Advertisement

                              பூந்தேன் – 3

என்ன பதில் சொல்வது?? இந்த கேள்வி மட்டுமே புகழேந்திக்குள் சகலமுமாய் வியாபித்து இருக்க, வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.

நண்பர்கள் எல்லாம் யோசித்து முடிவெடு என்று சொன்னாலும், அவர்கள் அனைவருமே இவன் சம்மதிக்க வேண்டும் என்றுதான் விரும்பினர். சுஸ்மிதா ஆரம்பத்தில் அது இது என்று சொன்னாலும், பின் உன் வாழ்க்கை உன் முடிவு என்று விட்டுவிட்டாள். இவர்களின் பெற்றோர்களும் அதைத்தான் சொல்லினர்..

“இந்த காலத்துல யாரும் இப்படி தேடி வந்து எல்லாம் பேச மாட்டாங்க புகழ்.. பொண்ணு பார்க்கவும் நல்லவிதமா இருக்கா.. ஒருவகைல சொந்தம், சந்தோசமா முழுமனசா சரின்னு சொல்லு… நீயும் கல்யாணம் குடும்பம்னு இருக்கவேணாமா… எத்தனை நாள் தனியா இருப்ப…” என்று சொல்லிவிட,

அவனுக்கு சரி என்று சொல்லக் கூட தயக்கமாய் இருந்தது.. இதெல்லாம் விட, முதலில் அந்த பெண் ‘இலக்கியா…’ அவளுக்கு அவனை பிடித்திருக்கிறதா என்ற எண்ணம் வேறு.. மனதில் சட்டென்று ஒரு யோசனை தோன்ற, குணசேகரனுக்கு அழைத்து, 

“தாத்தா, இலக்கியாக்கு ஓகேவான்னு கேட்டீங்களா…” என,

அவரோ “நாங்க சொன்னா கேட்டுக்க போறா..” என்று சொல்ல,

“இல்ல தாத்தா.. என் போட்டோ அனுப்புறேன்.. டீடைல்ஸ் அனுப்புறேன்.. அவங்க முடிவு என்னனு சொல்லுங்க.. அப்புறம் தான் நான் என் முடிவு சொல்வேன்…” என்று சற்று அழுத்தமாகவே பேசியவன், அவருக்கு வாட்ஸப்பில் அனுப்பியும் வைத்தான்.. இப்போது தான் மனம் சற்று லேசாய் ஆனது..

முடிவை அவர்கள் கையில் விட்டாயிற்று. அவனுக்கு இலக்கியாவை வேண்டாம் என்று சொல்ல எக்காரணமும் இல்லை.. ஆனால் அவளுக்கு எதாவது காரணங்கள் இருக்கலாம் அல்லவா. எதுவானாலும் சரி, தான் எதிலும் தலையில் ஏற்றிக்கொள்ள வேண்டாம் என்று இருக்க, மனதில் தோன்றிய அந்த அமைதியும் அடுத்து வந்த நாட்களில் இல்லாமல் போனது.. அந்த பக்கம் இருந்து எவ்வித பதிலும் வந்த பாடில்லை..

‘இதென்னடா பெரும் தொல்லையா போச்சு…’ என்று வேலையில் மூழ்க, அதுவோ இவனை கழுத்தை பிடித்து வெளி தள்ளாத குறைதான்..  இப்படி இருக்கையில்  ஒருநாள் மாலை ஐந்து மணி போல் அவன் அலைபேசி சிணுங்க எடுத்து பார்த்தான்.. புது எண்..   

“ஹலோ…”

“Mr. புகழேந்தி…???” அழகிய பெண் குரல்..

“எஸ்… நீங்க???”

“ஹாய்… நான் இலக்கியா பேசுறேன்…”

‘இலக்கியாவா…….’ என்று அவன் மனதின் குரல் இழுத்த இழுப்பில், பதில் பேச மறந்தான். எதிர்பார்க்கவே இல்லை. நிஜமாகவே அவன் கண்கள் இமைக்க மறந்தது தான் ஒரு நொடி…

“ஹ… ஹல்லோ… புகழேந்தி…”

“யா.. எஸ்…”

“ப்ரீயா இருக்கீங்களா.. பேசலாமா..??”

