Advertisement

பூந்தேன் – 8

“லக்கி ப்ளீஸ்டா… இங்க பாரேன்… ரெண்டு நாளா இப்படிதான் இருக்க.. லக்கி…” என்று கெஞ்சிக்கொண்டு இருந்தான் புகழேந்தி..

ஆனால் இலக்கியாவோ நீ என்ன சொன்னாலும் சரி, என் மனம் ஆறாது என்று மௌனித்து இருந்தாள். அவள் பேசி இரண்டு நாட்கள் ஆனது. பிறந்தநாளுக்கு முதல்நாளே கேக் வெட்டியவன், பின் நண்பர்கள் எல்லாம் கிளம்பிச் செல்ல,இலக்கியாவை சமாதானம் செய்யலாம் என்று பார்க்க, அவளோ அந்த இடத்தில இல்லை.. அறைக்கு சென்றுவிட்டிருந்தாள்.

‘ஐயோ… இவளை எப்படி சமாதானம் செய்ய…’ என்று தலையை கோதியவன்,

“லக்கி…” என்றபடி உள்ளே செல்ல, அவளோ அவனுக்கென்று வாங்கி வைத்திருந்த பரிசுப் பொருட்களை எல்லாம் மெத்தை மேல்  கடை பரப்பி இருந்தாள்..

அதனை பார்த்தவன், இத்தனை பரிசுகளோ என்று ஆச்சர்யமாய் அவளை பார்க்க, அவளோ “இதெல்லாம் உங்களுக்குன்னு நான் வாங்கினது.. நைட் கேக் கட் பண்ணிட்டு கொடுக்கலாம்னு இருந்தேன்.. ஆனா.. ம்ம்ச்…” என்றவள், பேச்சை நிறுத்தி தன் கண்ணீரை துடைக்க,

“ஹே லக்கி ப்ளீஸ்டி அழாத…” என்றபடி அவளருகே வர, சட்டென்று பின்னே நகர்ந்தவள், அவனை உணர்வே இல்லாத பார்வை பார்த்துவிட்டு, கட்டிலில் ஒரு ஓரத்தில் சென்று படுத்துக்கொண்டாள்.

சத்தமிடவில்லை, சண்டையிடவில்லை, வாய்விட்டு அழவில்லை, எதுவுமே இல்லை.. ஆனாலும் இலக்கியாவின் இந்த மௌனம் புகழேந்தியை கொள்ளாமல் கொன்றது..

“லக்கிமா…” என்றபடி அவளருகே செல்ல, அவளோ தலையனையை வைத்து தன் முகத்தை மூடிக்கொண்டாள்.

கட்டிலின் மறுபக்கத்தில் அவள் வாங்கியிருந்த பொருட்கள் எல்லாம் அவனை பார்த்து சிரிக்க, புகழேந்திக்கு இன்னும் இன்னும் மனம் வேதனை கொண்டது. எத்தனை ஆசை பட்டாளோ, எத்தனை ஆவலாய் இருந்தாளோ, அனைத்தும் வீண் என்ற எண்ணம் அவளை மட்டுமல்ல, அவனையும் வருத்தத்தில் ஆழ்த்த, பரிசுகளை பிரித்து பார்த்தவனுக்கு, இலக்கியா தன் மீது எத்தனை அன்புகொண்டிருந்தால் இவைகளை எல்லாம் தேர்ந்தெடுத்திருக்கவேண்டும் என்று தோன்றியது..

வெகுநேரம் அவைகளையே பார்த்தபடி இருந்தவன், இலக்கியாவை காண, அவளோ அப்படியே உறங்கிவிட்டிருந்தாள். முகத்தை மூடியிருந்த தலையணையை லேசாய் எடுக்க, இலக்கியா நல்ல உறக்கத்தில் இருந்தாள். கண்களில் கண்ணீர் கோடுகள்.

புகழேந்திக்கு மனதில் பெரும் சுமையாய் இருந்தது. அனைத்தையும் எடுத்து உள்ளே வைத்தவன், கட்டிலில் சாய்ந்து அமர அன்றைய உறக்கம் அவனுக்கு இல்லாமல் போனது.. ஆனால் அவனறியவில்லை இலக்கியாவும் உறங்கவில்லை என்று.

