Advertisement

காதலின் கனிவான கவனத்திற்கு…!!

காதல் 1:

 

ராம ராம ராமேதி

ரமே ராம மனோ ரமே..!

சகஸ்ர நாம தத்துல்யம்..

ரமே ராம வரானனே..!

 

இல்லத்தில் இனிய இசை பரவும் வண்ணம் பாடினார் பார்வதி.வீடென்றால் அன்பு தழும்ப,ஆர்ப்பாட்டம் பெருக,அடிதடி நடக்க,அதன்பிறகு சமாதானம் பறக்க வேண்டுமல்லவா..?

 

சத்தமும் யுத்தமும் இல்லாமல் அவர்கள் வீடா..??

 

அதெல்லாம் வரலாற்று நிகழ்வு..வாய்ப்பு இல்லை..!

 

பார்வதியை பக்தி அவதாரத்திலிருந்து பத்ரகாளி அவதாரத்துக்கு மாற்ற அவள் மகள் ஐராவால்  மட்டுமே முடியும்.

 

ஐரா…ஐராவதி…! ஐராவதி விஸ்வநாத்.

 

“ And  I never do it but its not a joke

I can’t  tell the difference when I am all alone

Is it real or a dream,which is worse?

Can u help me?

I just wanted to go to sleep

(When I turn out the lights)

When I turn out the lights

There is no one left

Between  myself and  me”  

 

அலறியது  ஜீலியன் பேக்கரின் ‘டர்ன் அவுட் தி லைட்ஸ்’  ஹை டெசிபலில் ,பார்வதிக்கு அமைதியான மன நிலை மாறிப்போய் மகளின் செய்கையில் ஆத்திரம் மிகுந்தது.

 

ஆனால் ஐராவோ ப்ளக் ஜீன்ஸூம் வைட் டாப்ஸும் அணிந்து கொண்டு தலையை விரித்து விட்டு தனது கைப்பையை குறுக்காய் மாட்டிக் கொண்டு ,தேவையான பொருட்களை தனது பையில் போட்டவாறே

 

When I turn out the lights

There is no one left

Between  myself and  me

 

என பாடினாள்.

 

ஜீலியன் பேக்கரின் ‘டர்ன் அவுட் தி லைட்ஸ்’ தனிமையின் துயரை அதன் வலிகளை நிதர்சனத்தை அழகாய் பின்னால் பியானோ  இசைக்க எடுத்துரைக்கும் பாடல்.இருட்டில் அவர் அடர்ந்த காடுகளின் ஊடே பயணித்துக் கொண்டே தனிமையில் பயணிக்கையில்  இறுதியாய் பரவுகின்ற மெல்லிய வெளிச்சம் பாடலுக்கு ஒரு வித நேர்மறை எண்ணத்தையும் தந்து ஜீவனாகவும் அமையும்.

 

எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு , தனதறையை விட்டு வெளியே வந்த மகளின் பார்வை டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த தன் தந்தையைப் பார்க்க,அவரோ மகளைப் பார்க்காமல் தனது செல்பேசியை நோண்டிக் கொண்டிருந்தார்.

 

விஸ்வநாத் – பார்வதி தம்பதியருக்கு  ஒரே மகள்.ஐரா என்ற ஐராவதி.. விஸ்வநாத்தின் பாட்டியின் பெயர் ஐராவதம்…அப்படியே கொஞ்சம் மருவி மகளுக்கு..ஐராவதி ஆகிடுச்சு.

 

விஸ்வநாத்தின் தம்பி ராம் நாத்.அவரது மனைவி ராதா.அவர்களுக்கு அனுராகா , மனோவம்சி என இரண்டு மக்கள்.