அவன் வேலையாகவே இருந்தாலும் அந்த நேரம் புகழேந்தி மறுத்திருப்பானா என்ன??? மறுக்க கூடிய குரலாகவா இருக்கிறது.. அதிலும் முதல் முறை அவளாகவே அழைத்து பேசலாமா என்று கேட்கிறாள்.. எந்த மடையனாவது வேலையிருக்கிறது என்பானா??

‘ஐயோ இந்நேரம் பார்த்து பக்கதுல எவனும் இல்லையே…’ என்று சுத்தி முத்தி பார்த்து,

“யா யா சொல்லுங்க…” என,

“நான் உங்க ஆபிஸ் ஆப்போசிட்ல ஒரு ஜூஸ் கார்னர் இருக்கே.. அங்க இருக்கேன்…” என்று சொல்லி அவள் லேசாய் தயங்கிய விதமே, நீ இங்கு வரமுடியுமா என்று அழைப்பதாய் இருக்க,

“ஒரு பைவ் மினிட்ஸ்ல வந்திடறேன்…” என்றவன் அழைப்பை துண்டித்துவிட்டு, எழுந்து நின்றவனுக்கு, மூச்சே அப்போது தான் விட முடிந்தது.. 

“அவளே போன் பண்றா, அவளே பார்க்க வந்திருக்கா.. என்னடா நடக்குது இங்க… சம்மதம் சொல்ல வந்திருப்பாளா… இல்லை முகத்துக்கு நேரா நோ சொல்வாளோ…” என்று அவனாகவே எண்ணிக்கொண்டவன், அவன் ஹெட்டிடம் அது இதென்று ஒரு காரணம் சொல்லி, ஒருவழியாய் கிளம்பி கீழே வரவே பத்து நிமிடங்கள் ஆகியது..

‘பஞ்சுவாலிட்டி இல்லன்னு நினைப்பாளோ…’ என்று தோன்ற, வேக வேகமாய் எட்டுகளை போட்டு, அந்த ஜூஸ் கார்னர் உள்ளே நுழைந்து கண்களால் அவளை தேட, இலக்கியா புகழேந்தியை கவனித்துவிட்டு,

“ஹே…!!!! ஹாய்…” என்று கையசைக்க, அந்த நொடியில் மொத்தமாய் வீழ்ந்து போனான் புகழேந்தி..

முதலில் தன்னை தேடி வந்திருக்கிறாள் என்பதே ஒரு மகிழ்வை கொடுக்க, பிடிக்காமலா இத்தனை தூரம் வந்திருக்க போகிறாள் என்ற நினைப்பையும் கொடுக்க, ஏன் நான் எதில் குறை என்று லேசாய் தான் ஆண்மகன் என்ற கர்வமும் அவனுள் எட்டிப்பார்க்க, அதற்குமேல் அவனால் ரொம்ப ரொம்ப நல்லவன் போல உன் முடிவுதான் எல்லாம் என்று அவளிடம் விட்டு இருக்க முடியும் என்று தோன்றவில்லை.

‘அவ நோன்னு சொன்னா கூட கன்வின்ஸ் பண்ணிடனும்…’ என்று எண்ணம் வெகுவாய் அவனுள் வலுப்பெற, ஆழ்ந்த மூச்சை வெளிவிட்டவன்,

“ஹாய்…” என்றபடி சிரித்தே அவள் முன் அமர்ந்தான்..

முன் பின் பெண்களிடம் பேசி பழகியறாதவன் எல்லாம் இல்லை.. ஆனால் என்னவோ முதல் முறையாக பெண் என்று ஒருத்தியை இப்போது தான் நேரில் பார்ப்பது போல் ஓர் படபடப்பு.. மீண்டும் இலக்கியா ஹாய் சொல்ல… அவனும் பதிலுக்கு ஹாய் சொல்ல, அடுத்து சில நொடிகள் மௌனம் மட்டுமே..

“டிஸ்டர்ப் எதுவும் பண்ணிட்டேனா…” என்று இலக்கியா பேச்சைத்  தொடங்க,

“நோ நோ… வீட்டுக்கு தான் கிளம்பிட்டு இருந்தேன்…” என்று பெருந்தன்மையாய் பதில் சொல்ல, அடுத்து அடுத்து அப்படியே பேச்சு தொடர்ந்தது..

