Advertisement

தேடல் 4:

 

‘நெஞ்சுக்குள்ளே கத்தி வீசிப் போகிறான்..’

 

ஹர்ஷா சொன்னது காதில் விழ , துடித்துப் போய் கீழிறிருந்து எழுந்தாள் ரவீணா.முகமெல்லாம் வாடி , கண்கள் கலங்கி ,

 

“நான் ஒன்னும் அவளை மாதிரி இல்ல….” என அவள் பட்டென சொல்ல

 

“ஆமா நீ அவளை மாதிரி இல்ல..குனிஞ்ச தலை நிமிராத அவளே அப்படின்னா….மேடம் பத்தி எனக்கு சொல்லித் தெரியனுமா…என்ன?” என்றான் எள்ளலாக.

 

எவ்வளவு தான் முயன்றும் அழுகையை அடக்க முடியவில்லை.அவனது குத்தல் பேச்சு நெஞ்சை குத்திக் கூறு போட்டது.இது நாள் வரை இது போன்ற பேச்சுகளை அவள் கேட்க நேர்ந்ததே இல்லை.அதனால் அவளது பூமனம் வார்த்தைகளின் வெம்மைத் தாங்காது காய்ந்த சருகானது.

 

ஆனால் அதே சமயம் தவறே செய்யாமல் அவன் சுமத்தும் அபாண்டமான குற்றங்களை அப்படியே விட முடியவில்லை.கோபம் வர

 

“நான் என்ன செஞ்சேன்னு இப்படி பேசுறீங்க நீங்க…?..நான் ஒன்னு பூமி மாதிரி கிடையாது….அதை எப்படி புரூவ் பண்றதுன்னு எனக்குத் தெரில..ஆனால் அதே சமயம் எனக்கு புரூவ் செய்யனும்னு அவசியமும் இல்லை…. நம்பிக்கையெல்லாம் தானா வரனும்…உங்க மனைவியா நான் உங்க பேருக்கு எந்த களங்கமும் என்னால வர விட மாட்டேன்..” என்றாள் நிமிர்ந்த பார்வையோடு.

 

உண்மையை சொல்ல என்ன பயம்..? அத்துடன் விடாது,

 

“இன்னிக்கு சிட்டிவேஷன்ல ரெண்டு பேருக்குமே மனஸ்தாபம்..மன உளைச்சல் தான்….நீங்க காலம்பரலேந்து என்ட்ட ஒரு வார்த்தை பேசல..அப்படி இருக்கப்போ நான் எப்படி உரிமையாய் உங்க பக்கத்தில படுக்க முடியும்…?” என கேட்க

 

அவள் எதிர்பாரா வண்ணம் ,அவள் கையைப் பிடித்து இழுக்க,

அவனுக்குப் பக்கத்தில் மெத்தையில் விழுந்தாள் அவள்.

 

அவள் கையைப் பிடித்து முகத்தை அவளுக்கருகில் கொண்டு செல்ல, அவளுக்கோ இது வரை இருந்த துணிவெல்லாம் துணி கொண்டு துடைத்தாற் போல் காணாமல் போனது.

 

பார்த்த படங்கள் படித்த கதைகள் எல்லாம் மனதில் தோன்றி அவளுக்குப் பயத்தைத் தோற்றுவிக்க ,அதை அவளது மருண்ட பார்வை அவனுக்கு உணர்த்தியது.ரவீணாவின் முகம் தான் உணர்ச்சிகளைத் துல்லியமாகப் பிரதிபலித்ததே.அரும்பாடுபட்டு அவள் மனதை படிக்கத் தேவையில்லை.பளிங்கு போன்ற முகமே பாவையின் மனதைக் காட்டிக் கொடுத்து விடுமே..!!

