Advertisement

இப்படியாக இவர்கள் திருவையாற்றினை அடைய,முதலில் பஞ்ச நாதீஸ்வரர் கோவிலுக்கு சென்று அதியன் தன்னோடு எடுத்து வந்திருந்த திருமண அழைப்பிதழை வைத்துப் பூஜை செய்ய,இருவரும் கண் மூடி நின்று இறைவனை வணங்கிட,குங்குமம் வாங்கிக் கொண்டு இருவரும் மூலவரை வணங்கி விட்டு ப்ரகாரத்தை சுற்ற,

 

அப்போது தான் அதியனின் நெற்றியில் குங்குமம் இல்லாததைப் பார்த்த ஐரா,சுற்றி தன் விழிகளை சுழலவிட்டு,கொஞ்சம் கால்களை அழுத்தி எக்கி அதியனது நெற்றியில் தன் நெற்றியில் இருந்து குங்குமத்தை மாற்ற, நொடி நேர அவள் செயலில் ஆனந்தமும் அதிர்ச்சியும் அவனுள் எழுந்திட,அவனது விழிகள் வினாவினைத் தாங்கிட இவளது விழிகளோ காதலை உணர்த்திட, தலைவியின் செயலில் தானாய் ஒரு நாணம் வந்து சேர்கிறது தலைவனுக்கு…

 

மொழியங்கே மௌனமாகிட,அன்பின் செயலாய் அவள் கைகளை அழுந்தப் பற்றினான் அதியன்.மோனமும் மௌனமும் கலந்த அந்த நிலையிலே இருவரும் இறைவனை வணங்கி விட்டு காருக்கு அருகில் வந்தனர்.

 

அதியன் காரினை எடுக்க போக,ஐராவோ,

 

“கார் சாவியைத் தா” என கேட்க

 

“எதுக்கு மா…?” என்றவனிடம்

 

“ஆத்துக்காரி சொன்னா கேட்டுக்கனும் மிஸ்டர்.அதியன்” என்று சொல்லி அவன் கையிலிருந்த சாவியை அவள் எடுத்துக் கொள்ள

 

அவளின் ‘ஆத்துக்காரி’ பதத்தில் அகத்தினுள் குளிர்வாய்….மலர்வாய் அழகாய் ஒரு ஆழங்கட்டி மழை… ….

 

அவனின் கைப்பிடித்தவள் அவனோடு சேர்ந்து அன்று போனது போல் வயல்கள் இருக்கும் பகுதிக்குப் போனவள்,அன்று அமர்ந்த அதே சிறு பாலத்தில் உட்கார,இவனும் அவளோடு உட்கார்ந்தான்.

 

இவன்  நகர்ந்து செல்லும் நதிகளையும் நாணம் கொண்டு தலை சாய்த்திடும் நெற்கதிர்களையும் கண்டிட,ஐரா அவனிடம் ,

 

“கண்ணை மூடிக்கோ அதி..” என்றாள்.அவனும் அப்படியே செய்ய

 

“இப்ப கண்ணைத் திற..” என்றாள்.

 

கண் திறந்தால் அவன் கழுத்தில் தொங்கியது தங்கத்தால் ஆன ஒரு அழகிய செயின்.அதில் இதய வடிவிலான டாலர் இருக்க….அவள் தந்த ஆச்சரியத்தில் மகிழ்ந்தவன்,

 

அதைக் கையில் பற்றிக் கொண்டு,

“வாவ்..சூப்பரா இருக்கு..” என்று அதியன் சொல்ல

 

“திறந்து பாரு..” என்றாள்…

 

அந்த இதய வடிவிலான சிறிய லாக்கெட்டைத் திறந்தால்,ஒரு பக்கம் அதியனின் படம்,இன்னொரு பக்கம் ஐரா..

 

“சூப்பர்டி.” என்றபடி அவளை அவன் தோளோடு அணைக்க,

 

அவன் தோளில் இருந்து விடுப்பட்டவள்,

“வயலுக்கு யாராச்சும் வருவாங்க..ஸோ..நோ டச்சிங்” என்றாள்.

 

“ம்ப்ச்…ஒழுங்கா…இதை வீட்ல வைச்சுக் கொடுத்திருக்கலாம்ல…இப்ப பாரு….” என இவன் முறைத்துக் கொள்ள

 

“ம்ம்..இதான் பாஸ்..இடம் பொருள்..காதல்..” என்று ஐரா வதனத்தினில் விரவிய புன்னகையோடு சொல்ல,

 

“ம்ம்..இடம்…ஓகே..பொருள் கூட ஓகே..” என்று செயினைத் தடவியன்,

 

“ஆனால் காதல்…?” என புருவம் உயர்த்திக் கேட்க,

 

அவன் கைக்குள் தன் கையை அவள் வைக்க,அதனைத் தன்னுள் புதைத்தவனிடம்,

 

“எனக்கு ரொம்ப பிடிச்ச இடம்…காவிரியோடு சேர்ந்து நாலு ஆறு போகிற இடம்…..சின்ன வயசுல நான் விளையாடின பாலம்….இந்த வாய்க்கால்…கூட எனக்குப் பிடிச்ச என் அதியன்…காதல்னால தான் இதெல்லாம் செய்றேன்னு சாருக்குத் தெரியலயா..?” என்று கண்ணில் காதல் தேக்கி அவள் சொல்ல,தத்தளித்து போனான் அவன்.

 

அந்த தேன் தூறும் மைமல்(மாலை) பொழுதில்,மனம் கொய்தவளின் அருகாமையில் அத்தனை நிறைவு அதியனுக்கு..அதிலும் அவள் செயல்களினால் மனதினுள் புதுவெள்ளம் வேறு பாய்ந்தது.

 

மனோகரம் அவன் மனதினில்…அகம் புறம் அத்தனையும் அவளிடத்தில்.

 

இனிமையாய் நடந்தேறியது அதியன் ஐராவின் திருமணம்.தலைவன் தலைவி தனித்து இருக்கும் தனி இரவு..ஐராவுக்காய் காத்திருந்தான் அதியன் அவளது அறையில்.

 

ஐரா உள்ளே நுழைய,

 

“வாங்க புதுப்பொண்ணு” என்று உற்சாகமாய் வரவேற்றான் அதியன். அங்கிருந்த டேபிளில் பாலை வைத்தவள்,அதியனின் அருகில் அமைதியாய் அமர்ந்து கொள்ள,

 

“என்னாச்சு டா ?” என்று இவன் பரிவாய்க் கேட்க

 

அவன் தோளில் சாய்ந்தவள்,

 

“என்னமோ மாதிரி இருக்குதுடா” என்று புலம்ப

 

“ஹேய்…லூசு…நான் உன் அதியன் டி..என்ன பயம்..?” என்று கேட்க

 

“அட அது இல்லடா…அது நாளைக்கு உன் கூட சென்னை வரனும்ல..அம்மா அப்பாவையெல்லாம் விட்டு வரனுமே…..கஷ்டமா இருக்கு அதை நினைச்சா……”

 

“என் கன் பார்ட்டி ஐராவா அழறது….வை ஸோ சீரியஸ்?” என அவன் இலகுவாய்ப் பேச

 

“ஏன் தைரியமான பொண்ணுனா பாசம் இருக்க கூடாதா…?” என்று கோபமாய்க் கேட்க

 

“அது இல்லடி…காலையிலேர்ந்து நல்லா தானே இருந்த..?”

 

“காலையிலே அழுகையா வந்துச்சு..அம்மா தான் புதுப்பொண்ணு அழக்கூடாதுன்னு சொல்லிட்டா…ஆனா உன்னைப் பார்த்த பின்னாடி என்னால என்னை கன்ட்ரோல் செய்ய முடியல…” என்றபடி அவன் மடியில் அழுதபடி படுத்துக் கொள்ள

 

அவள் அவனை தன்னவனாய்த் தன் தலைவனாய் உணர்கிறாள் என்பது இவனுக்கு இனிக்கும் தானே..?!அவள் உணர்வுகள் புரிந்தால் கூட அவள் அழுவது பிடிக்காதவன் ,அவளை இயல்பாக்க,

 

“அது என்னவோ போ ஐரா…நீயும் இந்த அச்சம்,மடம், நாணத்தோடு வருவன்னு பார்த்தா நீ பாட்டுக்கு ஜம்முன்னு வந்து மடியில படுத்துட்ட…” என்று கிண்டலாய் சொல்ல,

 

உடனே அவன் மடியிலிருந்து எழுந்தவள் முறைத்தபடி,

“ நாணுதல் எல்லாம் நாயின் செயல்னு பாரதியார் சொல்லியிருக்கார்” என்று சொல்ல

 

“அவர் புதுமைப்பெண்ணுக்கு சொல்லியிருக்கார் கன்னுக்குட்டி..பட் நீ இப்போ என் புதுப்பொண்ணு ஆச்சே…?” என்றவன்

 

அவளைக் கைகளில் ஏந்தி,

 

“என் புதுப்பொண்ணுக்கு ஒரு ஸ்வீட் சர்ப்பரைஸ்..” என்று சொல்ல

 

“ஹேய்..என்னடா செய்ற….என்ன கதவை திறக்கிற..வெளியே யாராச்சும் இருக்க போறாங்க…” என்று சொல்ல,காதில் வாங்காமல் அவளை அவன் அறை வாயிலில் நிறுத்தியவன் ,

 

“இந்த ஷர்ட் பாக்கெட்ல ஒரு கீ இருக்கும்..எடுத்து ரூமை ஓபன் செய்” என்று சொல்ல

 

“டேய்…..ஏன் டா..இந்த ரூம் வேற திறந்திருக்கு….”

 

“சாத்திட்டா போச்சு…” என்று அதை மூடியவன் ,அவன் அறையை அவளைத் திறக்க சொல்ல,அவள் தயங்க,

 

“கன்னுக்குட்டி….இன்னிக்கு இது தடை செய்யப்பட்ட பகுதி..யாரும் மாடிக்கு வர மாட்டாங்க..” என்றான்.

 

அதன் பின்னர் அவள் கதவைத் திறக்க,பார்த்தால் அறையெங்கிலும் ரோஜா இதழ்கள்….எங்கும் நிறைந்தபடி…..நறுமணம் தந்தபடி…ஒரு இடம் விடாமல்….சுக சுகமாய் மண மணமாய் ஒரு உணர்வு மங்கைக்குள்…

 

“இப்ப இறங்குங்க புதுப்பொண்ணு..” என்றவன் அவளை ரோஜாக்களில் இறக்கி விட,கதவைத் தாளிட்டவன்,

 

“ஒத்த ரோசா கொடுக்கலன்னு குறைப்பட்டியே இப்ப சந்தோசமா..?”

 

ஒற்றை விரலை தாடையில் வைத்தவள்,அவன் செயலினில் மகிழ்ந்தாலும் அதைக் காட்டாது ,

 

“ஒரு ஐநூறு ரூபா செலவு செஞ்சிருப்பியா டா…அதுக்கு சீன்னா..?”

 

“என்னது ஐநூறா…ஐம்பதாயிரம் டி…”

 

“வாட்?”

 

“எஸ்…பூ ஆயிரம் ரூபா தான்..ஆனால் அதை யாருக்கும் தெரியாமல் கொண்டு வந்து இந்த ரூம்ல இப்படி டெகரெட் செஞ்சதுக்கெல்லாம் என் மச்சான்..உன் உடன்பிறப்பு வம்சி நல்லா வாங்கிட்டான்….என்ட்ட ஒரு நாள் விளையாட்டா கேட்டான்…அதான் வேலையும் வாங்கி போனும் வாங்கி கொடுத்தேன்…” என்று சொல்ல,

 

“சூப்பர்டா..நான் எக்ஸ்பெக்டே செய்யல…தேங்க்ஸ் ஸோ மச்” என்று உற்சாக மிகுதியில் அவனருகில் செல்ல,அதியனின் பார்வை அவளை என்ன என்னவோ செய்ய,அமைதியாய் அவள் நிற்க,

 

“புதுப்பொண்ணுக்கு எதாச்சும் தரனுமே..” என்றான் மயக்கம் தரும் குரலில்.

 

முதலாய்………..முதமாய்(pleasure)……அடுத்து வரப்போகும் ஆழ் தேடல்களுக்கு அடித்தளமாய் ஒரு ஆழ்ந்த முத்தம்……அவள் இதழ்களில் பதித்தான்….

அவன் செயலில் பாவைக்குள் பரவசம் பயிர் விட,உள்ளுக்குள் வெட்கம் விளைவிக்கின்றது ஒரு வெண்பனிக்காடு…

 

தலைவன் அவள் மெய் தொட்டு பயில, நாணுதல் ஆகிப்போகிறது நங்கை செயல்.

 

இனி இந்த மலர்வனம்..மன்னன் வசம்….எங்கெங்கிலும் காதல் வீசும்….

 

நடு நிசிப் பொழுதில் நாயகன் நங்கையவள் மடியில் படுத்திருக்க,சீண்டாமல் இருந்தால் அதியன் அல்லவே..

 

“ஏன் ஐரா…நமக்குள்ள கெமிஸ்ட்ரி இப்படி வொர்க் அவுட் ஆகும்னு நான் நினைக்கவே இல்லடி..” என்று அவன் வெட்கமின்றி கண்ணோரம் கரை கொண்ட காதலும் குறும்பும் அதனோடு கூடிய குறுஞ்சிரிப்புமாய் சொல்ல,

 

ஐராவோ அதியனின் ஆத்துக்காரி என்று நிரூபிப்பது போல்,

 

“அது கெமிஸ்ட்ரி இல்ல…பாஸ்….பயோ கெமிஸ்ட்ரி…” என்று சொல்லி சிரிக்க,

 

அவள் சிரிப்பில் சிந்தை மகிழ்ந்தவன்,

“ஐ லவ் யூ…ஐ லவ் யூ” என்று பிதற்றியபடி முகமெங்கிலும் முத்தமிட,

 

“அதி…ஒரு டவுட்” என்று ஐரா அவன் செயலுக்குத் தடை செய்ய

 

“என்னடி?”

 

“அது…அந்த ரூம்ல..எல்லாம் வேஸ்டா போயிருக்குமே…யாராச்சும் மார்னிங் பார்த்தா..”

 

“என் செல்ல கன்னுக்குட்டியே எதையுமே வேஸ்ட் செய்ய வேண்டாம்..அங்கேயும் வா போகலாம்…செகண்ட் இன்னிங்க்ஸ்…” என்று கண் சிமிட்டினான்.

 

அவளோ “உன்னை…” என்றபடி அவன் மீது தலையணையை எடுத்து எறிய போக,அவள் கைப்பற்றித் தடுத்து தலைவியை அணைக் கொண்டான் தலைவன்.

 

இனி என்ன இரவும் இனி வரும் பொழுதும் காதலும் காதல் நிமித்தமுமாய் அவர்கள் வாழ்வு அறத்தோடு அன்போடு அடிதடியோடு இனிதாய் தொடரும்..!!

 

காதல் கவனமாகியது….!!

Advertisement