Advertisement

பூந்தேன் – 10

“டேய் புகழ்… எந்திரிடா.. என்ன இப்படி படுத்திருக்க.. புகழ்…” என்று சந்தீப் வந்து உசுப்ப,

“ஹா.. என்னடா…” என்றபடி சிரமப்பட்டே எழுந்தான் புகழேந்தி..

பின்னே சோப்பாவிற்கும், டீபாய்க்கும் இடையில் படுத்துக்கிடந்தால் எப்படி அவனால் எழ முடியும்.. முதல்நாள் இரவு எத்தனை நேரம் அப்படியே அமர்ந்திருந்தானோ தெரியவில்லை.. உறக்கம் எப்போது வந்ததோ அதுவும் தெரியாது. தூக்க கலக்கத்தில் கீழே விழுந்ததும் அறியவில்லை..

“டேய் என்னடா வீடு திறந்து கிடக்கு.. நீ இப்படி தூங்குற…” என்று சந்தீப் அவனை எழுப்பி நிறுத்தி கேட்க,

“வீடு.. திறந்து.. லக்கி இருப்பாளே…” என்று கண்களை கசக்கி திறக்க, அப்போது தான் மூளையும் தன் வேலையைத் தொடங்கியது..

“ல.. லக்கி..” என்று முணுமுணுத்தவன், மீண்டும் பொத்தென்று சோப்பாவில் விழ,

“புகழ்..” என்று சந்தீப் தாங்கி பிடித்தான்..

சந்தீப் அப்போது தான் ஊரில் இருந்து வந்திருந்தான். அவன் வேலை அப்படி.. ஆக அவனுக்கு எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. புகழேந்தி எதுவும் சொல்லாமல் இருக்க, சந்தீப் அவனையே பார்த்துக்கொண்டே ஜார்ஜுக்கு அழைத்தான்.

“இங்கவாடா.. இவன் எப்படியோ இருக்கான்..” என, அடுத்த இரண்டு நிமிடத்தில் ஜார்ஜும் வந்துவிட, புகழேந்தி அப்போதும் அப்படியே இருக்க, ஜார்ஜ் தான் சந்தீப்பிடம் இலக்கியா போனதை சொல்ல,

“டேய் என்னடா.. நான் அப்போவே இவன்கிட்ட சொன்னேன்.. சுஸ்மி பண்றது எதுவும் சரியில்லைன்னு. இவன் கேட்கலை.. இப்போ பார்..” என்றவன், “சரி நீ செங்கல்பட்டு போ..” என்று சொல்ல,

“இல்லடா ரெண்டுபேருமே கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணட்டும்… ரெண்டு மூணு நாள் ஆகட்டும்…” என்று ஜார்ஜ் சொல்ல,

“அதுவரைக்கும் இவன் இப்படியே இருப்பானா??” என்று அவனை காட்ட,

“புகழ்.. போ பிரெஷ் ஆகிட்டு வா…” என்று இருவரும் அவனை இழுத்து குளியலறைக்குள் விட, வேண்டா வெறுப்பாய் அவர்கள் சொன்னதை செய்தான் புகழேந்தி.. அவனுக்கு அவன் மீதிருக்கும் கோவமே அவனை இப்படியெல்லாம் நடந்துகொள்ள செய்தது.

தன் மீது எத்தனை நம்பிக்கயிருந்திருந்தால் இலக்கியாவின் குடும்பத்தினர் தேடிவந்து தனக்கு அவளை திருமணம் செய்துகொடுத்திருப்பர். ஆனால் தான் அவளை நடத்திய விதம் எப்படி என்று எண்ணியவனுக்க ச்சே என்றிருந்தது..

இப்படி தன் சிந்தையில் உழன்றபடி குளித்து முடித்து வர, அடுத்து அவனுக்கு உணவு ரெடியாய் இருந்தது.. ‘என்னங்கடா..’ என்று புகழ் பார்க்க,

“முதல்ல சாப்பிடு…” என்று சாப்பிட வைத்து, “சரி கிளம்பி ஆபிஸ் போ..” என,

“டேய்…” என்று புகழேந்தி பல்லை கடித்தான்..

“பின்ன இப்படியே வீட்ல இருந்திட்டு என்ன கிழிக்க போற நீ.. பேச வேண்டிய நேரத்துல அமைதியா இருக்கிறது.. அப்புறம் ஐயோ குயோனு புலம்பவேண்டியது.. சரி எல்லார் முன்னாடியும் தான் பேச முடியலை.. இலக்கியா கிட்ட தனியா பேசி அவங்களை சமாதானம் செஞ்சிருக்கலாமேடா.. அதையும் விட்டு..” என்று சந்தீப் கடிய, புகழேந்தி முகம் வாடினான்.

“டேய் விடு.. நீ கிளம்பு.. யோசிப்போம்..” என்று ஜார்ஜ் சொல்ல, அடுத்து பேசி ஒருவழியாய் மூவரும் கிளம்ப நேரமானது.

புகழேந்திக்கு மனத்தில் ஓடியது எல்லாம் இதுதான்.. என்ன செய்தால் இலக்கியா திரும்ப வருவாள். அதற்காக நிச்சயமாய் சுஸ்மியை ஒதுக்க முடியாது. என்ன என்ன என்று யோசிக்க, அவன் புத்தியில் சட்டென்று ஒரு மின்னல்.. சுரேந்தர்.. அவனை எப்படி மறந்தோம் என்று தோன்றியது..

ஆம் இது அவர்களுக்காக ஒருப்பக்கம் என்றாலும் மற்றொரு பக்கம் சுஸ்மி.. அவள் வாழ்வும் சரியாகும் இல்லையா??நிதானமாய் சில விஷயங்கள் சிந்தித்து பார்க்க, அவனுக்கும் எதோ புரிவது போல் இருந்தது.. சுஸ்மிதாவின் இயல்பு அவனுக்கு தெரிந்த ஒன்றே.. இலக்கியாவும் நிறைய சொல்லியிருந்தாள்..

இப்படியே ஒவ்வொன்றாய் யோசித்து, அடுத்து என்ன செய்தல் வேண்டும் என்றும் முடிவெடுத்து, இதற்கு நடுவே அலுவலையும் முடித்து வீடு வர இரவு ஆகிவிட, மேகலா அழைத்தாள்.

“சொல்லு மேகி…” என, அடுத்து எல்லாமே மேகலா தான் பேசினாள்.

சுஸ்மியோடு அவள் பேசியது, அதற்கு சுஸ்மியின் பதில் என்று எல்லாமே அவள் தான் பேசினாள்.. புகழேந்தியும் ஓரளவு இப்படிதான் இருக்க வேண்டும் என்று யூகித்திருந்தான். ஆக மேகலா சொன்னது எதுவும் அவனுக்கு புதிதாய் இல்லை..

“நானும் இதான் மேகி நினைச்சேன்…” என,

“ஹ்ம்ம் ஆனா சுஸ்மிக்கிட்ட இதெல்லாம் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத புகழ்…” என,

“ஹேய்.. இதெல்லாம் சொல்லனுமா.. நான் பார்த்துக்கிறேன்…” என்றவன், அடுத்து கிளம்பி நேரே சுஸ்மிதா வீட்டிற்கு சென்றான்.

“வாப்பா புகழ்…”

“ம்மா.. சுஸ்மி எங்க???”

“அதையேன் கேட்கிற… சாயங்காலம் காப்பி குடிச்சிட்டு அவ ரூமுக்கு போனா.. வெளிய வரவேயில்லை.. என்னனு பார்த்தா அவ கல்யாண அல்பம் எடுத்து வச்சு பார்த்திட்டு இருக்கா…”

“ஓ.. சரிம்மா.. அப்போ நான் அப்புறமா வரேன்…” என்று புகழேந்தி நகர, அவன் சத்தம் கேட்டு சுஸ்மிதா அங்கே வேகமாய் வந்தாள்.

“ஹேய்.. மெல்ல பார்த்து சுஸ்மி..” என,

“புகழ்.. நா.. நான்…” என்று பேச முடியாமல் திக்க,

“ம்மா.. ரெண்டு பேருக்கும் குடிக்க எதாவது கொடுங்க…” என்று புகழேந்தி சுஸ்மியின் அம்மாவிடம் கேட்க, “இதோப்பா…” என்று அவர் உள்ளே போக, சுஸ்மிதாவின்  கண்ணீர் நீர் வழிந்தது..

“ஷ்.. என்ன சுஸ்மி… நேத்து உன்கிட்ட சரியா பேசமுடியலை அதான் வந்தேன்…”

“புகழ்.. நான்.. லக்கி.. சொல்ல வேணாம்னு தான் சொன்னா.. பட் நான் தான்..” என்று சுஸ்மி சொல்லும் போதே,

“சுஸ்மி நான் வந்தது என்னை லக்கி பத்தியோ இல்லை எங்க லைப் பத்தியோ பேச இல்லை.. அதை எப்படி சரி செய்யனும்னு எனக்கு தெரியும்.. நான் வந்தது உன்னை பத்தி உன் லைப் பத்தி பேச..” என,

“புகழ்…!!!” என்று அதிர்ந்து பார்த்தாள் சுஸ்மிதா..

“எஸ்.. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருக்க போற..??” என்று கேட்க,

“நல்லா கேளு புகழ்.. நீயாவது கேளுப்பா.. நாங்களும் எவ்வளவோ பேசிட்டோம்.. எதுக்குமே பதிலே இல்லை.. என்னதான் மனசில நினைச்சு இருக்காளோ தெரியலை…” என்று தன்னுள்ளது ஆதங்கத்தை கொட்டியபடி வந்து இருவருக்கும் பதாம் பால் கொடுத்தார் சுஸ்மியின் அம்மா..

சுஸ்மி பதில் பேசாமல் அமைதியாய் இருக்க, “என் முன்னாடி எதுவும் சொல்ல மாட்ட.. நான் மாடிக்கு போறேன் புகழ்.. நீ பேசு..” என்றுவிட்டு அவர் நகர,

‘அவங்க கஷ்டம் புரியுதா..??’ என்பது போல் பார்த்தான் புகழேந்தி..

சுஸ்மிதா வெகு நேரம் கோர்த்திருந்த தனது கைகளையே பார்த்து அமர்ந்திருந்தாள். புகழேந்தி உன் வாழ்வை பற்றி பேச வந்திருக்கிறேன் என்று சொல்லியதுமே மனதில் ஓர் அதிர்வு. இத்தனை நாள் இல்லாமல் இப்போதென்ன என்ற கேள்வியும் உடனே வந்தது. ஆனால் கேட்க முடியவில்லை.

“பதில் பேசு சுஸ்மி.. இன்னும் எத்தனை நாள் இப்படியே இருப்ப..?? லக்கி இல்லாத இந்த ரெண்டு நாள்.. ஹப்பா எனக்கு அவ்வளோ நரகமா இருக்கு.. அவகிட்ட பேசாத ஒவ்வொரு நிமிசமும் எனக்கு மூச்சு முட்டுது..

ஆனா நீ எப்படி இப்படி கேசுவலா இருக்க?? சுரேந்தர்.. உன்னை அவ்வளோ விரும்புறார்.. நீயேன் இதை புரிஞ்சுக்கலை… உனக்கு இந்த பீலிங்க்ஸ் எல்லாம் தோணலையா சுஸ்மி.. இதானே நேச்சர்.. நீ இங்க வந்து ஒரு எட்டு மாசம் இருக்குமா?? ஒருநாள் கூட நீ சுரேந்தர் கிட்ட பேசணும் தோணலையா?? அவரை மிஸ் பண்ணலையா???” என,

சுஸ்மிதா முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி அழத் தொடங்கிவிட்டாள். புகழேந்தி அவளை தடுக்கவே இல்லை.. அழட்டும்.. மனதில் இருப்பது எல்லாம் குறையட்டும். அழுது முடித்து அவளே பேசட்டும் என்றிருக்க, சுஸ்மிதா அழுகையினூடே பேசத் தொடங்கினாள்.

“நான்.. நான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன் புகழ்.. எப்பவுமே எனக்குதான் எல்லாரும் இம்பார்டன்ஸ் கொடுக்கணும்னு நினைச்சு.. ஆரம்பத்துல இருந்து நான் தான் எல்லாத்தையும் தப்பா எஸ்டிமேட் பண்ணிட்டேன்..” என, புகழேந்தி அமைதியாய் அவளை பார்த்தான்.

முகத்தையும், கண்களையும் துடைத்தவள், “ஆமாம் புகழ்.. அவர் என்மேல அன்பாத்தான் இருந்தார்.. நான் தான் புரிஞ்சுக்கலை..எப்பவுமே என்னை மட்டும் கேர் பண்ணனும், என்னை மட்டுமே கான்சன்ரேட் பண்ணனும்னு ரொம்ப பண்ணிட்டேன்…” என்று வருந்தி சொல்ல,

“முதல்ல இதெல்லாம் நீ அவர்கிட்ட சொன்னியா???” என்றான் புகழேந்தி..

