Advertisement

“ஏன்டி உன் கனவுல என் செல்லம் விஜய் தேவரகொண்டா..மகேஷ் பாபுலாம் வராம எப்பவும் அந்த பாழப்போன சஞ்சு தான் வரானா…?” என கடிக்காத குறையாக கத்தினாள் என் தோழி விஷாரதா.

 

அவள் சொல்வதும் நியாயம் தான்.ஒரு இருபத்தி ஐந்து வயது பெண்ணின் கனவில் அவள் சொல்வது போல் கதா நாயகர்கள் வரலாம் தான்.ஆனால் எனக்கோ என் சஞ்சு தான் வருவான்.இன்று நேற்று இல்லை….பதினைந்து வருடமாக என்னைப் பின் தொடரும் கனவிது.கலையா கனவாய் என்னோடு பயணிக்கும் உறவாய்.

 

சஞ்சு என்னோட ஃபோர்த் க்ளாஸ் ப்ர்ண்ட்.அதன் பிறகு ட்ரான்ஸ்பர் காரணமாய் அவன் தந்தையோடு வேற ஊருக்குப் போனதாய் நினைவு.அவனுடைய அம்மா அவனுக்கு ஏழு வயது இருக்கும்போது தவறிட்டார்.அதுக்கு அப்புறம் சஞ்சுக்கு எல்லாமே நான் தான்.

 

என்னோட பால் மணம் மாறா பால்யத்தின் சுவடுகளைப் பார்த்தால் என் பாதச்சுவடும் அவனுடையதும் ஒன்றாய் தான் இருக்கும்.என்னைப் பத்தி என்னோட பத்து வயசு வரைக்கும் எதாவது சொல்லவேண்டுமானால் அவனைப் பற்றியும் சொல்ல வேண்டும்.அப்படி என்னோடு கலந்தவன் அவன்.

 

நானும் அவனும் விளையாடின என் ஸ்கூல் ப்ளேக்ரவுண்ட்ல இருந்த அந்த மஞ்சள் கொன்றைப் பூவின் வாசம் கூட மாறாமல் மறையாமல் என்  மனதினுள் இன்னும் மாருதம் வீசுக்கொண்டிருக்கையில் அவனை என்னால் எப்படி மறக்க முடியும்…? நாங்க இரண்டு பேரும் ஃபைவ் ரேங்குள்ள வாங்கினதுக்காக எங்க சுந்தரி மிஸ் கொடுத்த கச்சா மேங்கோ பைட் கூட ஞாபகம் இருக்கும்போது அவன் எப்படி இல்லாம போவான்..?

 

வாழ்க்கையில நம்ம கூட வந்தவங்க…நம்ம வாழ்க்கையாவே இருந்தவங்களை எல்லாம் ஒரு மனுஷனா அவ்வளவு ஈசியாய் மறந்திட முடியுமா என்ன,..? வாழ்க்கைன்றதே நம்ம கடந்த வந்த மனுஷங்களும் அவங்களோட நினைவுகளும் தானே…?!

 

“சஞ்சுவை அப்படியெல்லாம் சொல்லாத விஷு..” பொறுக்காமல் நான் விஷுவைத் திட்ட  அவளுக்குப் பொத்துக் கொண்டு வர, கையை ஓங்கியபடி

 

“என்னடி அப்படி சொல்லாத இப்படி சொல்லாத…எப்படிவேணும்னாலும் சொல்லுவேன் டி….சஞ்சு சஞ்சு பொல்லாத சஞ்சு….நாலாம் கிளாஸ்ல போனவனைப் பத்தி இன்னமும் பேசிட்டு யோசிச்சுட்டு…அவனோட முழுப்பேரு தெரியுமா உனக்கு…?அவன் இப்ப என்ன செய்றான் எதுவும் தெரியாது..அவனுக்கு உன்னைத் தெரியுமா எதுவும் தெரியாது…?ஆனா டெய்லி பேசுறேன் நான் உன் கனவுல வரல அவன் வரனா…?” என என் முதுகில் வலிக்க வலிக்க வைத்தாள் அடிகளை.

 

முதுகைத் தேய்த்தக் கொண்ட  நான் ,

 

“ப்ச்…எனக்குமே  லூசுத்தனமா தான் இருக்கு…ஆனாலும் அவனுக்கு அம்மா இல்லையா…அதான் அப்ப அவன் எனக்கு ரொம்ப க்ளோஸ்….அவன் எப்படி இருக்கானோன்னு ஒரு கவலை…அதான் கனவா வருதுன்னு நினைக்கிறேன்..” என நான் வருத்தமும் திருத்தமாய் சொல்ல

 

அவளோ தலையில் விரல்களைத் தேய்த்தவாறே,

“இவங்க பெரிய தோழா பட  நாகார்ஜூன் அனுஷ்கா எப்படி இருக்காங்கன்னு தெரியாம பயம்…அவனை லவ் பண்றியான்னு கேட்டா அதுவும் இல்லை…இந்த 96 படம் பார்த்ததுதான் போதும் உடனே கொசுவர்த்தி சுருளை சுருட்ட ஆரம்பிச்சிட்ட……” என்றாள்.

