Advertisement

ஒரு காதல் வந்ததின்று..!!

17.02.2018

 “ஒவ்வொரு நுகர்வுக்கும்

ஒவ்வொரு வாசம் தர

 பூக்களால் மட்டுமே முடியும்

பூக்களுக்கும்

அவனை ரொம்பப் பிடிக்கும்

விரல்களால் உயிர் பறித்து

அவன் நுகர்வதற்கு

முந்தைய   கணம் வரை”

கவிஞர் முத்துக்குமாரின் “பூ நுகரும் காலம்” கவிதையை வாசித்துக் கொண்டிருக்கிறேன் நான்.வெளியே வெளிச்சம் குறைத்து இருள்மழை..காதில் ஹெட் செட்.

“பன்னீரைத் தூவும் மழை ஜில்லென்ற காற்றின் அலை

சேர்ந்தாடும் இன்னேரமே

என் நெஞ்சில் என்னென்னவோ வண்ணங்கள் ஆடும் நிலை”

 

இளையராஜாவின் இசையில் கே.ஜே.யேசுதாஸின் வசீகரக்குரல் என் செவி வழித் தீண்டி இதயம் நுழைகிறது..உலகில் உன்னதமான ஒன்று உண்டென்றால் என்னைப் பொருத்தவரை ‘இசை’தான்..அத்தனை வேறுபாடுகளையும் களைவது.அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத் தாக்குதலின் போது நடைப்பெற்ற முதல் பொது நிகழ்ச்சி ஒரு கான்சர்ட் தான்.தங்களின் துன்பங்களை துடைக்க,வலிகளை மறக்க,அட்லீஸ்ட் நினைக்காமல் இருக்க அவர்கள் கண்ட வழி இசை தான்.அவ்வளவு பெரிய தாக்குதலை கடக்க இசை என்பது சாமனிய வழியாக தோன்றலாம்.ஆனால் மக்கள் தங்களை , தங்களின் வலிகளை, தங்கள் உறவினர்களின் பிரிவை சிறிது கணங்களாவது மறக்க இசைதான் சிறந்த கருவி.

 

இப்படி இசை,கவிதை என அருமையான காம்போவோடு என் காம்ரேட் தாராவுக்காய் காத்திருக்கிறேன் நான்.

 

இன்னும் பெருமழை வருவதற்கான அறிகுறியாக வானம் கொஞ்சம் அதிகமாகவே மை பூசியிருந்தது.சொன்ன நேரத்திற்கு எப்போதும் சரியாக ஒரு மணி நேரம் தாமதமாய் வரும் என் பெஸ்ட் ப்ர்ண்ட் தாராக்காக வெயிட்டிங்.

குளிர் கொஞ்சம் என்னைத் தாக்க,எவ்வளவு நேரம் தான் அந்த ரெஸ்டாரெண்டேயே முறைச்சுப் பார்க்கறது.அவ வர லேட் ஆகும்னு அவ சொல்லாமலே தெரிஞ்சதால அவளும் நான் மீட் செய்யறதா சொல்லியிருந்த ரெஸ்டாரெண்டுக்கு உள்ளேயே வந்து நான் உட்கார்ந்திட்டேன்.

எனக்கு எப்பவுமே போனை நோண்டிட்டே இருக்கறது பிடிக்காது.ஆனாலும் இப்படி வெளியே போறப்ப தனியா எவ்வளவு நேரம் உட்கார முடியும்.அதனால் அம்மாவோட ஐடியாவை நானும் ஃபாலோ பண்றது.அம்மா எப்ப வெளியே போனாலும் அவங்க ஹாண்ட் பேக்ல ஒரு புக் இருக்கும்.கவிதை,இலக்கியம்,சினிமா,த்ரில்லர்,சுயசரிதைன்னு வித்யாசமா தான் அம்மாவோட கலெக்ஷன்ஸ் இருக்கும்.

சோ தாயைப் போல பிள்ளை…பின்ன இப்படி பங்க்சுவல் பங்கஜத்தை எல்லாம் பெஸ்ட் ப்ர்ண்டா வைச்சிக்கிட்டா இப்படிதான்.அவ புண்ணியத்துல இதுவரைக்கும் நான் மூணு புக்கை முழுசா படிச்சிருக்கேன்.

‘எல்லா புகழும் தாராவுக்கே’

அப்பாவுக்கு புக் படிக்கிற பழக்கமே இல்லை..அவர் காலேஜோட புக்ஸை விட்டுட்டார்.அவருக்கு ராஜா சார் மியுசிக் தான் இஷ்டம்.அவர் கிட்ட இருந்துதான் பாட்டு கேட்க கத்துக்கிட்டேன்..அதையும் பாலோ செய்துட்டே தான் இருப்பேன்.இப்படி  விண்டோ பக்கத்துல உட்கார்ந்திட்டு க்ளாஸூக்கு வெளியே மழையையும்….ராஜா சார் மியுசிக்கையும் முத்துக்குமார் சார் கவிதையையும் படிக்கிறதை விட சுகமான  நேரம்  இப்போதைக்கு வேற எதுவும் இல்லை எனக்கு.

