Advertisement

பூந்தேன் – 7

அன்றைய பொழுது விடியும் பொழுதே இலக்கியாவிற்கு மனதில் உற்சாகம் கரைபுரண்டு ஒடியது.. காரணம் நாளை புகழ்ந்தியின் பிறந்தநாள். திருமமணத்திற்கு பின் வரும் அவனது முதல் பிறந்தநாள். இத்தனை நாள் எப்படி கொண்டாடினானோ தெரியாது.. ஆனால் இந்த முறை சிறப்பாய் கொண்டாவேண்டும் என்று இலக்கியா முடிவு செய்திருந்தாள்.. அவனை மகிழ்விக்கவும், ஆச்சர்யப் படுத்தவும் நிறைய நிறைய யோசித்து வைத்திருந்தாள்.

எப்போதடா இவன் கிளம்பி அலுவலகம் போவான் என்று இருந்தது.. அதன் பிறகே கிளம்பி கடைகளுக்கு செல்ல வேண்டும்.. வாங்க வேண்டியதை வாங்கி வந்து, வீட்டில் செய்ய வேண்டியதை செய்து முடிப்பதற்க்குள் எப்படியும் மாலையாகிடும். அதற்குள் அவனும் வந்துவிடுவான். அதன் பின் ஒன்றும் செய்ய முடியாதே..

ஆகையால் புகழேந்தியை வேகமாய் கிளப்பிக்கொண்டு இருந்தாள்..

“சீக்கிரம்… இவ்வளோ நேரமாவா சாப்பிடுறது…” என்று அவனை விரட்ட, அவனோ இலக்கியாவை வித்தியாசமாய் பார்த்தான்..

“என்ன அப்படி பார்க்கிறீங்க.. சாப்பிடுங்க புகழ்.. லேட் ஆச்சு…” என,

“உனக்கு இன்னிக்கு என்னாச்சு.. இத்தனை நாள் மெதுவா சாப்பிடுங்க புகழ்.. புரைபோகும்னு நீ தான் சொல்லுவ… இன்னிக்கு இப்படி விரட்டுற…” என்று அவனும் சொல்ல,

“ஆமா விரட்டுனாங்க.. நீ பேய் நான் மந்திரவாதி உங்களை விரட்டுறேன்…” என்று நோடித்தபடி அவளும் உண்ண,

“பேச்சு பேச்சு.. இந்த பேச்சு தாண்டி உனக்கு…” என்று என்னவோ சொல்ல வந்தவன், அப்படியே அவள் பார்த்த பார்வையில் நிறுத்த,

“ஏன் சொல்லமாட்டீங்க.. ஆடி அசஞ்சு கிளம்புறது.. அப்புறம் ஹெட் திட்டினான் அது இதுன்னு வந்து நைட்டெல்லாம் புலம்பி என் தூக்கத்தை கெடுக்கிறது…” என,

“ஹா  ஹா.. அப்படியா Mrs. ரூல்ஸ்.. நான் புலம்புறதுனால மட்டும் தான் உங்க தூக்க கெடுதா…” என்று புகழ்ந்தி கண்ணடித்து கேட்க,

“ஆரம்பிச்சுடீங்களா.. எங்க சுத்தினாலும் இந்த பேச்சில வந்து நிக்கிறது..” என்று சிரித்தாள் இலக்கியா..

என்னவோ அவள் மனம் அன்று வெகு சந்தோசமாய், லேசாய் இருந்தது.. ஒருவேளை அது நாளை புகழேந்தியின் பிறந்தநாள் என்பதாலோ என்னவோ இருக்கலாம்.. பதிலுக்கு பதில் அவளும் பேசிக்கொண்டே உண்ண, அந்த காலை நேரம் இருவருக்குமே மனதில் ஒரு நிம்மதி கொடுத்தது.

“நீ பேசும்மா பேசு.. ஏன் சொல்லமாட்ட.. உன்னை வேலை விடவே விட்டிருக்க கூடாது.. வீட்ல இருந்திட்டு எல்லாம் என்னை பேசுற…” என்று சொல்லியபடி அவளருகே வந்து நின்றான்..