 

“ம்ச்…அப்படியில்லை விஷு….ஒருத்தர் மேல அன்பு வைக்கிறது பிரச்சனையில்லை…அந்த அன்புக்குப் பெயர் வைக்கும்போதுதான் பிரச்சனையே வருது.எனக்கு சஞ்சு மேல நிறைய அன்பு.அவனைப் பிடிக்கும்.அவன் எங்க இருந்தாலும் நல்லா இருக்கனும்னு என் மனசு எப்பவும் வேண்டிக்கும்..ஆனா அதுக்கு பேரு காதல் இல்லடி…எனக்கு 96 என்னோட ஸ்கூல் டேய்ஸ ஞாபகம் படுத்திச்சு…அவ்வளவுதான்…அது காதல் படம்ங்கறதுனால எனக்கு காதல் இருக்குனுலாம் உளறாத…” சற்றே கண்டிப்போடு நான் சொல்ல

 

அவளோ,

“அப்போ ஏன் மேடம் அவன் உங்க கனவுல வரான்..?” என சரியாய்க் கேள்வி கேட்க

 

“அது  அப்படி இல்ல விஷு….என்னோட  சின்ன வயசு ப்ரண்ட் அவன்..அவன் எங்க எப்படி இருக்கான்ற கவலை எனக்கு..அவன் நல்லா இருக்கான்னு தெரிஞ்சா எனக்குத் திருப்தி ஆகிடும்.சின்ன வயசு நினைவுகள் சில நேரம் ரொம்ப ஆழமா இருக்கும்,நம்ம சப் கான்சியஸ் மைண்ட்ல அந்த நினைப்பெல்லாம் இருக்கும்..உனக்கு கூட இருக்கலாம்…”

 

“அய்யே….எனக்கு யுனிபார்மைப் மாத்திப் போட்டு அடிவாங்கினது தான் ஞாபகத்துல இருக்குடி லூசே…ஆனா இப்படி அடிக்கடி வரதால நீ டிஸ்டர்ப் ஆகிற தானே” அவள் குரல் என் மேல் உள்ள அக்கறையால் அன்பொழுக வெளிவர,

 

“ஆமா டிஸ்டர்ப் ஆகிறேன் தான்…அதுவும் இப்ப அதிகமா வருது…அதனால எந்த பிரச்சனையும் இல்ல…பட் எனக்கு என்னமோ அவனைப் பார்க்கனும்..அவன் நல்லா இருக்கானான்னு அப்படின்னு கவலை இருந்திட்டே இருக்கு…”

 

“அதுக்கு தான் என்ட்ட ஒரு ஐடியா இருக்கு..”

 

“என்னடி…” ஆர்வமானேன் நான்.

 

“எங்க அம்மாவோட  கசின் அண்ணாவோட பையன் ராகா இப்ப தான் யூ.எஸ் லேர்ந்து வந்துருக்கார்…அவர் ஒரு சைக்காலஜிஸ்ட்…நீ அவரைப் போய் கன்சல்ட் செஞ்சா உன்னோட இந்த கனவு பிரச்சனைக்கு ஒரு சொல்யூஷன் கிடைக்கும்ல..”

 

“நீ சொல்றது சரிதான்..ஆனாலும் ஒரு மென் கிட்ட எப்படி டி என்னோட ஃப்லீங்க்ஸை சொல்றது..அவங்க தப்பா இண்டர்ப்ர்ட் செஞ்சா.அதோட சைக்காலஜிஸ்ட்லாம் பார்க்கிற அளவுக்கு இது பெரிய விசயம் இல்லடி.கனவு தானே வந்துட்டுப் போகுது..” நான் மறுக்க,

 

அவளோ பிடிவாதமாய்“இல்லடி..அவர் ரொம்ப நல்ல டைப்…என்ட்ட நல்லா பேசுவாங்க நானும் உன்னோட வரேன்..ஒரு சைக்காலஜிஸ்டா அவரைப் பாருடி…அது மட்டுமில்லாம அவர் யூ.எஸ் ரிடர்ன்.இப்படி நேரோ மைண்டா இருக்க மாட்டார்டி..” என சொல்லி சொல்லி என் மனதை மாற்றி அவள் சொன்ன அவளின் அத்தை மகன் முறை வரும் டாக்டர்.ராகாவை  மீட் பண்ண வைத்தாள்.

 

அந்த டாக்டர் ஆனவன் அப்போதுதான் யூ.எஸ் ரிடர்ன் என்பதால் இன்னும் தனியாக க்ளீனிக் அமைக்கவில்லையாம்.ஏதோ ஒரு ஹாஸ்பிட்டலில் தான் இப்போது வேலை.விஷு சொன்னா இதெல்லாம்.

 

ராகா விஷு சொன்ன மாதிரியே பார்த்தாலே நட்பாகிடனும்   நினைக்கிற முகம்.ஆளு கொஞ்சம் ஸ்மார்ட்னு வைச்சுக்கோங்களேன்.என்னோட சஞ்சுவையும் கனவையும் பத்தி எனக்குக் கஷ்டம் வைக்காம என் இஷ்ட தோழி விஷுவே சொல்லிட்டா…. நண்பேண்டா…..!! ☺

 

எங்க என் கதையைக் கேட்டு ஓடிருவாரோன்னு நான் நினைச்சதுக்குப் பதிலா அவர் என்னமோ சந்திரமுகி ரஜினி போல சந்திரமுகியை விரட்டிற ரேஞ்சுக்கு என் கனவை விரட்டுற மாதிரியே  என்னைப் பார்க்க,

இந்த லூசு விஷுவோ ‘என்னக் கொடும தேனுன்னு தேமேன்னு’ என்னை லுக் விட்டுச்சு.

