ஆர்த்தியின் அலுவலகம் தாண்டித்தான் சரத்தின் அலுவலகம். அதனால் அவளை அவனே அலுவலகத்தில் விட்டுவிட்டு மாலையும் அவனே அழைத்து வந்து விடுவான். வரும் வழியிலேயே ஒரு இடத்தில் நிறுத்தி, காபி சிற்றுண்டி அருந்தியபடி இருவரும் பேசிக் கொண்டிருந்துவிட்டு வீடு திரும்புவார்கள்.
“என்ன உங்க பையன் பொண்டாட்டியை அலுவலகத்திற்கு அழைச்சிட்டு போற மாதிரி தினமும் அவளைக் கூட்டிட்டுச் சுத்துறான். அவ நல்ல வேலையில வேற இருக்கா… நல்லா வசதினும் பார்த்தாலே தெரியுது. உங்க பையனை ஆசைகாட்டி ஏமாத்திட போறா.” என வத்சலா கோமதியிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தவர், மகளிடம் வேறு மாதிரி பேசினார்.
“ஊர்ல இருக்கிற எல்லாம் லவ் பண்ணுது. இந்த வீட்லயும் ஒன்னு இருக்கே….” என அவர் சொன்னதும், “யாரு மா லவ் பண்றது?” என்று ஆர்வமாகக் கேட்ட நந்தினியை பார்த்து முறைத்தவர், “நல்லா வக்கனையா கேளு. ஆர்த்தியும், சரத்தும் தான்.” என்றார்.
“ம்ம்… வயசு காலத்துல லவ் மட்டும் பண்ணிடாதன்னு சொன்ன… இப்போ முப்பது வயசுல யாரையாவது லவ் பண்ணியிருக்கக் கூடாதுன்னு சொல்ற. இப்போ எங்க இருந்து பையன் கிடைக்கும்? ஆனா எனக்குப் பையன் கிடைக்கலைனாலும் பரவாயில்லை. தனியா இருக்கிறது கூட ஜாலியா தான் இருக்கு.”
“அதுதான் அண்ணா இருக்கானே…. அப்புறம் என்னோட ப்ரண்ட்ஸ் இருக்காங்க.”
“இப்போ இருப்பாங்க அப்புறம் அவங்க சொந்த குடும்பத்தைப் பார்க்கவே நேரம் இருக்காது. அதனால இது மாதிரி எல்லாம் பேசாத தெரியுதா.”
நந்தினிக்கு ஆரம்பத்தில் நல்ல நல்ல வரன்கள் வரவே செய்தது. இவர்கள் அதையும் நுணுக்கமாக ஆராய்ந்து தட்டி கழிக்க… இப்போது வயதும் அதிகம் ஆகிவிட்டதால்… வரன்கள் எதுவும் சரியாக வரவும் இல்லை. நந்தினியும் ஆள் கனமாக இருப்பாள். உடம்பை குறை என்றால் கேட்டால் தானே…. உட்கார்ந்து வேலை பார்ப்பதும், வேளைக்கு விரும்பியதை நன்றாக வாங்கி உண்பதும் என்று உடலை பெருக்க வைத்திருந்தாள்.
மகனுக்குத் திருமணம் முடிந்து மருமகள் பேரப்பிள்ளைகள் இருக்க….மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதே வத்சலாவுக்குப் பெரிய கவலையாக இருந்தது.
அந்த வார இறுதி ஆர்த்தி ஊருக்குச் சென்றிருக்க… சரத் வீட்டில் இருந்தான்.
என்ன இன்னைக்கு ஒன்னும் எடுபிடி வேலை இல்லையா எனக் கோமதி கிண்டலாகக் கேட்க…. சரத்திற்குப் புரிந்தாலும் பதில் சொல்லாமல் இருந்தான்.
“பாரு அவ உன்னை ஏமாத்திட்டு தான் போகப் போறா?” என்றதும்,
“எப்படிச் சொல்றீங்க?” என்றான்.
“பின்ன உன்னைவிட அவளுக்கு நல்ல வேலை, நல்ல சம்பளம். உன்னை விட வசதியான பையன் வந்தா உன்னைக் கழட்டி விட்டுட்டு போறாளா இல்லையா பாரு.”
“அப்படி நடக்கும் போது பார்த்துக்கலாம்.” என்றான் சரத் அலட்சியமாக.
“நாம இருக்கச் சூழ்நிலைக்கு நம்ம சொந்தகாரங்களே பொண்ணு கொடுக்க யோசிப்பாங்க. அவன் லவ் பண்ணி கல்யாணம் பண்ணா பண்ணிட்டுப் போறான். நீ எதுவும் சொல்லாத.” என்றார் கணேசன்.
“அப்படியா சொல்றீங்க?” என்று கணவரை பார்த்து கேட்டவர், மகனை பார்த்து,”உங்க அப்பா சொல்றது போல…உனக்கு ஒரு நல்லது நடந்தா போதும்.” என்றார்.
“அம்மா அவ வேலையைப் பார்த்தோ, இல்லை அவ வசதியானவனோ நான் அவளை விரும்பலை. எனக்கு அவளை முன்னாடியே பிடிக்கும். அதை மனசுல வச்சுக்கோங்க. அதை விட்டுட்டு வேற மாதிரி பேசினா எனக்குக் கோபம் வந்திடும் சொல்லிட்டேன்.” என்றான் எச்சரிப்பது போல.
ஆர்த்திச் சரத்திற்கு வேறு வேலை கிடைக்க வேண்டும் என்றெல்லாம் காத்திருக்கவில்லை. அவள் அப்பாவிடம் சரத்தை விரும்புவதைப் பற்றிச் சொல்லிவிட்டாள்.
அவள் அப்பாவும் அவருக்குத் தெரிந்தவர்கள் மூலம் சரத்தின் குடும்பத்தைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டவர், “கடன் இருக்கும் போலையே.” என்றதற்கு.
“தெரியும் பா… சரத் எல்லாம் சொல்லி இருக்கார். ஆனா இங்க சென்னையில இருக்க வீடு சொந்த வீடு தான். ரெண்டு பேரும் சம்பாதிக்கிறோம் சீக்கிரம் கடனை அடைச்சிடுவோம் பா…” என்றவள், நீங்க நேர்ல வாங்கப்பா பேசிக்கலாம்.” என்றாள்.
“இப்பவே ஏன் உன் அப்பாகிட்ட சொன்ன… வேற வேலை கிடைக்கிற வரை வெயிட் பண்ணி இருக்கலாமே எனச் சரத் சொன்னதற்கு.
“இப்போ ஒன்னும் நீ வேலையில இல்லாம இல்லை. வேற வேலை கிடைக்கும் போது கிடைக்கட்டும். நாம பார்த்துக்கலாம்.” என்றாள்.
அவள் அப்பாவும் மறுவாரமே கிளம்பி வந்துவிட்டார். சரத்தே காலையில் கேளம்பாக்கம் பஸ் நிலையம் சென்று அவரைத் தனது பைக்கில் அழைத்து வந்தான். வரும் வழியில் அவரைக் காபி குடிக்க ஒரு கடையில் நிறுத்த, “ஏன் வீட்டுக்குப் போய்க் குடிச்சிக்கலாமே என அவர் சொன்னதற்கு,
“உங்க பொண்ணு உங்களைப் பார்த்த சந்தோஷத்துல பேசிட்டு வேணா இருப்பா… காபி எல்லாம் உடனே கிடைக்காது. அதோட இங்க காபி நல்லா இருக்கும்.” என்று அவன் சொன்னதும், அவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
உண்மையிலேயே காபி அந்தக் கடையில் நன்றாக இருந்தது.
“காபி குடிக்கும் போதே, அவன் வேலை, சம்பளம். குடும்ப நிலவரம் எல்லாம் சொல்லிவிட்டான். ஆனால் அவன் தந்தையைப் பற்றிக் குறைவாக எதுவும் சொல்லவில்லை.”
கூடப் பிறந்த அக்கா இருக்கிறாள், அவருக்குத் திருமணமாகி மகள் இருக்கிறாள் என அவர்கள் குடும்பம் பற்றியும் சொன்னான்.
இருவரும் வீடு வந்த போது நன்றாக விடிந்துவிட்டது. இவ்வளவு நேரம் என்ன பண்ணீங்க? என ஆர்த்தி முகத்தைச் சுருக்கிக் கொண்டு கேட்க…
உங்க அப்பாவை பார்க்க இவ்வளவு ஆர்வம் இருந்தா, நீயும் பஸ் ஸ்டான்ட் வந்திருக்கனும்.” என்றவன் வாசலோடு கிளம்ப….
“உள்ள வந்து காபி குடிச்சிட்டு போ.” என்றாள்.
“வர்ற வழியில நல்ல காபி குடிச்சிட்டோம்.” என்றதும், என்ன நல்ல காபி?” என ஆர்த்தி, அவள் கைகளைக் கட்டிக் கொண்டு கதவில் சாய்ந்து நின்றபடி கேட்க….
“சரி மாமா நான் கிளம்புறேன். நீங்க ரெஸ்ட் எடுங்க.” எனச் சொல்லிவிட்டு சரத் சென்றுவிட்டான்.
“பையன் நல்ல பையனா தான் இருக்கான். கொஞ்சம் வேடிக்கையா பேசுவானோ…” என்றார் நடேசன்.
“கொஞ்சம் இல்லை ரொம்பவே பேசுவான்.”
“பொறுப்பான பையனா தான் இருக்கான். நைட் எப்போ சாப்பிட்டிருபேன்னு நிறுத்தி, ஒரு காபி வாங்கிக் கொடுத்துதான் கூட்டிட்டு வந்தான். ஆனா அவங்க வீட்ல எப்படி?”
“எங்க விஷயம் தெரிஞ்ச பிறகு, அவங்க அம்மா சந்தோஷமா எல்லாம் காட்டிக்கலை. ஆனா அவங்களைத் தப்பாவும் சொல்ல முடியாது. என்னன்னா என்னன்னு இருப்பாங்க.” என்றாள்.
“ரொம்ப இழஞ்சு பேசுறவங்களையும் நம்ப முடியாது. நாங்க உங்க பெண்ணை அப்படிப் பார்த்துக்கிறோம், இப்படிப் பார்த்துகிறோம்னு சொல்வாங்க, பின்னாடி அவங்க தான் குறையும் சொல்வாங்க. அதனால பார்க்கலாம்.” என்றவர், குளிக்கச் சென்றுவிட்டார்.
வெண்பொங்கல் சட்னி சாம்பார் செய்தவள், அவர் குளித்துவிட்டு வந்ததும் உணவு பரிமாறினாள். சாப்பிட்டு முடித்துச் சற்று ஓய்வு எடுத்ததும், மகளையும் அழைத்துக் கொண்டு சரத் வீட்டிற்குச் சென்றார்.
கணேசனும் கோமதியும் அவரை நன்றாகத் தான் வரவேற்றுப் பேசிக்கொண்டு இருந்தனர்.”
உண்ண பலகாரங்கள் எல்லாம் எடுத்து வைத்தனர். கோமதி டீ போட்டுக் கொண்டு வந்து கொடுத்தார்.
“நாங்களே வந்து பேசனுமுன்னு தான் இருந்தோம்.” என்றார் கணேசன்.
“நம்ம ஊருக்கு வாங்க, வந்து எங்க வீட்டை, ஆளுங்களைப் பாருங்க.” என அவர் அவர்களைத் தங்கள் ஊருக்கு அழைக்க….
“தஞ்சாவூருக்கா வர சொல்றீங்க. அவ்வளவு தூரம் அலைய முடியாது. இங்க இருக்க வீட்டுக்கே வரோம்.” என்றார் கோமதி.
அது எப்படி முறையாகும் என நடேசன் யோசிக்க,
“இல்லை நாங்க தஞ்சாவூருக்கே வரோம்.” எனக் கணேசன் உடனே ஒத்துக் கொண்டார். எதோ சொல்ல வந்த மனைவியையும் பார்வையால் அடக்கினார்.
நடேசன் அவரது குடும்பம் வேலை பற்றிச் சொல்ல… கணேசனும் அவர்கள் குடும்பத்தைப் பற்றிச் சொல்ல… கோமதி மகள் வீட்டு பெருமையைப் பற்றி மட்டுமே பேசினார். காதல் திருமணமாக இருந்தாலும், இது போல ஒரு மருமகன் கிடைக்காது என அளந்து விட்டுக் கொண்டு இருந்தார்.
சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு நடேசனும் ஆர்த்தியும் கிளம்பிவிட்டனர். அவர்கள் சென்றதும், “உனக்கு அறிவு இருக்கா இல்லையா? அவங்க வீட்டுக்குப் போய்த் தானே சம்பந்தம் பேசணும். வர முடியாதுன்னு சொல்ற. அவர் என்ன நினைப்பார்?” எனக் கோமதியைக் கணேசன் கடிந்து கொண்டார். அது கோமதிக்குக் கோபம் வந்துவிட்டது. அவர் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இருந்தார்.
அந்த நேரம் பார்த்துக் கைபேசியில் சரத்தை ஆர்த்தி அழைத்தாள்.
இப்போது ஏன் உடனே அழைக்கிறாள் எனச் சரத் யோசித்தபடி எடுக்க….
“டேய் உங்க அம்மா ஒரு உருண்டை தந்தாங்களே… அது அவங்க பண்ணதா இல்லை கடையில வாங்கினதா?” என அதி முக்கியமான கேள்வி ஒன்றை அவள் கேட்க…
“ஏன் அவங்க பண்ணது தான்.” என்றான்.
“ரொம்ப நல்லா இருந்தது டா… எனக்குக் கொஞ்சம் எடுத்திட்டு வந்து தரியா?”
“சரி வை.” என்றான்.
கோமதி வேறு முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இருக்க… அவரிடம் கேட்க பயமாக இருக்க… அவனே அவருக்குத் தெரியாமல் ஒரு கவரில் போட்டு எடுத்துக் கொண்டு சென்று கொடுத்தான்.
“தேங்க்ஸ், அப்புறம் காலி ஆகிடுச்சுனா… அதுதான் உடனே கேட்டேன்.” என வாங்கி வைத்துக் கொண்டாள்.
காலையில் உணவு சமைத்ததே மகள் களைத்து போய் இருப்பாள் என நினைத்த நடேசன், “மதியம் வெளிய போய்ச் சாப்பிடலாம்.” என்றதும்,
“சரத்தையும் கூட்டிட்டு போகலாம்.” என்றவள், “உங்களுக்கு அவன் கூட இன்னும் கொஞ்ச நேரம் பேச நேரம் கிடைக்கும்.” எனக் காரணமும் சொன்னாள்.
மதியம் மூவரும் வாடகை கார் பிடித்து வெளியே உணவகத்திற்குச் சென்றனர்.
சரத்தும் ஆர்த்தியும் அருகருகே அமர்ந்துகொள்ள… எதிரில் நடேசன் உட்கார்ந்து கொண்டார்.