Advertisement

பூந்தேன் – 1

அந்த அறையில் காற்றாடி சுழலும் சத்தம் தவிர வேறெதுவும் கேட்கவில்லை.. அத்தனை நிசப்தம்.. இருவர் மட்டுமே இருந்தனர்.. அவ்விருவர் மனதிலுமே பேரிரைச்சல் தான்.. ஆனால் அது வெளியே தெரியாதவண்ணம் மௌனம் அவர்களை ஆரத்தழுவி இருந்தது.

‘நீ என்ன சொன்னாலும் நான் கேட்க போவதில்லை.. இந்த முறை நான் சொல்வதை நீ கேள்…’ என்ற தோரணையில் இலக்கியாவும்,

‘இந்த ஒருமுறை என் பேச்சை கேளேன்…. என்னை புரிந்துகொள்…’ என்ற பாவனையில் புகழேந்தியும் நேருக்கு நேரே, பார்த்து அமர்ந்திருந்தனர்..

இதே அறை, இருவரது காதல் பேச்சுகளையும், கொஞ்சல்களையும், சின்ன சின்ன சீண்டல்களையும், செல்ல செல்ல சண்டைகளையும், இன்னும் பிறதையும் நிறைய நிறைய கண்டு, தனக்குள்ளேரகசியமாய் ரசித்தும் இருக்கிறது..

ஆனால் இன்று.. இதே அறை, இருவரது மௌன பாசைகள் புரியாது, இருவர் மனதில் இருக்கும் எண்ண ஓட்டம் தெரியாது, அடுத்தது என்ன என்றும் கண்டறிய முடியாது, தானும் அவர்களை போலவே மௌனித்து பார்த்திருக்க, காற்றாடி மட்டும் தன் வேலையை செவ்வனே செய்து சுழன்று கொண்டு இருந்தது..

‘இனியும் தன்னால் பேசாமல் இருக்க முடியாது…’ என்பது போல் புகழேந்தியே வாய் திறந்தான்..

“லக்கி ப்ளீஸ்…. இந்த ஒன் டைம்… நான் சொல்றதை கேளேன்…” என,

கட்டிலில் சாய்ந்து அமர்ந்து இருந்தவள், லேசாய் தலையை சரித்து, “கேட்டு…???!!!!” என்று புருவம் உயர்த்த,

“என் கூட வா…” என்றான்..

“எங்க..???” என்று அவளும் அதே பாவனையில் கேட்க,

“நம்ம வீட்டுக்கு லக்கி… ப்ளீஸ்… நீ இல்லாம என்னால…” என்று அவன் பேசும் போதே, கைகளை உயர்த்தி அவன் பேச்சை நிறுத்தியவள்,

“இது என்னை போக சொல்லும் போது தெரியலையா….???” என்று கேட்க,

அவள் கண்களும், முகமும், அத்தனை வலி, வேதனை, அங்கே அந்த இடத்தில்  அவள் சுயகௌரவம் கீழ் இறக்கப்படதற்கான அவமானம் அனைத்தும் கலந்து அவள் முகத்தில் ஒரு ஜொலிப்புடன் கூடிய பிரதிபலிப்பு வர, புகழேந்திக்கு அந்த நொடி இலக்கியாவை எண்ணி மனதில் பயம் வந்து போனது உண்மை தான்.

புகழேந்தியே தான் சொன்னான்.. அதுவும் எப்படி, திருமணமாகி ஆறு மாதங்களில், அத்தனை நாட்கள் காதலாகி கசிந்துருகி, நீயே எனக்கு எல்லாம், நீ வேறு நான் வேறு இல்லை என்று எத்தனை முறை அவளிடம் சொல்லி, செயலிலும் காட்டி, உன்னை என் கண்ணில் வைத்து தாங்குவேன்… நீயே என் இதய ராணி என்றெல்லாம் கொஞ்சி, கெஞ்சி, மிஞ்சி என்று யாரை கொண்டாடினானோ அவளை தான்,

‘போ இங்கிருந்து… ச்சே… பார்த்தாலே எரிச்சலா வருது… வீட்டுக்கு வந்தா நிம்மதி இருக்கா… நானும் குழந்தைக்கு சொல்றது போல எடுத்து சொல்லிட்டேன்… புரிஞ்சிக்கவே மாட்டேன்னு இருந்தா.. அப்படி என்ன உனக்கு பிடிவாதம்.. உனக்கு பிடிக்காட்டி நீ போ…’ என்று இலக்கியாவிடம் கண்களை மூடிக்கொண்டு கத்தியவன் இதே புகழேந்தி தான்..

