Advertisement

பூந்தேன் – 4

அடுத்து வந்த நாட்கள் எல்லாம் இறக்கை கட்டிக்கொண்டு பறந்தது என்று தான் சொல்லிடவேண்டும். அப்படிதான் இருந்தது புகழேந்தி மற்றும் இலக்கியாவிற்கு..  இருவருமே திருமணத்திற்கு சம்மதம் என்று சொல்லிவிட, முதலில் சின்னதாய் வீட்டளவில் ஒரு நிச்சயம் நடந்தது..

புகழேந்தி வீட்டு சார்பாய் அவன் நண்பர்களும், அவர்களின் குடும்பமும் நிற்க, செங்கல்பட்டில் இலக்கியாவின் வீட்டில் தான் நிச்சயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  என்றோ விட்டுப்போன சொந்தம் எல்லாம் இப்போது வந்து பேசுவதும், தான் இன்னார், உனக்கு நாங்கள் இந்த உறவுமுறை என்று தங்களை தாங்களே அறிமுகம் செய்துகொண்டு பேசி பழக,

‘இத்தனை நாள் எங்கடா போயிருந்தீங்க…’ என்று தான் நினைத்தான் புகழேந்தி. ஆனால் மனதில் வேறுவிதமான எண்ணங்கள் எல்லாம் இல்லை.. வாழ்வின் நிதர்சனத்தை புரிந்து அதற்கேற்ப தன் மனநிலையை வைத்துகொண்டான்..

இலக்கியா வீடு வந்து சென்ற பின், அடுத்து இருவரும் அலைபேசியில் பேசுவதும், நேரம் கிடைத்தால் சந்திப்பதுமாய் இருக்க, இந்த கொஞ்ச நாட்களில் இலக்கியா அவனுள் ஒரு பெரும் மாற்றத்தை கொண்டு வந்திருந்தாள்..

புகழேந்தி என்னவோ வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வந்துவிட்டான் தான் அவளை.. ஆனால் அவர்களுக்கு முன்னே அங்கே சந்தீப் வந்திருக்க, புகழேந்தி தன் நண்பனை அறிமுகம் செய்து வைத்தான்..

“ஹாய்…” என்றவள், “உங்க மத்த ப்ரண்ட்ஸும் இதே ஏரியா தானே..” என்று கேட்க,

புகழேந்தியும், இலக்கியாவும் பைக்கில் வந்து இறங்கியதை சுஸ்மிதா அவள் வீட்டிலிருந்தே பார்த்துவிட்டாள்.                    

‘என்னடா இவன் வீட்டுக்கே கூட்டிட்டு வந்திருக்கான்..’ என்று தோன்ற, வேகமாய் அங்கே போனாள்.. அப்போது தான் இலக்கியாவும் புகழேந்தியிடம் அவன் நண்பர்கள் பற்றி கேட்டுக்கொண்டு இருக்க, இவளும் உள்ளே நுழைய சரியாய் இருந்தது.

“புகழ்..” என்றபடி உள்ளே வந்தவளை, இலக்கியாவும் கண்டிருக்க,

“இதோ மூக்கு வேர்த்து வந்திட்டாளே.. இவ சுஸ்மிதா…” என்று சந்தீப் அறிமுகம் செய்துவைத்தான்..

“ஹாய் சுஸ்மிதா…” என்று இலக்கியா கை நீட்ட, “ஹாய்..” என்று அவளும் கரம் குலுக்கினாள்.

“ஜார்ஜ் ஆபிஸ் விட்டு வந்திருக்கமாட்டான்… மேகலா வேற ஏரியால இருக்கா.. வீக்கென்ட் மட்டும் இங்கே வருவா…” என்று புகழேந்தி சொல்ல,

“ஓ.. பிரண்ட்ஸ் கூட ஜாலியா இருக்கும்ல…” என்றவள், சுஸ்மிதாவை பார்த்து, “நீங்க எந்த ஏரியா..??”என,

அவள் என்ன கேட்கிறாள் என்று புரியாமல் பார்த்த சுஸ்மிதா “நான் இங்க தான் எதிர் வீட்ல இருக்கேன்…” என,

“நான் அது கேட்கலை… உங்க ஹஸ்பன்ட் வீடு எங்க இருக்குனு கேட்டேன்.. உங்க ஏரியா அது தானே…” என்று சாதாரணமாகவே சொல்ல, அவளை தவிர மற்ற மூவருக்குமே அதிர்வு ஓடியது உடம்பில்..

