Advertisement

 

தேடல் 7:

“சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள்

ஏனோ கோபங்கள் சொல்லடி..!”

 

அன்று  மாலை மூன்று மணியளவில் செந்திலிடம் இருந்து ஹர்ஷாவுக்கு அழைப்பு வந்தது.பரஸ்பர விசாரிப்புகளுப் பின்,

“மாப்பிள்ளை நேத்து நான் சாயங்காலமும் ரவீக்கு ட்ரை செஞ்சேன்..ஆனா அவ ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வைச்சிருந்தா…இப்ப அடிச்சாலும் எடுக்கல…அவ என் மேல கோவமா இருக்கான்னு நினைக்கிறேன்.மூத்தவ செஞ்ச வேலையில இருந்த அதிர்ச்சியில நான் இவ கிட்ட பேசல…அதனால அவ கோவம் நியாயமானதுதான்…நீங்க கொஞ்சம் அவளை கன்வின்ஸ் பண்றீங்களா மாப்பிள்ள..” என அவர் சோகமாக கேட்க

 

ஹர்ஷாவுக்கு வருத்தமாக போய் விட்டது.அவனுக்குத் தந்தை ஸ்தானத்தில் இருக்கும் மனிதர்.அவரது வருத்தமுணர்ந்தவன் ,

“நீங்க கவலை படாதீங்க மாமா…நான் அவளை பேச சொல்றேன்.” என்றான்

 

செந்திலோ , “ரொம்ப நன்றி மாப்பிள்ளை…அப்புறம் உங்க கிட்டையும் நான் மன்னிப்புக் கேட்டுக்குறேன்.பெரியவ இப்படி செய்வான்னு நான் கனவுல கூட நினைக்கல..உங்களுக்கு ஏற்பட்ட தலைகுனிவுக்கு என்னை மன்னிச்சிடுங்க..” என மனதார மன்னிப்பு வேண்ட

 

“எத்தனை தரம் மாமா கேட்பீங்க.அக்சுவலா நீங்க எனக்கு தங்கத்தை தரதா இருந்தீங்க..ஏதோ நான் அதிர்ஷ்டசாலிங்கறதால வைரமே கிடைச்சிருக்கு..நீங்க இனி இதைப் பத்தி பேசாதீங்க..” என்றான் திட்டவட்டமாக.

 

செந்திலுக்கு மாப்பிள்ளையின் பேச்சு கேட்டு உச்சிக்குளிர்ந்துப் போனது.பூமிஜாவையும் தவறாகப் பேசவில்லை.அதே நேரம் அவனது மனைவி ரவீணாவையும் விட்டுக்கொடுக்காது உயர்த்தியும் பேசி விட அவனது குணம் அவருக்கு நிம்மதியைக் கொடுத்தது.கண்டிப்பாக ரவீணாவை அவன்  நன்றாகப் பார்த்துக் கொள்வான் என்ற நிம்மதியை அவருள் விதைத்தான் ஹர்ஷாதித்யன்.

 

“சரி மாப்பிள்ளை…நீங்க இங்க வரவே இல்லை.ஒரு நாள் ரவீணாவைக் கூட்டிட்டு வரீங்களா..” என அவர் ஆசையாகக் கேட்க

 

ஹர்ஷாவும் உடனே “ஒரு  நாள் என்ன மாமா..இன்னிக்கே கூட்டிட்டு வரேன்.” என்றவன் பேசி விட்டு போனை வைத்து விட்டான்.

 

மாலையில் வழக்கம்போல் ரவீணா சீக்கிரமே வீட்டிற்குச் சென்று விட, ஹர்ஷாதித்யன் ஆறு மணி போல் வீட்டிற்குப் போனான். இடைவிடாத உழைப்பால் உடல் களைப்பாக இருந்த போதிலும் மாமனார் வீட்டிற்குச் செல்ல வேண்டியிருப்பதால் விரைவாக வீடு வந்து சேர்ந்தான்.இப்போதெல்லாம் காலையில் ரவீணாவோடு அவன் காரிலேயே சென்று விட,மாலையில் ரவீணா ஆபிஸ் பஸ்ஸில் வந்துவிடுவாள்.ஹர்ஷா அவனுக்கு வேலை இல்லாவிட்டால் ரவீணாவை அழைத்துக் கொண்டு காரிலேயே வந்துவிடுவான்.

 

அவன் வீட்டிற்குள் நுழைந்த போது சிந்து அவளது அறையில் படித்துக் கொண்டிருக்க,வைதேகியோ வெளியே சென்றிருந்தார்.

 அவனது அறைக்குள் சென்று பார்க்க,ரவீணாவோ துணிகளை மடித்துக் கொண்டிருந்தாள்.

 

“வினு….சீக்கிரம் ரெடியாகு.. உங்கம்மா வீட்டுக்குப் போறோம்?” என

 

“நான் வரல ஆதி..” என்றாள் உடனே.