இப்படி சொல்லி முழுதாய் ஒருவாரம் ஆகவில்லை, இதோ வந்து நிற்கிறான், என்னோடு வா என்று கெஞ்சிக்கொண்டு..

“ப்ளீஸ் லக்கி…” என்று மீண்டும் இறைஞ்ச…

“ம்ம்ஹும்… இந்த டைம் நீங்க என்ன சொன்னாலும் சரி… நான் கேட்க போறதே இல்லை… நான் முக்கியம்னு தோணினா, அப்போ நான் சொன்னதை செய்ங்க…” என்றவள், இது மட்டும் தான் என் முடிவு என்று பேச, மத்தளத்திற்கு இரு பக்கம் இடி என்பார்களே அது போல ஆனது புகழேந்தி நிலை..

இரண்டு பக்கம் தான்..

ஒருத்தி இலக்கியா…. இன்னொருத்தி சுஸ்மிதா…

இலக்கியா மனைவி.. சுஸ்மிதா சிறுவயதில் இருந்தே பழகிய தோழி…

இருவருக்கும் நடுவில் தான் இப்போது புகழேந்தி மாட்டிக்கொண்டு முழிப்பது..   இருபத்தி ஏழு வருடங்கள் பழகிய தோழியா, இல்லை தாலி கட்டி தன்னில் சரி பாதியாய் ஏற்றுகொண்ட மனைவியா??? இரண்டில் யார்??

சத்தியாமாய் அவனால் ஒரு முடிவிற்கு வர முடியவில்லை. இப்படியான நிலை எந்த ஒரு ஆணுக்கும் வரக்கூடாது என்று உலகத்தில் உள்ள அத்தனை ஆண்களுக்கும் சேர்த்தே இறைவனிடம் வேண்ட,

கடவுளோ, “முதலில் நீ உன் வாழ்வை சரிபண்ணும் வழியை பார்…” என்று சொல்லி ஒதுங்கி நின்றுகொண்டார்.

புகழேந்தி, தாத்தா பாட்டியின் வளர்ப்பு.. அம்மாவை பிறக்கும் போதே இழந்தவன், அப்பாவை அடுத்து சில வருடங்களில் இழந்துவிட, அவனது உலகம், சொந்தம் எல்லாம் அவனது பாட்டி தாத்தா, மற்றும் அவனது நண்பர்கள்..

புகழேந்தி, ஜார்ஜ், சுஸ்மிதா, மேகலா, சந்தீப்… இவர்கள் ஐவரும் சிறு வயது முதலே ஒரே கூட்டம்.

ஒரே தெரு, அருகருகே வீடு என்று இருக்க, அதிலும் ஒரே பள்ளி எல்லாம் சேர்ந்து அன்றிலிருந்து இன்றுவரை இவர்களுக்குள் எவ்வித வேறுபாடும் இல்லை.. ஒரு சிறு விஷயம் என்றாலும் சரி, அது ஐவருக்கும் நடுவில் இருக்கும் பொதுவுடைமை.. யாருக்கும் யாரிடமும் எவ்வித ஒளிவு மறைவும் இல்லை.. ஆரம்பத்தில் இருந்தே அப்படிதான்..

ஆண்களுக்கு முன்னேயே பெண்களுக்கு திருமணம் ஆகிவிட, சுஸ்மிதாவும், மேகலாவும் சென்னையிலேயே வேறு வேறு இடத்தில் இருந்தனர். புகழேந்தியின் தாத்தாவும் பாட்டியும் இறந்தபின்னர், அவன் மட்டுமே வீட்டில் தனித்து இருக்க நேர, சந்தீப்பும், ஜார்ஜும் அவனுடனே அவன் வீட்டிலேயே தங்க தொடங்கினர்.

சுஸ்மிதாவும், மேகலாவும் அடிக்கடி போனில் பேசுவது போதாது என்று, இங்கே பிறந்த வீட்டிற்கு வரும் போதெல்லாம் இங்கேயும் வந்து போக தவறவில்லை. அவர்களின் கணவன்மார்களும் அதையெல்லாம் ஒன்றும் தவறாய் நினைக்கவும் இல்லை.. சொல்லபோனால் அவர்களும் இந்த கூட்டத்தில் ஐக்கியம் போல தான் இருந்தனர்.

