Advertisement

அத்தியாயம் 11

மகிழ்நிரதிக்கு இரண்டு மட்டும் சற்றே மனதிற்கு நெருடலாக இருந்தது. ஒன்று அவன் வீட்டில் பூஜை அன்று தன்னை குறிப்பிட்டு அவன் அன்னையிடம் குறைவாகச் சொல்லியது. அதனாலே அவனுக்கு தன் மீது பிடித்தம் இல்லை என விலகினாள். அந்த எண்ணம் இன்று எவ்வாறு மாறியிருக்கும்? 

மற்றோன்று அன்று தந்தையிடம் வந்து பேசும் போதும் சரி, பின் உறுதி செய்ய வந்த அன்றும் சரி ரிஷி மட்டுமே வந்திருந்தான். அவன் அன்னையோ வருணாவோ வரவில்லையே ஏன் என நினைத்துக் குழம்பினாள். ஒருவேளை அவர்களின் விருப்பமில்லாமல் ரிஷி ஒருவனின் விருப்பத்தால் மட்டும் இத்திருமணம் நடைபெறுகிறதோ? இல்லையில்லை அப்படியெல்லாம் இருக்காது இருவருக்குமே என் மீது பிடித்தம் உண்டு. 

வருணா கடைசி வருட படிப்பின் போதே வெளிநாட்டில் உயர்கல்வி பயில நுழைவுத்தேர்விற்கு தயாராகிக் கொண்டிருந்தாள் தானே அதில் தேர்வாகி எங்கேனும் வெளிநாட்டில் உயர் கல்வியில் இருப்பாள். ஆனால் அவன் அன்னை ஏன் வரவில்லை? முக்கிய வேலை இருந்திருக்காலாம் அல்லது இவ்வளவு தூரம் வர முடியாது போயிருக்கலாம், இருவரும் திருமணத்திற்கு வருவார்களாக இருக்கும் அவளாக முடிவு செய்து மனதை சமாதனப்படுத்திக் கொண்டாள். 

பஞ்சாங்கம் பார்த்து பெரியவர்களிடம் கேட்டு அந்த மாத இறுதியில் திருமணத் தேதி குறித்தனர். ரிஷி திருமணம் எளிதாக இருக்கட்டும் என்று சொல்லிவிட, அனைத்தையும் குணசீலனே ஏற்பாடு செய்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் விரைவாய் நகர, இவ்வளவு சீக்கிரம் மகளை பிரிய வேண்டுமா? என ஏங்கினார் குணசீலன். அவளை விடுதிக்கு அனுப்பும் போது கூட இவ்வளவு பலகீனமாக உணரவில்லை. என்னவோ மனம் சற்று பாரமாகவே செய்தது, இருந்தும் மகளை மணக்கோலத்தில் அழகு பார்க்கும் நாளை ஒருபுறம் எதிர்பார்த்தே இருந்தார். 

திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில் காஞ்சிபுரம் வந்திருந்தான் ரிஷி. வருவதாக முன்பே அறிவிக்கவில்லை ஆகையால் குணசீலன் அலுவலகம் சென்றிருக்க வீட்டில் மகிழ்நிரதி மட்டுமே இருந்தாள். அழைப்புமணி இசைக்கவே வந்து கதவை திறந்த மகிழ் ரிஷி நின்றிருப்பதைக் கண்டு இன்பமாய் அதிர்ந்தாள். 

அவன் கண்களும் பழக்கம் போலே மகிழை ஆராய அன்று போலே இன்றும் ஒரு மஸ்கட் நிறத்தில் லாங் ஸ்கர்ட் அணிந்திருந்தாள். ஆனால் அவள் முகத்தில் அன்று கண்டதை விட கூடுதல் பொலிவு மின்னுவதைக் கண்டுகொண்டான். அழகு குறித்து அவள் எடுத்துக்கொண்ட கவனிப்புகளோ இல்லை கல்யாணக் கலையோ ஏதோ ஒன்று அவள் முகத்தில் கூடுதல் தேஜஸைக் கொடுத்திருந்தது.