“சஹி….”

‘வாடியம்மா வா..வண்டியம்மா வா…’ என  நினைத்தபடியே  தாரா ஆஜர்.புத்தகத்திலிருந்து விழி நிமிர்த்தி அவளைப் பார்த்தேன்.மன்னிப்புக் கேட்கும் பாவனை எல்லாம் அவட்ட கிடையாது.ஒரு தடவன்னா கேட்கலாம்..ஒவ்வொரு தடவையும் நான் எப்பூடி…?

“என்னடி உள்ள யார்?ராஜா சாரா இல்லை ரஹ்மான் சாரா….?”

“இப்போ ராஜா சார் தான்…”

“சரி சரி….என்ன சாப்பிடலாம்…?ம்ம்…மழை….காதுல பாட்டு…கையில கவிதை…..கலக்குறடி…இதுல கொஞ்சம் மிளகாய் பஜ்ஜி ஏட் பண்ணா 100% பெர்ஃபெக்ட்” என்றபடி எனக்கும் அவளுக்குமாய் சேர்த்து காபி,பஜ்ஜி,அந்த ரெஸ்டாரெண்டின் ஸ்பெஷல் ரெசிபியான பால் கொலுக்கட்டை எல்லாம் ஆர்டர் செய்தாள்.

இருவருமே சாப்பிட்டு கொண்டே பேசினோம்..அதுவும் மிக மிக மெதுவாக…பின்ன வெளியே போனால் தொப்பலா நனைஞ்சிடுவோம்ல.கையிலும் பையிலும் இவ்வளவு வைச்சிருக்க எங்கிட்ட குடை இல்லையே…!தாராவும் எடுத்துட்டு வரல..பாவம் அவளே வரும்போது நனைஞ்சிட்டா.

“ஆமா ஆன்டி அங்கிள்லாம் எப்படி இருக்காங்க?உன்னோட அந்த  மேனேஜர்  ப்ரஷர் ப்ர்காஷ் எப்படி இருக்கார்..?”

“அவருக்கென்ன இன்னமும் அப்படியே தான் இருக்கார்…கொஞ்சமும் ப்ரஷர் குறையல…” என சொல்லி சிரித்தாள் தாரா.தாரா TCS ல வேலைப்பார்க்கிறாள்.நான் பி.எல் முடிச்சிட்டு சிட்டில பெரிய லாயர்ட்ட ஜீனியரா இருக்கேன்.

அவள் பேசிக்கொண்டே இருக்க,நான் கேட்டுக்கொண்டே இருக்க,தாரா தீடீரென,

“ஏன் டி நீ வக்கீலா..நான் வக்கீலா…? நீ வக்கீல்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க….” என சொல்லிக் கொண்டு இருக்கையில்

“சஹஸ்ரா..”

என் பெயர் யாரோ அழைக்க எங்கள் கவனத்தைக் கொஞ்சம் திருப்பிப் பார்த்தாள் ஒரு அவன்..யாரோ அவன்…?

அவனே அவனை அறிமுகம் செய்து கொண்டான்.

“ஹாய் சஹஸ்ரா..ஐ அம் அபய்” என அவன் சொன்னதும் மண்டையில் அடிக்கிறது மணி.

அவன் அபயன்.அகன் அபயன்.என்னோட ஸ்கூல்மேட்.சார் டென்த் படிக்கிறப்பவே என்ட்ட லவ் லெட்டர் கொடுத்த ரோமியோ.தாராவுக்கும் அவனை தெரிஞ்சிடுச்சுப் போல.என்னைப் பார்த்து கண்ணடிக்குது லூசு.ஆனால் நானோ அறியாத வயசுல தெரியாம பண்ணிட்டான்ற மாதிரி அவன்ட்ட கேசுவலா சொன்னேன் ஒரு ,”ஹாய்..”

தாராவை அவனுக்குத் தெரியாது.காரணம் அவ வேற ஸ்கூல் போயிட்டா சிக்ஸ்த்லேயே.பட் என்னோட இன்னொரு பெர்சனல் டயரி தாராங்கறதால அவளுக்கு என்னைப் பத்தின அத்தனையும் அப்ப அப்ப அப்டேட் ஆகிடும்.

“எப்படி இருக்க சஹஸ்ரா..?வீட்ல எல்லாம் நல்லா இருக்காங்களா…அங்கிள் எப்படி இருக்காங்க… என்ன பண்ற இப்போ…?” என அவன் நின்று கொண்டே கேட்க

தாராவோ ,”உட்காருங்க சார்…என் நிக்கிறீங்க..?” என எங்களுக்கு எதிரில் இருந்த இருக்கையைக் காட்டினாள்.