 

பார்வதியோ ,

 

“ஏன்னா…இந்த குட்டி இப்படி என்னை படுத்துறாளே…காலையில நான் ராம ராமனு பாடின இது புரியாம இங்கிலிஷ்ல என்ன கண்றாவியோ பாடுறாளே…. நேக்குக் காலையில் ப்ரஷர் ஏத்தி விடுறா..” என புலம்ப,

 

செல்பேசியிலிருந்து தன் முகத்தை நிமிர்த்தி மனைவியை பார்த்தவர்,

 

“அவ பெரிய மனுஷியாகிட்டான்னு உனக்கு தெரியாதா பாரு… என் பேச்சையெல்லாம் கேட்கவே மாட்டான்னு நான் சொல்லித்தான் நோக்குத் தெரியனுமா…என்னை காலையில நீயும் படுத்தாத…” என அவர் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே ஐரா வந்து உட்கார அவர் அமைதியாகினார்.

 

அவளைக் கண்டதும் இன்னும் கடுப்பானார் பார்வதி.

 

“ஏண்டி ….என்ன கோலமிது..வெள்ளிக்கிழமை அதுவுமா பொட்டு இல்ல…தலை விரிச்சு…பெருமாளே நோக்கு…பாட்டி  பெயர் வைச்சேன்னே …..அந்த பெயருக்காச்சும் நீ மரியாதை தரியா.. …இப்படி ஜீன்ஸ் போட்டுண்டு….” என புலம்பிக் கொண்டே இருக்க, விஸ்வநாத் சிரிப்பை அடக்குவதைப் பார்த்த பார்வதி,

 

“ஏன்னா… நான் கத்துறது உங்களுக்கு சிரிப்பா இருக்கா..?” என  சண்டை பிடிக்க

 

“அவ பாருடி நீ பாட்டுக்குக் கத்துற…அவ காதுல ஹியர்போன் மாட்டிண்டு இருக்கா..” என சொல்லி சிரிக்க, அவள் காதிலிருந்து இயர்போனை பிடுங்கியவர்,

 

“அடி கழுத…! காலம்பற என் ப்ராணன வாங்கவே நீ அந்த பாட்டை போடுறியா…?அதுவும் சத்தமா..? அம்மா சாமி கும்பிடுறாளே சத்தம் பண்ணாம இருப்போம்னு  தோணுதா நோக்கு…” என்றவருக்கு மகள் கேட்கும் பாடலின் அர்த்தமும் புரியவில்லை.அவளது அகத்தின் அனத்தலும் புரியவில்லை…!

 

“மா….எனக்குப் பிடிச்ச பாட்டை நான் கேட்குறேன்..வேணும்னா நீயும் என்னை போல சவுண்டா பாட்டை வைச்சிக்கோ..ஐ டோண்ட்  மைண்ட்..” என திமிராகப் பேச பார்வதியின் கணவனின் புறம் பார்வையைத் திருப்ப,அவரோ கையில் மிக்சர் மட்டும் இல்லாத குறையோடு அமைதியாக இருக்க,

 

மகளிடம் மீண்டும் திரும்பியவர்,

 

“சரி….வெள்ளிக்கிழமை பொட்டு இல்லாம இருக்கியே….இதெல்லாம் சரியாப்படறதா..?”

 

“அப்போ சனிக்கிழமை பொட்டு இல்லாம இருந்தா ஓகேவாம்மா..?” என அவள் எதிர்க்கேள்வி கேட்க

 

“ஏன் டி பெயர்  மட்டும் தான் உனக்கு கலரா இருக்கு.ஐராவதினா மேகத்தில பொறந்தவன்னு அர்த்தம்…வானவில்…ஆனா  நீ வெள்ளை டிரஸ்…வெறும் நெத்தின்னு… நன்னாவா இருக்கறது..?” என ஆதங்கத்தோடு சொல்ல

 

“ஏன் மா…அப்போ புடவை கட்டி பொட்டு வைச்சிட்டா கலாச்சாரம் ஆகிடுமா மா…?…என்னோட  உடை என்னோட கம்ஃப்ர்ட்மா…வெள்ளையும் ஜொல்லையும் திரிறவங்களாம் நல்லவங்க இல்ல…இப்படி ஜீன்ஸ் போடுற நானும் கெட்டவ இல்ல..” என அவள் சொல்லவும் உடனே விஸ்வநாத் தனது உடையைப் பார்க்க,அவளுக்கு சிரிப்பு வர