 

ரவீணாவின் பேச்சைக் கேட்டு ஹர்ஷாதித்யனுக்குமே வேதனையாகத்தான் இருந்தது.ரவீணா எப்படி இது போன்ற பேச்சுக்களைக் கேட்டதில்லையோ அது போல் அவனும் இது போல் யாரையும் மனம் நோகப் பேசியதில்லை.ஆனால் காயப்பட்ட உள்ளம் அந்த வலியைத் தீர்க்க முனைய , அதை அப்படியே ரவீணாவின் காட்டினான்.

 

இப்போது அவள் முகம் பார்த்து அவளது மனம் படித்தவன் ,

 

“எதுக்கு இப்படி என்னை வில்லன் ரேஞ்சுக்கு இமேஜின் பண்ற….நான் ஒன்னும் அவ்வளவு மோசமானவன் கிடையாது…எனக்கும் ஒரு தங்கச்சி இருக்கா…..உன்ட்ட நான் இப்படி தப்பாவெல்லாம் நடக்க மாட்டேன்….அப்புறம் கேட்டியே ஏன் பேசுறேன்னு…இவ்வளவு பெரிய பெட்ல உனக்கு நான் இடம் தர மாட்டேன்னு சொன்னேனா…கீழ படுக்க போற….நீ மட்டும் காலையிலிருந்து என்ட்ட பேசினியா என்ன…? வந்துட்டா என்னை குறை சொல்ல…..வீட்டா என்னை அரக்கனா காட்டுவா போல..படுடி….” என்றவன் அவள் கையை விட்டு விட்டு திரும்பிப் படுத்து உறங்கிப்  போனான்.

 

ரவீணாவுக்கு மனம் ஒரு வகையில் சமாதானம் ஆனது.அப்போ அவ்வளவு கெட்டவன் இல்லை..ஜெண்டில் மேன் தான் என்று சான்றிதழ் வழங்கியது.

 

ஆனால் அதே நேரம் எதிர்காலம் பற்றிய பயம் பிடித்துக் கொண்டது.இப்படியே அவன் பேசினால் தன்னால் தாங்க முடியுமா..?

 

செய்கையால் குத்திக் கிழிக்காமல் இப்படி வாயாலயே மனம் நோக வைத்தாள் என்ன செய்வது என்று வருந்தினாள்.

 

புரண்டு படுக்கையில் புதிதாய் இருந்த தாலி உறுத்த , தாலியைக் கையில் ஏந்தியவளின் மனதில் பூமிஜாவின் நினைவு  வந்து போனது.ஒரு பருக்கை சோற்றிலேயே ஒருவரின் பெயர் எழுதியிருக்கும் எனும் போது இந்த தாலியில் அவள் பெயர்தான் எழுதியிருக்கும்போல்.

 

பூமிஜா ஏன் இப்படி செய்ய வேண்டும்..? இப்படி மொத்தக் குடும்பத்தையும் அவமதிக்க வேண்டும்…? முன்பே வேண்டாம் என்று சொல்லியிருந்தால் ஹர்ஷாவின் குடும்பமாவது நிம்மதியாக இருந்திருக்குமே..அவர்களுக்கும் இது எவ்வளவு பெரிய அவமானம்..தீராத மன உளைச்சல்..அவளால் இப்படி இவள் மாட்டிக் கொண்டிருக்க நேர்ந்திருக்காதே….!

 

நேற்று இரவு வரை ஏன் இன்று காலை வரை அவளுக்குத் திருமணம் நடக்கும் என எதிர்ப்பார்த்திருப்பாளா என்ன..?ஆனால் எதிர்பாரா நிகழ்வுகள் எதிர்பாரா நேரத்தில் நடந்து எதிர்ப்பார்ப்பை எதிர்த்து அதை உடைப்பது தானே வாழ்க்கை..!

 

எப்படியெல்லாம் கணவன் அமைய வேண்டும் என ஆசை கொண்டிருப்பாள் அவள்..?ஆனால் இன்றோ அவளது அக்காவுக்குப் பார்த்தவன் அவளது கணவன்….நினைக்கும்போது கண்ணில் தாரை தாரையாகத் தேங்கியிருந்த  நீர் கன்னத்தை நனைத்தது.