இப்படியே நாட்கள் செல்ல, என்னதான் தன்னோடு நண்பர்கள் வந்து இருந்தாலும் புகழேந்திக்கு மனதினுள் ஒரு உறுத்தல், ஒரு தனிமை, என்னவென்று இன்னதென்று தெளிவாய் சொல்லிட முடியாத ஒரு உணர்வு அவனை போட்டு அரித்துக்கொண்டே இருந்தது..

இவனது நண்பர்கள் வீட்டினரும் அவனை தங்கள் வீட்டு பிள்ளை போல பார்த்து பேசி பழகினாலும், நூல் அளவு வித்தியாசமாவது தெரியும் தானே.. இப்படியிருந்த நிலையில் தான், அவன் பாட்டியின் தூரத்து உறவு என்று ஒருவர் வீட்டிற்கு வந்தார்..

“உங்களை நான் இதுக்கு முன்ன பார்த்தது இல்லையே…” என்று புகழேந்தி தயங்க,

“ஹ்ம்ம் நானுமே கூட உன்னை இரண்டோ மூணோ வயசில பார்த்தது….” என்று அவரும் சொல்ல,

“சாரி.. எனக்கு நிஜமாவே உங்களை யாருன்னு தெரியலை…” என,

“நான் உன் பாட்டி சிந்தாமணியோட சித்தப்பா மகன், உனக்கு ஒரு முறைல தாத்தா வேணும்… எனக்கு இப்போதான் தெரியும், சிந்தாக்காவும் காலமாயிட்டாங்கன்னு.. நான் ரொம்ப வருஷம் டெல்லில இருந்தேன்.. இப்போதான் சொந்த ஊருக்கு வந்தேன்.. விஷயம் கேள்விப்பட்டதும் அப்படியே விட முடியலை.. அதான் உன்னை ஒரு எட்டு பார்த்திட்டு போகலாம்னு வந்தேன்..” என, அவர் சொல்வதை எல்லாம் என்னவோ கதை கேட்பது போல் கேட்டுக்கொண்டு இருந்தான் புகழேந்தி..

நம்மையும் தேடி ஒருவரா??

என்றோ முடிந்து போன சொந்தங்களை தேடி, இன்றும்.. அதுவும் இப்படியான ஒரு கால மாற்றத்தில் மக்கள் சிக்கி, தங்கள் வாழ்வை மட்டுமே முன்னிறுத்தி, அருகில் இருக்கும் அக்கம்பக்கதினரை கூட கண்டும் காணாது போகும் இக்காலத்தில், எங்கோ எப்போதோ பழகிய ஒரு உறவை தேடி, அதுவும் இல்லாது கூட போன உறவைத் தேடி வந்திருக்கிறாரே என்று தான் தோன்றியது புகழேந்திக்கு.. ஆச்சர்யமாய் பார்த்து அமர்ந்திருந்தான் அவரை..

“என்ன புகழ் அப்படியே உட்கார்ந்திட்ட.. நான் சொல்றதில நம்பிக்கை வரலியா…”

“ஹா.. ச்சே ச்சே அப்படியெல்லாம் இல்லை தாத்தா… நான்.. நான் யோசிச்சிட்டு இருந்தேன்…” என, அவன் என்ன யோசித்திருப்பான் என்று அவருக்கு தெரியாதா என்ன. அது அதான் அவன் முகமே காட்டி கொடுத்ததே…

“சரி புகழ், நான் ஏன் இவ்வளோ தூரம் வந்தேன்னும் சொல்லிடுறேன்.. இல்லாட்டி அதுக்கும் போட்டு யோசிப்ப…” என்றவர், அவன் முகம் பார்க்க,

“சொ.. சொல்லுங்க தாத்தா..” என்றவனுக்கு சுத்தமாய் அவர் எதற்காக வந்திருக்கிறார் என்று யோசிக்க முடியவில்லை..