 

“ராகா…இவ ப்ராப்ளம் சால்வ் ஆகிடும்ல..”

 

“ப்ராப்ளம் க்ளியரா சொன்னா ஈசியா க்ளியர் செய்திடலாம்…”

 

‘பாரீன் ரிடர்ன் பஞ்ச் டயலாக் அடிக்குதுடோய்’ – என்னோட மன் கி பாத் அதாங்க  மனதின் குரல்….ஹி ஹி…

 

“அப்புறம் சொல்லுங்க வேற என்ன உங்க கனவுல வரும்” இயல்பாய் தொடங்கியது எங்கள் கான்வோ..அவன் என்னை பேஷன்டா ஃபீல் செய்ய வைக்கலன்னு புரிஞ்சது.

 

“ஏதாவது படம் பார்த்தா அதோட சீன்ஸ் வரும்…கசின்ஸ் ப்ரண்ட்ஸ்லாம் வருவாங்க… நான் கீழ விழற மாதிரி வரும்..ஆனா அதிகமா வந்தது என் ப்ரண்ட் சஞ்சு பத்தின கனவு தான்…”

 

“அதான் எப்படிப்பட்ட கனவு அது..?”என அவன் கேட்க

 

‘எத்தன தடவடா நானும் ஓட்டின ரீலையே ஓட்டுறது…?’- அதே மைண்ட்வாய்ஸ் தான்..

 

“என்ன மனசுல திட்டுறீங்களா..?” என கேட்க ஹை ஸ்பீட்ல போற தண்ணி லாரி ஒரு ஸ்பீட் ப்ரேக்கர்ல டக்குன்னு ப்ரேக் அடிச்சா எப்படி இருக்கும்..அப்படி ஒரு ஜெர்க் எனக்கு..பாரின் ரிடர்ன் படுஷார்ப்பாய்த் தெரிய,

 

‘நோ கமெண்ட்ஸ்’ என  ஸ்டிரிக்டாய் எனக்குள் கண்டிஷன் போட்டு அவனின் கேள்விக்குப் பதில் சொன்னேன்.

 

“எல்லாமே த்ர்ட் ஃபொர்த்ல நடந்த சம்பவம் தான்..அவன் பாடுறது…எங்க ஸ்கூல் அனுவல் டே…” என நான் சொல்லிக்கொண்டே போக

 

“அப்போ…செம மெமரி உங்களுக்கு…வேற என்ன தெரியும் சஞ்சுப் பத்தி…அவனை நீங்க தேடலயா இத்தனை வருசத்துல..”

 

‘தேடாமையா பக்கி இருந்திருப்பேன்’ என மனதுள் நினைத்தாலும்

 

“நானும் பேஸ்புக் டிவிட்டர்னு எல்லாத்திலேயும் தேடினேன் தான்..ஆனா

அவனோட ஃபுல் நேம் ஞாபகம் இல்லை….அது ரொம்ப பெருசு…அதான்..”

 

“ஸ்கூல்ல போய் கேட்டிருக்கலாமே..”

 

“எங்க ஸ்கூல் ப்ரைமரி ஸ்கூல் தான்.அதுவும் ஸ்கூலை மூடி பத்து வருசம் ஆகுது..” என என் பள்ளியின் பெயரையும் நான் சொல்ல

 

பேனாவை கையில் வைத்து சுற்றிக் கொண்டே பார்வை என் மீதிருக்க “வேற எதாவது சஞ்சு பத்தி நினைவுல இருக்கா..?” எனக் கேட்டான்.

 

“அவன் நேம்க்கு க்ரியேட்டர் ஹாப்பின்னு மீனீங் சொல்லியிருக்கான் அதான் ஞாபகம் இருக்கு..”

 

“ஓ…சஞ்சு மேல அவ்வளவு லவ்வா…?” என அவன் கேட்டதும் கடுப்பாய் ஒரு முறைப்பு அவனுக்கு என் சார்பாய்க் கொடுக்க

 

“ஏய்…சில் சில்…ஐ டிண்ட் மீன் தட்…லவ்னா அன்பானு அர்த்தத்துல தான் கேட்டேன்…” என விளக்கி ஒரு விளக்கம் சொன்னது அந்த விளக்கெண்ணெய்.

 

“இப்ப சஞ்சுவைப் பார்த்தா எப்படி ரியாக்ட் செய்வீங்க நீங்க…”

 

சில கேள்விகளும் பதிலும் கற்பனை செய்தாலே சில்லுன்னு ஒரு உணர்வு வருமே.அப்படி இருந்துச்சு எனக்கு.

 

“அவனைப் பார்த்தாலே எனக்குப் போதும்.அவன் நல்லா இருக்கான்னு தெரிஞ்சா கூட எனக்குப் போதும்..பார்த்தா அவனை ஏ.ஆர்.ரஹ்மானோட மியுசிக்ல வந்த எதாவது ஒரு சாங் பாட சொல்லிக் கேட்பேன்.”