அவன் உட்கார, நான்,

“எல்லாரும் நல்லா இருக்காங்க அகன். நான் லா முடிச்சிட்டு இப்ப ஜுனியரா இருக்கேன்… நீ என்ன பண்ற…?”

“ரெஸ்டாரெண்ட் பிஸீனஸ் பண்றேன்மா..இந்த ரெஸ்டாரெண்ட் எங்களோடதுதான்…எம்பிஏ இன் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பண்ணிருக்கேன்..” என சொல்ல

எனக்குப் புரிகிறது  அவன் சிறுவயதிலேயே எப்படி உழைத்திருக்கிறான் என.இந்த ரெஸ்டாரெண்ட் ஒரு ஸ்டார்ட் அப்பாக ஆரம்பித்திருந்ததாய் செவி வழி செய்தியாய் அறிந்திருக்கிறேன்.அவன் வாழ்வில் நல்வழி அடைந்ததற்காக அமைதியாக மகிழ்ந்து போகிறது என் அகம்.உடன் படித்தவனாயிற்றே..!அதைத் தாண்டி எதுவுமில்லை.இப்போது என்றில்லை எப்போதுமே என் அகம் கடந்து யாரையும் நான் அனுமதித்ததில்லை.

“இவங்க…?” என்றபடி அவன் தாராவைப் பார்க்க

“என் பெஸ்ட் ப்ர்ண்ட்…தாரா..”

அளவாய்  ஒரு அறிமுகம்.

அவன் முகத்தில் பழையதை நினைத்ததற்கான அந்த அறிகுறியும் இல்லை.எனக்குமே அவனைப் பார்க்கும் கணம் வரை எதுவும் நினைவில் இல்லை.ஆனால் அவன் அபய் என தன்னை இன்ட்ரோடுயூஸ் செய்யும்போது அவன் செஞ்ச ஹைலைட்டான விசயம் தான் ஞாபகத்துக்கு வருது.

“ஓகே…சஹஸ்ரா….யூ கேரி ஆன்.ரௌண்ட்ஸ் வந்தேன்…ஒரு கெஸ்ல தான் நீயோன்னு நினைச்சேன்..நைஸ் மீட்டிங் யூ…பை” என்றபடி எழ

“ரொம்ப நல்லா இருக்கு அபய் சாப்பாடெல்லாம்..ஆல் தி பெஸ்ட்…எனக்கும் இப்படி உன்னைப் பார்க்கிறச்ச சந்தோஷம்..பை..” என சொல்லி அவன் சென்ற பின் சிறிது நேரத்திலேயே நானும்  தாராவும் அங்கிருந்து கிளம்பினோம்.

22.03.2018

ஒரு மாதம் சென்றது.கேஸும் சில லூசும் கொஞ்சம் ஃபீஸூம் என எப்போதும் போல் சண்டை,சட்டம்,வாய்தா,விடுதலை,ரீமாண்ட்,செக்ஷன் என  இயல்பாப் போனது என் வாழ்வு.

இரவு   நான் அறையில் constitution of india,IPC,CrPC சூழ ஒரு கேஸுக்காக பாயிண்ட்ஸ் எடுக்கையில் அப்பா  நுழைந்தார்.

அப்பா எச்.ஆராக இருக்கிறார்.சஹஸ்ரா சத்யமூர்த்தி என்று சொல்வதில் அவ்வளவு பெருமை எனக்கு.இரவு இந்த நேரத்தில் வீட்டில் என்னை யாருமே தொந்தரவு செய்ய மாட்டார்கள்.யாருமே என்றால் வீட்டில் இப்போது நான்,அம்மா,அப்பா மட்டுமே.அக்கா  கல்யாணமாகி பெங்களூர்ல இருக்கா.இரண்டு க்யூட் குட்டீஸ்.மாமா infosys ல வேலைப் பார்க்கிறாங்க.

“என்னப்பா என்ன விசயம்..?”

அப்பா இந்த நேரத்தில் எதுவும் முக்கியமா இல்லாம வர மாட்டாங்கன்னு தெரியும்.

“சின்னக்குட்டி  நாளைக்கு உன்னைப் பொண்ணு பார்க்க வராங்கடா…அப்பா என்ன இப்போதான் சொல்றேன்னு நினைக்காதடா…இப்போதான் பையனோட அம்மாவும் அப்பாவும் திருப்பதி போயிட்டு வந்தாங்க..வந்ததுமே நாளைக்கே வரேன்னு சொல்லிட்டாங்க..உனக்கு ஓகே வாடா…நான் ஈவினிங் தான் வர சொல்லியிருக்கேன்…உனக்குப் பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம்” 

அப்பா பேச்சிலும் முகத்திலும் கொஞ்சம் தயக்கம் எட்டிப் பார்த்தது.அப்பா பேசிக்கொண்டு இருக்கும்போதே அம்மாவும் வந்தார்.இருவரும் முகமுமே ஆவலாய் என்னை நோக்கி.