“நான் செங்கல்பட்ல தான் இருக்கேன்…” என,

“ஓ.. சரிங்க தாத்தா…” என்றவன், அடுத்தது என்ன என்று அவர் முகம் பார்க்க,

“மகன் மருமகள் எல்லாம் டெல்லில…. அங்கதான் நானும் இருந்தேன்.. என் மக இங்க வந்து கொஞ்ச நாள் இருக்க சொன்னா.. அதான் வந்தேன்…” என்றவரை பார்க்கும் போது லேசாய் புகழேந்திக்கு பொறாமை எட்டிப்பார்த்தது..

இந்த வயதிலும் கூட அவரை சுற்றி எத்தனை சொந்தங்கள்.. அவரை விரும்பி அழைத்தும், அவருக்கு என்று செய்யவும் எத்தனை பேர் என்று நினைக்கும் போது, இவர் வயதில் தான் எப்படி இருப்போம் என்றும் சிந்தனை ஓட,

“புகழ்… புகழேந்தி…” என்று இரண்டொரு முறை அழைத்துவிட்டார் அவர்..

“ஆ.. தாத்தா..” என,

“என்னப்பா என்ன யோசனை மறுபடியும்…” என்று அவர் கேட்க,

“அது அதில்ல தாத்தா, வந்ததில இருந்து நான் உங்களுக்கு எதுவுமே சாப்பிட கொடுக்கலை…” என்று பேச்சை மாற்றி சொல்ல,

“அதுக்கென்னப்பா நான் ஒன்னும் தப்பா நினைக்க போறதில்லை…” என்று அவரும் சொல்ல,

“இல்ல.. இருங்க டீ போட்டு கொண்டு வரேன்…” என்று எழுந்தவன், “டீ குடிப்பீங்க தானே…” என்று கேட்க,

அவன் கேட்ட விதம் அவருக்கு பிடித்தும் இருந்தது, சிரிப்பையும் தந்தது. “நல்லாவே குடிப்பேன்.. ஆனா சுகர் மட்டும் கொஞ்சம் கம்மியா…” என்று அவரும் சொல்ல,

“சரி தாத்தா…” என்றவன், அடுத்து சில நிமிடங்களில் அவனுக்கும் சேர்த்தே தேனீர் போட்டு எடுத்து வர,

அடுத்து அடுத்து பேச்சுக்கள் மீண்டும் அவன் பாட்டி தாத்தா, வீடு, வேலை சம்பளம், அவனது எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் என்று பலவிதமாய் பயணித்து செல்ல, இன்னொரு முறையும் புகழேந்தி தேனீர் போட்டு கொடுக்க, அதையும் குடித்துவிட்டே சென்றார் அம்மனிதர்..

நொடிக்கொரு முறை ‘நான் ஏன் வந்தேன்னா நான் ஏன் வந்தேன்னா…’ என்று சொன்னவர், கடைசி வரை தான் வந்த காரணம் மட்டும் சொல்லவே இல்லை..

“அடுத்த வாரம் இங்க என் பிரண்ட் வீட்ல ஒரு விசேசம்.. அப்போ வர்றேன்…” என, புகழேந்தியும் இத்தனை நேரம் பேசிய மகிழ்வில் சந்தோசமாய் தலையாட்டி வைத்தான்..

“எப்போ வேணா வாங்க தாத்தா.. இது என்னோட போன் நம்பர்…” என்று அதையும் கொடுத்தே வழியனுப்பி வைக்க, அவர் போன பிறகு தான் தோன்றியது அவர் பெயரை கூட அவன் கேட்கவில்லை என்று. அவரும் பேச்சு சுவாரசியத்தில் தான் இன்னாரென்று சொன்னாரே தவிர பெயரை சொல்லவில்லை..

சந்தீப் வேலை விசயமாய் வெளியூருக்கு சென்றிருக்க, ஜார்ஜ்க்கு இரண்டு மாதம் முன் தான் திருமணம் முடிந்திருந்தது.. ஆக அவன் அவனது வீட்டிலே இருக்க, இவனும் சந்தீப்பும் தான் இங்கிருந்தனர்.. இப்போதும் அவனும் ஊரில் இல்லை.. தனிமை கொடுமை என்பது உண்மைதானோ என்று தோன்றியது புகழேந்திக்கு.. கொஞ்ச நேரம் தொலைக்காட்சியை தொல்லை செய்தவன், பின் நேரம் பார்க்க அதுவோ இரவு ஒன்பது என்று காட்ட, இனி சமைத்து உண்பதா என்ற ஒரு அலுப்பு வேறு..