புகழேந்திக்கோ ஐயோ என்று இருந்தது. சுஸ்மிதாவோ என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் திணறியவள், பின் ஒருவழியாய் தன்னையே சமாளித்துகொண்டு, “நான் இங்க தான் இருக்கேன்…” என்று இறுகிய குரலில் சொன்னவள்,  “பை… நான் கிளம்புறேன்…” என்று சென்றுவிட்டாள்.

புகழேந்தியும், சந்தீப்பும் அவள் போவதையே பாவமாய் பார்த்து இருக்க, “என்னாச்சு… நான் எதுவும் தப்பா பேசிட்டேனா??” என்று இலக்கியா பாவமாய் கேட்க, புகழேந்திக்கு என்ன சொல்லவென்று தெரியவில்லை..

இதேது அவர்கள் முன் வேறு யாராவது சுஸ்மிதாவிடம் இக்கேள்வி கேட்டு இருந்தால், ‘உனக்கு இதெல்லாம் தேவையா… உன் வேலை மட்டும் பாரு…’ என்று எகிறியிருப்பான்.. ஆனால் கேட்டது இலக்கியா..

அவன் வாழ்வோடு தன் வாழ்வை இணைத்துக்கொள்ள போகிறவள்.. முதல் முறை வரும்போது அப்படி சொல்லிட முடியுமா… முதலில் அவனுக்கு அப்போது கோவத்திற்கு மாறாய் என்ன சொல்ல என்று குழப்பம் தானே வந்தது.. 

“நீங்க பேசிட்டு இருங்க வந்திடுறேன்…” என்று சந்தீப்பும் கிளம்பிட,

“புகழ் நான்.. நான் எதுவும் தப்பா பேசிட்டேனா???” என்று கேட்டவளின் முகத்தில் சற்று முன் இருந்த பொலிவு இல்லை.. அவள் கண்கள் வருத்தம் காட்ட, அதுவே அவனுக்கு பெரும் வேதனை கொடுப்பது போல் இருந்தது.

“ஹே… அதெல்லாம் எதுமில்ல.. நீ.. நீ உட்கார்…” என்று இருக்கையை காட்டியவன், அவனும் அமர,

“பின்ன ஏன் அவங்க போனாங்க..??” என்று இலக்கியா மீண்டும் ஆரம்பிக்க,

“அது…” என்று முதலில் தயங்கியவன், சரி எப்படி இருந்தாலும் இவர்களை பற்றி எல்லாம் தெரிந்து தானே ஆக வேண்டும் என்று தோன்ற, ஒருவேகத்தில் அனைத்தையும் சொல்லி முடித்துவிட்டான்..    

புகழேந்தி பேசி முடிக்கும் வரைக்குமே அமைதியாய் கேட்டிருந்தவள், இறுதியில், “அச்சோ.. சாரி புகழ்.. ரியல்லி சாரி… எனக்கு இதெல்லாம் தெரியாதே…” என்று நிஜமாகவே வருந்தி சொல்ல, அவள் கண்களோ மன்னிப்பை வேண்டியது..

இலக்கியா சும்மா சாரி கேட்டிருந்தாலே புகழேந்தி ஒன்றும் சொல்லியிருக்க போவதில்லை.. அதிலும் அவள் இத்தனை வருந்தி கேட்கையில் அவனால் வேறு என்ன செய்திட முடியும்..

