Advertisement

கண்மணி 1:

 

‘அழகா முருகா குமரகுருபரா

விமல பாலா வினையை வெல்ல

அருள்வாய் வசந்தனே

ஆதரிப்பவனே..!’

 

 என்று மனதில் தன் கஷ்டத்தில் உதவும் இஷ்ட தெய்வத்திடம் வேண்டிய யாழ்முகை தன் அறைக்குள் நுழைந்த அன்னையிடம் தனது வேண்டுதலை விண்ணப்பிக்கத் துவங்கினாள்.

 

“அம்மா….இன்னும் இரண்டு வருசம் கழிச்சு நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்மா…அப்பாகிட்ட சொல்லுமா…” என   கிட்ட தட்ட இரு நூறாவது முறையாக கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

 

“கண்மணி…நானெல்லாம் பதினாறு வயசுல கல்யாணம் செஞ்சிக்கிட்டேன்…உங்க அக்காவைப் பாரு இப்போ அவளுக்கு இரண்டு பிள்ளை ஆகிப்போச்சு…ஏதோ மார்க் எடுத்த படிக்க வைச்சோம்…அம்புட்டுத்தேன்…அதுக்கு மேல எல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஒத்துவராது…சாயங்காலம் மாப்பிள்ளை வீட்ல வருவாங்க…ரெடியாகு…” என சொன்னார் யாழ்முகையின் தாய் கனிமொழி.

 

“அம்மா..! அப்போ உன் கல்யாணமே செல்லாதுமா…அப்போ இது சைல்ட் மேரேஜ்.வாவ்..சூப்பர்…வாம்மா கோர்ட்டுக்குப் போகலாம்..அப்படியே கேஸாகும்…அப்படியே கல்யாணத்தையும் தள்ளி வைக்கலாம்..” என ஐடியா சொல்ல அவள் மண்டையில் குட்டியவர் ,

 

“உனக்குக் கல்யாணம் பண்ணலாம்னு பார்த்தா என்னையும் என்ர புருஷனையும் பிரிக்கவா பார்க்கிற….கழுதை..! ஒழுங்கா போய் குளி..” என்றபடி அறையை விட்டுச் சென்றார் கனிமொழி.

 

யாழ்முகை யாழ்முகை கண்மணி …யாழ்முகை என்ற பெயர் அவர்கள் வாயில் சரளமாய் நுழையாதக் காரணத்தால் சப்ஸ்டியுட்டாய் கண்மணி.வீட்டுக்கோர் இஞ்சீனியர் திட்டத்தின்படி இஞ்சீனியரிங் சேர்ந்து நாலு வருடங்களை நாக்குத் தள்ளிப் போய் நிறைவு செய்த அப்பிராணி. வயதுக்கே உரிய குறும்புகள் இருந்தாலும் வீட்டில் அவள் பேசவே கூடாது.

 

வேகமாக நடக்காதே..அடக்கமின்றி உட்காராதே..சத்தமாக சிரிக்காதே..வெட்கமின்றி இருக்காதே என்ற விளம்பர வாசகம் தான் அவர்கள் பெரியப்பாவின் கட்டளை அதுவே சாசனம்..!!

 

வழக்கம்போல் டானாக அவள் பெரியப்பா கணேசனும் ,’எது சொன்னாலும் சரிதான் அண்ணே ‘ என்று சரத்குமார் வசனம் பேசித் திரியும் அவள் அப்பா முருகனும் அந்த வீட்டின் ஆண்மக்கள்.பெரியப்பா தான் வீட்டு விசேஷங்களின் இறுதி முடிவு எடுப்பார்.ஆரம்பமாக அதை துவக்குவதும் அவர்தான்.முடிவு எடுத்துவிட்டு தான்  பேசவே ஆரம்பிப்பார்.

 

யாழ்முகைக்கோ பெரிதாக வேலைக்குப் போக வேண்டும்…தேவையானிக் கணக்காய் கலெக்டர் ஆக வேண்டும் என்ற பேராசையெல்லாம் இல்லை.ரோட்டூரக் கடைக்கே வழியில்லை என்னும் போது சரவணபவன் சாம்பார் இட்லிக்கா அவள் ஆசைப்படுவாள்..?