“ஓய்… நான் ஒன்னும் வீட்ல சும்மா இல்லை.. வேலை எல்லாம் முடிச்சிட்டு ஆன்லைன் ஜாப் பார்க்கிறேன்.” என்று இலக்கியாவும் வரிந்துகட்டிக்கொண்டு வர,

“எல்லாம் எனக்கு தெரியும்டி…” என்றவன் அவளை இறுக அணைத்துவிட்டு, அவளிடம் இரண்டு அடிகளையும் வாங்கிக்கொண்டே கிளம்பி சென்றான்..

அவன் சென்றபிறகு தான் அப்பாடி என்று இருந்தது.. பின் வேக வேகமாய் வீட்டு வேலைகளை முடித்து, இவளும் தயாராகி வீட்டை பூட்டி வெளிவர, சரியாய் சுஸ்மிதா வந்தாள்.

“என்ன லக்கி எங்க கிளம்பிட்ட…” என,

“சூப்பர்மார்கெட் போறேன் சுஸ்மி…” என்று பேச்சை முடிக்க,

“அப்படியா நானும் வரேன்.. சும்மாதானே இருக்கேன்…” என்று சுஸ்மிதாவும் அவளோடு நடக்க,

“அட வேணாம் சுஸ்மி.. நானே போயிப்பேன்.. இதோ இந்த சந்து திரும்பினா கடை.. அவ்வளோதானே.. நீங்க ஏன் அலையறீங்க…” என்று மறுத்தாள்.

இலக்கியா முடிவே செய்துவிட்டாள், எத்தனை முடியுமோ அத்தனை சுஸ்மிதாவிடம் இருந்து தான் ஒதுங்கிட வேண்டும் என்று.. அவள் செய்வது சொல்வது எல்லாம் சரியோ தப்போ, எதுவாக இருந்தாலும் எனக்கு வேண்டாம்… இவள் சாதரணமாகவே இருக்கட்டும் ஆனால் இவளின் செய்கைகள் எல்லாம் எனக்கும் என் கணவனுக்கும் இடையில் கருத்து வேறுபாட்டினை கொடுக்கிறது.. இவளை விளக்கினால் தானே புகழ்ந்தி மனம் வருந்துவான்.. ஆகையால் தானே இவளிடம் இருந்து தள்ளி நிற்பது என்று முடிவு செய்திருந்தாள்.

“இதிலென்ன இருக்கு லக்கி.. நீ மட்டும் ஏன் தனியா போற… நானும் வரேன்.. ஆனா ஏன் நீயா இப்போ போற.. எப்பவும் வீக்கென்ட் தானே புகழ் கூட்டிட்டு போவான்…” என்று கேள்வியாய் கேட்க,

‘ஷோ….. இவ சும்மாவே இருக்கமாட்டாளா…’ என்று எரிச்சலாய் வந்தது. ஆனால் அதை வெளிக்காட்ட முடியாமல்,

“கொஞ்சம் திங்க்ஸ் வாங்கணும் சுஸ்மி.. வீக்கென்ட் தான் அவரும் ப்ரீயா இருக்கார்… அப்போ ஏன் அலைஞ்சிட்டு அதான் நானே கிளம்பிட்டேன்…” என்றவள் நிற்கவில்லை..

ஆனால் சுஸ்மிதாவும் அவளுடனே நடந்து வர, ‘ஒரு டைம் சொன்னா இவங்களுக்கு புரியாதா.. ச்சே.. இவங்க முன்னாடி நான் எல்லாம் வாங்கினா அதை அப்படியே புகழ் கிட்ட சொல்லிடுவாங்க.. சர்ப்ரைஸ் ப்ளான் எல்லாம் சொதப்பிடும்..’ என்று மனதினுள்ளே முணுமுணுத்தபடி நடக்க,

சரியாய் அதே நேரம் ஜார்ஜின் அம்மாவும், மேரியும் அவர்கள் வீட்டில் இருந்து கடைக்கு போகவென வெளி வந்தனர். ஜார்ஜின் அம்மா இவர்களை பார்க்கவும் நின்றுவிட, மேரி இலக்கியாவை பார்த்து சிநேகமாய் சிரித்தாள்.

