Advertisement

காதல் 4:

 

அதியன் அந்த இரவு நேரத்தில் ஒரு புத்தகத்தில் மூழ்கி இருக்க,ஐராவின் அறையில் விளக்கின் வெளிச்சம்..

 

என்னவென்று இவன் கவனிக்கும்போதே அவள் அறையை விட்டு வெளியேற, ‘நடுராத்திரில இந்த பேய் எங்க போகுது’ என நினைத்தபடியே வெளியே வந்தவனிடம் வசமாய் சிக்கினாள் வஞ்சியவள்.

 

இவனது கேள்வியில் ஒரு நிமிடம் திகைத்தவள் பின்னர்,

“ரியாவுக்கு உடம்பு சரியில்லையாம்..அதான் பார்க்க போறேன்..” என்றதும் ஒரு  வினாடி அவனுக்கு அதிர்வு தான்.இரவு நேரத்தில் உடல் நிலை சரியில்லை என்றால்…மிகவும் சீரியஸோ…?

 

“வாட்….இந்த நேரத்துல….என்ன செய்து அவளுக்கு..?என்னாச்சு இப்போ எப்படி இருக்கா….?” என்றான் பதட்டமாய்.

 

“ஆமா…எங்க போனான்…..அந்த சத்ரியன்…?” தங்கையின் உடல் நிலை அக்கறையும் அது சார் கவலையும் ஏற்பட்ட போதிலும் இந்த நேரத்தில் உடனில்லாமல் அவளது கணவன் எங்கே போனான் என்ற கோபமும் அதியனுக்கு எழுந்தது.

 

“அவன் தஞ்சாவூர் வரைக்கும் ஏதோ கேஸ்…விசயமா…” என சொல்லத் துவங்கியவள் ‘இவன்ட்ட எதுக்கு இதெல்லாம் சொல்லனும்….பெருசா அக்கறை வந்துட்டான்,..’ என நினைத்தவள் எதுவும் பேசாமல் மாடியில் இருந்து இறங்க,

 

“ஏய்..நில்லுடி..” என்றபடி அவள் கைப்பற்றியவன்

 

“கேட்குறேன்ல பதில் சொல்லாம போற..?” என்றவனின் பார்வையில் அனலும் தணலும்….

 

“எனக்கு ரியா தான் இப்ப முக்கியம்..உன்ட்ட பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல..” என்றபடி அவள் செல்ல பார்க்க,பிடித்திருந்த பிடியை இறுக்கியவன்,

 

“இடியட்….அவ முக்கியம் தான்..ஆனா அதுக்காக நட்ட நடு ராத்திரில இப்படி தான் யார்கிட்டயும் சொல்லாம கொள்ளாம போவியா….இன்னமும் இந்த திருட்டுத்தனம் போகலயா உன்னை விட்டு..” என அவளை குத்திக் காட்டிப் பேச

 

“போகாது டா என்ன செய்வ…” என்றாள் திமிராய்.

 

“ச்ச…..” என்றவன் அவள் கையை விட்டு சென்று அவனது கார் சாவியை எடுத்துக் கொண்டு வருவதற்குள் அவள் கீழே இறங்கி இருக்க,

 

“நில்லுடி….சொல்லிட்டே இருக்கேன் போற..” என திட்டிக்கொண்டே காரை எடுத்து அவளை உள்ளே தள்ள,

 

“என்ன பாதுகாப்புக்கு வரியா..அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை…. சாவி  கொடு நானே போயிக்கிறேன்..” என சொல்ல

 

“உன்னை..அறைஞ்சேன்னு வை….இந்த டைம்ல எதாவது மெடிகல் எமர்ஜென்சினா கூட யாராவது துணைக்குத் தேவை…..ஒழுங்கா வா…இல்ல கொன்னுடுவேன் உன்னை.” என்றபடி காரை எடுக்க,

 

“ அதான் பயமா இருக்கு….ரியாவை எதாச்சும் செஞ்சிட்டேனா..?”

