Advertisement

கல்யாணமாம் கல்யாணம்….

 

“அதெல்லாம் கிடையாது..வரவன்னை ஓடினேன் ஓடினேன்னு கதற விட்டு கோயம்பேடுல ஓட ஆரம்பிக்கிறவன் கோயம்புத்தூர்ல போய் ஸ்டாப் ஆகுற வரை ஓட விடல நான் அமுதினி இல்ல…..இல்ல…இல்ல…”

 

“யார் கிட்ட டி இல்ல இல்லன்னு இழுத்துட்டு இருக்க…”

கேள்வியோடு உள்ளே வந்தாள் கார்த்திகா.

 

“உஷ்” என விரல் நீட்டியவள்,

 

“ஆன்டி….நான் அப்புறமா பேசுறேன்….டிஸ்டர்பன்ஸ்..” என சொல்லி வைக்க,அடி ஒன்று அழகாய் அவள் முதுகில்.

 

“எரும….கார்…..ஏன் டி அடிக்கிற…”

 

“என்னை டிஸ்டர்பன்ஸுன்னு சொல்ற..”

 

“அய்யகோ….கார்த்தி…கார்த்தி…..நான் உங்களை அன்புத் தொல்லைன்னு சொன்னேன் கோபால்….” என வசனம் பேசின வதுவையவள் அமுதினி.

 

ஆழி அமுதினி…!! அட்ராசிட்டி அமுதினி என்று கூட சொல்லலாம். அவளைப் பற்றி ஒரு வரி என்றால்..

 

ஒற்றைப் பெண் ஓட்டை வாய்..!!

 

“ப்பா…முடியல.யார்ட்ட சவுண்டு விடுற…யாரை விரட்ட…?”

 

“அது நம்ம கௌசி கல்யாணத்துக்கு கோவைப் போனப்போ அந்த ஆன்டியும் அங்கிளும் வந்துருந்தாங்க… நமக்குத் தூரத்து ரீலேடிவ் கார்…அப்படியே பேசி பேசி என்னோட தோஸ்த் ஆகிட்டாங்க…”

 

“ஏன் டி….பார்க்கிறவங்க…பழகுறவங்களாம் உடனே தோஸ்த் ஆகிடுவாங்களா…?”

 

“யாதும் ஊரே யாவரும் என் கேங்கேன்னு பூங்குன்றனார் சொல்லியிருக்கார்டி..”

 

“அவர் அப்படியா சொன்னார்…யாதும் கேளிர்னு சொன்னார்..”

 

“இது வெர்ஷன் 2.O டி….”

 

முழு முறைப்போடு கார்த்திகா,”சரி கல்யாணம்னாலே பம்மல் ….வாக்…சம்மந்தம்னு சீன் போடுவ…இப்ப என்ன அமைதியா இருக்க…நீ அமைதியா இருந்தா பெருசா ஆப்பு அடிப்பன்னு எனக்குத் தெரியும்டி…ஒழுங்கா உண்மையை சொல்லிடு…ப்ளீஸ் அம்மு….மாமாவுக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான்….”

 

என அன்பும் அதட்டலுமாய் சொல்ல,

 

அதை கண்டுகொள்ளாமல் ஆழியோ , “யூ சீ கார்….நீ எனக்கு இந்த கல்யாணத்தை நிறுத்த எனக்கு ஐடியா எதுவும் சொல்லல..உங்க மாமா….ட்ட சொல்லப்போனா மேஜர் சுந்தர் ராஜன் வாய்ஸ்ல…..ஷட் அப்னு சொல்லி என் ஷட்டரை சாத்துறார்…வாட் டு டூ ..? அதான் நானே சுயமா ஒரு ஐடியா கண்டுபிடிச்சு இம்ப்ளீமென்ட் செய்துட்டேன்…”

 

‘என்னது ஐடியா…இம்ப்ளிமேண்டா…ஐயோ மாமாக்கு தெரிஞ்சா மர்கயா’ மனம் பதற,

 

“கழுத…என்னடி செஞ்ச…..ஒழுங்கா சொல்லு..உனக்கு போபியா கல்யாணம்னா…அதான் இப்படி கிறுக்கு கீழாவா சுத்துற….”

