Advertisement

காதல் 9:

 

வீடே பதறி இருந்தது..சத்ரியனும் அதியனும் அவசர அவசரமாய் வெளியேற,விஸ்வாவும் பின்னோடு வந்தார்.

 

“நானும் வரேன் அதி” என்று சொல்ல,

 

அதையெல்லாம் எங்கு கவனிப்பான் அதியன்….?சத்ரியன் தான்,

 

“அப்பா…வரும்போது ஐராவோட தான் வருவோம்…நீங்க கவலைப்படாதீங்கப்பா…ப்ளீஸ்…இங்கயே இருங்க..” என்றபடி அதியன் தன் காரை எடுக்க,சத்ரியனும் அவனோடு போனான்.

 

வம்சி வந்தவன் தன் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்ப,ராம நாதன் தான் அண்ணனை சமாதானம் செய்து கொண்டு இருந்தார்.

 

ராஜகோபாலன் வாசலுக்கும் வீட்டுக்கும் பதட்டமாய் நடந்து கொண்டே இருக்க,அனுராகா ,

 

“தாத்தா….உள்ள வாங்க…ஏன் இப்படி டென்ஷன் ஆகுறீங்க…”

 

“என்ன அனு நீ..ஐராவுக்கு என்னாச்சோ..? எப்பவும் நேரத்துக்கு ஆத்துக்கு வர பொண்ணு இன்னமும் காணோமே…” என அவர் பயந்து சொல்ல,அனு தான் அவரைத் தேற்றினாள்.

 

“தாத்தா…..தாத்தா………..ஐராவுக்கு ஒன்னுமாகாது…..அக்கா பத்தி தெரியும் தானே…அவளுக்கு கராத்தே வேற தெரியும்….அவ பத்திரமா வந்துடுவா தாத்தா….வேற எதாச்சும் சின்ன ப்ராப்ளமா இருக்கும்..வந்துடுவா…வாங்கோ..” என இழுத்துக் கொண்டு வந்தாள்…அத்தனை பேரும் ஐராவுக்கு என்னவாயிற்றோ என பதறி சாப்பிடாமல் அப்படியே அமர்ந்திருந்தனர்.விஸ்வ நாதன் மிக பதட்டமாய் இருக்க

 

பார்வதி தான் ,

“ஏன்னா நீங்களும் டென்ஷன் ஆகி என்னையும் ஆக்குறேள்…ஐராவுக்கு ஒன்னுமிருக்காது….அவ வந்துடுவா…அதி சத்தி வம்சியெல்லாம் போயிருக்காங்க தானே…..நம்ம பொண்ணு பத்தி உங்களுக்குத் தெரியாதா…” என கணவரின் அருகில் உட்கார்ந்து அவரை சாந்த படுத்தினார்…அவருக்கும் உள்ளுக்குள் உதறல் தான்..ஆனாலும் அதையும் தாண்டி ஐராவின் மீது அவருக்கு நம்பிக்கை இருந்தது..பெண்ணுக்கு அத்தனை தைரியம் சொல்லி வளர்த்தவர் ஆயிற்றே….ஆனாலும் ……என்ற எண்ணம் தோன்றினாலும் அவர் அதைக் காட்டிக் கொள்ளவில்லை..மனமெங்கிலும் ப்ரார்த்தனை மட்டுமே….!!

 

அவர் உடைந்தால் கணவரும் உடைவார் என தெரியுமே…ஐராவுக்கு சாதாரண காய்ச்சல் என்றால் கூட விஸ்வா பதறிடுவாரே…இப்படியாக வீட்டில் நிலைமை இருக்க,

 

அதியன் காரை ஓட்டிக்கொண்டே ,“சத்தி அவ எங்க போயிருப்பான்னு உனக்கு ஐடியா இருக்கா…எதாவது சொன்னாளா…என்ட்ட டயர்ட்டா இருக்குன்னு  நாலு மணிக்கே கிளம்பிட்டாளே……..” என்றான் யோசனையாய்..