“உள்ள வாங்க…” என வரவேற்க, உள்ளே வந்தவன் சோஃபாவில் சென்று அமர்ந்தான். முதலில் இருவரும் நலம் விசாரித்துக்கொள்ள, “அப்பா ஆஃபிஸ் போயிட்டாங்களே நான் வேணா கால் பண்ணி வரச் சொல்லவா?” என்றாள் மகிழ். 

“இல்லை இருக்கட்டும், நான் வெட்டிங் டிரஸ் கொடுக்கத் தான் வந்தேன், வேற எதுவும் இம்பார்ட்டன்ட் இல்லை. நான் அங்கிள் கிட்ட பேசிக்கிடுறேன்” என்றான். அவனோ கைப்பேசியில் குணசீலனை அழைத்து தான் வந்திருக்கும் விஷியத்தை தெரியப் படுத்தினான். 

அவனுக்கு குடிக்க ஏதேனும் எடுத்து வர மகிழ் கிட்சனுக்குள் சென்றிருந்தாள். ரிஷி ஹாலில் மாட்டப்பட்டுள்ள புகைப்படங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, அவன் முன் வந்து மாதுளம் பழச்சாற்றை நீட்டினாள் மகிழ். நன்றி சொல்லி வாங்கிக் கொண்டவன் தன் எதிரே நிற்கும் மகிழைப் பார்த்தான். சொல்லாமல் உட்கார மாட்டாளே என அவளை எண்ணி சிரித்தவன் அவனே எழுந்தான். 

அவள் முன் ஒரு பார்சலை நீட்டியவன், “அங்கிள் கிட்ட கேட்டுட்டேன் உங்கிட்டயே கொடுத்திட சொன்னாங்க இதுல கல்யாணப்பட்டு இருக்கு, உனக்கு பிடிச்சிருக்கான்னு பாரு” என்றான். அவள் வாங்கிக் கொள்ள, மீண்டும் ஒரு பாக்ஸ்ஸை நீட்டியவன், “இது கொஞ்சம் ஜூவல்ஸ் இருக்கு” என்றான். அன்றைய வார்த்தைகள் இன்றும் நினைவில் வர வாங்கிக்கொள்ள தயங்கி நின்றாள். 

அவள் தயக்கம் அவன் அறியாதிருந்தும் “வாங்கிக்கோ மகிழ், இது எங்கம்மாவோட ஆசிர்வாதம்” என்றான். தேவகி வரவிற்கும் மருமகளுக்கு முன்பே வாங்கி வைத்ததை எடுத்து வந்திருந்தான், அவளோ தற்போது தான் கொடுத்து அனுப்பியுள்ளார் என நினைத்து வாங்கிக்கொண்டாள். மகிழ் பூஜையறையில் சென்று வைத்துவிட்டு வணங்கி வந்தாள். 

அவள் வெளியே வர அதே நேரம் ஜூஸ் கிளாஸை டீபாவில் வைத்துவிட்டு எழுந்தான் ரிஷி. “சரி மகிழ் நான் கிளம்புறேன்” என்க, “இவ்வளவு சீக்கிரமாவா?” என கேட்டுவிட்டு பின் அவன் என்ன நினைப்பானோ என எண்ணி நாக்கைக் கடித்தாள்.

ரிஷி புரியாது அவளையே உற்றுப்பார்க்க, அவன் பார்வையை எதிர்கொள்ளும் திறனில்லாது முகம் திருப்பினாள். “அது அப்பா இப்போ வந்திடுவாங்க இருந்து பார்த்திட்டுப் போகலாமே?” என்றாள் மென்குரலில். 

அமர்ந்தவன் அங்கிருக்கும் நாளிதழை புரட்டிக்கொண்டிருக்க மகிழுக்கு இதயம் படபடவென அடித்துக்கொண்டது. இருவர் மட்டுமே இருக்கும் தனிமையான வீட்டில் அவன் சுவாசத்தின் அலைவரிசை கூட அவளின் ரசனையானது. 