 

“ப்ச்..வினு..உங்கப்பா ரொம்ப ஃபீல் பண்ணி பேசினார்.நேத்து அவர் சொல்லித்தான் உன் ப்ர்த்டேன்னே தெரியும்..நேத்தும் உனக்கு பல முறை ட்ரை பண்ணியிருக்கிறார்..நீ எடுக்கல…இப்போ நம்மளைப் பார்க்கனும்னு பிரியப்படுறாங்க..வா கொஞ்ச நேரம் போய் பார்த்துட்டு வந்துடலாம்..யூ கெட் ரெடி..” என்றபடி அவன் துண்டை தோளில் போட்டுக் கொண்டு செல்ல,

 

ரவீணாவோ அப்படியே அமர்ந்திருந்தாள்.அவன் திரும்பி வந்தபோதும் கூட அவள் அதே நிலையில் இருக்க,

“என்ன நீ..இன்னும் கிளம்பல…நான் தான் சொல்றேன்ல…” என இவன் சத்தம் போட

 

“ப்ச்…ஏன் இப்படி டார்ச்சர் செய்றீங்க ஆதி..?எனக்கு விருப்பமில்லன்னா விடுங்களேன்…”

 

“ஸ்ஸ்ஸ்ஸ்…அப்பா…ரவீணா சரி அட்லீஸ்ட் போன் செஞ்சாவது அவங்கட்ட பேசு.அதுக்குப்புறம் போறதைப் பத்தி பேசலாம்.” என அவளை சமாளிக்க முயல

 

அவளோ இருந்த நிலையில் “முடியாது” என்றபடி கீழே இறங்கிச் செல்ல முயன்றாள்.

 

“நில்லுடி” என அவன் கத்த

 

“ஷ்…என்ன தான் வேணும் உங்களுக்கு ஆதி?எனக்குப் பேச விருப்பமில்லனா ஜஸ்ட் லீவ் மீ..” என இவள் அழுத்தமாய் உரைக்க

 

“ஐ காண்ட்…என்ன தான் டி உனக்கு பிரச்சனை..?அவங்க பெரியவங்க…இப்படிதான் உன் கோபத்தைப் பிடிச்சிட்டு தொங்குவியா நீ…?ஒரு ரெண்டு நிமிஷம் பேசுறதுல என்ன நீ குறைஞ்சு போவ..வயசானவங்களுக்கு அந்த நிம்மதியைவாது கொடுடி” என கோபத்தோடு கத்தினான்.

 

“நிம்மதி…நிம்மதி….அது எனக்கே கிடைக்காத போது  நான் ஏன் மத்தவங்களுக்கு அதை தரனும்…?” என்று பெருங்குரலெடுத்து சத்தம் போட,

 

அவள்  வாயை மூடியவன் , “எதுக்குடி இப்ப கத்துற நீ..?அமைதியா பேசு..” என அதட்ட

 

“அமைதியா  நான் அமைதியாயிருந்து தான் உங்களை என் தலையில கட்டிட்டாங்க..இன்னும் எதுக்கு அமைதியா இருக்கனும்..?அவங்க ஆசைப்பட்டபடி அவங்க கௌரவத்தைக் காப்பாத்த என் சந்தோசம் நிம்மதி எல்லாத்தையும் விட்டுக்கொடுத்துட்டேனே.இதுக்கு மேல  நான் என்ன செய்யனும்…?” என அவள் உணர்ச்சி வேகத்தில் பேசினாள்.

 

ஹர்ஷா வருவதற்கு முன் , சிந்துவின் தோழி ஒருத்தி சிந்துஜாவைப் பார்க்க வந்திருந்தாள்.ரவீணாவும் வேலை முடிந்து ஹர்ஷாவுக்கு முந்தியே வீடு வந்து விட,கீழே அமர்ந்து இரவுக்குத் தேவையான காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தாள்.

 

சிந்துவின் தோழியை ரவீணா வரவேற்று சாப்பிட ஸ்னாக்ஸ் கொடுக்க ,அவளைக் கண்ட சிந்துவின் தோழி அர்ச்சனா சிந்துவிடம் இது யார் என கேட்க ,”எங்க அண்ணி” என சிந்து சொல்ல,அப்பெண் “அன்னிக்கு வாட்ஸஅப்ல வேற ஒருத்தங்க ஃபோட்டோ தானே நீ வைச்சிருந்த..உங்க அண்ணின்னு சொன்னியேடி “என கேட்டு விட

 

அது அப்படியே அச்சுப்பிசகாமல் சமையலறையில் இருந்த ரவீணாவின் காதுகளில் விழ,ஒடுங்கிப் போனாள்.

 

சிந்து உடனே சுதாரித்து தோழியைக் கூட்டிக்கொண்டு உள்ளே செல்ல,ரவீணாவும் கதவை அடைத்துவிட்டு மாடியில் உள்ள தங்கள் அறைக்குள் சென்றாள்.வைதேகியோ கோவிலுக்குப் போயிருந்தார்.