அப்பா அம்மா இரண்டு பேருமே அக்காவுக்கும் சரி எனக்கும் சரி  எப்பவுமே பொண்ணுங்கறதால் எந்த பாகுபாடு காட்டினதில்லை.எல்லாத்திலேயும் எங்க இரண்டு பேரோட விருப்பத்தைக் கேட்பாங்க.அப்புறம் அதோட நல்லது கெட்டதை சொல்வாங்க.ஆனால் முடிவு எங்க கையில் தான்.10 த் முடிச்சு குரூப் செலக்ட் பண்றப்ப ஆரம்பிச்சு இப்ப வரை அப்படி தான்.

அப்பா அக்காவுக்கு மாப்பிள்ளை பார்க்கும்போதே சொல்லிட்டார்.’என் பொண்ணுங்க என்ன ஷோ கேஸ் பொம்மையா…வரவன்லாம் பார்க்க…’ அப்படின்னு அதனால் அக்காவுக்கு மாப்பிள்ளை அத்தனை வகையிலும் திருப்தி ஆன பின்னாடி தான் அப்பா வீட்டுக்கே வர சொன்னார்.அதுவும் டைரக்ட் நிச்சயம்.அதுக்காக அவர் தான் முதல் மாப்பிள்ளை கிடையாது.அதுக்கு முன்ன நாலு அஞ்சு வரன் பார்த்தாங்க போல ,ஆனா எங்ககிட்ட சொல்லவே இல்லை.ஒரு சின்ன உறுத்தலோ மனக்குறையோ வரக்கூடாதுன்னு அப்பா அம்மா இரண்டு பேரோட விருப்பம்.இப்ப எனக்கும் அப்படியே..ஒரு வருசமா பார்க்கிறாங்கன்னு தெரியும்.ஆனால் இப்போதான் அப்பா எங்கிட்ட வந்து சொல்றாங்க.அதுவும் அக்கா கிட்ட கூட ஒரு இரண்டு நாள் முன்னாடி சொன்னாங்க.போட்டோ காட்டுற பழக்கம் எங்க வீட்ல இல்லை.போட்டோல ஒரு மாதிரி இருந்து நேர்ல பிடிக்கலன்னா வருத்தமாயிடும்னு நேர்லேயே தான் பார்க்கிறது.

அப்பா அம்மாவை இவ்வளவு புரிஞ்சு வைச்ச நான் என்ன சொல்ல,

“சரிங்கப்பா…நாளைக்கு 3 ஓ க்ளாக் வொர்க் முடிஞ்சிடற மாதிரி பார்த்துக்கிறேன்..”

முடித்து வைக்கிறேன் முத்தாய்ப்பாய்.

23.03.2018

பெண் பார்க்கும் நாள்…

கோர்ட்டில் வேலை செய்வதால் போலிஸ்,ஜட்ஜ்,லாயர்ஸ்,இன்னும் பெரும்புள்ளிகள் எல்லாரையும் பார்த்து எனக்கு எப்போதும் பயமோ தயக்கமோ இருந்ததில்லை.ஆனால் இன்று கொஞ்சம் படபடப்பு.எக்சாம் டென்ஷன் போல.ஒரு வழியாய் நான் ரெடியாகி இருக்க,தாரா என்ட்ரி கொடுத்தாள்.மாப்பிள்ளை வீட்டார் வந்து ஒரு பத்து  நிமிடம் போனதும்  என்னை அம்மா வந்து அழைத்தார்கள்.

எதிர்ப்பார்ப்பெல்லாம் இல்லை என சொல்ல முடியாது. ஒரு சிறு ஆவல் நெஞ்சின் ஓரம்.அப்பாவும் அம்மாவும் பார்த்தால் சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை ஒரு பக்கம்.எட்டிப் பார்க்குது ஒரு புறம் தயக்கம்.

ஒரு வழியாய் அந்த பைனல் இண்டர்வியூ கேண்டிடேட் அதாங்க மாப்பிள்ளையைப் பார்த்தால் அதிர்ச்சியோ அதிர்ச்சி.அதிர்ச்சிக்கெல்லாம் அதிர்ச்சி.

அக்ஷய் குமாரோ அபிஷேக் பச்சனோ வந்திருந்தால் கூட நான் இவ்வளவு ஷாக் ஆகியிருக்க மாட்டேன்..வந்தது அகன் அபயன்.இவனை எப்படி அப்பா மாப்பிள்ளையாய் செலக்ட் பண்ணினார்.அப்பாவை முறைப்பாய்ப் பார்த்து வைக்க எண்ணினால் அவர் மும்முரமாய் அபயின் அப்பாவிடம் பேசிட்டு இருக்கார்.அம்மாவை முறைக்கலாம் என்றால் அவர் கேலண்டர்ல இருக்க லஷ்மி மாதிரி ஸ்மைல் மோடிலேயே இருந்தார்.

