Advertisement

பூந்தேன் 6

எண்ணங்கள் தெளிவாக இருப்பின், காணும் பார்வைகளும் தெளிவாகவே இருக்கும்.. மனதில் சஞ்சலமும், குழப்பமும் இருக்குமாயின் நாம் நல்லதை கண்டாலும் கூட அதன் மீது அத்தனை ஒரு நம்பிக்கை வந்துவிடாது.. ஆனால் உள்ளுணர்வு எப்போதும் தப்பாக சொல்லிவிடாதே..

அதிலும் பெண்களுக்கு.. அவர்களின் சில நுட்பமான உணர்வுகள் சுற்றி நடப்பவற்றை யூகிக்க வைத்துவிடுமே… அதிலும் புத்தி சாதுர்யம் படைத்த பெண்கள் என்றால் கேட்கவும் வேண்டுமா என்ன..??

வார நாட்கள் எல்லாம் வேலை வேலை என்று புகழேந்திக்கு செல்ல, வார இறுதி நாட்களில் ஒருமுறை இலக்கியாவை செங்கல்பட்டிற்கு அழைத்து சென்று வந்தான். அதன் பிறகே நேரம் கிடைக்கும் போது இலக்கியா வீட்டினரும் இங்கு வந்து போக, உறவுகள் சுமுகமாகவும், சுகமாகவும் இருந்தது புகழேந்திக்கு.

மனதில் நிறைந்துவிட்ட மனைவி, அவளது அன்பும் காதலும் எப்போதும் தெவிட்டாது என்ற எண்ணம் மனத்தில் ஆழப் பதிந்துவிட, இலக்கியாவை எத்தனை முடியுமோ அத்தனை தாங்கினான்..

சாந்தி கூட நீங்க அவளுக்கு ரொம்ப செல்லம் கொடுக்காதீங்க தம்பி.. அப்புறம் உங்களையே ஒருவழி செய்வா..என்று சொல்ல,

இப்போ என்ன அத்தை அதுனால…என்று சிரித்தே சமாளித்தான்..

இலக்கியவிற்குமே மனதில் ஒரு பெருமிதம் தான். தன் கணவன் தன்னை நன்றாய் வைத்துகொள்வதில்.. அவன் மட்டுமே அவன் வீட்டில் என்று முதலில் சொன்ன போது இலக்கியாவிற்கு தனியாய் இருப்பவனா??? என்றொரு தயக்கம் இருந்தது..

அதன் பின்னே அவனை நேரில் சந்தித்ததும், பின் பிடித்ததும் எல்லாம்..

ஆனால் இப்போது என் புகழேந்தி போல் யார் இருப்பர் என்று யார் கேட்டாலும் சொல்வாள்..

என்ன அவ்வப்போது இந்த சுஸ்மிதா தான் ஏதாவது செய்து சொல்லி சில சில குழப்பங்களை வர செய்துவிடுவாள்.. ஒருவேளை அவளது இயல்பே அது தானோ என்று கூட இருக்கும்.

சில நேரங்களில் அவளை முன்னிட்டு இல்லை என்றாலும், ஆனாலும் அவளால் எதாவாது ஒரு காரணத்தினால் இலக்கியாவிற்கும், புகழேந்திக்கும் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் முளைத்தன.

வந்த வேகத்தில் அது தீர்ந்தும் போகும்.. ஆனால் இலக்கியாவிற்கோ இவள் ஏன் இப்படி இருக்கிறாள் என்ற கேள்வி தோன்றாத நாளே இல்லை..

ஒருநாள் இப்படித்தான் “புகழ் நீ செய்றது கொஞ்சம் கூட நல்லாவே இல்லை.. வேலைக்கு போயிட்டு இருந்தவளை இப்படி வீட்ல வச்சு அடிமை மாதிரி நடத்துற..” என்று இலக்கியா முன்னாடியே சொல்லிவிட, புகழேந்திக்கும் கூட ஒருமாதிரி ஆகிவிட்டது..