 

அறைக்குள் வந்த ரவீணாவுக்கு தானாக கண்ணீல் இருந்து நீர் வழிய தொடங்கியது.இது போன்ற பேச்சுகள் அவளுக்குப் புதிதாக இல்லை.திருமணமான இரண்டு மாதங்களில் அவளைப் பார்க்கும் தோழிகள் ,உறவினர்கள்,தெரிந்தவர்கள் எல்லாரும் கேட்டுவிட்டனர்.ஏதோ இப்போதுதான் அதையெல்லாம் மறந்துவிட்டு ஹர்ஷாவோடு அவள் வாழலாம் என முடிவு செய்துள்ளபோது மீண்டும் இப்படி ஒரு பேச்சைக் கேட்கும்போது பெண்ணின் மென்மனம் காயப்பட்டுப் போனது.

 

கேள்வி கேட்போரிடம் ,”இல்ல.பூமிக்குக் கல்யாணத்துல இஷ்டமில்லை.அதனால் எங்க கல்யாணம் நடந்துச்சு “ என்று சொல்லி முடிப்பதற்குள் பலமுறை உள்ளுக்குள் அவள் நொறுங்கிப் போவாள்.

 

‘அக்காவின் இடத்தில் இவள்’ என நினைக்கும்போதே வேதனை நெஞ்சைப் பிசைந்தது.தன் மீதே கோபமாக வந்தது.எரிச்சல்,ஆத்திரம்,கோபம்,அழுகை என வெவ்வேறு உணர்வுகளை அவள் முகம் பிரதிபலித்தது.

 

ஓடிப்போனவள் நிம்மதியாக போய் விட்டாள்.பெற்றவர்களும் அவர்களது மானம் காக்க அக்காவுக்குப் பதிலாக இவளை மணமுடித்து வைத்துவிட்டனர்.ஆனால் இவள் அல்லவோ செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிக்கிறாள்.ஹர்ஷாவின் சுடுசொற்களும் இப்படி ஊரார் பேசும் பேச்சையும் கேட்கும் நிலைக்குத் தன்னை தள்ளிய பெற்றோர்கள் மீது ஆத்திரமாக வந்தது.

 

இப்போது ஹர்ஷா இணக்கமாய் நடந்து கொண்டாலும் அவளுள் ஒரு பயம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.என்றாவது ஒரு நாள் மீண்டும் ‘அக்காவைப் போல்’ என சொல்லிவிடுவானோ என பயந்தாள்.முழுதாய் கணவன்பால் சாய மனம் முரண்டியது என்பதை விட பயம் தடை விதித்தது.

 

இரண்டு மாதங்களாகியும் சிந்துவின் தோழி கூட ஹர்ஷாவுக்கும் பூமிஜாவுக்குமான நிச்சயத்தை மறக்காத போது,ஹர்ஷா மட்டும் எப்படி முழுமனதாக மறந்திருப்பான் என நினைத்த பொழுதில் கண்ணில் மீண்டும் நீர் துளிர் விட,நெஞ்சம் விம்மியது.

 

அந்த  நினைவே நெஞ்சைத்தை அறுத்தது.தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்க வேண்டும் என்ற சுயபச்சாதபம் அவளை உலுக்கியது.ஹர்ஷாவின் கார் சத்தம் கேட்ட போதுதான் அவள் மீண்டும் நனவுக்கே வந்தாள்.வேகமாக முகம் கழுவி விட்டு துணிகளை மடிப்பது போல் இருக்க,சரியாக ஹர்ஷா உள்ளே  நுழைந்தான்.

 

வந்தவன் சும்மா இல்லாமல் மனைவியை மாமனார் மாமியாரிடம் பேச சொல்லி பெருந்தவறை செய்தான்.ஏற்கனவே மன உளைச்சலில் இருந்தவள் கணவனின் கூற்றில் ரௌத்திரம் கொண்டாள்.

 

அவளுணர்வுகளை புரிந்து கொள்ளாமல் பேசிய கணவன் மீது கட்டுகடங்காத கோபம் வர,அடக்கி வைத்திருந்த கோபங்கள் அணையை உடைத்துக் கொண்டு வெளிவர ,அத்தனையும் அவள் கொட்டினாள்.

 

ஆனால் இதை ஏதுமறியாத ஹர்ஷாவோ அவளது பிடிவாதத்திலும் அவள் கோபத்தில் சிதற விட்ட வார்த்தைகளையும் சேகரித்து அவளிடம் பதிலுக்கு எகிறத் துவங்கினான்.

 

‘உங்களை என் தலையில கட்டிட்டாங்க’ என்ற வார்த்தைகளை அவனை மிகவும் காயப்படுத்தின.அப்படி தனக்கென குறை என்று அவள் இப்படி பேசுகிறாள் என ஆத்திரமாக வந்தது.அவனுக்குப் பெண்ணின் நுண்ணிய உணர்வுகள் புரியவில்லை.அவளது இந்த கோபம் கூட அவன்பால் கொண்ட தீராத அன்பின் காரணமாகத்தான் என்று.

 

எந்த பெண்ணிற்குமே தன்னவன் நிஜத்திலும் நிழலிலும் தான் மட்டுமே இருக்க வேண்டும் என்ற பேரவா இருக்கும்.அப்படி இருக்கையில் ஹர்ஷா முழுமையாக மனைவியிடம்  தன்னைப் புரிய வைக்காமல் போனதும் ,அவனது ஆரம்பக்கால சுடுசொற்களுமே அவளது நிலைக்குக் காரணம்.

 

அவளுக்கு சரிசமமாய் அவனும் கோபம் கொண்டு கத்தினான்.

 

“என்னது தலையில கட்டினாங்களா..? ஏன் நீயும் கல்யாணம் வேண்டாம்னு உங்கக்கா மாதிரி போக வேண்டியதுதானே. நான் ஒத்த கால்ல நின்னு  நீதான் வேணும்னு தாலி கட்டின மாதிரி பேசுற.உன்னைக் கல்யாணம் பண்ணி என் நிம்மதி தான் டி போச்சு….சை….” என்றவன் கட்டிலில் சென்று அமர்ந்தான்.

 

கொஞ்சமாய்க் கோபம் குறைந்தபின் ஹர்ஷா ரவீணாவைப் பார்க்க அவளோ அவன் விட்ட வார்த்தைகளில் அழுகையில் கரைந்தாள்.கணவனுக்கு தன் மேல் இஷ்டமில்லை என தவறாக கற்பனை செய்து கொண்டாள்.

 

ஹர்ஷாவுக்குள் இருக்கும் அன்பான ஆதி அவனவளின் கண்ணீரில் விழித்துக் கொண்டான்.’ஒரு வேளை இவளுக்கு என்னைப் பிடிக்க வில்லை போல.அதனால தான் அவங்கப்பா அம்மா மேல கூட கோபமாக இருக்கா.’ என்று இவனும் சரியாக தவறாக நினைத்தான்.

 

ரவீணாவின் கோபம் ஹர்ஷாவின் மீதில்லை.மாறாக அவளது பெற்றோர் மீதுதான்.இத்தனை நாட்களாகப் பேசாத தந்தை,தாயிடம் பேச அவளுக்கு விருப்பமில்லை.தனது உணர்வுகளை ஆசைகளை மதிக்கவில்லை என அவளுக்கு அவர்கள் மீது அடங்காத கோபம் உண்டு தான்.ஆனால் அது அனைத்தும் ஹர்ஷா ரவீணாவை பிறந்த வீட்டிற்கு வா என வற்புறுத்தி அழைத்தபோதுதான் அவன் பக்கம் திரும்பியது.இருபத்திரண்டு வயதில் அவளுக்கு ஏற்பட்ட சூழ்நிலையை சமாளிக்கும் பக்குவமற்றுப் போனாள் ரவீணா.

 

ஒருவாறு தன்னை நிலைப்படுத்திக் கொண்ட ஹர்ஷா  ரவீணாவிடம் , அமைதியாக அணுகுண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டான்.

 

“இவ்வளவு கஷ்டப்பட்டு நீ எங்கூட இருக்க வேண்டியதில்லை ரவீணா.லெட்ஸ் செபரேட்.டிவோர்ஸ் வாங்கிடலாம்..நீ நிம்மதியா இரு.” என்றதுதான் போதும் ரவீணாவின் காளி அவதாரத்தைக் கண்டான் அவன்.

 

ஹர்ஷா சொன்னதைக் கேட்டு அதிர்ந்தவள்,பின்னர் ஆத்திரமாகி அவனது பனியனைப் பற்றி,

 

“உன் மனசுல என்னதான் டா  நீ நினைக்கிற…?உங்க எல்லாருக்கும் என்னைப் பார்த்தா எப்படி தெரியுது..?எல்லாமே உங்க இஷ்டம்தான் இல்லை.அவங்க என்னடாண்ணா என்னை ஒரு வார்த்தை கூட கேட்காம அவளுக்குப் பதிலா என்னைக் கட்டிவைச்சாங்க..நீ என்னடான்னா ஈசியா டிவோர்ஸ் செய்யலாம்னு சொல்ற..எனக்குன்னு மனசு இல்லையாடா..? அதில விருப்பங்கள் இருக்க கூடாதாடா..?நானும் மனுசிதானே…உங்க விருப்பத்துக்கு நான் எப்பவும் கட்டுப்படனுமில்ல.போடா..டைவர்ஸ்லாம் தர முடியாது.என் கூட சேர்ந்து நீயும் கஷ்டப்படு” என்றவள் கதறியழ,

 

அவளது அழுகையும் ஆத்திரமும் அவளது அன்பை உணர்த்த

ஹர்ஷா அவளை மென்மையாக அணைத்துக் கொண்டான்.ஆனால் அவனது செல்ல ராட்சஷியோ,

“விடு…விடுங்க என்னை..” என திமிறி அவனிடமிருந்து விலகி,

 

கண்களைத் துடைத்துக் கொண்டு ஆழ மூச்செடுத்தவள் , “சாரி.உங்களுக்கு எங்கூட வாழ விருப்பமில்ல  இல்லையா..?அதுக்குப்புறமும் ஏன் நாம இப்படி கஷ்டப்படனும்? நீங்க பூமிஜாவைக் கல்யாணம் செய்யத்தானே சம்மதிச்சீங்க.உண்மையில என்னை தானே உங்க தலையில கட்டிவைச்சிட்டாங்க.இனி அந்த கஷ்டம் உங்களுக்கு வேண்டாம்.உங்க விருப்பப்படியே நாம பிரிஞ்சிடலாம்ங்க” என்றவள் சாதாரணமாக மீண்டும் துணிகளை எடுத்து மடிக்கத் தொடங்கினாள்.அவளது முகமோ அத்துனை வெறுமையாக இருந்தது.