இவளும் சிரித்து, “கடைக்கு தான் நீங்களும் போறீங்களா…” என,

“ஆமா இலக்கியா… வெயில் பாரு இப்போவே இப்படி கொளுத்துது.. இவளை மட்டும் தனியா ஏன் அனுப்பனும்னு தான் நானும் கிளம்பினேன்…”என்று ஜார்ஜின் அம்மா சொல்ல,

“நாங்களும் கடைக்குதான் போறோம்…” என்று இலக்கியாவை முந்தி சுஸ்மி சொன்னாள்.

“சுஸ்மி நீ ஏன் அலைஞ்சிட்டு இருக்க, அவங்க போகட்டும்.. நம்ம இருப்போம்…” என்று ஜார்ஜின் அம்மா சொல்ல,

“இருக்கட்டும்மா… இப்போ என்ன…” என்று சுஸ்மி தயங்க, இது தான் சமயம் என்று,

“நீங்க இருங்க சுஸ்மி.. நானும் மேரியும் கூட போயிக்கிறோம்…” என்று சொல்லிவிட்டு, அவள் பதில் சொல்லுமுன்னேயே இருவரும் நடக்கத்தொடங்கி விட்டனர்.

சுஸ்மிதாவிற்கு அந்த இடத்தில் என்னவோ போல் ஆனது.. நான் வருகிறேன் என்று சொல்லியும் வேண்டாம் என்று சொல்லி இப்பொழுது என்னவென்றால் மேரியோடு இலக்கியா செல்லவும் அவளை ஒதுக்கி செல்வதாய் தோன, சுஸ்மிதாவிற்கு மனதில் ஒரு வலியும், என்னை ஒருத்தி ஒதுக்குவதா என்ற எண்ணமும் முளைத்தது..

அவர்கள் போவதையே பார்த்திருந்தவளை, “சுஸ்மி உள்ள வா.. வெயில்ல நிக்காத..” என்று ஜார்ஜின் அம்மா உள்ளே அழைத்து சென்றார்.

இலக்கியாவோ, “நல்லவேளை மேரி… சுஸ்மிதா வரலை.. எனக்கு சரி டென்சன் ஆகிடுச்சு…” என,

“ஏன் என்னாச்சு லக்கி…??” என்று கேட்டாள் மேரி.

“நாளைக்கு அவருக்கு பிறந்தநாள் மேரி.. அதான் கேக் செய்யலாம்னு இருக்கேன்.. ட்ரெஸ், கிப்ட் எல்லாம் கூட வாங்கிட்டேன்… கேக் செய்ய திங்க்ஸ் எல்லாம் வாங்கணும்… அதான்…”

“ஓ.. சர்ப்ரைஸா.. சூப்பர்.. நல்லவேளை சுஸ்மி வரலை.. இல்ல அப்படியே லைவ் டெலிகாஸ்ட் செஞ்சிடுவாங்க.. ஆமா உனக்கு கேக் செய்யத் தெரியுமா..??”

“ம்ம்ஹும்… யு டியூப் பார்த்து தான் செய்யணும்.. செஞ்சிடுவேன்னு நம்பிக்கை இருக்கு..” என்று சொல்லி சிரித்தாள் இலக்கியா..

“ஓ.. எனக்கு தெரியும் லக்கி கேக் செய்ய.. நான் சொல்லித் தர்றேன்.. நீயே பண்ணு…” என,

“சூப்பர்.. அப்போ மதியம் வேலை எல்லாம் முடிச்சிட்டு வர்றீங்களா.. செய்யலாம்.. ஐஸிங் பண்ணி பிரிட்ஜ்ல வச்சிடலாம்.. இவர் சாயங்காலம் வந்திட்டா அப்புறம் ஒன்னும் செய்ய முடியாது…” என்று இருவரும் என்ன செய்வது எப்படி செய்வது என்று பேசி முடித்து, கடைக்கு சென்று வேண்டியதை வாங்கி ஒருவழியாய் வீடு வந்து சேர்ந்தனர்.பின் வேக வேகமாய் மதிய உணவையும், வேலையும் முடித்து, மேரி வந்துவிட,

“நீங்க ஸ்டெப் பை ஸ்டெப் சொல்லுங்க மேரி நா.. நானே பண்றேனே..” என்று இலக்கியா சொல்ல,

“தாராளமா லக்கி.. உன் ஹஸ்பன்ட்க்கு நீயே உன் கையாள பண்ணு.. நான் ஜஸ்ட் சொல்றேன்…” என்றவள், அடுத்தடுத்து என்ன செய்வது என்று சொல்ல, இலக்கியாவும் கர்ம சிரத்தையாய் மேரி சொல்வதை கேட்டு செய்துகொண்டு இருந்தாள்.