“சரி விடு லக்கி.. சுஸ்மி ஒன்னும் நினைக்கமாட்டா நான் சொல்லிக்கிறேன்…” என்று சமாதானமாய் சொல்ல,

“இல்ல.. அவங்க நினைக்கலைன்னாலும் எனக்கே ஒருமாதிரி சங்கடமா இருக்கும்.. அதுவும் இன்னிக்கு டே ரொம்பவே ஸ்பெஷல் இல்லையா… ப்ளீஸ் நீங்க அங்க கூட்டிட்டு போறீங்களா நான் நேராவே அவங்கட்ட சாரி கேட்கிறேன்…” என,

“அட.. அதெல்லாம் வேணாம் லக்கி… அதுவுமில்லாம அப்படியெல்லாம் சட்டுன்னு நம்ம போக கூடாது.. கல்யாணம் முடியவும் அவங்களே அவங்க வீட்டுக்கு இன்வைட் பண்ணுவாங்க..” என,

“ஹ்ம்ம் அப்போ கால் பண்ணி தாங்களேன்.. நான் போன்லயாது சாரி கேட்கிறேன்…” என்று விடாது நச்சரித்து, புகழேந்தியை சுஸ்மிதாவிற்கு அழைக்க வைத்து, ஒருவழியாய் பேசி மன்னிப்பும் கேட்ட பிறகே அவள் முகத்தில் பழைய புன்னகை திரும்பியது..

“ஹப்பாடி… இப்போதான் ரிலாக்ஸா இருக்கு….” என்று சிரித்தபடி புகழேந்தியிடம் அவனது அலைபேசியை நீட்ட, அவனோ அவள் முகத்தையே தான் பார்த்திருந்தான்..

இத்தனை நேரம் இல்லாத ஓர் பார்வை இப்போது… கொஞ்சம் உரிமையோடு பெருமிதமாய் பார்த்த பார்வை.. அவன் பார்வை என்னவோ செய்ய,

“என்ன அப்படி பார்க்கறீங்க???” என,

“தேங்க்ஸ் எ லாட்  லக்கி…” என்றான் மனதார..

“தேங்க்ஸா.. எதுக்கு…” என்று புரியாமல் கேட்க,

“நான் மேரேஜ் லைப் பத்தி எல்லாம் நினைக்கவே இல்லைன்னு சொல்ல மாட்டேன்… ஆனா எப்போ கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு ஐடியா இல்லை அவ்வளோதான்.. என்னோட ஒரே ஒரு சின்ன எக்ஸ்பெக்ட் என்னன்னா எனக்கு வர்ற வைப் என் பிரண்ட்சிப்பை புரிஞ்சுக்கனும்.. இது ஒன்னு மட்டும் தான் எதிர்பார்த்தேன்.. பிகாஸ் எனக்கு இப்போவர எல்லாமே இவங்க தான்..” என்று புகழேந்தி உணர்ந்து பேச, என்னவோ இலக்கியாவிற்கு கண்கள் கலங்கியது..   

“ல.. லக்கி.. என்னம்மா.. நான் நான் தப்பா எதுவும் சொல்லிடலையே…” என்று புகழேந்தி பதற,

அவளோ இல்லை என்று மெல்ல தலையாட்டியவள், “உங்க பிரண்ட்ஸ் எனக்கும் பிரண்ட்ஸ் தான்.. ஆனா இனிமே உங்களுக்கு அவங்க மட்டும் தான்னு இல்லை.. நான் இருக்கேன்…” என,

புகழேந்திக்கு மனம் நிறைந்து போனது..

“லக்கி….” என்று அதிர்ந்து பார்த்தவன், ஆனந்த மிகுதியில் விட்டால் அவளை இறுக கட்டிக்கொள்ள வேண்டும் போல தான் தோன்றியது.. ஆனால் பார்த்து ஒரு நாள் கூட ஆகவில்லை. இன்றே இப்படியெல்லாம் செய்து அவளை கலவரப்படுத்தி விடக்கூடாது என்றெண்ணி, தன் கைகளை மட்டும் அவள்புரம் நீட்ட,

நீட்டிய அவன் கரத்தினை  தன் கரம் கொண்டு அணைத்தவள், “ஆனாலும் நீங்க ரொம்ப ரூல்ஸ் பேசுவீங்களோ…” என்று லேசாய் தலை சரித்து கேட்க, அவள் கேட்ட தினுசில் அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது..

“ஏன்..?? ஏன் அப்படி கேட்கிற…??”