 

ஹர்ஷாவுக்குத்தான்  என்ன செய்வதென புரியவில்லை.அவள் இப்போதைக்குத் தன் பேச்சைக் கேட்க மாட்டாள் என உணர்ந்தவன் சிறிது நேரம் வெளியே சென்று வரலாம் என முடிவு செய்தான்.அதனால் கீழிறிங்கி வந்தவன் தாயிடம்

 

“அம்மா…முரளியைப் பார்க்கப் போறேன்.நீங்க சாப்பிட்டு தூங்கிடுங்க.எனக்காக வெயிட் பண்ண வேண்டாம்.நானே வந்து சாப்பாடு எடுத்துப் போட்டிக்கிறேன்”என்று சொல்லிவிட்டு சென்றான்.

 

இரவு மீண்டும் வீடு திரும்பியவன் சாப்பிட்டுவிட்டு மாடியேறப் போக,சிந்து ஹர்ஷாவை அழைத்தாள்.

 

“என்னடா சிந்துமா..?இன்னும் தூங்கல?எக்சாமாடா?”

 

“இல்லண்ணா..உன்ட்ட பேச தான் வெயிட் பண்ணேன்”

 

“என்கிட்டயா.?என்னடா சொல்லு சிந்து”

 

“அது வந்துண்ணா…இன்னிக்கு என் ப்ர்ண்ட் அர்ச்சனா வந்தா வீட்டுக்கு.ரொம்ப க்ளோஸ் இல்ல..க்ளாஸ்மேட் தான்.அவ ரொம்ப நாளா டைபாய்ட்னு காலேஜ் வரல.நம்ம ஏரியா தான் சோ எங்கிட்ட வந்து நோட்ஸ் வாங்க வந்தாள்.இங்க அண்ணியைப் பார்த்துட்டு  நான் அவங்க அக்கா ஃபோட்டோவை உன் நிச்சயம் முன்னாடி என் ப்ர்ண்ட்ஸ்ட்ட  காட்ட எங்க குருப்ல போட்டிருந்தேன்.அதை அவ சொல்ல,நான் உடனே அவளை ரூம்குள்ள அழைச்சிட்டுப் போய்ட்டேன்.ஆனா அண்ணி அதுக்குப்புறம் மேல போனவங்க கீழ வரவே இல்லண்ணா.சாப்பிட அம்மா கூப்பிட்டப்போ டயர்டா இருக்குன்னு சொல்லிட்டாங்க.அம்மா கிட்ட சொல்ல பயமா இருந்துச்சு.அதனால் தான் உங்கிட்ட சொல்றேண்ணா.அண்ணி அப்செட் ஆகிட்டாங்கன்னு நினைக்கிறேன்.நீ சமாதானம் பண்ணிடுண்ணா.சாரிண்ணா” என சிந்துஜா மன்னிப்பை வேண்ட

 

அவள் தலையை வருடி “ஓ…சரிடா.. நான் பார்த்துக்கிறேன்.நீ கவலைப்படாதே.அம்மா கிட்ட சொல்லாத.நீ போய் எதையும்   நினைக்காம தூங்கு” என்று தங்கையை சமாதானம் செய்து அனுப்பியவன் மனதோ,

 

‘சமாதானம் பண்ண வேண்டிய சீன்ல இப்படி அவளை சீண்டி விட்டு சண்டை போட்டியே ஹர்ஷா’ என சொல்ல,வேகமாக தன் மனைவியை சமாதானம் செய்ய சென்றான்.ஆனால் அவளோ ஆழ்ந்த சயனத்தில் இருந்தாள்.

அதைக் கண்டு ‘இன்னைக்கு மொத்தமா சொதப்பிடுச்சு.நாளைக்காவது எல்லாத்தையும் சரி செய்யனும்’ என்று நினைத்தவன் மனைவியை அணைத்தாவாறே உறங்க,அவளும் இயல்பாய் அவனுடன் ஒட்டிக் கொண்டாள்.

 

அடுத்த நாள் இருவரும் ஆபிஸுக்குக் கிளம்ப,அவளோ அவனுக்கு முன்பே வீட்டை விட்டு நடக்க ஆரம்பித்தாள்.உடனே அவளைப் பின்பற்றி சென்றவன்,

 

“ஏன் வினு….நடந்து போற. நான் தான் காரை எடுக்கிறேன்ல..”

 

“பிரியனும்னு முடிவு செஞ்ச பின்னாடி எதுக்கு இதெல்லாம்.எப்படியும் எல்லாரும் ஒரு  நாள் தனியாதானே போகனும்” என சித்தாந்தம் பேசியவளைக் கண்டவன்

 

“அந்த ஒரு நாள் அப்போ போகலாம்.இப்போ எங்கூட வா.”என இழுத்துச் சென்று காரில் தள்ளினான்.