 

அதியனின் அகம் உள்ளுக்குள் அடித்துக் கொண்டது…ஆனால் என்ன செய்ய….நிதானம் என்பது இக்கட்டான நிலையில் தேவை தானே…இப்போது உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி உள்ளத்தை அடக்கி மூளையை உபயோகிக்க வேண்டும்…முடிந்த வரையில் கட்டுப்பாட்டை இழக்காமல் இருக்க முயற்சி செய்தான்…

 

“அதி…..கொஞ்சம் வண்டியை ஸ்டாப் செய்றீங்களா…?”என சொல்ல,

 

“என்ன…ஐராவை எங்காச்சும் பார்த்தியா..?” என்றான் பரபரப்பாய்..அவனின் இந்த பதட்டம்,,பரபரப்பான பாவனைகள் சத்ரியனுக்கு ஏதோ புதிதாய் இருந்தாலும் இப்போதைக்கு அதையெல்லாம் அவனால் யோசிக்க முடியவில்லை…

 

ஐரா எங்கேவென தெரியவில்லை…ஆனால் அவள் ஏதோ ஆபத்தில் இருக்கிறாள்…என்று மனம்  சொன்னது..

 

“இல்ல..இல்ல….முதல்ல எங்கன்னு தெரியாம எப்படி போய் தேடுறது..அவ கிளம்பி நாலு மணி நேரம் மேல ஆச்சுல…” என்று சொல்ல,அதியனும் சரி என்பதாய் வண்டியை ஓரங்கட்டினான்..

 

“அதி…அவ போன்ல காவலன் ஆப் வைச்சிருக்கா… நான் சொல்லியிருக்கேன்…ஆனாலும் அவ மொபைல்ல இருந்து எந்த சிக்னலும் வரல…”

 

“என்ன சொல்ற..அப்போ அவளுக்கு எதாவது..?” என இவன் இன்னும் டென்ஷனாகப் பேசினான்.

 

“இல்ல..ஒரு வேளை அவளால போனை யூஸ் செய்ய முடியாத சிட்டிவேஷன்…”

 

“என்ன சொல்ற சத்தி…நீ சொல்றதைப் பார்த்த எனிதிங் சீரியஸ்…என்ன ப்ரச்சனை சொல்லு..”

 

“அது ஐரா….ஒரு கேஸை இன்வெஸ்டிகேட் செஞ்சிட்டு இருந்தா…டாக்டர்,,,சித்ரஞ்சன் ஆக்ஸீடெண்ட் கேஸ்…..அவர் யார்னு தெரியுமா..?”

 

‘இந்த கழுதைக்கு ஏன் வேண்டாத வேலை…பெரிய இன்வெஸ்டிகேஷன்…’என ஆத்திரம் வந்தாலும் இப்போது அவள் தானே முக்கியம்…என நினைத்தான் அதியன்…

 

“ப்ச்..சத்தி ப்ளீஸ் எனக்குத் தெரியல..நீ என்ன நடந்துச்சுன்னு சொல்லு..அப்ப தான் என்னால என்ன செய்ய முடியும்னு யோசிக்க முடியும்.”

 

“டாக்டர்.சித்ரஞ்சன்  முன்னாள் திருச்சி தொகுதி எம்பி சுந்தரேசனோட மருமகன்….அவர் வேற ஜாதி….எம்பி பெருசா பொண்ணோட காதலுக்கு எதிர்ப்பு சொல்லல..ஆனா அவர் மகன் அருணுக்கு இந்த ஜாதி மாத்தி தங்கச்சி கல்யாணம் செஞ்சிக்கிட்டதில் விருப்பமில்லை.. ஜாதிசங்கத்துல வேற அவன் பெரிய போஸ்ட்…ஜாதிக்காரங்க முன்னாடி ரொம்ப தலைக்குனிவு போல….அந்த பொண்ணு டெலிவரி அப்போ இறந்திடுச்சு….என் தங்கச்சியே போச்சு இவன் ஏன் இருக்கனும்னு இவன் தான் ஆக்ஸிடெண்ட் மாதிரி செஞ்சு  போட்டுத் தள்ளிட்டான்னு ஐராவோட கெஸ்… நான் விசாரிச்ச வரைக்கும் அதுதான் உண்மையும் கூட…..டாக்டரோட போஸ்ட் மார்ட்டம் ரீப்போர்ட் பார்த்தது என்னோட ப்ரண்டு தான்…நான் அதை ஐரா கிட்ட சொல்ல…அவ தான் இப்படி ஏன் இருக்க கூடாதுன்னு இன்வெஸ்டிகேஷன்ல இறங்கினா….என்ட்ட கூட ஒரு பத்து நாள் முன்னாடி ஏதோ எவிடன்ஸ்லாம் கிடைச்சிருக்குன்னு சொன்னா..எனக்கு என்னமோ அந்த அருண் மேல டவுட்…ஆனாலும் உறுதியா தெரியல…” என சொல்லி முடிக்க அதியன் நொடி நேரம் கூட தாமதிக்கவில்லை….கோபம் கரைத் தாண்டினாலும் இப்போது அதுவல்லவே முக்கியம்…

