Advertisement

உடனே பாயில் எழுந்து அமர்ந்தவள், அவள் கண்களை நேராக பார்த்து, “மாமா…! இன்னும் மூணு நாள்ல எங்க காலேஜ்ல பொங்கல் செலிப்ரேசன். நான் தான் கிளப் லீடர். அரேஞ்மென்ட்ஸ் எல்லாம் பார்க்கணும். செவ்வாய் கிழமை ஒருநாள் மட்டும் நைட் மகிழ் வீட்ல தங்கிக்கவா. பூரணன் கூட அத்தைகிட்ட தூங்கி பழகிட்டான்.’’ என்றாள் வேண்டுகோளாய். 

மல்லி சுந்தரிடம் அடிக்கடி பேசத்தான் செய்வாள். ஆனால் அதெல்லாம் கண்களை பார்க்காத வெறும் செய்தி பகிர்தல்களாகவே இருக்கும். அதிலும் அந்த செய்திகள் பெரும்பாலும், மளிகை பொருள், காய்கறி, குழந்தைகள் பள்ளி என்ற அளவிலே இருக்கும். 

மல்லி சுந்தரின் கண்களை பார்த்து முதன் முதலில் ஒன்றை வேண்டி நிற்க, சுந்தரின் முகக் கவசங்கள் நழுவி உள்ளிருக்கும் காதலன் எட்டிப் பார்க்க வெகு ஆர்வமாயிருந்தான். ஆனால் வார்த்தைகளால் அடிவாங்கி, மனதில் வடுக்களை சுமக்கும் கணவன் சுந்தர் முயன்று அந்த முக மூடியை இறுக பிடித்தான். 

தொண்டையை லேசாய் செருமி குரலில் இருக்கும் குழைவை விரட்டி அடித்தவன், “வேணா சீனுவை வந்து உன்னை காலேஜ்ல பிக் அப் செய்ய சொல்றேன். வெளி இடத்துல எதுக்கு அடுத்தவங்களுக்கு தொந்தரவு.’’ என்றான் தன் முன்னிருந்த மடிக் கணினியை பார்த்தபடி. 

மல்லியின் முகம் ஏமாற்றத்தில் சுருங்கினாலும், விடாது, “இல்ல மாமா…! மறுநாள் காலைல ஆறு மணிக்கெல்லாம்  அங்க இருக்க சொல்றாங்க. குளிர்ல நாலு மணிக்கு எழுந்து கிளம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு. அதோட சீனு திருப்பதிக்கு ட்ரிப் போறான் போல நம்ம தண்டபாணி பெரியப்பா குடும்பத்தோட.’’ என்றாள் தயங்கி தயங்கி. 

முதன் முறையாக அவள் இவனிடம் அனுமதி வேண்டி நிற்க, சுந்தரால் அதற்கு மேல் தன் மறுக்க முடியவில்லை. கண்டிப்பாய் சொல்பவன் போல, “சரி சரி… அன்னைக்கு ஒரு நாள் உன் பிரண்ட் வீட்ல தங்கிக்கோ. ஆனா இதையே பழக்கமா தொடரக் கூடாது. அம்மாவுக்கும் வயசாகுது. அவங்களை நாம ரொம்ப தொந்திரவு செய்ய முடியாது.’’ என்றான். 

நிலவை கண்ட அல்லியாய் மல்லியின் முகம் மலர்ந்து போனது. சுந்தர் அத்தனை எளிதாக சம்மதிப்பான் என்று அவள் என்னவே இல்லை. முகம் முற்றாக மலர்ந்திருக்க, “தாங்க்ஸ் மாமா.’’ என்றாள். 

மகிழ்ந்து விகசித்த மலர் முகமும்,  புன்னகையில் விரிந்து இதம் பரப்பும் இதழ்களும் அவன் எண்ணத்தை எங்கெங்கோ இழுத்து சென்றன. ஆனாலும் முகத்தில் எவ்வித உணர்சிகளையும் காட்டிக் கொள்ளாமல், “சரி. தூங்கு. காலைல சீக்கிரம் எழுந்து வேலையை பார்க்கணும்.’’ என்றவன் தன் மடிக்கணினியை அணைத்து விட்டு எழுந்தான். 

