Advertisement

காதல் 6:

 

“ஐரா என்ன சொன்னா பாரு…” என்று விஸ்வநாத் கேட்டது தான் போதும் ,பார்வதி பொங்கி விட்டார்.

 

“இங்க பாருங்கோண்ணா….இனிமே நான் உங்க இரண்டு பேருக்கும் இடையில் மீடியேட்டர் வேலை பார்க்கறதா இல்லை….அது என்ன…அவ சாப்டாளான்னு அவட்ட கேட்கிறதுக்குப் பதில என்ட்ட கேட்குகிறது….இப்படி மாப்பிள்ளை போட்டோ காமிச்சு அவ விருப்பம் கேட்குறதுன்னு..இனி எதுனாலும் நீங்களே அவட்ட பேசிக்கோங்க சொல்லிட்டேன்…” என படபடவென சொன்னவர் அப்படியே கணவரின் அருகில் அமர,அவரின் கை மேல் ஆதுரமாய் தன் கை வைத்தவர்

 

“என்னாச்சு பாரு… நோக்கு…?…நீ இப்படிலாம் பேச மாட்டியே…….ஐரா எதாவது சொல்லிட்டாளா..?”

 

“ப்ச்..போங்கோ….அதெல்லாம் இல்ல… அப்ப சொன்னது தான் இப்பவும் சொல்றா…நீங்க போய் பேசினாத்தான் அவ ஒத்துப்பா…நீங்க முதல்ல போய் பேசுங்கோ அவட்ட…  நம்ம பொண்ணுக்கும் காலங்காலத்துல கல்யாணம் செய்து பார்க்கனும்னு நேக்கும் ஆசையிருக்காதா…? ” என்றவரின் குரலில் ஆசையை விட ஆயாசமே அதிகமாய் இருக்க,அவருக்கும் அந்த ஆசை உண்டு தானே.?

 

“…….” ஆனாலும் மனிதர் அமைதியாய் இருக்க,மனைவிக்கு அவர் எண்ணம் புரிந்தது.

 

“கௌரவம் பார்க்குறேளா..?இன்னம் எத்தன காலத்துக்குப் பெத்த பொண்ணுட்ட பேசாம இருக்க போறீங்க….அவ தப்பே செஞ்சாலும் யார் விட்டுக் கொடுத்தாலும் நம்ம ஐராவை நம்ம விட்டுக்கொடுக்க கூடாது….”

 

“…………………..”

 

“நீங்க மட்டும் என்னவாம்…அமுதன் அண்ணா பத்தின விசயத்தை எல்லாம் உடனேவா என்ட்ட சொன்னீங்கோ..?” என்று நறுக்கென கேட்க,

 

“பாரு….” என்றவர் மனைவியை கேள்வியாய்ப் பார்க்க,

 

“அண்ணா உங்க கிட்ட கடனா அஞ்சு லட்சம் கேட்டப்பவே வா என்ட்ட சொன்னீங்க…?அவர் அதைத் திருப்பி தந்த பின்னாடி தானே சொன்னீங்க…உங்களுக்கு உங்க ப்ரண்டோட கௌரவம் முக்கியம்….இத்தனைக்கும் நான் எதுவும் சொல்லப்போறது இல்ல..ஆனாலும் உங்க ப்ரண்டை ஏதோ ஒரு காரணத்தால விட்டுக்கொடுக்க முடியல இல்ல…” என்றவர் பேசிக்கொண்டே போக

 

“என்னடி ஆச்சு..இன்னிக்கு உனக்கு…அது நடந்த எத்தனை வருசம் ஆகறது…இன்னமுமா அதையெல்லாம் நினைச்சிட்டு இருக்க…”

 

“பின்ன..நீங்க மட்டும் இரண்டு வருசம் என் பொண்ணுட்ட பேசாம  நடந்ததையே நினைச்சிட்டு இருந்தா…” கோபமாய் அவர் கேட்க,விஸ்வநாத்தும் கோபமாய்

 

“இரண்டு வருசமா அமைதியா இருந்துட்டு இப்ப என்னடி நோக்கு தீடீர்னு இவ்வளவு கோபம்…ஹ்ம்ம்ம்..”

 

“கோபப்படாம வேற என்ன செய்ய சொல்றீங்கோ…?ஏதோ புள்ளைக்கு அப்போ சின்ன வயசு தெரியாம பண்ணிட்டா….அதுக்காக குழந்தைட்ட பேசாம கொள்ளாம என் பொண்ணு பழைய மாதிரியே இல்ல…இப்ப கல்யாணம் செஞ்சிக்கோன்னா அந்த கழுத அப்பா வந்து பேசி எனக்கு எந்த மாப்பிள்ளையைக் காட்டினாலும் ஓகேன்றா….”

 

“ஆமா…எப்போ அவ உன் பொண்ணு ஆனா..?”