‘நல்லா வந்திடனும்.. பார்ஸ்ட் டைம் பண்றேன்… கடவுளே.. அவருக்கு பிடிச்சிடனும்…’ என்று வேண்டிக்கொண்டே செய்துகொண்டு இருந்தாள்..ஒருவழியாய் ஓவனில் வைத்து எடுத்துவிட, கேக் இலக்கியா எதிர்பார்த்ததை விட நல்லபடியாகவே வந்திருந்தது..

“வாவ் சூப்பர் லக்கி… ஐஸிங் மட்டும் பண்ணிட்டடா போதும்..” என்று மேரி சொல்ல,

“என்ன நடக்குது இங்க.. மேரி நீ என்ன பண்ற இங்க???” என்றபடி ஒரு ஆராய்ச்சி பார்வையை இருவரின் மீதும் வீசி வந்தாள் சுஸ்மிதா.

அவளை பார்த்ததுமே இருவருக்கும் பேயறைந்தது போல் ஆனது.. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க,

“என்ன இப்படி முழிச்சிட்டு நிக்கிறீங்க..” என்றபடி அவர்களை நெருங்கி வந்தவள், அங்கே கேக் இருப்பது கண்டு, “என்ன இது…” என,

இலக்கியா கண்களை இறுக மூடி திறந்தவள் “சுஸ்மி கேக் பண்ணோம்.. நாளைக்கு அவருக்கு பிறந்தநாள்ல…” என்றாள் இறுகிய குரலில்.

மேரிக்கு அடுத்து சுஸ்மி என்ன செய்வாள் என்று தெரியும். எங்கே தானும் எதாவது பேசி அது பிரச்சனை ஆகும் என்று எண்ணியவள் “லக்கி ஐஸிங் பண்ணிட்டு உள்ள வச்சிடு.. நான் வர்றேன்…” என்று கிளம்பிட, சுஸ்மிதா முன்னால் இலக்கியவாலும் வேறு எதுவும் சொல்ல முடியவில்லை..

மேரி செல்லவும் “லக்கி.. மேரி கூட எல்லாம் சேராத… அவ சரியில்ல…” என்று சுஸ்மிதா சொல்ல, ‘எனக்கு தெரியும் நீ வாயை மூடு…’ என்று கத்த வேண்டும் போல இருந்தது இலக்கியாவிற்கு.

இத்தனை நேரமிருந்த உற்சாகம் எல்லாம் சட்டென்று வடிந்துவிட, மனதில் ஒரு கலக்கம் சட்டென்று சூழ்ந்துவிட்டது. கடவுளே இவள் புகழேந்தியிடம் ஒன்றும் சொல்லாமல் இருக்க வேண்டுமே என்று இருந்தது.. சொல்லாதே என்றாலும் சொல்கிறாள் என்றெண்ணியவள், எதுக்கும் சொல்லி வச்சிடலாம் என்று “சுஸ்மி இது சர்ப்ரைஸ்.. சோ புகழ் கிட்ட சொல்லிடாதீங்க…” என்றபடியே  ஐஸிங் கவரை எடுத்து, அடுத்து செய்ய வேண்டியதை பார்க்க,

“ம்ம் ம்ம் குடு நான் செய்றேன்…” என்றாள் சுஸ்மிதா..

“இல்ல சுஸ்மி.. இது நான் அவருக்காக பண்றது.. நானே தான் செய்யனும்னு இருக்கேன்…” என்றபடி அவளே ஐஸிங் செய்ய, சுஸ்மிதா பதிலேதும் சொல்லாமல் அவளையே பார்த்து நின்றிருந்தாள்.