 

நெவர் எவர்..!!

 

அவளுக்கு கேம்பஸில் வேலைக் கிடைக்கும் என ஏமாந்து போய் கடைசியில் டிகிரி மட்டுமே கிட்ட, வேலைக்குப் போனால் இந்த வீட்டின் அடக்குமுறையிலிருந்து இரண்டு வருட ஜாமீன் கிடைக்குமென அவள் திட்டம் தீட்டினாள். காரணம் அவள் கல்லூரி சேரும்போதே அவள் சேர்மேன் “இந்த கையில டிகிரி அந்த கையில  கால் லெட்டர்“ என்றார்.இப்போது நினைத்தால் அந்த சேர்மேனை மனதுக்குள் மர்டர் செய்ய மட்டுமே முடிந்தது அவளால்.

 

இப்போதோ ஒரு கையில் புடவை மறுகையில் ஜாக்கெட்டுமாய் இருக்கும் அவள் நிலையை எண்ணி சிரிப்புத் தான் வந்தது.வேலையில்லா பட்டதாரி ஆகிவிட்டோம் அட்லிஸ்ட் எம்பிஏ படித்து இரண்டு வருடம் ஓட்டலாம் என கனா கண்டிருக்க கனவாகவே போயிற்று.அவளுக்கு இரண்டு வருடம் ஃபிரீயாக இருக்க வேண்டும்.பேச்சுலர் லைஃபை டேஸ்ட் செய்ய வேண்டும்.ஆனால் அவர்களோ அவசர அவசரமாய்த் திருமண ஏற்பாடுகள் செய்ய பத்திக் கொண்டு வந்தது இவளுக்கு.

 

அந்த மாப்பிள்ளை ஆகப்பட்டவனிடம் பேசலாம் என்று நினைத்தால் அந்த சீமான் திருநாவுக்கரசு இவளிடம் பேசவே முயற்சி செய்யவில்லை. இவளாகப் பேசலாம் என்றாலோ கல்லூரி முடித்த பின் அழகாய் அம்சமாய் போன் வாங்கித் தந்தவர்கள் அவர்கள் ஊரிலே டவரே கிடைக்காத நெட்வோர்க்கின் சிம்மை வாங்கிக் கொடுத்து அவள் ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டனர்.

 

கண்றாவி கேம்ஸ் தவிர அதில் ஒன்னும் செய்ய முடியாது.இன்று அவள் வாட்ஸ் அப்பில் மெசிஜ் அனுப்பினால் அது மறு நாள் மாலையில் போய் சேரும் சோக கதையை எங்கே சொல்ல..?

 

அவள் தோழிகளோடு பேசுகையில் இவள் பெயர்தான் முதலில் திருமணம் செய்பவரின் பட்டியலில் வரும்.அப்படியே அமையப் போவதை எண்ணி வருந்த மட்டுமே முடிந்தது அவளால்.

 

திருநாவுக்கரசு செம ஸ்மார்ட் தான்.ஆனால் அந்த போட்டோ பார்த்து மனதில் மின்னல் மழை..அட்லீஸ்ட் சிறு தூரல்…எதுவும் இல்லை.ஆனால் அழகன் என்று மனது தீர்ப்பு வழங்கியது.

 

திருநாவுக்கரசு வீட்டில் எல்லாமே அவன் தாத்தா நம்பியார் தானாம். நரசிம்மன் அவர் பெயர். வில்லத்தனம் செய்தவராதாலால் நம்பியார் ஆகிப்போனார். நரசிம்ம நம்பியார் சொல்படி தான் அவன் வீட்டில் எல்லாம்  நடக்குமாம்.

 

மாலையில் மாப்பிள்ளை வீட்டார் வர ,”அந்த கொடிய மிருகம் உன்னை நோக்கி வருது..ஓடு…!” என மைண்ட் வாய்ஸ் கேட்க அவளும் அறைக்குள் ஓட துவங்க, அவளை தடுத்தது அவள் பெரியப்பாவின் வாய்ஸ்.

 

“மாப்பிள்ளை தம்பி உங்கிட்ட தனியா பேசணும்னு சொன்னா கூட நீ அவர்கிட்ட எதுவும் பேச கூடாது.புரியுதா?? மரியாதையா பேசணும்.நல்ல சம்பந்தம்..” என ஆர்டர் போட்டு விட்டு போனார்.

 

அதன்பின் சிறிது நேரத்திலே அந்த கொடிய மிருகம் அதான் மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட, இவளோ அறைக்குள் அடைக்கலம்.குசுகுசுவென கம்பெனி தர தோழியெல்லாம் இவள் கூட இல்லை.இது என்ன சினிமாவில் நடக்கும்  நிகழ்வா..? அதுவும் இவள் வீடோ சிட்டியை விட்டு தள்ளி கிட்ட தட்ட பார்டர் தாண்டிய பாகிஸ்தான் போல் தான்.ஆகையால் அவளது நெருங்கிய தோழிகள் யாரும் வரவில்லை.

 

“எல்லா பக்கியும் இவளிடம் எப்படி இருக்குனு சொல்லுடி” என்ற வாழ்த்தோடு வாட்ஸப்பில் மெசெஜ் அனுப்பியிருந்தனர்.

 

இவளுக்கோ ,”அடியே…இது என்ன வழக்கமா நடக்கிற ப்ராக்டிலா டி வைவா எப்படி கேட்டார்னு எக்ஸ்டர்னல் பத்தி சொல்லி என்னோட எக்ஸ்பீரியன்ஸ் ஷேர் பண்ண…எனக்கு ஒரு திரு ‘நா’ வுக்கரசு வர மாதிரி உங்களுக்கு ஒரு திரு மூக்கு அரசு  திரு காது அரசு தானடி வருவான்..” என மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

 

‘திருநாவுக்கரசு’ அதுதான் மிஸ்டர் கண்மணியாக வரப்போகிறவனின் திரு நாமம். கண்மணிக்கோ ,’மவனே உன் பெயரே இவ்வளவு பெருசா என்ற கடுப்பு.’ அதை தோழி ஒருத்தியிடம் சொல்ல அந்த நலவளோ ,”வாவ் வாட் எ நைஸ் நேம்..செந்தமிழ் பெயரு..சூப்பர் டி…அப்பர் பெருமான் பெயர்…செம..இந்த காலத்துலையும் இப்படி ஒரு பெயரா’ என புகழுரை சூட்ட , யாழ்முகைக்கோ இருந்த கடுப்பில் புகழுரை கேட்டு புகைச்சல் கூட,இன்னொரு தோழி சந்தியா,

“எரும…தமிழ்ல பெயர் வைச்சா மட்டும் என்ன வரிவிலக்கா இருக்கப் போகுது..?உன் தமிழ் ஆர்வத்துக்கு அளவில்லாம போச்சு.” என கடிந்து கொண்டாள்.

 

அதன்பின் அவரவருக்குப் பிடித்த பெயர்கள்,ரசனைகள்,கணவனாக வரப்போகிறவனிடம் உள்ள எதிர்ப்பார்ப்புகள் என்று பேச்சு எங்கேயோ போய் விட்டது. ஒருவழியாக தட் மாப்பிள்ளை கோஷ்டி வந்தனர்.மாப்பிள்ளை திருநாவுக்கரசு,அவனது தாய் துளசி ,இன்னும் சில உறவுகள்,கூடவே அவர்கள் கேங் லீடர் அதான் நரசிம்ம நம்பியார் எல்லாரும் வந்தனர்.

 

திருநாவுக்கரசு எம்பிஏ முடித்து விட்டு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ஹெச்.ஆராக இருக்கிறான். தந்தை சிறு வயதிலே காலமாகி விட தாயும் தாத்தாவும் மட்டுமே. அதனால் மிகுந்த அம்மா செல்லமாய் இருப்பானாய் இருக்கும். அதனால் இவளை நன்றாக வைத்துக் கொள்வான் என்பது இவளும் இவள் தோழிகளும் செய்து ஆராய்ச்சியின் முடிவு. ஆனால் திரு நாவுக்கரசு இக்கணிப்பிற்கெல்லாம் அப்பாற்பட்டவன் என்பதை அவர்கள் அறியவில்லை?!.

 

இவள் வந்து காபி டீ கொடுத்து விட்டு அங்கு ஷோ கேஸ் பொம்மையாக நிற்க,மனதிலோ தோழி சிவரஞ்சனியின் வார்த்தைகள் ஓடின.

 

அவளது நெருங்கிய தோழி சிவரஞ்சனி சொல்வாள்.”அதென்ன நம்மளை என்னமோ காட்சி பொருளா நிக்க வைக்கறது..?அதுவும் அவன் எத்தனை பேரை பொண்ணு பார்த்துட்டு வந்திருப்பானோ…நானும் பத்தோட பதினொன்னா..?” என்று கோபம் கொப்பளிக்கப் பேசுவாள்.

 

ஆனால் மனதில் இந்த மறுகலுக்கு மாறுதலாய் ஆறுதலாய் மாருதமாய் ஒரு விசயம் என்னவென்றால் அவன் பார்க்கும் முதல் பெண் இவள்தான். இருந்தாலும் புதியவர்கள் முன்பு இப்படி கூச்சம் வேறு தடுக்க பயத்தில் வேர்த்து விறுவிறுத்து நின்றாள்.

 

“நான் இவங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் அங்கிள் வித் யுவர் பெர்மிஷன்…” என்றான் திருநாவுக்கரசு.

 

‘வாவ்..பாருடா…இப்பவாவது உன் திரு நாவைத் திறந்தாயாடா..?’என்று மனதிற்குள் மகிழ்ந்து போனாள் மங்கை. ஆனால் உடனே அடுத்த கேள்வி,

‘இப்ப இவன் வந்து பேசினா மட்டும் எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கல..எம்பிஏ படிக்கனும் அப்படினு சொல்ல முடியுமா? அப்படி சொல்லி இவன் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டானா பெரியப்பா சும்மா விடுவாரா..அடுத்து ஒரு மாப்பிள்ளையை  நிறுத்த மாட்டாரா…?’ என்று சுய அலசலில் ஈடுபட

 

“கண்மணி மாப்பிள்ளை கூட போய் பேசும்மா…” என்று சொல்ல, இவள் அறைக்குள் இவள் செல்ல ,பின்னாடியே திருநாவுக்கரசும் போனான்.

 

உள்ளே சென்று கதவை லேசாக சாத்தியவன் இவளை அமர சொல்ல இவள் வெட்டி சீன் போட்டு  நிற்க அவனோ தோளை குலுக்கி விட்டு , அவளது பெட்டில் ஜம்மென்று உட்கார்ந்தான்.

 

‘அடேய்…நல்லவனே எப்படிடா இப்படி புதுசா பார்க்கிற பொண்ணு வீட்ல உன் பாட்டுக்குக் கதவை சாத்துற…இப்படி வெட்கமே இல்லாம என் பெட்ல உட்கார்ற..என்றவள் அதானே நீ தான் ஆம்பிளை ஆச்சே நீ ஏன் வெட்கப்படணும் ‘ என்று பதிலும் சொன்னது.

 

யாழ்முகையைப் பொருத்த வரையில் பெண்கள் தான் வெட்கப்பட வேண்டும்.அவள் வளர்ந்த சூழ்நிலை என்பதை விட அவளை வளர்த்த சூழ்நிலை அப்படிப்பட்டது.

 

“நல்ல சாரி..உனக்குப் பொருத்தமா இருக்கு” என்றான் அவன்.

 

‘முதல்முறைப் பார்க்கும் பெண்ணிடம் இப்படியா பேசுவான்.சரியான ஜொள்ளுப் பார்ட்டியா இருப்பான் போலயே’ என மனம் நினைக்க அதை முகம் கடுகடுக்க வெளிப்படுத்தினாள் யாழ்முகை.

 

“நான் உன்னைப் பார்க்கத் தானே வந்தேன்.ஐ மீன் பொண்ணு பார்க்க…அப்போ அதை சரியா செய்யணும்ல…எனக்கு உன்னைக் கல்யாணம் செஞ்சுக்க ஒகே.உனக்கு ஓகேவா..?” என அவன் அவள் சம்மதம் கேட்க

 

“அது எப்படி உங்களுக்கு உடனே என்னைப் பிடிச்சது…?”என்றாள் மெல்லிய குரலில் ஆனால் தெளிவாய்.

 

“நான் எப்போ பிடிச்சதுனு சொன்னேன்.உன்னைக் கல்யாணம் செய்ய சம்மதம்னு தானே சொன்னேன்…பார்த்த உடனே எப்படி பிடிக்கும்.?.இது பக்கா அரெஞ்ச் மேரேஜ்.என்னோட லைஃப்ல என்னை முதன் முதல்ல ஸ்கூல்ல சேர்த்தது என் தாத்தா தான்.. நம்ம லைஃப்ல முதன் முதல்ல நம்மளை தெரியாத ஒரு விசயத்துக்குள்ள தள்ளுறது பெரியவங்க தான்.சோ என் தாத்தா  எனக்கு நல்லதுதான் செய்வார்னு நம்பிக்கை. உனக்கும் அப்படி இருந்தா ஓகே சொல்லு..மத்தபடி நீ லவ் எதாவது செஞ்சிருந்தா சொல்லிடு..சில  பேரண்ட்ஸ் கம்பல்ஷன் செஞ்சு பொண்ணுங்களைக் கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்கறாங்க..அதான் கேட்கிறேன்”

 

“அய்யோ..!அதெல்லாம் இல்ல..” என யாழ்முகை பதற

 

“ஏய்..! ரிலாக்ஸ்மா…லவ் ஒன்னும் தப்பு கிடையாது.சரி உனக்கு ஓகேவானு சொல்லு..”

 

“ஓகே”

 

“தென் சூப்பர்.ஆமா உனக்கு ஓகே சொன்னியே என்னைப் பிடிச்சிருக்கா…என்ன?” என இவன் இரு புருவம் தூக்கி கேட்க

 

உள்ளே இருந்த ஈகோ சீண்டப்பட ,’என்னை மட்டும் பிடிக்கலன்னு சொன்னான்.உனக்கும் நோஸ் உண்டு தானே.கட் பண்றேன்’ என்று கறுவிக் கொண்டாள்.

“எனக்குப் பிடிக்கல…பட்..பெரியவங்களுக்காக ஒத்துக்கிறேன்” என்றாள் மிடுக்காக.

 

அவனோ அவளை ஒரு ஆழ்ந்த பார்வையைப் பார்த்து விட்டு சன்ன சிரிப்போடு சென்றான்.’அவனுக்கு இன்சல்ட் ஆகவில்லை போலவே’ என இவள் மனவோட்டம் ஓடியது.அவள் முகத்தில் சிந்தனை ஓட,

 

திருநாவுக்கரசோ மிகவும் கூலாக ஒன்றை சொன்னான் “வைஸ் மைண்ட்ஸ் திங் அலைக்” என.

 

‘அப்போ அவனைப் போல நான் யோசிக்கிக்கிறேனா…இல்லை அவனுக்கும் எனக்கும் ஒத்த மனமா..?’ என அவள் யோசனை செய்ய அவன் ஒட்டுமொத்தமாய் வேறு துருவம் என அவள் அப்போது அறியவில்லை.

 

அறியும்போது..???

 

அப்படியே நாட்களும் ஓடி விட அவர்கள் கல்யாண நாளும் வந்தது.பெரியவர்களுக்காக பெரிய மனது பண்ணி திருமண பந்தத்துக்குள் நுழைந்தனர் திருநாவுக்கரசும் திருமதி.திருநாவுக்கரசும்.

 

ஆனால் திருமணத்தின் முதல் இரவன்று இவள் கணவன் இருந்த கோலம் கண்டு அதிர்ந்து போனாள் யாழ்முகை.

 

Advertisement