‘எப்பவும் வீட்டுக்கு இந்த டைம்ல தான் கிளம்புவீங்களா…’

‘எப்பவும் இல்லை.. இன்னிக்கு இந்த டைம்…’

‘என்ன ஜூஸ் சொல்லட்டும்…’

‘இவ்வளோ நேரம் ஆர்டர் கூட பண்ணாம வெய்ட் பண்ணீங்களா…’

“பண்ணீங்களா இல்லை… பண்ணியா??? இப்படி கேட்கணும்…”

‘சரி சரி… என்ன ஜூஸ் சொல்லட்டும்..’

‘எனக்கு எப்பவும் ஆரஞ்சு ஜூஸ் தான்.. மைல்ட்டா ஐஸ் போட்டு…’

‘அட எனக்கும் அதுதான் பிடிக்கும்…’

‘வேறென்ன பிடிக்கும்…???’

இருவருக்குள்ளும் முதலில் சில நொடிகள் தோன்றிய தயக்கம் எல்லாம் அடுத்தடுத்து பேச்சில் காணமல் போக, சொல்லுங்க என்று ஆரம்பித்து, உனக்கென்ன பிடிக்கும், எனக்கென்ன பிடிக்கும் என்று ஆளுக்கு ஒரு லிஸ்ட் போட்டு சொல்லி, அது இதென்று பேச, நேரம் போனது தெரியவில்லை…

அவளுக்கு அத்தனை நேரம் புகழேந்தியாய் இருந்தவன், சற்று நேரத்திலேயே புகழ் என்று மாறியிருக்க, அவனுக்கோ, ங்க போட்டு ஆரம்பித்தவன், அடுத்து நீ என்று சொல்லி, அடுத்து லக்கி என்றே அழைக்க, கொஞ்ச நேரத்திலேயே இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்திருப்பது இருவருக்குமே உணர்ந்துகொள்ள முடிந்தது. 

‘என்னை பிடிச்சிருக்கா…??’ என்பது போன்ற கேள்விகள் எல்லாம் இருவரிடமும் இல்லை.. மிக மிக இயல்பாய் பேச்சு வந்தது.  தருவித்து குடித்த பழச்சாறு செரித்து போகும் அளவு பேசி, மீண்டும் நா வறண்டு போக, மீண்டும் ஒரு முறை பழச்சாறு குடித்து, ஆனாலும் பேச்சு மட்டும் தீரவில்லை..

என்னவோ இன்றே ஒருவரை பற்றி ஒருவர் இன்றே அறிந்துகொள்ளும் வேகம்.. நிறைய நிறைய பேசினர்.. ‘ஸ்வீட் நத்திங்க்ஸ்’ தான் எல்லாமே… கிளம்புவதற்கு மனமே வரவில்லை..

ஆனாலும் கிளம்பித்தானே ஆக வேண்டும்.. பொதுவாய் அவனை யாரும் கேட்க போவதில்லை ஏன் தாமதம் என்று.. ஆனால் அவளுக்கு இரண்டொரு முறை தோழிகளிடமிருந்து அழைப்பு வந்துவிட்டது..    

“வீட்டுக்கு எப்படி போவீங்க..??”

“இப்போ பைக் தான்.. மேரேஜ் அப்புறம் கார் வாங்கணும்…”

“மேரேஜ் அப்புறம்னாலுமே பைக்கே நல்லாத்தான் இருக்கும்.. ஐ லவ் பைக் ரைடிங்…”

“எனக்கும்…. செங்கல்பட்ல இருந்து வந்தியா? இப்போ எப்படி போவ…??”

“இல்ல இல்ல… இங்க தான் வொர்க் பண்ணறேன்… ஹாஸ்ட்டல ஸ்டே… மன்த்லி ஒன்ஸ் வீட்டுக்கு போவேன்…”

“ஜாப் எப்படி..??”

“ஹ்ம்ம் ஜாப் நல்லாத்தான் இருக்கு… பட் மேரேஜ்க்கு அப்புறம் ஜாப் விட்ருவேன்…”

“ஏன்???”

“எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லை.. பட் வீட்ல இருந்திட்டே ஏதாவது செய்வேன்.. கண்டிப்பா என்னை நான் சும்மா வச்சுக்கமாட்டேன்…”

“எனக்கும் வீட்ல யாரவது நான் வரும் போது இருக்கணும் நினைப்பேன்…”

“எனக்குமே இப்படிப்பட்ட தாட்ஸ் நிறைய இருக்கு.. வேலை வேலைன்னு இருந்திட்டு பெர்சனல் லைப்ப மிஸ் பண்ணிட கூடாதே..” என்று அவள் சொல்லும் போதே, அவனுக்கு இன்னும் அவளை பிடித்திருந்தது.. இலக்கியாவிற்குமே அப்படித்தான்..

முதலில் புகழேந்தி பற்றி வீட்டினர் சொல்லும் போது, பெரிதாய் எவ்வித அபிப்ராயமும் இல்லை. பின் அவன், அவள் முடிவு தான் முதலில் என்று சொல்லவும், மனதில் லேசாய் ஒரு நல்லெண்ணம்..

சாந்தி ‘என்ன சொல்கிறாய்…’ என்று மகளிடம் கேட்டதற்கு, நேரில் பார்த்து பேசித்தான் முடிவு என்று திடமாய் சொல்லிவிட்டாள்.. இலக்கியாவை பொருத்தமட்டில் அவள் வாழ்வு அவளுக்கு மிகவும் முக்கியம்.

அதிலும் திருமணம்… அதன் பின்னான வாழ்வு என்பது அவளுக்கு நினைத்தது எல்லாம் நடக்கும் வாழ்வாய் அமையாவிட்டாலும், நிம்மதியும் ஒரு மனத் திருப்பதியும் கொடுப்பதாய் இருந்திட வேண்டும் என்று நினைப்பாள்.

வீட்டில் சொல்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக எல்லாம் அவளால் தலையாட்ட முடியாது.. ஆகையால் நேரிலே வந்துவிட்டாள். அவளை பொருத்தமட்டில் இதில் எவ்வித தவறு இருப்பதாகவும் தெரியவில்லை.. பிறர் தவறாய் நினைத்தாலும் அதை பற்றி கவலையில்லை.

குணசேகரிடம், புகழேந்தி அலைபேசி எண் வாங்கி, அவனுக்கு அழைத்து பேசும் வரைக்கும் கூட அவளிடம் அந்த திடம் இருந்தது.. பிடித்தால் சரி என்பது.. இல்லையா அவனிடமே தன் பதிலை சொல்லி கிளம்பிடுவது என்று இருந்தாள். ஆனா இருவருக்குமான பேச்சு தொடங்கவும் அத்தனை எளிதில் அவளாலும் கிளம்பிட முடியவில்லை.. கிளம்பும் எண்ணமும் வரவில்லை.

பார்த்ததுமே இவன் கொஞ்சம் ஓகே தான் என்று தோன்றிய எண்ணம், நேரம் செல்ல செல்ல, டபிள் ஓகே என்று சொல்ல வைத்தது..

இருவருமே அங்கிருந்து  கிளம்பி வெளிவர, “ஓகே அப்போ வீட்ல இருந்து பேச சொல்றேன்…” என்று இலக்கியா திரும்ப,

“நேரா பார்த்திட்டோமே.. நேராவே பதில் சொல்லலாம்..” என்று அவளை இருத்தி வைத்து பேச,

“ஹ்ம்ம் பதில் உங்களுக்கு இத்தனை நேரம் புரிஞ்சிருக்கும்னு நினைச்சேன்.. வீட்ல பேச சொல்றேன் சொன்னது, மேற்கொண்டு என்ன செய்றதுன்னு பேச…” என்று அவள் சிரித்து சொல்ல,

“ஓ…!!!” என்றவன் முகமும் சிரிப்பை ஒட்டிக்கொண்டது.

“உங்க பைக் எங்க??”

“ஆபிஸ் பார்க்கிங்ல…” என,

“ஓ.. ஓகே… அப்போ நான் கிளம்புறேன்… இப்போவே நேரமாச்சு…” என்று இலக்கிய கிளம்ப போக,

“ஹாஸ்டல் எங்க லக்கி???” என்றான் அப்போது தான் தோன்றி..

