Advertisement

காதல் 8:

 

“மாமா…” என்ற அதியனின் குரல் அதிர்வோடு ஒலித்த அதே நேரம் ,

 

ராம் நாத்தும் ,”என்ன அண்ணா…?யோசிச்சு சொல்லுங்க…இப்படி டக்குனு சொன்னா..?” என்றபடி விஸ்வாவைப் பார்க்க

 

“நல்லா யோசிச்சு தான் பேசுறேன் ராம்…கண்டிப்பா இது சரிப்படாது…”

 

“ஏன் சரி படாது. மாமா?எனக்கு என்ன குறை…?”

 

“அதி…புரிஞ்சிட்டு பேசு ….உன்ட்ட குறையிருக்கறதால உன்னை வேண்டாம்னு சொல்றேன்னு நினைக்காத…நிறைகள் இருந்தாலும் கூட நமக்கு அது சரி வராதுன்னா வேண்டாம்னு சொல்றது தான் முறை..” என விஸ்வா சொல்ல,அதியனுக்கோ அகத்தினுள் அமில மழைத் தூறல்..காதல் உணர்வு தந்த இதமான ஈரக்காற்றும் பனி  படர்ந்த ரோஜாக்காளும் நீங்கி இப்போது பாலை வன புழுதி மனதில் பறக்கும் உணர்வு..

 

எப்படி என்னை வேண்டாம் என்பார்…ஐரா வேண்டாம் என்று சொன்னால் இப்படி வலிக்குமா தெரியவில்லை..விஸ்வா என்றால் அவனுக்கு அவ்வளவு மரியாதை..அவனது தந்தைக்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பவர்…அவரே தன்னை வேண்டாம் என்பதில் நிராகரிப்பின் வலியால்..நிறைந்து போகிறது அவன் மனம்

“ஏன் சரி வராது மாமா…?”

 

எப்படி சொல்வார்..செய்யாத தவறுக்கு என் பெண்ணை நீ அடித்தாய் என..?அதுவும் ஐரா யாரிடமும் சொல்லாதே என்றிருக்கும்போது…இவருமே தான் அடித்தார்…ஆனாலும் தன் பெண்ணை அத்தனை பேரின் முன்னிலையில் அதியன் அடித்தது அவருக்கு மிகுந்த வருத்தத்தை விளைவித்திருந்தது.அதியன் அத்தனை வகையிலும் நல்லவன் ஆனாலும் கோபம் வந்தால்…?அது போல தான் ஐராவும்…கோபம் கண்ணை மறைத்துவிடும்…இருவரும் இணைந்தால் வாழ்க்கை போர்க்களமாய் தான் இருக்கும்…அதனால் தான் இவர் இப்படி சொன்னார்.

 

“ஐராவுக்கும் உனக்கும் எப்போ செட் ஆகியிருக்கு அதி….இரண்டு பேரும் சண்டை மட்டும் தானே போடுவீங்க…தீடீர்னு எங்க காதல் முளைக்குது..” காரம் படர்ந்த குரலில் அவர் பேச

 

“சண்டை போட்டா கூட அவ கூட தான் போடனும்னு தோணுது மாமா…அதான் காதல்…ஏன் மாமா அத்தை கூட நீங்க இத்தனை வருஷத்துல ஒரு நாள் கூட சண்டை போட்டதில்லையா…?கல்யாணமானவங்க அத்தனை பேரும் ஒரு தரம் கூட சண்டை இல்லமையா வாழறாங்க…?” என்று அவன் ஆற்றாமையோடு பேச, விஸ்வநாத் இளகவில்லை.

 

“அதி… நீ உன்னோட பிஸினஸ் ஸ்டரடஜியெல்லாம் என்ட்ட யூஸ் செய்யாத…..ஐராவை எனக்கு உனக்கு தர விருப்பம் இல்லை போதுமா…?எனக்கு உன் மேல உள்ள அக்கறையில தான் சொல்றேன்….ஐரா கண்டிப்பா ஒத்துக்க மாட்டா…வீணா ஆசைய வளர்த்துக்காத…” என்றதும் மனமெங்கிலும் மண்டுகிறது வலி.ஆனாலும் அதியன்,

 

“அப்போ ஐரா ஒத்துட்டா நீங்க ஒத்துப்பீங்களா மாமா..?” என்று கேட்க

 