ஓடி போன தங்கையை இரண்டு வருடம் கழித்தா அவன் கொல்லப்போகிறான்..?என்ன உயர்வாய் இவனை நினைக்கிறாள்..உள்ளம் எரிய….உதடு துடிக்க…..விழி சிவக்க…

 

“நான் என்ன காட்டுமிராண்டியா டி..?”

 

“காட்டுமிராண்டிய கூட பார்த்தா தெரியும்..உன்னை மாதிரி கார்ப்பரெட் கிரிமினலை தான் நம்ப முடியாது…”

 

இவள் அவனது கோபத்துக்கு குடை பிடிக்க,அவளது வார்த்தைகள் அவனை குத்தி எடுக்க,

 

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்

 

கார் நிற்க,

 

“ஷட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் அப்ப்ப்ப்…திஸ் இஸ் யுவர் லிமிட்…இதுக்கு மேல பேசின….நான் என்ன செய்வேன்னு தெரியாது ஐரா..” என விரல் நீட்டி மிரட்டியவன் மின்னல் வேகத்தில் தங்கையின் வீடு இருக்கும் ப்ளாட்டில் வண்டியை நிறுத்தினான்.

 

இப்போது ரியா தான் முக்கியம் என்பதால் ஐராவும் அதன்பின் பேசவில்லை…அவன் சரியாக வீட்டின் முன் நிறுத்த ஆச்சரியம் அடைந்தாலும்,அவள் வேகமாய் காரை விட்டு இறங்க,இவன் இறங்கவே இல்லை.அதை எல்லாம் அவள் கண்டுகொள்ளாமல் ஐரா ரியாவைப் பார்க்கப்போனாள்.

 

ஸ்டீரியங்கில் தலை சாய்த்து படுத்திருந்த அதியனுக்கோ  அலையாய் நினைவுகள் அகத்தினில் ஊர்வலம்.

 

சஸ்ரியா மாதவ் ப்ரசாத்தாய் இருந்தவள் சஸ்ரியா சத்ரியனாய் மாறியதால் தான் சகல சம்பவங்களும்.

 

சஸ்ரியா..…. அதியனின் லிட்டில் ஏஞ்சல்…அழகான சின்ன தேவதை…அதியனுக்கும் அவளுக்கும் ஆறு அகவை வேறுபாடு.அவனுக்கு தங்கை என்றால் அத்தனை இஷ்டம்…பிரியம்…எல்லாம்..இருவருக்கும் இடையில் பேச்சுகள் குறைவு என்றாலும் தங்கை மீது அவனுக்குத் தனிப்ரியம்..

 

ஆனால் அப்படியானவள் இரண்டு ஆண்டுகட்கு முன் யாரும் வேண்டாமென சத்ரியனைத் தேடிப் போனாள்.

 

காதலால்..!!

 

சத்ரியன் ஐராவதியின் நண்பன்..அதுவே அடையாளமாய்க் கொண்டவன்.ஆசிரமத்தில் வளர்ந்த யாருமற்றவன்.ஸ்பான்சரின் உதவியால் ஐராவின் பள்ளியில் படித்து ஐராவுக்கு நண்பனாவன்.சத்ரியனுக்கு ஐராவின் உறவினர்கள் எல்லாம் உறவினர்கள்…அப்படியான ஒரு பந்தம்.

 

கிட்ட தட்ட ஏழு வயது முதல் நண்பர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரியாவுக்கு மாப்பிள்ளைப் பார்க்கத் தொடங்கிய சமயம்.அவள் வீட்டை விட்டு ஓடிப்போனாள்.

 

இவளைக் காணாமல் இவன் சென்னையை சல்லடையால் சலிக்க,இவளோ கோவை போனவள் சத்ரியனின் மனைவியாய் தான் திரும்பினாள்.ரியா காதலால் தான் காணாமல் போனாள் என்பதே அவனது அன்னை கஸ்தூரி சொல்லித்தான் இவனுக்குத் தெரியும்.

 

சத்ரியனை ஐரா பார்க்கக் காரணம் அவள் ஐரா பிஜி படித்த கல்லூரியில் தான் யூஜி படித்தாள்.அப்போது யூஜி முடித்த சத்ரியன் யுபிஎஸ்சி தேர்வுக்காய்ப் படித்துக் கொண்டே பார்ட் டைம் வேலை செய்தான்.அதன் பின் சஸ்ரியா படிப்பு முடித்து சென்னை போய் விட்டாள்.

 

சத்ரியனும் ரியாவும் காதலித்தார்கள் என்றால் ஐராவுக்குத் தெரியாமலா இருக்கும்?அதுவும் ஐராவே அவளுக்கும் சத்ரியனுக்கும் எந்த வித ஒளிவும் மறைவும் இல்லையென்று பெருமையடிப்பாள்.

யாருமில்லாதவனுக்கு யாதுமாய் இருப்பவள் அவளுக்கு தெரியாத என்ன இந்த காதலும் அதனால் விளைந்த ஓடுதலும்…?

 

அதற்காக அதியன் காதலுக்கு எதிரி இல்லை.தங்கை காணாமல் போன பயம்..சின்ன பெண் அந்த சத்ரியனை நம்பி சென்றிருக்கிறாளே என்ற ஆதங்கம்..அதுவும் ஊர் உறவும் எதுவுமில்லாதவனை போய் எங்கு தேடுவதாம்..?காதலிக்கிறேன் என சொல்லி இருந்தால் இவனே திருமணம் செய்து வைத்திருப்பான்..தந்தை தாயின் முகத்தை பார்க்க பார்க்க பாரம் தாங்கவில்லை.

 

அதுவும் சத்ரியன் என்றதும் அவனது ஆத்திரம் எல்லைக் கடக்க,விமானம் ஏறி திருச்சி வந்தவன் மாமன் வீட்டுக்குள்  நுழைந்த நொடி கண்ணில் பட்ட ஐராவின் கன்னத்தில் விட்டான் பளாரென ஒரு அறை..!

 

இங்கு இவர்களுக்கு ரியா காணாமல் போன  விசயம் தெரியும் என்பதால் அதியன் வரவும் பதட்டமாய் இருக்க,அவன் ஐராவை அடிக்கவும் அனைவரும் பதறிப்போக,ராஜகோபாலன் தான் பேரனைக் கண்டித்தார்.

 

“டேய்….ஆத்துப் பொண்ணை கை நீட்டி அடிக்கிறது தப்பு அதியா…என்ன செஞ்சா அவ.?”

 

“என்ன செஞ்சாளா..?ரியா காணாமப் போனது தெரியும் தானே தாத்தா.அவ காணாம போகலா…காதல்னால ஓடி போயிருக்கா….அதுவும் இவ ப்ரண்ட் சத்ரியன்..இவனும் நம்ம ஆத்துல ஒருத்தன்னு சொல்வீங்களே அவன் கூட…”அதியன் ஆத்திரம் தாங்காது கத்தினான்.எப்போதும் இருக்கும் நிதானமெல்லாம் நீங்கி இருந்தது.நேற்றிலிருந்து தங்கை காணவில்லை என்ற பதட்டம்..அதுவும் காலையில் கஸ்தூரி அவனிடம் வந்து,

 

“அரண்…..ரியா…இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்னாடா….அது மட்டுமில்லாம ஐரா ப்ரண்ட் அந்த பையன் சத்தியை லவ் பண்றேன்னு சொன்னா…நான் தான் அவளை திட்டி..அதெல்லாம் சரி வராதுன்னு சொன்னேன்..அ…அவ..அவன் கூட ஒரு வேளை…போயிருப்பாளோடா..” என அழுது கொண்டே அவன் அன்னைக் கேட்கவும் இன்னமும் கொதித்துப் போனான்.

 

அவனது அன்னை அழுதது அவனது பாட்டியின் மறைவின் போதுதான்…அவர் பிறந்த வீட்டிலும் சரி புகுந்த வீட்டிலும் சரி மகாராணிதான்..அப்படியானவர் அழ…அதற்கு  ஐரா காரணமாய் இருக்க..ஆத்திரம் அவசரம் ஆதங்கம் அத்தனையும் அவனைத் தாக்க,அதன் விளைவுதான் அந்த அறை.

 

ஐராவோ சத்தியோடு ரியா சென்றாள் என சொல்லவும் அறை வாங்கிய அதிர்ச்சியில் இருந்தவள்,

 

“சும்மா உளறாதடா….சத்தி அப்படிப்பட்டவன் இல்ல..நீ தெளிவா விசாரி..சத்தி அப்படி எல்லாம் செய்யமாட்டான்…”

 

“வேண்டாம் ஐரா…என் பொறுமையை சோதிக்காத..” என அதியன் இன்னும் கோபமாய்ப் பேச,பெண்ணிடம் அதியன் இப்படி ஹார்ஷாய்ப் பேசவும் அதுவரை அப்பா பேசட்டும் என அமைதியாய் இருந்த விஸ்வ நாத் மகளிடம்,

 

“அம்மாடி….அவன் கேட்குறான்ல..சொல்லுடா..உனக்கு தெரியாம சத்தி எதுவும் செய்ய மாட்டான் தானே..அப்பா கேட்குறேன்ல உண்மையை சொல்லு..சத்தியும் ரியாவும் எங்கே…?” என தண்மையாய்க் கேட்க,

 

“அப்பா..எனக்குத் தெரியாதுப்பா..சத்தி கோயம்புத்தூர்ல தான் பா இருக்கான்..ஆனா ரியாவைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது…சத்தி ரியாவை லவ் பண்ணலப்பா….”

 

“ரியாவே அம்மாட்ட சொல்லிருக்கா மாமா..” என அதியன் இடையில் சொல்ல,

 

“அப்பா..எனக்கு சத்தி பத்தி தெரியும் அவன் ரியாவை லவ் பண்ணல..பண்ணல….” என நட்பின் மேல் உள்ள நம்பிக்கையினால் நங்கூரமாய் நிற்க,

 

அதியன் ,

“அப்போ உன் ப்ரண்டுக்குப் போன் போடு…அவன் கூட என் தங்கச்சி இல்லன்னு சொல்ல சொல்லுடி…” என கர்ஜிக்க

 

இவளுக்கென்ன பயம்..உடனே சத்ரியனின் எண்ணுக்கு அழைக்க,

அங்கோ சத்ரியனின் முன் நின்ற ரியா,

 

“போனை அட்டெண்ட் செஞ்சீங்கன்னா கண்டிப்பா கையை கட் செஞ்சுப்பேன்..” என கத்தியை வைத்தல்லவா அவனை மிரட்டிக் கொண்டிருந்தாள்.

 

அவனும் போலிஸ் புத்தி , யுக்தி என அனைத்தையும் யோசித்து அவளது கையில் இருந்து கத்தியை வாங்க முயல,அவன் அவ்வாறு அவளை நெருங்கும்போது கிழித்தாள்  ஒரு கொடு…

 

ரத்தம் சொட்டியது…அப்போது தான் சத்ரியனுக்கு நிலைமையின் வீபரிதமே புரிந்தது.இவன் தங்கியிருந்த போலிஸ் குவார்ட்டர்ஸ்க்குக் காலையிலேயே பெட்டியும் கையுமாய் வந்து நின்ற,சஸ்ரியாவைப் பார்த்தவன் அதிர்ந்து போக,அவள் பேச இன்னமும் அதிர்ந்தான்.

 

“நான் உங்களை லவ் பண்றேன்..என்னை இப்பவே நீங்க கல்யாணம் செஞ்சிக்கனும்..” என அவள் சொல்லவும்,

 

என்ன  இது முட்டாள்தனம் என நினைத்தவன் அவளிடம்,

 

“இங்க பாருங்க ரியா..நான் உங்க கிட்ட என்னைக்காவது அப்படி பழகியிருக்கேனா..இல்ல பார்த்து இருக்கேனா…இதெல்லாம் தப்பு…இதனால் குடும்பத்துக்குள்ள ப்ரச்சனை தான் வரும்..நான் ஐராவுக்குப் போன் செய்றேன்..நீங்க பத்திரமா வீடு போய் சேருங்க..” என அவன் அந்த நேரத்திலும் நிதானமாய் பொறுமையாய் அவளுக்கு எடுத்து  சொல்ல,அவளோ வெடித்து அழுதாள்.

 

“ஏன்..ஏன் என்னை அப்படி பார்க்கல… நீங்க என்னை ஏன் பார்க்கல… நான் அழகா இல்லையா..என்னை உங்களுக்குப் பிடிக்கலையான்னு எவ்வளவு நாள் அழுதுருப்பேன் தெரியுமா..?மூணு வருசமா என்னோட காதல..உங்க கிட்ட சொல்ல முடியாம..நான் எப்படி கஷ்டப்பட்டேன் தெரியுமா…?” என அழுத படியே அவள் சொல்ல..

 

‘வாட் மூணு வருசமாவா..?’

 

நடப்பது எதுவும் நல்லதாய்  தெரியாததால்,

‘சத்தி…உடனே ஐராகிட்ட சொல்லு..அவ உனக்கு சொலுஷன் சொல்லுவா’ ,மனம் எச்சரித்தது.

 

சத்ரியனின் உரிமை நட்பு எல்லாம் ஐராவிடம் மட்டும் தான்.மற்றபடி அவள் வீட்டு ஆட்களிடம் மரியாதை மரியாதை மட்டுமே..!!

 

அதற்காக அவன் தன் அலைப்பேசியை எடுக்க,இவளோ தன் பையில் இருந்து கத்தியை எடுத்து அவனை மிரட்டி,உடனே வலுக்கட்டாயமாக அவளிடம் இருந்து பிடுங்க முயற்சிக்க,சில அடிகள் அவனிடம் இருந்து பின்னால் போனவள் , அவன் எதிர்ப்பார்க்கா நேரம் கையை கிழித்துக் கொள்ள,

 

‘இந்த பெண் என்ன பைத்தியமா’ என்றுதான் தோன்றியது.ஆம் அவள் பைத்தியம் தான்..அதுவும் அவன் மீது…அவனைக் கண்ட முதலே அவளுக்கு காதல்..அதுவும் அவனுக்கு யாருமில்லை என்றதால் யாதுமாய் இவள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வேரூன்றி நின்றது.

 

சத்ரியன் ஐராவின் உறவு என்பதாலும் அவள் பெண் என்பதாலும் பேச்சே வைத்துக் கொள்ள  மாட்டான்.ஒரு வேளை அவன் சாதாரணமாய் பேசி பழகி இருந்தால் சஸ்ரியாவுக்கும் இப்படி காதல் வந்திருக்காதோ என்ன..?

 

அவன் விலக விலக.இவள் அவன் மேல் காதலில் விழுந்தாள்..மூன்று ஆண்டுகள் காதலை உள்ளுக்குள்ளே போட்டு அடைத்த துக்கம்,துயரம்..இப்போது வீட்டில் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்க,எப்படியோ தைரியம் எல்லாம் திரட்டி தாயிடம் சொன்னால்,அவரே ஒத்துக்கொள்ளவில்லை.அவரே முடியாது என்றபோது அவள் அப்பா மாதவ் ப்ரசாத்…ஸ்டேடஸ்….அது இது என்று பார்ப்பவர்…அவள் அண்ணன்…தாய் தந்தை சொல் தட்டாதவன்..

 

அங்கு தான் ரியா தவறி இருந்தாள்..அதியனிடம் சொல்லி இருந்தால் நிச்சயம் அவன் இதற்கு ஒத்துக் கொண்டிருப்பான்..

 

ஏதோ நேற்று இருந்த தைரியத்தில் கிளம்பி வந்துவிட்டாள்.ஆனால் இப்போதும் இந்த சத்ரியன் இவளை புரிந்து கொள்ளாமல் இருக்க,

இனி விட்டால் இவனோடு சேர்வது என்பதே நடக்காது என்பதால் பாதுகாப்புக்காய் வைத்திருந்த கத்தியால் தன் கையைப் பதம் பார்த்தாள்.