 

“ஏன் உங்களுக்கு ஏ.ஆர்னா பிடிக்குமா…?”

 

“எனக்குப் பிடிக்கும்..பட் முதல்ல சஞ்சுவுக்கு அவர்னா இஷ்டம்..அவன் நல்லா பாடுவான்..அவங்க அம்மா கர்னாடிக் சிங்கர்”

 

“ஒ….அப்படி என்ன ஸ்பெஷல் சஞ்சு?”

 

‘சஞ்சுன்னாலே ஸ்பெஷல்டா’ மனசு மரியாதை இல்லாம கவுண்டர் கொடுத்தாலும் அதைக் கண்டுகாம நான்,

 

“சஞ்சுவுக்கு அம்மா இல்லை…அதிலேர்ந்தே எனக்கு சஞ்சு மேல தனி பாசம்…ரொம்ப நல்ல பையன்.என்னோட பெஸ்டி..”

நான் சொல்ல சொல்ல சொல்லவியலா பாவம் ஒன்றில் அந்த டாக்டர் என்னைப் பார்த்தான்.தவறான்னு சொல்ல முடியல..ஆனாலும் எனக்கு ஒரு உறுத்தல்.ஆனால் அவன் கேட்ட அடுத்த கேள்வில அவன் மேல எனக்கு வந்த ஆத்திரத்தை அகராதில உள்ள எந்த வார்த்தைக் கொண்டு நிரப்பன்னே தெரில..

 

“இப்பவும் உங்க சஞ்சு நல்லவன்னா இருப்பான்னு என்ன நிச்சயம்..?” என அவன் கேட்டதும் பால் மனதில் ஒரு நொடி பாலைவன வெப்பம்.பனிக்காற்றில் நனைந்த  நான் ஒரு நொடி பாழும் கிணற்றில் ஆழம் தெரியாமல் விழும் உணர்வு.எனையறியா உணர்வொன்று எனைத் தாக்கி என் விழியோரம் விழப்பார்க்கிறது கண்ணீர்.

 

அது அவனின் கண்ணில் பட்டது போலும்.

 

“ஹே…. நான் சொல்றது ரியாலிட்டி…எதார்த்தமா யோசி” பன்மையிலிருந்து ஒருமைக்குத் தாவிடுச்சு தட் எரும.

 

“சஞ்சு நிச்சயமா நல்ல நிலைமையில தான் டாக்டர் இருப்பான்” எனக்கே தெரியவில்லை எவ்வுணர்வை என்னை அப்படி உந்தித் தள்ளி சொல்ல வைத்தது என..அதற்கு மேலும் அந்த டாக்டர்ட்ட பேச மனசு வரல.கனவு தானே வந்தா வரட்டும்…பள்ளிக் காலம்ன்றது மண்ணு மேல வந்து விழற மழைவாசம் மாதிரி …அப்படிதான் அந்த மண்வாசம் மாதிரி சொல்ல முடியாத உணர மட்டுமே முடிஞ்ச என் ஞாபகம் முழுசும் நிறைஞ்சு நிக்கிற என் ப்ர்ண்ட் சஞ்சு தானே கனவுல வரான்…வந்துட்டுப் போகட்டும்..அவனுக்காக டெய்லி கடவுள்ட்ட வேண்டினா போச்சு என்ற முடிவோடும் இனி இந்த ஓவர்சீன் யூஸ்காரனையும் ..பார்க்கவே கூடாதுன்னு முடிவோட அவன்ட்ட

ஒரு தேங்க்யூ சொல்லிட்டு வந்துட்டேன் நான்.

என் பின்னாடியே விஷுவும் ஜூட்.

 

அதுக்கு அப்புறம் நாங்க அதைப் பத்தி பேசவே இல்லை.ஒரு வாரம் ஓடி இருக்கும்.விஷு தான் ,

 

“என்ன மேடம் இப்ப கனவு வருதா..?” என கேட்க

 

“வரல…வரல…” என சொல்லி சமாளித்தேன் நான்.பின்ன அவ பக்கமும் நியாயம் இருக்குல்ல..விஷு …என்னோட செவன்த் க்ளாஸ்லேர்ந்து ப்ரண்ட் ஆனா அவ கிட்ட நான் அதிகமா சஞ்சு பத்தி பேசி பேசியே அவளுக்கு சஞ்சு மேல ஒரு வெறுப்பு.அதுக்கு வைச்ச   நெருப்பு நான் தான்.பின்ன இத்தனை வருசம் கூடவே இருக்கவ,என்னோட குட் அண்ட் பேட் டைம்ஸ்ல இருக்கவ அவளை விட சஞ்சுவ எனக்கு பிடிக்கும்ன்ற போல அவளுக்கு ஒரு ஃபீல்.ஆனா எனக்கு ஆல் டைம் பெஸ்டினா அது விஷாரதா தான்..

 

ஆனாலும் அவகிட்ட நான் சொன்னதில்லை.சொல்லாம அவளைக் கடுப்பேத்துவது பெஸ்டியாகிய என் கடமை இல்லையா…?லவ்வர்ஸ் மட்டும் தான் லவ் பண்ணா சொல்லிக்காம தன்னோட பார்ட்னரா இரிட்டேட் பண்ணி சந்தோஷப்படுவாங்களா என்ன..? பெஸ்ட் ப்ர்ண்ட்ஸ் கூட அப்படி தான்.பிடிக்கும்னு சொல்லிக்கவே மாட்டோம்.ஆனா மத்தவங்க முன்னாடி விட்டுக்கொடுக்க மாட்டோம்.எனக்கும் விஷுக்குமான நட்பு கூட அப்படி தான்.