சில நிமிடங்களிலே குணசீலனும் அலுவலகத்திலிருந்து வந்தார். வந்தவர் ரிஷியிடம் நலம் விசாரித்துக் கொண்டிருக்க, மகிழ் கிடச்சனுக்குள் சென்றாள். 

குணசீலன் திருமண ஏற்பாடுகள் குறித்து அவனிடம் பேசிக்கொண்டிருக்க, தந்தைக்கான காபியை கொண்டு வந்து தந்தாள் மகிழ். எதிர் வீட்டிலிருந்து “மகி நேத்து நீ வரைஞ்சி கொடுத்த படத்துக்கு பைவ் ஸ்டார் போட்டாங்க மிஸ்…” என்றவாறு ஓடி வந்தாள் அணுஷி. 

வந்தவளை, “உஷ்…” என அதட்லிட்டு தன்னருகே நிறுத்திக்கொண்டாள் மகிழ். அப்போது தான் ரிஷியைப் பார்த்த அணுவிற்கு அன்று மகிழ் அளித்த வாக்கு நினைவில் வந்தது. 

“ஹே மகி யூ ஆர் ர சீட்டர், இரண்டு ஐஸ்கீரிம் வாங்கித்தரேன்னு சொன்ன, ஐஸ்கீரிம் மழையில நனைய வைக்கிறனெல்லாம் சொன்ன ஆனால் என்னை ஏமாத்திட்ட?” என குற்றம் சாட்டினாள். 

“என்ன! ஐஸ்கீரிம் மழைக்கு நான் எங்கடி போவேன்? நாட்டுல எல்லாரும் மழை வரலைன்னு கவலையில இருக்காங்க உனக்கு ஐஸ்கீரிம் மழை கேட்குதா?” என்றாள் மகிழ். 

“ஓஹோ அப்போ அன்னைக்கு நீ இந்த அங்கிள் காரை டேமேஜ் பண்ணதை உங்க அப்பாகிட்ட சொல்லட்டுமா?” என்க, “அப்போ நேத்து உன் ஹோம் ஒர்க் நான் தானே செஞ்சேன் அதை உங்க அம்மாகிட்ட சொல்லட்டுமா?” என மிரட்டினாள் மகிழ். 

சற்று தொலைவில் இருந்த இருவரின் உரையாடல் குணசீலனின் உரையாடலில் கவனமுடன் இருந்த ரிஷியின் கவனத்தை கலைத்தது. திரும்பி அவர்களை சுவாரஸ்யமுடன் ஒரு பார்வை பார்த்தவன் குணசீலனிடம், “அங்கிள் நான் இவங்க இரண்டு பேரையும் வெளியில கூட்டிட்டு போயிட்டு வரட்டுமா?” எனக் கேட்டான்.

மகளின் மலர்ந்த முகத்தில் இருந்த மகிழ்ச்சியை கண்டுகொண்டவர் சரியென்று வழியனுப்பி வைத்தார். தங்களின் வாக்குவாதத்தில் உடன்படிக்கை எட்டவில்லை எனினும் ரிஷி எங்கே அழைத்துச் செல்கிறானோ என்ற எண்ணத்தில் இருவரும் அமைதியாக வந்தனர்.

கார் நின்றதும் நிமிர்ந்து பார்த்த மகிழ் பேரின்பமாய் அதிர்ந்தாள். அவனை முதலில் சந்தித்த ஐஸ்கீரிம் பார்லர். ரிஷிக்கும் தங்கள் முதல் சந்திப்பு நினைவில் இருக்கிறது என நினைக்கையில் ஒரு நொடியில் மகிழின் உள்ளம் உச்சிவானைத் தொட்டு மேகங்களை முத்தமிட்டு வந்தது போன்றிருந்தது. மறுநொடியே ஒருவேளை எதார்த்தமாக கூட அழைத்து வந்திருக்கலாம் இல்லையா? என்ற மனதின் கேள்வி அவளுக்கு உவர்ப்பாய் இருந்தது. 