அவன் பதில் சொல்லுமுன் “என்ன சுஸ்மி.. ஜாப் விட்டது நான் தான்.. இவர் என்னை நல்லாத்தான் பார்த்துக்கிறார்..” என்று இலக்கியா சொல்ல, 

“ஆமாமா பார்த்துக்கிறான்.. லக்கி நீயும் தான் அவன் சொல்றதுக்கு எல்லாம் சரி சரின்னு தலையை உருட்டுற.. இப்படி இருந்தா அவ்வளோதான்.. கொஞ்சமாது க்ரிப்பா இரு… இந்த ஆம்பிளைங்களே இப்படிதான்.. காரியம் நடக்கிற வரைக்கும் தான் எல்லாமே…” என்று தேவையில்லாமல் பேச, 

அவள் விளையாட்டாய் சொல்கிறாளா, இல்லை வினயமாய் சொல்கிறாளா என்று பிரித்தறியவே முடியாது அப்படி ஒரு முகம் பாவம் இருக்கும். ஆனால் சும்மாவே இப்படி பேசுபவர்களை இலக்கியாவிற்கு பிடிக்காது. தேவையில்லாது அடுத்தவர் விசயத்தில் தலையிட கூடாது. அது நண்பர்களாகவே இருந்தாலும் சரி.

இலக்கியா, புகழேந்தி இருவரை பொருத்தவரைக்கும் அவர்களது வாழ்வில் எவ்வித பிரச்சனையும் இல்லை.. பிக்கள் பிடுங்கல் எதுவும் இல்லை.. ஆனால் இந்த சுஸ்மிதா தான் கண்ணில் விழுந்த தூசி போல் இலக்கியவிற்கு உறுத்த தொடங்கினாள். 

அன்றும் மாலை புகழேந்தி வரும் நேரத்தையும் தாண்டி அவன் வராது போக, சுஸ்மிதாவும், அவள் அம்மாவும் எங்கோ வெளியே சென்று வந்தவர்கள், வாசலில் இலக்கியா நிற்பது கண்டு என்னவென்று கேட்க,

“இன்னும் அவர் வரலை அதான் பார்த்தேன்…” என,

“போன் பண்ணி பாரு லக்கி…” என்றபடி சுஸ்மிதா வந்தாள்.

‘அய்யோ இவங்க கிட்ட நான் சொல்லியே இருக்க கூடாதோ…’ என்று தோன்ற,

“இருக்கட்டும் சுஸ்மி.. வேலை ஜாஸ்தி.. அதான் லேட் போல…” என்று சமாளிக்க,

“அட நீ என்ன இப்படி இருக்க.. எப்பவும் வீட்டுக்கு வர்ற நேரம் விட லேட் ஆனா நம்ம போன் போடுறதுலையே அடிச்சு பிடிச்சு கிளம்பி ஓடி வரணும்… இதெல்லாம் உனக்கு புரியாதா..??” என்று கேட்டபடி சுஸ்மிதா அமர,

‘ஒருவேளை இவங்க ஹஸ்பன்ட்டை இப்படிதான் படுத்தினாங்களா..’ என்று சிந்தித்தபடி பார்த்தாள் இலக்கியா..

“என்ன லக்கி அப்படி பார்க்கிற.. அவனுக்கு போன் போடு…” என,

“இல்ல இருக்கட்டும் சுஸ்மி..” என்று அவளும் மறுக்க,

“அட நான் சொல்றேன்ல போடு.. அவன் வரட்டும் ரெண்டுல ஒண்ணு கேட்கிறேன்…” என்று சுஸ்மிதா சொல்லும் போதே புகழேந்தி வந்துவிட்டான்..

உள்ளே சுஸ்மி இருப்பது தெரியாது அல்லவா, ஆகையால் உள்ளே நுழையும் போதே,

“லக்கி மை டியர்…” என்று செல்லமாய் மனைவியை அழைத்துக்கொண்டே வர, என்னவோ அதை கேட்டதும் சுஸ்மிதாவின் முகம் அப்படியே விழுந்துவிட்டது.