எப்படி உறங்குவாள்..?? மனதில் இருந்த ஆசைகள் எல்லாம் நிராசையாகி போனபின்னே அவளுக்கு எப்படி உறக்கம் வரும்..

அடுத்தவர்களுக்கு இது சாதாரண விசயமாக இருக்கலாம்.. ஆனால் அவளுக்கு?? தன் கணவனுக்கென்று முதன்முதலில் ஆசையாய் ஆவலாய் செய்த அனைத்துமே ஒருநொடியில் ஒன்றுமில்லாமல் போக, அதை அவளால் சாதாரணமாக விட முடியவில்லை..

இந்த ஏமாற்றம் காலம் முழுவதற்கும் அவளுக்கு இருக்கும். அடுத்து எத்தனையோ பிறந்த நாள்கள் வந்தாலும், இது ஸ்பெஷல் அல்லவா?? காலம் முழுவதற்கும் இருவருக்குமே இனிதாய் நினைவில் நிற்க வேண்டியது இப்படி ஆகவும் யாரால் தான் எந்த மனைவியால் தான் ஏற்றுகொள்ள முடியும்..

இப்படியே நேரம் நகர, பொழுதும் விடிந்தது. ஏதாவது பேசுவாளா என்று புகழேந்தி அவள் முகத்தை அவ்வபோது பார்க்க, அவளோ அமைதியாய் தினசரி வேலைகளை செய்தபடி இருந்தாள்..

“லக்கி…” என்று அருகில் வர,

“சாமி கும்பிடனும்…” என்று தள்ளி போனாள்.

“கோவிலுக்கு போலாமா??” என்று புகழேந்தி வினவ,

கடிகாரத்தை பார்த்தவள், பின் சரி என்று தலையாட்ட, அவனும் மகிழ்வாகவே கிளம்பினான். அவள் வாங்கி வைத்திருந்த புது ட்ரெஸ் போட்டவன், அவளையும் அழைத்துக்கொண்டு வீட்டினருகே இருந்த அம்மன் சன்னதிக்கு செல்ல, இலக்கியாவுமே அமைதியாய் வந்தாள்.

கோவிலில் இருவருமே அமைதியாய் கண்கள் மூடி எல்லாம்வல்ல அந்த அன்னையை வேண்டி, பிராகாரம் சுற்றி, பிரசாதம் வாங்கி அங்கேயே அமர்ந்து அதனையுண்டு முடித்து, கிளம்ப நொடிக்கொரு முறை புகழேந்தி இலக்கியாவின் முகத்தை தான் பார்த்தான்..

இன்னும் அவள் பிறந்தநாள் வாழ்த்து சொல்லவே இல்லை.. சொல்வாளா மாட்டாளா..?? மனம் இதே எதிர்பார்ப்பில் பரிதவித்தது அவனுக்கு.. அவன் பார்ப்பதும் அவன் எதிர்பார்ப்பதும் அவளுக்கு நன்றாகவே புரிய, பைக்கில் ஏறும் போது,

“புகழ்..”என்று அழைத்தாள்..

‘இதோ இப்போ சொல்ல போறா…’ என்று ஆவலாய் புகழேந்தி அவள் முகம் நோக்க, அவள் அழைத்ததே வேறு விசயத்திற்கு, ஆனால் புகழேந்தி கண்களில் மின்னிய ஆவலும்,

‘ஒன்றும் சொல்லாமல் என்னை ஏமாற்றி விடாதே..’ என்ற முக பாவமும் அவளுக்கு என்ன உணர்த்தியதோ, முயன்று ஒரு சிரிப்பை வரைசெய்து,

“இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்…” என்றாள்.. 

“தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ் எங்க நீ சொல்லாவே மாட்டியோன்னு இருந்தேன்..” என்று பரபரத்து கூற, பதிலெதுமே கூறாமல் வண்டியில் ஏறிக்கொண்டாள்.