 

“சத்தி நீ சொன்ன மாதிரி காவலன் ஆப்ல…எதாவது சிக்னல் வருதா மானிட்டர் செய்ய சொல்லு…இல்ல் அவ IMEI நம்பரை வைச்சு எதாவது செய்ய முடியுமா பாரு…” என்றவன் அவன் நண்பன் சுபாஷுக்குப் போன் செய்தான்..

 

“சொல்லு டா அரண்….” என அந்த சுபாஷ் சொல்ல

 

“சுபா..எனக்கு ஒரு ஹெல்ப் டா…” என்றவன் விசயத்தை சொல்லி சுபாஷின் அப்பாவிடம் பேசினான்..சுபாஷின் அப்பாவும் சுந்தரேஷனும் ஒரே கட்சிக்காரர்கள்….என்ன இவர் முன்னாள் எம்பி…சுபாஷின் அப்பா minister of state for information and broadcasting… சுபாஷ் அதியனின் பள்ளித் தோழன்..அதனால் அதியனுக்கு நன்றாய் பழக்கம்..

 

இவன் மீது அவருக்கு மரியாதையும் அன்பும் கூட..சிறுவயதில் இருந்து பார்த்த பையன் இன்று சொந்த முயற்சியில் தென்னிந்தியாவின் தலை சிறந்த செய்தி நிறுவனத்தை  நிறுவியிருக்கிறானே…இவன் நடந்ததை சொல்லி,

 

“அங்கிள்…..அந்த சுந்தரேஷன் என்ன செய்வாரோ எனக்குத் தெரியாது…எனக்கு அரை மணி நேரத்துக்குள்ள என் மாமா பொண்ணு பத்திரமா வரனும்,..இல்ல உங்க நண்பரும் அவர் மகனும் ஜென்மத்துக்கும் அரசியல் பக்கம் வரதா மாதிரி செய்திடுவேன்…..கூடவே உங்க கட்சி பெயரும் சேர்ந்து போகும்….” என மிரட்டலாய்ப் பேசினான்…

 

கத்தவெல்லாம் இல்லை..ஆனாலும் கத்தியாய் வார்த்தைகள்…அத்தனை அழுத்தம்…சத்ரியன் அவனது டீபார்ட்மெண்ட் ஆட்களிடம் செய்ய வேண்டியதை செய்ய சொல்லிவிட்டு அதியனைப் பார்க்க,அவன் பேசியதில் உண்மையில் அவனுக்கு அதிர்ச்சி தான்..வீட்டில் அவனைப் பார்த்திருக்கான் தானே..அப்படியே வேறு பரிமாணம்….

 

சுபாஷின் அப்பா  கட்சி என்ற வார்த்தையில் கப் சிப் என்று ஆனார்…அவர் தானே அவரது கட்சியின் பொருளாளர்….ஏதோ அவர் கொஞ்சம் நலத்திட்டங்கள் செய்து எம்பியாகி கூட்டணி ஆட்சியில் மந்திரியாகவும் இருக்கிறார்..ஆனால் மாநிலத்தில் அவரது கட்சி எதிர்க்கட்சி என்ற நிலையில் இருக்க,உடனே சுந்தரேசனை அழைத்து அவர் விசயத்தை சொல்ல,சத்ரியன் கணித்தாற் போல் அருண் தான் அவன் மீது குற்றம் இருக்கும் விசயம் தெரிந்தால் அரசியல் வாழ்வே பாழாகிடும் என ஐராவைத் தீர்த்துக் கட்ட சொல்லி இருக்கிறான்..மாலையில் வீடு நோக்கி சென்றவளை கடத்தி திருச்சி மதுரை ஹைவேயில் இருக்கும் அவர்களது கெஸ்ட் அவுஸீல் அடைத்து வைத்திருக்க,இது தெரிந்த மறு கணம் சத்ரியனும் அதியனும் அங்கு படையெடுத்தனர்,