 

“மா…வெள்ளை சட்டை கறுப்பு பேண்ட் போட்டவங்களாம் நல்லவங்களாம்…ஆல் இந்தியா செய்திகளில் சொன்னாங்க….சோ உன் ஆத்துக்காரரை ஃபீல் செய்ய வேண்டாம்னு சொல்லு..” என சொன்னவள் காலையிலேயே தாயிடம் திட்டு வாங்கிய கடுப்பில் சாப்பிட பிடிக்காமல் தனது அலுவலகத்திற்கு சென்றாள்.

 

அவள் சென்ற பின் அனுராகாவும் மனோவம்சியும் உணவுண்ண அமர்ந்தனர்.மனோவம்சி ஐராவின் வயதை ஒத்தவன்.அனு கல்லூரியின் கடைசி வருட படிப்பில் இருந்தாள்.

 

ஐரா இல்லாததைப் பார்த்த வம்சி,

 

“என்ன சின்ராசு காணும்..சாப்பிடாம போச்சா..” என சொல்ல

 

யாரது என்பது போல விஸ்வநாத் பார்க்க

 

“ஐராவை சொல்றான் பெரியப்பா…சூர்யவம்சம் படத்துல சின்ராசை ஒதுக்கி வைக்கிற மாதிரி நம்ம வீட்ல அவ இல்ல..அதான்” என விளக்கமும் சொல்ல,

 

விஸ்வநாத்தின் மனமோ,’என் மகளை நான் வெறுக்கிறேனா…ஒதுக்கி வைத்திருக்கிறேனா..?’ என வருந்த

 

அவரது முகத்தில் படர்ந்த அந்த பாவம் அவளை அசைக்க,உள்ளத்து வேதனை தீரும் வண்ணம்,

 

“அண்ணா…ஆனா உனக்கு ஒன்னு தெரியல…ஐராவை ஒன்னும் நம்ம ஒதுக்கல..அவ தான் நம்மளை ஒதுக்கியிருக்கா….அவ இதுக்கெல்லாம் ஃபீல் செய்யவே மாட்டா…சொல்லப்போனா  நாம கோட்டுக்கு இந்த பக்கம் பார்க்கிறதால தான் தனியா தெரியற..அக்சுவலி தனியா தெரியறது தான் அவளோட அடையாளம் கூட..” என தனது அக்காவை பற்றி பேச

 

“ஆமா…ஆமா…தனியா லூசா தெரியுறா..” என வம்சி வாய் விட

 

“சாப்பிடுற வேலையை மட்டும் பாரு வம்சி” அதட்டலாய் வெளிவந்த விஸ்வநாத்தின் குரலில் அனைவரும் அமைதியானார்கள்.

 

ஐரா திருச்சி நகரிலிருந்து கொஞ்சம் தள்ளி இருக்கும் தங்களது பத்திரிக்கை அலுவலகமான ழகரத்தை  அடைந்தாள்.ழகரம் அவர்களது குடும்பத்தின் அடையாளம்…

 

ஆம் அடையாளம் மட்டுமே…ஒரு காலத்தில்  நம்மையே அடையாளம் காண உதவும் அடையாளங்கள்..சில காலங்களில் அவற்றின் அடையாளத்தை இழந்து பெயரை மட்டும் சுமப்பன ஆகிறதே…!ழகரமும் அப்படி தான்..ழகரம் விஸ்வநாதன் ஐயர் என்றால் 1950 களில் திருச்சியில் அத்தனை பிரசித்தம்.காந்தியோடு சேர்த்து சுதந்திர போராட்டங்களில் ஈடுபட்டவர்.காந்தியவாதி அவர்.அப்போது ஆரம்பித்த  வார இதழ் அவரினது.சுதந்திரத்துக்குப் பின்னர் நாளிதழாக பிறப்பெடுத்தது.அவருக்கு அடுத்து அவர் மகன் ராஜகோபாலன் அதனைப் பார்த்துக் கொண்டார்.தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை,திருச்சி,மதுரை,கோவை என நான்கு இடங்களில் அவர்களின் பத்திரிக்கை பதிப்பானது.

 

ஆனால் ராஜகோபாலுக்குப் பின் அவரது மகன் விஸ்வநாத் பேங்க் வேலையில் சேர்ந்து விட,ராம் நாத்  தாசில்தாராக ஆகிவிட அவருக்குப் பின் ழகரம் கவனிப்பாரற்றுப் போனது. நலிவடையை தொடங்கிய நிலையில் திருச்சிராப்பள்ளி தவிர மற்ற இடங்களில் உள்ள அலுவலகங்கள் மூடப்பட்டது.வளர்ந்து வந்த தொழில் போட்டியும்,மற்ற பத்திரிக்கையின் அசுர வளர்ச்சியும் பிள்ளைகளும் உதவாமல் போக ராஜகோபாலால் தொடர்ந்து பத்திரிக்கையை நடத்த முடியவில்லை.குடும்பத்தின் பாரம்பரியத்தையும் அவர்களின் அடையாளமாக திகழ்வதால் ஏதோ இழுத்துப் பிடித்து நடத்துகிறார் அவர்.

 

ராஜகோபாலனின்  பேத்தி தான் ஐராவதி.அவரின் மக்களில் யாருக்கும் இந்த துறையின் மீது நாட்டமில்லாமல் இருக்க,ஐரா மட்டும் தான் அனைவரின் எதிர்ப்பையும் மீறி ஜர்னலிசம் படித்தாள்.ஏன் ராஜகோபாலன்  கூட அவளது முடிவை ஆதரிக்கவில்லை.

 

பெண் என்ற பேதம்..!!ஆனால் அவ்வாதங்கள் எல்லாம் வல்லமை கொண்ட  ஐராவை அசைக்க முடியுமா என்ன..? அவளுடன் பிறந்தது அவளது பிடிவாதம்…!!

 

கோட்டிற்கு அந்த பக்கமிருந்து பார்த்தால் பிடிவாதம்…!! இந்த பக்கம் வந்து பார்த்தால் வைராக்கியம்..மன உறுதி…!!

 

எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்….அவரவர்க்கு அவரின் பார்வைகள்…பாஷைகள்…!

 

முதலில் அலுவலகத்தில் உள் நுழைந்தவள் அங்கிருக்கும் விஸ்வநாதன் ஐயரின் படத்தை வணங்கினாள்.பின்னர் எடிட்டர் என போடப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்து,

 

கையை தலையில் வைத்து அவருக்கு சல்யூட் அடித்தவள்,

“குட் மார்னிங்  மாமா..” என சிரித்தபடியே சொல்ல

 

அன்பான பார்வையால் அவளைத் தழுவினார் தமிழமுதன்.விஸ்வமூர்த்தியின் நண்பர்.ஜர்னலிசம் படித்தவர்.இப்போது அவரை நம்பித்தான் ழகரத்தின் முழு பொறுப்பையும் ஓப்படைத்திருந்தார் ராஜகோபாலன்.

 

“என்னடா கண்ணம்மா…. நீ சாப்பிடலயாமே….அம்மா கூட மல்லுக்கட்டுறியாமே…?” என அவர் விசாரிக்க,தகவல் பரிமாற்றம் நிகழ்வது வழக்கம் தான் என்பதால்,

 

“அச்சோ மாமா…உங்க நண்பர் உங்க கிட்ட தான்  நாடோடிகள் சசிக்குமார் மாதிரி.. எங்கிட்ட நாட்டாமை சரத்குமார்.. மாதிரி..இவ கூட யாரும் இட்லி வடை புழங்க கூடாதுடா…அப்படின்னு  டயலாக் அடிப்பார்…யூ நோ…?”