“ஐரா ஒத்துக்க மாட்டா அதி….” என்று அவர் திரும்ப திரும்ப அதையே சொல்ல

 

“அவ ஒத்துக்கிட்டா நீங்க எனக்கு அவளை கல்யாணம் செஞ்சு வைப்பீங்களா….?” என்றவனின் குரலில் நிமிர்வும் ஐராவை எப்படியாவது அவனை ஏற்றுக்கொள்ள வைத்திடும் எற்றமும் தோன்றிட பிடிவாதமாய் அவரை அப்படிக் கேட்க

 

“அவ அப்படி ஒத்துக்கிட்டா..எனக்கு அப்ஜெக்ஷன் இல்லை..” என்றார் எப்படியும் ஐரா ஒத்துக்கொள்ள மாட்டாள் என்ற நம்பிக்கையில்…

 

“தேங்க்ஸ் மாமா…” என்ற போதிலும் அகத்தினில் அத்தனையாய் கோபமும் தவிப்புமாகவே அவன் சென்றன…அவன் அகவெயிலில் பூத்திருந்த காதல் பூக்கள் கூட வாடி வதங்கின….

 

இவன் மாடியேற,

 

“அதானே பார்த்தேன்…மார்க் ஆண்டனிக்கும் மாணிக் பாட்ஷக்கும் என்ன லிங்குன்னு..வம்சி கெஸ் ரைட்…ஆனா இப்ப பெரியப்பா நோ சொல்லிட்டாரே….என்ன செய்ய போறீங்க…?” என்று மனோவம்சி கேட்க

 

இருந்த எரிச்சலில் , “ம்ம்..படுத்துத் தூங்க போறேன்..போடா” என்று சொல்லிவிட்டுப் போனான் அதியன் அரண்யன்.

 

ராமோ விஸ்வாவிடம் ,”என்ன அண்ணா..அதி போல நல்ல புள்ளயை போய் வேண்டாம்னு சொல்லிட்டேள்….அதுவும் நம்ம கஸ்தூரி பையன்….ஐராவே மாட்டுப்பொண்ணா போனா…நம்ம உறவு நன்னா இருக்குமேண்ணா…” என சொல்ல

 

“இல்ல ராம்…கன்வின்ஸிங்கா கல்யாணம் செய்ய கூடாது..ஒரு வேளை ஐரா ஒத்துட்டா பார்க்கலாம்…ஆனாலும் அவனுக்கும் அவளுக்கும் செட் ஆகாது தானே…அவன் அனுட்ட பேசற மாதிரி அன்பா ஐரா கிட்ட பேசியிருக்கானா…?இத்தோட நீ இதை விடு…அப்பா  கிட்ட அவன் சொல்லமாட்டான்….நம்மளும் சொல்ல வேண்டாம்..சொன்னா அவரும் என் பெயரனுக்கு என்ன குறைன்னு குதிப்பார்….எனக்கு இதுல ஐரா தான் ரொம்ப முக்கியம் ராம்..” என்றார் விஸ்வநாதன்.

 

&&&&&&&&&&&&&&&&&&&

 

“அப்பா…என்னை திருவையாறு அழைச்சிட்டுப் போறேன்னு சொன்னீங்க…..ஆனா  வழக்கம்போல சீட்டிங்..” என சொல்லி முகம் தூக்கி வைத்தபடி உட்கார்ந்திருந்தாள் ஐரா.

 

“கன்னுக்குட்டி….அப்பா வேணும்னே செய்வேனா…? நீ வேணும்னா வம்சியை அழைச்சிண்டு போயேன்…இல்ல சத்தி ஃப்ரீனா அவனை அழைச்சிட்டுப் போ…”

 

“அந்த  தடி பசங்க இரண்டு பேரும்  வரமாட்டானுங்க ப்பா….இந்த மாதாஜியும் என்னை தனியா விட மாட்டேன் சொல்றாங்க…இல்லனா நான் ஏன் இவனுங்க துணையை எதிர்ப்பார்க்குறேன்…ஜஸ்ட் ஒரு 2 ஹவர்ஸ்ல தஞ்சாவூர்…அப்புறம்  ஒரு பதினொரு கிலோமீட்டர்ல திருவையாறு……அதுக்கு கூட தனியா விட மாட்றாங்க….போங்க….இதே பையனா இருந்தா விடுவீங்க தானே…?” என அவள் கோபமாய்க் கேட்க