இருமுறை தேனீர் பருகியது வேறு ஒருமாதிரி இருக்க, பேசாமல் அப்படியே போய் படுத்துகொள்வோம் என்று எழுந்தவன், வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க, ஒருவேளை சந்தீப் வந்திட்டானோ என்று கதவு திறக்க, வெளியே நின்றிருந்தது சுஸ்மிதா.. கையில் ஒரு ஹாட் பாக்ஸ் வைத்து  நின்றிருந்தாள்..

“சுஸ்மி… நீ… நீயா…” என,

“ஏன் நீ யாரை எதிர்பார்த்த புகழ்…” என்றபடி உள்ளே வந்தவள்,

“ஏன் இப்படி இருட்டில இருக்க,…” என்று சொன்னபடி விளக்கை போட்டவள்,

“இன்னும் சாப்பிடல தானே… வா சாப்பிடு.. உனக்கு தான் கொண்டு வந்தேன்…” என்று டீப்பாய் மீது ஹாட்பாக்ஸ் வைத்து அவனுக்கு உண்ண எடுத்து வைக்க,

“தூங்க போனேன் சுஸ்மி… நீ வச்சிட்டு போ நான் சாப்பிட்டுக்கிறேன்…” என்றவன் அமராமல் அப்படியே தயங்கி நிற்க,

“ஏன் நான் வச்சா சாப்பிட மாட்டியா…” என்றவள் பிடிவாதமாய் அமர்ந்திருக்க,

‘சொன்னா இவளுக்கு புரியாது..’ என்று எண்ணியபடி அவள் எடுத்து வைத்ததை வேக வேகமாய் உண்டு முடித்தான்..

“ஜார்ஜ் வந்து எட்டியாவது பார்த்தானா இல்லையா??”

“அவன் பொண்டாட்டி ஏன் இப்படி பண்ற???”

“சந்தீப்க்கு போன் பண்ணேன் எடுக்கவே இல்லை…”

“நாளை மேகலா வர்றாளாம். நம்ம எல்லாம் சேர்ந்து எங்கயாது போகாலாமா…”

அவன் உண்டு முடிப்பதற்க்குள் சுஸ்மிதா கேட்ட இத்தனை கேள்விக்கும் பதிலையும் சொல்லி உண்டு முடிந்து எழுந்துவிட்டான்..

“சரி நீ கிளம்பு… டைம் ஆச்சு…” என,

“ம்ம்ச் போர் அடிக்குது புகழ்… கொஞ்ச நேரம் பேசிட்டு போறேனே…” என்று சிறுமியாய் சிணுங்கினாள்..

இவர்கள் கூட்டத்தில் எப்போதுமே சுஸ்மிதா கொஞ்சம் பிடிவாதக்காரி தான்.. மேகலா அப்படியில்லை சொல்வதை புரிந்து நடந்துகொள்வாள்.. சிறு வயது முதலே சுஸ்மிதா இப்படிதான்.. எப்போதுமே தான் சொல்வது நடக்கவேண்டும்..

அதற்கு காரணமும் இருந்தது, சுஸ்மிதாவிற்கு சிறுவயதில் விபத்து ஒன்றில் அவளது கால் ஒன்று தன் செயலை பாதியாய்  நிறுத்திவிட, அந்த தாக்கத்தில் இருந்து அவளை வெளிக்கொணரவென்று அவள் சொல்வதற்கு எல்லாம் சரி சொன்ன அவள் வீட்டினரும் சரி தோழமைகளும் சரி இன்று வரைக்கும் அதில் இருந்து மீள முடியவில்லை..

புகழேந்தியின் பாட்டி இறந்த பிறகு, அதுவும் அவன் தனித்து இருப்பதை காண நேர்கையில், சுஸ்மிதாவின் அப்பா நேராக புகழேந்தியிடமே கேட்டார்.