 

அலுவலகம் செல்லும் வரை அவனும் அவளும் பேசிக்கொள்ளவே இல்லை.அலுவலகத்தில் அன்று ஹர்ஷாவுக்கு வேலைகள் அதிகமாய் இருக்க,

 

ரவீணாவிடம் வந்தவன் ,”வினு.நீ ஈவினிங் பஸ்ல போயிடுடா..பட் நைட் தூங்காம வெயிட் பண்ணு ப்ளீஸ்..நிறையா பேசனும்.” என்றான்.

 

இரவில் வீடு வந்தவனுக்கு மனம் ஒரு புறம் உற்சாகத்தில் குத்தாட்டம் போட,மறுமனமோ மனைவியை விட்டு போவதில் சுணங்கியது.

 

தாயிடம் வந்தவன் தொப்பென்று அவர் காலில் விழ,அவரை ஆசிர்வதித்தவர்,

“என்னடா..தீடீர்னு..என்னாச்சு..?” என விசாரிக்க

 

“அம்மா..எனக்கு ஆன்சைட் போக வாய்ப்பு வந்திருக்கு.வித் ப்ர்மோஷன்மா.ப்ராஜெக்ட் மேனேஜராகிட்டேன் நான்.” என்றான் மகிழ்ச்சியாக.

 

சிந்து , “வாவ் சூப்பர்ணா…கங்கிராட்ஸ்” என வாழ்த்து சொல்ல

 

வைதேகி ,”ரொம்ப சந்தோசமா இருக்குடா..எல்லாம் என் மருமக வந்த நேரம்.நல்லபடியா இருடா” என வாழ்த்த

 

“ஆமா ஆமா எல்லாம் என் பொண்டாட்டி ராசிதான்” என ஒத்துக்கொண்டவன்,

 

“எங்கம்மா ரவீணா?” என கேட்க

 

“மாடியில தான் துணி எடுக்கப் போயிருக்காள்டா” என்றார்.

 

“ஓ..சரிமா..நான் போய் சொல்லிடுறேன்”

 

“சரிடா முதல்ல போய் அவகிட்ட சொல்லு.எப்போ அமெரிக்கா போகனும்?”

 

“ நாளைக்கே போகனுமா..நாளைக்கு மிட் நைட் மூணு மணிக்கு ஃபளைட்மா”

 

“என்னடா அதுக்குள்ளயா?”

 

“அதான்மா யோசிச்சேன்.ஆனா வேற வழியில்ல.முக்கியமான ப்ராஜக்ட்.அதனால் நான் கண்டிப்பாக போயே ஆகனும்.”

 

“எத்தனை நாள்டா?”

 

“ஆறேழு மாசம்னு சொல்லியிருக்காங்கமா”

 

“என்னடா இத்தனை மாசமா?” என வைதேகி கவலைக் கொள்ள

 

“அதுதான் எனக்கும் யோசனைம்மா..நீங்க மூணு பேரும் தனியா இருப்பீங்கன்னு.ஆனா யூ.எஸ் போனா நல்ல ஆஃபர் மிஸ் பண்ண மனசு வரல.நம்ம சிந்துவுக்கும் கல்யாணத்துக்கு நல்லா செய்யலாம்” என்றான் பொறுப்பாய்.

 

“சரிடா..நல்லபடியா போய்ட்டு வா.நான் உனக்குத் தேவையானதை எடுத்து வைக்க ஏற்பாடு செய்றேன்” என்றபடியே அவர் போக,ஹர்ஷா வேகமாகப் படிகளில் தாவி மொட்டை மாடியை அடைந்தான்.சத்தம் செய்யாமல் ரவீணாவின் பின்னால் போய் நிற்க,துணிகளைக் கைகளில் அள்ளிக் கொண்டு திரும்பியவள் , இதயம் ஒரு  நொடி நின்று மீண்டது பயத்தில்.

 

அவளைப் பற்றியவன் “ஹே..!வினுக்குட்டி.நான் தான் ரிலாக்ஸ்” என சொல்ல,அப்போதும் தீடீரென்று அவன் வந்து நின்ற அதிர்ச்சியில் மூச்சு வாங்கியது.

 

“ஆ..அது..வந்து பயந்துட்டேன் ஆதி..” என்றாள் ரவீணா தடுமாற்றத்தோடு.

 

“உங்கிட்ட ஒரு ஹாப்பி நியூஸ் சொல்ல வந்திருக்கேன்”

 

 ஹர்ஷா உற்சாகத் துள்ளலோடு மனைவியிடம் விசயத்தைக் கூற,அவளும் மனதார தன் வாழ்த்தைத் தெரிவித்தாள்.

 

அதன்பின் கொஞ்சம் தயக்கத்தோடு , அவள் கையைப் பற்றி ,

“வினுக்குட்டி.ப்ளீஸ்டா  நேத்து சிந்து ப்ர்ண்டு வந்த விசயம் எனக்குத் தெரியாதுடா..உங்கப்பா ரொம்ப ஃபீல் பண்ணி பேசினாரா.அதான் எனக்குக் கஷ்டமா போச்சு.ஏற்கனவே உங்கக்கா”என்றவன் அவளது முகமாறுதலைக் கண்டு

 

“அவ செஞ்ச வேலையால ரொம்ப மனசொடிஞ்சுப் போயிட்டாங்க.இதுல நீயும் அவாய்ட் செஞ்சா அவங்க வருத்துப்படுவாங்கன்னு தான் நான் உன்னை அவங்க கிட்ட பேச சொன்னேன்.உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் வினு.ரொம்ப ரொம்ப…..ஐ அம் ரியலி லக்கி டூ ஹேவ் யூ டா…” என்று அவன் காதலாகப் பேச அவளோ கல் போன்ற முகத்தோடு இறுகியிருந்தாள்.

 

அவளைக் கைவளைவுக்குள் கொண்டு வந்தவன்,

“இன்னும் ஆறு மாசம் உன்னைப் பிரிந்து இருக்கனும் நான்.இப்படியே உன்னை விட்டுப் போக மனசில்லடி.ப்ளீஸ் எல்லா தப்புக்கும் சாரிமா.நாம நம்ம லைஃபை சந்தோசமா ஸ்டார்ட் பண்ணனும்னு நான் நினைக்கிறேன். நான் முன்னாடி உன்னை பேசினது கூட அப்போ இருந்த கோபம் தான்.அதுவும் உன் மேல இல்லை.எனக்கு ஏற்பட்ட அவமானத்தை நினைச்சு தான்.உன்னை நான் என்னைக்குமே வெறுக்கலடா..நீ சொல்லு..உன் மனசுல இருக்கறதையெல்லாம் சொல்லும்மா..இனியும் மனசுல வைச்சு நீ கஷ்டப்படாத” என வாஞ்சையாக சொல்ல

 

அவளோ அவனிடமிருந்து விலகி ,

“ நான் என்ன தப்பு செஞ்சேன் ஆதி? அப்பா அம்மா எங்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்காம கல்யாணம் செய்து வைச்சாங்க.சரி நம்ம குடும்ப மானத்தை நாம காப்பாத்தனும்னு நானும் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்.ஆனா நீங்க முதல் நாள் பேசின பேச்சு…அதையெல்லாம் எப்படி மறக்கிறது.அது எப்படி அவ செஞ்ச தப்புக்கு நீங்க என்னைத் தண்டிப்பீங்க..? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிசமும் நீங்க எங்க உங்கக்கா மாதிரின்னு சொல்லிடுவீங்களோன்னு பயந்து பயந்து தான் நான் வாழறேன் தெரியுமா?” என்றவள் இதழ் பேச விழியும் தான் அறிந்த மொழியான கண்ணீரில் பேசியது.

 

அவனும் அவளைத் தடுக்காது பேச விட்டான்.அவள் மனதில் எதையும் வைத்து மறுகுவதை அவன் விரும்பவில்லை.

 

“நேத்து சிந்து ப்ரண்டு கேட்ட மாதிரி என்னை எத்தனை பேர் இந்த இரண்டு மாசத்துல கேட்டுட்டாங்க தெரியுமா..? அப்போ எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்.ஆனா நீங்க அதை எதையும் யோசிக்காம எப்போ பார்த்தாலும் உங்கக்கா மாதிரினு சொல்றப்போ அப்படி வலிக்கும் எனக்கு.எங்கம்மாவும் எப்பவும் மாப்பிள்ளை கூட நல்லா வாழு.அக்கா மாதிரி கெட்ட பெயர் வாங்கித் தராதன்னு சொல்றாங்களே ஒழிய எங்கிட்ட அன்பா ஒரு வார்த்தைப் பேசறதில்லை.”

 

“என்ன சொன்னீங்க எங்கப்பாவுக்குக் கஷ்டமா..?என்னை விட யாருக்கு அப்படி பெரிய கஷ்டம்னு சொல்லுங்க.உங்களுக்காவது அன்னிக்குக் கல்யாணம்னு தெரியும்.அது நடக்காம போனதா உங்களுக்கு பெரிய அவமானமா போயிருக்கும்.ஆனா எனக்கு கல்யாணம் நான் அன்னிக்கு கனவுல கூட நினைக்காத விசயம்.ஆனாலும் இதான் வாழ்க்கைன்னு நானே என்னை தேத்திக்கிட்டு  வாழ நினைக்கும்போது நீங்க ஒவ்வொரு தடவையும் உங்க வார்த்தையால என்னைக் குத்திக் காயப்படுத்திறீங்க ஆதி.நேத்து மொத்தமா என்னை வேண்டாம்னு சொல்லிட்டீங்களே அப்புறம் இப்போ மட்டும் என்ன?” என்று கேட்டவளை இறுக அணைத்துக் கொண்டவன் அக்கணம் அவளது மனதை அறிந்து கொண்டான்.

 

“நேத்துப் பேசினது தப்பு தான் ரொம்ப தப்பு சாரி.ஆனா இனிமே அப்படி பேசவே மாட்டேன்.ப்ராமிஸ்.எங்க அம்மா மேல சத்தியமா நான் அப்படியெல்லாம் பேச மாட்டேன்.சாரிடா..” என அவன் மனதார உரைத்து அவள் கழுத்தில் முகம் புதைத்தான்.

 

அவளோ விடுங்க என போராட அவன் விட்டால் தானே.ஒரு கட்டத்தில் கடுப்பானவள் , “போடா” என்று விட

 

“போகத்தான் போறேன் புஜ்ஜி.நாளைக்கு யூஎஸ் போகனும்.அது வரைக்கும் தாங்கனும்ல…” என்றபடியே அவளது கன்னத்தில் நச்சென்று இதழ் பதிக்க,

 

“ஹே..!! திஸ் இஸ் டூ மச்..” என அவள் கன்னத்தைத் துடைக்க,

 

“ஹா ஹா..இதுவே டூ மச்சா…திஸ் இஸ் டூ பேட் புஜ்ஜுக்குட்டி.இப்படியா நான் கிஸ் பண்ணா துடைப்ப.” என்றவன் வேண்டுமென்றே அவள் துடைக்க இடம் கொடுக்காதபடி வேகமாக முகமெங்கும் இதழ் பதிக்க,

 

“அய்யே…” என முகம் சுருக்கியவள் அவன் சட்டையில் முகத்தைத் துடைத்துக் கொண்டே,

 

“போடா…லூசு…ராஸ்கல்..யூ…யூ…உன்னை..நீதான் டைவர்ஸ் கேட்டியே..தரேன் வாங்கிக்கோ…உன் கூட நான் வாழ மாட்டேன்” என கோபமாக உரைக்க

 

“ஹா ஹா….நீ என்ன கேட்டாலும் தருவேன்..டைவர்ஸா இருந்தாலும்னு சொல்ல நான் என்ன மௌனராகம் மோகனா இல்ல ராஜா ராணி ஆர்யா வா…நான் ஹர்ஷா புஜ்ஜு…வெரி வெரி பேட் பாய்.டைவர்செல்லாம் தர முடியாது..என் கூட இருந்து கஷ்டப்படு நீயும்” என்றான் குறும்புப் புன்னகையுடன் அவளைப் போலவே.

 

அதில் கடுப்பானவன் “உன் இஷ்டத்துக்கு ஆடனும்னு நினைப்பியா..போ..” என்றபடி அவள் கீழிறங்கி சென்று விட்டாள்.இரவிலும் அவனுக்குப் பேக்கிங் வேலைகள் இருந்ததால் அவளை சீண்டவில்லை.ஆனால் மனமோ அவள் மனதில் தன் மீது விருப்பம் இருக்கிறது.ஆனால் அதை தடுக்க முள்வேலியாக சில மன குழப்பங்கள் இருக்கிறதென்பதை உணர்ந்து கொண்டான்.

 

தான் தேடிய காதலை இனி அவளிடத்தும் கடத்த முடிவு செய்தான் ஹர்ஷா.

 

மறு நாள் பெண்கள் மூவரும் தனியே விமான நிலையம் வர வேண்டாம் என நினைத்தவன் நண்பன் முரளியை மட்டும் வர சொன்னான்.

வீட்டை விட்டு கிளம்பும் முன் மனைவியிடம் சென்றவன் ,

“ஐ வில் மிஸ் யூ வினுக்குட்டி.அம்மாவையும் சிந்துவையும் பார்த்துக்கோ…நீயும் உன்னைப் பார்த்துக்கோ..தேவையில்லாம ரொம்ப யோசிக்காத..ஆறு மாசம் எப்படி தனியா இருக்கப் போறேன்னு தெரியல.ஆனா வேற வழியில்லடா.டேக் கேர்” என்று சொல்ல அவளோ அமைதியாக நின்றாள்.

 

அவனோடு சேர எண்ணம் இல்லாத போதும் அவனது பிரிவை அவள் விரும்பவில்லை.பேசினால் வெளிப்படுத்தி விடுவோம் என அவள் ஊமையாக இருக்க,ஹர்ஷாவோ தாங்கவியலாது ரவீணாவை இறுக்கி அணைத்தான்.அவனது அணைப்பில் அவளுக்குக் கண்ணீர் வர,அதை மென்மையாகத் துடைத்தவன்

 

“அழக்கூடாது புஜ்ஜுமா…நான் சீக்கிரம் வந்துடுவேன்” என்றவன் அவளது கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பதித்தான்.அவளோ வழக்கம்போல் துடைக்க,

 

 ஹர்ஷாவோ மனைவியைப் பார்த்து குறும்போடு , “நான் திரும்பி வந்து தர கிஸ்சையெல்லாம் உன்னால துடைக்கவே முடியாதுடி..” என்றபடி புன்னகைக்க,அவளோ அவனை திட்ட நினைத்தாள்.எப்போதும் மற்றவர்களின் கைப்பாவையாக இருந்து மங்கையவளின் மனம் கனத்துப் போயிருந்தது.ஆனால் வெளி நாடு போகிறவனை மனம் வருந்த செய்ய கூடாது என்பதால் அமைதியாக இருந்தாள்.

 

 ஹர்ஷாவின் மனமோ அவனுணர்ந்த காதலை மனைவியிடத்தில்  தேடியபடி அவனோடு அமெரிக்கா பறந்தது.

Advertisement