 

தான் என்ன தவறு செய்தோம்..?அவளுக்குப் பதில் இவள் என சொல்ல இது என்ன விளையாட்டா..? வாழ்க்கை அல்லவா…? தவறே செய்யாமல் ஹர்ஷா எப்படி  இந்த பந்தத்தில் மாட்டிக் கொண்டானோ அதே போல் அவளும் எந்த தவறும் செய்யவில்லையே…!அவளிடம் விருப்பம் கூட கேட்கவில்லையே…!

 

திருமணத்துக்குப் பார்த்த போது பூமிஜாவிடம் எத்தனை முறை பிடித்திருக்கா என்று கேட்டிருப்பார்கள்..? இவளுக்கும் மனம் உண்டு.அதில் கனவுகளும் கற்பனைகளும் உண்டு என ஏன் யாரும் யோசிக்கவில்லை.

 

உடைந்த போன பொருட்களுக்கு ஈடாய் வேறு பொருளைக் கொடுப்பது போல் ஓடி போனவளுக்குப் பதிலாய் இவளை கொடுத்து விட்டார்கள் என நினைக்கையில் விம்மல் இன்னும் அதிகமாக எழுந்து குளியறைக்குள் புகுந்து கொண்டு ஓவென அழுதாள்.

 

என்ன தான் முயன்றும் மனதில் வலி வேதனையை மறைத்து வைக்க முடியவில்லை.காலையிலிருந்து நடந்தவற்றுக்கு அழுதவள் இப்போது கணவனின் தீச்சொற்களால் அவள் மனதில் எதிர்காலம் பற்றிய அச்சம் ஆட்கொள்ள மேலும் அழுதாள்.

 

உயிர் கொடுத்தவர்களே மனதை புரிந்து கொள்ளவில்லை எனும்போது உறவானவன் எப்படி புரிந்து கொள்ளபோகிறான்? என்றவளுக்கு ஆயாசமாக இருந்தது.பெற்றோர்கள் எப்படி அக்காவுக்குப் பதில் இவளை மணப்பெண் ஆக்கினார்களோ அது போல் இவனும் அவளது அக்காவின் மீதுள்ள கடுப்பை தன் மேல் காட்டுகிறான் என புரிந்தது.

 

ஆனால் தன் மீது துளி கூட தவறில்லாத பட்சத்தில் தான் ஏன் சிலுவை சுமக்க வேண்டும் என்ற கேள்வியும் பிறந்தது.ஒரு வழியாக அழுகை ஓய்ந்து இவள் முகம் கழுவி வெளியே வரும்போது பொழுது விடிந்திருந்தது,ஐந்து மணி ஆகியிருக்க இதற்கு மேல் தூங்கினால் எழ மாட்டோம் என்றெண்ணியவள் ஹாலில் போய் அமர்ந்து கொண்டாள்.அழுத பின்னர் மனம் கொஞ்சம் தெளிவாய் இருக்க ,வைதேகி சொன்னது நினைவுக்கு  வந்தது. கணவனுக்காக கணவனின் இடத்தில் இருந்து யோசிக்கத் தொடங்கினாள்.அவனுள்ளத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும் என உறுதி எடுத்துக்கொண்டாள்.

 

வைதேகி ஐந்தரைக்கே எழுந்து வந்தவர் இவளைக் கண்டு விட்டு ,

“அட ரவீமா சீக்கிரமே எழுந்திட்ட….வா…உனக்கு காபி வேணுமா..இல்ல பூஸ்ட் ஹார்லிக்ஸ் ..என்ன குடிப்ப நீ….?” என கேட்க

 

“நான் பூஸ்ட் குடிப்பேன் அத்த…நீங்க எல்லாம் எங்க இருக்குன்னு சொன்னா நானே கலக்கிப்பேன்..நீங்க என்ன குடிப்பீங்க..?” என இவள் பொறுப்பாய்க் கேட்க

 

“ரவீமா..அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்..உனக்கு பூஸ்ட் தவிர எதுவும் போட தெரியாதுன்னு நீயே சொல்லியிருக்கியே…போக போக கத்துக்கலாம்மா….” என்றவரின் பேச்சில் அவளுக்குமே சிறு புன்னகை பூத்தது.

