Advertisement

பூந்தேன் – 2

அடுத்த வாரம் வருவதாய் சொல்லிச் சென்ற புகழேந்தியின் சொந்தக்கார தாத்தா, சொன்னது போலவே மறுவாரமும் வந்தார். அவர்மட்டும் வரவில்லை உடன் அவர் மகள், மருமகன் என்று அவர்களையும் அழைத்து வந்திருந்தார்..

அவர்கள் வந்த நேரம், புகழேந்தி அலுவலகத்தில் இருந்து கிளம்பி வீட்டிற்கு வந்துகொண்டு இருந்தான்.. வீடு பூட்டியிருக்கவும், அவனுக்கு அழைக்க, இதோ கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவதாய் சொன்னவன், வேகமாகவே வந்து சேர்ந்தான்..

“என்ன புகழ் பைக்க ஸ்பீடா ஓட்டிட்டு வந்தியா…” என்று கேட்டவரை பார்த்தவன், அப்போது தான் கவனித்தான் அவரோடு மற்ற இருவரும் இருப்பதை..  வரவேற்பாய் ஒரு புன்னகை சிந்தியவன், கேள்வியாய் அந்த தாத்தாவை காண,

“ஸ்.. பாரு சொல்ல மறந்திட்டேன்.. இது என் பொண்ணு… சாந்தி.. இவர் என் மருமகன் சுகுமார்.. என் பேர் இன்னும் சொல்லவே இல்லை… நான் குணசேகரன்…” என, 

“வாங்க வாங்க உள்ள வாங்க…” என்று அனைவரையும் வரவேற்று வீட்டினுள்ளே முன் சென்றவன், சோபாவின் மீது கிடந்த அவனது துணிமணிகளை எல்லாம் வேகமாய் சுருட்டி உள்ளே அறையில் வீசி, வெளி வர,

“பேச்சிலர் வீடு எப்படி இருக்கும்னு தெரியும் தம்பி.. டென்சன் ஆக வேணாம்…” என்று சாந்தி சொல்ல,

“அதுக்கில்ல ஆன்ட்டி…” என்று இழுத்தவனை, தடுத்த குணசேகரன்,

“இவங்க உனக்கு அத்தை மாமா வேணும் புகழ் அப்படியே கூப்பிடு…” என்று சொல்ல, சரி என்று தலையாட்டினான்.

இந்த சொந்தங்கள் எல்லாம் இத்தனை நாள் எங்கு போனது என்று தெரியவில்லை. தாத்தா பாட்டி இறந்தபொழுது இவர்கள் எல்லாம் வந்தார்களா என்ன என்று கூட அவனுக்கு நினைவில் இல்லை. ஆனாலும் இத்தனை நாள் கழித்து தேடி வந்து பார்ப்பதும் பேசுவதும் மனதில் ஒரு இதம் கொடுத்தாலும்,. ஆச்சர்யமாகவும் இருந்தது..

“நாங்க ரொம்ப ரெண்டு வருஷம் முன்னாடி தான் இங்க செங்கல்பட்ல வந்து செட்டில் ஆனோம்..” என்று சுகுமார் சொல்ல,

‘ஓ.. அப்போ நான் இவங்களை பார்த்திருக்க வாய்ப்பே இல்லை…’ என்று எண்ணியவன்,

“சரிங்க அங்கிள்…” என்றவன், “இல்லை… சரிங்க மாமா..” என்று அவனே தன்னை திருத்தி சொல்ல,

“நான் சொல்லலை… நல்ல பையனா இருக்கான் அப்படின்னு…” என்று குணசேகரன் சொல்ல,

“அப்பா நீங்க ஒருத்தரை சொன்னா அது தப்பாகுமா..” என்று சாந்தியும் சொல்ல,

‘என்னடா நடக்குது இங்க…’ என்பது போல் புகழ் பார்த்திருக்க, மண்டையில் மணி அடித்தது, வாய் பார்த்து நிற்காதே புகழ்.. எதாவது கொடுத்து உபசரி என்று. வீட்டில் என்ன இருக்கிறது என்ன இல்லை என்று கூட தெரியவில்லை. வந்தவர்களை அமர வைத்துவிட்டு வெளி சென்று வாங்கி வருவதும் சரியாய் படவில்லை அவனுக்கு..