‘இப்படியே சும்மா இருந்தா நல்லது…’ என்றெண்ணியவள், வேகமாய் கேக்கை செய்து முடித்து, பிரிட்ஜில் வைத்து திரும்ப, சுஸ்மிதா அங்கே இல்லை.. சென்றுவிட்டிருந்தாள்.

அத்தனை நேரம் அருகில் இருந்தவள் சொல்லாமல் கூட செல்ல, ‘என்ன இது இப்படி டக்குனு போயிட்டாங்க.. கோவமோ… என்னவா இருந்தாலும் பரவாயில்லை வாய் மூடி சும்மா இருந்தா போதும்..’ என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

இரவு பன்னிரண்டு மணிக்கு, வீடு முழுவதும் மெழுகுவர்த்தி ஏற்றி, வாங்கி வைத்திருக்கும் பரிசு பொருட்களை கொடுத்து, கேக் வெட்டி புகழேந்திக்கு சர்ப்ரைஸ் கொடுக்கவேண்டும் என்று அந்த நொடிக்காக காத்திருந்தாள் இலக்கியா.

மாலை புகழேந்தி வந்ததும் எப்போதும் போலவே பொழுது நகர, மேகலா அவள் அம்மா வீட்டிற்கு வந்திருப்பாள் போல இங்கேயும் வந்தாள். சந்தீப்பும் நாளை ஊருக்கு போவதால் இன்றே தன் பரிசை கொடுக்கவென்று அதே நேரம் வந்தான்.

“மேகி நீ இங்க தான் இருக்கியா…” என்று சந்தீப் கேட்க,

“ஹ்ம்ம் இப்போதான் வந்தேன்பா. நாளைக்கு எங்க மாமனார் மாமியார் இங்க வர்றாங்க.. அதான் இப்போவே வந்துட்டு போலாம்னு வந்தேன்..” என,

“அப்போ, ஜார்ஜ் வீட்ல தான் இருக்கான்.. வர சொல்லட்டுமா…” என்று சந்தீப் புகழை பார்த்து கேட்க,

“இதுக்கேன்டா என்னை பார்க்கிற வர சொல்லு…” என்று புகழ் சொல்ல,

“சரி நானும் சுஸ்மிய கூப்பிடுறேன்.. எல்லாரும் இப்படி ஒண்ணா உட்கார்ந்து பேசி ரொம்ப நாள் ஆச்சுல…” என்று மேகலா சொல்லியபடி சுஸ்மிதாவை அழைத்தாள்.

நண்பர்களை ஒன்றாய் கண்டதும், அதுவும் மறுநாள் பிறந்தநாள் வேறு, இன்று நண்பர்களோடு செலவிட நேரம் கிடைத்ததும் புகழேந்தி முகத்தில் மகிழ்ச்சி பரவியது. இலக்கியாவும் அவனை கவனித்து இருந்தாள்.

‘ஹ்ம்ம் Mr. ரூல்ஸ்க்கு இப்போ இருந்தே கொண்டாட்டம் தானா..’ என்று அவனை ரசித்துக்கொண்டவள்,‘என்ன இருந்தாலும் என்னோட சர்ப்ரைஸ் உங்களுக்கு இன்னும் கொண்டாட்டம் தரும்..’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டாள்.

அடுத்த சில நிமிடத்திலே, ஜார்ஜும், சுஸ்மிதாவும் வந்துவிட, அங்கே பேச்சிற்கும், சிரிப்பிற்கும் கேட்கவும் வேண்டுமா.

புகழேந்தியின் சிரிப்பையும், பேச்சையும், நண்பர்களோடு அவன் அடிக்கும் லூட்டியையும் மனதிற்குள் ரசித்துக்கொண்டே, இவர்களுக்கு கொடுக்கவென்று ஏதாவது செய்யலாம் என்று, லேசாய் கேசரி கிண்டியவள், தனி தனி கப்பில் வைத்து, எடுத்து செல்ல,

“ஹே லக்கி.. இதெல்லாம் எதுக்கு…” என்றபடி மேகலா வாங்க,

“இருக்கட்டும்.. ரொம்ப நாள் கழிச்சு எல்லாம் ஒண்ணா இருக்கீங்க…” என்றபடி அனைவருக்கும் கொடுக்க, புகழேந்தியோ தன் மனைவியை பெருமையாய் பார்த்தான்..