இலக்கியா பதில் பேசும்முன்னே, “ புகழ்.. நானும் இங்க தான் இருக்கேன்.. பொண்டாட்டி இருக்கான்னா நாங்க எல்லாம் கண்ணுக்கு தெரியலையா…” என்று கேட்கவும், அவள் கேட்டவிதமோ சத்தியமாய் அவள் கிண்டலாய் கேட்கவில்லை என்று இலக்கியா புரிந்துகொள்ள,

“ஹே சுஸ்மி.. நீ எப்போ வந்த…” என்றபடி புகழேந்தி அறைக்குள் சென்றுவிட்டான்..

“இருங்க சுஸ்மி.. அவருக்கு காபி கலக்கிட்டு வர்றேன்…” என்று இலக்கியாவும் எழ,

“இரு லக்கி.. அவனே கேட்கட்டும்.. இவ்வளோ நேரம் உன்னை வெய்ட் பண்ண வச்சான்ல.. அவனே கேட்கட்டும்…” என,

“ஐயோ.. பாவம்.. அவரே டயர்டா வந்திருப்பார்…” என்று அழகாய் அவள் பேச்சை மறுத்து சமையலறைக்குப் போனாள் இலக்கியா..

சரி கணவன் மனைவி இருவர் மட்டுமே இருக்கிறார்கள், புதிதாய் திருமணம் ஆனவர்கள் வேறு.. அவனும் இப்போது தான் வீட்டிற்கு வந்திருக்கிறான்.. கொஞ்சம் அவர்களுக்கும் தனிமை கொடுத்து கிளம்பி செல்வோம் என்றில்லாமல் புகழேந்தி வரும் வரை காத்திருந்து,

“நீ பண்றதெல்லாம் சரியில்ல புகழ்…” என்று குற்ற பத்திரிக்கை வாசிக்கத் தொடங்க, அவனோ திரு திருவென்று முழித்தான்.

இலக்கியாவும் அவனுக்கு காபி கொடுத்துவிட்டு அமர, “பாவம் உனக்காக அவ்வளோ நேரம் வெய்ட் பண்றா.. நீ என்னடான்னா வந்ததுமே லேப் டாப் எடுத்துட்டு உட்கார வர்ற…” என்று இலக்கியாவிற்கு பெரிதாய் தெரியாத விஷயத்தை கூட சுஸ்மிதா பெரிதாய் சொல்ல,

“வேலை நிறைய சுஸ்மி அதான்.. லக்கி எதுவும் நினைக்கமாட்டா…” என்று தன் மனைவியை பார்த்து சிரித்தவன், தன் வேலையை தொடங்க,

“என்னவோ போங்க.. நல்லதுக்கு சொன்னேன்.. இப்படியே நீ இருந்தா.. இவளும் என்னைபோல சீக்கிரமே அவங்க அம்மா வீட்டுக்கு போயிட போறா…” என்று சொல்லியபடி கிளம்பிச் செல்ல, அதை கேட்ட இருவருக்குமே பக்கென்று இருந்தது..      

“என்னங்க, இவங்க ஏன் இப்படி பேசுறாங்க…” என,

புகழேந்திக்குமே சுஸ்மிதா சொன்னது பிடிக்கவில்லை தான் இருந்தாலும் என்ன சொல்லி சமாளிக்க என்று தெரியாமல் “அவ நேச்சரே அப்படிதான்..” என்று சொல்லியபடி மீண்டும் தன் வேலையில் கவனம் செலுத்தினான்.  

“ஹ்ம்ம் எனக்கு என்னவோ பிரச்சனை இவங்க ஹஸ்பன்ட் கிட்ட இல்லன்னு தோணுது…” என்றாள் யோசனையாய்..

மடிக்கணினியில் வேலை பார்த்துகொண்டு இருந்தவன், சட்டென்று பார்வையை மட்டும் நிமிர்த்தி, “என்ன சொல்ற..” என,

“ஹ்ம்ம் எனக்கு தோணுது.. இவங்க தான் ஏதாவது செஞ்சு ரெண்டு பேருக்கும் சண்டை வந்திருக்கணும்..” என்றாள், தன் கணவன் தானே என்ற உரிமையில்.

ஆனால் புகழேந்திக்கோ, அவள் சொன்னதை அப்படியே எடுத்துகொள்ள தோன்றவில்லை. தோன்றவில்லையா இல்லை புரியவில்லையா என்று தெரியவில்லை.     