 

“வம்சி……..ஐராவை என் காரை எடுத்துட்டு திருவையாறு வரைக்கும் அழைச்சிட்டுப் போயேன் டா…..” என்று சொல்ல,லேப்டாப்பை  நோண்டிக் கொண்டிருந்தவன் மாடியில் இருந்து அதியன் இறங்கி வருவதைப் பார்த்துக் கொண்டே

 

“நான் ரொம்ப பிஸி பெரியப்பா…வொர்க் ஃப்ரம் ஹோம்….மாம்ஸ்  நீங்க ப்ரீனா நம்ம ஐராவை திருவையாறு அழைச்சிட்டுப் போறீங்களா..பாவம் ரொம்ப நாளா கேட்கிறா……” என்றபடி அதியனை ஒரு கள்ளப்புன்னகையோடு பார்க்க,

 

அவனும் கண்ணோரம் மின்னிய கள்ளச்சிரிப்பும்,கனிவுமாய் வம்சியை நோக்கி,ஐராவைப் பார்த்து,

 

“ஐரா..வாயேன்..எனக்கு கூட ரொம்ப நாளா போகனும்னு ஆசை…சின்ன வயசுல போனது….” என சொல்லி விட்டு விஸ்வாவை ஒரு மிதப்பான பார்வை பார்க்க,

 

ஐராவோ ,”வாவ்….அதியன் கலக்குறடா….டென் மினிட்ஸ் வரேன்…” என்றபடி உற்சாகமாய் அவள் செல்ல,

 

விஸ்வநாதனோ,

“ஐரா அவ்வளவு ஈசி இல்ல அதி..” என சொல்லி அவனை  கிண்டலாய்ப் பார்க்க,

 

“அவ்வளவு ஈசியா இருந்தா எனக்கும் பிடிச்சிருக்காதோ என்னவோ மாமா….அது போல என்னோட காதலும் ஈசி இல்ல…” என நம்பிக்கையாய் சொல்ல,அவனை மென்புன்னகையோடு பார்த்தவர் எதுவும் பேசவில்லை..

 

“என்ன மாமா…எனக்கு எதுவும் கவனிப்பு இல்லையா…?” என்று வம்சி கேட்க

 

“ம்ம்..முதல்ல அவ என்னை கவனிக்கட்டும்..நெக்ஸ்ட் மச்சான் உன்னை நான் கவனிக்குறேன் டா..தேங்க்ஸ்..” என சொல்லி அவன் முதுகில் தட்டினான்.

 

அதன் பின் பார்வதி அத்தனை பத்திரம் சொல்லி அதியனோடு ஐராவை அனுப்பி வைத்தார்.

 

இம்முறை காரில் பாடலை ஐராவே ஆன் செய்தாள்..அவள் முகத்தில் திருவையாறு செல்லும் மகிழ்வு அப்படியே தெரிய…..முகமெல்லாம் விகசிக்க இருந்தாள்..அது இன்னும் அவளுக்கு பொலிவு சேர்த்தது..

 

அதுவும் ஒரு சில்க் காட்டன் புடவை கட்டி , ஒரு பக்கம் மொட்டவிழ்க்கும்   நிலையில்.. இருந்த மல்லிகை அவள் தோள்களைத் தொட்டு தழுவ,அவள் வதனத்தில் வாசம் செய்திருக்கும் அந்த கள்ளமில்லா சிரிப்பும் அவளை இன்னும் இன்னும் பேரழகியாய் காட்ட,பேரலையில் சிக்கிய உணர்வு அதியனிடத்தில்.

 

வெகுதூரப் பயணம்….அருகில் அகம் கொண்டவள்…..எதிர்க்காற்றாய் இருந்தாலும் ஏகமாய் மனம் வருடும் தென்றல்……மார்கழி மாத இறுதி வேறு…கால நிலையும் காதல் நிலையும் அவனை நிலையில்லாமல் தவிக்க வைக்க ,அப்போது வேறு

 

‘ நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி…..

நம்மைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி….’ என ஆஷா  போன்ஸ்லே….அழகிய ஆலாபனையிலும் ராஜாவின் ராகத்திலும் ஒலிக்க, பாடலை ரசித்தவன் மறந்தும் கூட அதைப்பற்றி வாய் திறக்கவில்லை….திறப்பானா என்ன …?அவள் மீண்டும்..ராகம் ஸ்வரம்…..ஸ்ருதி என ஆரம்பிப்பாளே…

 

அதியன் இஸ் அலர்ட் ….

 

“என்ன டி அமைதியா வர…?”

 

“ரசிக்கிறேன் மேன்…” என சொல்லியவள்,

 

“ஆமா…நீ என்ன செய்ற..?”

 

“நானும் ரசிக்கிறேன்…” என்றவனின் ரகசிய பார்வை ரசனையாய் பெண்ணவளைத் தொட்டு மீள…….இவனுக்கோ தீரா தாகம்…மீளா காதல்….!!

 

“ஓஹோ……..அது சரி….திருவையாறுக்கு நீ ஏன் வர…”

 

“ம்ம்…எனக்கும் திருவையாறுன்னா பிடிக்கும்…நம்மளோட பூர்வீகம்…காவிரி…. காத்து…தியாகராஜர்…கீர்த்தனை……கர் நாடக பாட்டு…….பிடிக்காம இருக்குமா…? சிவசு மாமா வீட்டுக்குப் போயிட்டு அப்படியே ஊரைப் பார்ப்போம்னு வரேன்..”  என அதியன் சொல்ல,

 

பொன்னி நதி,அரசிலாறு,வெட்டாறு,வெண்ணாறு,குடமுருட்டியாறு என ஐந்து நதிகள் ஓடுவதால் திரு(மேன்மை)வை(ஐந்து)யாறு என்று பெயர்.

 

ஐந்தாறுகள் ஓடுவதால் பஞ்ச நாதீஸ்வரர் என்று அங்குள்ள இறைவன்  பெயர்…தியாகராஜரும்,முத்துஸ்வாமி திக்ஷீதரும்,ஷ்யாம ஷாஸ்த்ரியும் வாழ்ந்த மண்….

 

கர்நாடக சங்கீதத்தின் மூவர் தோன்றிய பூமி….இயற்கை எழிலும்…தெய்வ மணமும் கமழ்ந்து காவிரி உள்ளிட்ட ஆறுகளினால் வளம் பெற்ற ஊர்..எத்தனை முறை வந்தாலும் ஐராவுக்கு ஊரும்,காவிரியும்,பஞ்ச நாதிஸ்வரர் கோவில் மண்டமும்,அதன் பின் ஓடும் காவிரியும் மிக மிக பிடித்தம்….

 

அதனால் “ஓகே ஓகே…” என்றபடி அவள் வெளியே தன் பார்வையை பதித்தாள்…திருச்சி தாண்டி தஞ்சாவூர் போகும் வழியிலேயே அவள் உறங்கி விட,கூந்தலில் சூடிய மல்லிகையின் குரவு நாயகனின் நாசியைத் துளைக்க, நயனங்கள் தாமாய் நாயகியின் பக்கம் பார்க்க,

 

சாளரம் திறந்திருந்த காரணத்தினால் அவள் மீது மோதிய காற்றும்,கலைந்திருந்த கூந்தலும்….இவன் காதல் தலைவி  காவியத் தலைவியாய்த் தான் தோன்றினாள்…

 

திருவையாறு போனவர்கள் அங்கு இருக்கும் சிவன் கோவில் சென்று அவர்கள்  உறவான சிவசு மாமா வீட்டுக்குச் சென்று  நலம் விசாரித்து மதிய உணவும் உண்டு விட்டு, அவர்களின் வயல் இருக்கும் இடம் செல்ல,அங்கு புகுந்த இடமாம் வங்க கடல் நோக்கி பாய்ந்தாள் பொன்னி எனும் காவிரி…வயலுக்கு அருகில் ஓடும் வாய்க்காலில் சின்னதாய் மீன்கள் துள்ளி விளையாட,வேக வேகமாய் அவ்விடம் சென்ற ஐரா,

 

வாய்க்காலின் நடுவே ஓடும் சிறு ஆற்றுப் பாலத்தில் அமர்ந்து கால்களை நீரில் விட்டாள்…எப்போதும் இங்கு வந்தால் ஐரா,அதியன்,ரியா,வம்சி,அனு என எல்லாரும் செய்வது தான் இது….வயது கொஞ்சம் ஏற,வாலிபம் கூட இது போல் செய்ய காலமில்லாமல் இருக்க,அதியனும் ஐரா போவதை பார்த்து அவளோடு போய் உட்கார்ந்தான்.

 

ஒரு பக்கம் வயல்….ஒரு பக்கம் வாய்க்கால்….அதில் சில்லென ஓடும் பொன்னி……மஞ்சள் வெயில்  பட்டுத் தெறிக்கும் நேரம்…..மனம் கவர் மங்கை மன்னவன் அருகினில்….வேறென்ன கேட்குமாம் இவன் மனம்…..?

 

ஷூவைக் கழட்டி விட்டு அவன் பேண்டை சுருட்டி காலை நனைத்தபடி கீழே பார்க்க,அந்த மஞ்சள் வெயிலில் மங்கை கால் பளிங்காய் தெரிய,ரகசியமாய் ஒரு பார்வை இவனிடமிருந்து….

 

ஒரு  நொடி ஆகாயம்  பார்த்தவன் , ஆழ் மூச்சை எடுத்து விட்டு மெதுவே பேச ஆரம்பித்தான்.

 

“ஐரா ஒன்னு சொல்லட்டுமா…?”

 

“சொல்லுடா…..” என்றாலும் இவள் பார்வை நீரிலும் அதில் துள்ளும் மீனிலுமாய் இருக்க,

 

“ஐரா….எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்…..என்னைக் கட்டிக்கிறியா..?” என மனதில் தோன்றியதை பட்டென கேட்டு வைக்க

 

“என்ன..?” என்றபடி அவள் முறைப்பும் முழு அதிர்வுமாய்க் கேட்க

 

“ஐ மீன் கல்யாணம் கட்டிக்கிறியா..அதுக்கு அப்புறம் அப்படி இப்படி கட்டிக்கலாம்…?” என கண்ணடிக்க

 

“எதிர்ப்பார்த்தேன்…” என அவள் சொல்ல இவனுக்கோ எதிர்ப்பாரா நிலை…பேச்சே வரவில்லை…அவள் அதிர்வாள் என கண்டால் இவனை அதிர வைத்தாள் ஐரா…

 

“எஸ்……நீ இன்னிக்கு என் கூட வரும்போதே நான் நினைச்சேன்…..இன்னிக்கு தான் கெஸ் பண்ணினேன்…ஆனாலும் உறுதியா…அதுவும் இப்படி இருக்கும்னு நினைக்கல..” என சொல்ல

 

“ஐரா பரவாயில்ல…உன் கெஸ்…நாட் பேட்” என இவன் வியக்க

 

“மண்ணாங்கட்டி….எப்போவும் சண்டை போடுற சண்டியர் தீடீர்னு சாஃப்டா மாறினா….அதுவும் டெய்லி எனக்கு டிரைவர் வேலை பார்க்குற…அக்கறையா இருக்க…” என்று ஐரா சொல்லிக் கொண்டு போக

 

“ஐரா..அக்கறையெல்லாம் எப்பவும் உண்டு…”

 

“ஐ நோ…ஆனாலும்..இந்த எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா…என்ன சொல்ல….உன் பார்வையில உள்ள அந்த சாஃப்ட் நெஸ்…எப்பவும் நீ இளிச்ச வாயன் தான்…பட்….என்னை பார்த்ததும் இன்னிக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ராவா உன் முகத்துல தெரிஞ்ச பல்ப்….” என எப்போதும் அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல்….ஒரு தீரா மென் புன்னகை அவன் முகத்தில் தழுவும்..அதை குறிப்பிட்டு ஐரா கூற,

 

“ஐரா…எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்குடி…” என சொல்லுகையில் அத்தனை வருடலும் வாஞ்சையும்…..வாடைக்காற்றின் ஈரம் சுமக்கும் வார்த்தைகளாக அவை வெளி வர,

 

இவளோ ,  “அதெல்லாம்..நமக்கு…” என்றபடி சொல்ல வர,அவளைக் கை நீட்டி தடுத்தவன்,

 

“ஐரா முதல்ல ப்ரோபோஸ் செய்துடுறேன்..அப்புறமா நீ பேசு…நோ டிஸ்டர்பன்ஸ்..” என்று விட்டு,

 

“ நீ அழகா இருக்க..அதனால உன்னைப் பிடிக்கும்னு வாய் கூசாம பொய் சொல்ல மாட்டேன்..” என வேண்டுமென்றே பொய் சொல்லி அவளை வெறுப்பேற்றியவன்,