 

சஞ்சு என் கூட இல்லாததால அவனைப் பத்தி அதிகமா நினைக்கிறது பேசுறது..அது கூட மாசத்துல ஒரு நாலு வாட்டி அவனைப் பத்தின கனவு வரப்ப தான்.ஆனா விஷு இல்லாம என்னோட  நாளே இருக்காது.எதுனாலும் என் கை அவ நம்பரத்தான் தான கால் பண்ணும்.ஆனாலும் அவட்ட அவளைப் பிடிக்கும்னு சொன்னதில்லை.சொன்னா ஓவர் கான்பிடன்ஸ் ஆகிடும்ல…ஹி ஹி.இப்படியே சுத்தட்டும்.

 

ஒரு மாசம் ஓடிப்போச்சு.அப்போ தான் எனக்கு அலையன்ஸ் பார்த்துட்டு இருந்தாங்க.அன்னிக்கு ஈவினிங் மாப்பிள்ளை வீட்ல வராங்கன்னு சொல்லி என்னை ரெடி ஆக சொன்னாங்க அம்மா.

ஆனா மாப்பிள்ளை இவன் தான்ன்னு கன்பார்ம் ஆகறவரைக்கும் நான் எதையுமே தெரிஞ்சிக்க விரும்பல..மாப்பிள்ளை யாரு..பேரு….ஊரு…இப்படி எதையுமே…அனாவசிய ஆசையும் கற்பனையும் அனர்த்தமா போயிடுச்சுன்னா…?

 

வீட்டுல மைசூர்பாவின் மணமும் மிளகாய்ப் பஜ்ஜி வாசமும் என்னை மயக்கிட்டு இருந்துச்சு.ஆனாலும் அம்மா அன்னிக்கு ஸ்டிரிக்டா கொஞ்சம் அழகா சேரி கட்டி அமைதியா உட்கார சொன்ன காரணத்தால நான் அமைதியா இருக்குற போல ஒரு பெர்பாமென்ஸ்..

கூடவே விஷுவும் இருந்ததால எனக்கு டென்ஷன் குறைவா இருந்துச்சு.இதுதான் வீடு வரைக்கும் ஒரு அலையன்ஸ் கன்பார்மா வருது.அதுக்கு முன்னாடி அப்பாவே எல்லாத்தையும் பிடிக்காம ரிஜெக்ட் செய்துட்டார்.அப்பாவுக்குப் பிடிக்கிறது கஷ்டம்.அவரை இம்ப்ரெஸ் செய்ய தனியா கோர்ஸே படிக்கனும்.அப்படி ஒரு டஃப் பெர்சனாலிட்டி.ஆனாலும் எனக்கான விஷயத்துல அப்பா ஆயிரம் மடங்கு அதிகமாகவே யோசிப்பாங்க.

 

ஸோ நான் ரெடி.ஆனா என் கூட இருந்த விஷு தான் ரொம்ப டென்ஸ்டா இருந்தா.ஏன்னு நான் கேட்க

 

“இல்ல….உனக்கு வரவரைப் பிடிக்கனும்ல…அதான் டென்ஷன்..”

 

“அப்பாவுக்குப் பிடிக்கிறது தான் டி கஷ்டம்.அப்பாவுக்கும் எனக்கும் ஒரே டேஸ்ட் தான்…அப்படியே பிடிக்கலனாலும் வேற பார்த்தா போச்சு.நீ ஏன் டி கவலைப்படுற….” என நான் அவளை சமாதானம் செய்தேன்.

 

அதுவரை நார்மலா இருந்த நான் அப் நார்மலா மாறினது மாப்பிள்ளை எண்ட்ரிக்குப் பின்னாடி தான்.

 

மாப்பிள்ளை என வந்தவனைப் பார்த்த பின்னர் தான் எனக்குக் கோபம் பார்டர் தாண்டி பல மடங்கு சென்றது.அவன் தட் ஓவர் சீன் யூஸ்காரன்..எப்படி டி…? என நான் படுபயங்கரமாய் என் பக்கத்தில்  நின்ன எட்டப்பி விஷுவை முறைக்க, அவளோ பல்லையெல்லாம் ப்ர்பெஃக்டா அடுக்கினா மாதிரி வாயை வைச்சிட்டு என்னைப் பார்த்து சிரிக்க,

 

“என்னடி உன் அத்த மகன் எதுக்குடி என்னைப் பார்க்க வந்தான்..இதுனால தான் நீ இவ்வளவு நேரம் டென்ஷனா இருக்க இதான் காரணமா…?”

 

உச்சபட்ச உக்கிரத்தோடு நான்…அதை உல்டாவாக்க உத்தித் தேடும் வண்ணம் அவள்.

 

“அது இல்ல…..தேனுக்குட்டி….ராகா மாமாவுக்கு உன் மேல ஒரு அது வந்துடுச்சு…உன் அப்பா நம்பர் கேட்டார் அது மட்டும் தான் செய்தேன் டி  நான்..”

