ஆர்த்தித் தான் ஆர்டர் செய்தாள்.

“அவருக்கு என்ன வேணும்னு கேட்டு சொல்லு.” என அவர் மகளிடம் சொல்ல…

“உங்க பொண்ணு எல்லாமே எனக்குத் தான் சொல்றா… உங்களுக்கே தெரியும்.” என்றான்.

அதே போல ஆர்த்தித் தந்தைக்கு வேண்டியது பரிமாறிவிட்டு, தனக்கும் சரத்துக்கும் பரிமாறியவள், கொஞ்சம் உண்டதுமே எனக்கு வயிறு நிரம்பிடுச்சு என எல்லாவற்றையும் சரத்தின் பக்கம் தள்ள….

“இதைத் தான் சொன்னேன். அது எப்படிக் கொஞ்சம் சாப்பிட்டதும் உனக்கு வயிறு நிறையமுன்னு தெரியலை….” என்றான்.

“அப்பா தான் சொன்னாரு வெளிய போய்ச் சாப்பிடலாமுன்னு.”

“நினைச்சேன், காலையில இவ சாப்பாட்டைச் சாப்பிட்டதும் தான நீங்க இந்த முடிவுக்கு வந்தீங்க.” எனச் சரத் சிரிக்காமல் கேட்க…. ஆர்த்தி அவனை முறைக்க… நடேசன் சிரித்து விட்டார்.

இருவரும் ஒருவரின் காலை மற்றவர் வாரியபடி கேலியும் கிண்டலுமாக உண்டு முடித்தனர்.

உணவுக்குப் பணம் தர நடேசன் முன்வர அவரைத் தடுத்துவிட்டு சரத்தே கொடுத்தான்.

மாலை ஈஸ்வரும் ஷ்யாமளாவும் வந்து பார்த்து ஆர்த்தியின் தந்தையோடு பேசிக்கொண்டு இருந்தனர்.

“நீங்க எல்லாம் பக்கத்துல இருக்கத் தைரியத்துல தான் ஆர்த்தியால இங்க தனியா இருக்க முடியுது.” என நடேசன் சொன்னதும், “அப்படியெல்லாம் இல்லைங்க உங்க பொண்ணு தான் எனக்கே தைரியம் தந்தா… அவ எந்த இடத்துலையும் இருந்துப்பா நீங்க கவலைப்படாதீங்க.” என்றார்.

நடேசனை தங்கள் வீட்டிற்கு இரவு உணவுக்கு அழைத்தனர். அடுத்த முறை வருவதாகச் சொன்ன நடேசன், மறுநாள் பள்ளி இருப்பதால்… அன்று இரவே ஊருக்குச் சென்றுவிட்டார்.

அவரும் ஆர்த்தியும் ஆட்டோவில் பேருந்து நிலையம் செல்ல… கூடவே சரத்தும் பைக்கில் சென்றான்.

“அப்பா இப்படி வந்திட்டு அன்னைக்கே திரும்பிறது எல்லாம் அநியாயம். ஒரு ரெண்டு நாளாவது இருந்திட்டு போகலாம்.”

“லீவ் இல்லையே மா… அடுத்தத் தடவை இருக்கிற மாதிரி வரேன்.” அவரைப் பேருந்தில் ஏற்றி அனுப்பிவிட்டு சரத்தோடு வீடு திரும்பும் வழியில் ஆர்த்தி, “சரத் நான் ஒன்னு கேட்கிறேன் நீ கோபிக்கக் கூடாது. நம்ம கல்யாணத்துக்குப் பிறகும் நான் இப்போ இருக்கிற வீட்லயே நாம இருந்துக்கலாமா?” என்றாள்.

“நாம தனிக்குடித்தனம் இருக்கணும்னு சொல்றியா?”

“தனிக்குடித்தனமுன்னு இல்லை… சமையல் கூட ஒரே வீட்ல பண்ணிக்கலாம். ஆனா இந்த வீடு இருக்கட்டுமே, அப்பா வந்தா போனா தங்கிக்க வசதியா இருக்கும்.”

“நீ சொல்றது சரிதான். எங்க வீடும் சின்னதுதான். உங்க அப்பா வந்தா தங்க பத்தாதுதான். சரி நான் எங்க வீட்ல பேசிக்கிறேன்.” என்றான்.