“உனக்கு சுஸ்மி பத்தி என்ன தெரியும்?? இல்லை அவ ஹஸ்பன்ட் பத்தி என்ன தெரியும்…” என்றான் ஒருமாதிரி குரலில்.

இலக்கியாவும் அந்த நேரத்தில் சுஸ்மிதா பற்றிய சிந்தையில், புகழின் முகமாற்றத்தை கவனிக்காது.

“எனக்கு அவங்க ஹஸ்பன்ட் பத்தி தெரியாது.. ஆனா சுஸ்மி.. அவங்க எதையுமே நார்மலா எடுத்துக்கிற மாட்றாங்க… சின்ன சின்னதை எல்லாம் பெரிசு பண்றாங்க.. நீங்க ப்ரண்ட்சும் சரி அவங்க வீட்லையும் சரி, அவங்க சொல்ற எல்லாத்துக்குமே சரி சரின்னு சொல்லி, ஒருவேளை இதே ஆட்டிட்யூட் சுரேந்தர் வீட்லையும் காட்டியிருக்கலாம் இல்லையா…” என்று கேள்வியாய் கேட்க,

“ம்ம்ச்.. லக்கி.. இது உனக்கு தேவை இல்லாத விஷயம்.. அவளுக்கு அங்க என்ன கஷ்டமோ.. வந்திட்டா.. இப்போ இங்க ஹேப்பியா தானே இருக்கா அது கண்ணுக்கு தெரியலையா..?? அப்புறம் இன்னொன்னு அடுத்தவங்க பெர்சனல்ல தலையிடுற உரிமை நமக்கு இல்லை…” என்று கடினமாய் சொல்ல,

இலக்கியா அதிர்ந்து போய் பார்த்தவள், அவன் கோவமாய் இருப்பது புரிந்தாலும், “அப்போ நம்ம பெர்சனல்ல அவங்க ஏன் உள்ள வர்றாங்க..” என்று கேட்டேவிட்டாள்..

எடுத்திருந்த விடுமுறைகளை எல்லாம் சரிசெய்ய, ஏற்கனவே ஓவர் டைம் பார்த்துகொண்டிருந்தவன், அன்று வேலையை வீட்டிற்கும் கொண்டு வந்திருக்க, அதுவோ முடியவே மாட்டேன் என்று இழுத்தது. ஏற்கனவே அந்த கடுப்பு வேறு.  இதெல்லாம் போதாது என்று இலக்கியாவும் இப்படி பேச, அவனுக்கு சுல்லேன்று வந்தது.

“என்ன பேசுற நீ.. அவ எங்க நம்ம பெர்சன்ல்ல வந்தா..??” என்று குரலை உயர்த்த,

இலக்கியாவிற்கும் அந்த நேரத்தில் ஒரு கோவம் தலை தூக்கியது.. நான் சொல்வதை எல்லாம் தவறாகவே புரிந்துகொள்கிறானே என்று.

“ஆமா பின்ன சும்மா சும்மா அது இதுன்னு சொல்லிட்டு இருக்காங்க.. நானும் தெரியாமத்தான் கேட்கிறேன், மத்த பிரண்ட்ஸ் எல்லாம் இப்படியா இருக்காங்க இல்லையே…சில விசயங்கள் என்னதான் பிரண்ட்ஸாவே இருந்தாலும் லிமிட்ல இருக்கனும்…” என்று பதிலுக்கு அவளுமே குரலை உயர்த்தினாள்..