 

“அறிவிருக்கா உனக்கு…எங்க அப்பா என்ன அவசர உதவி ஆம்புலன்ஸா எவன் கேட்டாலும் நம்பர் கொடுப்ப…. நீ…அவனுக்கு அது இதுன்னு எது வந்தா என்னடி எனக்கு…..வரட்டும் அவனை நோஸ்கட் பண்ணி அனுப்புறேன்…” என சீறும் குரலில்  நான் சொல்ல,அவளோ எங்கே சத்தம் வெளியே கேட்டுவிடுமோ என்ற எண்ணத்தில்

 

“ஏய் அமைதியா பேசு லூசே …என்ன இவ்வளவு  நேரம் அப்பா சாய்ஸ் தப்பாகுமோனு டயலாக் அடிச்ச இப்ப…ராகா தான் மாப்பிள்ளைன்னதும் கத்துற….நீ எல்லா விசயத்திலேயும் பொறுமையா முடிவு எடுக்கிறவ…அதனால் நீ ராகாட்ட பேசிட்டு முடிவு பண்ணு…” என சொல்லி சென்றாள்.

 

அவ போன பின்னாடி வெளியே வந்தா , குரூப் போட்டோக்கு போஸ் கொடுக்கிற கணக்கா என் பேமிலி அவன் ஃபேமிலின்னு எல்லாரும் ஒன்னா உட்கார்ந்திருந்தாங்க.மரியாதைக்காக எல்லாருக்கும் என் சார்பாய் ஒரு வணக்கம் வைத்து விட்டு நான் நிற்க,அவன் என்னோட பேச ஆசைன்னு சொல்ல,அப்பா ரூம்ல போய் பேச பெர்மிஷன் கொடுக்க,

 

ரூம்க்குள்ள போனதும் நான் அவனை முறைச்சிட்டே,

“உங்க மனசுல என்ன  நினைச்சிட்டு இருக்கீங்க டாக்டர் சார்?” சரசரவென ஏறிய கோபத்தில் வந்தது அந்த சார்.

 

“நான் பேசுறதைக் கொஞ்சம் கேளு யாழ்….அப்புறமா நீ பேசு..”  நேரடிக் கெஞ்சல் அவன் குரல்.

 

“ஐ டோண்ட் வாண்ட் டூ லிஸன் டூ யூ…ஒரு கன்சல்டேஷன்கு உங்கட்ட வந்தேன்,…அதுக்காக கன்னா பின்னான்னு காதல்னு வந்துடுவீங்களா நீங்க….”

 

“காதல்னு சொல்லவே இல்லயே யாழ்மா…கல்யாணம்னு தானே சொன்னேன்…. நான் பேசுறதை தான் நீ கேட்க மாட்ட….அட்லீஸ்ட் ….” என நிறுத்தியவன்,

 

‘கண்ணுக்கு மை அழகு

கவிதைக்குப் பொய் அழகு’ என உன்னி மேனன் வாய்ஸில் உருகிப்  பாடினான்.

 

அப்போ கூட  அது ஏ.ஆர் சாங்னு டக்குன்னு எனக்குத் தோணல.

 

“எதுக்கு இப்போ லூசாட்டம் பாடுறீங்க…?”

 

“எங்கம்மா கர்னாடிக் சிங்கர்…”

 

‘கேட்காத கேள்விக்கு ஏன் இவன் பதில் சொல்றான்’.

 

“அம்மா உயிரோட இல்லை…” அவன் சொல்லிக் கொண்டே சென்றான்.

 

“என் முழு பெயர் சஞ்சன் சுகராகன்….சஞ்சன்னா படைக்கறவன்…சுகராகம்னா இன்பம்…அப்பாவுக்கு எல்லாருக்கும் நான் ராகா…ப்ரண்ட்ஸ்க்கு சஞ்சன்…என்னோட தேன்யாழிக்கு நான் அவளோட சஞ்சு….” என அவன் சொல்ல எனக்குள் எதுவும் புரியா உணரா உணர்வு நிலை… உயிரில் ஒரு பரவசம்……இதயக் கலவரம்…வசந்த கால காற்றின் வாஞ்சையான வருடல்.…அதே சமயம் எங்கோ ஒரு நெருடல்..

 

மொழி திணறலெடுக்க நான் அவனிடம்,

“சஞ்ச்…சஞ்சு….நீயா….?” என அதிர்வும் ஆவலும் ஆசையுமாய்க் கேட்க

 

“ஆமா…யாழி….நானே தான் உன் சஞ்சு தான்…ஐ அம் வெரி சாரி….அப்பாவோட நான் கல்கட்டா போன பின்னாடி அங்க கிடைச்ச ப்ரண்ட்ஸ்..அந்த புது ஊர்னு பழசெல்லாம் நான் மறந்துட்டேன்…உன் அளவுக்கு நிச்சயமா எனக்கு  மெமரி பவரே கிடையாது யாழ்…சின்ன வயசுல நம்ம ஸ்கூல் நினைவுல இருக்கும்…நீயும் இருப்ப…ஆனா உன் அளவுக்கு நான் உன்னை நினைக்கல….அதுவும் நீ அன்னிக்கு எங்கிட்ட நம்ம ஸ்கூல் நேம சொல்லவும் தான் நீ தேடுற உன்  நண்பன் சஞ்சு நான் தான்னே தெரிஞ்சிக்கிட்டேன்..ஆனாலும் உனக்கு சர்ப்பரைஸா சொல்லனும்னு ஆசை…அதைவிட என்னை என்னோட நலனை ஒரு பொண்ணு இத்தனை வருசமா தேடிருக்கா….எனக்கு இப்படி ஒரு ப்ரண்டு இருக்கான்னு விசயத்தை நான் ஜீரணிக்கவே  டைம் தேவைப்பட்டுச்சு…அதுக்கு அப்புறம் தான் நம்ம குரூப் போட்டோஸ்லாம் பார்த்து எனக்கு நம்ம ஸ்கூல் டேய்ஸ்லாம் ஞாபகம் வந்துச்சு..அப்போ கூட எனக்கு உன் அளவு இன்சிடெண்ட்ஸ்லாம் நிஜமாவே நினைவுல இல்ல…” என அவன் சொல்லிக் கொண்டே போக,

 

தேன் துளி சிதறிய அந்த நேரத்தில் தேள் கொட்டிய வலி என்னிடம்.அப்போதே அவனுக்குத் தெரிந்தும் என்னிடம் உண்மையை சொல்லவில்லையே….நான் அவனை எவ்வளவு தேடின்னேன்னு தெரிஞ்சும் உண்மையை மறைச்சிருக்கான்..என்னை வேணும்னே கோபப்படுத்திருக்கான்.என் சஞ்சுவா இருந்தா என் ப்லீங்க்ஸோட விளையாடிருக்க மாட்டான்ல…மனம் சொல்லும் அத்தனையும் மண்டையில் உறைக்க,

 

“இல்ல..நீ என் சஞ்சு இல்லை…என் சஞ்சுவா இருந்திருந்தா என்னோட உணர்வோட நீ விளையாடி இருக்க மாட்ட….ஒரு ப்ரண்டா நான் உன்னை அவ்வளவு தேடினேன்னு தெரிஞ்சும் நீ எங்கிட்ட சொல்லல…இல்ல…ச்ச….நீ மாறிட்ட…விஷு சொல்லுவா அவன் எங்க இருக்கானோ உன்னை நினைப்பானோ….அப்படின்னு நீ என்னை மறந்தது கூட எனக்கு வலிக்கலடா..ஆனா உண்மை தெரிஞ்சும் நீ மறைச்ச பார்த்தியா அதான் வலிக்குது….”

 

அழுகை ஆர்ப்பாட்டமாய் கரை உடைத்து வர இருந்தாலும் அழுத்தமாய் அடக்கினேன்.அவன் முன்னாடி அழறதா ..?!

 

“யாழி அப்படி இல்லடா…உனக்கு சர்ப்பரைஸ்…”

 

“பேசாத..மண்ணாங்கட்டி…சர்ப்பரைஸ்…ஒரு மாசமா என்னடா சர்ப்ப்ரைஸ்..?”

 

“அது தப்பு தான்…எனக்கு உன்னைப் பார்த்ததுமே பிடிச்சதுடா…அப்புறம் நீ என் சின்ன வயசு ப்ரண்டுன்னதும் இன்னும் சந்தோசமாகிட்டேன்…லவ் அட் ப்ர்ஸ்ட் சைட்…ஆனா எனக்கு ஒரு தெளிவு தேவைப்பட்டுச்சு..அதான்…கொஞ்சம் டைம் எடுத்து உன் முன்னாடி நண்பனா வரலாமா இல்லை மாப்பிள்ளையா வரலாமான்னு…”

 

“ஷட் அப்..சஞ்சன்….உன் மேல எனக்கிருந்தது பரிபூரணமான அன்பு..பரிசுத்த நட்பு…அதைப் போய் காதல்னு சொல்லி …இப்படி உளறாத…”

சஞ்சு மேல் எனக்கிருந்த அன்பின் பெயர் நட்பு…பால்வாசம் இருந்த வயதின் பாசம்…நினைவு தெரிந்து தோன்றிய நேசம்.அதை காதலென்பது அன்பின் அத்தனை வகையையும் கலப்படம் செய்வது போல….

 

“ரிலாக்ஸ் யாழி…நான் சஞ்சுவா உன்னை லவ் பண்ணல…டாக்டர்.சுகராகனா தான் உன்னை விரும்புறேன்..அதை முதல்ல புரிஞ்சிக்க..ஒரு வேளை நீ தேடுற சஞ்சு நானா இல்லாம நான் வெறும் டாக்டரா இருந்திருந்தா கூட என்னோட காதல் மாறி இருக்காது…”

 

முழுமுயற்சியாய் அவனை முழுதும் என்னிடம் புரிய வைக்கும் நோக்கம் அவனிடத்தில்.

 

எனக்கோ அவன் காதல் சொல்லி என் நட்பை களங்கம் செய்தான் என்ற கோபம் பாதியும் என் நட்பையும் அவன் மதித்து அவன் தான் சஞ்சு என சொல்லாத வருத்தம் வேதனை  ஏமாற்றம் மீதியுமாய் இருக்க,அதை அவனிடத்தில் வெளிப்படுத்தவும் செய்தேன்.