 

ஒரு மணி நேரமாய் சத்ரியனும் கெஞ்சி,மிரட்டி என எப்படியெல்லாம் பேசி பார்த்தும் ரியா அசையவில்லை.அவனுக்கு ஆயாசமாய் இருந்தது.அவன் பார்த்த வரையில் சஸ்ரியா மிகவும் அமைதியானப் பெண்.அவர்கள் வீட்டில் வாய் என்றால் ஐராவும் அனுராகாவும் தான்.

 

அதியன் கூட ஏதோ பேசுவான்..இவள் அவனிடம் பேசிய நினைவு கூட இவனுக்கு இல்லை.பாவம் இவனுக்கு என்ன தெரியும்…அவள் பேச முயற்சி செய்து….காதல்..தயக்கம்…எல்லாம் அவளுக்குத் தடையாய் இருந்தன என..அது எல்லாவற்றிற்கும் மேல் ஐரா…!

 

ஆம்..ஐரா உடன் இருக்கையில் மட்டும் தானே இவனை அவள் பார்த்திருக்கிறாள்.ஐராவை வைத்துக் கொண்டு காதலை சொல்லிவிட முடியுமா என்ன..?அதற்கு அவள் பேசாமல் அவள் மாமாவிடமே சொல்லிவிடலாம்..ஐரா அத்தனையும்

விஸ்வ நாத்திடம் மறைக்காமல் சொல்பவள் ஆயிற்றே..!!

 

மூன்று வருடக் காதல்…உள்ளடக்கி அடக்கி அதனால் விளைந்த மூச்சுத் திணறல்..இப்போது தான் தைரியம் பெற்று ரியா சொல்லி இருக்க,அனைவரும் அதனை மறுக்க,

 

காதல் இல்லையேல் சாதல்.சாதல்…என்று வாழ்வா சாவா போராட்டம் நடத்தினாள்.அப்போது தான் ஐராவை அதியன் சத்ரியனை அழைக்க சொல்ல பார்த்தால்,இவள் இன்னொரு முறை வெட்டிக் கொள்வேன் என மிரட்ட,இந்த முறை எக்குத்தப்பாய் அவள் vein ல வெட்டிக் கொண்டாள் என்ன செய்வது….என சத்ரியன் பயந்து போனான்.

 

“போனை ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்க..:இல்ல…செத்துடுவேன்..” அப்பட்டமாய் மிரட்ட,எரிச்சலும் பயமும் சத்ரியனுக்கு வர,

 

“சொன்னா புரிஞ்சிக்கோம்மா ப்ளீஸ்….ஐரா தான் கூப்டுறா…உன்னைக் காணும்னு தேடுவாங்க தானே… நீ இங்க இருக்கேனாச்சும் சொல்லிடுறேன்..” என சத்ரியன் கெஞ்சியும் பார்க்க,அவள் அழுத்தமாய் நின்றாள்.

 

பிறகென்ன பிடிவாதம் வெற்றி பெற அவள் கையோடு கொண்டு வந்திருந்த தாலியைக் கட்டி அவளை சரிபாதி ஆக்கிக் கொண்டான்.அதன் பிறகு அவன் செய்த முதல் வேலை…..யாருமே செய்திருக்க மாட்டார்கள்.

 

ஆம்..தாலி கட்டிய மறு நொடி அவள் கையில் வைத்திருந்த கத்தியைப் பிடுங்கியவன் அவள் கன்னத்தில் அறைந்தான்.

 

கோவையில் இவ்வளவும் நடந்திருக்க,திருச்சியிலோ சத்ரியன் போன் எடுக்காதபோதே அதியன் கன்பார்ம் செய்திருந்தான்.உடனே அவன் கோவையில் இருக்கும் அவனது ஆட்களை அனுப்பி சத்ரியனைத் தேட சொல்ல,அதற்குள் தான் தாலி கட்டி முடித்திருந்தானே அவன்.

 

இந்த விசயம் தெரிந்த உடன் மகளை விட்டார் ஒரு அறை விஸ்வ நாத்.அவளுக்கே அதிர்ச்சி..சத்தியா இப்படி செய்தான் என..?அதன் பிறகு சத்ரியன் சஸ்ரியாவை அழைத்துக் கொண்டு திருச்சி வர,இன்னும் இன்னும் பிரச்சனை பெரிதானது.

 

ஆனால் இதில் தவறே செய்யாமல் சிக்கியது ஐரா தான்.அவளைத் தான் எல்லாரும் குற்றவாளி போல் பாவித்தனர்.அவள் தான் என்னமோ ரியாவையும் சத்தியையும் சேர்த்து வைத்தாற்போல் பேச்சுகள்..குத்தல்கள்…..இன்னும் எதுவும் மாறவில்லை….!!

 

ஆனால் ஐராவிடம் சத்ரியன் மறைக்காது உண்மைகளை சொல்ல, நண்பனின் நிலை புரிந்தவளும் அவனை விட்டுக் கொடுக்காது எப்போதும் போலவே பழக,அதுதான் குடும்பத்தினரை இன்னும் இன்னும் ஐராவின் மீது கோபம் கொள்ள வைத்தது.ஆயிற்று இரண்டு ஆண்டுகள்..அத்தனையும் முடிந்து..

 

இப்படித்தான் தவறே செய்யாமல் ஒதுக்கி வைக்கப்படுவது சின்ராசுகளின் சாபம் போல்….  ☺

 

****************************************************************************************

ஐராவதி  போய் பார்க்க ரியா மசக்கையின் விளைவாய் வாந்தி எடுத்து வாடி போயிருந்தாள்.இவள் அவளைக் கவனித்து தேவையானதை செய்து முடித்த பின்,

 

“ஏன் ஐரா..நீ இந்த நேரத்துல இப்படி வரனும்…நானே மேனேஜ் பண்ணிப்பேன்..அதனால் தான் அவர்ட்ட கூட சொல்லல..”

 

“என்ன பண்ணிப்பேன்…தீடீர்னு மயக்கம் வந்துட்டா என்ன செய்ய….யாராவது இருந்தா பரவாயில்ல..மனசு கேட்கல..அதான் வந்துட்டேன்…”

 

“ஆமா..எப்படி வந்த..?”

 

“அது….” என்றவளுக்குக் குழப்பம் அதியனைப் பற்றி சொல்வதா வேண்டாமா என..?

 

பெரிய இவன் மாதிரி வந்தான் இப்ப கௌரவம் பார்த்துட்டு வாசல்ல நிக்கிறான்…..அவன் வந்ததை சொன்னா சந்தோசப்படுவா.. சொல்லிடுவோம்.. என நினைத்தவள்

 

“உன் நொண்ணன் தான் என்னை அழைச்சிட்டு வந்தான்..” என்றதும் சஸ்ரியாவின் கண்களில் நீர்.

 

“அ…அண்ணா.வந்துருக்காங்களா…?” என ரியா கேட்க,அவள் கண்ணில் நிறைந்த நீரைப் பார்த்தவள்,

 

“ஆமா..வெளியே நிக்கிறான்..” என்றதும் இவ்வளவு நேரம் வாடி போய் வதங்கி இருந்தவள் இப்போது குடுகுடுவென வாசலுக்கு வந்த பார்க்க,அதியனோ காரில் இருந்து இறங்கி கைகளைக் கட்டிக்கொண்டு அந்த இருள் சுமக்கும் வானை வெறித்தான்.

 

ரியா அழுகையை அடக்கி,அன்பைத் தேக்கி “அண்ணா…” என அழைக்க

 

அவன் திரும்பிப் பார்க்கவே இல்லை.இவள் முன்னால் போய் நின்று ,”அண்ணா…ப்ளீஸ்..” என அழுகையோடு சொன்னபோதும் அவன் அசையவில்லை…

 

அழுத்தமாய் நின்றான் அதியன்.ஐராவின் பார்வையோ வழக்கம்போல் அத்தானை முறைத்தன…!!.

 

காதல் கவனமாகும்..!!

Advertisement