அவளும் பதில் சொல்ல, “எங்க ஏரியா கிராஸ் பண்ணி தான் போகணும்.. நானே டிராப் பண்ணிடவா..??” என, உடன் வருவாளோ என்ற கேள்வி எழுந்தாலும், வரவேண்டுமே என்ற ஆவலும் தோன்றியது.

“ஹ்ம்ம் குட்.. எப்படியும் ரெண்டுபேரும் அந்த சைட் தானே போகணும்…” என்றவள்,

“ஓகே பைக் எடுத்திட்டு வாங்க…” என்று சொல்ல, அவளது பிகு இல்லாத பேச்சும், ‘நான் வரமாட்டேன்…’ அது இதென்று சொல்லி மறுக்காமல் சீன் காட்டாமல், இருவருமே தனி தனியாய் ஒரே பக்கம் செல்ல, ஒன்றாகவே செல்வோம் என்று இலக்கியா சொன்னது மகிழ்ச்சியாகவே இருந்தது..

“சரி வந்திடுறேன்..” என்று அவன் போக, இலக்கியா அவள் அம்மாவிற்கு அழைத்து “இருவருக்குமே சம்மதம்…” என்று சொல்லிவிட, சாந்திக்கு அப்போது தான் மனம் நிம்மதியாய் இருந்தது.

மேலும் புகழேந்தி தான் தன்னை விடுதியில் விடுவதாகவும் சொல்ல, முதலில் சாந்திக்கு வேண்டாம் நீ தனியே போ என்று சொல்ல வாய் வந்தாலும், மகளது குரலில் இருந்த உற்சாகம் அவரை தடுத்தது.

‘பார்த்து போ.. இனிமே இப்படி லேட் பண்ணிடாத…’ என்று லேசானதொரு கண்டிப்போடு நிறுத்திவிட்டார்.

அடுத்த கொஞ்ச நிமிடத்தில் புகழேந்தி பைக்கோடு வந்துவிட, “அம்மாக்கிட்ட பேசினேன்… அவங்களுக்கு சந்தோசம்…” என்றபடி வண்டியில் ஏறி அமர்ந்தவள், சொல்ல,

“அதுக்குள்ள சொல்லிட்டியா… முறையா நான் தானே சொல்லணும்…” என்றபடி வண்டியை கிளப்பினான்..

புகழேந்தி மனதிற்குள் ஓர் ஆசை.. அவனது வீட்டை தாண்டி தான் போக வேண்டும்.. வீட்டிற்கு வா என்று அழைக்கவும் அசை.. அழைத்தால் வருவாளோ என்றும் இருந்தது.. ஆசையும் தயக்கமும் கலந்து அவனை அழைப்பு விடுக்க முடியாமலே செய்ய,

“யார் சொன்னா என்ன புகழ்… நல்ல விஷயம் லேட் பண்ணாம சொல்லிடனும்..” என்றவள், “ஹே… உங்க வீடு தாண்டி தானே போகணும்…” என,

‘எஸ்.. எஸ்.. அவளே கேட்டிட்டா… தெய்வமே… எங்க இருந்துயா இவளை என் கண்ல காட்டினா… கோடானு கோடி நன்றிகள்…’ என்று இறைவனுக்கு ஒரு சலாம் போட்டவன் மனம் அடுத்த நொடி சுருங்கிவிட்டது..

வீட்டில் யாருமே இல்லை.. அதிலும் வீடு இருக்கும் கோலம் நினைவில் வந்தது. ஒரு ஒழுங்கில் இல்லை.. கண்டபடி கிடந்தது.. வார இறுதியில் சுத்தம் செய்யலாம் என்று இருந்தான்..

ஆனால் இலக்கியா இப்படி கேட்கவும், ‘என்னோடு வா வீடு வரைக்கும்.. என் வீட்டை பார் என்னை பிடிக்கும்…’ என்றெல்லாம் அவனால் கண்டிப்பாய் பாடிட முடியாது. நேரம் வேறு ஓடிக்கொண்டே இருக்கிறது..

மனதில் இத்தனை ஓட, சாலையில் வேறு கவனம் வைத்து வண்டி ஓட்டவேண்டுமாய் இருந்தது.. சட்டென்று அவள் கேட்டதற்கு பதில் சொல்ல முடியவில்லை..