 

“என்னை நீ மனுஷியா கூட மதிக்கலடா..போ…இனிமே உனக்கும் எனக்கும் எந்த உறவுமில்லை…”

 

நான் தேடிய நாடிய உறவை ஒரு உயிரை….நானே துண்டித்தேன்…

 

ஆனால் விடுவானா அவன்..

 

அடுத்த மூனுமாசம் என்  அப்பா பின்னாடி சுத்தி அவனை அவருக்குப் புரியவைச்சு அவர் எனக்கு புரியவைக்க ட்ரை பண்ணி என்னையும் அவனை மறுபடியும் மீட் பண்ண வைச்சார்.அவனே தான் பேச ஆரம்பிச்சான்.

 

“யாழ்மா ப்ளீஸ்டா நீ நினைக்கிற மாதிரி உன்னோட நட்பை  நான் தப்பாவே நினைக்கலடா…அம்மா மேல ப்ராமிஸ்…அந்த சஞ்சு வேற யாராவது இருந்திருந்தா கூட நான் கண்டிப்பா உன்னைத் தான் கல்யாணம் செய்ய நினைச்சிருப்பேன்.விஷாரதா உன்னைப் பத்தி சொன்னப்பவே எனக்கு உன் மேல ஒரு அபிமானம்…ஒரு நல்ல அபிப்ராயம் வந்துடுச்சு…சின்ன வயசுல உன் கூட படிச்ச உன்னோட ப்ரண்ட் எங்க இருந்தாலும் நல்லா இருக்கனும்னு நினைச்சியே..அந்த நல்ல மனசுல தான் நான் விழுந்தேன்…அதை தான் நான் விரும்பினேன்..சொல்லப் போனா விஷு சொன்னப்போதே உன்னைப் பார்க்க அவ்வளவு ஆர்வமும் ஆசையும் எனக்கு…நான் தான் சஞ்சுன்னு தெரிஞ்சப்ப எனக்கு டபுள் சந்தோஷம்…மத்தபடி காதல் நட்பு இரண்டையும் கன்ஃப்யூஸ் செய்ற ஆள் நான் இல்ல யாழி…..ஹான்…சொல்ல மறந்துட்டேன்…விஷு உன் நேம் தேன்யாழின்னு சொன்னப்பவே யாழோட இசை அவ்வளவு இனிது..தேனும் யாழும் சேர்ந்த அந்த தேன்யாழியைப் பார்க்கனும் அவ பேசுற தேன்மொழியைக் கேட்கனும் ஆசைப்பட்டேன் தெரியுமா…?பட் உன்ட்ட அப்பவே சொல்லாதது தப்பு..தான்..சாரிடா…”

 

அவன் சொன்ன  எல்லாமுமே விஷு மூலமாவும் அப்பா மூலமாவும் எனக்கு வந்த நியூஸ் தான்…

 

தேன்யாழியோட தேன்மொழியா…?!!

 

பின்றடா நீ..? மனசுல அவன் மேல் அன்பு அளவில்லாம பாய்ஞ்சாலும் பையனை இன்னும் கொஞ்சம் காய விட நினைச்சேன்..

 

“ஆமா..அதெப்படி பார்க்காம லவ்வு…?”

 

“அன்பு செய்ய மனசு போதுமேடா…முகம் எதுக்கு..?என்னைப் பொருத்தவரை காதல் இதயத்துல தொடங்கி இதயத்தில சேர விசயம்..….”

 

“இப்போ நீ யார என்ட்ட ப்ரோபோஸ் செய்ற…?”

 

துறுதுறுன்னு பேசின்ன டாக்டர்…சார் இப்ப திருதிருன்னு முழிக்கிறார்…பஞ்ச் டயலாக் அடிச்சவர் இப்போ பஞ்சர்….

 

“புரியல…மா”

 

“இப்ப டாக்டரா லவ் சொல்றீங்களா.. இல்ல சஞ்சுவா ?”

 

“இரண்டுமே இல்ல…சுகராகன்னு ஒரு பையனுக்கு தேன்யாழின்னு ஒரு குட்டிப் பொண்ணோட ப்ரண்ட்ஷிப் பிடிச்சதாம்.அவளோட அந்த குழந்தை மனசு பிடிச்சுப் போச்சாம்.அவளை கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்படுறான்..”

 

இப்படி அவன் சொல்லிக்கொண்டே போக எங்கெங்கோ ஏறிப்போகிறது அவன் மீதான என் பாசம்.சஞ்சு மேல் ஆழமான நட்பு….அந்த டாக்டர் ராகா மேல செமையான கடுப்பு இருந்தாலும் இந்த சுகனை..சுகராகனை என்னவோ மனசுக்குப் பிடிக்கத்தான் செய்யுது….

அப்புறமென்ன ஜோரா நடந்துச்சு எங்க மேரேஜ்…இப்ப சுகனைப் போலவே எனக்கு சுகம் தரும் ரோஜப்பூ எங்க பொண்ணு சுகயாழினி.

 

பொத்தி வைச்ச அன்பெல்லாம் இப்ப இரண்டு பேருமா பொழிஞ்சிட்டு இருக்கும்…

 

இப்படிக்கு

தேன்யாழி சுகராகன்.

 

.

 

Advertisement