மறுநாள் தேவி அலுவலகம் முடிந்து மகளை அழைத்துச் செல்ல வந்திருந்தாள். “நான்தான் நேத்தைக்கு ஆர்த்தி வீட்ல இருந்து வராங்கன்னு சொல்லி இருந்தேனே… நீங்களும் வந்து இருக்கலாமே… உன் தம்பி சார்பா நீயும் இருந்திருந்தா நல்லா இருந்திருக்குமே.” என்றார் கணேசன்.

“சண்டே ஒருநாள் தானப்பா நல்லா தூங்க முடியும். அவங்க காலையிலேயே வேற வந்தாங்க. அதுதான் வரலை.” என்றாள் சலிப்பாக.

இதெல்லாம் ஒரு காரணமா என்பது போலப் பார்த்த கணேசன், “சரி அது போகட்டும், வர வாரம் ஞாயிற்றுக்கிழமை நல்ல நாளா இருக்கு. ஆர்த்தி வீட்டுக்குப் போய்ப் பேசி முடிச்சிட்டு வந்திடலாமா?”

“நாங்க எதுக்கு? நீங்க போயிட்டு வாங்க.” என்றாள் தேவி பட்டும்படாமல்.

“அதுதான அவளையும் எதுக்கு அலைய வைக்கணும்.” என்றார் கோமதியும் புரியாமல்…

“என்ன பேசுற நீ? தம்பிக்கு நிச்சயம் பண்ண அக்கா குடும்பத்தோட வர வேண்டாமா?”

“நாம அவனுக்குப் பொண்ணு பார்த்திருந்தா… நம்ம குடும்பச் சூழ்நிலைக்கு நல்ல இடம் அமைஞ்சிருக்குமான்னு கூடத் தெரியாது. எதோ அவனே ஒரு நல்ல பெண்ணைப் பார்த்து இருக்கான். உங்களுக்கு அவன் நல்லபடியா செட்டில் ஆகிறதுல கூட விருப்பம் இல்லையா…”

“உங்களுக்கு விருப்பம் இருக்கோ இல்லையோ… அவன் எப்படியும் அந்தப் பெண்ணைத் தான் கல்யாணம் பண்ணிப்பான். நீங்க இப்படி விலகி நின்னுட்டு, நாளைக்கு அவன் அந்தப் பக்கமே போயிட்டா அவனைக் குத்தம் சொல்லாதீங்க.”

கணேசன் சொன்ன எல்லாவற்றையும் விட, அவர் கடைசியில் சொன்ன விஷயம் தாயுக்கும் மகளுக்கும் கலகத்தைக் கொடுக்க… எல்லோரும் சேர்ந்தே போயிட்டு வரலாம் என்றனர்.

சரத் வரும்வரையில் தேவி இருந்தாள். வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவனிடம், “இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அப்பா ஆர்த்தி வீட்டுக்குப் போய்ப் பேசி முடிச்சிட்டு வரலாமுன்னு சொல்றார். எங்க கார்லையே போயிட்டு வந்திடலாம்.” என்றாள்.

நேற்று அக்கா வரவில்லை என்ற கோபம் சரத்திற்கும் இருந்தது. ஆனால் இன்று அவளே வந்து பேசியதும், “சரி போகலாம், நான் வேணா வாடகை வண்டி கூடச் சொல்லிடுறேன்.” என்றதற்கு, “இல்லையில்லை எங்க கார்லயே போயிட்டு வந்திடலாம்.” என்றாள்.

“சனிக்கிழமை நைட்டே போகணும் இல்ல….” எனக் கோமதி சொன்னதும், யோசித்த சரத், “எப்படியும் அங்க போய் ரூம் போடணும். சனிக்கிழமை காலையில பத்து மணிக்கு மேல கிளம்பி போனா… சாயங்காலம் அங்க போயிடலாம். ரூம்ல தங்கி ரெஸ்ட் எடுத்திட்டு, காலையில பிரெஷா கிளம்பி போகலாம். திரும்ப அங்க இருந்து மதியம் கிளம்பினா நைட் இங்க வந்திடலாம்.” என்றான்.

“தஞ்சாவூர் வரை போறோம், பெரிய கோவிலுக்குப் போயிட்டு வரணும் டா.”

“ம்ம்… சரி மா போகலாம்.”

மறுநாள் இதை ஆர்த்தியிடம் சரத் சொல்ல…. “நான் இன்னைக்கே எங்க அப்பாகிட்ட சொல்லிடுறேன்.” என்றவள், “சரத் இதையே ஒரு சின்ன நிச்சயமா மாத்திடலாமா.” என்றாள்.