“புகழ்… நான் கேட்டது கேட்கலையா???” என்று இலக்கியா மீண்டும் கேட்க, கண்ணாடி வழியே அவள் முகம் பார்க்க, அவள் அப்போதும் சாதாரணம் போல தான் இருந்தாள்.

‘எப்பவுமே ரிலாக்ஸா இருக்கா.. நான் தான் டென்சன் ஆகுறேன்…’ என்று நினைத்தவன்,

“வீட்ல யாருமில்லையே…” என்று தயங்க,

“வீடு இருக்கே… ஜஸ்ட் பார்க்கணும் தோணிச்சு.. அவ்வளோதான்.. கண்டிப்பா போகணும்னு இல்லை.. அந்த சைட் போறோமேன்னு தான் கேட்டேன்…” என,

“ம்ம்…” என்றவன் ஒரு வளைவில் திரும்பி சற்றே ஓரமாய் வண்டியை நிறுத்தினான்..

“என்னாச்சு..” என்றபடி இலக்கியா இறங்க,

“உன் அம்மா நம்பர் சொல்லு  லக்கி…” என,

“ஏன்…???” என்று அவளோ லேசாய் அதிர்ந்து கேட்க,

“குடு சொல்றேன்…” என்றவன், அவள் சொல்ல சொல்ல எண்களை அழுத்தி சாந்திக்கு பேசினான்..

“ஹலோ அத்தை.. நான் புகழேந்தி…”

“சொல்லுங்க தம்பி.. இப்போதான் இலக்கியா பேசினா.. ரொம்ப சந்தோசம்.. நல்ல முடிவு சொல்லிருக்கீங்க.. பயந்துட்டே இருந்தே.. பார்க்கணும்னு போறாளே என்ன சொல்வாளோன்னு..”

“ம்ம் எங்களுக்கும் சந்தோசம் தான் அத்தை…” என்று இலக்கியாவையும் தன்னோடு சேர்த்தே சொன்னவன்,

“அப்புறம் அத்தை.. இலக்கியா ஹாஸ்டல் எங்க ஏரியா தாண்டி தான்.. சோ எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகலாமா…” என்று அனுமதி வேண்ட, சாந்திக்கும் சரி, இலக்கியாவிற்கும் சரி ஆச்சர்யமாய் இருந்தது..

புகழேந்தி சாந்தியிடம் பேசவேண்டும் என்றதுமே இலக்கியா வேர் எதுவோ பேச கேட்கிறான் போல என்றுதான் நினைத்தாலே தவிர, இப்படி எண்ணவில்லை.. ஆனால் அவன் கேட்டதும் நன்றாய் இருந்தது..

‘ஹ்ம்ம் கொஞ்சம் இல்ல ரொம்பவே நல்லவன் தான் போல…’ என்று நினைத்தபடி ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தபடி அவனை சைட் அடித்து  நிற்க,

அலைபேசியில் சாந்தியோ என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் லேசாய் திணறி பின், “ரொம்ப நேரமாச்சே…” என,

“ஹ்ம்ம் சரிங்கத்தை… அப்போ இன்னொரு நாள் பார்த்துக்கலாம்…” என்று புகழேந்தி பட்டென்று சொல்லிவிட, அவன் கோவமாக எல்லாம் சொல்லவில்லை, ஆனால் சாந்திக்கு தான் என்னவோ போல் ஆனது..

“தம்பி.. தப்பா நினைக்காதீங்க…” என,

“இதில தப்பா நினைக்க என்ன இருக்கு அத்தை.. நான் எதும் நினைக்கமாட்டேன்…” என்றான் அப்போதும் புன்னகை மாறாமல்..

“ஹ்ம்ம் ரொம்ப லேட் பண்ணாம அவளை ஹாஸ்ட்டல்ல விட்ருங்க போதும்…” என்று மட்டும் சாந்தி சொல்ல, அதுவே அவனுக்கு அவர் சம்மதம் சொன்னதாய் பட்டது.

“தேங்க்ஸ் அத்தை…” என்றவன் அடுத்து இலக்கியாவை ஏற்றிக்கொண்டு வண்டியில் பறந்தான்..

 

Advertisement