ஆனாலும் என்னை சரியா கேட்ச் பண்ணின ஒரு ஆள் உண்டு.தாரா தான்.அவளுக்கு எனக்கு மேல் அதிர்ச்சி.அதற்குள் என்னை எதிர்க்கட்சியினர்…ப்ச்..பழக்க தோசம்…அதாவது  அபயின் வீட்டார் உட்கார சொல்ல,எனக்கோ,

‘என் வீட்ல வந்து என்னை ஏண்டா உட்கார சொல்றீங்க.உங்க பையன் பத்தாங்க்ளாஸ்ல இருந்து பத்து வருசமா வாய்தா வாங்கி இருக்கான்னு உங்களுக்குத் தெரியுமா யுவர் ஹானர்..?’

நான் மறந்தும் மீண்டும் ஒரு முறை அகனை லுக் விடவில்லையே.எத்தனை தடவ தான் அதிர்ச்சி ஆகுறதாம்…?அப்பா எதாவது சொல்வார்னு அவர் முகத்தையே நான் பார்க்க,அவருக்குப் பதிலாக ஆஜரானார் அபயன்.

“அங்கிள் நான் ஒரு டூ மினிட்ஸ் சஹா கிட்ட பேசிக்கலாமா…?”

“எஸ் ப்ரோசீட் அபய்” – எங்கப்பா  சாட்சாத் சத்யமூர்த்திதான்.

கீழே இருந்த கெஸ்ட் ரூமில் நான் உள்ளே செல்ல,அவன்  பின் தொடர்ந்தான்.

அங்கிருக்கும் பெயிண்டிங்கில் பார்வையை நான் பதித்து இருக்க,அவன் தானே பேசனும்னு பெட்டிஷன் போட்டான்.பேசு என்றபடி நான் நிற்க

“என்ட்ட என்ன கேட்கனும் சஹா..?”

விழிவழியே என் வினாவை படித்திருக்கிறான்.

“வாட்ஸ் திஸ் அபய் …?உன்னோட 10 த் க்ளாஸ் இன்ஃபாக்சுவேசனை கண்டினியூ பண்ண நினைக்கிறியா..?”

பின்னே..அவன் பத்தாம் க்ளாஸில் காதலர் தினத்தன்று என்னிடம்  மேத்ஸ் போடன்னு சொல்லி வாங்கின க்ளாஸ் வொர்க் நோட்ல வைச்சு லெட்டர் கொடுத்தானே.ஸ்கூல்லேயே பார்த்த எனக்கு  என்ன செய்யனு தெரியாம இருந்தது.மிஸ்கிட்ட சொல்லவா..இல்லை ப்ரின்சிபால்ட்ட சொல்லவா..சொன்னா அவனை என்ன செய்வாங்க.அடிப்பாங்களா..?இல்லை அவன் படிப்புக் கெட்டுடுமோ…இல்லை என்னை யாராவது தப்பா சொல்லிடுவாங்களோன்னு பயம் ஒரு பக்கம்.தப்பித் தவறி கூட அவனுக்கு என்ன பதில் சொல்லனும்னு என் மனசுல தோணல.அப்ப எனக்கு லவ்னா கல்யாணம் செய்துக்கிட்டவங்களுக்குள்ள  வரதுதான்.என்ன மாதிரி 90′ ஸ் கிட்ஸ்க்கெல்லாம் அப்படித்தான்.ஆனா அவனை எப்படி போட்டுக்கொடுக்கலாம்னு தான் எனக்கு குழப்பமே…

என்ன செய்யன்னு யோசிச்ச நான் ஸ்கூல் முடிஞ்சதும் விசயத்தை அப்பா அம்மாகிட்ட வழக்கம்போல சொல்லிட்டேன்.எதாவது முக்கியமா நடந்தா தினமும் நானும் அக்காவும் அம்மா அப்பா யாராவது ஒருத்தர்ட்ட சொல்றது வழக்கம்.எனக்கு அப்போ மாதவன் மேல க்ரஷ்அதை கூட அம்மா அப்பா கிட்ட சொல்லிட்டேன்.ஆனா கூட படிக்கறவங்களை அண்ணன் தம்பின்னு சொல்ற ஆள் இல்லனாலும் ப்ர்ண்டா பார்க்கிறவ நான்.அந்த ‘க்ர்ஷ்’ பதம் கூட என் அக்கா சொல்லிக் கொடுத்தது தான்.எல்லா விசயத்தையும் தயக்கமில்லாம ஒளிவு மறைவில்லாம நாங்க சொல்லிடுவோம்.