“நானும் மீட் பண்ணதுல இருந்து கவனிச்சேன்.. அதான்…” என்று இலக்கியா சொல்ல, அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரிந்து,

“அது நானா இருக்கேனா… சாதாரணமா கூட யாரும் தப்பு சொல்லிட கூடாதுன்னு நினைப்பேன்… கேட்க ஆள் இல்லைன்னு ஆடுறான்னு ஈசியா சொல்லிடுவாங்க இல்லையா…” என்று அவனும் சொல்ல,

“ஓ… அப்போ ஈசியா தப்பு சொல்லிடுவாங்கன்னு இப்படியா.. இல்ல நீங்களே இப்படிதானா…” என்று இலக்கியா கிண்டலாய் கேட்க,

“ஆகா என்னை கிண்டல் பண்றியா..???” என்று இவனும் பார்வையை உருட்டி கேட்க,

“ஹா ஹா… அதுவே இப்போதான் புரியுதா…” என்றவள் “சரி சரி இட்ஸ் கெட்டிங் லேட் டிராப் பண்ணுங்க…” என்று கிளம்பிட, அன்றிலிருந்து புகழேந்திக்கு எப்போதடா திருமணம் முடியும் என்று இருந்தது..

முதலில் நெருங்கிய உறவுகளை அழைத்து நிச்சயம் செய்துவிடலாம் என்று குணசேகர் சொல்லிவிட, புகழேந்தியின் நண்பர்களும் அதுவே சொல்ல, சரி என்று விட்டான்.. எளிய முறையில் நிச்சய தார்த்தம் என்றாலும் அது நிறைவாகவும், சிறப்பாகவும் நடந்தேற, அனைவருக்குமே மனதில் அத்தனை திருப்தி..

“பார்வையில்ல புகழ் நல்ல மனுசங்களா இருக்காங்க…” என்று சந்தீப்பின் அப்பா கூற, சிரித்துக்கொண்டான்..

இலக்கியாவும் இவர்கள் கூட்டத்தில் பொருந்திவிட, அவனுக்கு அது இன்னும் நிம்மதியை கொடுத்தது.. ஏனெனில் ஜார்ஜிற்கு திருமணம் முடிந்து, அதன் பிறகு அவன் மனைவி அத்தனை ஒன்றும் இவர்களோடு ஒட்டவில்லை.. அவனையும் இருக்கிபிடிக்க தொடங்க, எங்கேடா நமக்கு வருபவளும் இப்படிதான் இருப்பாளோ என்ற அச்சமும் சேர்ந்தே புகழேந்திக்கு இருந்தது..

ஆனால் இலக்கியா அப்படி இல்லாமல், அவளும் இவர்களில் ஒருத்தியாய் பழக, அவள் தன் சகாக்களோடு பேசுவது சிரிப்பது என்று அனைத்தையும் ரசித்தபடி அமர்ந்திருந்தான்..

“என்ன மச்சி.. இப்போவே சைலெண்ட் ஆகிட்ட…” என்று ஜார்ஜ் அவனை வார,

“இப்போ இருந்து ப்ராக்டிஸ் பண்றான் மச்சி…” என்று சந்தீப் கிண்டல் செய்ய,

“டேய் டேய் இப்போவே ஆரம்பிக்காதீங்கடா.. இன்னும் நிறைய இருக்கு, வச்சு செய்ய…” என்று மேகலாவும் இவர்களோடு இணைய, சுஸ்மிதா மட்டும் அமைதியாய் இருந்தாள்..

ஆனால் அதெல்லாம் அங்கே யாருக்கும் அப்போது கவனிக்கும் நிலையில் இல்லை..

இலக்கியா “சைலெண்ட்டா இருக்கீங்க..” என்று புகழேந்தியை கேட்க,

“ஒண்ணுமில்ல சும்மா பார்த்திட்டு இருக்கேன்..” என்றவனுக்கு எப்படி சொல்ல அவன் மனம் நிறைந்திருப்பதை என்று தெரியவில்லை..

சீக்கிரமே இவளை தன் மனைவியாக்கி, தன்னோடு அழைத்து சென்றுவிடவேண்டும் என்று தோன்றியது.. நிச்சயத்திற்கு வந்திருந்தவர்கள் எல்லாம் கிளம்பி சென்றுவிட புகழேந்தியின் நண்பர்களும், அவர்கள் குடும்பத்தினரும், இலக்கியாவின் வீட்டினரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, அப்போதும் கூட சுஸ்மிதா வாய் திறக்கவே இல்லை.. மௌனமாய் அமர்ந்து அனைத்தையும் வேடிக்கை பார்த்து அமர்ந்திருந்தாள்.மேகலா தான் அவள் அமைதியாய் இருப்பதை கண்டு,

“என்ன சுஸ்மி அமைதியா இருக்க??” என்று வினவ,

“நத்திங் மேகி.. ஜஸ்ட் பார்த்திட்டு இருக்கேன்…” என்று சொன்னவளுக்கு மனதினுள்ளே அவளுக்கு நடந்த நிச்சயம், அதனை தொட்டு நடந்த கேலிகள் கிண்டல்கள் தோழமைகளின் வாரல்கள் என்று அனைத்தும் நினைவில் வந்து பாடாய் படுத்தியது..

“கால் எதுவும் வலிக்குதாடி…??”

“ம்ம்ச்.. நான் தான் ஒண்ணுமில்ல சொல்றேன்ல மேகி.. சும்மா ஏன் என்னையே கேட்கிற.. போ போய் வந்த வேலையை பாரு…” என்று சுஸ்மித எரிச்சலில் முகம் சுருக்க, இதை மற்றவர்கள் யாரும் கவனித்தார்களோ இல்லையே இலக்கியா பார்த்துவிட்டாள்..

பெண்களுக்கு சில விசயங்களில் நுட்பம் ஜாஸ்தி தானே… மேலோட்டமாய் இருப்பது போல் தோன்றினாலும், அவர்களது எண்ணங்களும், சிந்தைகளும் அவர்களுக்கு மட்டுமே தெரியும் புரியும் ஒன்றாயிற்றே..

‘என்னாச்சு இவங்களுக்கு…’ என்று யோசனையோடு இலக்கியாவின் பார்வை சுஸ்மிதாவில் இருக்க, அதற்குமேல் அவளை சிந்திக்கவிடாது குணசேகரன்,

“கல்யாணம் முழுவதும் எங்க பொறுப்பு…” என்று பேச்சை தொடங்க கூற, அதைகேட்ட புகழேந்தியோ, ஒருமுறை இலக்கியா முகம் பார்த்தவன்,

“இல்ல தாத்தா எனக்கு இதில உடன்பாடு இல்லை..” என,

‘இதென்னடா புது பிரச்சனை…’ என்று அனைவரும் புகழேந்தியை பார்க்க, இலக்கியாவிற்குமே சட்டென்று ஒருமாதிரி ஆனது.

“நம்ம வழக்கப்படி பாதி பாதி செலவு தானே தாத்தா.. அப்படியே செய்யலாமே.. கல்யாண வேலையாகட்டும், செலவாகட்டும் எல்லாமே பாதி பாதி தான் தாத்தா..” என்று புகழேந்தி சொல்ல,

“இல்ல புகழ்… கல்யாணம் செங்கல்பட்ல.. நீ இருக்கிறது சென்னைல.. அதான் ஒவ்வொரு விசயத்துக்கும் அலையணும்.. செலவு யார் செஞ்சா என்ன?? இலக்கியா இங்க ஒரு பொண்ணு தானே…” என்று அவரும் விடாமல் சொல்ல,

“இல்ல தாத்தா… நானும் ஒருத்தன் தானே இருக்கேன்.. இலக்கியா அவ வாழ்க்கையே என்னோட பகிர்ந்துக்க வர்றா.. அப்படி இருக்கும் போது நான் இதுகூட செய்யாட்டி எப்படி…” என்று புகழேந்தி சொல்லிக்கொண்டு இருக்கும் போதே,

“நாங்க எல்லாம் இருக்கோம் தாத்தா.. இது எங்க வீட்டு கல்யாணம்… எந்த வேலையா இருந்தாலும் நாங்களும் செய்வோம்…” என்று சந்தீப்பும் ஜார்ஜும் சொல்ல, இலக்கியாவின் கலவரமான பார்வையும், புகழேந்தியின் திடமான, இது தான் என் முடிவு என்பது போன்ற தோற்றமும், குணசேகரனை இதற்கு சம்மதிக்க வைத்தது..

“சரிப்பா எல்லாம் சேர்ந்தே செய்யலாம்…” என்று அவர் சொல்லிச் செல்ல, அப்போது தான் இலக்கியாவிற்கும் சரி, புகழேந்திக்கும் சரி மனதில் ஒரு நிம்மதி வந்தது..

புகழேந்தி தனித்து இருப்பவனாகவே இருந்தாலும் அவனுக்கென்று சில வாழ்வியல் கோட்பாடுகள் இருந்தது.. யாருமில்லை என்பதற்காக எப்படிவேண்டுமானாலும் வாழலாம் என்றெல்லாம் அவனால் இருக்க முடியாது. இப்படிதான் அவன். ஆனால் அவனுக்கும் சில பலவீனங்கள் உண்டு..

புகழேந்தியின் இந்த பாவம் இலக்கியாவிற்கு புதிது.. இலகுவாகவே இத்தனை நாள் இருந்தவனின் சடுதி நேர பிடிவாதமும் அழுத்தமும் அவளுக்கு ஆச்சர்யமாகவே இருந்தது..

‘கேசுவலா இருக்காங்க.. ஆனா இப்படியும் இருக்காங்க.. பரவாயில்ல… இதுவும் நல்லாத்தான் இருக்கு…’என்று நினைத்தவள்,

“கொஞ்ச நேரத்தில டென்சன் ஆகிட்டேன்…” என்று தன்னுணர்வை மறைக்காது அவனிடம் தெரிவிக்க,

“இதில டென்சன் ஆக என்ன இருக்கு லக்கி.. இது தானே முறை…” என்று சொல்ல,

“ஹ்ம்ம் நான் சொல்லலை நீங்க சரியான ரூல்ஸ்னு…” என்று இலக்கியா சொல்லி சிரிக்க,

“ஆமாமா இப்போ இப்படிதான் சொல்வ, மேரேஜுக்கு அப்புறம் நீ ரூல்ஸ் போடுவ…” என,

அப்படியே பொழுதும் சரி நாட்களும் சரி வேக வேகமாய் நகர்ந்தோடி, திருமணமும் சிறப்பாய் முடிந்து, மறுவீடு விருந்து அது இதென்று முடிந்து ஒருவழியாய் தேனிலவும் சென்று அப்போது தான் வீடு வந்து சேர்ந்திருந்தனர்..

“ஷப்பா… வீட்டுக்கு வந்தா தான் எப்பவுமே நல்லாருக்கு…” என்று பொத்தென்று சோபாவில் இலக்கியா அமர,

“உன்கூட எங்க இருந்தாலும் எனக்கு நல்லாத்தான் இருக்கு…” என்று இன்னும் அவனது கொஞ்சலை விடாது அவளை உரசியபடி புகழேந்தியும் அமர,

“புகழ் இப்போதானே வந்தோம்.. டூ மச்… தள்ளி போங்க…” என்று அவன் முகத்தை தள்ளியவள்,

“போங்க போங்க.. பிரெஷ் ஆகிட்டு ஹோட்டல்ல ஏதாவது வாங்கிட்டு வாங்க…” என,

“பார்த்தியா நான் சொன்னது சரிதான்..” என்றவன் இன்னும் அவளில் இருந்து எழும்பவே இல்லை..

“என்ன சொன்னீங்க…???”

“மேரேஜ் அப்புறம் நீ ரூல்ஸ் போடுவ சொன்னேன்ல….”

“ஹா இது ரூல்ஸா… பசிக்குது பாஸ்.. இன்னிக்கெல்லாம் நான் சமைக்க முடியாது…” என்று சிணுங்க..

“ஹா ஹா.. சரி நீ ரெஸ்ட் எடு.. நான் சமைக்கிறேன்…” என்று அவன் கிளம்ப,

“ரொம்ப சிறப்பு…” என்று அவனுக்கு ஒழுங்கு காட்டியவள், குளிக்க சென்றாள்..

புகழேந்தியும் மற்றொரு அறையில் சென்று குளித்து வந்தவன், என்ன செய்யலாம் என்று யோசிக்க, கோதுமை ரவை மட்டுமே இருந்தது. சரி கோதுமை ரவை கிச்சடி செய்யலாம் என்று அவனுக்கு தெரிந்த விதத்தில் ஒருவழியாக கிண்டி கிளறி எடுத்துவைக்க,

“ஆக ஆக.. வாசமே நல்லாருக்கே…” என்று ஈர தலையை துவட்டியபடி வந்தாள் இலக்கியா.

“வாசம் எல்லாம் ஓகே பட் டேஸ்ட் எப்படின்னு தெரியாது..” என,

“எப்படி இருந்தா என்ன.. நீங்க எனக்காக பார்ஸ்ட் டைம் செஞ்சிருக்கீங்க.. அது நல்லாவே இருக்கும்….” என்றவள், என்னவோ மனதிற்குள் மகிழ்வாய் இருக்க,

“புகழ்…” என்றழைத்து, அவன் கன்னதில் இதழ் பதிக்க,

“ஆகா… இது இன்னும் நல்லா இருக்கே…” என்றபடி அவளை புகழேந்தி இறுக அணைக்க,

“ஹே என்ன ரெண்டுபேரும் நடுவீட்ல நின்னு ஷோ காட்றீங்க…” என்றபடி வந்தாள் சுஸ்மிதா..

அவள் குரல் கேட்டதுமே இருவரும் சட்டென்று விலகிட, இலக்கியாவிற்கு லேசாய் வெட்கமாக இருக்க, புகழேந்திக்கோ ஒருமாதிரி சங்கோஜமாய் இருந்தது. தோழியாகவே இருந்தாலும் அவள் பெண்..

ஒன்றும் சொல்லாமல் அவன் அறைக்குள் சென்றுவிட,

“ட்ரிப் போயிட்டு வந்தீங்க இல்லையா.. டயர்ட்டா இருக்கும்.. சோ நானே ப்ரேக் பாஸ்ட் கொண்டு வந்தேன்…” என்று கையில் இருக்கும் கூடையை இலக்கியாவிடம் நீட்ட,

“ஓ.. தேங்க்ஸ் சுஸ்மி.. ஆனா இங்கயே செஞ்சிட்டோம்…” என்று சமாளிப்பாய் சொல்ல,

“என்ன செஞ்சீங்க…” என்று சுற்றும் முற்றும் பார்த்தவள், டைனிங் டேபிளில் இருந்த கோதுமை ரவை கிச்சடியை பார்த்ததும், அவளாகவே ஒரு ஸ்பூன் கொண்டு வாயில் போட, இலக்கியாவிற்கு சட்டென்று ஒரு கோவம்..

அது அவள் கணவன் அவளுக்காக செய்தது.. அதை முதலில் அவன் உண்ணவேண்டும் இல்லை அவள் ருசிக்கவேண்டும்.. இருவருமே இல்லாமல் மூன்றாவதாய், அதுவும் அழைக்காமலே இப்படி வந்து சுஸ்மிதா இப்படி செய்யவும் சட்டென்று மனதில் ஒரு ஏமாற்றம் எழ, அதனை ஒட்டி கோவமும் எழுந்தது.

புகழேந்தி வெளியே வரவே இல்லை. அவன் மனநிலையும் இலக்கியவிற்கு புரிந்தது.. அமைதியாய் ஒன்றும் சொல்லாமல் நிற்க,

“அய்யே என்ன இது நல்லாவே இல்லை.. தூக்கி குப்பைல போடு.. யார் பண்ணா இது.. கண்டிப்பா நீ இல்ல.. சோ புகழ் செஞ்சானா… கன்றாவி… இப்படிதான் செய்றதா.. நல்லவேளை நீ சாப்பிடல…” என்று சொன்னவள் சும்மா இல்லாமல் கிண்ணத்தில் இருந்ததை அப்படியே குப்பை தொட்டியிலும் போட்டாள்..

அந்த இடத்தில் இலக்கியாவின் உணர்வுகளை சொல்லவும் வேண்டுமா..?? 

 

 

Advertisement