அவர்களோ, அவர்களுக்குள்ளே பேசியபடி இருக்க, என்னவோ அவர்கள் வீட்டில் வந்து தான் தனியே நிற்பது போல் ஒரு எண்ணம் தோன்ற, அங்கிருந்து நகர வேண்டும் போல் இருந்தது.

“ஒரு டூ மினிட்ஸ், ட்ரெஸ் மாத்திட்டு வந்திடுறேன்…” என,

“நீ போ புகழ்.. பிரெஷ் ஆகு…” என்று குணசேகரன் சொல்ல, வேகமாய் உள்ளே அறைக்கு வந்தவன் அப்படியே கட்டிலில் பொத்தென்று அமர்ந்தான்.  இப்படியெல்லாம் வீட்டிற்கு ஆட்கள் வந்து, அவர்களை உபசரித்து, பேசி, செய்து நல்முறையில் அனுப்பிவைப்பது என்பது எல்லாம் அவன் இதுவரையில் செய்திடாத ஒன்று..

நண்பர்கள் வந்தால், அவர்களே எதையாவது செய்வதும் உண்டு, இல்லை இவனுக்கும் சேர்த்தே எடுத்தும் வந்து விடுவர்.. அவர்களை பொருத்தவரைக்கும் புகழேந்தியின் வீடு அனைவருக்குமே சொந்த வீடு போல. அவனுக்கும் அவர்களிடம் எவ்வித வேறுபாடும் இல்லை. 

ஆனால் இப்போது சொந்தம் என்று சொல்லி இப்படி வந்திருக்க, என்னடா செய்வது என்று மண்டை காய்ந்தது.. பிரிட்ஜில் இருக்கும் ஜூஸும், பால் பக்கெட்டும் தவிர, அவனுக்கு எதுவும் நினைவில் வரவில்லை..         

‘ஒருத்தர் வந்தார் சரி.. டீ போட்டு கொடுத்து அனுப்பினோம்.. இப்போ மூணு பேரு வந்திருக்காங்க.. அன்னிக்கு போலவே டீ போட்டா… இவன் டீ மட்டும் தான் போடுவான் போலன்னு நினைச்சிடுவாங்களோ… இல்லை ஜூஸ் குடுக்கலாமா..??? இந்நேரம் குடிப்பாங்களா…’ என்று மனதில் அவனே கேள்வியும் பதிலுமாய் பேசிக்கொண்டு உடைமாற்றி முகம் கழுவி வெளி வந்தவன், மீண்டும் தயங்கி தான் நின்றான்..

“புகழ்.. வா உட்கார்…” என்று குணசேகரன் சொல்ல,

“இல்ல தாத்தா…” என்று இழுத்தவன், “குடிக்க என்ன கொடுக்கட்டும் ஜூஸ் இருக்கு, இல்லை டீ ஆர் காபி…” என,

“இந்நேரம் ஜூஸ் வேணாம்… காபி குடிப்போம்… நானே போடுறேன்…” என்று சாந்தி எழ,

“ஐயோ.. வேணாம் ஆன்… அத்தை… நான்… நான் தான் போடணும்… நீங்க உட்காருங்க…” என்றான் பதறி..

“அட இதிலென்னப்பா இருக்கு.. இப்படி பார்மாலிட்டி எல்லாம் நாங்க பார்க்க மாட்டோம்..” என்றவர் அவனை அமர சொல்லி, தானே சமையலை சென்று பார்க்க, வெகு நேரமாகியும் சாந்தி வெளியே வரவில்லை..

குணசேகரோடும், சுகுமாரோடும் பேசிக்கொண்டிருந்தவனுக்கு மனம் பக் பக்கென்று அடித்துக்கொண்டிருந்தது..

‘கடவுளே கிட்சன் கிளீன் பண்ணி பல மாசம் ஆச்சு.. என்ன நினைக்க போறாங்களோ…’ என்றவன் சமையலறையை ஒரு பார்வையும், இவர்களை ஒரு பார்வையும் பார்த்து பேச, கொஞ்ச நேரத்தில் பஜ்ஜி போடும் வாசம் வர,

‘என்னடா இது.. பஜ்ஜி வாசம் வருது… ஒண்ணுமே இல்லையே…’ என்று யோசனை புரிந்தவன், அவனையும் அறியாமல் எழுந்து நின்றுவிட,

“என்ன தம்பி…” என்று சுகுமார் கேட்க,

“இல்.. இல்லை.. அத்தை.. அவங்களுக்கு கிட்சன்ல எது எது எங்க இருக்குன்னு தெரியாதே.. நான் போய் ஹெல்ப் பண்ணிட்டு வர்றேன்…” என்றவன் விட்டால் போதும் என்று வேகமாய் சமையலறை நோக்கி வர,

அங்கோ சாந்தி அழகாய் தூள் பஜ்ஜி போட்டு, காப்பியை டம்பளர்களில் ஊற்றிக்கொண்டு இருந்தார்..

“ஆன்… ம்ம்ஹும்…” என்று தலையை உலுக்கியவன், “அத்தை.. குடுங்க நான் கொண்டு போறேன்…” என,

“இல்ல தம்பி இருக்கட்டும், நானே எடுத்திட்டு வரேன்…” என்றவர் நிமிர, அவன் பார்வையோ பஜ்ஜியில் இருக்க,

“ப்ரிட்ஜில பஜ்ஜி மாவு இருந்தது.. அதன் மூணு வெங்காயம் கட் பண்ணி போட்டு செஞ்சுட்டேன்.. நீங்களும் வேலைக்கு போயிட்டு பசியா வந்திருப்பீங்க…” என,

‘ஆமால்ல.. நமக்கு இது நியாபகம் வரலையே… ச்சே மறந்திட்டேன்…’ என்று தன்னையே மனதிற்குள் குட்டிக்கொண்டவன்,

“நானே செஞ்சிருப்பேனே அத்தை.. உங்களுக்கு எதுக்கு சிரமம்…” என்றபடி வேகமாய் ட்ரேயை தானே கையிலெடுத்துக்  கொண்டான்..

“இதிலென்ன இருக்கு.. முன்னாடியே நாங்க வந்து பார்த்திருக்கணும்.. ஆனா எங்களுக்கு தெரியலை.. அப்பா வந்து சொல்லவும் தான் வந்தோம்.. இத்தனை நாள் யாரும் வரலைன்னு தப்பா நினைக்க கூடாது…” என்று சாந்தியும் பேசியபடி அவனோடு வர,

புகழேந்தி தான் அனைவருக்கும் காபி கொடுத்து, பஜ்ஜி தட்டுகளையும் நீட்டி, அவனும் தனக்கு எடுத்துக்கொண்டு அமர, பேச்சோடு சேர்ந்து பொழுதும் கழிந்தது..

பேச்சின் நடுவே, சாந்தி, குணசேகரனை பார்த்து என்னவோ கண்ணசைக்க, அவரும் சரி என்று தலையாட்ட, இதெல்லாம் புகழேந்தி கண்ணிலும் பட, ‘என்ன ரகசியம் பேசுறாங்க…’ என்று யோசிக்கும் போதே,

“புகழ்… நாங்க வந்த விஷயம் என்னன்னா…” என்று குணசேகரன் ஆரம்பிக்க,

‘இதை தானே போன வாரத்தில இருந்து சொல்லிட்டு இருக்கீங்க…’ என்று எண்ணியவன், வெளியே பவ்யமாய் “சொல்லுங்க தாத்தா…” என,

அவரோ பேசட்டுமா என்று மீண்டும் ஒருமுறை மகள் மருமகன் முகம் பார்த்தவர், அவர்கள் சம்மதமாய் தலையாட்டவும், “ஒரு நல்ல விஷயம் பேசலாம்னு வந்திருக்கோம்…” என, இவனுக்கு ஒன்றும் புரியவில்லை..

“வீட்ல பெரியவங்க இருந்தா முறைப்படி அவங்ககிட்ட தான் பேசணும்.. ஆனா.. சரி அதை விடு.. என்ன இருந்தாலும் சொந்தம் இல்லைன்னு ஆகிடுமா… அது வேறொண்ணுமில்ல புகழ், என் பேத்தி… அதான் இவங்க பொண்ணு…” என்று அவர்களை கை காட்டியவர்,

“பேரு இலக்கியா… படிப்பு முடிச்சிட்டு ஒன் இயரா வேலைக்கு போயிட்டு இருக்கா.. வரன் பார்த்திட்டு இருக்கோம்.. நான் உன்னை வந்து பார்த்திட்டு போகவும் எனக்கு மனசில இந்த எண்ணம் தான்… இவங்க கிட்ட சொல்லவும், உன்னை பார்க்கணும் சொன்னாங்க… அதான்..” என்று சொல்ல,