 

“சரத்குமார் நட்புக்காகன்னு ஒரு படம் நடிச்சிருக்கார்டா கண்ணம்மா..”

 

“ஏப்பா…சூர்யா…உங்க தேவாவை  நான் எதுவும் சொல்லல….எது சொன்னாலும் ஏன்னா அவன் என் நண்பன்னு வந்து  நிக்க வேண்டியது….” என சிடுசிடுக்க

 

“சரி சரி டா….அடுத்த வாரம் மகளிர் தினம் வருது…எதாவது ஸ்பெஷல் எடிஷன் போடலாம்னு ப்ளான்… நீ அதைப் பாரு..அந்த நேஷனல் அவார்டியை பேட்டி எடுக்கறதைப் பத்தி அவங்கட்ட கேளு…” என அவர் வேலையை சொல்லவும் அவள் வேலை என்று வந்துவிட்டால் முழு வேகத்தோடு செய்வாள்.அப்படி அவள் செய்கையில் குறுக்கே போனால் ‘எவனா இருந்தாலும் வெட்டுவேன்..’ என்ற ரேஞ்சில் தான் இருப்பாள்.

 

மாலை ஐந்து மணி போல் தமிழமுதனிடம் இருந்து அழைப்பு வர,அவரது அறைக்குள் சென்றாள் அவளது தாத்தா அங்கிருக்க,அவள்

 

“தாத்தா கால் வலிக்குது… ஐ வில் சிட்..” என உட்கார்ந்து கொள்ள

 

‘மரியாதை கொஞ்சம் கூட இல்ல..எப்படி தான் எங்காத்துல வந்து இப்படி ஒரு பொண்ணோ..?’ என்ற எண்ணம் தான் அவர் மனதில்.அவர் முன்னால் பவ்யமாக இருந்துவிட்டு பயம் கொண்டாற்போல் நடந்து கொண்டு அவர் போன பின்,’இந்த தாத்தா தொல்லை தாங்கல..ஓல்ட் மேன்..’ என சொல்லும் மற்ற பேரப்பிள்ளைகளைத்தான் அவருக்குப் பிடிக்கும்.

 

“என்ன தாத்தா…என்ன விசயம்..?” என்றவள் தமிழமுதனைப் பார்க்க,அவரோ அமைதியாக இருக்கும்படி சைகை செய்ய

ராஜகோபால் பேசத் தொடங்கினார்.

 

“இங்க பாரு ஐரா…உன்ட்ட இவன் சொன்னான்னு தெரியல….இவன் அடுத்த வாரம் அமெரிக்கா போகப்போறானாம்..அவன் சம்சாரத்தோடு போய் புள்ளையாண்டான் வீட்ல செட்டில் ஆக..அதனால நம்ம ஆபிஸைப் பார்க்க பொறுப்பா ஒருத்தரை போடனும்… நம்ம ஆத்துல யாருக்கும் இங்க வர விருப்பம் இல்ல..அதனால அதியனை தான் இங்க வைஸ் பிரசிடெண்டா அப்பாயிண்ட் செய்ய போறேன்..” என்றதும் அதியன் என்ற பெயரில் அவள் முகம் சிவந்து ரத்தக்களரியானது.

 

அதியன் அரண்யன்.அதியன் அவளது அத்தையின் மகன்.ராஜகோபாலின் மகள் கஸ்தூரியின் மூத்த மைந்தன்.

அவர்கள் குடும்பத்தின் முதல் வாரிசு.தீந்தமிழ்   நியுஸ் சேனல்…பத்திரிக்கை…மீடியா வொர்க்ஸின் நிறுவனர்.அவனது தந்தை மாதவ ப்ரசாத் சென்னையில் மிகப்பெரிய தொழிலதிபர்.விஸ்வகர்மா பில்டர்ஸ் அவ்வளவு பிரபலம்.