 

“ம்ம்…அவளை பத்து மாசம் சுமந்து பெத்தவ நான்…என் பொண்ணு இல்லாம யார் பொண்ணு அவ….என் மக ஏங்கிட கூடாதுன்னு இன்னொரு குழந்தை கூட வேண்டாம்னு சொன்னேன்  நான்….ஆனா அந்த கழுதை உங்க மேல தான் உயிரா இருக்கா…” என்றவரின் கண்ணில் கார் கால மழை…

 

“ஏய்….”என்று மனைவியை அணைத்தவர்,

 

“என்னாச்சுடா….?” என்று கேட்க

 

“அந்த ரியா ஓடிப்போனா அதுக்கு ஐரா என்ன செய்வா…இவ உதவி செஞ்சிருந்தாலும் செய்யாட்டாலும் ஓடனும்னு நினைக்கறவ ஓடித்தான் போவா.அதியன் கூட அவன் தங்கைக்காக அவங்க அம்மா அப்பா கிட்ட சமாதானம் செய்ய போய்ட்டான்…தப்பு செஞ்சவளையே ஏத்துக்கும்போது உங்களுக்கு என்ன..?”

 

“என்ன இருந்தாலும் ஐரா நம்ம கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கனும் பார்வதி..பாவம் தானே கஸ்தூரியும் மாதவனும்..அன்னிக்கு எப்படி உடைஞ்சுப் போயிருந்தாங்கனு பார்த்த தானே…எவ்வளவு பெரிய தலைக்குனிவு….” என்று விஸ்வா பொறுமையாக சொல்ல

 

“எல்லாம் சரி தான்….ஆனாலும் சத்தி ஒன்னும் தப்பானவன்  கிடையாது…அவளை தாங்கு தாங்குன்னு தான் தாங்குறான்….எனக்கு ஐரா  மேல நம்பிக்கை இருக்கு…அவ இது வரைக்கும் நம்ம கிட்ட சொல்லாம எதையும் செஞ்சதில்ல….சத்தி ஒரு வேளை ஐரா கிட்ட சொல்லாம இருந்திருக்கலாம்..ஐரா பொய் சொல்லவும் மாட்டா…நானும் உங்க கிட்ட பல முறை சொல்லிட்டேன்..நீங்க நம்ப மாட்றீங்கோ…அப்படியே  அவ நம்ம கிட்ட சொல்லாம மறைச்சிருந்தாலும் பரவாயில்ல…தப்பே செஞ்சாலும் அவ நம்ம பொண்ணு..அப்படியே விட முடியாது…” என்று மனைவி சொல்லவும் அவருக்கு மட்டும் மகள் மேல் பிரியம் இல்லையா என்ன..ஐரா அவரைப் பொறுத்தவரையில் அவரது பொக்கிஷம்….தேவதை..

 

சிலர் மீது அதிக பாசம் வைப்போம்..அவர்கள் எதாவது சிறிய தவறு செய்தால் கூட நம் மனம் மிகவும் காயப்படும்…அப்படி ஒரு அதீத பாசமாய் இருக்கும்.அப்படி தான் விஸ்வாவின் அன்பும்.ஐராவின் மீது அவர் வைத்திருந்த அளவுக்கதிகமான நம்பிக்கைத் தான் அவரை காயப்படுத்தியது.

 

அதியன் வந்து தன் பெண்ணைக் குற்றம் சொல்லி அடிக்கவும் தந்தையாய் அவர் மனம் உணர்ந்த வலி அவருக்கு மட்டுமே தெரியும்.அதுவும் சத்ரியன் மீதும் அவர் அதிக நம்பிக்கை வைத்திருக்க,அது எல்லாம் ஒன்றுமில்லாமல் தகர்ந்த நொடி அவர் மிகவும் அடிப்பட்டுப்போனார்.

 

அவருக்குமே மகள் இப்படி வாடிப்போய் இருப்பது வலியும் வாதனையும் தானே…ஐரா வெளியே பார்ப்பதற்கு என்ன தான் வலிமையானவளாக காட்டிக்கொண்டாலும் அவள் ஆழ் மன ஏக்கம்,வலி எல்லாம் மற்றவர்களுக்குத் தெரியாவிட்டாலும் பெற்றவர்களுக்குத் தெரியாதா என்ன..?

 

சிறிது நேரம் அமைதியாகவே இருந்தவர் பின் ,“சரி…வா..ஐராவ பார்க்க போலாம்..”என விஸ்வா சொல்ல,பார்வதி அவரை ஆச்சரியமாய்ப் பார்க்க,

 

“எனக்கும் கஷ்டம் தான் பாரு..அவட்ட பேசாம இருக்கறது..அவ செஞ்ச தப்போட அளவு புரியனும்னு தான் நான் பேசவே இல்ல..ஆனா இப்ப நீ சொல்றச்ச தான் நேக்கு புரியறது…தப்பே செஞ்சாலும்  நம்ம  பொண்ணை எப்படி விட முடியும்…நான் கூட தமிழுக்கு கடன் கொடுத்தது….இன்னும் தமிழ் பத்தின விசயமெல்லாம் அவ்வளவு சீக்கிரம் உன்ட்ட நான் ஷேர் பண்ணிக்கிட்டது இல்ல…அது என் நண்பனுக்கும் நட்புக்கும் கொடுத்த மரியாதை….ப்ச்..சரி விடு…வா..அவ ஆத்துல தானே இருக்கா….”