 

மனதில் அரித்த கேள்வியை தடுக்க வழியில்லாது அவள் தவித்துக் கொண்டிருக்க ,

 

“என்னடா..ஏதோ குழப்பமா இருக்க…ஹர்ஷா உன்னை எதாவது சொன்னானா என்ன..?சொல்லுடா…” என கேட்க

 

தீடீரென இவர் எப்படி கண்டுபிடித்தார் என்ற பாவம் முகத்தில் வந்து போனது.ஒருவழியாக சுதாரித்து ,

 

“அதெல்லாம் இல்லத்த..அவர் என்ட்ட பேசவே இல்ல..அவர் வந்ததே எனக்குத் தெரியாது…இப்ப அவரும் தூங்கிட்டு இருக்கார்…” என்றாள் கணவனை விட்டுக் கொடுக்காது.

 

அவளுக்கு திருஷ்டி எடுத்தவர் , சிரித்துக் கொண்டே ,

“பரவால்லடா ரவீணா..நான் கூட உன்னை ரொம்ப சின்னப்புள்ளன்னு நினைச்சேன்…ஆனா நீ..பெர்ஃப்க்ட் தமிழ் மருமகள் ஆகிட்ட…” என  கேலி செய்ய

 

அவள் புரியாத பாவம் காட்ட ,“அதை விடு….ஏதோ கேட்க நினைக்கிற என்னனு சொல்லு..?”

 

“அது….. “

 

“சொல்லுமா தயங்காத….” என அவர் ஊக்க

 

“அது நேத்து வரைக்குமே பூமி தான் உங்க மருமகன்னு நினைச்சீங்க…இப்போ நான் மருமக ஆனதும் கூட…அதை எப்படி ஈசியா எடுத்துக்கீட்டீங்க..இப்படி நார்மலா…” என அவள் இழுக்க

 

“ஹ ஹா..வாலு..” என்று அவர் கன்னத்தைக் கிள்ளியவர் ,

 

“இல்ல…உன் புருஷன் உன்னை திட்டியும் கூட ஒரே   நைட்ல  அவனை விட்டுக்கொடுக்க கூடாதுங்கற அளவுக்கு நீ இருக்க..அதுவும் அவன் அம்மா என்ட்டயே சொல்ல மாட்ற….அதே மாதிரி தான் இதுவும்… உன்னை எனக்கு பிடிக்கும் ரவீமா..இன்னொரு பிள்ளை இருந்திருந்தா நான் கண்டிப்பா அவனுக்கு உன்னைத் தான் கட்டி வைச்சிருப்பேன்..நீ நம்புவியான்னு தெரில…வாழ்க்கையில எல்லாம நம்ம இஷ்டத்துக்கா நடக்குது…எதார்த்தத்தை  ஏத்துக்க பழகிட்ட எல்லாமே ஈசியா ஆகிடும்டா”

 

“உங்க மாமா மிலிட்டரில இருந்தாரு…லீவ்வுக்கு வந்துட்டு போனவரு திரும்ப வரும்போது இறந்து போய்ட்டாரு..அவர் வரல….அதுக்காக அதை நினைச்சுட்டு நான் என் புருஷன் சாவாருன்னு எதிர்ப்பார்க்கலன்னு அழுதா எல்லாம் சரியாகிடுமான்னு தோணிச்சு…..உங்க மாமாவும் எப்பவும் சொல்வாரு..எல்லாரும் வீட்ல இருந்தா நாட்டை யாரு காப்பாத்தறதுன்னு..எனக்கு என்னிக்காவது எதாவது ஆகிட்டா கூட நீ தைரியமா இருக்கும்னு சொல்லிட்டே இருப்பாரு….அவர் கொடுத்த தைரியம் தான் இது..”