“ஹ்ம்ம் நானெல்லாம் டெய்லி வர்றேன்..ஒரு கப் காப்பி கூட கொடுத்ததில்லை..” என்று சொல்லியபடி சுஸ்மி கேசரியை எடுக்க,

“டெய்லி வர்றவங்களுக்கு எல்லாம் காப்பி கிடையாது…” என்று ஜார்ஜ் அவளை வார, அனைவரும் கோரசாய் சிரிக்க, இலக்கியாவும் சிரித்தபடி புகழேந்தியிடம் அமர போக,

“ஹேய்நில்லு.. லக்கி நீ என்ன பண்ற இங்க…” என்றாள் சுஸ்மிதா அனைவருக்கும் மேலாய் குரலை உயர்த்தி..

அவள் இப்படி சொல்லவுமே, அனைவரும் என்னவென்று பார்க்க, இலக்கியவோ தான் எதுவும் தவறாக செய்துவிட்டோமா என்று பார்த்தாள்..

“என்ன சுஸ்மி…” என்று மேகலா கேட்க,

“பின்ன.. நீ தனியா வந்திருக்க, ஜார்ஜும் அவன் வைப் கூட்டிட்டு வரல, எல்லாரும் சிங்கிளா வந்திருக்கோம்.. அப்போ லக்கி மட்டும் புகழ் கூட ஜோடியா உட்கார்ந்தா நல்லா இருக்குமா.. இது நமக்கான டைம்… வேற யாருக்கும் இடமில்லை.. லக்கி நீ உள்ள போ…” என்று மிக மிக சாதாரணமாக முகத்தை வைத்து சொல்ல, அங்கே இருந்த அனைவருக்குமே ஒரு மாதிரி ஆகிவிட்டது.. 

புகழேந்திக்கு திக்கென்று இருக்க, மற்றவர்களோ “சுஸ்மி..” என்று அதட்ட, இலக்கியாவிற்கு அந்த இடத்தில அவமானமாய் போய்விட்டது.

‘இது என் வீடு.. நான் தான் இங்க எல்லாமே.. இங்க வந்திட்டு நீ என்னை தள்ளி போ சொல்றியா.. நீ வெளிய போ டி…’ என்று கத்த வேண்டும் போல் இருந்தது.

முகம் சிவந்துவிட, கண்களில் நீர் கோர்த்து விட்டது இலக்கியாவிற்கு.. அவள் இப்படி சொல்கிறாள் நீ சும்மா இருக்கிறாயே என்று கணவனை கண்ணீர் விழிகளோடு நோக்க, அவனோ தவித்து போய் பார்த்தான் இவளை.

புகழேந்தியின் கண்களோ மன்னிப்பை யாசிக்க, ‘இப்போ கூட நீ எனக்காக பேச மாட்டியா…’ என்று கேட்ட இலக்கியாவின் பார்வைக்கு அவனால் பதிலே சொல்ல முடியவில்லை..

அவனும் தான் என்ன செய்வான். அனைவரின் முன்னும் யாருக்கு ஏற்றுக்கொண்டு என்ன பேசிட முடியும். தர்மசங்கடமான சூழ்நிலை அவனுக்கு. நிஜமாகவே தவித்துத்தான் போனான்.. சுஸ்மி பேசியது தப்பென்று தெரியும் ஆனாலும் அந்த நேரத்தில் அவனால் வாய் திறக்க முடியவில்லை.

“சுஸ்மி.. என்ன இப்படி பேசுற..” என்று மேகலா கடிய..

“ஹே நான் என்னப்பா தப்பா பேசிட்டேன்.. ஜஸ்ட் சொன்னேன்…” என்றவள், புகழேந்தியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, எழுந்து தங்கள் அறைக்கு சென்றுகொண்டு இருந்த  இலக்கியாவிடம்,

“லக்கி.. கேக் எடுத்து பார்த்தியா.. எல்லாம் செட் ஆகிடுச்சா..” என, திரும்பி பார்த்தவள் அப்படியே நின்றுவிட்டாள் அடுத்த இடி இலக்கியா மனதில் இடித்தது..