இலக்கியாவும் பதிலுக்கு பதில் பேச, புகழேந்திக்கு எரிச்சல் இன்னும் கூடியதே ஒழிய, குறைந்தபாடில்லை…

‘எத்தனை டைம்ஸ் சொல்லிருப்பேன்.. என் பிரண்ட்ஸ் தான் இங்க எனக்கு எல்லாம்னு.. அப்போ எல்லாம் சரி சரின்னு கேட்டிட்டு இப்போ இப்படி பேசுறா…’ என்று நினைக்க,

“லக்கி போதும்.. அவ என்ன லிமிட் க்ராஸ் பண்ணிட்டா…??” என்று இறுகிய குரலில் சொல்ல,

“ஏன் அவங்க பேசுறது எதுவுமே உங்களுக்கு சரியா மட்டும் தான் படுதா.. மனசை தொட்டு சொல்லுங்க.. நான் உங்க பொண்டாட்டிங்க.. நான் உங்கட்ட எனக்கு தோணுறதை ஷேர் பண்ண கூடாதா…??” என,

“கண்டிப்பா பண்ணாலாம்.. ஆனா கண்டதையும் பண்ண கூடாது..” என்றான் என்னவோ போல்.

இலக்கியாவிற்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.. எது நடக்க கூடாது என்று நினைத்தாளோ அதுவே இப்போது நடக்கிறது.. இப்போது அவளுக்கு நன்றாகவே புரிந்தது புகழேந்தியின் பலவீனம் அவளது நண்பர்கள் என்று..அவர்கள் சொல்வதை அவன் அப்படியே கேட்பான்.. கண்களை மூடிக்கொண்டு நம்புவான் என்று.. சில விஷயங்கள் புரிந்தாலும் இவர்களை மீர முடியவில்லை.

ஆனால் இலக்கியா வேறல்லவே..?? அனைத்திற்கும் மேலாய் அவனுக்கு முதன்மையான உறவென்றால் அது அவளல்லவா.. அது ஏன் அவனுக்கு புரியவில்லை என்று இலக்கியா நினைக்க,

புகழேந்தியோ, ‘நம்ம என்ன சொல்லியும் இவ நம்மளை புரிஞ்சுக்கலையே.. அதிலும் சுஸ்மி பாவம்.. அவ அப்படியெல்லாம் சண்டை இழுத்து விடுறவளா..??’ என்று சிந்திக்க,

‘ச்சே தப்பு.. என்ன இருந்தாலும் லக்கி இப்போ தான் வந்திருக்கா, எல்லாரையும் புரிஞ்சுக்க நாள் ஆகும்.. கொஞ்சம் எடுத்து சொல்லி புரிய வைப்போம்..’ என்று கொஞ்சம் தன்மையாகவே சிந்திக்க, அவனது கோவம் குறைந்தது..

ஆனால் இலக்கியா மனதில் கோவமில்லை என்றாலும் ஒரு உணர்வு.. அது நல்லதாய் இல்லை… இந்த சுஸ்மிதா வரட்டும் போகட்டும் நட்பு பாராட்டட்டும்.. ஆனால் அந்த அளவில் இருக்க வேண்டும்.. இவள் நாட்டமையை எல்லாம் இங்கே காட்ட கூடாது என்ற எண்ணம் மனதில் வெகுவாக வலுப்பெற,

“நான் ஒன்னு மட்டும் உங்களை கேட்கலாமா..??” என்றாள் புகழேந்தியை பார்த்து.

“என்ன லக்கி…” என்று அவனும் கோவம் தணிந்து கேட்க, அவன் குரலே அவன் கோவம் போனதை சொல்ல, அடுத்து இலக்கியாவிற்கு என்ன தோன்றியதோ எழுந்து வந்து அவனிடம் அமர்ந்தவள், அவன் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டாள்..

படுத்தவள், அடுத்து எதுவும் பேசாமல் கண்களை இறுக மூடிக்கொள்ள, புகழேந்தியின் கரங்களை எடுத்து அவள் கரத்தோடு கோர்த்தும் கொண்டாள்..

அவள் இப்படி வந்து படுத்தது சந்தோசமாய் இருக்க, அவள் மௌனமாய் இருப்பது சங்கடமாகவும் இருந்தது..

“லக்கி என்னம்மா…???”

“புகழ்… இன்னொரு டைம்.. இப்படி நமக்குள்ள சண்டை வரக்கூடடாது.. சண்டையே வரக்கூடாதுன்னு இல்லை.. வரலாம் ஆனா அதுக்கு காரணம் நம்மளா இருக்கலாம்.. ஆனா அடுத்தவங்கனால நமக்குள்ள சண்டை வரக்கூடாது…” என்று கண்கள் திறக்காமலே சொல்ல,அவள் குரலே இலக்கியா எத்தனை வருந்துகிறாள் என்று காட்டிகொடுத்து.

“ம்ம்ம் லக்கி சாரிடா.. கொஞ்சம் வேலை டென்சன்.. ப்ளஸ் நீயும் விடாம பேசினயா அதான் நானும் கோவமா…” என்று இழுக்க,

“புகழ் நான் ஏற்கனவே சொல்லிருக்கேன்.. மத்தவங்க பண்றதுக்கு நீங்க சாரி சொல்லிட்டு என்கிட்டே வராதீங்கன்னு..” என,

“ம்ம்…” என்றவனுக்கு அடுத்து என்ன சொல்வது என்று தெரியவில்லை..

“நான் சுஸ்மிய தப்பா சொல்லலை புகழ்.. ஆனா யோசிங்களேன், நம்ம வீட்டுக்கு வர்றதுபோல ஜார்ஜ் வீட்டுக்கோ, இல்லை சந்தீப் வீட்டுக்கோ போறாங்களா இல்லையே.. இருங்க நான் பேசிக்கிறேன்…

நீங்க எல்லாம் சொல்றீங்க ஜார்ஜ் வைப் ரொம்ப பண்றாங்க அப்படி இப்படின்னு ஆனா அவங்க அப்படியில்லை.. நல்லாத்தான் பேசுறாங்க.. என்ன எல்லாரும் அவங்கவங்க லிமிட்ல இருக்கணும்னு நினைக்கிறாங்க அவ்வளோ தான்..

பக்குத்துல இருக்கனால சும்மா சும்மா ஒருத்தர் வீட்டுக்கு போறது சரின்னு யார் சொன்னது புகழ்.. அவங்க வீட்ல எத்தனையோ இருக்கும், இல்ல நம்ம வீட்ல் எவ்வளவோ இருக்கும்.. அன்னிக்கு கூட பார்த்தீங்க தானே, நீங்களும் நானும் நிக்கிறோம்.. சுஸ்மி கேசுவலா வர்றாங்க… இதெல்லாம் அவங்களுக்கே தெரியவேணாமா..” என்று அவளும் மெதுவாகவே சொன்னாள்..

இலக்கியா இப்படி பக்குவாமாய் எடுத்து சொல்லவும் லேசாய் புகழேந்திக்கு புரிவது போல் இருந்தது.. ஆனால் முழுதாய் சுஸ்மிதாவை குற்றம் என்றும் சொல்ல முடியாதே.. அவள் எப்போதுமே அப்படிதானே.. யார் இருந்தாலும் இல்லையென்றாலும்.. அவள் இப்படிதான் இருப்பாள் செய்வாள்..

என் மனைவி இப்படி சொல்கிறாள் நீ உன்னை கொஞ்சம் மாற்றிக்கொள் என்று அவளிடம் சொல்ல முடியுமா.. இல்லைதானே.

இதெல்லாம் தாண்டி சுஸ்மிதா பாவம் என்ற எண்ணமே அவனுக்கு நிறைய இருந்தது.. அவள் கணவனை விட்டு வந்து இருக்கிறாள்.. நாமும் புரிந்துகொள்ளாது அவளை பேசிட கூடாது என்று அப்போதும் பொறுமையாய் இலக்கியாவிற்கு எடுத்து சொன்னான்..

கணவன் சொல்கிறானே என்று சரி சரி என்று தலையை உருட்டிய இலக்கியா, தன் எண்ணத்தில் இருந்து சிறிதும் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை..

மறுநாள், எங்கே சுஸ்மிதா வந்துவிடுவாளோ என்று  எண்ணியே வாசலை பார்த்து பார்த்து வேகமாய் வேலையை முடித்தவள், கதவடைக்க போக, வந்தது சுஸ்மிதா இல்லை.. ஜார்ஜின் மனைவி மேரி..

“மேரி வாங்க…” என்று வரவேற்க,

“வேலை எல்லாம் முடிஞ்சதா லக்கி..” என்றபடி அவளும் வந்தவள், இலக்கியா எதிர்வீட்டை  காண்பதை பார்த்துவிட்டு, “சுஸ்மிதா இன்னிக்கு வரமாட்டாங்க.. அவங்க பேமிலியோட எங்கயோ போயிருக்காங்க…” என,

“ஓ.. எனக்கு தெரியாதே.. எப்பவும் இது அவங்க வர்ற டைம் அதான்…” என்று இழுத்தாள் இலக்கியா..

“ஹ்ம்ம் அவங்க அப்படிதான் நம்மகிட்ட எதுவும் சொல்ல மாட்டாங்க.. ஆனா நம்ம விஷயம் எல்லாத்துலயும் அவங்க இருப்பாங்க..” என்று மேரி சொல்ல,

நாம் நினைத்ததை மேரி அப்படியே சொல்கிறாளே என்று அதிர்ந்து போய் பார்த்தாள் இலக்கியா..

“என்ன லக்கி அப்படி பார்க்கிறீங்க… நேத்து சாயங்காலம் நான் இங்க வந்தேன்..” என, அப்போதே புரிந்தது, வந்தவள் உள்ளே வராமல் போனதன் காரணம், தானும் புகழேந்தியும் சண்டை போட்டுக்கொண்டு இருந்ததை கேட்கவோ காணவோ நேர்ந்திருக்கும் என்று..

ஒன்றும் சொல்லாமல் இலக்கியா தயக்கமாய் பார்க்க,

“தப்பா நினைக்காத லக்கி.. பேசலாம்னு தான் வந்தேன்.. ஆனா இங்க கொஞ்சம் சூழ்நிலை சரியில்ல அதான் அப்படியே போயிட்டேன்.. அப்புறம் சுஸ்மி.. நீயும் என்னை போல தான் அவங்களை பத்தி நினைக்கிறன்னு நேத்து தான் புரிஞ்சது.. அதான் உன்கிட்டயாது என் மனசில இருக்கிறதை சொல்ல வந்தேன்..” என்றவள்,

“சுஸ்மி நல்ல டைப் தான்.. ஆனா எங்க எப்போ எப்படி நடந்துக்கணும்னு தெரியாது.. இல்லை வேணும்னே பண்றாங்களான்னும் தெரியலை.. நானும் மேரேஜ் ஆகிவந்த புதுசுல உன்னை போல தான் இருந்தேன் லக்கி.. சுஸ்மி அப்போ எங்க வீட்டுக்கும் வருவாங்க.. இங்க போலவே தான் அங்க வந்தும் எதாவது சொல்லிட்டு செஞ்சிட்டு போயிடுவாங்க..

நாள் ஆக ஆக அது எனக்கும் எங்க அத்தைக்கும் கொஞ்சம் பிரச்சனை வர ஆரம்பிச்சது.. அதுனால தான் நான் அவரை கொஞ்சம் இறுக்கி பிடிச்சேன்.. எனக்கு தெரியும் இவங்க எல்லாம் அதை பேசுறாங்கன்னு.. ஆனாலும் அதுபத்தி எனக்கு கவலை இல்லை.. என் குடும்பத்தில தேவையில்லாத பிரச்சனை வர நான் விரும்பலை..

அதான் உனக்கும் சொல்லிட்டு போக வந்தேன்.. ஆரம்பத்துல இருந்தே இடம் கொடுத்திடாத லக்கி.. சுஸ்மிதா எப்படி பட்ட டைப்பா வேணா இருக்கட்டும்.. ஆனா நமக்கு நம்ம லைப் தானே முக்கியம்….” என்று மேரி சொல்ல,

இலக்கியாவிற்கு அவள் சொன்னது சரியென்றே பட்டது..  ஆனால் புகழேந்தியிடம் இன்னொரு முறை சுஸ்மிதா பற்றி பேசி அது இருவருக்குள்ளும் சண்டை வருவதை அவள் விரும்பவில்லை. சரி பொறுத்திருந்து பார்ப்போம் என்று எண்ணியிருக்க, இலக்கியாவின் பொறுமையும் காற்றில் பறக்கும் நாள் சீக்கிரமே வந்தது..

 

 

 

 

 

 

 

 

 

Advertisement