“ம்ம்ஹும்.. சொல்லவே இல்லை.. நான் என்ன நினைக்கிறன்.. எனக்கு என்ன வேணும் எதுவுமே சொல்லலை.. இங்க நீங்க, வீட்ல எல்லாருமே என்னை பார்த்து பார்த்து கேர் பண்ணுவீங்க, எல்லாம் செய்வீங்களா.. போன இடத்திலையும் அதையே எக்ஸ்பெக்ட் பண்ணிட்டேன் போல. ஆனா எனக்கெப்படி அவங்க எல்லாம் புதுசோ, அதுபோல தானே அவங்களுக்கும். அண்டர்ஸ்டாண்டிங் ஆக நாள் ஆகுமே.. அந்த டைமிங் நான் யாருக்குமே கொடுக்கலை புகழ்.. யோசிக்காம கிளம்பி வந்துட்டேன்..

இங்க.. ம்ம்க் என்ன சொல்ல, இங்க வந்தப்புறமும் ஏன், நேத்து வர கூட எனக்கு நான் பண்ணது சரின்னு தான் தோணிச்சு.. ஆனா நீ வீட்ல டல்லா இருந்தியா.. எனக்கு மனசே கேட்கலை.. அப்போதான் தோணிச்சு நான் கிளம்பி வந்தப்புறம் சுரேந்தர் எப்படி பீல் பன்னிருப்பார்னு…” என,

புகழேந்தி இதழில் லேசாய் ஒரு புன்னகை. எங்கே இவள் மனதை மாற்ற கொஞ்சம் சிரமப்படவேண்டுமோ என்று எண்ணியே வந்தான். ஆனால் அவள் நிறைய மாறியிருப்பது இப்போது புரிந்தது..

மாற்றங்கள் எங்கேயும் சொல்லிக்கொண்டு வருவதில்லையே..

“இங்க வந்தப்புறம் எனக்கு எந்த கவலையும் இல்லன்னு நானே நினச்சிட்டு எனக்கு தோணின நார்மல் பீலிங்க்ஸ கூட நானே ஒண்ணுமில்லன்னு முடிவுபண்ணி, உன்னோட ஜார்ஜோட மேரேஜ் எல்லாம் பார்க்கும் போது, நம்ம மட்டும் ஏன் இப்ப்டியில்லைன்னு தோணும். ஆனா அப்போவும் கூட எனக்கு என் லைப்ல கான்சன்ரேட் செய்யனும்னு இல்லாம, உங்க எல்லார் லைப்லையும் நான் தான் இம்பார்டன்ட்னு காட்ட லூசு மாதிரி பண்ணிட்டேன் எல்லாம்..” என்றாள் நிஜமாகவே வருந்தி..

“ம்ம்ச் நீ லூசு தான்.. எங்களுக்கு எப்போவோ அது தெரியும்…” என்று புகழேந்தி சிரிக்க,

“உனக்கு என்மேல கோவமே வரலியா புகழ்..” என்றாள் கண்கள் விரித்து..

“ச்சீ லூசு.. நீ என் பிரண்ட்.. உன்மேல எனக்கெப்படி கோவம் வரும்.. ஒருத்தரை முழுசா புரிஞ்சுக்கிட்டா போதும் எல்லாமே சரியாகும்.. இப்போ லக்கி கிளம்பி போனா, அதுக்காக என்மேல அன்பில்லைன்னு ஆகிடுமா.. அதுபோலதான் எல்லாமே.. மனசுவிட்டு பேசினா எல்லாமே சரியாகிடும்..”

“ல.. லக்கி உன்கிட்ட பேசினாளா..??”

“ம்ம்ஹும்..”

“நா.. நான் பேசட்டுமா??”

“இப்போவேணாம்.. இங்க வரவும் பேசு…”

“எப்போ வருவா…??”

“நான் போய் கூப்பிட்டா வருவா..”

“எப்போ போற..??”

“லீவ் இல்லை.. வீக்கென்ட் போகணும்..”என்றவன், “நீ சுரேந்தர் கிட்ட பேசு..” என,

“ம்ம்..” என்று முகத்தை இன்னும் தூக்கியவள், “என்ன பேச, தயக்கமா இருக்கு..??” என்றாள்.

“இது உன் லைப் சுஸ்மி.. நம்ம பண்றது எல்லாம் சரின்னு நினைச்சிட்டே லைப்ல நிறையா முட்டாள்த்தனம் பண்ணிடுறோம்.. ஆனா நேரம் வரும்போது கூட அதை  செய்யலைனா நமக்கு ஆறறிவு இருந்தே வேஸ்ட் சுஸ்மி.. யோசி இது உன் லைப்.. நீ தான் கிளம்பி வந்த சோ நீதான் பேசணும்…” என்றவன், அவள் யோசிக்கட்டும் என்றுவிட்டு,

“ம்மா நான் கிளம்புறேன்..” என்று மாடியை நோக்கி சத்தமாய் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

புகழேந்திக்கு மனம் இப்போது நிஜமாகவே லேசாய் இருந்தது.. இதெல்லாம் எப்போதோ செய்திருக்கவேண்டும். சில சூழ்நிலையை உணர்ந்து பார்த்தால் தானே தெரியும். அதுபோல தான் இதுவும்..

வார இறுதியில் செங்கல்பட்டு போகவேண்டும் என்று இருக்க, அதற்கு இடையில் நிறை நல்ல விஷயங்கள் நடந்தேறி.

சுஸ்மிதா சுரேந்தருக்கு அழைத்து பேச, அவனோ மறுநாளே வந்துவிட்டான் தன் வீட்டினரை அழைத்து. இரண்டு வீட்டினரும் பேச, அடுத்து சுஸ்மி மனதார அனைவரிடமும் மன்னிப்புக்கேட்டாள்.

புகழேந்தி மாலை வீடு வந்திருக்க, சுரேந்தரும், சுஸ்மியும் அங்கே வந்தனர்.

“ஹே.. செம பாஸ்ட்.. வாங்க வாங்க…” என்று இருவரையும் வரவேற்க,

“பாஸ் நான் உங்களுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும்.. நீங்கதான் சொன்னீங்களாமே..” என்று சுரேந்தர் சொல்ல,

“அட இதென்ன தேங்க்ஸ் எல்லாம் சொல்லிக்கிட்டு… இதெல்லாம் எப்போவோ செஞ்சிருக்கணும்.. ஆனா காய்ச்சலும் தலைவலியும் வந்தா தானே புரியுது..” என்று புகழ் சொல்ல,

“ஓய்.. அப்போ நான் உங்களுக்கு தலைவலியா…” என்று சுஸ்மி இருவரையும் முறைக்க, மூவருமே சிரித்துக்கொண்டனர் அடுத்து.

பேச்சு அப்படியே போக, “சோ.. எப்போ எங்க சுஸ்மிய கடத்திட்டு போக போறீங்..” என்று புகழ் கேட்க,

“இப்போ என்ன அவசரம் பாஸ்.. கொஞ்ச நாள் நானும் மாமியார் வீட்டு விருந்தெல்லாம் அனுபவிக்கிறேனே..” என்ற சுரேந்தர் “வீக்கென்ட் போகணும்..” என்றான்..

அடுத்தடுத்த நாட்களும் வேகமாய் ஓட, வாரவிடுமுறையில் புகழேந்தியும் செங்கல்பட்டு வந்துவிட்டான்..

“ஹப்பா இவ்வளோ நடந்திருக்கா.. ஆனா ஏன் யாருமே என்கிட்டே இதெல்லாம் சொல்லலை.. நீங்க, சுஸ்மி தவற எல்லாருமே என்கிட்டே பேசினாங்க.. ஏன் சொல்லலை…” என்று இலக்கியா படபடக்க,

“நான் தான் சொல்லக்கூடாது சொன்னேன்…” என்றான் புகழேந்தி..

“ஏன் ஏன்…??”

“உன்னை வந்து கூட்டிட்டு போய் அங்க வச்சு சொல்லனும்னு நினைச்சேன் லக்கி.. நீ எனக்காக என் கூட வரணும்னு நினைச்சேன்.. ஆனா எனக்கு தோணின அதே எண்ணம் தான் இப்போ உனக்கும்னு நினைக்கும் போது சந்தோசமா இருக்கு..” என,

“ஹ்ம்ம்.. நான் சுஸ்மிய வீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொன்னது எல்லாருக்கும் தெரியுமா???” என்றாள் முகத்தை தூக்கி..

“அட அறிவு.. இதை போய் நான் சொல்வேனா.. உனக்கும் எனக்கும் சண்டைனு மட்டும் தான் தெரியும்.. உள்ள நடந்தது எதுவும் யாருக்கும் தெரியாது.. தெரியவும் கூடாது.. அப்புறம் நமக்குன்னு பெர்சனல் என்ன இருக்கு…” என,

“ஆ…!!!!! இப்போதான் Mr. ரூல்ஸ் மாதிரி பேசுறீங்க..” என்று சிரித்தாள் இலக்கியா..

“ஹ்ம்ம் Mrs. ரூல்ஸ் இப்போவாது என்கூட வருவீங்களா…??”

“போலாமே.. இப்போ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்திட்டு ஈவ்னிங் கிளம்பலாம்…” என, அடுத்து நேரம் போனதே தெரியவில்லை.. மாலை இருவரும் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்ப,

“என்ன லக்கி அடுத்த வாரம் தான் போவன்னு சொன்ன இப்போவே கிளம்பிட்ட..” என்று சந்தோசமாய் கேட்ட சாந்தியிடம்,

“அடுத்த வாரமும் வந்து போவோம்…” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் இலக்கியா..

இருவரும் வீடு வந்து சேரவே இரவாகிவிட்டது. இலக்கியா வீட்டினுள் வரும்போதே, எதிரே சுஸ்மியின் வீட்டினை பார்த்தபடி வந்தாள்,

“அங்க என்ன லக்கி  பார்க்கிற…??”

“சும்மாதான்…” என்றபடி இருவரும் உள்ளே வந்துவிட, வீட்டிற்குள் வந்ததுமே புகழேந்தி இலக்கியாவை இறுக அணைத்துக்கொண்டான்..

“வந்ததுமே என்னதிது..” என்று இலக்கியா சிணுங்க,

“ஸ்.. எப்போ பார் இவங்க இப்படிதான் ஹால்ல நின்னு தான் ஷோ காட்டுவாங்க…” என்று சொல்லியபடி வந்தாள் சுஸ்மிதா.. அவளுடன் சுரேந்தரும்..

அவள் குரல் கேட்டதுமே இருவரும் சட்டென்று விலக, இலக்கியா வந்தவர்களை கண்டு தயக்கமாய் புன்னகைத்தாள். அதிலும் சுஸ்மிதா அவளிடம் என்ன பேச என்று கூட தெரியவில்லை..

“சாரி லக்கி…” என்று மனதார அவள் கரத்தினை பிடித்து சுஸ்மி கேட்ட பொழுது, இலக்கியாவிற்கு அவள் மீது மனத்தில் இருந்த கோவமெல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை..

“நாங்க கிளம்பிட்டோம்.. அதான் சொல்லிட்டு போகலாம்னு வந்தோம்…” என்று சுரேந்தர் சொல்ல,

“இந்த டைம்லயா..??” என்று புகழ், லக்கி இருவரும் கேட்க,

“ஜஸ்ட் ஒன் ஹவர் தானே… நாளைக்கு காலைல பிளைட் சிம்லா போறோம்… சோ இப்போ வீட்டுக்கு…”என,

“ஓ.. செக்கன்ட்  ஹனிமூனா…” என்று புகழேந்தி சிரிக்க,

“எஸ் எஸ்…” என்று சுரேந்தர் சொல்ல,

“நான் எங்க ஏரியாக்கு போறேன் லக்கி…” என்று சுஸ்மிசொல்ல, இலக்கியா சந்தோசமாய் சரியென்று சொல்லி தலையாட்டினாள்.

அடுத்து கொஞ்ச நேரத்தில் அவர்களும் கிளம்பிட, சிரித்தபடியே வாசல்வரை வந்து கையாட்டிய புகழேந்தியும், இலக்கியாவும் நிறைந்த மனதுடன் மீண்டும் தங்கள் வீட்டினுள் நுழைந்தனர்.

சுஸ்மிதாவை வீட்டினுள்ளே வரக்கூடாது என்று சொல்லியிருந்தால் கூட இலக்கியாவின் மனம் இத்தனை அமைதியை உணர்ந்திருக்குமோ தெரியவில்லை.. ஆனால் இப்போது அவள் சிரித்தபடி மகிழ்வாய் விடைபெறும் போது ஒரு நிம்மதியையும், எந்நிலையிலும் நான் என் கணவனை கீழிறக்கிடவில்லை என்ற பெருமிதமும் சேர்ந்தே அவள் உள்ளதை நிரப்பியது..

வீட்டினுள் வந்ததும் இலக்கியா புகழேந்தியை இறுக கட்டிக்கொள்ள, “வந்ததுமே என்னதிது..” என்று அவனோ அவளை போலவே செய்து காட்ட, அவளோ பூவை போல் மலர்ந்து சிரிக்க, அவன் வாழ்வில் தேன் போல் இனிமையை கலந்திட செய்த இலக்கியாவை புகழேந்தியும் இறுகணைத்துக்கொண்டான்.. 

 

 

 

 

 

Advertisement