Advertisement

பூந்தேன் – 9

புகழேந்தி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.. இலக்கியா அவனருகே அமர்ந்து, உறங்கும் அவனையே தான் பார்த்திருந்தாள். முதல்நாள் மாலை தான் புகழேந்தி செங்கல்பட்டு வந்திருந்தான்.. இரவும் வெகு நேரம் உறங்கவில்லை.

அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டே இருந்தான் என்பதை இலக்கியாவும் கவனித்தாள். ஆனால் என்னவென்று எதுவும் கேட்கவில்லை. அவளுக்கு தெரியாதா எதை போட்டு மனதில் உருட்டி புகழேந்தி இப்படி நடை போடுகிறான் என்று.

உறங்கும் போதும் கூட புருவங்கள் சுருக்கி, என்னவோ வேண்டாத சிந்தையோடே உறங்கும் அவனை காண பாவமாய் இருந்தது. அவனும் தான் என்ன செய்வான்?? இந்த கேள்வி நேற்று இரவில் இருந்தே அவளுக்கும் மனதில்.

இங்கு வந்த ஒருவாரமாய் இதே சிந்தனை தான். அங்கிருக்கும் போது பெரிதாய் தெரிந்த எல்லாம், இங்கே வந்து தனியே அமர்ந்து சிந்திக்கையில் புகழேந்தியின் தர்மசங்கட நிலை நன்றாகவே புரியும்.

நமக்கு தெரியாத ஒருவரையே வீட்டிற்கு வரவேண்டாம் என்று நம்மால் சொல்ல முடியாது. அப்படியிருக்கையில், சிறுவயது முதல், கூட வளர்ந்து பழகிய ஒருத்தியை எப்படி முகத்துக்கு நேரே வீட்டினுள் வராதே என்று சொல்லிட முடியும். அது மனித தன்மையா?? அப்படி ஒரு சூழல் ஒருவருக்கு வருமாயின் அது தர்ம சங்கடம் அல்லவா?? அப்படியான ஒன்றை தன் கணவனை தான் செய்யவைப்பதா என்ற எண்ணம் இலக்கியாவினுள்.

மனித மனம் ஒரு குரங்கு என்பது சரிதான். சில நேரம் பெரிதாய் தெரியும் எல்லாமே கொஞ்ச நேரத்தில் ஒன்றுமேயில்லாத ஒன்றாய் தெரியும்.. ஒன்றுமே இல்லாதது எல்லாம் பூதாகரமாய் தோன்றும்.

என்ன செய்யலாம் என்று இலக்கியா யோசிக்க, மனதில் வேறு ஒரு சிந்தனை.. இது நடக்குமா நடக்காதா என்றெல்லாம் தெரியாது. ஆனால் நடந்தால் அனைவருக்குமே நன்று. பழமும் கைக்கு வரவேண்டும், கல்லும் தலையில் விழ கூடாது. ஆக சற்றே சிந்திந்து செயல்படவேண்டும்..மனதில் இதே எண்ணம் ஓட, சரி புகழேந்தி எழுந்த பின் பேசிக்கொள்வோம் என்று வெளியே வந்தாள்.

“மாப்பிள்ளை எழுந்துக்கலையா..???”

“இல்லம்மா.. நல்லா தூங்குறார்.. நானும் எழுப்பலை…”

“என்ன பிரச்சனைன்னும் சொல்ல மாட்டேங்கிற.. அந்த தம்பியும் வருத்ததுல இருக்க மாதிரி இருக்கு.. நீயாவது கொஞ்சம் விட்டுக்குடுத்து போகலாமே லக்கி..” என்று சாந்தி அறிவுரை சொல்ல,

“ம்மா..எதுவுமே சொல்றது ஈசி.. இருந்து பார்க்கிறது கஷ்டம்.. என்னை என் போங்கில விடும்மா.. கண்டிப்பா நான் அடுத்த வாரம் போல கிளம்பிடுவேன்…” என்று இலக்கியா அப்போதும் பொறுமையாகவே சொன்னாள்.

