கொஞ்சம் சிம்பிளா ஏற்பாடு செஞ்சிடுங்க அங்கிள். சென்னையில ரிஷிப்ஷன் வைச்சிக்கலாம்” என்றான் ரிஷி. அவனும் அதை தான் எண்ணியிருந்தான் அவர் கேட்டுவிட மறுக்காது ஏற்றுக்கொண்டான் ரிஷி. 

”அப்பறம் என் சார்பாவும் ஒரு ர்க்குஸ்ட் இந்த மாச கடைசியிலே மேரேஜ் டேட் ப்க்ஸ் பண்ணிடுங்க அங்கிள்” என்க, அங்கு மெல்லிய சிரிப்பலை எழுந்தது அனைவரிடமிருந்தும். 

“மாப்பிளைக்கு ரொம்ப தான் அவசரம்” என மகிழின் அத்தை கேலி பேச, “உண்மையிலே உன் அழகுல மயங்கிட்டார் போல” என மகிழின் காதுக்குள் உரைத்தாள் நித்தியா. மகிழ் தான் நெளிந்து கொண்டிருந்தாள். 

அதற்கு குணசீலனும் சம்மதம் தெரிவிக்க, அனைவரும் மகிழ்ந்தனர். பின் மகிழின் அத்தை விருந்தினரை உணவுண்ண அழைக்க அனைவரும் எழுந்தனர். ரிஷிக்கு மகிழையே பரிமாறச் சொல்ல, வெகு கவனமுடன் அவன் தட்டையே பார்த்துப்பார்த்து பரிமாறினாள். வெகு நீண்ட நாட்களுக்குப்பின் உணவின் ருசியறிந்து உண்டான். உணவின் ருசியோ மகிழ் கரத்தின் மகிமையோ நிறைவாக உண்டான் ரிஷி.

அனைவரும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினர், கணேஷன் குடும்பத்துடன் தங்கள் காரில் முன்னே கிளம்பிவிட, இருவரும் பேசிக் கொள்ளட்டும் என நினைத்து ரிஷிக்கு விடை கொடுத்துவிட்டு குணசீலன் உள்ளே சென்றுவிட, வாசலின் நின்றிருந்தனர் மகிழும், ரிஷியும். 

மகிழுக்கு மனம் முழுவதும் சந்தோஷம் நிறைந்திருந்த போதும் படபடவென அடித்துக்கொண்டிருந்தது. ரிஷியிடம் கேட்கவும் சொல்லவும் ஆயிரம் விஷியங்கள் இருந்தன இருந்தும் இன்னும் அவனிடம் சகஷமாக பேச்சுகள் வரவில்லை. இவை அனைத்தையும் தான்டி அன்று ஏன் என்னை விட்டுச் சென்றாய்? இல்லை ஏன் சொல்லாமல் சென்றாய்? என கேட்டு விடுவானோ என்ற பயமும் சற்று அதிகமாக அழுத்திக் கொண்டிருந்தது. 

“உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தானே மகிழ்?” என ரிஷி கேட்க, சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தவள் தலையாட்டியவாறு, “விருப்பம்தாங்க” என்றாள். 

ஆனால் ரிஷியின் பார்வை அவள் உதடுகளில் இல்லை, அவன் கவனம் அவள் வார்த்தைகளில் இல்லை. அவள் கண்களில் தனக்கான தனித்துவமான அன்பைத் தேடினான். என்றும் காதல் மின்னும் கண்களில் இன்றும் அவன் மீதான காதல் மின்னுவதைக் கண்டுகொண்டான். 

இன்னும் என் மீது அவள் கொண்ட நேசம் துளியும் குறையவில்லை என எண்ணுகையில் பெரும் கவர்மாய் உணர்ந்தான். ஆனால் இப்போதும் அவள் காதலை அனுபவிக்காது அழம் ஆராயும் மூடனான அவனைப் பார்த்து சிரித்தது விதி. ரிஷி கிளம்ப, மென்னகையுடன் விடைக்கொடுத்துவிட்டு வீட்டிற்குள் வந்தாள் மகிழ்நிரதி

Advertisement