 

“நீயும் இதான் எதார்த்தம்னு நினைச்சு வாழ பழகிட்டா எல்லாமே சரியாகிடும்…..இப்பவே நீ தெளிவா இருக்கடா…புகுந்த வீட்டு சந்தோசத்தை மட்டும் தான் பொறந்த வீட்ல சொல்லனும்…துக்கத்தை சொல்லி கஷ்டப்படுத்தக்கூடாது..அதை நீ சரியா செய்துட்ட…டா…ஹர்ஷா ரொம்ப கொடுத்து வைச்சவன் டா….சீக்கிரமே நீங்க சேர்ந்து சந்தோசமா வாழனும்..” என தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்தார்.

 

அதன்பின் ஹர்ஷா எழுந்து வர , அவனுக்கு ரவீணாவே காபி கொண்டு போய் கொடுத்தாள்.வாங்கி குடித்தவன் எதுவும் பேசவில்லை.எழுந்து போய்  விட்டான்.

 

அதன் பிறகு சிந்துஜா எழுந்து வந்து ,”அம்மா…பூஸ்ட்..” என கத்த

 

அவள் கையில் பூஸ்டை திணித்தவர் “ஹே..சிந்து ஒழுங்கா சீக்கிரமே காலேஜுக்குக் கிளம்பு….இன்னிக்கே நீ போகலாம்..லீவ்லாம் போட வேண்டாம்…என்ன?”

 

“அம்மா….ப்ளீஸ்மா….இன்னும் இரண்டு நாள் ஜாலியா வீட்ல இருந்துட்டு போறேனேமா..நான் தான் முன்னாடியே லீவ் சொல்லிட்டேனே..” என கெஞ்ச

 

“முடியாது..ஒழுங்கா போற வழியைப் பாரு…..” என அதட்டி விட்டு செல்ல,குளித்து முடித்து ஹர்ஷா வந்து ஹாலில் அமர,

 

“அண்ணா..பாருண்ணா…இந்தம்மாவ..” என அவள் புலம்ப ஆரம்பித்து அவள் கதையை சொல்ல

 

“அம்மா..ஏன்மா..பாவம் இரண்டு நாள் ரெஸ்ட் எடுக்கட்டுமே…..ஆசைப்படுறாள்ல..” என தங்கைக்கு ஏந்திக் கொண்டு வர

 

“ஹர்ஷா அம்மா சொன்னா காரணம் இருக்கும்..நீ தலையிடாத…” என கண்டிப்போடு சொன்னார்.இருக்கும் சூழ் நிலையில் சிந்து வீட்டில் இருந்து என்ன செய்யப் போகிறாள் என்ற எண்ணம் தான் காரணம்.

 

“சிந்து…அம்மா சொல்லிட்டாங்கடா..நான் செய்ய ஒன்னுமில்ல….போய்ட்டு வாடா” என தங்கையை சமாதானம் செய்தான்.

 

அவனையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்தாள் ரவீணா.

‘தங்கையிடம் எவ்வளவு அன்பாக பரிவாக பேசுகிறான் என்னிடம் பேசும்போது  மட்டும் எந்த  பூதம் உள்ள வருமோ..தெரில’ என மனதில் நினைத்தாள்.

 

அன்றே மறு வீட்டுக்கு வருமாறு செந்தில் அழைப்பு விடுக்க , ஹர்ஷாவோ தாயிடம் முடியாது என மறுத்து விட்டான்.