 

“உன்னை எனக்கு எப்படி பிடிச்சதுன்னே தெரியலடி…ஆனால் இப்போ இந்த நிமிஷம்….நீ நான்…இந்த சூழ்னிலை எல்லாமே எனக்கு எப்பவும் வேணும்… நீ எப்பவும் எனக்கு முக்கியம் தான்..ஆனால் இப்ப என்ன சொல்ல..அந்த எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா….முக்கியமாகிட்ட…அதுவும் அன்னிக்கு  நீ அந்த பத்ரிட்ட பேச போன இருபது நிமிஷமும் நான் தவிச்ச தப்பு…” என்றவனின் முகத்தில் கலக்கம் தலைக் காட்டிப் போக,மேலும் பேசினான்.

 

“என்னால அப்படி உன்னை யார்க்கிட்டயும் தூக்கி ஈசியா கொடுத்திட முடியாதுனு புரிஞ்சது….எஸ்…ஆனால் நீ சொல்ற மாதிரி நமக்கு சண்டை வரும்…உன்னை லவ் பண்றேன்…உன்னை நல்லா பார்த்துப்பேன்னு  பொய் சொல்ல மாட்டேன்… நிறைய சண்டை போடுவேன்….உன்னை திட்டுவேன்..நீயும் என்னை பதிலுக்குத் திட்டு,அடி,….ஆனாலும் இது எல்லாம் நீ என் மனைவியா இருந்தா மட்டுமே நடக்கும்….நான் நானா….இருப்பேன் உங்கிட்ட……சண்டை போடுறது எல்லாரும் செய்றது தான்…அதுவும் நம்ம இரண்டு பேரும் சின்ன வயசுலேர்ந்து அதிக சண்டை போட்டதால இனிமே சண்டை போட தோணுமோ என்னவோ..?அப்படியே போட்டாலும் நோ ப்ராப்ளம்..என் கூட  மட்டும் இருடி…” என சொல்லி அவள் முகம் பார்க்க,

 

‘இவ்வளவு பேசுற நீ’ என்பதாய் அவள் கண்கள் ஆர்கழியாய் அகல விரிய, பதில் சொல்ல வந்தவளிடம்,

 

“என்னடா….கஞ்சப்பய..ஒத்த ரோஸ்

கூட இல்லாம ப்ரோபோஸ் செய்றான்னு நினைக்காத ஐரா…..எனக்கு சொல்லனும்னு ப்ளான்லாம் இல்ல…உன் கூட டைம் ஸ்பெண்ட் செய்ய ஆசைப்பட்டு தான்  வந்தேன்…பட் இப்போ சொல்லாம இருக்க முடியல….”

 

“அண்ட்…இப்படி நீ சாரீல…இருக்கறச்ச……அது…எப்படி சொல்ல….நல்ல காலம் அன்னிக்கு அந்த பத்ரியைப் பார்க்க போனப்ப  நீ சாரீல போகல…இனியும் எந்த பத்ரி கத்ரி வருவான்னு பார்த்துட்டு என்னால அமைதியா இருக்க முடியாது….எனக்கு ஒழுங்க ப்ரோபோஸ் செஞ்சேனா உன்னை இம்ப்ரெஸ் செய்தேனா தெரில..பட் என் மனசுல உள்ளதை உன்ட்ட சொல்லிட்டேன்…” என்றதும் அவள் அவனை முறைத்தபடியே தன் சேலை சரியாக இருக்கறதா என பார்க்க,அவன் பார்வை அவள் செயலை ஊகித்து உணர,

 

“ஹேய்..ஐ அம் ப்ர்ம் டீசண்ட் ஃபேமிலியா..” என்றான் இலகுவாய்…

 

இவள் எப்போதும் பார்க்கும் ஆசைவகை முறைப்பாய் அவனைப் பார்த்து வைத்து பேசத் துவங்க,இவனுக்குள் பரவி ஒடுகிறது ஒரு ஈரப்பரவசமும்…இத நிலையும்….பரபரப்பை மனம் பயிர் செய்ய,அகத்தின் ஆவல் விழி பேச அவள் மொழி கேட்க ஆயத்தமானான்.

 

அவள் என்ன சொல்வாள் என அலைப்பாய்வதிலேயே இவன் மனம் நிலை…

.

 

Advertisement