Advertisement

அத்தியாயம் 3 
அடி மீது அடி வைத்து
அழகான நடை வைத்து
விளையாட ஓடி வா முருகா 
என்னோடு சேர வா முருகா
உன்னோடு சாய்ந்தாட உடலிங்கு தள்ளாட
உயிர் மெல்ல ஏங்குதே குமரா
உனைக் காணும் ஆசைதான் குறைவா?

தென்றலென வருடும் தேன்குரல் அந்த பூஜையறையின் காலை நேர நிசப்தத்தை கலைத்துக்கொண்டு எங்கும் எதிரொலித்தது. முருகனை மனமுருக வேண்டிக்கொண்டு நெற்றியில் விபூதியோடு வெளியில் வந்தாள் மகிழ்நிரதி. 
காலை நேர உணவிற்கு தந்தை தோசை ஊற்ற மகள் சாம்பாருக்கு காய்கறிகளை நறுக்கிக் கொண்டு, ஹாஸ்டல் சாப்பாடு, வார்டன், வருணா, ஸ்ரீதர் மற்ற நண்பர்களின் கலாட்டா என கல்லூரி கதைகள் பலதும் உரைத்தாள். பின் அவர் சாம்பார் வைக்க, அவள் சட்னி அரைக்க, அன்றைய காலை உணவை தயார் செய்தனர். 
அன்னை சென்றதிலிருந்து அதுவே அவர்கள் வீட்டில் பழக்கம், தந்தைக்கு உதவவென சமைலறைக்குள் வந்தவளுக்கு அது பிடித்துப்போக நன்றாக சமைக்க கற்றுக்கொண்டாள். இருவரும் காலை உணவை உண்டு முடிக்க, அவர் அலுவலகம் கிளம்பினார். 
குணசீலன் அங்கிருக்கும் தபால்துறை அலுவலகத்தில் பணிபுரிகிறார். மகளிடம் அதிர்ந்து கூட பேசாதவர் அவள் விருப்பமே அவர் விருப்பம். சென்னையில் சென்று படிக்க வேண்டுமென்று கேட்டதும் தனிமையையும் உணராது சரியென்று அனுப்பிவைத்தார். அவருக்கு அவர் மகளின் சந்தோஷக் குரலை கேட்டுக் கொண்டிருப்பதிலே தான் சந்தோஷம். 
இரண்டாம்மாண்டு கல்லூரி படிப்பை முடித்திருந்தவள் விடுமுறைக்கு ஹாஸ்டலிருந்து காஞ்சிபுரம் வந்திருந்தாள். ஊருக்குச் செல்வதில், தந்தையை காண்பதில் அத்தனை சந்தோஷம். தந்தை சென்றதும் வெளிகேட்டை மூட, எதிர்வீட்டிலிருந்த பெண்மணி தானும் அலுவலகம் செல்ல ஸ்கூட்டியை கிளப்பினார். 
“மகி எப்போ வந்த? நல்லாயிருக்கியா?” என்றார். 
“நைட் வந்தேன் சரஸ்சக்கா வேலைக்கு கிளம்பிட்டீங்க போல?” 
“ஆமா மகி, நைட் பார்க்கலாம்” 
சிரித்துக்கொண்ட மகிழ் கையசைத்து விடைக் கொடுத்தாள். கிளம்பியவர் மீண்டும் நின்று, “மகி ஒரு ஹெல்ப் பண்ணேன். ஈவினிங் பாப்பாவை ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வந்துடேன், நான் வர லேட்டாகும் அவரும் பெங்களூர் போய்டாரு” என வேண்ட, சரியென்று அனுப்பி வைத்தாள். 
சொல்லிக்கொள்ளும் படியான நெருங்கிய சொந்தங்கள் இல்லையென்பதால் ஆரம்பம் முதலே எதிர்வீட்டினரோடு நல்ல பழக்கமிருந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் சிறு சிறு உதவிகளை செய்துக்கொள்வர்கள். சரஸ்வதியின் மகள் அணுஷியை மாலை பள்ளி முடிந்து அழைத்துக்கொண்டு வந்தாள் மகிழ்நிரதி. 
வண்டியில் வந்துக்கொண்டிருக்கும் போதே, “என்ன அணு நான் வந்ததிலிருந்து எங்கிட்ட பேசவே மாட்டிக்க?” என்றாள் மகிழ். 
“நான் உன் மேல கோபமாயிருக்கேன் மகி, நீ எனக்கு பெரிய சைஸ் டோரிமான் டால் வாங்கிட்டு வரேன்னு சொல்லிட்டு மறந்துட்டல அதான் பேச மாட்டேன்” என்றாள் அணு. 
அதேநேரம் ஒரு ஐஸ்கீரிம் பார்லரை தாண்டிச் சென்று கொண்டிருக்க, “சரி பேசலைனா போ, ரொம்ப நல்லதா போச்சு. ரொம்ப வெயிலா இருக்கே ஒரு ஐஸ்கீரிமோ, ரோஸ்மில்கோ சாப்பிடலாம்னு  நினைச்சேன்” என்றாள். 
“மகி எனக்கு ரெண்டு ஐஸ்கீரிம், அம்மாவுக்கு ஒன்னு மகி” என அடம்பிடித்த அணு மகிழின் இடுப்பில் கைவைத்துக் கொண்டு கேட்டாள். இயல்பாகவே மகிழ்நிரதி இடுப்பில் கைவைத்தால் பெரும் கூச்சமாக உணர்வாள். 
“அணு கைய எடுடி கூச்சமா இருக்கு” என மிரட்ட, அவளோ வேண்டுமென்ற அவளை கூச்சமூட்டினாள். கடைக்கு அருகில் வந்திருந்தவள் அணுவின் செயலால் மேலும் கூச்சத்தோடு துள்ளி நெளிந்துக் கொண்டு வண்டியை தடுமாற விட, அருகே நின்றிருந்த காரில் முன் பகுதில் மோதிவிட்டாள். 
காரின் மறுபுறம் திரும்பி நின்று ஒருவன் போன் பேசிக்கொண்டிருக்கவே, அவன் கவனிப்பதற்குள் சென்றுவிடலாமென்ற எண்ணத்தில் தனது வண்டியை சத்தமின்றி லாக் செய்து நிறுத்திவிட்டு அணுவை தள்ளிக்கொண்டு கடைக்குள் சென்றுவிட்டாள். 
ஒரு இறுக்கையில் அமர்ந்து ஒரு டம்ளர் தண்ணீரையும் குடித்து முடித்தாள். ஆடர் கொடுத்துவிட்டு மகி விடாமல் அணுவை முறைக்க, “மகி நீ ரொம்ப பேட், வெளிய ஒரு காரை இடிச்சுட்டு அந்த அங்கிள் கிட்ட சாரி கேட்காம ஓடி வந்திட்ட?” என அவளையே குற்றம் சுமத்தினாள். 
“பேசாதடி, எல்லாம் உன்னால தானே! உன்னை என் வண்டியில கூட்டிட்டு வாரது குட்டிப்பிசாசை என் தலையில தூக்கிட்டு வாரதுக்கு சமம், இரு உங்க அம்மாகிட்ட போய் எல்லாத்தையும் சொல்லுறேன்” என சிறுமிக்கு சமமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தாள் மகிழ். 
அதே நேரம் ஐஸ்கீரிம் வந்துவிட, மகிழை சமாதனம் செய்யவேண்டும் இல்லையெனில் வீட்டில் சென்று அன்னையிடம் போட்டுக்கொடுத்து தர்ம அடி வாங்க வைத்துவிடுவாள் எனவும் உணர்ந்துக்கொண்டாள் சிறுமி. 
ஐஸ்கீரிமை எடுத்துப் பிரித்தவள் ஒரு ஸ்பூன் அள்ளி மகிழின் அருகே கொண்டு சென்று, “மகி நீ கோபமா இருக்கே, இந்த குளுகுளு ஐஸ்கீரிம் சாப்பிட்டு சமாதானமாகிடுவாளாம், அம்மா என்னை அடிச்சிட்டு இப்படி தான் சமாதனம் படுத்துவாங்க” என கொஞ்சிக் கொண்டு ஊட்ட முயன்றாள். 
“வேண்டாம் எனக்கு இந்த ப்ளேவர் பிடிக்காது நீயே சாப்பிடு அணு” அவள் மறுக்க, மகிழ் வேண்டாமென்பதையே செய்து பழக்கப்பட்ட அணு பிடிவாதமுடன் அவளுக்கு ஊட்டிட்டுவிட முயன்றாள். 
பிறர் பார்க்க கடையில் அமர்ந்துக் கொண்டு என்ன சேட்டை என அணுவின் மீது கோபமெழ பலமோடு அவள் கைகளை தட்டிவிட்டாள். அதேநேரம் எதிரே ஆடவன் ஒருவன் வந்து நிற்க, அவன் மேலே விழுந்தது. ஊதாநிறச் சட்டையில் மஞ்சள் நிற கீரிம் பளிச்சென்று கண்முன் தெரிய நெற்றியில் அடித்துக்கொண்டு, “சாரி….” என்றவாறு நிமிர்ந்தாள். 
ரிஷிநந்தன் நின்றிருக்க, ஒரு கலக்கத்துடனே அவள் எழ, “ஒரு பப்ளிக் ப்ளேஸ்ல எப்படி பிகேவ் பண்ணும்கிற மேனர்ஸ் கிடையாதா?” என்றான் சற்றே கோபமாக. 
அவன் பார்வை அவளை ஊடுருவி மெய்சிலிர்க்க வைத்தது. தூரத்தின் அளவறியா அண்ட பிரபஞ்சத்தில் எங்கோ ஓர் இணை உலகில் இருகதிர்களாய் எதிரெதிர் திசையில் பாய்ந்தோடி உரசிச்செல்லும் மின்னல் போன்ற ஒரு பார்வையால் உணரும் சிலிர்ப்பு. 
அதில் மேலும் படபடப்போடு நடுங்கியவள், டேபிளிலிருந்து டிஸ்யூவை கையில் எடுத்துக் கொண்டு, “சாரி சார், நான் வேணா….” என ஆரம்பித்தவள் வார்த்தையை முடிக்காது வாயை இறுக மூடிக்கொண்டாள். மனமோ நீ தொட்டு துடைத்து விடுவாயோ? என்க, அதே கேள்வியை அவன் பார்வையும் கேட்டது. 
மகிழோ குனிந்து அணுவை பார்த்தாள். என்னவோ கார்டூன் பார்ப்பது போன்று பார்த்துக்கொண்டே ஐஸ்கீரிமை உண்டு கொண்டிருந்தாள் அவள். கண்களை சுருக்கி அழு என்பது போல் சைகை காட்டியும் அவள் புரியாது ஐஸ்கீரிமிலே கவனமாயிருந்தாள். ஆனால் ரிஷி கவனித்திருந்தான். 
மீண்டும் மன்னிப்பு வேண்டியவாறு டிஸ்யூவை நீட்டினாள். அவன் வாங்கிக் கொள்ளவில்லை, ஆனால் முறைப்பும் கோபமும் அதிகமாகியது. மகிழோ அணுவை அழுமாறு மீண்டும் சைகை செய்ய அவளுக்கு புரியவைல்லை. கண்களை சுருக்கிக்கொண்டு தவறு செய்துவிட்டு தப்பிக்கப் பார்க்கும் அவள் குழந்தைத்தனமான செயலை சரியாக புரிந்துகொண்டான் ரிஷி. 
நிமிர்வாக நிமிர்ந்தவள் “ஜஸ்ட் ஒரு ஸ்பூன் ஐஸ்கீரிம், அதுவும் குழந்தை தெரியாம தட்டிவிட்டுட்டா. அதுக்கும் சாரி தான் கேட்டுட்டேனே” என குரல் உயர கேட்டாள். 
இன்னும் என்ன தான் செய்ய வேண்டுமோ என்ற அலுப்பு, டிஸ்யூ கொடுத்தால் வாங்க மறுக்கிறான், மன்னிப்பு வேண்டினால் முறைக்கிறான் என்ற எண்ணத்திலே அவளும் முறைப்போடு தான் நின்றாள். அதற்குள் சுற்றிலும் ஒரு கூட்டமும் சூழ்ந்து வரத் தொடங்கியது. 
இப்போது அவன் பார்வை மேலும் ஆழமாக பதிய, “ஜஸ்ட் ஒரு ஸ்பூன் ஐஸ்கீரிம் மட்டும் தானா? வெளிய உங்க டப்பா ஸ்கூட்டியை வைச்சு டேமேஜ் பண்ணிருக்கீங்களே, என்னோட கார் அது?” என்றான் கைகளை கட்டிக்கொண்டு விசாரிக்கும் தோரணையில். 
என்னது அந்த காரும் இவனோடதா! அட ஆண்டவா, இவனுக்கு நான் இன்னும் எத்தனை சாரி தான் சொல்லணுமோ! 
இவளை கூட்டிட்டு வந்து எனக்கு நானே பிரச்சனைய இழுத்துக்கிட்டேன் பாரு என்னை சொல்லணும்! மனதில் புலம்பியவள் எப்படியும் அணு அழமட்டாள் என்பதால் அவளே கண்ணீர் விழி சூழ, அவனை பார்த்தாள். இதுவும் அவள் தப்பிக்க முயலும் சமாளிப்பு தான் என்பது தெளிவாய் புரிந்த போதும் அவன் கோபமுகம் சற்றே இளகியது. 
அதற்குள் அவன் அருகே வந்த ஒருவன், “சார் தேவயில்லாத பிரச்சனை வேண்டாம், இது நம்ம இடமில்லை. சுத்தி இருக்குற கூட்டம் கையில மொபைல் வேற, வேண்டாதவுங்க வேற மாதிரி வதந்தி பரப்பிவிடவும் வாய்பிருக்கு. கார் அவ்வளவு ஒன்னும் டேமேஜ் இல்லையே வாங்க சார் கிளம்பலாம்” என காதுக்குள் ரகசியம் போலே உரைத்தான். 
இடித்ததும் வெளியே நின்று மன்னிப்பு கேட்டிருந்தால் எப்போதும் போலே தலைசைப்போடு விட்டுடிருந்திருப்பான். அவன் திரும்பி பார்க்க உள்ளே ஓடிவந்து மட்டுமில்லாது ஐஸ்கீரிமையும் தெளித்துவிட்டாதால் கோபம். அதன் பின்னே தன் இயல்பை மீறி என்ன செய்துக் கொண்டிருக்கிறோம் என்று எண்ணியவன் அழுத்தமான மௌனப்பார்வையுடன் கிளம்பினான்.
அவன் சென்றபின்னும் மகிழுக்கு படபடப்பு அடங்கவில்லை. ”ஏய் குள்ளவாத்து, வீட்டுல உங்க அம்மா அடிக்க வாரதுக்கு முன்னாடியே அந்த கத்து தத்துற? இப்போ நான் அழ சொன்னா புரியாத மாதிரி இருக்க?” என்றாள் அணுவிடம். 
“நீ திட்டுவாங்குறது ஜாலியா இருந்துச்சு மகி பார்க்க, நான் தான் சாரி கேட்க சொன்னேனே நீ கேட்டியா? அப்பறம் உன்னை தானே திட்டுனாங்க, என்னை என்ன அடிக்காவா போறாங்க? அதான் கரைய இருந்த ஐஸ்கீரிமை காப்பாத்துற கடமையை செய்தேன்” என்றாள். இவள் இருக்கும் சைஸ்க்கும் பேசும் பேச்சுக்கும் அசந்து பார்த்த மகிழ் அவள் தலையில் கொட்டி அழைத்து வந்தாள். 
விடுமுறை முடிந்து ஹாஸ்டல் வந்து மாதங்கள் கடந்த போதும் ஏனோ அவன் நினைவும் பார்வையும் அவள் நியூரான்கள் முழுவதும் நிறைந்து நிலைத்திருந்தது. ஐஸ்கீரிமை தெளித்தற்கு மன்னிப்பு வேண்டினாலும், காரை இடித்ததற்கு இன்னும் மன்னிப்பு கேட்கவில்லையே என்றே எண்ணியிருந்தாள். அன்று தான் செய்ததும் தவறு தானே! 
அந்த குற்றவுணர்வே இன்னும் அவன் நினைவை நெஞ்சில் நிறுத்தியிருந்தது. மீண்டும் அவனை காஞ்சிபுரத்தில் எங்காவது பார்த்தால் ஒருமுறையாவது மன்னிப்பு வேண்டிவிட வேண்டும் என்ற எண்ணியிருந்தாலே தவிர அவனை பார்க்கும் வாய்ப்பு தான் வரவில்லை. 
மாலை பாடவேளை முடிந்து வகுப்பறையிலிருந்து நடந்து வந்துக்கொண்டிருந்தனர் மகிழும் வருணாவும்.
“மகி நேரா ஹாஸ்டல் போறீயா இல்லை கேண்டீனா?” என்க, 
“இல்லை வருணா ஸ்ரீதர் வெயிட் பண்ணுவாரு ஆடிடோரியம் தான் போறேன். எனக்கும் ப்ராக்டிஸ் இருக்கு” என்றாள். 
“நிஜமாவே உங்க ரெண்டுபேர் குரல்ல ஏதோ மேஜிக் இருக்கு மகி. உனக்கெல்லாம் ப்ராக்டிஸ் தேவையே இல்லை போ. நீங்க பாடுனா கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு” என்றாள். 
மகிழ்நிரதி பதில்லாது அவள் முதுகில் அடித்தாள். அதே நேரம் அவர்கள் முன் வந்து நின்ற ஸ்ரீதர், “மகி, ப்ரஜெக்ட் வொர்க்ல நான் பிஸி, நீ ஒழுங்கா போய் ப்ராக்டிஸ் பண்ணனு நான் கொஞ்ச நேரத்துல வந்திடுறேன் சரியா?” என்றான். 
அவளோ மாற சிரிப்புடனே, “சரி சீனியர்” என்ற தலையசப்போடு வருணாவுடன் நடக்கத் தொடங்கினாள். 
“மகி உங்க வாய்ஸ்சோட சீக்ரட் என்னன்னு கட்டுபிடிச்சுட்டேனே” என அவள் காதருகே மென்மையாக உரைத்தாள்.
“என்ன?”
“தயிர்சாதம் தானே”
“வாட்..?” என்றவாறு ஒரு நொடி யோசித்தவள் அதன் பின்னே அவள் தங்கள் இருவரையும் கேலி செய்கிறாள் என்பதை புரிந்து கொண்டாள். 
“வரு என்ன இருந்தாலும் அவர் நம்ம சீனியர் நியாபகம் வைச்சுக்கோ”
“சீனியர் ஸ்ரீ தான். இப்போ யாரு இல்லைன்னு சொன்னா? மகி நீங்க ரெண்டுபேரும் ஜாடிகேத்த மூடி சரியானா ஜோடி தான்டி” என இருவரையும் இணைத்தே கேலி செய்தாள். 
“கேடி, பேசாம போடி” என சிரிப்புடனே விடைபெற்றுச் சென்றாள். 
வருணாதேவி மூன்றாமாண்டு நானோ டெக்னாலஜி பயின்றுக் கொண்டிருக்க, அவள் பள்ளிப்படிப்பில் இருக்கும் நேரம் அவள் தந்தை இறந்தார். அதே நேரம் வருணாவின் தமையன் ரிஷிநந்தன் லண்டனில் மேல்படிப்பில் இருந்தான். இன்னும் ஓராண்டுகள் படிப்பு நிறைவடையும் நிலையில் சில நெருங்கிய சொந்தங்களிடம் தொழிலையும் அன்னை, தங்கையும் கவனித்துக் கொள்ளுமாறு வேண்டினான். 
உறவுகளின் உண்மை முகமும் அறியாது அனுபவமில்லாது தவறு செய்துவிட்டோம் என்பதை பின்னரே உணர்ந்தான். அவன் திரும்பி வந்த போது பெரும் சேமிப்பு வெகுவாய் குறைந்திருந்தது. 
அன்னை தேவகி அன்பு மட்டுமே அறிந்தவர். உறவுகள் கேட்கும் போதெல்லாம் கணக்கு பாராது செய்தார். பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்பதை அவர் பாராது போக, சேமிப்புகள் கரையத் தொடங்கியது அதுவும் அவர் கவனத்திற்கு வரமாலே! 
ரிஷிநந்தன் வந்த சிலமாதங்களிலே தந்தையின் தொழிலை எடுத்துக் கொண்டான். கணக்கு வழக்குகளின் குளறுபடிகள் புரியத்தொடங்கியது. தந்தை எத்தனை அரும்பாடுப்பட்டு உழைத்ததை இவர்கள் அட்டை போன்று ஒட்டிக்கொண்டு உறுஞ்சுகின்றனரே என தீரா கோபம் கொண்டான். உறவுகளை முற்றிலும் தவிர்க்க இயலாது தன்னிலிருந்தும் தொழிலிருந்தும் சற்று தள்ளி வைத்துக்கொண்டான். 

Advertisement