 

“ப்ளீஸ்மா…புரிஞ்சிக்கோங்க….இது இப்ப அவசியமா என்ன..? இருக்க நிலைமையில எனக்கு எரிச்சல் தான் வருது…” என சொல்ல

 

“அவருக்குப் பிடிக்கலன்னா வேண்டாம் அத்த….எனக்குமே இப்ப அங்க போனா கஷ்டமா தான் இருக்கும்…” என மெதுவாக அவரிடம் கிச்சனில் வந்து சொல்ல

 

“சரிடா…நானே உன் அப்பாட்ட பேசிடுறேன்…”  என்றவர் அவ்வாறே செய்தார்.

 

அன்று முழுவதும் அமைதியாகவே பொழுது கழிந்தது.ஹர்ஷா அவனாக எதுவும் மனைவியிடம் பேசவில்லை.அவளும் அப்படியே.மாமியாருடனே சுற்றிக் கொண்டிருந்தாள்.இரவில் அவன் சொல்லும் முன் அவளாகவே மெத்தையில் படுத்துக் கொண்டாள்.

 

ஹர்ஷாவுக்கு ஈகோ தடுத்தது.நானாக சென்று ஏன் இவளிடம் பேச வேண்டும்.அவளுக்குத் தேவையென்றால் அவளாகப் பேசட்டும் என நினைத்தான்.ரவீணாவோ அவள் எதாவது பேசப்போக அவன் காயம்படுபடியாக எதாவது சொல்லிவிடுவானோ என பயந்தாள்.

 

அடுத்த நாள் அவளுக்குத் தாலி பிரித்துக் கோர்க்கும் வைபவம் நடக்க , ஹர்ஷாவைக் கஷ்டப்பட்டு அவள் வீட்டிற்கு அழைத்து வந்தார் வைதேகி.ஆனால் பயந்ததற்கு மாறாய் ஹர்ஷா மிகவும் இயல்பாக மரியாதையாகத் தான் பழகினான்.அவனாக எதுவும் பேசவில்லை என்றாலும் கூட கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னான்.

 

மாலையில் அவர்கள் போகும் முன் வித்யா மகளிடம் வந்து , “ஒருத்தி தான் எங்களைத் தலைகுனிய வைச்சிட்டா..நீயாவது எங்க மானம் மரியாதையைக் காப்பாத்து….இங்க பேசுற மாதிரி ஏட்டிக்குப் போட்டியா பேசாம வாயை அடக்கிட்டு இரு…மாப்பிள்ளை எதாவது கோபத்துல பேசினாலும் நீ எதிர்த்துப் பேசாத….பார்த்துப் போய்ட்டு வா…ரவீ” என சொல்ல ரவீணாவோ மனதில் மீண்டும் வலிக்க வலிக்க அடிவாங்கினாள்.

 

தாயாக அவரது கவலை நியாயம்  தான் என்றாலும் எல்லோரும் சுய  நலமாக இருப்பதை  நினைத்து அவளுக்கு வேதனை ஒரு புறம் என்றால் கோபம் மற்றொரு புறம் வந்தது.பூமிஜா சுய நலமாய் அவளுக்கென ஒரு வாழ்க்கை அமைத்துக் கொண்டாள் என்றால் இவர்களோ அவர்களது கௌரவத்தையே பெரிதாக மதிக்கிறார்கள்.ஹர்ஷாவுக்கு அவனது கோபம் தான் பெரிதாக   , அவனது அவமானம் ஏமாற்றம் தான் முதன்மையாகப் போய் விட்டது.

 

அவளுக்காய் யோசிக்க யாருமில்லை என்ற எண்ணம் சுய பச்சாதாபத்தைத் தூண்டி விட்டது.

 

மனதில் மண்டிய கசப்பை விழுங்கி விட்டு அமைதியாக தலையசைத்து வீடு வந்தாள் சேர்ந்தாள் ரவீணா.எவ்வளவுக்கு எவ்வளவு அவள் அமைதியாக இருக்கிறாளோ அவ்வளவுக்கு அவ்வளவு அவள் ஒரு நாள் வெடிக்க போகிறாள் என்பதை யாரும் அறியவில்லை.ஏன் அவள் கூட…!!

Advertisement