“எங்க வீட்லயும் அது தான் யோசிக்கிறாங்க.”

“அப்போ நிச்சயத்துக்கு மாத்திக்க நாம மோதிரம் வாங்கலாமா?”

“சரி வீட்ல சொல்லிட்டு வாங்குவோம்.”

சரத் நிச்சயம் குறித்து வீட்டில் பேசினான். “ஆர்த்தியும் கூட்டிட்டுப் போய்ப் புடவை மோதிரம் எல்லாம் வாங்கிட்டு வந்திடலாம்.”

“இது நாம வாங்கிறது, இதுக்கு அவ எதுக்கு வரணும்? ஏன் நாம வாங்கிறது அந்த மேடம் போட மாட்டாங்களா?” என்றார் கோமதி குத்தலாக.

“அவ இல்லாம மோதிரம் அளவு பார்த்து வாங்க முடியுமா? எனக்கும் வேற வாங்கனுமுன்னு சொன்னா… அதனால நான் மோதிரம் அவளோட போய் வாங்கிக்கிறேன். புடவை வேணா நீங்க பார்த்து எடுங்க.” என்றவன், கோமதி மேலே பேச வரும்முன் அகிருந்து சென்றுவிட்டான்.

“புடவை அவங்க பார்த்து வாங்கட்டும் எதோ முறைன்னு சொன்னாங்க.” என ஆர்த்தியிடம் அவன் சமாளிக்க…

“சரி அவங்க வாங்கிறதும் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்.” என ஆர்த்தியும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஹப்பா இப்போது தான் சரத்திற்கு மூச்சு வந்தது. இப்படி இரண்டு பக்கமும் தான் காலம் முழுக்கவும் அல்லாட போகிறோம் என அப்போது அவனுக்குத் தெரியவில்லை.

சரத்தும் ஆர்த்தியும் சென்று மோதிரம் வாங்கினர். அவளுக்கு அவன் சின்னதாக வைர மோதிரமே வாங்கி இருந்தான்.

புடவை எடுக்கும் போது சரத்தே தான் தேர்ந்தெடுத்தான். அதுவும் அவன் கடையில் செய்த அழும்பையும், கடத்தியே நேரத்தையும் பார்த்து தேவிக்குக் கால்கள் துவண்டே போனது.

அந்தக் கடையில் உட்கார்து கொண்டு புடவைகள் பார்க்க வசதியாக நாற்காலிகள் இல்லை. தேடி சென்று ஒரு இருக்கையில் உட்கார்ந்து கொண்டவள், “அம்மா அவளையே கூட்டிட்டு வந்திருக்கலாம் மா… இவன் என் காலை உடைச்சிடுவான் போலிருக்கு.” என்றாள் தேவி அசதியாக.

“அதுதான உன் தம்பிக்கு இப்படியெல்லாம் புடவை எடுக்கத் தெரியுமுன்னே எனக்கு இப்ப தானே தெரியும். நம்ம கூட ஒரு நாள் ஜவுளி கடைக்கு வந்திருப்பானா.”

“அம்மா இதுலையே இப்படி இருக்கான். இன்னும் போகப் போக என்ன எல்லாம் பண்ணுவானே… நீ எதிலேயும் தலையிடாதே நான் அவ்வளவு தான் சொல்வேன். நீ சொன்னாலும் அவன் கேட்க மாட்டான். சொல்லி எதுக்குப் பொல்லாதவன்னு பேரை வாங்கிற.”

“ஆமாம் அதுவும் சரிதான். வீடு கூடத் தனியா இருக்கப் போறோமுன்னு சொல்றான். ஆர்த்திக்கு பாதி நாள் வீட்ல இருந்து பார்க்கிற வேலையாம், பொழுதுக்கும் மீட்டிங் இருக்குமாம். இவனும் வீட்ல இருந்து வேலை பார்த்தா ஒரு ரூம்ல ரெண்டு பேர் இருக்க முடியாது. அதனால அவ வீடும் இருக்கட்டுமுன்னு சொல்றான். காசு இருந்தா கொடுத்திட்டு போகட்டும், நமக்கு என்னன்னு நானும் விட்டுட்டேன்.”

“எதிர்ல தான இருக்காங்க. இருந்தா இருந்திட்டு போகட்டும்.” என்றாள் தேவியும்.

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்க அங்கே சரத் வந்தான்.