‘அடப்பாவிகளா.. அப்போ இது மாப்பிள்ளை பார்க்கும் படலமா… நான் வேற கையில அதுக்கேத்த மாதிரி ட்ரே எல்லாம் வச்சு… ஐயோ… ச்சே நம்மளை இப்படி காமெடி பீஸ் ஆகிட்டாங்களே…’ என்று அவன் நினைக்கும் போதே ஒருபக்கம் சிரிப்பும் வந்தது.. ஆனால் சிரிக்க முடியுமா…

அப்போது தெரிந்தது அவனுக்கு, ஒரு பெண்ணை பெண் பார்த்து செல்லும் போது, அது தெரிந்தவர்களாகவே இருந்தாலும் அவளுக்கு எத்தனை அவஸ்தைகள் ஆகும் என்று.. சிரிப்பு வந்தும் சிரிக்க முடியாமல், தும்மல் இருமல் வந்தால் கூட அடக்கி வைத்து, அனைத்திற்கும் ஒரு புன்னகை மட்டுமே பதிலாய் கொடுத்து, அடடா… மாட்டிகிட்டோமே என்று நினைத்தான்..

“என்ன தம்பி அமைதியா இருக்கீங்க…” என்று சுகுமார் கேட்க,

“இல்லை மாமா… என்ன சொல்ல தெரியலை அதான்…” என,

“இது என் பொண்ணு…” என்று சாந்தி அவர் அலைபேசியில் இருந்த இலக்கியாவின் புகைப்படம் காட்ட, சட்டென்று வாங்கி பார்க்கவும் தயக்கமாய் இருந்தது..

கைகள் கூட லேசாய் நடுங்குவது போல் தான் இருந்தது.. இதயமும் தன் துடிப்பை வேகம் செய்துகொள்ள, ‘என்னடா புகழ் உனக்கு வந்த சோதனை…’ என்று மனதில் சொல்லிக்கொண்டவன் மெதுவாகவே சாந்தியின் அலைபேசி வாங்கி பார்க்க, இலக்கியா ஊஞ்சலில் அமர்ந்து, கையில் பெரிய கோப்பையில் எதையோ பருகியபடி இருக்கும் புகைப்படம் இருந்தது..

தோள் வரைக்குமே இருந்த கூந்தல், ஆனால் அதன் அடர்த்தி இலக்கியா  அதனை விரித்து போட்டிருந்ததிலேயே தெரிந்தது.. அல்ட்ரா மாடர்ன் இல்லையென்றாலும் பார்க்க மார்டன் மங்கையாய் தான் தெரிந்தாள்.. முடியாது என்று மறுப்பதற்கு எவ்வித குறைகளும் தெரியவில்லை..

ஆனால் இவர்கள் சொல்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக எல்லாம் சம்மதம் சொல்லவும் முடியாதே.. மனதில் என்னென்னவோ எண்ணங்கள்.. இப்படி நேரடியாய் கேட்பவர்களிடம் என்னவென்று பதில் சொல்வது என்று யோசனை..  சுகுமார் தன் மகளை பற்றி சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டு தான் அமர்ந்திருந்தான்..

“அட்ஜஸ்டபில் டைப் தான் இலக்கியா.. ஆனா அவளே அதுக்கு ஒரு லிமிட்டும் வச்சிருப்பா.. பிரண்ட்லி டைப்.. எதுனாலும் வெளிப்படையா பேசிடுவா..” என்று சுகுமார் சொல்ல சொல்ல, அவள் போட்டோ வேறு மனதில் வந்து போக, புகழேந்திக்கு ஒருமாதிரி மூச்சு முட்டுவது போல் இருந்தது..

இந்த மாதிரி ஒரு சூழல் வருமென்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.. ஆனால் சில விஷயங்கள் எல்லாம் எதிர்பாரா நேரத்தில் தானே நடந்துவிடுகிறது. என்ன அதையெல்லாம் மனம் ஏற்றுகொள்ள சிறிது காலம் பிடிக்கும்.

“நீ யோசனை பண்ணி சொல்லு புகழ்.. அவசரம் இல்லை.. எந்த முடிவா இருந்தாலும் எங்கட்ட சொல்றதுல ஒண்ணுமில்ல.. இது கைகூடி வந்தா சந்தோசம்.. இல்லையா எப்பவுமே சொந்தங்களா இருப்போம்..” என்று குணசேகர் சொல்ல.

தலையை மட்டும் ஆட்டினான்.. என்ன சொல்வது என்று அவனுக்குமே முதலில் ஒன்றும் விளங்கவில்லை.. ஆனால் ஒன்று இது இருவர் சம்பந்தப்பட்ட வாழ்வு.. யோசித்து முடிவெடுக்க வேண்டும் அல்லவா.. ஆகையால் தற்சமயம் அமைதியாய் இருப்பது என்று இருந்தான்..

“சரி தம்பி.. நீங்க வேற யார்கிட்டயும் டிஸ்கஸ் பண்ணி சொல்லணும்னாலும் சரி.. நல்ல முடிவா சொன்னா எல்லாருக்கும் சந்தோசம்…” என்று சாந்தி எழ, அவரோடு சேர்ந்து குணசேகரும், சுகுமாரும் எழுந்துவிட, இவனுமே எழுந்து நின்றான்..

“இந்தாங்க.. இதில இலக்கியா போட்டோ, ஜாதகம் இருக்கு..” என்று கவரை சுகுமார் நீட்ட,

“ஐயோ எனக்கு அதில எல்லாம் நம்பிக்கை இல்லை மாமா…” என்று புகழேந்தி மறுக்க,

“இல்ல தம்பி, இங்க உங்க பிரண்ட்ஸ் வீடும் இருக்குபோல.. அவங்க வீட்டுபெரியவங்க பார்க்கணும் சொல்வாங்க தானே…” என்று சுகுமார் சொல்லி மீண்டும் அந்த கவரை கொடுக்கும் போது தான் புரிந்தது, எல்லாம் விசாரித்தே  வந்திருக்கிறார்கள் என்று..

இது தெரியாமல் தான் தலையை உருட்டி உருட்டி பேசியது, எல்லாம் மட்டியாய் தெரிந்தது அவனுக்கு.. ‘நான் சரியான லூசு…’ என்று எண்ணிக்கொண்டான்.. 

எதுவும் பேசாமல் சுகுமார் கொடுத்த கவரை வாங்கி வைத்துக்கொண்டவன், வாசல் வரை சென்று வழியனுப்பி உள்ளே வர, அடுத்த பத்து நிமிடங்களில் ஜார்ஜும், சந்தீப்பும் வந்தனர்..

“யார்டா வந்தது…???”

“சொந்தக்காரங்க…”

“நாங்க மட்டும் என்ன அமெரிக்க அதிபர் வந்தார்னா சொன்னோம்…” என்று ஜார்ஜ் சொல்ல,

“அடேய் ஏன்டா நீ வேற…” என்று சலித்தவன், நடந்ததை சொல்ல,

“ஹா ஹா ஹா… டேய் இவன மாப்பிள்ளை பார்த்துட்டு போயிருக்காங்கடா.. அது தெரியாம இவனும்… ஹா ஹா ஹா…என்னால சிரிக்காம இருக்க முடியலைடா…” என்று சந்தீப் சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்க,

“டேய் நானே கடுப்புல இருக்கேன்..” என்று ஒரு மிதி மிதித்தான் புகழேந்தி..

“என்ன கடுப்பு மச்சி…” என்று ஜார்ஜ் வினவ,

“ஹே என்னங்கடா சத்தம் வெளிய வர கேட்குது…” என்றபடி மேகலாவும், சுஸ்மிதாவும் வந்தனர்..

“வாங்கம்மா எங்க மூக்கு வேர்த்து இன்னும் வரலையேன்னு பார்த்தேன்…” என்று சந்தீப் சொல்ல,

“மேகி நீ இன்னும் உன் வீட்டுக்கு போகலையா…??” என்று புகழேந்தி மேகலாவை வினவ,

“இல்லப்பா.. அவர் ஒரு மீட்டிங்காக கோவை போயிருக்கார்.. வரவும் தான் போகணும்…” என்றபடி அமர்ந்தவள், “என்ன இது கவர்…” என்று மேஜையில் கிடந்ததை பிரித்து பார்க்க, சுஸ்மிதாவும் என்னவென்று பார்க்க, உள்ளே இருந்த இலக்கியாவின் புகைப்படமும், ஜாதகமும் கண்ணில் பட்டு,

“புகழ் வாட் இஸ் திஸ்…” என்று இரு பெண்களுமே வினவ, மீண்டும் ஒருமுறை நடந்ததை எல்லாம் அவர்களிடம் படம் ஓட்டினான் புகழேந்தி..

“சூப்பர்.. வெரி குட் சான்ஸ்.. மிஸ் பண்ணிடாத புகழ்…” என்று மேகலா, இலக்கியாவின் புகைப்படத்தை பார்த்துக்கொண்டே சொல்ல,

“என்ன சூப்பர்.. குடு நான் நல்லா பார்க்கணும்..” என்று சுஸ்மிதா வேகமாய் புகைப்படத்தை பிடுங்க,

“ஹே பார்த்து சுஸ்மி…” என்று புகழேந்தி வேகமாய் சொல்ல…

“ஓ…!!!” என்று நண்பர்கள் கோரஸ் பாட,

“டேய் சும்மா இருங்கடா திருப்பி கொடுத்தா டேமேஜ் இல்லாம கொடுக்கணும் தானே..” என்று சமாளித்தான்..

சுஸ்மிதா, இலக்கியாவின் புகைப்படத்தை பார்த்தவள், “ஹ்ம்ம் நார்மலா இருக்கா.. சூப்பர்னு எல்லாம் சொல்லிட முடியாது..” என்று உதடு சுளிக்க,

‘ஏன் அவளுக்கு என்ன நல்லாதானே இருக்கா…’ என்று சொல்லத் துடித்த மனதை அடக்கி நண்பர்கள் முகம் பார்க்க, அவர்களும் புகைப்படத்தை வாங்கி பார்த்தவர்கள்,

“நல்லா இருக்காங்கடா.. நல்ல மேட்ச்…” என,

“புகழ்.. இந்த காலத்துல யார் இதெல்லாம் செய்வாங்க சொல்லு… அவங்களே தேடி வந்து பேசுறாங்க.. சொந்தம்னு வேற சொல்ற.. ஏன் மிஸ் பண்ணனும்.. பொண்ணு உனக்கு பிடிச்சிருந்தா கோ அஹெட்…” என்று மேகலா சொல்ல,

“எஸ்…” என்று ஜார்ஜும், சந்தீப்பும் சொல்ல,

“எல்லாம் அவனை ஏத்தி விடுறீங்க.. புகழ்… உடனே எதுவும் டிசைட் பண்ணாத.. என்னையும் இப்படிதான் வந்து கேட்டாங்க.. லாஸ்ட்ல என்னாச்சு…. கொஞ்ச நாள் போகட்டும் சொல்லு…” என்று சுஸ்மிதா மட்டும் வேறுவிதமாய் பேச, புகழேந்திக்கோ குழப்பமாய் இருந்தது.. யார் சொல்வதை கேட்பது என்று..

ஆனால் சுஸ்மிதாவை தவிர மற்றவர்களோ “சுஸ்மி நீயேன் அப்படி நினைக்கிற.. எல்லாருக்கும் ஒரே மாதிரி நடந்திடுமா என்ன.. தின்க் பாசிடீவ்.. சுரேன் கூட நல்ல டைப் தான்.. தப்பா இல்லையே..” என்று அவள் வாயை அடைத்துவிட்டு,

“நீ என்ன நினைக்கிற புகழ்…” என்று அவனிடம் கேள்வி கேட்க,

“எனக்கே தெரியலை.. என்ன சொல்லன்னு… குழப்பமா இருக்கு.. சரின்னும் சொல்ல முடியலை.. நோவும் சொல்ல முடியலை..” என,

“ஹ்ம்ம் ஓகே புகழ்.. டேக் யூவர் டைம்.. ஆனா அவங்ககிட்டயும் சொல்லிடு.. கொஞ்சம் டைம் வேணும்னு.. வெய்ட் பண்ண வைக்காத..” என்று மேகலா சொல்ல,

“ஓகே மேகி…” என்றவன் அதுபோலவே குணசேகருக்கு அழைத்து சொல்ல, “நிதானமா யோசிச்சு முடிவு சொல் புகழ்…” என்று அவரும் வைத்துவிட்டார்.    

 

Advertisement