இலக்கியா இங்கே வந்துவிட்டாளே தவிர, என்ன பிரச்சனை என்றெல்லாம் சொல்லவே இல்லை. அது வேறு மாதிரி திரும்பும் என்று அவளுக்கு தெரியாதா என்ன?? பின் தேவையில்லாத நிறைய பிரச்சனைகளை அது வளர்த்துவிடும் அல்லவா. ஆக எங்களுக்குள் சிறு கருத்துவேறுபாடு அவரே அழைக்க வருவார் என்று சொல்லிவிட்டாள்.

அதை மீறி யார் என்ன கேட்டாலும் ‘ஏன் நான் இங்க வர கூடாதா..??’ என்ற கேள்வியே கேட்பவரின் வாயை அடைத்துவிடும்.

இடைப்பட்ட இந்த ஒருவாரத்தில் புகழேந்தி என்ன அழைத்தும் அவள் பேசவில்லை. நேரில் வரட்டும் என்று இருந்தாள். ஆனால் மேரி, ஜார்ஜ், மேகலா சந்தீப் என அனைவருமே பேசினர். சுஸ்மி பேசவேண்டும் என்றும் நினைக்கவில்லை, இவளும் அதை எதிர்பார்க்கவில்லை.

புகழேந்தி நேற்று வந்ததுமே அழைத்தான். அப்போதும் அவள் பிடிவாதம் பிடித்தது உண்மை தான். ஆனால் இரவெல்லாம் அவன் தூங்காமல் நடந்ததும், அதன்பின் வந்து உறங்கும் போதும் தூக்கத்தினூடே ‘சாரி லக்கி’ என்று உளரியதும் எல்லாம் இவள் கவனித்துக்கொண்டு தான் இருந்தாள். 

“லக்கி உன்னைத்தான் பேசாம இருந்தா எப்படி..??”

“ம்ம் என்னம்மா…??”

“இங்க பார்.. எந்த புருஷன் பொண்டாடிக்கு தான் சண்டை வராம இருக்கு.. வரும்.. வரணும்.. ஆனா ஒன்னு சொல்லவா.. நம்மளை போல ஆம்பிளைங்களுக்கு சில விஷயங்கள் கையாள தெரியாது.. ஆனா அதை  ஒத்துக்க மாட்டாங்க.. வெளிய கோவமா கத்திட்டு போயிடுவாங்க.. நம்மதான் அதை புரிஞ்சு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போகணும்…” என்ற சாந்தி,

“மாப்பிளை நல்ல குணம்.. அதை மட்டும் மனசில வச்சு யோசி…” என்று எழுந்து போய் விட்டார்..

இனி யோசிக்க என்ன இருக்கிறது.. போதும் போதும் என்றளவு யோசித்துவிட்டாள். முடிவுகள் எடுத்தபின்னே யோசித்தல் என்பது கூட வீண் வேலை தான்..

புகழேந்தி எழுந்ததற்கான அரவம் கேட்டு உள்ளே போனாள், அவனோ அப்போது தான் குளித்து வந்திருந்தான்..

“சாப்பிட வர்றீங்களா..”

“ம்ம்..” என்று மட்டும் சொன்னவன் அவளை பார்க்கவில்லை.

“இப்போ உங்களுக்கு என்ன கோவம்…” என்று அவனுக்கும் கண்ணாடிக்கும் நடுவில் வந்து நிற்க, அவனோ அதிசயமாய் பார்த்தான்.

நேற்றெல்லாம் அப்படி காய்ந்தாள்.. இப்போதென்னவென்றால் இப்படி செய்கிறாள். ஒன்றும் புரியவில்லை.. அவளையே பார்க்க,

“நான் உங்களை ரொம்ப டென்சன் பன்றேன்ல..” என்றபடி அவன் சட்டை பொத்தானை திருக, 

“அப்போ என்கூட வா..” என்றான் அவள் கைகளை பிடித்தபடி..

“ம்ம் வர்றேன்.. ஆனா நீங்க எனக்காக ஒன்னு செய்யணும்…” என,

“ம்ம்ச் ப்ளீஸ் லக்கி.. என்னால சுஸ்மிகிட்ட வீட்டுக்கு வராதன்னு எல்லாம் சொல்லவே முடியாது.. என்னை தர்ம சங்கடத்துல நிறுத்தாத..” என்றான் முகத்தில் வேதனையை தேக்கி.

“நான் இன்னும் சொல்ல வந்ததை சொல்லவே இல்ல.. அதுக்குள்ள நீங்களா இப்படி பேசினா எப்படி..??”

“என்ன சொல்ல போற லக்கி.. நிறைய சொல்லிட்ட.. சுஸ்மி பண்ணது தப்போ சரியோ, ஆனா நான் பண்ணது ரொம்பவே தப்பு.. கோவத்துலனாலும் அப்படி உன்னை போன்னு சொல்லிருக்க கூடாது.. ஆனா அது எதுவுமே நான் மனசார சொல்லலை லக்கி.. அப்போ அவ்வளோ டென்சன்.. ஐம் ரியலி ரியலி சாரி…” என்று தன்னை விளக்க ஆரம்பிக்க, அவளோ போதும் என்று கை காட்டினாள்.

புகழ் என்னவென்று பார்க்க, “பார்ஸ்ட் டைம் நீங்க உங்களுக்காக சாரி கேட்டிருக்கீங்க..” என்று சொல்லும் போதே இலக்கியாவின் கண்களில் கண்ணீரும், இதழ்களில் சிரிப்பும் ஒருசேர வெளிப்பட்டது..

“புரியல…” என்று புகழேந்தி தலையை உலுக்க,

“என்ன புரியல…??” என்றாள்.

“உன்னைத்தான்.. நேத்து அப்படி பேசின.. இப்போ இப்படி பேசுற.. கண்ணுல தண்ணி, உதட்டில சிரிப்பு.. இதெல்லாம் என்னை மாதிரி சாதாரண ஆளுக்கு பைத்தியம் தான் பிடிக்கவைக்கும்..”

“ஹ்ம்ம் அப்படியா சரி.. ரொம்ப முத்தி போறதுக்கு முன்னாடி சொல்லிடுறேன்.. நானுமே சாரி புகழ்.. உங்கள ஒரு க்ரிட்டிக்கள் சிச்சுவேஷன்ல நிறுத்திட்டேன். என் பாய்ன்ட் ஆப் வியு மட்டும் பார்த்து உங்களை ரொம்ப பேசிட்டேன்..

சுஸ்மி அப்படி பண்ண நேரத்தில, உங்களுக்கும் தானே கஷ்டமா இருந்திருக்கும். எனக்கு இருந்த அதே பீலிங்க்ஸ் தானே உங்களுக்கும் இருந்திருக்கும். பிரண்ட்ஸ் முன்னாடி யாருக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம, எனக்கும் பேச முடியாம, சுஸ்மிக்கும் சொல்ல முடியாம, உங்களுக்கு அந்த நேரத்துல எப்படி இருந்திருக்கும்.. இதை நான் புரிஞ்சுக்கலை புகழ்.. ரொம்ப பேசிட்டேன்..” என்று வருந்த,

அவள் இத்தனை தூரம் தன்னை புரிந்துகொண்டதே புகழேந்திக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. எங்கே தான் சொன்னதிலேயே நின்று பிடிவாதம் பிடிப்பாளோ மனதினுள்ள கலக்கமாகவே இருந்தான். ஆனால் இப்போது அதில்லை.

“ம்ம் சரி நீ என்ன சொல்ல வந்த லக்கி..” என,

“அதுவா.. சுஸ்மி அங்க இருந்தா தானே, இங்க வந்து போக இருப்பாங்க.. நான் ஒன்னும் அவங்களை இப்போ வரவேணாம்னு சொல்ல போறதில்லை.. வரட்டும் போகட்டும்.. ஆனா எதுமே ஒரு அளவில இருந்தா தானே நல்லது..” என்றவள், அவன் முகம் பார்க்க,

‘இப்போ என்ன புது கதையா சொல்றா..’ என்று அவனும் அவளை தான் பார்த்தான்.

“சொல்லு லக்கி..” என,

“நீங்க பேசாம சுரேந்தர்கிட்ட பேசி பாருங்க.. அவங்களும் எத்தனை நாளைக்கு தான் இப்படி ஆளுக்கொரு பக்கமா இருப்பாங்.. அவங்க லைப் அவங்க வீடுன்னு இருந்திட்ட இப்படி அடுத்தவங்க லைப்ல வந்து தலையிடுறது இருக்காதுல..” என, புகழேந்தி அமைதியாய் இருந்தான்..

ஒன்றும் பதிலே சொல்லவில்லை.

“என்னங்க பதிலே சொல்லலை…” என,

“ம்ம் பசிக்குது.. சாப்பிடலாமா..” என்றான்.

“ஆமால.. சரி சரி.. சாப்பிட்டு பேசலாம்..” என்றவள், அவனை அழைத்துக்கொண்டு போய், அவனுக்கும் பரிமாறி, தானும் உண்டு எழ, சாந்தி இவர்களை கவனித்து கொண்டு தான் இருந்தார்.

புகழேந்தியின் முகம் லேசாய் தெளிந்திருந்தது போல் இருந்தது. இலக்கியாவின் முகமோ சற்றே அமைதியாய் இருப்பது போல் இருக்க, ‘கடவுளே.. இவங்களை நல்லா வாழ வைப்பா…’ என்று வேண்டுதலோடு நகர்ந்தார்.

‘சாப்பிட்டு பேசலாம்..’ என்று இலக்கியா சொல்லிவிட்டாளே தவிர, அடுத்து இருவருக்குமே பேசிக்கொள்ள நேரம் கிடைக்கவில்லை. சுகுமாரும், குனசேகரும் புகழேந்தியோடு பேசியபடி இருக்க, சாந்தி இவளை தனக்கு உதவியாய் வந்து சமையல் செய் என்று அழைத்துக்கொண்டார்.

என்னதான் பேச்சிலும், வேலையிலும் கவனமாய் இருந்தாலும், மனதில் இதே எண்ணம் தான் ஓடிக்கொண்டு இருந்தது இருவருக்கும். ஒருவழியாய் மதிய உணவு முடிந்து, இருவருமே அறைக்கு வர, இலக்கியா கணவன் முகத்தை தான் பார்த்தாள்.

“லக்கி இப்படி வந்து உட்கார்..” என்றழைக்க,

“ம்ம் என்ன புகழ்..” என்றபடி அவளும் வந்து அமர்ந்தாள்.

“நீ என்ன நினைக்கிற லக்கி.. இந்த ஒருவாரம் நான் சும்மா இருந்தேன்னா..??” என்று புகழேந்தி கேட்க, அவளுக்கு சுத்தமாய் புரியவில்லை..

“என்ன பண்ணீங்க.. ஆபிஸ் போயி வந்திருப்பீங்க.. அப்புறம் உங்க பிரண்ட்ஸ் வந்திருப்பாங்க.. அரட்டை போட்டிருப்பீங்க..” என,  “லூசு.. நான் அதை சொல்லலை..” என்று அவள் தலையில் தட்ட,

“பின்ன…” என்றாள் முகத்தை லேசாய் சுருக்கி..

“நீ இப்போ சொன்ன ஐடியா எனக்கு எப்பவோ தோணிச்சு…” என்றவன், அவள் சென்றபின்னே, ஜார்ஜும் மேரியும் வந்து பேசி போனது சொல்ல, அடுத்து என்ன நடந்தது என்றும் சொன்னான்.

ஜார்ஜும், மேரியும் புகழேந்தியிடம் சாவி கொடுத்துவிட்டு, பேசிவிட்டு செல்ல, வீட்டிற்குள் வந்தவனுக்கோ, வெறும் வீடே காட்சியளிக்க, அவன் மனமோ ஓவென்று அலறியது.. முன்பு இருந்தது மாதிரி.. யாருமே இல்லாத வெறும் வீடு..

சோபாவில் பொத்தென்று அமர்ந்தவன், அப்படியே வெறித்து அமர்ந்திருக்க, வீட்டிலுள்ள பொருட்கள் எல்லாம் அவனையே முறைத்து ‘இப்படி உன்னைப்போல் எங்களையும் தனிமை படுத்திவிட்டாயே’ என்று திட்டுவது போல் இருந்தது..

புகழேந்தி வீட்டிலிருக்கும் நேரம், இலக்கியவிற்கு வாய் ஓயவே ஓயாது.. அவனோடு மட்டுமில்லை, வீட்டிலிருக்கும் அத்தனை பொருட்களோடும் பேசுவாள்.

பிரிட்ஜே திறக்கும் போதே ‘ ஹாய் பிரிட்ஜ் குட்டி…’ என்றபடி தான் திறப்பாள்.

டைனிங் டேபிள் லேசாய் இடித்துவிட்டலோ, ‘என்னை தைரியம் என்னையே இடிக்கிற..’ என்று அதனோடு மல்லுக்கு நிற்பாள்.. இப்படி நிறைய நிறைய எதாவது செய்வாள்..புகழேந்தி அப்படியே சாய்ந்து அமர்ந்திருந்தான். வீட்டில் இருக்கும் வெறுமை அவன் மனதிலும்.

இலக்கியா… அவள் மீது அவனுக்கு இருக்கும் அன்பை முழுதாய் வெளிப்படுத்தினான என்று கேட்டால் இப்போது நினைதுப்பார்த்தால் இல்லையென்றே தோன்றியது. ஆனால் இலக்கியா அப்படியில்லை.. சிறு சிறு விசயங்களிலும் அவன் மீது அவள் கொண்ட அன்பை வெளிப்படுத்துவாள்..

மாலை அவன் வீட்டினுள்ளே நுழையும் போதே, ‘Mr. ரூல்ஸ் வந்தாச்சு…’ என்றபடி வரும் இலக்கியா இப்போது இங்கில்லை நினைக்கையில் அவனுக்கு அவன் மீதே வெறுப்பாய் இருந்தது.

என்னதான் கோவமென்றாலும் இப்படி தான் பேசியிருக்கக் கூடாது என்று நினைக்க, இலக்கியாவிற்கு மீண்டும் அழைத்துப் பார்த்தான் பதிலே இல்லை. கொஞ்ச நேரம் விட்டு சாந்திக்கு அழைத்துப் பேசினான். அவரோ என்ன ஏதென்று எல்லாம் துருவாமல், எப்போதும் போலவே பேசிவிட்டு வைத்தார்.

நேரம் போய்க்கொண்டே இருந்தது. புகழேந்தி அமர்ந்த நிலையில் இருந்தவன் எழவே மனமில்லை.. விளக்குகள் எல்லாம் போடப்படாமல் இருக்க, இருட்டிலே அமர்ந்திருந்தான். 

“லக்கி லைட் கூட போடாம என்ன பண்ற.. புகழ் வண்டி நிக்கிது.. லைட் கூட போடலை..” என்று கேட்டபடி உள்ளே வந்தாள் சுஸ்மிதா.

இரண்டு நாட்களாய் அவளும் இங்கே வரவில்லை. அவளுக்கு இலக்கியா கிளம்பி போனது எதுவும் தெரியாது.

‘என்ன பதிலே இல்லை…’ என்று சுற்றும் முற்றும் பார்த்தவள், அவளே விளக்குளை போட, புகழேந்தி சோர்ந்து போய் கண்களை மூடி, முகத்தை சுருக்கி அமர்ந்திருந்ததே அவளுக்கு கண்ணில் பட்டது.

“புகழ்.. டேய் புகழ்.. ஏன் இப்படி இருக்க??” என்றபடி அவருகே சென்றபடி “லக்கி எங்க இருக்க..” என்று வீட்டினுள் குரல் கொடுத்தாள்.

அவள் அங்கே இருந்தால் தானே இவள் அழைத்ததும் வருவதற்கு..??

“புகழ்..???!!” என எழுப்ப, கண்களை திறக்கவே பிடிக்காதவன் போல் கண்கள் திறந்தவன்,

“என்ன சுஸ்மி…” என்றான் சுரத்தே இல்லாமல். அவன் இருக்கும் நிலையில் சுஸ்மிதாவோடு இயல்பாய் பேசும் நிலையில் எல்லாம் இல்லை. சண்டை என்னவோ அவனுக்கும் இலக்கியாவிற்கும் தான். ஆனால் காரணம் இதோ இவள் தானே..

ஆனாலும் உன்னால் தான் எனக்கும் என் மனைவிக்கும் சண்டை என்று கூற முடியுமா??

“என்னாச்சு புகழ்.. ஏன் இப்படிருக்க?? லக்கி எங்க??” என,

“அவ போயிட்டா…” என்றான் கண்களை இறுக மூடி, புகழேந்தியின் இந்த சோர்ந்த பாவமே சுஸ்மிதாவிற்கு என்னவோ செய்தது.. எப்போதும் இருக்கும் சிரிப்பு அவனிடம் இல்லை. இவளை கண்டதுமே பார்க்கும் ஒரு வாஞ்சையான பார்வை சுத்தமாய் இப்போதில்லை அவனிடம்.

“போ… போயிட்டாளா..?? என்..என்ன சொல்ற..??” என்றவள் இன்னமும் அவனை ஆராய்ச்சியாய் நோக்க,

“ம்ம்ச் செங்கல்பட் போயிருக்கா…” என்றவன் அடுத்து எதுவுமே பேசவில்லை.

“செங்கல்பட் போயிருக்காளா?? என்ன திடீர்னு.. அவ போயிட்டா நீ என்ன செய்வ?? இரு நானே போன் பண்ணி கேட்கிறேன்..” என்று அவள் கிளம்ப,

“ஐயோ.. சுஸ்மி.. கொஞ்சம் பேசாம இருக்கியா..?? ப்ளீஸ்.. என்னை கொஞ்சம் தனியா இருக்க விடு..” என்றவன் தலையில் இரு கைகளால் தாங்கி அமர்ந்துகொண்டான்.

இத்தனை ஆண்டுகள் பழக்கத்தில் முதல் முறை புகழேந்தி இப்படி தன்னுடைய நட்பில் ஒருவரை தவிர்ப்பது.. அவனும் மனிதன் தானே என்ன செய்வான்?? ‘எல்லாம் உன்னால் தான்..’ என்று கத்த வேண்டும் போல் இருந்தது. ஆனால் பழகிய பழக்கம் அப்படி செய்யவிட விடவில்லை..

சுஸ்மிதா அமைதியாய் அமர்ந்து அப்படியே அவனை பார்த்திருக்க, அவனோ அசையவே இல்லை.. அவள் எப்போது எழுந்து போனாள் என்பதெல்லாம் அவனுக்கு தெரியாது வெகு நேரம், அடுத்து சந்தீப் வந்து அவனை அழைக்கும் வரைக்கும் அப்படியே தான் இருந்தான்.

சுஸ்மிதா தன் வீட்டிற்கு சென்றவளோ, ஒருநிலையில் இல்லை.. மனம் என்னவோ அடித்துக்கொண்டது.. புகழேந்தி.. அவளது தோழன்.. அவனது இந்த சோர்ந்த தோற்றமும், பாவமும் அவளை என்னவோ செய்ய, மேகலாக்கு அழைத்தாள்..

“மேகி… மேகி.. இங்க புகழ்…” என்று சொல்லி முடிக்கவில்லை,

“போதும் நிறுத்து சுஸ்மி.. பண்ணது எல்லாம் போதாதுன்னு இப்போ என்ன பண்ணிட்டு வந்து போன் பண்ற..” என்று மேகலா ஒரு பிடி பிடித்தாள்.

“மேகி…!!!!!!!”

“என்ன சுஸ்மி.. இப்போதான் ஜார்ஜ் பேசினான்… எனக்கு எல்லாம் தெரியும்.. நீ ஏன்டி இப்படி ஆகிட்ட.. நல்லாதானே இருந்த..?? ஏன்டி உனக்கு புத்தி இப்படி போச்சு..??”

“மேகி… ப்ளீஸ் டி.. நான்…”

“ஸ்டாப் இட் சுஸ்மி.. சின்ன வயசுல இருந்து இப்படிதான்.. எல்லார் விஷயத்துலையும் நீ தலையிடுவ, ஆனா உன்னை மட்டும் யாரும் எதுவும் சொல்லிடக்கூடாது… சுரேந்தர் உன்னை எவ்வளோ விரும்பி கல்யாணம் பண்ணார்னு எங்க எல்லாருக்கும் தெரியும்.. ஆனா நீ அவர்கூடவே சரியா வாழல.. ஜார்ஜ் வீட்ல மேரிக்கும் ஜார்ஜ் அம்மாக்கும் சண்டை இழுத்துவிட்ட, இப்போ புகழுக்கும் லக்கிக்கும்.. சொல்லு மேகி.. உனக்கு என்ன தான் பிரச்சனை..??” என்று மேகலா போட்ட போட்டில் சுஸ்மிதா கதறி அழுதுவிட்டாள்..

“மேகி… மேகி….” என்று சொன்னவளுக்கு அடுத்து பேச்சே வரவில்லை வெகு நேரம் அழுதுகொண்டே தான் இருந்தாள். மேகலாவும் அழுது முடித்து என்னவாக இருந்தாலும் அவளே சொல்லட்டும் என்று பொறுமையாய் காத்திருந்தாள்.

ஒருவழியாய் தன்னையே அடக்கி, ஆசுவாசப்படுத்தி அழுகையை நிறுத்திய சுஸ்மி, “மேகி… நான் தான் டி தப்பு.. ஆனா எதையுமே நான் தெரிஞ்சு பண்ணலை.. வேணும்னே பண்ணலை… என்னை நானே அந்த இடத்தில கண்ட்ரோல் பண்ணிக்க முடியலை..

ஜார்ஜ் மேரேஜ், புகழ் மேரேஜ் எல்லாம் பார்க்கும் போது எனக்கு என் கல்யாணம் அதுக்கு அப்புறம் நடந்தது எல்லாம் தான் நியாபகம் வந்தது.. எஸ் நீ சொன்னது உண்மை தான்.. சுரேந்தர் என்னை அவ்வளோ லவ் பண்ணார்.. ஆனா எல்லாமே கொஞ்ச நாள் தான் டி..

கல்யாணமாகி ஒருமாசம் என்னை அவங்க வீட்ல எல்லாருமே அவ்வளோ தாங்கினாங்க.. ஆனா நாள் போக போக, என்னை யாரும் கண்டுக்கவே இல்ல தெரியுமா.. சுரேந்தர்..எப்போ பார் வேலை வேலைன்னு இருந்தார்.. நான் ஏதாவது கேட்டாலோ இல்லை பேசினாலோ, எரிஞ்சு எரிஞ்சு தான் விழுந்தார்.. ஒரு ஸ்டேஜ்ல என்னால அங்க இருக்கவே முடியலை.. அதான் வந்திட்டேன்..

ஆனா இங்க வந்து, உங்க எல்லார் கூடவும் இருக்கும் போது எனக்கு எதுவுமே தோணல.. ஆனா ஜார்ஜ் வீட்லையும் சரி, இங்க புகழ் வீட்லையும் சரி, மேரிக்கும் லக்கிக்கும் அவ்வளோ இம்பார்டன்ஸ் கொடுத்தாங்க.. எல்லாமே அங்க அவங்க தான்னு சொல்ற மாதிரி. எனக்கு அதெல்லாம் பார்க்கும் போது நமக்கு மட்டும் ஏன் இப்படி இல்லைன்னு தோணிச்சு… அப்படி எனக்கு தோணும் போதெல்லாம் தான் நான் என்னையும் மீறி எதையாவது செஞ்சிடுறேன்.. ஆனா இப் .. இப்போ புகழ் அப்படி இருக்கிறதை பார்த்து எனக்கே கஷ்டமா போச்சு மேகி…” என்று தன்னுள்ளத்தில் இருந்ததை எல்லாம் ஒன்றுவிடாமல் சுஸ்மிதா போட்டு உடைக்க,

எத்தனை முட்டாள்த் தனமாய் இவள் அனைவரையும் புரிந்திருக்கிறாள் என்று மேகலாவிற்கு தெரிந்தது..

யாருக்குமே இப்படிதான்.. திருமணமான புதிதில் இருப்பது போலவே அனைவரும் எப்போதுமே இருக்க முடியாது. வீட்டினரும் சரி, கணவனும் சரி.. வாழ்வு இயல்புக்கு மாற மாற, அவர்களும் மாறுவர்.. அதற்காக அனைவரும் பொய் என்று சொல்லிட முடியாது..

ஒவ்வொருவருக்கு வாழ்க்கை ஒவ்வொன்றை வைத்திருக்கும். அதில் நல்லதை மட்டுமே மனதில் கொண்டு வாழ்வது தான் புத்திசாலித்தனம். அதைவிட்டு எல்லாரும் மோசம் என்று தனியே வந்து, நிம்மதியாய் இருப்பவர்கள் மீதும் பொறாமை கொண்டு, அங்கேயும் பிரச்சனை செய்து இப்படியே போனால் நாளடைவில் பழகியவர்களே பகைவர்கள் ஆகிடுவர்.

இதை மேகலா நிதானமாய் சொல்லி புரியவைத்தாள் சுஸ்மிதாவிற்கு.

“நான் பண்ணது எல்லாம் தப்புதான் டி.. ஆ.. ஆனா.. லக்கி இப்படி போவான்னு தெரியாது… நா.. நான் வேணும்னா போய் லக்கிட்ட பேசவா…???”

“நீ பேசினது எல்லாம் போதும்.. இது அவங்க பிரச்சனை.. நீ உன் வாழ்கைய பாரு சுஸ்மி.. முதல் சுரேந்தர் கிட்ட மனசு விட்டு பேசு.. பூனை கண்ண மூடிட்ட உலகமே இருட்டுன்னு இருக்குமாம். அதுபோல இருக்காத… மறுபடியும் சொல்றேன்.. புகழ் லக்கி விசயத்துல நீ தலையிடாத..”

“ம்ம்.. ஆனா சுரேந்தர் கிட்ட என்ன பேச.. அவருக்குத்தான் என்னை பிடிக்கலையே…”

“அது நீ பேசி பார்த்தா தான் தெரியும்..” என்ற மேகலா மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு வைத்துவிட்டாள்..சுஸ்மிதாவின் முகமோ சிந்தனை சாயல் கொண்டது.

ஆனால் புகழேந்தியோ அப்படியேதான் அமர்ந்திருந்தான்.. நேரம் கடந்தாலும், இரவு சூழ்ந்தாலும் அவனிடம் எவ்வித அசைவும் இல்லை. மறுநாள் சந்தீப் வந்து அவனை உசுப்பும் வர அப்படியே தான் இருந்தான்.   

 

 

 

Advertisement