 

கார்த்தி பயம் கொள்ளவும் பதறவும் பக்காவாக பாய்ண்ட்ஸ் உண்டு.அமுதினி அமுக்குனியாக ஆயிரம் சேட்டை செய்பவள்.ஒற்றைப் பெண் என்பதால் எப்போதும் வால் தனம் தான்.ஆனால் அவள் அப்பா ஸ்டிரிக்ட் சீனிவாசன்.இங்கிலிஷ் ப்ரோபசர்.கோபம் வந்தால் இங்கிலிஷ்லேயே அவளை வைச்சு வைச்சு செய்வார்.

 

கார்த்தி ஆழியின் அத்தை மகள்.கார்த்தியும் ஒற்றைப் பெண் என்பதால் அவளுக்கும் ஆழிக்கும் இடையே எப்போதும் இழையோடும் சகோதரத் தோழமை..

 

“ப்ச்…கார்….நான் எதுவும் பண்ணல..” என பொய் சொன்னாள்.இல்லாவிட்டால் இன்ஸ்டண்டாய் இவள் அப்பாவிடம் போய் கார்த்திகா சொல்லிவிடுவாளே…!

 

“சரி…மாப்பிள்ளை …பெயர் என்ன..?”

“கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு என்ன விஜய் தேவரகொண்டா இல்ல விவேக் ஓபராய்னா பெயர் வைப்பாங்க….கோயம்புத்தூர்ல இருந்து வந்தா ஒன்னு சத்யராஜ் இல்ல பாக்யராஜ்….”

 

“அடி வாங்கப்போற டி..சொல்லு ஒழுங்கா…”

 

“எனக்குத் தெரியாதுடி.அம்மா சொன்னாங்க…வீண்டோ ஷாப்பிங் செய்யப்போறதுக்கு எதுக்குடி ப்ரைஸ் டேக் தெரியனும்..அவனை வேண்டாம்னு சொல்லப்போறேன்..பெயர் ஊர்லாம் தெரிஞ்சு என்ன செய்யப்போறேன்…இப்போதைக்கு சிஎம்….கோயம்புத்தூர் மாப்பிள்ளை..”

 

“உன்னை…..ப்ச்…அம்மு..நிஜமா எதுவும் பண்ணலதானே…”

 

“நிஜமா செய்யல காரு….கூகுள் கூகுள் பண்ணி பார்த்தேன்…யாஹூ யாஹூ பண்ணி பார்த்தேன்…ஆனா மாப்பிள்ளையை விரட்ட ஐடியாவே கிடைக்கல…வேஸ்ட் கூகுள்..”

 

பால்பிள்ளையாக முகம் பாவமாய் இருந்தாலும் மறைந்திருந்த குறும்பைக் கண்ட கார்த்திகா,

 

“மெனுஃபேக்சரிங் டிஃபெக்ஃட் டி நீயெல்லாம்…” என திட்ட

 

“அப்பா…..அம்மா…..இவ நீங்க என்னை ஒழுங்கா பெத்துக்கலன்னு சொல்றா..” என சொல்ல,அவள் வாயை மூடியவள்,

 

“யூ….வாயை மூடுடி…மாமா கிட்ட போய் என்ன சொல்ற…உனக்கு அறிவே இல்ல…நீ மட்டும் எதாவது ஏடாகூடம் செஞ்சு மாப்பிள்ளை வேண்டாம்னு சொல்லி மாட்டினா மாமா கிட்ட உனக்கு அடி விழுந்தாலும் ஆச்சரியமில்லை….எந்த தைரியத்துல நீ இருக்க..?”

 

“அச்சமில்லை அச்சமில்லை

அப்பா பார்த்த மாப்பிள்ளையைத் துரத்துர வரையில்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே…”

 

அவள் பாவனையில் சிரிப்பு வந்தாலும் உள்ளடக்கியபடி,

 

“…ஹே…சீக்கிரம் சீக்கிரம்..கார் சத்தம் கேட்குது பாரு..” என ஆழியை அவசரப்படுத்த,அவளுக்குமே மிகுந்த பதட்டமாக இருந்தது.

 

“என்னடி சிங்கம் சிங்கிள் சீனுக்கே டென்ஷன் ஆகுது….?”

 

பயந்தாலும் கூட அதை வெளிக்காட்டாமல் “இந்த ஊரே என்னைக் கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னாலும் என் அம்மாவும் அப்பாவும் உனக்கு கல்யாணம் கல்யாணம்னு காதுல காட்டுத்தனமா கத்தினாலும் நானா எனக்குக் கல்யாணம் நடக்கனும்னு நினைக்கற வரைக்கும் அது நடக்காது.. நெவர் எவர் கிவ் அப்…” என சொல்ல

 

“பதட்டத்துலேயும் உனக்குப் பஞ்ச்க்கு குறையில…சரி சரி….அமைதியா இரு…இப்ப கூப்பிடுவாங்க “ என்று சொல்லி வெளியே போய் நின்று கொள்ள,

 

மாப்பிள்ளை வீட்டினரும் பெண் வீட்டினரும் உரையாடிக் கொண்டிருக்க,அந்த மாப்பிள்ளை ஆன சக்திவேல் ஆழியைக் காண வேண்டுமென ஆவலோடு இருந்தான்.

 

சக்திவேல்…சமரன் சக்திவேல்…! SS குரூப்ஸீன் எம்டி.

 

சிறிது நேரத்திலேயே ஆழி கார்த்திகா கையில் கொடுத்த காபி ட்ரேயோடு வந்து நின்றாள்..

 

‘சே…எப்படியெல்லாம் பெர்பாமென்ஸ் பண்ண வேண்டியிருக்கு..’

மனதுக்குள் புலம்பியவள் மறையா முறுவலோடு இன்முகமாய் முதலில் அமர்ந்திருந்த மாப்பிள்ளையின் தாயைப் பார்க்க,அவர் இவளின் கோவை ஆன்டி..வசந்தி ஆன்டி…பக்கத்தில் வெற்றி அங்கிள்….ஒஹ் அங்கிள்…ஒஹ் ஆன்டி…! நீங்களா….நீங்களா….?! எகோவோடு அவள் மனம் அலற,

 

வசந்தியோ “அழகா இருக்கடா கண்ணு..” என்றதும்

 

‘கண்ணு கண்ணுன்னு சொல்லிப்போட்டு உன்ர கண்ணுக்கு இப்படி பெரிய பன்னு கொடுத்துப்போட்டீங்களே ‘ என அவள் மனதுக்குள் வாருதலும் வைதலும்..

 

துறுதுறுவென இருந்தவள் திருதிருவென முழிக்க,

“சர்ப்ரைஸ் கண்ணு….” என அவர் கிண்டலாய் சொல்ல

 

இவளோ ,’ஹமாம் சோப்புல குளிச்சிருக்க..ஸோ தைரியமா இரு.(????).’ என தனக்குத் தானே  தைரியம் சொல்லிக் கொண்டு,அதே பர்பாமன்ஸைத் தொடர்ந்தாள்.அமைதியாகவே அனைவருக்கும் காபி கொடுத்தவள்,கொஞ்சம் வசந்தி ஆன்டி பையனைப் பார்ப்போம் என்ற ஆவலில் பார்க்க,அவளது நாட்டியமாடும் நயனங்களில் தான் அவன் பார்வை.

 

‘என்ன இருந்தாலும் வசு ஆன்டி அளவுக்கு இவன் அழகா இல்ல…வாட்…இவனை ஏன் பார்க்கிறோம்..ஐயோ ஹி இஸ் தி ப்ளக் ஷீப்…மாப்பிள்ளை மணாளன்…ஓ மை காட்…’ என தனக்குளாகவே புலம்பியவள் அவனின் பார்வையைத் தவிர்த்து,கார்த்தியின் அருகில் போய் நின்று கொண்டாள்.

 

வசந்திதான் பேசினார்.

 

“அன்னைக்குக் கல்யாணத்தல பார்த்தப்பவே அம்மு பொண்ணை எனக்கும் என்ர வீட்டுக்காருக்கும் பிடிச்சிப்போச்சு…தங்கமான குணம் என்ர கண்ணுக்கு…அம்மணி மருமகளா வந்தா நல்லாயிருக்கும்னு நான் இவங்கட்ட சொல்ல இவங்களும் அதே சொன்னாங்க..அதான் உடனே உங்க கிட்ட பேசிட்டோம்…”

 

“உள்ளுக்குள்ள தான் நீ பாகுபலி..வெளியே பயந்த எலின்னு காட்டிட்ட பார்த்தியா…யாதும் ஊரே யாவரும் கேங்கா…சிக்கிட்டியே சிங்கம்…” என கார்த்தி முனுமுனுக்க,அவளை எதுவும் பேசவியலா நிலை பெண்ணவளுக்கு.

 

தற்சமயம் தன் சார்பாய் முறைப்பு மட்டுமே கொடுத்தாள்.

 

அவள் மனமோ ‘என்ன செய்ய என்ன செய்ய ‘ என்பதில் நிலை.

 

எப்படி நிகழ்ந்தது என தெரியாமலேயே நிகழ்ந்து போனது சம்மதமும் சம்மந்தமும்.அவர்கள் விடைபெற்று இவள் வீட்டில் இவள் அப்பா,அம்மா,கார்த்தி,அவள் அம்மா என அனைவரும் பேசிக் கொண்டிருக்க,

 

இவள் அறைக்குள் அடைக்கலம்.அகம் உலைக்களம்..!

 

‘நல்லா பேசினாலே மருமகளா..போங்க….வசு ஆன்டி…நான் கல்யாணம் பிடிக்கலன்னு சொன்ன பின்னாடியும் உங்க புள்ளயே கூட்டிட்டு வந்திருக்கீங்க..டூ பேட்..’

 

சிறுவயதிலேயே ஒரே பெண்ணா என உறவும் சுற்றமும் பேசி பேசியே அவளுக்கு தனக்குப் பிறகு தன் பெற்றோரை யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற எண்ணத்திலேயே திருமணம் என்ற ஒன்றைக் கண்டு எப்போதுமே பயமும் தயக்கமும்.அவள் நிலையை யாரும் புரிந்து கொள்ளவும் இல்லை…இவள் எல்லாரையும் போல் திருமணத்தில் நாட்டமின்றி இருக்கிறாள் என்ற நினைப்பே அனைவருக்கும்.

 

தாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு வந்த வசந்தி இவளுக்குப் போனில் அழைக்க,அவரிடம் கொட்டித் தீர்த்து விட்டாள்.திருமணத்தில் விருப்பமில்லாதது,பெற்றோரை பிரிய முடியாதென அகம் முழுவதும் அழுத்திய அத்தனை அத்தனை உணர்வும் அவர் வசம் கொட்டியிருந்தாள்.அவர் இவளை எப்படியோ சமாதானம் செய்து உறங்க வைக்க,மறு நாள் மகனும் அவருமாய் அவர் அம்மு கண்ணு வீட்டிற்கு வருகை.

 

“ஊருக்குப் போறதுக்கு முன்னாடி அம்முவை ஒரு தரம் பார்க்கலாம்னு..” என அவர் காரணம் சொல்ல,அவள் அறைக்குள் அவர் வர கண்டவளுக்குள் உதறல்.

 

சமரன் ஹாலில் மாமனாருடன் ஒரு உரையாடல்.

 

‘நேத்து அழுததை அப்பாகிட்ட சொல்லிடுவாங்களோ….இவங்க வேண்டாம்னு சொல்லிட்டுப் போனா வேற யாராச்சும் பார்ப்பாங்களே….என்னோட ப்ளான் எப்படி சொதப்பிச்சு..?’

 

கலவரமும் கவலையுமாய் அவள் நிலை.அவள் அறைக்குள் வந்தவரை இவள் உபசரிப்பாய் உட்கார சொல்ல,உட்கார்ந்தவர் அந்த மெத்தையில் இவளையும் உட்கார வைத்து அவள் கையை மென்மையாய்ப் பிடித்தபடிப் பேசத் துவங்கினார்.

 

“அம்மு கண்ணு……மக இல்லாத எனக்கு பொண்ணுனா அவ்வளவு இஷ்டம்..கல்யாணத்துல உன்ட்ட பேசி பழகினப் பின்னாடி உன்ர நினைப்பு தான் எனக்கும் சக்தியப்பாவுக்கும்…உனக்கு என்ன கல்யாணம் ஆகிட்டா நீ அப்பா அம்மாவைப் பிரியனும்தானே..எங்க சொந்த ஊர் பொள்ளாச்சு.பிஸினஸ் எல்லாம் கோவை தான்…சக்திக்குக் கல்யாணம் ஆகிடுச்சுன்னா அவன் கோவைல செட்டில் ஆகிடுவான்…நாங்க பொள்ளாச்சி…எங்களுக்கு அங்க இருக்க தான் இஷ்டம்.உன்னோட அப்பாவும் அவர் ரீடையர் ஆன பின்னாடி சென்னையை விட்டுட்டு கோவைல தான் செட்டில் ஆகப்போறோம்னு சொல்லிட்டாங்க…நீ அவங்க பக்கத்துலேயே இருக்கலாம் கண்ணு… நீங்க தனியா இருந்தாலும் பக்கத்துலேயே நாங்க , உன் அப்பா அம்மா எல்லாரும் இருப்போம்..”

 

வசந்தமும் வாத்சல்யமும் வகை வகையாக அவர் பேச்சில் வந்து இவளுள் இன்ப மழை…இனிய வெள்ளம்.

 

ஆனாலும் கல்யாணம்னா மனசு பயப்படுதே…!

 

அதை இவள் அவரிடத்தில் மொழிய,அவர் இவள் கைகளில் தன் கையைப் பொத்தி வைத்து,

 

“சக்தியைப் பிடிக்கலனா சொல்லு கண்ணு..உனக்குப் பிடிச்ச மாதிரி வேற நல்ல பையனா பார்ப்போம்…” என சொல்லவும் தான் இவளுக்குப் புரிகிறது அவரது புரிதல் என்னவென…அவர் மகனைப் பிடிக்கவில்லை என எண்ணுகிறார் போலும்.

 

ஆனாலும் இப்படி இத்தனையாய் இவள்பால் அவர் செலுத்தும் இவ்வன்பில் நனையை இவளுக்கும் பிடித்திருக்கிறதே…!

 

இவன வேண்டாம்னு சொன்னா வேற மாப்பிள்ளை பார்ப்பாங்க….என்னோட பிரச்சனைக்குத் தீர்வு அம்மா அப்பாவை பிரிய கூடாதுன்றது தானே…! இவனைக் கல்யாணம் செய்துகிட்டா நானும் அவனும் அப்பா அம்மா வசு ஆன்டி வெற்றி அங்கிள் எல்லாரும் ஒண்ணா இருக்கலாமே..

 

இப்போது மீண்டிருந்தாள் அவள்.

“அப்போ தட் சமோசா பையன் நல்ல பையன் இல்லையா அத்த..?” என இவள் கேட்கவுமே அவருக்கும் அவள் பதம் மாறிய போதே பாதையும் மாறி விட்டாள் என…புரிய

 

“அய்யோ கண்ணு…உனக்கு அவன் மேல இஷ்டமில்லையோன்னு தான் நான் அப்படி கேட்டேன்…எனக்கு என்ர மகன் உசத்தி தான்…ஆனாலும் உன் மனசு முக்கியமில்லையா கண்ணு..”

 

அவள் புல்வெளிகளில் பனித்துளி..!…இவ்வளவும் இவளுக்காக இவள் மனதுக்காக யோசித்து இருக்கிறார்…

 

“இப்பவும் அவர பிடிக்குதா இல்லையான்னு தெரியல அத்த…ஆனா பிடிக்காம இல்ல…உங்களைப் பிடிச்சிருக்கு…அதனால் கல்யாணம் செஞ்சுக்கிறேன்…”

 

“என்ன கண்ணு இப்படி சொல்லிட்ட..உனக்குத் தெரியுமா உனைப் பத்தி நான் என்ர மகன்ட்ட சொல்லி சொல்லியே அவனுக்கு உன்னைப் பார்க்க ஆசை வந்துடுச்சு…போட்டோ காட்டியும் பார்க்காம நேர்ல தான் பார்க்கனும்னு நேத்து வந்தான்..” என்றவர் கொஞ்சம் தன் குரலைத் தாழ்த்தி,

 

“ நீ அழதுன்னே நான் சொன்னதும் உடனே என்னை அழைச்சிட்டு வந்துட்டான்..இவன விட்றாத கண்ணு வேற இனா வானா உனக்குக் கிடைக்க மாட்டான்…” என சொல்ல,அவளுக்கோ வெடிக்கிறது புன்சிரிப்பும்  பூமழையும்.

 

“அத்த….அவர்ட்ட சொல்லவா…?”

 

குறும்பாய் இவள்.அவரோ சளைக்காமல்…

 

“இனா வானான்னா இஷ்டப்படி வரவன்னு அர்த்தம் கண்ணு…” என்று சிரிக்க சீரானது இவள் மனம்..

 

வெளியே வந்த வசந்தியிடம் மகன் கண்ணால் ‘அவ சரியாகிட்டாளா’ என கேட்க இவரும் தலையசைக்க, அவன் பார்வை இவள் பக்கம்…எங்கிருந்தோ வந்து சேருதே வெட்கம் இவள் பக்கம்…

 

பதிலுக்குப் பார்வை ஒன்று பாவை சார்பாய்.தலைவனிடம் சின்னதாய் தலைவிக்கு ஒரு தலைசாய்ப்பு….அத்தனையும் அன்பின் வார்ப்பு…

 

மௌனம் சங்கீதம்.மொழி சம்மதம்…

 

அப்புறமென்ன கெட்டி மேளம் கெட்டி மேளம்…

 

***************************************************************************

ஆழிக்கும் சமரனுக்கும் திருமணம் முடிந்து ஒரு திங்கள் ஓடியிருக்க,தினம் தினம் காதல் பாடம்…அன்பிலும் அறனிலும் அமைந்த அழகுறவு…

 

ஒரு பொன்மாலையில் வீட்டிற்கு வந்தவன்,இவளிடம் ஒரு லெட்டரை பிரித்துக் காட்ட,

 

அதை வாங்கிப் படித்தவளின் முகத்தில் வெளிறல் வெளிப்பட,தயக்கமும் தவிப்புமாய் தத்தை.

 

‘அமுதினி உங்க குடும்பத்துக்கு சரி வரமாட்டா..அவ நல்ல பொண்ணு இல்லை.’

இதுதான் கடிதத்தின் சாராம்சம்.

 

“அது சமர்….இது..”

 

“தெரியும் நீதான் எழுதினது…”

 

தவிக்கவிடாமல் உடனே அவன் பதில் உரைத்தான்.

 

அதுவரை அவள் சூழ் அச்சம் அகல,ஆதரவாய் அவனை நோக்கி மன்னிப்பாய் ஒரு பார்வை.

 

“எப்படி கண்டுபிடிச்சீங்க…இப்ப தான் கிடைச்சதா..?”

 

“பொண்ணு பார்க்க வரதுக்கு முன்னாடியே கிடைச்சது ஆழி…”

 

“ஆனா…லு..ம்”

 

அவள் விழி மொழி விரித்துக் கொண்டான்.

 

அவஸ்தையாய் அவள்  நோக்க,அணைத்துக் கொண்டான் அன்பாய். “ஆனாலும் ஏன் பொண்ணு பார்க்க வந்தேன்னு கேட்கிறியா..?அம்மா உன்னைக் கல்யாணத்துல பார்த்துட்டு  வந்த பின்னாடி அம்மா அப்பா இரண்டு பேரும் உன் பேச்சு தான்..உன்னோட சிங்கள் சைல்ட் சின்ட்ரோம்….கல்யாணபோபியா….எல்லாம் சொன்னாங்க…அப்போதான் இந்த …மொட்டைக் கடுதாசி…தைரியமில்லாதவங்க எழுதினது…உண்மையா இருக்காதுன்னு மனசுல பட்டுச்சு…அண்ட் மோரோவர் அம்மாவோட கணிப்பு பொய்யாகாது..அதான் தைரியமா பொண்ணு பார்க்க வந்தேன்..பார்த்தா மேடம் ஒரே அழுவாச்சி…”

 

அவள் முகம் சுருக்க,இவன் மென்னகையோடு,

“அதனால தான் அம்மாவ அழைச்சிட்டு அடுத்த நாளே அர்ஜெண்ட் விசிட்….வேற யாராவது நீ விரும்பினா ஓகே..ஆனா உனக்கு இருக்க பயம் உன்னோட அம்மா அப்பா கூட இருக்கனும்..கல்யாணம்னாலே பிரிஞ்சிடனும்னுன்ற உன் எண்ணம்..அதைத் தான் அம்மா பேசி சரி பண்ணி..இப்போ இப்படி நீ என் கைக்குள்ள…”

 

காதலாய் உரைத்தான்.ஆனாலும் அவள் விழிகளில் இன்னும் சில வினா….

 

“ம்ம்..அப்புறம் ஏன் இப்ப இந்த லெட்டரை பத்தி பேசுறேன் நினைக்கிறீங்களா அம்மணி…அது புது பொண்ணு   நம்ம அம்மாவுக்கு தானே ப்ரண்ட்.. நமக்கு ஆகட்டும் அப்புறம் அதட்டுவோம்னு அத்தான் அடக்கி வைச்சிருந்தேன்…இப்படி ஒரு லெட்டர் வந்தா நான் நம்பல சரி..இதே வேற யாராச்சும் பார்த்திருந்தாங்கன்னா அதுவும் வெறும் கம்பெனி அட்ரஸுக்கு அப்பா பார்த்திருந்தாங்கனா…அப்படியே பார்த்தாலும் அவங்க நம்பமாட்டாங்க…நீ பெர்சனல்னு போட்டிருக்கவும் என்ட்ட தான் வந்துச்சு..இதே நாங்க உன்னைப் பொண்ணு கேட்டு வராம வேற யாராச்சும் வந்திருந்தா அனாவசியமா உன் பேர் தான் கெட்டுப் போயிருக்கும்…”

 

“உன் நோக்கம் சரியா இருந்தா மட்டும் போதாது..போற பாதையும் சரியா இருக்கனும் ஆழி…அதான் எப்பவும் நிலைக்கும்…”

 

அவன் சொல்வது நியாயம் தானே..!ஒத்துக்கொண்டது அவள் மனம்.

 

“சாரிப்பா…எப்படி நான்னு?”

 

“உங்க வீட்டுக்கு வந்திருப்ப உன் ரூம்ல  நிறையா கோட்ஸ்(quotes)எழுதி இருந்த இல்ல..ஒரே கையெழுத்து…” அவன் சிரிக்க

 

“தப்பு தான்..சமர்…”

 

அவளை விட்டு விலகியவன் அந்த கடிதத்தைக் கிழித்து பாத்ரூமில் ப்ள்ஷ் செய்துவிட்டு வர,அன்போடிய அணைப்பு அவளிடமிருந்து அவனுக்காய்.

 

“கல்யாணம்னா பயந்தேன் தான்…ஆனால் இப்ப  உங்க கூட இருந்தா எனக்கு பயமே இல்லப்பா…எல்லாமே நீங்க பார்த்துப்பீங்கன்னு ஒரு நம்பிக்கை  வருது சமர்…தேங்க்ஸ்…”

 

“யாரோ கோயம்பேடுல இருந்து என்னை கோவை வர விரட்டனும்னு சொன்னாங்க..” அவன் குவித்து வைத்திருந்த குமிண்சிரிப்பு குரலும் இதழிலும் இணைந்து பரவ சொல்ல,

 

அவன் மேல் சாய்ந்த வண்ணம் ,“நோ  நோ இப்ப என்ர வுட்டுக்காரு… ஆபிஸ் போனா கூட அம்மணியால தாங்க முடியறது இல்ல..”

 

அவள் பேச்சில் காதல் நிறம்…அன்பின் சாரம்.

 

அடுத்த நாள் அவன் காலையில் ஆபிஸீல் அவன் அறையில்.. மீண்டும் ஒரு மொட்டைக் கடுதாசியும் மொட்டவழிந்த ரோஜாப்பூவும்.அது அத்தனையிலும் காதல் வாசம்.

 

‘I LOVE YOU’

 

என்று மட்டுமாய் கடிதம்…அவள் தான் என அவனுக்குப் புரியும் தானே…

 

அவள் அகத்தில் சமமாய் ஆழமாய் அகலமாய் அத்தனையும் கலந்திருந்தான் அவன்…சமரன்…உடனே கைப்பேசியில் மனைவியை அழைத்து,

 

“ஆழிக்குட்டி யாரோ அத்தானுக்கு ஐ லவ் யூ சொல்லி லெட்டர் போட்டுருகாங்கடா…நான் தான் உன்னை வார்ன் பண்ணிட்டேன்ல நீ இல்லனா வேற யாராடா இருக்கும்..”

 

“சமர்…..அது நான் தான்..”

 

“இல்லடா…இது இங்கிலிஷ்ல இருக்கு..உன் கையெழுத்து இல்ல..”

 

‘உனக்கு என்ன விட்டா யார்டா சமோசா ஐ லவ் யூ சொல்லுவா..சொல்லத்தான் விடுவேனா…?உர்ர்ர்ர்ர்ர்’

 

“நீயா  இருந்தா நேர்லயே சொல்லுவியேடா..”

 

வேண்டுமென்றே அவன் பேசினான்.அவள் வாய்மொழியாய் காதல் மொழி கேட்க விருப்பம் அவனுக்கு.

 

“சக்தீயீயீயீய்…. ஐ லவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் யூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ டாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ”

 

கத்தலிலும் காதல் உணர்ந்தான் கணவனவன்.

 

சமரசமும் சமாதானமும் கொஞ்சம் சந்தன வாசமாய் கொஞ்சும் காதல் மொழிகளுடன் தொடர்ந்தன அவர்கள் பேச்சு.…

Advertisement