 

அதற்குள் ஐராவின் IMEI நம்பர் மூலம் அவளது செல்பேசி எங்கு இருக்கிறது என தகவல் சத்ரியனுக்கு வர,அவன்

 

“அதி…..ஐராவோட மொபைல் இங்க ழகரத்துலேர்ந்து வீட்டுக்கு வர வழியில இருக்கறதா தகவல்..ஒரு வேளை அவங்க பொய் சொல்லி இருந்தா..” என சந்தேகமாய் சொல்ல

 

“இல்ல…சத்தி..சுபாஷ் அப்பா பத்தி தெரியும்…சுந்தரேசன் எதாவது தகிடுதத்தம் செஞ்சிருந்தா அப்ப இந்த அரண் யாருன்னு அவருக்குக் காட்டுவேன்….இப்படியும் இருக்கலாமே…ஐராவைக் காணும்னா அவ மொபைல் வைச்சு தான் தேடுவோம்னு கெஸ் செஞ்சு அதை வேற இடத்துல வைச்சிருக்கலாம்ல…எதுக்கும் நீ வம்சிக்குப் போன் செஞ்சு அவனையும் உன் டீபார்ட்மெண்ட் ஆளுங்க கொஞ்ச பேரையும் அங்க போய் பார்க்க சொல்லு…சில பேரை நம்ம போற இடத்துக்கு வர சொல்லு..” என்று சொல்ல சத்ரியனும் அப்படியே செய்தான்.

 

அந்த கெஸ்ட் அவுஸின் மேல் தளத்தில் உள்ள அறையில் மயக்கம் மருந்து கொடுத்திருக்க மயங்கி இருந்தாள் ஐரா…ஒரு ஏழு மணி வாக்கில் மயக்கம் மெல்லமாய் தெளிய,கை கால்களில் இருந்த கயிறு அவள் கடத்தப்பட்டிருக்கிறாள் என்ற செய்தியை மனதுக்குள் கடத்திட,அஞ்சவெல்லாம் இல்லை…அஞ்சுவது அஞ்சாமை பேதைமை என்பதை உணர்ந்தவள் ஆயிற்றே…

 

அவள் எண்ணமெல்லாம் எப்படி தப்பிப்பது என்பதே…எப்படியும் இந்த விசயம் சத்ரியனுக்குத் தெரிந்தால் அவன் எதாவது ஒரு வகையில் தன்னை மீட்பான் என்று தெரியும்…ஆனால் அவள் என காவியத் தலைவியா…..ஒரு தலைவன் வருவான் தன்னைக் காக்க என்று அமைதியாய் இருக்க,சிறிது  நேரம் கண்களை மூடி தன்னை நிதானித்துக் கொண்டாள்..மயக்கம் மருந்தின் தாக்கம் இருக்கிறதே…?!

 

செயலில் இறங்கிடும்போது சொதப்பிடக் கூடாதே…அறையில் இருந்த பொருட்களைப் பார்க்க,ஒரு இரும்பு மேஜை…அதில் சில பேப்பர்கள்…ஒரு மரத்திலான பென் ஸ்டாண்ட்….சில பேனாக்கள்….ஒரு டீபாய்..அதில் ஒரு பூஜாடி….வாட் ரோப்…ஒரு சிறிய ரூம்…பாத்ரூமாய் இருக்கும் என நினைத்தாள்..கதவு வெளியே சாத்தப்பட்டிருந்தது.அவளைக் கடத்திய போது நாலு பேர் இருந்ததைப் பார்த்தாள்..இப்போது எத்தனை என தெரியவில்லை.ஆனாலும் நாலு பேரை எப்படி டீல் செய்வது என திட்டமிட்டுக் கொண்டாள்..எத்தனை பேர் வந்தாலும் தப்பிக்க வேண்டும்…என திடமாய் சொல்லிக் கொண்டாள்..

 

ஏற்கனவே இருக்கும் பயத்திற்கு பால் வார்ப்பதை விட,ரௌத்திரத்தை செதுக்கிடுதலே சாலவும் சிறந்த தாயிற்றே…பலவீனங்களைக் காட்டாமல் இருப்பதும் பலம் தானே…பயம் என்பதை காட்டி விட்டால் போதும் எதிருக்கு ஏத்தமாகிவிடும்…

 

கொஞ்சம் நகர்ந்து அந்த துரு பிடித்த பழைய இரும்பு மேஜையின் அருகே  சென்றவள் அதன் கால் பகுதியை பார்த்தாள்…கூர்மையாக இருக்க,தனது கைகளில் கட்டப்பட்டிருந்த கயிறை அதில் வைத்து அறுக்க முயற்சி செய்தாள்…. நீண்ட நேர முயற்சிக்குப் பின் அது கொஞ்சம் கொஞ்சமாக அறுந்து கொள்ள,அதே சமயம்….இரும்பில் கிழித்து லேசாய் ரத்தம் வேறு…ஆனால் அதை பொருட்படுத்தாமல் இவள் செயல்பட,செயலாவும் சிறப்பே…!

 

கயிறு கொஞ்சம் லூசாக,இவள் கைகளைக் குறுக்கி ,அதிலிருந்து வெளி வந்தாள்..கால்களில் உள்ள கயிறை அவள் மிக சுலபாய்க் கையால் கழட்டி விட்டாள்…மங்கை என்பதாலும் மயக்கம் தந்திருப்பதாலும் கால்கட்டை அப்படி  ஒன்றும் இறுக்கவில்லை..

 

பிறகு மெல்லமாய் எழுந்தவள் கை கால்களை நன்றாய் இழுத்து விட்டு குனிந்து தனது ஜீனின் கால் பகுதியில் உள்ள உள் பாக்குட்டுகள் கை விட்டாள்..உள்ளே பத்திரமாய் அவள் பிஸ்டல்….அதை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டாள்.

 

அப்போது பார்த்த அறைக்குள் ஒருவன் வரும் சத்தம் கேட்க,ஐராவோ அவ்வறையில் இல்லை..,இவள் பாத்ரூமிற்குள்  இருக்கலாமோ என நினைத்து என அவன்  அங்கே நகர,அவன் நினைத்தது சரி என்பது போல் தண்ணீர் விழும் சத்தம் வேறு….

 

“ஏய் பொண்ணு…வெளியே வா….கயிறு இருந்துச்சே…எப்படி போன.?” என சத்தம் போட,பதிலுக்கு எதிரொலியே இல்லை…ஐரா தான் அங்கிருந்த  வாட் ரோபினுள் இருந்தாளே…உடனே இவன் கதவைத் திறக்க,பின்னால் மண்டையில் விழுகிறது அவனை விழ வைக்கும் வகையில் அடி…உபயம் பூஜாடி…அவன் இவளை பிடிக்க வர அப்படியே காலில் ஒரு உதை தந்து பாத்ரூமினுள் வைத்து பூட்டினாள் ஐரா..பின்னர் அந்த பென் ஸ்டாண்டையும் பேனாவையும் எடுத்துக் கொண்டாள்..

 

சீறி வரும் நேரத்தில் சிறு துரும்பும் உதவிடுமே…

 

அவள் அறையை விட்டு வெளியே வர பார்த்தால் இரண்டு பேர் நின்றனர்…முதலில் இவர்களிடம் பிஸ்டலை பயன்படுத்தக் கூடாது என்பதில் தெளிவாய் இருந்தால் ஐரா…ஒரு வேளை இவர்களை விட பலமாய் ஒருவனோ இல்லை இன்னும் பலர் வந்தால் தேவைப்படுமே…

 