அணுஷி குஷியில் முன்னே ஓடி விட, சிந்தனையோடு வந்த மகிழ் முதல் படிகளில் ஏறுகையில் லேசாக தாடுமாறி விழப்பார்க்க, சட்டென பின்னே வந்த ரிஷி தாங்கிப் பிடித்தான். விழுந்து விடுவோமோ என ஒருநொடி பயத்தில் நடுநடுங்கிய நேரம் தன்னவனின் கைகள் அரணாய், அரவணைப்பாய் தாங்கியத்தில் மெய் சிலிர்க்க நெஞ்சம் நிறைந்தாள். 

அன்று அவன் வீட்டு பூஜையறையில் விழுகையில் கண்டுகொள்ளாமல் சென்றதும் இவன் தனா! எத்தனை பெரிய மாற்றம் அவனிடத்தில் எல்லாம் காதலாலே! என நினைத்துக் கொண்டாள். 

அவள் கரம் பற்றியவாறே உள்ள அழைத்து வந்தவன் ஒரு இருக்கையில் அமர வைத்துவிட்டு இருவரிடமும் கேட்டு வேண்டியதை ஆடர் கொடுத்தான். 

ஐஸ்கீரிமும் வந்துவிட, அவனே எடுத்து அணுவிற்கு பிரித்துக் கொடுக்க, ஆர்வமாக உண்ணத் தொடங்கினாள். அவன் செயல்களையே பார்த்துக்கொண்டிருந்த மகிழின் புறம் திரும்பியவன் வசீகரமாய் சிரித்தான். 

அந்த ஒற்றைப் புன்னைகை நொடியில் இரத்தநாளங்கள் எல்லாம் மென்னலகலை பரவச் செய்து கன்னங்களை செங்காந்தளாய் சிவக்கச் செய்தது. உயிர்தரிக்கவும் உயிர்பிக்கவும் செய்யும் விந்தையான அவன் புன்னைகயில் இருக்கும் மந்திரம் என்னவோ!

”இங்க தான் நம்ம பஸ்ட் மீட் நியாபகம் இருக்கா மகிழ் உனக்கு?” என ரிஷி கேட்க, வாய் பிளந்து, இரு விழிகளையும் உருட்டுக் கொண்டு வியப்பாய் பார்த்தாள் மகிழ். 

‘நான் என்னைக்குடா மறந்தேன், நீ மறந்துட்டன்னு நினைச்சில ஏமாந்தேன்’ என அவள் மனதில் நினைத்தாள். தனக்கு நினைவில் உள்ளதை அவளுக்கு உணர்த்த நினைத்து அவள் மறந்ததை நினைவுப்படுத்துவதாக உரைத்தான்.  

அவளிடம் பதில் இல்லாமல் இருக்கவே, “அன்னைக்கு கூட நீ லாவண்டர் சுடியில இருந்த” என மேலும் நியாபகப்படுத்தினான். அவளோ இதெல்லாமா நோட் பண்ணான் என்ற எண்ணத்தில் மேலும் ஆச்சர்யமாகப் பார்த்தாள். 

ஒற்றை புருவம் தூக்கி இன்னும் கேள்வியாய் அவளையே பார்க்க, வழிக்கிக் கொண்டு செல்லும் ஐஸ்கீரிம் கூட தொண்டைக்குள் சிக்குவது போன்றிருந்தது மகிழுக்கு. வேகவேகமாக தலையாட்டினாள். அவன் என்னவோ காதலித்து மணமுடிக்கவிருக்கும் மணாளன் போன்று அத்தனை உரிமையாய் பேச அவளுக்கு தான் இன்னும் வார்த்தைகள் வரவில்லை. வாய் பேசா பிள்ளை போன்றே நயனமொழி பேசினாள். 

“அ..அப்போ என் மேல கோபமே இல்லையா? அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல பார்க்கும் போது எதுவும் சொல்லையே?” என்றாள் தயக்கமாக. ஏனெனில் அவன் தன்னை மறந்துவிட்டான் என்றெண்ணி அன்று அவள் கொண்ட வேதனை எவ்வளவு! ஏமாற்றத்தில் சுருண்ட இதயத்தின் வலி எவ்வளவு! 