“கேக்கா…..!!!!” என்று அனைவரும் நோக்க,

“அய்யோ..!!! சாரி லக்கி.. நீ சர்ப்ரைஸ்னு சொன்னியா.. நான் பாரு உளறிட்டேன்…” என்று நாக்கை கடித்தவள், மெல்ல ஸ்டிக்கை ஊண்டி அவளிடம் நடந்து வந்து,

“சாரி லக்கி…” என்று அவள் கைகளை பிடிக்க, இலக்கியாவிற்கோ கோவம் கனன்றுகொண்டிருந்தது.

தான் ஆசையாசையாய் ஒவ்வொன்றாய் பார்த்து பார்த்து செய்துவைத்தது, தன் கணவனை ஆச்சர்யபடுத்த வேண்டும் நினைத்து வைத்ததெல்லாம் ஒன்றுமேயில்லாமல் ஆக்கிவிட்டு, இப்போது நல்லவள் போல வந்து அனைவரின் முன்னும் வேறு மன்னிப்பு கேட்க, இவளை எல்லாம் என்ன செய்தாள் தகும் என்ற எண்ணம் மட்டுமே அப்போது இலக்கியா மனதில்.

அமர்ந்திருந்த அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவள், ஆழ மூச்செடுத்துவிட்டு, கண்களை இறுக மூடித்திறக்க, சுஸ்மிதா அப்போதும், “சாரி லக்கி… நீ எவ்வளோ மெனக்கெட்டு செஞ்ச  சாரி…” என்று மேலும் சொல்ல,

இலக்கியா ஒன்றுமே சொல்லாமல் நடந்து போனவள் பிரிட்ஜில் வைத்திருந்த கேக்கை எடுத்துக்கொண்டு வந்தாள்..

“எல்லாரும் இங்க தானே இருக்கீங்க… இப்போவே கட் பண்ணிடலாம்…” என்று உணர்வே இல்லாத குரலில் சொல்ல,

“லக்கி… சாரி.. சுஸ்மி எதோ உளறிட்டா…” என்று மேகலா சொல்ல, அதற்கு எந்த பதிலும் சொல்லாமல்,

“நீங்க சந்தீப் எல்லாம் இவரை விஷ் பண்ணதானே வந்தீங்க மேகி.. எப்படியும் இவருக்கும் பிரண்ட்ஸ் கூட செலிபிரேட் செய்றது தான் பிடிக்கும்.. இப்போவே கட் பண்ணிடலாம்…” என, ஜார்ஜும், சந்தீப்பும் சுஸ்மியை முறைக்க,

புகழேந்தியோ ஒரு இயலாமையோடு நின்றிருந்தான்.. அவனுக்கு நன்றாகவே புரிந்தது இலக்கியாவின் மனது இப்போது எப்படி இருக்கும் என்று. தனக்காக இலக்கியா இத்தனை செய்திருப்பாள் என்று அவன் நினைக்கவும் இல்லை. தன்னை மகிழ்விக்க தனக்கே தெரியாமல் இத்தனை செய்தாளா என்று ஆச்சர்யமாகவும் இருந்தது.

ஆனாலும் அந்த நொடிகூட சுஸ்மி தெரியாமல் உளறியதாகவே நினைத்திருக்க, அனைவரும் கிளம்பிச் சென்ற பிறகு அவளை சமாதானம் செய்துகொள்ளலாம் என்று பொறுமையாய் இருந்தான்..இலக்கியா மறந்தும் கூட புகழேந்தியின் பக்கம் பார்வையை திறக்கவே இல்லை..

“ஹே இது கூட நல்ல ஐடியா தான்.. எல்லாரும் சேர்ந்து கேக் கட் பண்ணலாம்..” என்று சுஸ்மி முன்னே வர, மௌனமாகவே அதற்கு வேண்டிய அனைத்தும் இலக்கியா செய்தவள், புகழேந்தியிடம் கத்தியை கொடுக்க,

மனைவியை ஒரு பார்வை பார்த்தவன், பின் மெழுகுவர்த்தி ஊதி கேக்கை வெட்ட, இலக்கியாவின் மனமும் வெட்டப்படும் கேக் போலவே துண்டு துண்டாய் ஆனது.. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement