Advertisement

பந்தம் – 9

பொங்கல் விழாவிற்கான வேலைகள் நெட்டி முறித்தன. ஒருவாரம் முன்பு வர சொன்ன நேரத்திற்கு வரமால், உடல் முழுக்க வியர்வையில் குளித்து தாமதமாய் வந்திருந்த வேலனை கல்லூரி முதல்வர் வாயிலில் நிற்க வைத்து வாயால் பொங்க வைத்து அனுப்பிய சம்பவம் அவர்கள் வகுப்பறைக்கு முக்கிய செய்தியானது. 

சோர்ந்து வந்து அமர்ந்தவனிடம், “பேன் போடுங்க பாவம் வேர்க்கும்.’’ என்று சங்கரியும், “காத்தடிக்கணும்… இல்லன்ன வேர்க்க தானே செய்யும்.” என்று மதியும், “இங்க உனக்கு இப்ப குவாக்… குவாக்… சத்தம் கேக்குது.’’ என ரேணுவும், “வியர்வை வழிஞ்சா துடச்சிட்டு மேக்கப் போடணும் மேக்கப்.’’ என மகிழும் லந்து கொடுத்து கொண்டிருந்தனர். 

‘அட களவாணி கூட்டமே.’ என்று அவர்களை அதிர்ந்து பார்த்தவன், உற்று பார்த்தால் அதற்கும் ஏதாவது சூனியம் வைப்பார்கள் என்பதை அனுபவத்தில் உணர்ந்து, முகத்தை வேகமாய் திருப்பிக் கொண்டான்.   

அதன் பிறகு பொங்கல் விழாவில் எந்த தொய்வும் இல்லை. அழைப்பிதழ் கொடுப்பதில் ஆரம்பித்து, வாயிலையே அடைக்கும் வர்ண கோலம் தீட்டுவது முதல், பொங்கல் பானை, பொங்கல் வைக்க தேவையான பொருட்கள், மாவிலை தோரணம், பொங்கல் விளையாட்டு மற்றும் கலை நிகழ்சிகள் என அனைத்தையும் ஒருங்கிணைப்பதற்குள் மல்லிக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிவிட்டது. 

பொங்கல் சமயம் கல்லூரி விடுமுறை என்பதால் பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே கல்லூரியில் சமத்துவ பொங்கல் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அது தொடர்பாக கடந்த பத்து நாளாக மல்லிக்கு சரியான அலைச்சல். கூடவே வேலனும் சரி சமமாக வேலை பார்க்க, ‘வாய் பேசினாலும் பயபுள்ள வேலை ஒழுங்கா பாக்குது. அதுவரை நான் பொழைச்சேன்.’ என்று மல்லி மனதிற்குள் மகிழ்ந்து போனாள். 

இவர்களின் பத்து நாட்கள் திட்டமிடல் நாளை கொண்டாட்டமாக விடிய இருக்கிறது. இன்றைக்கு வகுப்பு வாரியாக கோலப்போட்டி நடை பெற்றுக் கொண்டிருந்தது. பேசிக் பி.எஸ்.சி படிக்கும் நான்கு வருட  மாணவிகள் தனித்தனியாகவும், போஸ்ட் பேசிக்கில் இருந்த இரண்டு வருட மாணவிகள் தனித் தனியாகவும் போட்டியில் களம் கண்டனர். 

இவள் வகுப்பு மாணவிகள் மும்பரமாக குனிந்து கோலம் போட்டுக் கொண்டிருக்க, மகிழும், மதியும் கூட அவர்களுக்கு உதவி கொண்டிருந்தனர். கல்லூரி நேரம் முடிந்திருந்தது ஆகையால் ரேணுவும், சங்கரியும் வீட்டிற்கு கிளம்பியிருந்தனர்.   

அவரவர் வகுப்பு மாணவிகளை சுற்றி, வகுப்பு மாணவர்கள் நின்று கொண்டிருந்தனர். அவ்வப்போது அவர்கள் கேட்கும் பொருட்களை கடையில் வாங்கி வந்து கொடுத்து கொண்டிருந்தனர். 