இளநகை உதட்டில் தவழ, “ஜெஸ்ட் தெரியாம ஒருதடவை கார இடுச்சிட்ட, இதுக்கெல்லாமா கோபப்படுவாங்க? பார்க்கும் போதெல்லாம் திட்டிக்கிட்டு சண்டை பிடிக்கிறது எல்லாம் குழந்தைத்தனமா தெரியாதா?” என்றான். 

ஆனால் இதற்காக தான் அன்று வெளிபடுத்திக்கொள்ளாமல் இருந்தான். மகிழோ அவன் மிகவும் பெருந்தன்மையானன், பக்குவமானவன், நேர்த்தியானவன் என நினைத்து பெருமை கொண்டாள். எப்படியோ அவனுக்கு தங்கள் முதல் சந்திப்பு நினைவில் இருக்கிறது என்பதை அறிந்ததில் அவளுக்குப் பெரும் உவகையே! 

அருகே இந்த டால் ஷாப்பில் அணுவிற்கு ஒரு பெரிய சைஸ் டெடிபியர் பொம்மையொன்றை வாங்க, அவளோ டோரிமானைக் கேட்க இரண்டையும் வாங்கிக்கொடுத்து அழைத்து வந்தான். 

வரும் வழியில் அணுவிடம், “ஆமாம் இந்த டால் எல்லாம் மகிழுக்கு தானே அணு?” என்றான் மெல்லிய சிரிப்புடன். 

“அஸ்க்கு புஸ்க்கு அதெல்லாம் நான் தரமாட்டேன் அங்கிள்” என்ற அணு தன்னோடு பொம்மைகளை அணைத்துக் கொண்டாள். 

“நீ தரலைனா எப்படி அடுத்த தடவை மகிழ் உங்க ட்ராயிங் வரைஞ்சித் தருவா?” என்க, உடனே வீராப்பாக, “அதெல்லாம் வேண்டாம் நானே வரஞ்சிப்பேன்” என்றாள். 

“அதுக்கு எப்படி பைவ் ஸ்டார் கிடைக்கும்?” எனக் கேட்க, “நான் நல்லா வரைவேன் அங்கிள், இன்னைக்கே எங்க அம்மாகிட்ட கேட்டு கத்துப்பேன்” என்றாள் அணுஷி. 

மகிழிடம் திரும்பியவன், “நீ எதுக்கு வரைஞ்சி கொடுத்த?” என்றான் மென்மையாக. 

“அணு சந்தோஷப்படுவால அதான் வரைஞ்சிக் கொடுந்தேன்” என்க, “வரைய சொல்லிகொடுக்காம நீயே வரையிறது சரியா?” என்றான்.

“அதனால தானே பைவ் ஸ்டார் வாங்கினா, சின்னசின்ன விஷியங்கள்ல தான் பெரிய பெரிய சந்தோசம் இருக்கு. அணு ஹேப்பியா இருந்தா அது போதும் எனக்கு” என்றாள் மகிழ். 

அவள் பதில் ரிஷிக்கு பிடிக்காத போதும், விவாதமாக தொடர விருப்பமில்லை ஆகையால் விட்டுவிட்டான். இருவருக்கும் கருத்துக்களும், ரசனைகளும் மாறுபடுவதாக தோன்றியது ரிஷிக்கு. 

வீட்டு வாசலில் இறக்கிவிட்டவன், “மகிழ் உனக்கு அந்த சேரி பிடிச்சிருக்கான்னு பாரு, இல்லைன்னா சொல்லு ஆள் அனுப்புறேன். மாத்திக்கலாம்” என்றவன் விடைப்பெற்று கிளம்பினான். 

உள்ளே வந்த மகிழுக்கு புடவையை பிரித்துப் பார்க்கும் ஆர்வமில்லை. முதல்முறையாக தன்னுருவை கற்பனையில் கொண்டு தனக்காக தேர்வு செய்திருக்கிறான் எனும் போது அது எவ்வாறாக இருப்பினும் மாற்றும் எண்ணமில்லாது ஏற்றுக்கொண்டாள். 

Advertisement