இவளைக் கண்டதும் ஒருவன் வேகமாய்த்  தாக்க வர,பென் ஸ்டாண்டை அவன் மண்டை நோக்கி விட்டெறிய,அவன் சாய,அடுத்தொருவன் இவளை அடிக்க வர,அவன் அருகில் வரவும் வாகாய் குனிந்தவள் பேனாவைத் திறந்து அவன் கால்களில் குத்த,தடுமாறினாலும் இவளை விடாமல் அவன் தாக்க,அவன் அடிவயிற்றில் ஓங்கி ஒரு குத்து குத்த குப்புற விழ,இப்போது புதிதாய் இன்னொருவன் வந்தான்,

 

“ஏய்..என்னா…திமிர் உனக்கு…பொண்ணு எங்காளுங்க அடிக்கிற..உன்னை..”என்றபடி அவன் வைத்திருந்த கத்தியை எடுக்க, ,பிஸ்டலை எடுத்தாள்…இப்போது…யோசிக்கவே இல்லை….பிஸ்டலை அவன் கால் நோக்கி ஃபயர் செய்தாள்….அந்த பாடி பில்டர் மீது பாய்ந்தது புல்லட்.

 

“உன்னை…” என்றபடி அவன் நகர முயல…..

 

“அசைஞ்சே கொன்னுடுவேன்..என்ட்ட இரக்கம்லாம் எதிர்ப்பார்க்காத..” என ஐரா  மிரட்டிக் கொண்டிருக்கையில்…யாரும் எதிர்ப்பாரா வண்ணம் கீழிருந்து ஒருவன் மெதுமெதுவாய் படிக்கட்டினில் ஏறினான்..ஐரா முன்னால் பார்த்து அந்த கத்தி பார்ட்டியிடம் பேசியதில் இவனை கவனிக்கவில்லை…கீழிருந்து வந்தவன் ஐராவை பின்னால் போக,,,

 

‘ஆ……’ என்ற சத்தத்தோடு கீழே விழுந்தான் அவன்..

அதியனும் சத்ரியனும் அவ்விடம் போகும் போது,அவர்களுக்குக் கேட்டது புல்லட்டின் சத்தமே….

 

அதியன் அந்த கணம் கொண்ட பயம் அவன் வாழ்வில் அறியாதது….பிஸ்டலின் சத்தம் கேட்டு ‘ஐயோ என் ஐரா’…என்ற எண்ணம் தோன்ற இவன் வேகமாய் உள்ளே ஓட,சுபாஷின் அப்பாவின் சிபாரிசில் சத்ரியனின் தலைமையில் உள்ள போலிஸ் படை அவ்விடத்தை சுற்றி வளைத்திருந்தது.சத்ரியனும் வேக வேகமாய் உள்ளே ஓட,

 

அதியன் கீழிருந்து மேலே ஐராவைத் தாக்க சென்றவன் மீது கைக்கு எதுவும் கிடைக்காததால் தனது ஐபோனைத் தூக்கி விசிறியடித்தான்.அது சென்ற வேகத்திலும் விசையினாலும் சரியாய் குறிப்பாக சிறு பொருளானாலும் பெரும் வேகமல்லவா அப்படியே விழுந்தான் அவன்.

 

‘வல்லவனுக்குப் போனும் ஆயுதம்…’

 

உண்மையில் அவன் சென்றது அவனது சகாக்களிடம் ஐராவை விட்டுவிட சொல்லித்தான்…ஏனெனில் இப்போது தான் அருண் அவர்களிடம் விசயத்தை சொல்லியிருந்தான்…ஐரா அவர்களிடம் இருப்பது  தெரிந்தால் அதற்கும் சேர்த்து கம்பி எண்ண வேண்டுமே…

 

அவன் கத்தியதில் ஐரா திரும்பிப் பார்க்க,அங்கே அவள் கண்டது அத்தனை காதலை கண்ணில் தேக்கி கலக்கமுற,நின்றிருந்த அதியனைத்தான்..

 

அவள் கையில் பிஸ்டலைப் பார்த்ததும் தான் இவனுக்கு உயிரே வர,ஐரா என்று அழைக்க,அவளும் அதி என்றபடி அருகில் வர,புறம் பற்றி யோசிக்காது அகத்தில் நிறைந்திருந்தவளை அள்ளி அணைத்திருந்தான் அதியன்…

 

Advertisement