 

“ஆமா…” என்றவர் கணவரோடு மகள் அறைக்குச் செல்ல,எப்படி ஆரம்பிப்பது என்று விஸ்வநாத் யோசித்து திணற,சில குழந்தைகளை அடித்தாலும் அந்த குழந்தை மீண்டும் தானாகவே  சமாதானமாகி வந்து முத்தம் வைக்குமே..அப்படி தான் ஐராவும்…

 

அதுவும் உண்மையின் ரத்தம் அடர்த்தியாக இருக்கும் தானே..?! ஆனாலும் ஐரா நான் தவறே செய்யவில்லை…உங்கள் மீதுதான் தவறு..நீங்க முதல்ல பேசுங்க…என்றெல்லாம்  நினைக்காமல்,அப்பாவை அவள் அறைக்குள் நுழைந்து அவள் அமர்ந்திருந்த மெத்தையின் அருகில் வந்து நிற்கவும்,

 

“உட்காருங்கப்பா…” என்றவள் அவர் அமர்ந்ததும் தான் போதும்,இத்தனை நாள் இதய நாளங்களில் நாளும் அடைத்திருந்த தனிமை,அகத்தினில் அதன் ஆழத்தினில் இருந்த வருத்தம் எல்லாம் அழுகையாக வர அப்படியே உட்கார்ந்திருந்தவரின் கால்களைப் பிடித்துக்கொண்டு அவர் மடிசாய்ந்தாள்.

 

மகள் அழுவதைக் கண்டு பார்வதியும் அழ,

 

“ப்ச்…என்ன…பாரு…ஐரா தான் அழறான்னா நீயும் அவளை அழ விடற..” என கடிய அவர் கண்ணீரைத் துடைக்க,ஐராவோ இன்னும் தேம்பினாள்.

 

வலியில் அழுபவர் ஒரு சிலர்.ஆனால் சிலரோ அந்த வலியை மறைத்து வதனத்தில் எப்போதும் மகிழ்ச்சியை பரவ விட்டு வலிமையானவர்களாக காட்டிக்கொள்வர்.அவர்களின் வலி இன்னும் இன்னும் அதிகம்..வலிகளும் சரி வடுக்களும் சரி தருபவர்களை விட பெறுபவர்களைத் தான் எப்போதும் அதிகம் தாக்கும்.

 

“ஐ மிஸ்ட் யூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா” என்றவள் தேம்பிக் கொண்டே சொல்ல,பாவம் விஸ்வநாதனும் வலிக்காத மாதிரியே எவ்வளவு நேரம் தான் தாங்குவார்…மனிதரும் அழுது வைக்க,

 

“அப்பா…அழாதீங்கோப்பா…” என அவள் கண்ணீல் நீர் வழிந்த போதிலும் பெற்றவர் கன்னம் துடைக்க,

 

“இல்லடாம்மா….நீ எவ்வளவு கஷ்டப்பட்டிருக்க…ரியா செஞ்சதுக்கு உன்னை எதுக்கு நான் தண்டிக்கனும்…அப்படியே உனக்கு அந்த விசயம் தெரிஞ்சிருந்தாலும் நீ அவங்க பெர்சனல்னு சொல்லாம விட்டிருக்கலாம்..இவ்வளவு  நாள் தெரியலடா…ஆனா நீ அழறத பார்க்கற அளவுக்கு உன் அப்பா ஸ்டராங்க இல்லடாம்மா…” என்றவர் மிகவும் வருந்தி சொல்ல

 

“இல்லப்பா..நான்…அழல..”என்று ஐரா கண்ணைத் துடைத்தாலும்,ஆழ் அக அனத்தல்கள் அழுகை எனும் அமுதசுரபியாய் வழிந்தோட தான் செய்தது.

 

“தப்பே செஞ்சிருந்தாலும் என் ஐராவை எப்படி வீட்டீங்கன்னு அம்மா  கேட்டா…அது சரி தானே..எப்படி டா…அப்பா உன்னை விட்டேன்….” என்றவர் இன்னும் இன்னும் வருத்தம் கொள்ள,பெண்ணுக்குத் தாங்கவில்லை,

 

“அம்மா…நீயாச்சும் சொல்லும்மா…அப்பா அழறாரு..” என ஐராவும் அழுதபடியே சொல்ல,

 

“அழட்டும்…என் பொண்ணை அழ வைச்சார்ல…நல்லா அழட்டும்டி….அவர் தங்கச்சி அவர்ட்ட பேசலன்னு உன்னை ஒதுக்கி வைச்சார் தானே…நல்லா அழட்டும்…” கொஞ்சம் கோபமாய் அவர் சொல்ல

 

ஐராவோ,

“நான் உன் பொண்ணு..இல்ல…அப்பா பொண்ணு தான்…” என்று சொல்லி கீழே அமர்ந்தபடி அவர் மடி மீது தலை வைத்து படுக்க,இப்போதும் மெல்லமாய் உதயமாகிறது  மென்னகை விஸ்வ நாதனின் முகத்தில்.அவர் கைகள் தாமாய் மகளின் தலைக்கோதியது வாஞ்சையாய்.

 

“உன்னையெல்லாம் திருத்தவே முடியாதுடி….உனக்காக நான் இவர்ட்ட சண்டை போட்டு வந்தா…கடைசியில அப்பா பொண்ணுன்னு நீ சொல்ல….அவர் என்னடாண்ணா…சிரிக்கிறார்…..இந்த சீனையெல்லாம் நான் அன்புள்ள அப்பாவுலேயே பார்த்துட்டேன் டி…..” என அவர்  அகம் மகிழ்ந்தாலும் அதை முகத்தில் காட்டாது இருவரையும் திட்டுவது போல் சொல்ல

 

“அச்சோ…கன்னுக்குட்டி…உன் அம்மாவுக்கு பொறாமை வருதுடா…இந்த அம்மா கண்ணு வைச்சுதான்டா நம்ம இப்படி பேசாம இருந்துட்டோம் போல..” என்றவர் மயில்பீலியாய் மகள் தலைக்கோதிக் கொண்டே சொல்ல,

 

“அய்யோடா…அப்படியே நேக்கு வந்துட்டாலும்…என் தோப்பனார் கூட என்னை இப்படி தான் பார்த்துப்பார்….ஸ்ரீரங்கம் வாங்கோ..அப்போ தெரியும் அப்பாவுக்கும் பொண்ணுக்கும்….அடி வாங்கின பின்னாடி கூட ஐரா உனக்கு கொழுப்பு குறையலடி…” என்று பார்வதி சொல்ல

 

ஐராவோ அசராமல்,

“அடிக்கிற கை தான் மா அணைக்கும்..” என்று சொல்லி கண்சிமிட்ட,இன்னது என்று சொல்லாமலே அந்த கணமான கண்ணீர் விட்ட சூழ் நிலையை இலகுவாக்கினார் பார்வதி.

 

அது தான் மாம்’ஸ் மேஜிக்..

 

“இங்க பாருங்கோ….நீங்க என்ன செய்வீங்கன்னு நேக்குத் தெரியாது..உங்க கன்னுக்குட்டியை கன்வின்ஸ் பண்ணி அந்த மாப்பிள்ளை போட்டோவை காமிங்கோ….” என சொல்லிவிட்டு தந்தைக்கும் மகளுக்கும் தனிமை தர வேண்டி அவர் சென்றுவிட

 

“சத்தி ரியா விசயம் நோக்கு நிஜமா தெரியாதாடா கன்னுக்குட்டி?” மெதுவாய் விஸ்வநாதன் கேட்க,

 

ஐராவோ தந்தையிடம் மறைக்காமல்,

“தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறீங்களாப்பா..?” என அவள் திருப்பிக் கேட்ட கேள்வியில் , அவர் திகைத்து அமைதியாய் இருக்க,

 

“சத்தியும் அப்படி செய்வான்னு நீங்க நம்புறீங்களாப்பா..?”

என கன்னி மனதின் கேள்விகள் கன்னிவெடியாய் அவரைத் தாக்க,அவருக்குத் தெரிந்த வரையில் சத்ரியன் மிகவும் நல்லவன்.பொறுப்பானவன்.ஐராவுக்கு ஒரு சகோதரன் ஸ்தானத்தில் இருப்பவன்.ஹோமில் வளர்ந்தாலும் கல்லூரி சேர்ந்த பின் காலை மாலை இரு வேளையும் பகுதி நேர வேலை செய்தவன்.

 

ஒரே பாட்டில் சூர்யவம்சம் தேவயாணி போல் எல்லாம் யுபிஎஸ்சி படித்து பாஸ் செய்து விட முடியாது.யுபிஎஸ்சி படிப்பது என்பது ஒரு தவம்.அதை வெற்றிக்கரமாக செய்தும் முடித்தவன்.

 

ரியாவைத் திருமணம் செய்ததைத் தவிர்த்துப் பார்த்தால் சத்ரியனிடம் குறையென்று எதையும் கண்டுவிட முடியாது.

 

“என்னடா சொல்ற ஐரா..?” என்று மகளிடமே விஸ்வா திருப்பிக் கேட்க

 

“நீங்க தப்பு செஞ்சிருந்தா என்னைக் கண்டிச்சிருக்கனும்ப்பா…இப்படி தண்டிச்சிருக்க வேண்டியதில்லை…ஆனாலும் இப்ப என்னை என் தப்போடு தானே ஏத்துட்டு இருக்கீங்க…அது போதும் எனக்கு…” என அவள் சம்மந்தம் இல்லாமல் சொல்ல,

 

“கன்னுக்குட்டி..ப்ளீஸ்டா..அப்பாவுக்கு என்ன  நடந்துச்சுன்னு சொல்லு..” என அவர் கேட்கவும் மறைக்காமல் ரியாவின் காதல்,மிரட்டல்,திருமணம் எல்லாவற்றையும் சொல்ல,விஸ்வநாதனால்  நம்பவே  முடியவில்லை.

 

“நம்ம ரியாவாடா இப்படி..” என்று  கேட்க,தந்தை ரியாவைத் தவறாக நினைக்கிறார் என புரிந்தவள்,

 

“அவ செஞ்சது தப்பு தான்பா…இதுவே சத்தியா இருக்கறதால போச்சு….வேற யாராவது இருந்திருந்து எதாவது பிரச்சனைல சிக்கியிருந்தா என்ன ஆகியிருக்கும்…?ஆனாலும் அப்ப அவ சின்ன பொண்ணு தானேப்பா…ஜஸ்ட் ட்வுண்டி அவ..இத்தனைக்கும் அத்தைக் கிட்ட சொல்லியிருக்கா..அவங்க அதை பெட்டரா ஹாண்டில் செய்திருக்கலாம்..” என யார் மீதும் குற்றம் சொல்லாத மகளைத் தான் குற்றம் சொல்லி தண்டனைக் கொடுத்ததை எண்ணி அவர்  மீண்டும் கண்கலங்க,

 

“அப்பா..இதுக்குத் தான் நான் சொல்லாம இருந்தேன்..ப்ளீஸ்ப்பா…என்ட்ட பேசாம நீங்க மட்டும் என்ன சந்தோசமாவா இருந்தீங்கோ… நீங்களும் தானே கஷ்டப்பட்டீங்க…” என அவள் சமாதானம் செய்ய,

 

“இல்லடாம்மா…அன்னிக்கு அதியன் வந்து உன் மேல தப்பு சொல்லி அடிச்சதும்….எனக்குக் கோபம் வந்துடுத்து..அதுக்கு அப்புறம் உன்னை நான் கேட்டும் நீ இல்லனு சொல்லியும் அதன் பின்னாடி அவங்க கல்யாணம் செஞ்சிக்கிட்டாங்கன்னதும் எனக்கு அவ்வளவு கோபம்..நீ இப்படி மறைச்சிட்டியேன்னு…அந்த கோபம்..தான் டா..அப்பா பேசல..” என அவர் சொல்லிக் கொண்டு போக,

 

“அப்பா ப்ளீஸ்..நான் உங்க பொண்ணு..நீங்க என் அப்பா….நம்ம என்ன கோர்ட்லயா இருக்கோம்…அவங்க  அவங்க வாதம் சொல்ல…இதை விட்டுடலாம்ப்பா…அண்ட் அம்மா கிட்ட சொல்லிடாதீங்க..” என்றதும்

 

அவர் ,”எப்படிடா…அவ ஏற்கனவே என் பொண்ணு அப்படி செஞ்சிருக்க மாட்டான்னு தான் சொல்றா..இப்ப சொன்னா அவ சந்தோசம் தானே படுவா..” என்று சொல்ல

 

“இல்லப்பா…அம்மா பத்தி எனக்குத் தெரியும்..அவங்க கண்டிப்பா எல்லார்கிட்டையும் சொல்லி சண்டை கூட போடுவாங்க….ரியா கன்சீவா இருக்காப்பா..இப்ப போய் முடிஞ்சுப் போன பிரச்சனையைக் கிளறனுமா…ஒரு பையன் காதல் சொன்னா வேற…பொண்ணு சொன்னா வேறன்னு பார்க்கிற பார்வைப்பா எல்லாருக்கும்..ஸோ எனக்காக வேண்டாம்..” என அவள் தலைசாய்த்து முகம் சுருக்கி சின்ன வயதில் அவளுக்கு எதாவது வேண்டுமென்றால் கேட்கும் பாவனையில் இப்போதும் சொல்ல,விஸ்வாவும் சரி என்றார்.

 

மகளின் நெற்றியில் அன்பாய் முத்தம் வைத்தவர்,அவரது செல்பேசியில் இருந்த ஒரு ஆடவனின் புகைப்படம் காண்பித்து,

 

“பையன் பேரு பத்ரி டா…ஓ.என்.ஜி,சில வொர்க் பண்றான்…பார்க்க நல்லா தானே இருக்கான்…உனக்குப் பிடிச்சிருக்கா பாருடா…நெக்ஸ்ட் வீக் அவன் சென்னையில இருந்து வரான்…மேற்கொண்டு பேசலாம்..” என சொல்லி செல்ல,தந்தை பேசிய மன நிறைவோடு இருந்ததாலோ  என்னவோ அந்த பத்ரி பார்க்க பாவை கண்ணிற்கு அழகாகவே தெரிந்தான்.உண்மையில் அவனும் அழகாகவே தான் இருந்தான்.

 

பாசம் பார்வைகளையும் மாற்றிவிடும் போல…!!

 

 

‘ஸ்லீவ சுருட்டி வர்ரான் காலர தான் பெரட்டி வர்ரான்

முடிய சிலுப்பிவிட்டா ஏறும் உள்ளார

மரணம் மாஸு மரணம்… டஃப்பு தரனும்…

அதுக்கு அவன் தான் பொறந்து வரனும்…

மரணம் மாஸு மரணம்… டஃப்பு தரனும்…

ஸ்டெப்பு மொறையா வந்து விழனும்…

தட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க… உள்ளார வந்தா நான் பொல்லாத வேங்க…’

 

பாடல் ஸ்பிக்கரில் அதிர,ஐராவும் அனுராகவும் சேர்ந்து தான் மாஸூ மரணம் என்று பாடிக்கொண்டு படு லோக்கலாக ஆடிக்கொண்டிருந்தனர்.

 

விஸ்வநாதன் மகளிடம் பேசிய பின்னர் மனம் ஒரு மாதிரியாக இருக்க,கோவிலுக்குச் செல்ல வேண்டும் போல் இருக்க,மனைவியோடு கோவிலுக்குப் போயிருக்க,ராம் ராதா தம்பதி ஒரு திருமணத்திற்காக காலையிலேயே  தஞ்சாவூர் சென்றிருக்க,மனோ வேலைக்குப் போயிருந்தான்.ஐராவுக்கு அன்று பெரிதாய் வேலைகள் இல்லாததால் வீட்டில் இருந்தபடியே செய்ய,தாத்தா ழகரத்தில் இருந்தார்.அனு மாலை கல்லூரி விட்டு வந்த பின்,ஐராவின் முகத்தில் இருந்த அளப்பரிய மகிழ்வையும் அளவிட முடியா உற்சாகமும் கண்டவள் மகிழ்ந்து என்னவென்று கேட்க,

 

“அப்பா எங்கிட்ட பேசிட்டாஆஆஆஆர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என அவள் கத்தி சொல்ல,அதன் பின் அக்கா தங்கை இருவரும் எப்போதும் வீட்டில் பெரியவர்கள் இல்லாவிட்டால் ஸ்பீக்கரில் பாட்டு போட்டு ஆடுவது வழக்கம்.பெரியவர்கள் இருந்தால் அதுவும் தாத்தா இருக்கும்போது இப்படி குத்து பாடல்கள் எல்லாம் பாடவே கூடாது…ஒன்லி கீர்த்தனைகள்.ஐரா எப்போதாவது ஆங்கில பாடல் கேட்டாலும் அது ஹை பீட்ஸீல் கேட்க மாட்டாள்.

 

ஆனால் இப்படி யாரும் இல்லாத நேரத்தில் சின்னவர்கள் இப்படி கொட்டம் அடிப்பர்.தீடீரென,

 

“அடிப்பாவிஸ்…” என்ற குரலில் அக்கா தங்கை இருவரும் ஜெர்க்காகி திரும்பி பார்த்தால் அங்கே அதியன் நிற்க,உடனே கட்டிலில் இருந்து மந்தியாய் தாவிய அனு ஸ்பிக்கரை ஆஃப் செய்ய,ஐராவோ ‘நீதான..’ என்ற லுக்கில் பார்க்க,ஐராவின் அறைக்குள் வந்தவன் ,

 

“ஏன் வாலுங்களா..மத்த  நேரம் மடிசார் மாமி மாதிரி சீன் போடுறது..இப்ப மாஸூ மரணமா….எப்படி எப்படி தட்லாட்டம் தாங்கவா…….” என்று அவர்களைப் போலவே செய்து காமிக்க,

 

“அத்தான்ன்ன்ன்…….ப்ளீஸ் அத்தான்..யார்கிட்டையும் சொல்லிடாதீங்க….அது பெரியப்பா அக்கா கிட்ட பேசிட்டாங்க….அதான்…செலிப்ரேட் செஞ்சோம்..” என சொல்ல

 

“உன்னை….கேட்டானாடி அவன்..” என்று முறைத்தாள் ஐராவதி.

 

“ஓ…காளை மாடும் கன்னுக்குட்டியும் சேர்ந்தாச்சா…?” என்ற அதியனின் முகத்தில் புன்னகை வர,ஐரா அவனை மிதப்பாய்ப் பார்த்து வைத்தாள்.

 

வேண்டுமென்றே அவர்களை சீண்ட எண்ணி,”ஆடறதெல்லாம் இருக்கட்டும்…ஆனா இப்படி ஆத்துக்குள்ள ஆள் வரது கூட தெரியாம என்ன ஆட்டம்…வீட்ல எல்லாரும்  வரட்டும்..பஞ்சாயத்தைக் கூட்டுறேன்..” என அதியன் சொல்ல

 

அனு பதறி “அய்யோ ஆமாம்ல..எப்படி அத்தான் வந்தீங்க..ப்ளீஸ்…வீட்ல சொன்னா அடி விழும்…” என கெஞ்சலில் இருங்க,

ஐராவின் திமிரை சீண்டிப்பார்க்கும் ஆவலில்,

“நீ கேட்ட மாதிரி இந்த கன்னுக்குட்டி என்ட்ட கேட்க சொல்லு..நான் யார்கிட்டையும் சொல்ல மாட்டேன்..” என்று சொல்ல

 

“தோடா….ஏன் டி..அவன் தான் சொல்றானா நீயும் கேட்பியா…?இவன் தாத்தாவுக்குப் போன் பண்ணியிருப்பான்..இல்லன்னா வர வழியில் ஆபிஸ் போயிட்டு வந்துருப்பான்..தாத்தா பேரன் அப்படி யாருமில்லன்னா வெளியே நிக்க கூடாதுன்னு மொட்டை மாடி சாவி கொடுத்திருப்பார்..அது வழியா இவன் இறங்கி வந்திருப்பான்…” என சரியாக சொல்ல

 

“அறிவுடி ஐரா..உனக்கு..” என இவன் புன்சிரிப்போடு மொழிந்து விட்டு,

 

“சரி யூ எஞ்சாய்…” என்று போக,

 

“டேய் நில்லுடா…..ஆலிவ் இலையும் அமைதிப்புறாவும் போனியே என்னாச்சு…அத்தை மாமா சமாதானம் ஆனாங்களா..” என்று கேட்க,

 

“ஹான்…சமாதானம் ஆகிட்டாங்க..” என்றவன் பார்வை அனுவிடம் சென்றது,

 

“அனும்மா….எனக்கு காரை டிரைவ் செஞ்சது டயர்டா இருக்கு…கொஞ்சம் பூஸ்ட் கலக்கிட்டு வரியா..?” என்றதும் இதோ என்று அவள் ஓடி விட,

 

“ப்ச்…இப்ப எதுக்கு அவள துரத்தின..அதை விடு..அப்போ அவங்க…எங்க” என்று ஐரா கேட்க

 

“அப்பா அம்மா ப்ளைட்ல வராங்கடி. நான் கார்ல வந்துட்டேன்.. நான் போய் ப்ரஷ் ஆகுறேன்…” என்றபடி அவன் அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் செல்ல,ஐரா அவள் அறைக்குள் போக,மீண்டும் ஐராவின் அறைக் கதவைத் தட்டியவன்,

 

“என்னடா….”

 

“அது…இன்னிக்கு ஈவினிங் நாங்க ரியாவைப் பார்க்கப்போறோம்…நீயும் கூட வரியா…?சத்தி சைட்ல யாருமில்லன்னு அவன் ஃபீல் செய்யக்கூடாதுல…” என்று அதியன் சத்ரியனுக்காய் யோசித்துக் கேட்க,

 

“குள்ள நரி ஏன் குட் பாய் வேஷம் போடுது…?” என அதியனைப் பார்த்து நக்கலாய்க் கேட்க,அதியன் முறைக்க,

 

“முறைச்சா பயப்படுவேனா நான்….டேய்….சத்திக்கு ரியா இருந்தா போதும்….. நானெல்லாம் ஒன்னுமே இல்ல..ரியா இருக்கும்போது அவன் சைட்ல யாருமில்லன்னு அவன் ஃபீல் செய்யலாம் மாட்டான்..அவன் வைஃப் இருக்கறச்ச வேற யார் வேணும் அவனுக்கு..?” என்று ஐரா கேட்ட லாஜிக்கில்,

 

“எப்படி டி இப்படி…?” அவன் புருவம் உயர்த்தி புகழ்வது போல் கேட்க

 

“அதனால் தான் டா  நீ அதியனா இருக்க..நான் ஐராவா இருக்கேன்..” என சொன்னவளின் முகத்தில் அத்தனை குறும்பும்,கர்வமும்.

 

“உன்னை….” என்று அதியனும் சிரித்து விட

 

இவள் அறைக்குள் மீண்டும் செல்ல,நாலு அடி நடந்தவன் மீண்டும் ஐராவை அழைக்க,

 

“ நௌ வாட்…மேன்..” என்றபடியே ஐராவும் கதவைத் திறக்க,

 

“அது….சாரி…டி…” என்றான்

 

“எதுக்……………கு………..டா?” என இவள் கடுப்பாய்க் கேட்க

 

“அது அன்னைக்கு உன்னைக்  கை நீட்டி அடிச்சிட்டேன்ல…ரியாவைக் கூட அப்படி அடிச்சதில்ல….சின்ன வயசில  நம்ம இரண்டு பேரும் விளையாடும்போது அடிச்சிக்கிட்டது வேற..ஆனா அன்னிக்கு ஒரு பொண்ணை அடிச்சது தப்பு..அன்னிக்கு இருந்த கோபம்..அடிச்சிட்டேன்…சாரி..” என விளக்கம் சொல்லி மன்னிப்புக் கேட்டான்.

 

ஐராவின் திமிரையும் அவள் நிமிர்வையும் பார்க்கையில் பார்வதி போல் அதியனுக்கும் ஐரா ஒரு வேளை தவறெதுவும் செய்திருக்க மாட்டோளோ என்று அவன் உள்மனம் அடிக்கடி சொல்லத்தான் செய்கிறது.அதுவும் இப்போது இந்த இரண்டு மாதமாய் அவன் ழகரம் வந்த பின் ழகரத்திலும் பின் வீட்டிலும் அவளைப் பார்க்கையில் அவன் மனம் அப்படித்தான் சொன்னது.ஆனால் அது என்னவென்று ஆராய தெரியவில்லை.

 

என்ன இருந்தாலும் ஒரு பெண்ணை ,அது அவன் மாமன் மகளாகவே இருந்தாலும் அப்படி அத்தனை பேர் முன் கை நீட்டி அடித்தது தவறு என்பதால் மன்னிப்புக் கேட்க,ஐராவுக்கோ இவனால் தானே எல்லாம்..இவன் தானே என் மீது முதலில் பழி சொல்லியது.இவனால் தானே எல்லாரும் யோசிக்க கூட செய்யாமல் என்னைப் பேசினர்…காலையில் அப்பாவுடன் பேசிய போது இருந்த இதமான மன நிலை மாற,

 

‘போடா டேய்’ என்பதைப் போல் ஒரு பார்வைப் பார்த்தவள் எதுவும் பேசாமல் அறைக்கதவை அடைத்துக் கொண்டாள்.அவள் கோபம் புரிந்தவனும் எதுவும் பேசாமல் செல்ல,ஒரு அரை மணி நேரமாகி இருக்கும் அதியனின் அறைக்கதவைத் தட்டியவள்,அவன் திறந்த கணமே,

 

“டேய்….அத்தை மாமா இங்க வருவாங்க தானே..?” என்று கேட்க

 

“அ…அது ஐரா..அப்பாவை சமாதானம் செய்யவே எனக்குக் கஷ்டமா ஆச்சுடி….இப்ப இங்க வர சொல்லனும்னா அதுக்கு வேற …” என அவன் சொல்லிக்கொண்டு போக

 

“ஸ்டாப்…ஸ்டாப்..”என நிறுத்தியவள் ஒரு விரல் நீட்டி,

“இங்க பாருடா…உன் அம்மாவால தான் இந்த வீட்ல இருக்க நீ இப்போ..அவங்களே பிறந்த வீட்டுக்கு வரலன்னா நீ எதுக்கு இங்க இருக்க…உன் பெட்டியெல்லாம் எடுத்துட்டு ஓடிப்போயிடு….ஒழுங்கா அத்தை மாமா வரனும்..வரலன்னா கால்ல விழுந்தாச்சும் அழைச்சிட்டு வர நீ….சாரி கேட்டல..அதை அக்செப்ட் செய்யனும்னா இதை செய்..” என மிரட்டிச் சென்றாள்.அதியனுக்குமே இன்னும் எத்தனை நாள் முறைத்துக் கொண்டு இருப்பது…மொத்தமாய் எல்லாவற்றிற்கும் நாலு மீட்டருக்கு வெள்ளைத் துணி வாங்கி பறக்க விட்டுவிடுவோமா என்றுத் தான் தோன்றியது.

 

அதன் பின் கோவிலுக்கு சென்றிருந்தவர்கள்.,திருமணத்துக்குப் போனவர்கள் என எல்லாரும் வர,அதியன் ஏர்ப்போர்ட்டிலிருந்து  நேரே அவனது அப்பா அம்மாவை அழைத்துக் கொண்டு ரியாவின் வீடு சென்று அங்கு ஒரு பாசமலர் காட்சி ஓட்டி,பின் மாமனார் வீட்டுக்கு வர மாட்டேன் என முரண்டு பிடித்த மாதவ ப்ரசாத்தை கெஞ்சி ,கஸ்தூரிக்கு பிறந்து வீட்டுக்குப் போகும் ஆசையைக் காட்டி ஒரு வழியாக ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பாடாத குறையாக’ அதிக கொஞ்சல்கள் இல்லாவிடினும் சுமுகமாய்ப் பேசி அதியன் பெற்றோர் சென்னை திரும்பினர்.

 

 

#############################

ஒரு வாரத்திற்குப் பின்…….

 

அதியனின் அலைப்பேசி சத்தமிட,அதை எடுத்து ஆன் செய்தால் அந்தப்பக்கம் அவன் தாத்தா,அதியன் வீட்டில் தான் இருந்தான்.ஒரு முக்கியமான திருமணம் என்று குடும்பத்தில் அனைத்துப் பெரியவர்களும் சென்றிருந்தனர்.

 

“அதி…நம்ம ஐராவுக்கு  விசு மாப்பிள்ளை பார்த்திருக்கான்… இன்னிக்கு அந்த மாப்பிள்ளை ஐராவை  நாலு மணிக்கு காபி ஷாப்ல மீட் செய்றதா சொல்லியிருக்கார்…நாங்க இங்க இருந்து கிளம்பிட்டோம்..ஆனா வரத்துக்கு லேட்டாகிடும்..அதனால் அவளை பத்திரமா அழைச்சிட்டுப் போயிட்டு வாடாப்பா.அவ தனியா போக வேண்டாம்…” என்று சொல்லவும் இவனுக்கு சட்டென தோன்றியது ஒன்றுதான்.

 

‘நான் இருக்கும்போது எதுக்கு அவளுக்கு வேற மாப்பிள்ளைப் பார்க்கனும்’ என்பதே….

 

காதல் கவனமாகும்…!!

 

 

 

 

 

Advertisement