Advertisement

அத்தியாயம் 15

ரிஷிநந்தனின் வீட்டுப் பூஜையறை புதுப்பொழிவு பெற்றிருந்தது. தேவகி இருந்த போது இருந்திருந்த வீட்டின் அழகு மீண்டும் மீண்டிருந்தது. இரவு உள்ளே வரும் போதே பூஜையறையிலிருந்து வந்த இனிய நறுமணத்தை ஆழ்ந்து நுகர்ந்தான். மகிழை கண்களால் தேடியவன் கிட்சனில் அவள் குரல் கேட்கவே தன்னறை நோக்கிச் சென்றான். 

மகிழ் கிட்சனில் இருக்க வந்தவன் குளித்து முடித்து உடைமாற்றிவிட்டு வருணாவின் அறைக்குச் சென்றான். ஹெட் போன் காதில் மாட்டியிருக்க உறங்கவில்லை ஏதோ பாடல் கேட்டவாறு படுத்திருந்தாள். 

ரிஷி வருவதை கண்டவள் பாடலை நிறுத்திவிட்டு அவன் முகம் பார்த்துச் சிரிக்க, தலை தடவியபடி அருகே அமர்ந்தான். 

“இன்னைக்கு பொழுது எப்படி போச்சி?” எனக் கேட்க, “இன்னைக்கு தான் பொழுதே பத்தலை” என்றாள். 

ரிஷி சிரிக்க, “நிஜம் தான் மகி இருந்தா எனக்கு டைம் பத்தவே மாட்டிக்கு அண்ணா” என அவள் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, மகிழ் அவளுக்கான இரவு உணவோடு உள்ளே வந்தாள். 

ரிஷியை அப்போது தான் கவனித்த மகிழ், “எப்போ வந்தீங்க? டீ எடுத்துட்டு வரட்டுமா?” என்றாள். 

‘பரவாயில்லையே பொறுப்பு வந்திடுச்சே!’ என மனதில் நினைத்தவன், “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், இப்படி உக்கார்” என அவள் அவள் கரம் பற்றி அருகே அமர்த்தினான். அவள் மறுகையில் இருந்த ப்ளேட்டை வாங்கியவன், அவனே வருணாவிற்கு ஊட்டிவிட, இமைக்காது அதை பார்த்தபடியே அமர்ந்திருந்தாள் மகிழ்நிரதி. 

அதை கவனித்துவிட்ட வருணா, “அண்ணா அங்க பாரேன், மகி உன்னை சைட் அடிக்கிறா?” என்றாள் குறும்போடு.

சட்டென பார்வையை திருப்பிய மகிழ், “அதெல்லாம் ஒண்ணுமில்லை” என எக்கி அடிக்க வர, தன் கைகளால் அவள் கைகளை பிடித்துக்கொண்ட வருணா, “இல்லையா? அப்போ எங்க அண்ணன் பார்க்கிற மாதிரி இல்லைன்னு சொல்லுற அப்படி தானே?” என்றாள். 

மகிழ் மேலும் அடிக்க வர அவள் தடுக்க அவர்கள் செல்லச் சண்டையை சில நொடி வேடிக்கைப் பார்த்த ரிஷி, மகிழை இழுத்து தன்னருகே அமர்த்திவிட்டு மீண்டும் வருணாவிற்கு ஊட்டிவிட்டான். 

“பிடிச்சி தானே விரும்பினா!” என ரிஷி மகிழுக்காக பரிந்து பேச, “பார்ரா! ரெண்டுபேரும் சேர்த்து நடுவுல இருக்குற என்னை ஏமாத்திட்டீங்க” என குறைபட்டாள் வருணா. 

“அது அப்படியில்லை வருணாம்மா, எங்கிட்டையே சொல்லலை பின்ன எப்படி உங்கிட்ட சொல்லுவா” என மீண்டும் பரிந்து பேச, “அப்போ நீ சொல்லியிருக்கலாமே? எத்தனை நாள் அவளை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கேன்” என அவனிடம் சண்டைக்கு நின்றாள். 

ரிஷி பெருமூச்சு விட்டுக்கொள்ள, “நீ இந்த விசாரணைய விடவே மாட்டியா?” என அதட்டலாகக் கேட்டாள் மகிழ். 

“அதெல்லாம் விட முடியாது ஏமாத்தினது என்னை தானே! கடைசி வரைக்கும் கேட்பேன்” என்ற வருணா உதட்டை சுளித்துக்கொள்ள, “சரி, சாப்பிட்டு முடிக்கிற வரைக்குமாவது அமைதியா இரு” என மீண்டும் அதட்டினாள். 

“பாருண்ணா, எனக்கு அண்ணியாகிட்டாலாம் என்னையே மிரட்டுறா!” என வருணா புகார் உரைக்க சிரித்துக் கொண்டே, “நல்லதுக்கு சொன்னா கேட்டுக்கணும் வருணா” என்றான். 

வருணா மகிழை முறைத்தவாறே அமைதியாக உண்ண, மகிழும் ஊரென்ற முகத்துடன் அவளை பார்த்தவேறே அமர்ந்திருந்தாள். ‘இரண்டுபேரும் இப்படி சண்டை போட்டே டைம் பாஸ் பண்ணுவாங்க போலே’ என ரிஷி நினைத்தான். 

ஊட்டி முடித்தவன் மகிழின் புறம் திரும்பி, “மகி நாளைக்கு ஈவினிங் ரெடியா இரு, கணேஷ் அங்கிள் வீட்டுல டின்னருக்கு நம்மளை இன்வைட் பண்ணியிருக்காங்க” என்றான். 

மகிழ் வருணாவை பார்க்க அவள் போ என்பது போல் சைகை காட்ட, சரியென தலையாட்டினாள். மகிழ் சென்றுவிட மேலும் சில நிமிடங்கள் தங்கையோடு பேசிவிட்டு அதன் பின் வந்தான் ரிஷி.  

மகிழ் இரவு உணவு பரிமாற உண்டவன், உணவின் வேறுபட்ட ருசியை உணர்ந்தவன் மகிழ் தான் சமைத்திருப்பாள் என யூகித்தவன் மேலும் ரசித்து உண்டான் ஆனால் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. உண்டு முடித்துவிட்டு ரிஷி தன்னறைக்குச் சென்றுவிட, மகிழ் தானும் உண்டு விட்டு வருணாவை கவனித்துவிட்டு அதன் பின்னே மாடியேறினாள்.          

மகிழ் அறைக்குள் வர ரிஷி நடுக்கட்டிலில் அமர்ந்திருந்தான், கையில் புத்தகம், லேப்டாப் எதுவுமில்லை. இரண்டு நாட்களும் அவனுக்கு முன் உறங்கியாகி விட்டது. இன்று அவன் அமர்ந்திருக்க தவிர்ந்து சென்று படுக்கவும் இயலாது. என்ன செய்வதென யோசித்தவள் பெட்டியில் இருந்த அவள் உடைமைகளை பிரித்து அடுக்கத் தொடங்கினாள்.

“அன்பேக் பண்ண ஹெல்ப் பண்ணவா?” என்றபடி ரிஷி எழுந்துவர “இல்லை வேண்டாம்” என மறுத்தவள் திரும்பிக் கொண்டாள். ஆனால் கேளாது ரிஷி எழுந்து வந்து உதவ இருவரும் மௌனமாக வேலையை பார்த்தனர். 

வேலை முடிய மகிழ் சென்று கட்டிலில் அமர, ரிஷி அறையின் விளக்கை அணைத்துவிட்டு இரவு விளக்கை ஆன் செய்தான். மகிழ் என்ன தான் அந்த வீட்டில் இயல்பாக சுற்றினாலும் இந்த அறைக்குள் அரை இருளில் அவனோடு தனிமையில் இருக்கையில் இயல்பாக இருக்க முடியவில்லை. அன்றைய நாளின் நினைவுகள் அலையலையாய் மீண்டும் நெஞ்சிலெல உடல் வியர்த்தது. 

ரிஷி வந்து அருகில் அமர, அன்றைய நாள் குறித்து ஏதேனும் கேள்விகள் வைப்பானோ என படபடத்தாள். 

“இன்விடேஷன் கொடுக்க வந்த அன்னைக்கு எதுக்கு மகிழ் சொல்லாம கிளம்பிட்ட?” எனக் கேட்க, மகிழ் அதிர்ந்தாள். ஆகா அன்றைய நெருக்கம் அவனுக்கு நினைவில் இருக்கிறது! தன்னை தவறாக எண்ணிவிடுவானோ என அவனை தவறாக நினைத்ததை தற்போது அவனிடம் சொல்லவும் முடியாதே என்ற மௌனத்தில் அவளிருந்தாள். 

“ஏன் அன்னைக்கு நைட் சுயநினைவில்லாம உங்ககிட்ட மிஸ்பிகேவ் பண்ணேனா?” மெல்லிய குரலில் கேட்டான்.

அதிர்ந்த மகிழுக்கு சட்டென்று ஒரு கேள்வி தோன்ற, “அப்படி நினைச்சி தான் என்னை தேடி வந்தது மேரேஜ் பண்ணிகிட்டீங்களா?” என மறைக்காமல் கேட்டாள். ஆசையில் அல்லாது ஆறுதல் தேடி தன்னிலை இழந்த நிலையில் தான் தன்னை அணைத்தான். அதிலும் தானே மயங்கி இருந்த நொடிகளிருக்க முழுதாக அவனை குற்றம் கூற இயலாது. 

“அப்படியெல்லாம் இல்லை! உங்களுக்கு ஏன் அப்படி தோணுது?” என்றாள் மெல்லிய கண்டிப்பு கூடிய குரலில். 

“பின்னே சொல்லிக்காம போனா நான் என்னன்னு நினைக்க? ஒன்னு நான் தவற நடந்திருக்கலாம், இல்லை தவறா நடந்து கொள்வேன்னு உனக்கு தோன்றியிருக்கலாம். என் மேல நம்பிக்கை இல்லாம தானே சொல்லிக்காம கிளம்பியிருக்க?” என்றான். 

நம்பிக்கை இல்லாமல அவ்வளவு நெருக்கத்தில் அவனோடு இருந்திருப்பாள், அவன் கேள்வியை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவள் மட்டுமல்லாது வருணாவின் தோழிகள் எத்தனை பேர் அந்த வீட்டிற்கு செல்கிறார்கள் யாரையும் அவன் ஒரு பார்வை தவறாகப் பார்த்திருப்பான? தானே ஆர்வமாக பார்த்த போதும் தன்னை திரும்பிப் பார்க்காதவன், பெண்களிடத்தில் அவன் கொண்டுள்ள கண்ணியம் அவளறியாததா! 

“அன்னைக்கு விடிச்ச பிறகும் நீங்க விழிக்கலை, எனக்கு ஊருக்கு போற பஸ்க்கு டைமாக்கிட்டு அதான் ஒரு நோட் எழுதி வைச்சிட்டு கிளம்பிட்டேன். நம்பிக்கை இல்லாமலாம் இல்லை உங்களுக்கு ஏன் இப்படியெல்லாம் தோன்றுது? அன்னைக்கு நானாதானே இந்த ரூம்குள்ள வந்தேன், நீங்களா தூக்கிடிட்டு வந்தீங்க? மனச குழப்பிக்காம பேசாம படுங்க” என்றாள் அதிகாரம் நிறைந்த அதட்டலாக. 

ரிஷி மனதிற்குள் ஆனந்த ஆட்டத்தோடும் வெளியில் அமைதியான முகத்தோடும் அமர்ந்திருக்க, மகிழ் இழுத்து மூடி படுத்துவிட்டாள். பொதுவாக ரிஷியிடம் பேசுவதற்கே தயங்கி திணறுபவள் இன்று அவனையே அதட்டிவிட கைகள் இரண்டும் நடுங்கியது பயத்திற்கு மாறாக எதையோ சாதித்தது போன்று முகம் மலர, விரிந்த சிரிப்பை மறைக்க திரும்பிப் படுத்துக்கொண்டாள்.

ரிஷியின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. மகிழிடம் பேச வேண்டும் என்ற ஆசை தோன்ற என்ன பேசுவதென்ற தெரியவில்லை. இருவருக்குமாக நினைவில் இருந்தது அன்றைய ஒரு நாள் மட்டும் தானே! ஆகையால் அதை வைத்தே பேச்சை ஆரம்பித்தான். 

தன் மீது அவளுக்கு இவ்வளவு நம்பிக்கையா! என இப்போதும் பிரம்மித்து போய் அமர்ந்திருந்தான். மீண்டும் மீண்டும் அவள் காதலாழம் காண்கையில் ஒரு புறம் சுகமாகவும் ஒரு புறம் குற்றவுணர்வாகவும் இருந்தது. அன்று அவள் தன்னை இவ்வளவு உயர்வாய் நினைக்க, நான் அவளை எவ்வளவு கீழாய் நினைத்துவிட்டேனே! என்ற குற்றவுணர்வு எழ நெஞ்சம் கனத்தது! வெகு நேரம் உறக்கம் தழுவாது அதன் பின்னே உறங்கியிருந்தான். 

காலையில் ஜாக்கிங் முடித்து குளித்துவிட்டு தினசரியை புரட்டியபடி ரிஷி அமர்ந்திருக்க, கையால் காஃபியோடு அறைக்குள் வந்தாள் மகிழ்நிரதி. ரிஷியின் முன் வந்து கப்பை நீட்டியவள், அவன் முகம் பார்த்து பேசத் தயங்கிக் கொண்டிருந்தாள். சில நிமிடங்களுக்குப் பின்னே அவள் தயங்கி நிற்பதை கவனித்தவன் பேப்பரை மடித்து வைத்துவிட்டு நிமிர்ந்தான். 

“என்ன மகிழ்?” என்றவன் அவள் பதில் சொல்வதற்குள்ளே, “எதுவா இருந்தாலும் தாரளமா கேளு, எங்கிட்ட பேசத் தயங்க வேண்டாம்னு சொல்லியிருக்கேன் இல்ல? நைட் என்னையே மிரட்டுன? உன் தைரியமெல்லாம் நைட் மட்டும் தானா?” என இதழ்விரியக் கேட்டான். 

அவன் சிரிப்பில் ஒரு நொடி மயங்கி தெளிந்தாள். “அது வருணா ரூம்ல இன்டிரீயர் எல்லாம் மாத்தலாமே, ரூம் புல்ல ஒரே வொயிட்டா இருக்கு, ஹாஸ்பிட்டல் ரூம்புக்கும் இதுக்கும் டிப்ரன்ஸ் இல்லாத மாதிரி இருக்கு” என்க, ரிஷியின் சிரிப்பு அதிகமானது.

சிரிப்புடனே எழுந்து சென்ற ரிஷி சில நிமிடங்களிலே திரும்பி வந்து அவள் முன் நின்றான். அவள் கைகளை பற்றியவன், ஒரு சாவியையும் க்ரீடிட் கார்டையும் வைக்க மகிழ் புரியாது பார்த்துக்கொண்டிருந்தாள். 

“இனி வீட்டுக்குத் தேவையான எல்லாமே நீ பார்த்துக்கோ, வருணா ரூம் மட்டுமில்லை நம்ம ரூம் ஏன் மொத்த வீட்டையே மாத்தினாலும் ஓகே, நோ அப்ஷக்ஷன். உன் விருப்பப்படி செய்,  தயங்கிக்கிட்டு கேட்டுகிட்டு இருக்கணும்னு அவசியமில்லை” என்றவன் பற்றியிருந்த அவள் கைகளை மெல்லத் தட்டிக்கொடுத்தான். வேக வேகமாக தலையாட்டிய மகிழின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. 

அவள் தலையாட்டிய அழகை ரசித்தவனுக்கு என்ன தோன்றியதோ நெருங்கி வந்து நேற்றியோடு நெற்றி முட்டி விழிமூடி நின்றான் ஒருநொடி. பின் அவள் கையிலிருந்த கப்பை வாங்கிக்கொண்டு, “கணேஷ் அங்கிள் வீட்டுல டின்னர் இருக்கு, ஈவினிங் டைம்முக்கு ரெடியா இரு” என்று விலகிச் சென்றான்.  

நிறைந்த மனதோடு காண்ணாடி முன் சென்று நின்ற மகிழ் அவன் முட்டிய நெற்றியை மெல்ல வருடிப் பார்த்துக்கொண்டு வெட்கச்சிரிப்போடு விலகிச் சென்றாள். 

Advertisement