 

தாத்தாவின் பேச்சைக் கேட்ட ஐராவுக்கு உள்ளுக்குள் வெடித்து சிதறியது வெறுப்பின் மிச்சங்கள்.

 

சிதைந்து போன கனவுகள்…! விட்டுச் சென்ற நினைவுகள்…! உடைந்து போன உள்ளம்…!…உறவுகளுக்கு இடையில் ஏற்பட்ட பள்ளம்..!அதன் தாக்கங்கள்…தொடர்ந்து நடந்த தர்க்கங்கள்.. கடந்து வந்த…தடங்கள் எல்லாம் அவளை சில நொடிகள் தடம் புரளச் செய்ய அமைதியாக இருந்தாள்.

 

உணர்வுகளை அடக்கி பழக்கப்படாத ஐரா, “தாத்தா…அவன் இங்க வந்தா.. நான் ஆபிஸ் விட்டுப் போயிடுவேன்..” என சொல்ல

 

“போ…யார் வேண்டாம்னா…?” என்றார் எடுத்தெறிந்து.

 

“உங்களுக்கு என்னை விட அவன்  முக்கியமா போயிட்டானா…? ஏன் நான் ஆபிஸை ஒழுங்கா பார்க்க மாட்டேனா…?”

 

“உனக்கு அறிவு மட்டும் இருந்தா பரவாயில்ல..இரட்டைப்பிறவியாட்டம் அவசரமும் இருக்குடியம்மா…இது எங்கப்பாவோட  ஸ்தாபனம்…உன்னால இதை ஒழுங்கா நிர்வாகம் செய்ய முடியாது…தமிழ் கூட அதியனைத்தான் ரிஃபர் செஞ்சான்.” என்றதும்

 

அனல் காத்து அவசரமாய் அமுதனிடம் வீசியது.

 

அவரோ “கண்ணம்மா…அதியன்…அவனோட  சேனலை இந்த அஞ்சு வருசத்துல எங்கேயோ கொண்டு போயிட்டான்….தமிழ் நாடு தாண்டி சவுத் முழுக்க  நியூஸ் பேப்பரை ரீலிஸ் செய்றான்…ஹி இஸ் ரியலி டேலன்டட்…”

 

“அப்போ  எனக்கு டேலண்ட் இல்லையா மாமா..?”

 

ஆற்றாமை எல்லாம் அகத்தின் ஆழத்திலிருந்து கிளர்ந்தெழுந்தது அக்கணம்.அவர் கூட தன் மேல் நம்பிக்கை வைக்கவில்லையா…?

 

விரக்தியின் விளிம்பில் பெண்.

 

“எல்லாம் இருக்கு…ஆனா புத்திசாலித்தனம் மட்டும் போதாது உனக்கு…சாமர்த்தியம்..சாணக்கியத்தனமெல்லாம் அவன்ட்ட இருக்கு…உன்கிட்ட அதெல்லாம் கிடையாது…அது மட்டுமில்லாம அவனும்  நேக்கு பேரன் தான்..” என தாத்தா சொல்ல

 

“அப்போ கண்டிப்பா அவன் இங்க வருவான்…அப்படித்தானே..?”

“ஆமா..அவன் நாளைக்கு வந்து ஜாயின் பண்றான்..” தாத்தா சொல்ல

 

உள்ளத்தில் உறுதியாய் தீர்மானத்தீ ஒன்று பரவியிருக்க தாத்தாவை நேராய்ப் பார்த்தவள் நிமிர்வாய் நின்று,

 

“வரப்போற உங்க பேரனை ஓட விடல..என் பெயர் ஐரா விஸ்வநாத் இல்லை…” என  ராஜகோபாலனைப் பார்த்து சவாலாக சொல்ல

 

“நீ ஓடினாலும் சரி அந்தபய ஓடினாலும் சரி…என்னோட பத்திரிக்கை நல்லா ஓடினா போதும்…” என்றார் ராஜகோபாலன்.

 

காதல் கவனமாகும்..!!

 

Advertisement