அவ்வளவு தான் இது மட்டும் தான் இலக்கியா அவனிடம் பேசியது.. அதன் பிறகு இரண்டு நாட்களாய் பேசவே இல்லை. புகழேந்தியும் என்னென்னவோ பேசி பார்த்தான், ம்ம்ஹும் அவள் வாய் திறக்கவே இல்லை.. வீட்டின் தினசரி வேலைகள், அவனுக்கு வேண்டியது எல்லாம் செய்வாள் ஆனால் அனைத்துமே மௌனமாய் செய்வாள்.

இருப்பதோ இருவர்,  அதிலும் ஒருத்தி இப்படியிருந்தால் எப்படி இருக்கும். ஆனால் அவள் பக்கம் எவ்வித தவறும் இல்லையே. இயல்பாய் பேசும் நிலையில் அவளில்லை. மனதில் அத்தனை பாரம்.

இரண்டு நாள் பொறுத்துப் பார்த்தவன், அடுத்தநாள் விடிந்ததுமே, “லக்கி ப்ளீஸ்டா… இங்க பாரேன்… ரெண்டு நாளா இப்படிதான் இருக்க.. ப்ளீஸ் லக்கி…” என, அவனை ஒரு வெற்று பார்வை பார்த்தாளே தவிர வேறெதுவும் பேசவில்லை.

அவனுக்கோ அன்று அலுவலகத்தில் முக்கியமான மீட்டிங் ஒன்று இருந்தது.. சீக்கிரமே கிளம்பியாகவேண்டும்.. ஏற்கனவே இரண்டொரு முறை அழைப்பு வேறு வந்த டென்சன் வேறு.. போதாத குறைக்கு இவளும் இப்படி இருக்க, எல்லாம் சேர்ந்து அவனது பொறுமையை கைவிட வைத்தது..

“இப்போ பேசுறியா இல்லையா டி…” என,

அவனை திரும்பிப் பார்த்தவள் அப்படியே நிற்க “என்னடி உன்னத்தான்.. நான் மனுசன்தானே.. ரெண்டுநாள கரடியா கத்திட்டு இருக்கேன். இப்போ என்னாச்சுன்னு இப்படி முகத்தை தூக்கிட்டு இருக்க…” என்று எகிற,

“ஓ.. அப்போ எதுவுமே ஆகலை அப்படிதானே…” கசந்த குரலில்.

“ம்ம்ச் லக்கி… சுஸ்மிதான் எத்தனை டைம் சாரி கேட்டா.. அவ எதோ தெரியாம உளறிட்டா.. விடேன்.. அதுக்கேன் நீ இவ்வளோ ரியாக்ட் பண்ற…”

“என்னது… தெரியாம உளறிட்டாளா.. நடிப்பு அத்தனையும் நடிப்பு.. நீங்க அவங்களை நம்புங்க ஆனா என்னால அப்படி இருக்க முடியாது…” என்றபடி அவனருகே வந்து நின்றவள், அவன் தட்டில் டொக்கென்று தோசையை வைத்து செல்ல,

“ஏய் என்னடி.. இப்படி வச்சிட்டு போற.. கொஞ்சம் கூட மரியாதை தெரியலையா” என,

“ம்ம்ச் பேசாம கிளம்பி போங்க…” என்றவள் அவனை அடுத்து சட்டை செய்யவே இல்லை..

அதுவே புகழேந்திக்கு இன்னும் கோவத்தை கிளப்ப, “இப்போ நீ முடிவா என்ன சொல்ற??” என,

“என்ன சொல்லணும் நினைக்கிறீங்க.. யார்வேணா இங்க வந்து நாட்டாமை செய்வாங்க ஆனா அதெல்லாம் நான் கண்டுக்க கூடாது அப்படிதானே..” என்று அவளும் பதிலுக்கு பதில் கொடுத்தாள்.

உள்ளத்தில் அத்தனை எரிந்துகொண்டு இருந்தது இலக்கியாவிற்கு..