“என்ன டா புடவை எடுத்திட்டியா?”

“ம்ம்… ஆமா நீங்க என்ன பண்றீங்க இங்க?”

“நின்னு நின்னு கால் வலிக்குது டா… அதுதான் கொஞ்ச நேரம் உட்கார வந்தோம்.” என்றாள் தேவி.

“புடவை கடையில உட்கார்ந்து பார்க்க ஒரு சேர் போட்டிருக்கானா பாரு… அதே நகை கடையில உட்கார பத்து சேர் போட்டு வச்சிருப்பான்.” என்ற தம்பியிடம், “நீ நின்னே இத்தனை புடவை பார்க்கிற. உட்கார்ந்து வேற பார்த்தா… நைட் வர இருப்ப… உன்னைப் போல ஆட்களுக்குத் தான் சேர் போடலை போல…..” என்ற அக்காவை பார்த்து சிரித்தவன், “ரொம்ப நேரம் ஆச்சா… வா நாம வெளிய போய்ச் சாப்பிட்டு போகலாம்.” என்றான்.

விட்டால் போதும் என்று அவளும் கிளம்பிவிட்டாள். வெளியே வயிறு நிறைய உண்டுவிட்டு தான் வீடு வந்தனர். கணேசன் பேத்தியை பார்த்துக் கொண்டு வீட்டில் இருந்துவிட்டார்.

புடவைக்கு ரவிக்கை தைக்க வேண்டுமே அதைக் கூடக் கோமதி சென்று கொடுக்கவில்லை. சரத் தான் எடுத்துக் கொண்டு சென்றான். புடவையைப் பார்த்தவள், உங்க வீட்ல நல்லா தான் எடுத்திருக்காங்க  என்றாள். நவாப்பழ நிறத்தில பர்பிள் நிற பார்டர் வைத்த புடவை. தான் தேர்ந்தெடுத்ததாக எல்லாம் சரத் சொல்லவில்லை.

கணேசன் சொந்தக்கரர்களிடம் எல்லாம் கடன் வாங்கிப் பிறகு பிரச்சனையாக்கி வைத்திருந்தார். பின்னர் பணத்தைத் திருப்பிக் கொடுத்து இருந்தனர் தான். ஆனால் உறவுகளிடம் ஒரு விரிசல் ஏற்பட்டு இருந்தது.

பெண் பார்க்க மட்டும் செல்லவில்லையே கூடவே நிச்சயமும் செய்வதால்… உறவினர்களை அழைத்துக் கொண்டு சென்றால் தானே நன்றாக இருக்கும். ஆர்த்தி வீட்டில் உள்ளுரில் இருக்கும் உறவினர்களையாவது அழைப்பார்கள்.

ரொம்பவும் யோசித்துக் கணேசனின் தம்பி குடும்பத்தையும் கோமதியின் அக்கா குடும்பத்தையும் அழைத்தனர். இருவருமே சென்னையில் இல்லை. அதனால் இவர்களுக்குக் கூட அழைத்துச் செல்லும் வேலை இல்லை. சரத் அவர்களுக்கு ட்ரெயினில் டிக்கெட் போட்டுக் கொடுத்துவிடுவதாகச் சொன்னான்.

கணேசன் மீது வருத்தம் தான். ஆனால் சரத் மீது அன்பு உண்டு. தந்தையின் கடனை பொறுப்பேற்றுத் திருப்பிக் கொடுத்தவனும் அவன்தான். சொத்துக்களை விற்றுத்தான் கொடுத்து இருந்தான். இப்போதும் அவர்கள் வரவேண்டும் என்பதற்காகத் தானே டிக்கெட் கூடத் தானே போடுகிறேன் என்று சொல்கிறான் என்று நினைத்தவர்கள், டிக்கெட் எல்லாம் வேண்டாம். நாங்க எங்க காரிலே வந்திடுறோம். அதுதான் வசதி என்றனர்.

அபார்ட்மென்டில் நிறையப் பேருக்கு விஷயம் தெரியும். திருமணதிற்கு அழைத்துக்கொள்ளலாம் என இப்போது யாருக்கும் சொல்லவில்லை. ஆனால் ஆர்த்தி ஷ்யாமளா ஈஸ்வரை மட்டும் தனிப்பட்ட முறையில் அழைத்துக்கொண்டு, தனது நிச்சயத்திற்கு வெள்ளிக்கிழமை இரவே ரயிலில் தஞ்சாவூருக்கு பயணமானாள்.