கணவன் சம்மதம் கொடுத்த மகிழ்வில், திரும்பி படுத்த மல்லி அடுத்த ஐந்து நிமிடங்களில் உறங்கியிருந்தாள். 

அடுத்த நாள் மகிழிடம் தனிமையில் முகம் கொள்ளா புன்னகையோடு நடந்த விசயங்களை மல்லி விவரிக்க, சுந்தருக்கும் மல்லிக்கும் இடையில் விழுந்திருக்கும் சிக்கலின் முடிச்சை வாழ்வில் பல துயரங்களை கடந்து வந்த அவள் இதயம் சரியாக அடையாளம் கண்டது. 

உடனே கண்களை சுருக்கி, “என்ன பர்மிசன் கொடுத்த மாமாவுக்கு பலமா ட்ரீட் கொடுத்தியா.’’ என்று கிண்டலாய் வினவ, “அடிப் போடி. உனக்கு வேற வேலை இல்ல.’’ என்று அங்கிருந்து நழுவ முயன்றாள். 

“சின்னதா ஒரு ஹக். குட்டியா ஒரு கிஸ். இதெல்லாம் கூட கொடுத்து ட்ரீட் வைக்கலைனா நீயெல்லாம் என்னடி பொண்டாட்டி. புருஷன் மட்டுமே ரொமான்ஸ் செய்யணும்னா அவர் என்ன ரோபோவா. ஆக்டிவ் பார்டிசிபன்ட் இல்லைனா வாழ்கையில எல்லாமே போராடிக்கும்.” என்றவள் தோழியின் முக பாவங்களையே உற்று பார்த்துக் கொண்டிருந்தாள். 

நிராசையை முகத்தில் நிரப்பிய மல்லி, “அதெல்லாம் அவருக்கு பிடிக்குமான்னு தெரியலையே. வீட்டை விட்டு வெளிய வந்தா என் கையை கூட பிடிச்சி நடந்து வந்தது இல்ல. எங்க ரொமான்ஸ் கிமான்ஸ் எல்லாம் ரூம்ல நாலு செவுத்துக்குள்ள தான். அதுவும் அவங்க….’’ அதற்கு மேல் அதை எப்படி விவரிப்பது எனப் புரியாது மல்லி மௌனியாகிவிட்டாள். 

இதற்கு மேல் மல்லியிடம் எதையும் கேட்க கூடாது என்று முடிவெடுத்த மகிழ், “சரி…! அதெல்லாம் விடு. நான் ஒன்னு சொல்றேன். ட்ரை செஞ்சி பாரு. செவ்வாய் கிழமை காலேஜ் கிளம்புறதுக்கு முன்னாடி ஏதாச்சும் ரீசன் சொல்லி உங்க மாமாவை உங்க ரூமுக்குள்ள தள்ளிட்டு போய், நாளைக்கு வந்து உங்களை பார்குற வரைக்கும் இத நியாபகம் வச்சிக்கோங்க… அப்படின்னு சொல்லிட்டு டக்குன்னு ஒரு கிஸ் கொடுத்துடு.’’ என்றாள் விழிகளில் ஆர்வம் மின்ன. 

உடனே முகத்தை சுளித்த மல்லி, “ஆமா… நாங்க ரெண்டு பேரும் நேத்து தான் கல்யாணம் ஆன சின்னஞ் சிறுசுக. மூத்தது ரெண்டு தோள் உசரம் வளர்ந்து நிக்கிதுக. இப்ப போய்… முத்தம் கித்தம்னு  அசிங்கமா பேசிகிட்டு. நடக்குறத பேசுடி.’’ என்றாள் கடுப்புடன். 

தன் தலையில் தானே தட்டிக் கொண்ட மகிழ், “பொண்ணு வளர்ந்துட்டான்னு பசிச்ச வயிறுக்கு சோறு திங்காமையா இருக்க. எங்க சோத்து குண்டானையும் வாங்கி  கலந்து கட்டி அடிக்கிற இல்ல. நமக்கு வயசாயிடுச்சி… பிள்ள வளர்ந்துட்டா பையன் உசந்துட்டான் இப்படியெல்லாம் எந்த கணக்கும் காதல் வாழ்க்கைக்கு கிடையாது. நீயே உன் மனசுக்குள்ள ஒரு வட்டத்தை போட்டு வச்சிட்டு ஏண்டி அதை தாண்டி வர மாட்டேங்கிற. காதல்ல நீ எனக்கு முக்கியம்னு சொல்ற முக்கியமான விசயம் முத்தம் தான். அதை அடிக்கடி கொடுத்து நம்ம உறவை புத்தம் புதுசாவே வச்சிக்கணும். அதுல குத்தம் ஒன்னும் இல்ல. புரியுதா.’’ என்ற மகிழ் மல்லியின் தலையில் நங்கென கொட்டினாள். 

“ஷ்… ஆ… எரும வலிக்குது. நாலடி குள்ளமாயிருவேன் போல. குடு குடுன்னா… முன்ன பின்ன அதெல்லாம் குடுத்திருந்தா தான வரும்.’’ என்றாள் மல்லி தலையை நீவிக் கொண்டே அப்ராணியாய். 

அவளின் வார்த்தையில் மகிழின் முகம் அதிர்ச்சியில் விரிந்தது. தானாக மல்லி கணவனுக்கு ஒரு முத்தத்தை கூட தராமல், மூன்று குழந்தைகளுக்கு அம்மாவாகி குடும்பம் நடந்திக் கொண்டிருகிறாள் என்ற உண்மை அவளின் அடி மனம் வரை சுட்டது. 

முயன்று தன் மன உணர்வுகளை அவளிடம் காட்டிக் கொள்ளாதவள், “இதுவரை இருந்ததை விடு. நீ என்ன செய்வியோ… ஏது செய்வியோ எனக்கு தெரியாது. செவ்வாய் கிழமை உங்க மாமாவுக்கு கிஸ் கொடுத்துட்டு தான் நீ வரணும். இல்லைனா நீ கிளாஸ்ல தூங்கும் போது, உன்ன மறச்சி உக்காராம பாகீரதி மேம் கிளாஸ்ல உன்ன சிக்க வச்சிருவேன்.’’ என்றவள் நகர்ந்து விட மல்லி தான் மலைத்து நின்றாள். 

செவ்வாய் கிழமை காலையிலிருந்தே மல்லிக்கு வியர்த்து வடிந்து கொண்டிருந்தது. முதன் முறையாக காதல் வயப்பட்டவள் போல, உச்சந்தலையிலிருந்து, உள்ளங்கால் வரை ஏதோ ஓர் மின்னல் பாய்ந்து அவளை குறு குறுப்பிலேயே வைத்திருந்தது. 

அடிக்கடி சுந்தரை அடிக்கண்ணில் அவள் நோட்டமிட, எடுப்பான அவன் முக தாடைகளும், இறுகி தடித்த உதடுகளும் அவன் மனதில் குறுகுறுப்பூட்டிக் கொண்டிருந்தன. மகிழிடம் முத்தம் கொடுத்துவிட்டு வந்துவிட்டதாய் சொல்லிவிடலாம் என்று தயக்கம் கொண்ட அவள் மனம் பின்வாங்க, மகிழ் சொன்னா அதுல ஒரு அர்த்தம் இருக்கும், என்று சாகசத்திற்கு தயாரான மறு மனம் துள்ளிக் கொண்டு முன் வந்தது. 

இறுதியில் ஒரு முடிவிற்கு வந்தவள், மூத்த மகள்  ஜான்சியை அழைத்து, “தங்கம் அப்பாவை வர சொல்லு. செல்ப்ல இருந்து கட்டப்பை எடுக்கணும்.’’ என்று சொல்லி அனுப்பினாள். மகள் சென்ற தூதில் சுந்தர் அடுத்த சில நிமிடங்களில் அறைக்குள் வந்து நின்றான். 

“இதெல்லாம் நைட்டே எடுத்து வச்சா தான் என்ன…? கிளம்புற நேரத்துல தான் அது வேணும், இது வேணும்னு கேட்டுட்டு இருப்பியா…?’’ என்று கடிந்தவன், அறையின் கதவை மூடி விட்டு அதை ஒட்டியிருந்த உயர அலமாரியில் இருந்த அட்டைப்பெட்டியயை கை நீட்டி எடுக்க முயன்று கொண்டிருந்தான். 

அவனின் குற்றம் சாட்டும் பேச்சில், மல்லியின் முகம் வாடிவிட அப்படியே கிளம்ப தான் யத்தனித்தாள். ஆனாலும் அவன் பேச்சு கொடுத்த ஆத்திரத்தில் முகிழ்த்த தைரியம் மூடியிருந்த கதவின் பின் சென்று நிற்க வைத்தது. 

சுந்தர் மனையாளின் எண்ணம் அறியாது, அட்டைப் பெட்டியில் கட்டைப்பை தேடுதலில் ஈடுபட்டிருந்தான். அவனை நெருங்கிய அவளோ, அவன் கன்னத்திற்கும், தன் இதழ்களுக்கும் இடைப்பட்ட தூரத்தை பார்வையால் அளந்து கொண்டிருந்தாள். 

மனதில் துணிவை கூட்டிக் கொண்டவள், தனக்கே கேட்காத குரலில், “நான் திரும்பி வர வரைக்கும் இதை நியாபகம் வச்சிக்கோங்க.’’ என்று விட்டு, கண்களை இறுக மூடிக் கொண்டு, உத்தேசமாக அவன் கன்னத்தை குறி வைத்து இதழ்களை குவித்தபடி முன்னேறினாள். 

அதற்குள் கட்டைப்பையை தேடி எடுத்திருந்தவன், அவளின் குரல் மிக மெல்லிதாக முணுமுணுப்பதை போல இருக்கவும், “என்ன…?’’என்று கேட்டபடி அவளை நோக்கி திரும்பியிருந்தான். 

அவன் கண்டிப்பாக மல்லியிடமிருந்து இப்படி இரு செயலை எதிர்பார்த்திருக்கவில்லை. மல்லியும் அவன் திரும்பியதை அறியவில்லை. பதித்த வேகத்தில் விலக நினைத்திருந்தவள், அவன் உயரத்திற்கு கால்களை வேறு எக்கியிருந்தாள். 

அந்த உயரம் அவன் கீழ் கன்னத்திற்கு கட்டி வந்திருக்கும். ஆனால் அவன் திரும்பியிருக்க, அவள் எக்கியுமே அவளின் மேல் இதழ்கள் லேசாக அவன் கீழ் உதட்டை உரசியதோடு சரி. தன் இதழ்கள், ஈரமான பகுதியில் உரச மல்லி திடுக்கிட்டு கண் விழித்தாள். 

சுந்தரும் அதிர்ந்திருந்தான். மனைவியிடமிருந்து இப்படி ஒரு அதிரடியான செயலை அவன் எதிர்பார்க்கவேயில்லை என்பதை அவன் அதிர்ந்த முகமே காட்டிக் கொண்டிருக்க, மல்லியின் இதழ்கள் பதட்டத்தில் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது. 

அவளை இமைக்காது பார்த்தவன், பெருமூச்சை வெளியேற்றி தன்னை நிலை நிறுத்த முயன்றான். அவன் முகபாவத்தை முழுதாக புரிந்து கொள்ள முடியாதவள், அவன் கையிலிருந்த கட்டைப்பையை வாங்கிக் கொண்டு அங்கிருந்து நழுவ முயன்றாள். 

அவள் கட்டைப் பையில் கை வைக்க, அவள் முதுகின் பின்புறமிருந்த கதவோடு அவளை சாய்த்தவன், அவள் அடுத்து என்ன நடக்கிறது என உணரும் முன்பே, வேகமாக அவள் இதழ்களை சிறை செய்திருந்தான். 

சூரியக் கதிர்கள் சூழ்ந்திருக்கும் ஓர் காலை வேளையில் மல்லிக்கு கிடைக்கும் முதல் முத்தம். அவளுக்குள் என்னென்ன உணர்வுகள் ஊற்றேடுக்கிறது என்பதை அவளாலேயே உணர முடியவில்லை. 

கால்கள் பலம் இழப்பதை போல தோன்ற கைகளை கணவனின் முதுகிற்கு பின் கோர்த்து கொண்டாள். அவளின் அந்த செய்கை அவனின் வேகத்தை அதிகரிக்க, மல்லியின் இடையில் கரம் கொடுத்து மேலும் தன்னோடு இறுக்கியவன், இதழ்களால் தன் தேடலை தொடர்ந்தான். 

“அப்பா…’’ கதவிற்கு வெளியே கேட்ட மகள்களின் குரலில், இருவரும் திடுக்கிட்டு வேகமாய் பிரிந்தனர். மல்லியின் முகம் ஏதென்று வடிக்க வியலா உணர்வில் சிவந்திருந்தது. வேக வேகமாக தன் தலையை கோதி தன்னை நிலைபடுத்திக் கொண்ட சுந்தர், “வறேன் குட்டிமா.’’ என்று குரல் கொடுத்தபடி வெளியே சென்றான். 

‘ஹோ’வென்று பேரருவி ஒன்று தன்னுள் ஆர்பரித்து அடங்கியதை போல மல்லி உணர்ந்தாள். தலையை உலுக்கி தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டவள், தான் வேண்டும் என்று கேட்ட பையை அங்கேயே விட்டு விட்டு கல்லூரிக்கு கிளம்பினாள். 

அவளுக்கு முன் சுந்தர் மகள்களை பள்ளியில் விட்டு வர கிளம்பியிருக்க, என்னவோ அவன் அங்கே இல்லாதிருந்தது ஒரு வகையில் ஆசுவாசமாகவும், மறுபக்கம் ஏமாற்றவாகவும்  தோன்றியது. 

அவனின் அழுத்தத்தில் சிவந்த உதடுகளை நீவியவள் அந்த நினைவுகளோடே கல்லூரிக்கு கிளம்பியிருந்தாள். “ஏய்…! கதவை திறந்தாச்சு உள்ள வாடி. வாசல்ல நின்னு வானத்தை பார்த்துட்டு இருக்க.’’ என்ற மகிழின் குரல் அவள் நினைவு வலைகள் அறுத்து நடப்பிற்கு திருப்ப, “வந்துட்டேன்டி’’ என்றவள் தன் உடமைகளை எடுத்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள். 

“நான் முதல்ல குளிச்சிட்டு வந்துடுறேன். உனக்கு தான் சில்னஸ் சேராதே. உனக்கு கேஸ்ல சுடுதண்ணி வச்சிடுறேன். பீரோல என்னோட புது நைட்டி ஒன்னு இருக்கு. அதை இன்னைக்கு நைட் நீ யூஸ் பண்ணிக்கோ.’’ என்றவள் குளியலறை புகுந்து விட, தனக்கான சுடுநீரை அடுப்பில் ஏற்றியவள், பீரோவை திறந்தாள் மகிழ் குறிப்பிட்ட புது இரவு உடையை வெளியே எடுக்க. 

இளம் சிவப்பு வர்ணத்தில் அந்த ஆடை அவளை ஈர்க்க, அதை ஆசையாய் கை நீட்டி எடுத்தாள். அதே நேரம் அந்த உடையின் கீழிருந்த காகிதமும் உடையோடு இழுபட்டு வெளியே வந்தது. ‘இது என்ன…’ என்று எடுத்து பார்த்தவள், அது அறிவித்த செய்தியில் அதிர்ச்சியில் அந்த இடத்திலேயே சிலையென உறைந்து நின்றாள். 

பந்தமாகும்.   

        

 

 

Advertisement