மல்லி, இவர்களின் உணவகத்தில் நாளைக்கு தாயார் செய்யப்பட வேண்டிய பொங்கல், மற்றும் சுண்டலின் அளவை குறித்து கொடுத்துவிட்டு, அதற்கு தேவைப்படும் முன் பணத்தை கட்டி விட்டு வந்தவள், காலையிலிருந்து அலைந்ததின் பயனாய் கால் கடுக்க, அங்கிருந்த நாற்காலியொன்றில் அமர்ந்தாள். 

அதே நேரம் அவளின் முன் சூடான தேநீர் கோப்பை நீட்டப்பட்டது. இவள் நிமிர்ந்து பார்க்க, ரஞ்சன் அங்கே நின்று கொண்டிருந்தார். ரஞ்சன் இவள் வகுப்பில் உடன் பயிலும் மாணவர் தான். இவளை விட இரண்டு வருடம் மூத்தவர். 

இவள் சங்க பொறுப்புகளை கவனிக்க ஆரம்பித்த ஆரம்ப நாட்களில், இவள் அதிகம் வேலனுடன் பேசமாட்டாள். இவளின் தயக்கத்தை புரிந்து கொண்ட வேலன், ரஞ்சனை மல்லியுடன் துணைக்கு அனுப்பி வைப்பான். 

முதலில் ரஞ்சனும் இவளிடம் தயங்கி தயங்கி தான் பேசினார். அதன் பிறகு இவளின், “அண்ணா…’’ என்ற சகஜ அழைப்பில், அவரும் இவளை தங்கையாய் ஏற்று கொண்டு, “ஏ… கழுத…’’ என்று பாசமாக அழைக்க துவங்கியிருந்தார். 

‘கழுத’ என்ற வார்த்தை வசவு சொல் வகையில் தான் வரும். ஆனால் ரஞ்சன் அதை உச்சரிக்கும் வாஞ்சையில் உள்ளம் அப்படியே பாச நெகிழ்வில் குழைந்து போகும். தன் முன் நீண்டிருந்த தேநீர் கோப்பையை அவள் பெற்றுக் கொள்ள, “கழுத… நாளைக்கு சீக்கிரம் வந்துரு. காலைல தான் சாமிப்படத்துக்கு பூவெல்லாம் வாங்கி அலங்காரம் செய்யணும். பாகீரதி மேடம் வேற இன்னைக்கு நைட் ஹாஸ்டல்ல தங்குறாங்க போல. லேட்டா கீட்டா வந்து அவங்க கண்ல சிக்கிறாத.” என்று அவளை எச்சரித்து கொண்டிருந்தார். 

இவள் ‘சரி’ என்பதின் அறிகுறியாய் தலை அசைக்க,  அதே நேரம் கோலத்தில் மத்தியில் பூக்களை வைத்து அலங்கரித்து கொண்டிருந்த மகிழ், நிமிர்ந்து பார்த்தாள். மல்லியின் அருகில் ரஞ்சன் நிற்பதும், அவள் கையில் தேநீர் கோப்பை இருப்பதையும் கண்டவள், “புது தங்கச்சி வந்ததும், பழைய தங்கச்சியை மறந்துட்டீங்க இல்ல. இருங்க செந்தாமரை அக்காகிட்ட சொல்லி கொடுக்கிறேன்.’’ என்று போலியாக கோபித்தாள். 

“அட கழுத… உனக்கும் ப்ளாஸ்க்ல இருக்கு. கோலம் போட்டு முடிச்சதும் கொடுக்கலாம்னு இருந்தேன்.’’ என்று அவசர அவசரமாக சரணடைய, அவளுக்கு அருகில் கோலத்தில் கடைசி கட்ட அலங்கார வேலையில் மும்பரமாயிருந்த செந்தாமரை, ‘அந்த பயம் இருக்கட்டும்.’ என்ற ரீதியில் நிமிர்ந்து பார்த்தார். 

கணவன் மனைவி இருவரும் ஒன்றாக போஸ்ட் பேசிக் படிக்க வந்திருந்தார்கள். அவர்கள் டிப்ளோமோ ஒரே கல்லூரியில் படித்து, காதல் மணம் புரிந்த தம்பதிகள். அதே கல்லூரியில், மகிழும் அவர்களின் இளைய மாணவியாய் பயின்றிருந்ததால் அவர்களை அவளுக்கு நல்ல பழக்கம். 

ஆக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், ரஞ்சனை ஓட்டிக் கொண்டிருப்பாள். தன் பணி முடிந்ததும், கோல மாவு துகள்களை கைதட்டி ஊதிவிட்ட தாமரை, “உங்க அண்ணன் தொங்கசிச்களுக்கு மட்டும் தான டீ வாங்கிட்டு வந்து இருக்காரு. இன்னைக்கு அவருக்கு நைட்டு டிபன் உங்க வீட்ல தான் மகிழு. அதை நீயே அங்க சொல்லிரு.’’ என்று விட்டு கை கழுவ, பெண்கள் கழிவறைப் பக்கம் நகர்ந்துவிட, ரஞ்சனின் முகம் அஷ்ட கோணலாய் சுருங்கியது. 

அவரின் நிலை கண்ட மல்லியும், மகிழும் வாய் விட்டு சிரிக்க, “இது உங்களுக்கு தேவையா அண்ணா. வாங்கிட்டு வந்த உடனே அவங்களை கூப்பிட்டு கொடுத்திருந்தா என்ன…?’’ என்றாள் மல்லி. 

“ஏ…! காலேஜ்ல என்கிட்ட அதிகம் பேசவே மாட்டா. யாராச்சும் ஏதாச்சும் சொல்லிடுவாங்கன்னு என் பைக்ல கூட ஏறுறது இல்ல. என்னவோ நான் கொடுமைக்காரன் மாதிரி நீ பேசுவ.’’ என்று ரஞ்சன் சலித்து கொண்டார். 

“சரி… சரி வீட்டுக்கு போனதும் காபி போட்டு கொடுத்து சரண்டர் ஆயிடுங்க.’’ என்று சொன்ன மல்லி, காலி கோப்பையை தூக்கி குப்பை தொட்டியில் போட்டு விட்டு, கோலங்கள் எல்லாம் போட்டு முடிந்தாயிற்றா என்று பார்க்க சென்றாள். 

மாணவிகள் கோலத்தின் கடைசி அலங்காரத்தில் இருக்க, “இன்னும் பைவ் மினிட்ஸ் தான் டைம்.’’ என்று அவர்களுக்கு நேரத்தை அறிவித்துவிட்டு, நடுவர்களாய் முடிவு செய்யப்பட்டிருந்த பேராசிரியர்களை அழைத்து வர சென்றாள். 

பேராசிரியர் சுமதியும் அவரோடு தமிழ் மன்ற நிர்வாகி பேராசிரியர் யமுனாவும் கோலங்களை கண்டு தீர்ப்பெழுத வந்தனர். நடப்பது பொங்கல் விழா என்பதால் மற்ற மாணவிகள் அனைவரும் ஐவகை தமிழ் நிலங்களையும், விவசாயத்தையும் முன்னிலைப்படுத்தி கோலத்திற்கான கருவை அமைத்திருந்தனர். 

ஆனால் மல்லி வகுப்பு மாணவிகள் பானையின் மையத்தில் பெண் சிசு ஒன்று கருவறையில் இருப்பதை போல வரைத்து, பொங்கும் பானையின் ஒரு புறம் அவள் சிறகில் தேவதையாய் பறப்பதை போலவும், மறுபுறம் அடிமை சங்கிலி அவள் பாதங்களை பிணைத்திருப்பதை போலவும் வரைந்திருந்தனர். 

அதன் கீழே, ‘சமத்துவ பொங்கலில் பொங்கிவரட்டும் பெண் சுதந்திரம்’ என எழுதி வைத்திருந்தனர். பசும் இலை தழைகள் மற்றும் பூக்கள் கொண்டு வெகு அழகாக கோலத்தை அலங்கரித்து வேறு வைத்திருந்தனர். 

கோலப்போட்டியின் முடிவுகள் அன்றைக்கே அறிவிக்கப்பட, மல்லியின் வகுப்பு மாணவிகளுக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டது. கோலத்தின் குழு தலைவி செந்தாமரையை சூழ்ந்து நின்று, கை தட்டி, ஆரவார குரல் எழுப்பி மற்ற மாணவர்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். 

அடுத்த பரிசு, ஐவகை நிலத்தை காட்சி படுத்தியிருந்த மாணவிகளுக்கும், மூன்றாம் பரிசு, தமிழர் வாழ்வியலை மையப்படுத்தியிருந்த மாணவிகளுக்கும் அறிவிக்கப்பட்டது. ஒருவழியாய் இவர்கள் கல்லூரியை பூட்டி விட்டு கிளம்பும் போது நேரம் மணி ஆறை கடந்திருந்தது. 

மதி இவர்களிடம் விடை பெற்று வீட்டிற்கு கிளம்ப, மல்லியும் மகிழும் மகிழுடைய வீட்டிற்கு கிளம்பினர். அன்றைக்கு ஒரு நாள் மகிழின் வீட்டில் தங்கிய போது, சுந்தர் வந்து அழைத்து சென்றுவிட, அது மகிழுக்கு ஒரு நெருடலை தந்திருந்தது. 

ஆக இருவருக்கும் தனிமை கிடைத்த போது, “ஆமா…! நீ எங்க வீட்ல தங்க போறதை அன்னைக்கு உங்க மாமாவுக்கு போன் போட்டு சொன்னீயா…?’’ என்று கேட்டாள். அவளின் கண்களை தவிர்த்த மல்லி, “அதெல்லாம் வீட்டுக்கு தகவல் கொடுக்க தான் செஞ்சேன். உனக்கு தெரியாதா…?’’ என்றாள் மொட்டையாய். 

“நீ உங்க அத்தைக்கு தானே போன் போட்டு சொன்ன. அண்ணாவுக்கு அட்லீஸ்ட் ஒரு மெசேஜ் ஆச்சும் அனுப்பி வச்சியா…?’’ என்றாள் மற்றவளின் முகத்தை ஆழப் பார்த்து. மல்லி மெளனமாக இருக்க, அந்த மௌனமே மகிழின் கேள்விக்கான விடையை சொல்லியது. 

அவளை கூர்ந்து பார்த்த மகிழ், “நீ செஞ்சது ரொம்ப தப்பு மல்லி. நீ தகவல் சொல்லாம விட்டது அவருக்கு அவரை உதாசீனப்படுத்தின மாதிரி தோணியிருக்கும். அதனால தான் அன்னைக்கு வம்படியா கிளம்பி வந்து உன்னை கூட்டிட்டு போயிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.’’ என்றாள். 

“அதெல்லாம் ஒண்ணுமில்ல. நான் என்ன செஞ்சாலும் அவருக்கு குத்தம் தான். வேண்டாத பொண்டாட்டி கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் கணக்கு தான்.’’ என்றாள் மல்லி சலிப்புடன். 

உடனே அவளைப் பார்த்து கிண்டலாய் சிரித்த மகிழ், “ஓ… கை காலே படாம தான் மூணு குட்டிகளுக்கு அம்மாவ மேடம் சுத்திட்டு இருக்கியோ.’’ என்றாள் குறுஞ்சிரிப்புடன். 

‘அடப் போடி. பிள்ள பெத்துட்டாலே புருஷன் பொண்டாட்டி வாழ்க்கை சரியா இருக்குன்னு நினைக்கிற எல்லார் மாதிரியும் தானே நீயும்.’ என்று மனதிற்குள் நினைத்து கொண்டவள், எதுவும் பேச விரும்பாமல் விலகிப் போனாள். 

ஆனால் மகிழுக்கு அந்த பேச்சு வார்த்தையை பாதியில் முறிக்க மனமில்லை. சுந்தர் மல்லியை அழைத்து செல்ல வந்த போது, அவன் கண்களில் மகிழ் நேர்மையை கண்டாள். அதோடு மல்லியை நோக்கும் போதெல்லாம் அவன் விழிகள் நேசத்தை பிரதிபலிப்பதையும் உணர்ந்திருந்தாள். 

மதி சொல்வதை போல மல்லியின் கணவன் தான் என்ற  அகந்தை கொண்ட மனிதன் என்றெல்லாம் அவளால் எண்ணி கூட பார்க்க முடியவில்லை. இருவருக்கும் இடையில் மற்றவர் அறியாத ஏதோ ஓர் பிரச்சனை களையாக வளர்ந்திருப்பதை உணர்ந்தவள், அதை முடிந்த அளவு வேரறுக்க முயன்றாள். 

முன்னால் நடந்து கொண்டிருந்த மல்லியின் பின்னால் நடந்த மகிழ், “சரி… சரி… மேடம் முருங்கை மரம் ஏறாத. நான் இனி எதுவும் பேசல போதுமா. ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் சொல்றேன். அதை செஞ்சி பாரு. ரிசல்ட் என்ன வருதுன்னு பார்த்துட்டு உங்க மாமாவுக்கு நீ அவர் வேண்டுற பொண்டாட்டியா… இல்ல வேண்டாதா பொண்டாட்டியான்னு ஈசியா சொல்லிடுறேன்.’’ என்றாள். 

‘இவளோட…’ என்று மல்லி மனதிற்குள் அலுத்துக் கொண்டாலும், “சரி சொல்லு. நான் என்ன செய்யணும்…?’’ என்றாள் கேள்வியாய். 

“இது சமத்து குட்டிக்கு அழகு. இன்னும் மூணு நாள்ல பொங்கல் செலிப்ரேசன் வரப் போகுதுல்ல. செலிப்ரேசனுக்கு முதல் நாள் எல்லாத்தையும் ரெடி செய்ய கண்டிப்பா உனக்கு லேட் ஆகும். அதனால அன்னைக்கு நைட் எங்க வீட்ல தங்க நீயே நேரடியா உன் ஹப்பிகிட்ட பர்மிசன் கேளு.’’ என்றாள். 

‘அந்த மனுசன்கிட்ட நான் பேசிட்டாலும். அதை அவர் பொறுமையா கேட்டுட்டாலும்…’ என்று மனதிற்குள் அலுத்து கொண்டவள், “சரி நான் பர்மிசன் கேக்குறேன். சப்போஸ் நெகடிவ் பதில் வந்தா இதுக்கு மேல நீ என்கிட்ட எங்க மாமா பத்தி பேசவே கூடாது.’’ என்றாள் கண்டிப்புடன். 

“டீல் ஓகே.’’ என்றவள் விரல்களை உயர்த்தி காண்பித்து விட்டு, மகிழ் நகர, அவள் சென்ற பிறகே ஏன் இதற்கு ஒத்து கொண்டோம் என்ற மலைப்பு மல்லிக்கு தோன்றியது. பொய்யாக சுந்தர் சம்மதிக்கவில்லை என்று சொல்லிவிடலாமா… என்று கூட எண்ணிப் பார்த்தாள். 

ஆனாலும் தோழியிடம் பொய்யுரைக்க அவள் மனம் விரும்பவில்லை. அதோடு நேரடியாக சுந்தரிடம் பேசித் தான் பார்ப்பது என்ற உள் உரத்தையும் வளர்த்து கொண்டவள், அன்றைக்கு இரவு வெகு நேரம் உறங்காமல் அதே சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். 

அவள் உறங்கினாள் அவள் அருகில் சென்று உறங்கலாம் என்று காத்திருந்த சுந்தரின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாய் காற்றில் கரைய, “தூங்காம என்ன செஞ்சிட்டு இருக்க…?’’ என்றான் கடுப்புடன். 

Advertisement