அப்பா கிட்ட சொல்லி முடிச்சதும் தான் நான் ரிலாக்ஸ் ஆனேன்.என் நம்பிக்கை நங்கூரம் அவர்.இனி அவர் வசம் எல்லாம்.அப்பா அபயை ஒரு டூ டேஸ் கழிச்சு ஸ்கூல் வாசல்ல மீட் பண்ணினேன்னு சொன்னார்.அவன் கிட்ட பேசி புரிய வைச்சிட்டேன். நீ எப்பவும் போல இருன்னு சொல்லிட்டார்.அவனும் 11த்ல வேற ஸ்கூல் மாறிட்டான்.நானும் அதோட அந்த விசயத்தை மறந்துட்டேன்.போன மாசம் வரை.

என் கேள்வியைக் கேட்டு அவன் பெரிதாய் அலட்டிக் கொள்ளவே இல்லை.கண்ணோரம்  குவிந்த குறுஞ்சிரிப்பு மட்டுமே.

“நீயே இவ்வளவு தெளிவா இன்ஃபாகுசுவேஷன்னு சொல்ற….அப்புறம் அதை எப்படி கண்டினியூ பண்ண தோணும்..உன்னை என் ரெஸ்ட்ராரெண்ட்ல பார்த்தப்போ கூட என் கூட படிச்ச பொண்ணுன்னு தான் பேசினேன்.உனக்கு இந்த டவுட் வரது நியாயம் தான் பட் நானும் இப்போ ஒன்னும் பதினைஞ்சு வயசு பையன் இல்லை சஹா…ஆனால் உண்மையை சொல்லனும்னா அன்னிக்கு உன்னைப் பார்த்ததும் உனக்கு தேங்க் பண்ணனும்னு தோணிச்சு.நான் சின்ன வயசுல செஞ்ச தப்பை உங்கப்பா ஹாண்டில் பண்ண விதம்.என்னை ஒரு ஐஸ்கீரிம் பார்லர்க்கு அழைச்சிட்டுப் போய் ரொம்ப பொறுமையாய் எடுத்து சொன்னாங்க.அங்கிளுக்கும் கூட காலேஜ் படிக்கிறப்போ லவ் வந்துச்சாம்..”

அவன் சொல்லிக் கொண்டே போக,இந்த இடத்தில் ஷாக் ஆனேன் நான்.

‘எங்கப்பா படிச்சது மென்ஸ் காலேஜ்ல..மேலே சொல்லு…மேலே சொல்லு…’.

ஆனாலும் அவன் ஒரு ப்லோவா சொல்லும்போது தடுக்க மனசு வரல.எத்தனை நாள்  நான் பேசுறப்போ எதிர்த்தரப்பு லாயர் குறுக்க பேசி என்னை டென்ஷன் பண்ணிருக்கார்.அதனால் அவனைப் பாவம் பார்த்து விட்டேன்.யூ ப்ரோசீட் மேன்.

“ஆனால் படிச்சு முடிச்சு வேலை,குடும்பம்னு பார்க்க ஆரம்பிச்சதும் அது போயிடுச்சு..இப்ப  நான் ஆன்டி கூட செம ஹாப்பியாய் இருக்கேன்பா…அதுக்காக நான் ஃபீல் பண்ணவே இல்லை.அது ஹார்மோன்னால வர ஒரு சேஞ்ச்…அது வரலனாதான் அதிசயம்.இது தப்பு இல்லை.ஆனால் என் பொண்ணை இனி டிஸ்டர்ப் செய்யாத.ஒரு ப்ரண்டை நீ இழந்திடுவ.இப்போ டென்த்ல நல்லா படி…செட்டில் ஆகு…அதுக்குள்ள நீ இவளை  மறந்தே போயிடுவேன்னு சொன்னாங்க..ஒரு ஃபாதர் ஃபிகர் போல் அங்கிள் சொன்னது எனக்கு என்ன சொல்றதுன்னே தெரில..அப்புறம் எனக்குப் பிடிச்ச கிரிக்கெட்,சினிமான்னு கொஞ்ச நேரம் பேசிட்டு எங்கூட சேர்ந்து ஐஸ்கீரிம் சாப்பிட்டு…ஹி இஸ் அமேசிங்..”