“லக்கி.. அவங்க எல்லாம் யாரோ இல்லை…” என்று பல்லை கடித்து புகழேந்தி சொல்ல,

“அப்போ நான் யாரு??? இது யார் வீடு.. சொல்லுங்க இது யார் வீடு..??” என்னும் போதே இலக்கியாவின் கண்களில் நீர் கோர்த்துவிட்டது..

“ம்ம்ச் இப்போ ஏன்டி அழுது மனுசனை இன்னும் டென்சன் எத்துற..” என்றவன், “இது நம்ம வீடு…” என்று சொல்லி முடிக்கவில்லை,

“இது என் வீடு.. நான் வாழ வந்த வீடு.. சரி கேக் பத்தி தெரியாம உளறிட்டாங்கன்னே வச்சுக்கோங்க.. ஆனா இங்க வந்து உட்கார்ந்திட்டு என்னையவே தள்ளிபோ உள்ளபோனு சொல்றாங்க.. எல்லார் முன்னாடியும் எனக்கு எவ்வளோ அசிங்கமா இருந்தது தெரியுமா.. அப்போவும் நீங்க வாய் மூடி தான் இருந்தீங்க..

ஏன் அவங்களுக்காக இவ்வளோ பேசுறீங்களே.. எனக்காக ஒரு வார்த்தை கூட பேச மாட்றீங்க…” என்று அழுகையினூடே சொல்ல, புகழேந்திக்கும் ஒருமாதிரியாய் போனது..

சுஸ்மிதா அப்படி பேசியது அவனுக்குமே ஒரு சங்கடத்தை கொடுக்க, அந்த நொடி தான் ஒன்றுமே இதில் செய்ய முடியாமல் போன ஒரு இயலாமை எல்லாம் சேர்த்து அவனுக்கு ஒருப்பக்கம் வேதனை கொடுத்தாலும், அந்த இடத்தில், தான் ஆண் என்ற எண்ணம் தலை தூக்க, அவன் எதிர்மறையாய் திருப்பினான்.

“இப்போ என்ன பண்ணனும்னு சொல்ற.. சொல்லு.. இல்ல தெரியாம தான் கேட்கிறேன் எனக்கென்ன அடுத்து பிறந்தநாளே வராதா.. சும்மா இதையே பிடிச்சிட்டு தொங்குற..” என்று குரலை உயர்த்த,

இலக்கியாவிற்கு இருந்த கொஞ்ச பொறுமையும் பறந்தது. நான் என்ன சொல்கிறேன்.. இவன் என்ன சொல்கிறான். அப்போ இந்த வீட்டில் தான் யார்?? எனக்கென்ன இங்கே மரியாதை இருக்கிறது?? வீட்டிற்கு வருவோர் போவோர் எல்லாம் மட்டமாய் பேச, அதெல்லாம் ஒன்றுமே காணாதபடி நான் சும்மா இருக்க வெறும் ஜடமா என்று தோன்ற, அதிலும் புகழேந்தி கொஞ்சம் கூட அவளை பற்றி வருந்தாமல் கடைசிவரை சுஸ்மிதாவிற்கு ஏற்றுக்கொண்டே பேச,  இலக்கியாவின் மனநிலை இன்னும் மோசமானது.

“போதும் நிறுத்துறீங்களா??? பிறந்தநாள் அடுத்து வரும்.. வந்திட்டே தான் இருக்கும்.. ஆனா இது.. நான் எவ்வளோ ஸ்பெஷல்னு நினைச்சேன் தெரியுமா.. லாஸ்ட்ல நீங்களும் இப்படி பேசிட்டீங்களே.. கொஞ்சம் கூட உங்களுக்கு என் பீலிங்ஸ் புரியல இல்லை.. இப்பவும் சொல்றேன் சுஸ்மிதெரியாம சொல்லலை.. வேணும்னே எல்லாத்தையும் ஸ்பாயில் பண்ணனும்னு தான் சொன்னாங்க..

கடைக்கு அவங்க வர்றேன்னு சொல்லியும் நான் வேணான்னு சொல்லிட்டு மேரி கூட போனேன் அதுக்காகவே தான் என்னை அப்போ தள்ளி போ சொன்னாங்க.. அதேபோல கேக் செய்யும் போதும் இது சர்ப்ரைஸ்னு சொன்னேன்.. தெரிஞ்சே தான் எல்லாம் பண்ணாங்க..” என்று அவளும் கத்த,

சரியாய் அவனுக்கு அந்த நேரத்தில் இருந்து அலுவலகத்தில் இருந்து அழைப்பு வேறு வர,

“இதோ கிளம்பிட்டேன்…” என்று சொன்னவன், அப்படியே கை கழுவி எழுந்து பையை எடுத்து கிளம்ப,

“நான் இங்க கத்திட்டே இருக்கேன்.. எனக்கென்னனு போறீங்க…” என்று அவன் முன்னே நின்றாள்.

“ம்ம்ச்.. எனக்கு நேரமாச்சு..” என்று அவன் விலகி நடக்க,

“என்னக்கொரு பதில் சொல்லிட்டு போங்க..” என்று இலக்கியா வழி மறைத்தாள்.

“என்ன சொல்லணும்… என்னடி சொல்லணும்… என்னவோ சுஸ்மி ப்ளான் பண்ணி எல்லாம் பண்ற மாதிரி பேசுறா.. வேணும்னா அவளை இங்க வரவே வேணாம்னு சொல்லிடலாமா..?? அப்போ உனக்கு நிம்மதியா இருக்குமா??” என்று கடிந்து சொல்ல,

அத்தனை நேரம் இலக்கியாவிற்கு இது தோன்றவே இல்லை. இனிமேலும் கூட தோன்றியிருக்காது. அவளது கோவமெல்லாம் புகழேந்தி தனக்கு ஆதரவாய் ஒன்றுமே பேசாமல் இருந்தது தான். அவளது ஆசை எல்லாம் நிராசையான ஏமாற்றம் தான். ஆனால் இப்போதோ சுஸ்மிதவை வரவேண்டாம் சொல்லலாமா என்று கேட்க, அந்த நேரத்தில் இலக்கியா மனதில் ஒரு பிடிவாதம்.. ஆம் அவள் இங்கே வரக்கூடாது என்ற எண்ணம் தலை தூக்கியது..

என்னை தள்ளி போ சொன்னாள் அல்லவா ஆக அவள் இங்கே வரக்கூடாதுஎன்ற எண்ணம் அந்த நொடியில் அவள் மனத்தில் விருட்சமாய் வளர்ந்து நின்றது..

புகழேந்தியை உறுத்து பார்த்தவள், “ஆமா.. வரக்கூடாது… சுஸ்மி இங்க வர கூடாது…” என்று தீர்க்கமாய் சொல்ல,

“ஏய்…!!!!” என்று கத்திவிட்டான் புகழேந்தி.

“இது தான் என் முடிவு…” என்று அப்போதும் அவள் சொல்ல,

“வாயை மூடு இலக்கியா..” என்று கத்தினான்..

“ஏன்… ஏன் வாய் மூடனும்??? முடியாது… நான் எத்தனை நாள் சொல்லிருப்பேன்.. இப்போ முடியாது.. நீங்க என்ன செய்வீங்களோ தெரியாது சுஸ்மி இங்க வராக்கூடாது.. நீங்க சொல்றீங்களா இல்லை நானே இதை அவங்ககிட்ட சொல்லவா???” என,

“போ இங்கிருந்து… ச்சே… பார்த்தாலே எரிச்சலா வருது… வீட்டுக்கு வந்தா நிம்மதி இருக்கா… நானும் குழந்தைக்கு சொல்றது போல எடுத்து சொல்லிட்டேன்… புரிஞ்சிக்கவே மாட்டேன்னு இருந்தா.. அப்படி என்ன உனக்கு பிடிவாதம்.. உனக்கு பிடிக்காட்டி நீ போ..”என்றவன் அப்படியே கிளம்பி அலுவலகம் சென்றுவிட்டான்..

இலக்கியா தான் திக் பிரமை பிடித்தவள் போல் அப்படியே நின்றிருந்தாள்.. ‘போ போ…’ என்று அவன் சொன்னது மட்டும் காதிலும் மனத்திலும் ஓயாமல் ரீங்காரம் அடித்துக்கொண்டே இருந்தது..

கண்களில் நீர் வழிந்துகொண்டே இருக்க, ஒருமுறை அந்த வீட்டை சுற்றி பார்த்தாள்.. இப்போதும் கூட முதல் முறை இங்கே வந்து போனது மனத்தில் ஓடியது.. அப்போதும் சொன்னான் ‘எனக்கு என் பிரண்ட்ஸ் ரொம்ப முக்கியம்..’ என்று..

ஆனால் நான்?? நான் முக்கியமில்லையா அப்போ??எனக்கென்ன மரியாதை இருக்கிறது என்று தோன்றியதும் அடுத்த நொடி அங்கே அவளால் நிற்க முடியவில்லை..

வீட்டை பூட்டி சாவியை ஜார்ஜ் வீட்டில் கொடுத்துவிட்டு, அவர்கள் கேட்டதற்கு அம்மா வீடு செல்கிறேன் என்றுமட்டும் சொல்லி கிளம்பிச்  சென்றுவிட்டாள்.

புகழேந்தியோ அலுவலகம் சென்றவனுக்கு மனம் நிம்மதியாய்  இல்லை.. ஒருவேகத்தில் கத்திவிட்டு பேசிவிட்டு வந்துவிட்டானே தவிர, அவனுக்குமே நடந்தவைகளில் வருத்தம் நிறைய இருந்தது.. ஆனால் அவன் யாருக்கு சொல்ல முடியும்.. யாருக்கு நல்லவனாக முடியும்??

தன்னிலையை இலக்கியாவாவது புரிந்து நடந்துகொள்வாள் என்று நினைத்தான். ஆனால் அவளோ தான் கொண்ட பிடிவாதத்திலேயே நிற்க, கத்திவிட்டான். விட்ட வார்த்தைகளை எடுக்க முடியாதே..

“முட்டாள்டா நீ…” என்று தன்னை தானே திட்டியவன், கிடைத்த இடைவேளையில் இலக்கியாவிற்கு அழைக்க, அவளோ எடுக்கவே இல்லை..

இரண்டொரு முறை முயற்சித்து பார்த்தவன், பின் வேலை அழைத்துவிட அதனை கவனிக்க சென்றுவிட்டான் எதுவென்றாலும் மாலை நேராக போய் பார்த்துக்கொள்ளலாம் என்று..

ஆனால் மாலை வந்தவனுக்கோ பூட்டியே வீடே வரவேற்பு கொடுக்க, ‘எங்க போனா இவ..??’ என்று வெளியே வந்து பார்த்தான். ஜார்ஜும் அப்போது தான் அவன் வீடு முன்னே வந்திறங்கிக்கொண்டு இருக்க, மேரி வெளியே நின்றிருந்தவள்,

“சாவி இங்க இருக்கு..” என்றபடி சாவி எடுத்துவந்து அவனிடம் கொடுத்தாள்.

ஜார்ஜும் அப்படியே மேரியோடே புகழிடம் நடக்க, சாவியை வாங்கியவன், “எங்க போயிருக்கா..” என்று கேட்க,

“உங்களுக்கு தெரியாதா.. செங்கல்பட் போறேன் சொன்னா…” என்று மேரி சொல்ல,

“என்ன..??!!” என்று அதிர்ந்து விழித்தான் புகழேந்தி.

ஜார்ஜும், மேரியும் ஒருவரை பார்த்துக்கொண்டவர்கள், “என்னாச்சு புகழ்…” என்று ஒருசேர வினவ, அவனோ ஒன்றும் சொல்லாமல் தலை குனிந்து நின்றான்.

மேரிக்கு புரிந்துவிட்டது. அவளுக்கும் நடந்தது எல்லாம் ஜார்ஜ் சொல்லியிருந்தான். வந்து அவளுமே இலக்கியாவிடம் பேச வேண்டும் என்றுதான் நினைத்தாள். ஆனால் சரியான நேரம் கிடைக்கவில்லை.

“நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க புகழ்.. பிரண்ட்ஷிப் ரொம்ப முக்கியம் தான்.. ஆனா அதையும் தாண்டி பேமிலில ஒரு நிம்மதி இருக்கணும்.. அதில்லைன்னா லைப் நரகம்.  லக்கி உங்க வைப்.. அவளுக்கு தான் இங்க முதல் உரிமை.. அதுக்கப்புறம் தான் எல்லாரும்..

உங்களுக்கு செட் ஆகுற எல்லாமே லக்கிக்கு செட் ஆகனும்னு அவசியம் இல்லை.. உங்களுக்கு பிடிக்கிற எல்லாமே அவளுக்கு பிடிக்கனும்னும் இல்லை.. அவ தனி மனுசி.. உங்க கூட வாழ வந்தவ, அவளுக்கான மரியாதையை நீங்களும் கொடுத்திருக்கணும்.. இங்க வர்றவங்களையும் கொடுக்க வச்சிருக்கணும்..

நீங்க ஆம்பிளைங்க நினைக்கலாம், கல்யாணமாகிட்டா  பொண்டாடிங்க பிரண்ட்ஸ் கூட பேச விடுறதில்லை அப்படி இப்படின்னு.. ஆனா நீங்க அவங்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கொடுத்தா எந்த பொண்டாட்டியும் பிரண்ட்ஷிப் கட் பண்ணுனு சொல்ல போறதேயில்லை. லக்கி உங்க லைப்.. சுஸ்மி உங்க பிரண்ட்.. ரெண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு..யோசிங்க..” என்றவள்,

தன்னையே திகைத்து பார்த்து நின்றிருந்த ஜார்ஜை கண்டு லேசாய் சிரித்தவள், “போலாமா..” என,

அவனோ “சாரி மேரி..” என்றான் அருகில் புகழேந்தி இருப்பதும் மறந்து..

“நான் கூட இத்தனை நாள் நீ புரியாம பண்றன்னு நினைச்சேன்.. ஆனா நீ சொன்னப்புறம் தான் புரியுது.. சாரி..” என்று ஜார்ஜ் உணர்ந்து சொல்ல, அதற்கும் மேரி சிரித்தாளே தவிர ஒன்றும் சொல்லவில்லை..

தான் எண்ணியதே தவறு என்று உணர்ந்து ஜார்ஜ் மன்னிப்பு கேட்டான் மேரியிடம், ஆனால் புகழேந்தி எத்தனை பேசிவிட்டான்.. அவளை எத்தனை நோகடித்துவிட்டான்.. அவளிடம் எத்தனை சாரி கேட்டாலும் போதாதே.. இதெல்லாம் தோன்ற,

“நான் இப்போவே போய் லக்கிய கூட்டிட்டு வர்றேன்…” என்று கிளம்பினான்.

“கொஞ்சம் அவளையும் ப்ரீயா தின்க் பண்ண விடுங்க புகழ்.. போன்ல பேசுங்க.. தள்ளி நின்னு யோசிச்சா  லக்கிக்கும் கொஞ்சம் புரியும்.. உங்களுக்கும் புரியும்…” என்றுவிட்டு மேரி கிளம்ப,

“டேய் கொஞ்சம் ரெண்டு பேருமே இதை ஆறவிடுங்க…” என்று ஜார்ஜும் சொல்லிக் கிளம்பினான்.

ஆனால் அதன் பிறகு புகழேந்தி எத்தனை முறை அழைத்தும் இலக்கியா அழைப்பை எற்க்கவே இல்லை.. அவனுக்கும் அடுத்து விடுமுறை என்று கிடைக்கவேயில்லை. வேலை சரியாக இருக்க,அடுத்து வந்த வார விடுமுறையில் தான் புகழேந்தி செங்கல்பட்டு செல்ல நேர்ந்தது..

அங்கேயும் எத்தனை சொல்லியும் இலக்கியா தான் சொன்னதிலேயே நின்றாள்.

 

 

 

Advertisement