“நான் இப்படி கேட்கிறேன்னு தப்பா நினைக்காத புகழ்.. நீ… நீ நம்ம சுஸ்மிய கல்யாணம் பண்ணிக்கிறயா… ரெண்டு பேருமே ரெண்டு பேருக்கும் புதுசு இல்லை.. இங்கயே எங்க கண் முன்னாடி அவ வாழ்ந்தா நாங்களும் நிம்மதியா இருப்போம்…” என்று சொல்ல,

“சுஸ்மி என் பிரண்ட் அங்கிள்… அவளை போய் எப்படி நான்…” என்று புகழேந்தி தயங்க,

“டாடி… என்ன பேச்சு இது…” என்றபடி வேகமாய் ஸ்டிக்கை ஊன்றி நடந்து வந்தாள் சுஸ்மிதா..

மகள் வந்தது அவருக்கு அதிர்ச்சி என்றால், இந்த விஷயம் கேட்டு அடுத்து அவள் என்ன செய்வாளோ என்று இன்னும் அதிர்ச்சியாய் இருந்தது..

“இல்ல சுஸ்மி…” என்று புகழேந்தி அவளை சமாதானம் செய்ய முயல,

“நீ பேசாத புகழ்…” என்று அவனை நிறுத்தியவள்,

“என்ன டாடி.. மைனஸ் மைனஸ் பிளஸ்னு கணக்கு போட்டீங்களா…??” என்று தயவு தாட்சண்யம் இல்லாது கேட்க, அவளின் அப்பாவோ ஒன்றும் பேச முடியாமல் வீட்டிற்கு போனார்..

“சாரி புகழ்…” என,

“ஹேய் லூசு… விடு.. ஆனா இப்படி பேசாத.. பாவம் அங்கிள்…” என்று புகழேந்தி சொல்ல,

“நான் இப்படிதான்…” என்றவள் அடுத்து வீடு சென்றுவிட்டாள்.

ஆனால் அடுத்த இரண்டு மாதத்திலேயே சுஸ்மிதாவின் திருமணம் வெகு விமர்சையாக நடந்தது.சுரேந்தர்.. விரும்பி வந்து பெண் கேட்டு, சுஸ்மிதாவை திருமணம் செய்தான். சுஸ்மிதாவிற்கும் அவனை பிடித்திருக்க, இனி அவள் வாழ்வை பற்றி கவலை படவேண்டியதில்லை என்ற நிம்மதியில் அனைவரும் இருக்க, போன நான்கே மாதத்தில் திரும்பி வந்தாள்..

‘என்னால அவன் கூட வாழ்வே முடியாது.. எனக்கு அவனை சுத்தமா பிடிக்கல.. என்னை அங்க போக சொன்னா நான் செத்தே போயிடுவேன்….’ என்று சொல்லிக்கொண்டு வர, முதலில் அனைவருக்கும் அதிர்ச்சி..

சுரேந்தரோ, சுஸ்மிதா எப்போது வந்தாலும் அவளோடு வாழ தயாராய் இருப்பதாய் சொல்ல, எத்தனை முறை, எத்தனை வகையில் குடும்பத்தினரும், நண்பர்களும் பேசி பார்க்க, அவளோ தன் முடிவில் ஸ்திரமாய் இருந்தாள்.

சரி விட்டு பிடிப்போம் என்று அனைவரும் இருக்க, அவளோ எப்போதும் போல் வீடு, நண்பர்கள், அவர்கள் வீட்டிற்கு செல்வது என்று இருந்தாள்..         அப்படிதான் நேரம் காலம் பார்க்காமல் இப்போது புகழேந்தி வீட்டிற்கு வந்ததும்.

அவளுக்கு சரி, ஆனால் அவனுக்கு, என்ன தான் தோழன் என்றாலும் இந்த நேரத்தில் அதுவும் சும்மா உட்கார்ந்து பேசலாம் என்று சொன்னால், அவனுக்கு எப்படி இருக்கும். பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்.. புகழேந்தி இது போன்ற விசயங்களில் எல்லாம் மிக மிக கவனமாய் இருப்பான்.

“சொன்னா கேளு சுஸ்மி.. கிளம்பு… நேரமாச்சு… எனக்கும் தூக்கம் வருது…” என்று கதவை திறந்து வைத்து சொல்ல,

“ரொம்ப பண்ணாதடா… ஒருநாள் உன் சொந்தக்காரர் யாரோ வந்து போகவுமே என்னை வீட்டை விட்டு வெளிய போ சொல்ற பாத்தியா…” என்று சொல்லியபடியே செல்ல, பதில் பேசாமல் நின்றிருந்தான் புகழேந்தி..

 

 

Advertisement