“ஆனாலும் நான் உடனே மாறிட்டேன்னு பொய் சொல்ல மாட்டேன்.மத்த ப்ர்ண்ட்ஸ்லாம் நான் லவ் பண்றேன்னு சொல்லும்போது உன் மேல கோபம் வரும்.ஆனாலும் அங்கிளும் ஐஸ்கிரிமும் சேர்ந்து என்னை ஆஃப் பண்ணிடுச்சு.அப்புறம் நான் உன்னைப் பார்க்க கூடாதுன்னு தான் வேற ஸ்கூல் சேர்ந்தேன்.அங்க தான் உண்மையாவே நான் மாறினேன்.அங்கயும் ஒரு பொண்ணு இருந்தா ரொம்ப க்யூட்டா இருப்பா.அவளையும் பிடிச்சது.உன்னையும் பிடிச்சது.அப்போதான் எனக்கே புரிஞ்சது.ஜஸ்ட் அழகு மேல வர ஆர்வம்.ஒரு பொம்மை மேல இருக்க ஆசை..இது எல்லாத்தையும் விட நான் ட்வுல்த் படிக்கிறப்போ ஒரு பையன் என்னை மாதிரியே ஒரு பொண்ணுக்கு லெட்டர் கொடுத்து பெரிய ப்ராப்ளம் ஆகிட்டு.அவனை அந்த பொண்ணோட அப்பா ஹெச்.எம்ட்ட கம்ப்ளையண்ட் செய்து  ஹி வாஸ் இன் ட்ரபிள்.அதனால் அவனோட படிப்பு பாதிச்சது.இத்தனைக்கும் என்னை விட ஹை ஸ்கோரர்.அப்போதான் உங்கப்பாவோட போதனைகள் எவ்வளவு உண்மை.அவர் எவ்வளவு ஜெனியூன் பெர்சன்னு புரிஞ்சது.சத்தியமா எங்கப்பா கூட இவ்வளவு விசயம் என்ட்ட பேசினது இல்லை.அவருக்குப் பாசம் இருந்தாலும் இப்படி ஒரு விசயத்தை டிப்ளமேட்டிக்கா அப்ரோச் செய்ய வராது.ஸோ இன்ஃபாக்சுவேஷன்ற சாப்டர் க்ளோஸ்…”

அவன் சொல்லி முடிக்க அத்தனையும் உண்மை என புரிந்தது.அப்பாவுக்கு மனதிக்குள் ஒரு ஐ லவ் யூ சொல்லிக் கொண்டேன்.

“ஆனாலும்  உன்னைப் பார்த்த பின்னாடி உங்கிட்ட பேசினப்போ நீ எங்கிட்ட பழசு எதையும் காமிச்சிக்காம….ஒரு நல்ல ப்ர்ண்டா பேசின…ஸோ அப்போ உன்னைப் பிடிக்க ஆரம்பிச்சது.அதனால் இந்த முறை உங்கிட்ட பேசாம டைரக்டா மாமனார் கிட்டையே பேசிட்டேன்..”என சொல்லி புருவம் உயர்த்தினான்.

அவன் அகத்தின் எண்ணங்கள் அரங்கேறிய மகிழ்வு தெரிகிறது அவன் முகத்தில்.

“ஏன் அபய் ஒரு ப்ர்ண்டுன்னு நல்லா பேசினா உடனே பொண்ணு கேட்டு வருவீங்களா..?”

‘நான் வக்கீல்டா…உடனேலாம் அக்செப்ட் செய்தா என்ன ஆகுறது…?’

“ப்ச்…அதனால எல்லாம் இல்லை.. நம்ம ரெஸ்டாரெண்ட் சாப்பாடு நல்லா இருக்குனு சொன்ன இல்ல..அதான்…சரி நம்ம கல்யாணம் செஞ்சுட்டு எப்பவும் நம்ம ரெஸ்ட்ராரெண்ட்லேயே பொண்ணை சாப்பிட வைப்போம்னு ஒரு நல்ல எண்ணம்…”

நக்கலா பேசுறான் இந்த நல்லவன்..?

 நான் அவனை முறைக்க,

“ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுக்கிற நல்ல மாமனாரை நானும் எல்லா இடத்திலேயும் தேடிப் பார்த்தேன் இங்க தான் கிடைச்சார்..” 

அதற்குள் வெளியே எங்களை அழைக்கும் சத்தம் கேட்க,அவன் என் முடிவைக் கேட்டு வாய்த் திறக்கும் முன்னே கதவைத் திறந்து வெளியேறினேன்.அவனும் என்னோட கமிங்.

இருவரும்   வந்ததும் அவன் போய் உட்கார்ந்து கொள்ள,அப்பா என்னை அழைத்துத் தனியே சம்மதம் கேட்க,

சம்மதம் என் புறம்.சந்தோசம் அவர்கள் புறம்.

19.09.2018

 இப்ப எங்களுக்கு கல்யாணமாகி ஆறு மாசம் ஆகிடுச்சு.எதுவுமே மாறல.என்னை அவன் மாத்தவே இல்லை.நானும் மாத்தவே இல்லை.நாங்க நாங்களாவே இருக்கோம்.

காதல் எதையும் எதிர்ப்பார்க்காது.அது ஒரு சுதந்திரம்.அது நிபந்தனையற்றதுன்னு ஒஷோ சொன்ன மாதிரி தான் எங்க வாழ்க்கைப் போகுது.

இன்னிக்கு அப்பா அம்மாவைப் பார்க்கப் போறோம்.அவன் ஷர்ட்டை இன் செய்திட்டே இருக்கும்போது நான் கேட்டேன்.

“ஏன் அகன் என்னை கல்யாணம் செய்த…?”

எப்போதும் போல், என் கைப்பற்றி,எத்தனை முறை கேட்டாலும் ,

“கன்னுக்குட்டி…அன்னிக்கு நீ பேசின விதம் பிடிச்சதுடா…ஒரு ப்ர்ண்டு லைஃப் லாங் வந்தா நல்லா இருக்குன்னு தோணிச்சு…அப்பா கிட்ட பேசினேன் அவர் ஓகே சொன்னார்.தென் அங்கிள்ட்ட பேசினேன்.அவரும் உன்னை மாதிரியே கேள்வி கேட்டார்.ஐயா ஆல் க்ளீயர்…” என பெருமையடிக்க

 நானோ வேண்டுமென்றே,”ஆமா 11த்ல யாரோ க்யூட் கேர்ள் பார்த்தேன் சொன்னீங்க..அவ அப்பாக்கிட்டையும் பேசினீங்களா..?” எனக்குத் தெரியும் அது எல்லாம் ஈர்ப்பு என.ஆனாலும் நான் கேட்கும் தருணம் அவன் பார்க்கும் பார்வை…அதில் வழியும் கெஞ்சல்…கொஞ்சல்….ஏங்குகிறதே என் மனம்.

எப்போதும் போல் அவன் என்னைப் பாவமாய்ப் பார்த்து வைக்க, என் அகம் புறம் அத்தனையும் அவன் புறம்.

 அம்மா அப்பாவைப் பார்த்தும் அவனும் அப்பாவும் எப்பவும் போல் ஒன்றாய் சேர்ந்து பேச,எனக்குள் சந்தோஷ சாரல்….மென்முறுவல்… அப்பாவுக்கு ஒரு மகன் இருந்தா எப்படி பார்த்துப்பானோ தெரியல..மாமா கூட மரியாதையாய் அப்பாகிட்ட நடப்பாங்க..ஆனா அகன் அப்பா கிட்ட பழகுற விதம் அப்படியே என்னைப் போலவே இருக்கும்.

அவங்க பேசும்போது குறுக்க புகுந்து வம்பிழுக்க எனக்கு ரொம்ப பிடிக்கும்.

“அப்பா யாரையோ காலேஜ் படிக்கிறப்போ லவ் பண்ணீங்களாமே…?”

அம்மா உடனே அப்பாவை முறைக்க,அவரோ,

“நான் படிச்சது மென்ஸ் காலேஜ்மா…ஏன் அபய் எல்லாத்தையும் இந்த சின்னக்குட்டிக்கு சொல்லனுமா நீங்க..?” அப்பா பொய்யாய்க் கோபிக்க,

“என் பெட்டர் ஹாஃப் மாமா…” அவன் விழிப்பார்வை என்னை முற்றுகையிட,

அப்பாவோ,”அதுக்கு என் வாழ்க்கையை ஏன்ப்பா பிட்டர் ஆக்குறீங்க..?” என சொல்ல,சிரிப்பும் பூரிப்புமாய் கடந்தன பொழுதுகள்.

மீண்டும் வீட்டுக்கு வருகையில்,

“நீ மாமா மென்ஸ் காலேஜ்னு சொல்லவே இல்லை…அப்போ மாமா யாரையும் லவ் பண்ணலேயா..?”

“அய்யோ…அகன்ப்பா…ஏன்ப்பா இப்படி இருக்க…?அப்பா உன்னை கன்வின்ஸ் செய்ய அப்போ சொன்ன பொய்…” என சொல்லி நான் சிரிக்க,

அவன் முகத்திலோ முழு நிலவாய் ஒரு முறுவல்.விழிகளினால் என்னை அன்புத் தழுவல்..எனக்குத் தெரியும் அப்பாவை அவனுக்கு இன்னும் இன்னும் பிடிக்குமென.

இப்படி அவன் பார்த்து வைக்கும் தருணங்களில் என் மனவெளிகளில் மழைத்தூறலும் மண்வாசமுமாய் கழிகின்றன பொழுதுகள். அகச்சுவர்கள் எல்லாம் உடைத்து அகம் கடத்திப் போனான் என் அகன்.பத்து வருடம் முன் அறியாத காதல் பதம் இன்று மொத்தமாய் என்னுள்..

அகமும் அனைத்தும் அவனானான்….என் அகனானான்…

வராத காதல் அன்று.

ஒரு காதல் வந்ததின்று…!!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement