Advertisement

உணவு முடிந்ததும் குழந்தைகளை கணவன்மார்கள் வசம் ஒப்படைத்து விட்டு, தோழியர் நால்வரும் மகிழின் அறையில் தஞ்சம் புகுந்தனர். அவளின் ஒப்பனையை கலைக்க உதவிக் கொண்டே மல்லி, “ஏய்… லேட் ஆனதுக்கு நான் காரணம் இல்லடி. எல்லாம் நம்ம காதர்பாய் தான். கண்ல பெட்டி கடை பட்டா கூட உடனே ஷாப்பிங்னு இறங்கி போனா.’’ என்று மதியின் மீது குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்தாள். 

உடனே வாயில் குலவையிடுவதை போல அடித்துக் கொண்ட மதி, “யா… அல்லா எப்படி கதை விடுறா. நான் ஷாப்பிங் எல்லாம் சீக்கிரம் முடிச்சிட்டேன். இவளும் இவ புருசனும் தான் ஏதோ நேத்தைக்கு கல்யாணம் கட்டின சின்னஞ் சிறுசுக மாதிரி கொஞ்சி குழாவிட்டு… வழியில இருந்த ஒரு ரோட்டு கடையை விடல. இளநீர், நொங்கு, மாங்கா, தேங்கா, புளியங்கான்னு எல்லாருக்கும் வாங்கி கொடுத்து அடிக்கடி ரெஸ்ட் ரூம் போக வச்சாங்க. நீ இவளை தான் கேக்கணும்.’’ என்று தன்னை நோக்கி பாய்ந்த அம்பை மல்லியின் பக்கம் திருப்பிவிட்டாள். 

‘அப்படியா’ என மகிழ் பார்க்க, இப்போது யாரை குறை சொல்வது எனப் புரியாத மல்லி, “ரேணுவும், சங்கரியும் கூட தான் வழியில இருந்த ஒரு கோவிலை விடல.’’ என்றாள் உள்ளே போய்விட்ட குரலில். 

“அப்ப எல்லாரும் சேர்ந்து தான் லேட்டா வந்து இருக்கீங்க. உங்களை எல்லாம்…’’ என்ற மகிழ், அருகில் இருந்த பார்ட்டி ஸ்ப்ரேயை எடுத்து நால்வர் முகத்திலும் சாரமாரியாய் அடித்துவிட்டாள். “ஏய்… எரும…’’ என்று அலறியபடி அவர்கள் அங்கும் இங்கும் ஓட, தற்சமயம் முகம் எல்லாம் வெள்ளை நுரை ஒட்டி பார்பதற்கே வித்யாசமாக இருந்த அவர்களின் தோற்றத்தை கண்டு பொங்கி சிரித்தாள். 

மூச்சு வாங்க புசு புசுவென நின்றவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு, தங்கள் முகத்தில் இருந்த வெள்ளை நுரையை வழித்து எடுத்து மகிழை நோக்கி நடந்தனர். “ஏய்… என்ன பண்றீங்க…?’’ என கேட்டு அவள் நகர்வதற்குள் அவள் முகம், தலை என அனைத்திலும் அந்த நுரையை தடவியிருந்தனர்.

“போச்சு மறுபடி இப்ப குளிக்கணும்.” என்று மகிழ் அலுத்துக் கொள்ள, “இப்ப தான் நீ நம்ம செல்லா குட்டி.’’ என்று அவளை பின்னோடு அணைத்து கொண்ட மதி, ஐவரையும் சேர்த்து தன் அலைபேசியின் உதவியோடு அந்த அற்புத தருணத்தை சுயமியாய்(செல்பி) தன் அலைபேசியில் பதிவு செய்தாள். 

குளியலறை புகுந்து ஐவரும் தங்களை சுத்தம் செய்து திரும்ப, ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து கொண்டு தங்கள் பழங் கதைகளை பேசி கொண்டிருந்தனர். குழந்தைகளை ஓரிடத்தில் வைத்து சமாளிக்க முடியாமல், ஆண்கள் குலம் அவர்களை அருகிருந்த பூங்காவிற்கு அழைத்து சென்றிருந்தனர். 

மாலை சூடாக தோழிகள் ஐவருக்கும் தேநீரை எடுத்து கொண்டு மாறன் அறைக்குள் நுழைந்தான். “ஐயோ… நீங்க ஏன் அண்ணா….’’ என மதி பதறி எழ, “உக்காரும்மா. ஏன் உங்க அண்ணன் உனக்கு டீ எடுத்துட்டு வரக் கூடாதா என்ன…?’’ என்றவன் அனைவருக்குமான தேநீர் கோப்பைகளை அறையில் வைத்து விட்டு சென்றான். 

“அண்ணா சோ நைஸ்ல..’’ என்ற ரேணு தனக்கனா தேநீரை எடுக்க, அவள் கையில் லேசாய் தட்டிய சங்கரி, “இன்னைக்கு முழுக்க நம்ம பிள்ளைகளை மேய்ச்சிட்டு இருக்க நம்ம ஹப்பிஸ் கூட நைஸ் தான்.’’ என்றாள். 

“ஆ… அதுக்கு ஏண்டி வலிக்குற மாதிரி அடிக்குற எரும.’’ என்றவள் தேநீரில் மூழ்கிவிட, தோழிகளும் தங்களுக்கான தேநீர் கோப்பைகளை எடுத்துக் கொண்டனர். மீண்டும் மாறன் அறைக்குள் நுழைந்தான். இம்முறை கையில் பரிசுத்தாள் சுற்றப்பட்ட ஒரே மாதிரியான பரிசுகள். 

“கொடுங்க…’’ என்று மகிழ் கைநீட்ட, அதை கொடுத்தவன், “அஞ்சரைக்கு எல்லாம் வீட்டு சாமி பூஜை முடிஞ்சி நீ உங்க அம்மா வீட்டுக்கு கிளம்பணும் மகி. நேத்து வாங்கிட்டு வந்த காட்டன் சுடி போட்டுக்கோ. அதான் லூசா இருக்கும்.’’ என்று கணவன் நேரக் குறிப்பை உணர்ந்த, மகிழ் சம்மதமாய் தலை அசைத்தாள். 

‘நமக்கான நேரம் முடிந்தது. இனி நாமும் கிளம்ப வேண்டும் இல்லையா…’ என்ற எண்ணம் தோழிகளின் மனதில் தோன்ற அவர்கள் முகமோ காலை நேர மல்லியாய் கூம்பியது. 

தோழிகளின் முகத்தில் ஒரு பார்வையை பதித்திருந்த மகிழ், “இந்தாங்கடி. இது உங்களுக்கு.’’ என்று பரிசுப் பொருளை நீட்ட, ஆவலாய் அதை கையில் வாங்கியவர்கள், வேகமாய் அதை பிரித்துப் பார்த்தார்கள். 

“நட்பு என்பது ஒரு வட்டம். இங்கு முதலும் இல்லை. முடிவும் இல்லை.’ என்ற வாசகம் அழகாய் தமிழில் அச்சாகி இருக்க, இவர்கள் ஐவரும் சற்று முன் நுரையை முகத்தில் தரித்து எடுத்துக் கொண்ட சுயமி புகைப்படம் அந்த புகைப்பட சட்டத்தில் அழகாய் அமர்ந்திருந்தது. 

மதி ஆச்சர்யமாய் மகிழை பார்க்க, “உன் போன்ல இருந்து சுட்டுட்டேன்.’’ என்றாள்  வெள்ளந்தி சிரிப்போடு. தோழிகள் கரைந்து போய் மகிழையே பார்த்துக் கொண்டிருக்க, “மல்லி நமக்கு ட்ரான்ஸ்பர் கிடைச்சப்ப நீ கேட்ட எந்த கேள்விக்கும் அப்ப என்கிட்ட பதில் இல்ல. ஆனா அதுக்கு அப்புறம் பொறுமையா தினம் தினம் யோசிக்கும் போது தான் உன் கேள்விக்கான பதில் எனக்கு கிடைச்சது.’’ என்றவள் தோழிகளை பார்க்க, மதியும், ரேணுவும் குழப்பமாய் மல்லியை பார்த்தனர். 

உடனே மல்லி, குரல் குற்ற உணர்ச்சியில் குறைய, “உங்களை எல்லாம் மறந்துடுவேன்னு சொல்லி அழுதேன் அதை சொல்றா.’’ என்றாள் விளக்கம் தரும் தொனியில். 

“ஆமா மல்லி. நீ சொன்ன மாதிரி நமக்கு பொறுப்புகள் அதிகம் தான். குடும்பம், குழந்தை, வேலைன்னு நாம விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நம்ம வாழ்க்கை ஒரு வட்டத்துல போய் சிக்கிருது. ஆனா அப்பவும் நம்ம பிரண்ட்ஷிப் நம்ம கூட தான் ட்ராவல் செய்யும் தெரியுமா…? தினம் போன் பேசிக்கிறது. அப்பப்போ அவுடிங் போறது… அது மட்டும் தானா பிரண்ட்ஷிப். அது எல்லாத்தையும் தாண்டி மூளையில் பதிஞ்சி, இதயத்துல இறங்கி நினைவா நம்ம கூடவே இருக்குறது தான் பிரண்ட்ஷிப். இப்போ உங்களை கேள்வி கேக்குறேன். ஒண்ணா பதில் சொல்லுங்க… ரோட்ல சிட்டுக் குருவி பார்த்தா உங்களுக்கு யார் நியாபகம் வரும்…?’’ என கேட்டாள். 

உடனே மற்ற மூவரும் கொஞ்சமும் தயங்காது, “ரேணு…’’ என்றனர். அடுத்து மகிழ், “நூடுல்ஸ் சாப்பிடும் போது…?’’ என கேட்க, வாய் விட்டு சிரித்தவர்கள், “கண்டிப்பா நம்ம நூடுல்ஸ் மண்டை நியாபகம் வருவா.’’ என்றனர் சங்கரியை கைகாட்டி. 

“அதே தான். எல்லோ கலரை எங்க பார்த்தாலும் நமக்கு மல்லி நியாபகம் வரும். சாய்பாபா போட்டோ பார்த்தாலே என் நியாபகம் வரும்னு மல்லி அடிக்கடி சொல்லுவா. பிரியாணி வாசம் வந்தாலே நமக்கு கண்டிப்பா காதர்பாய் நியாபகம் வந்துடுவா. அந்த ஒரு நிமிஷம் நியாபகம் வருது இல்ல. அந்த நேரம் நம்மையும் மீறி உதட்டுல ஒரு சின்ன சிரிப்பு வருது இல்ல. அந்த சிரிப்புக்கு பேர் தான் பிரண்ட்ஷிப்.’’ என்றதும் தோழிகளின் கண்களில் நட்பின் நீர். 

“நாம எத்தனை கிலோ மீட்டர் தள்ளி இருந்தாலும், போன் செஞ்சாலும், செய்யாட்டாலும் ஏன் ஒருத்தர் முகமே, மத்தவங்களுக்கு மறந்து போனாலும், அந்த சிரிப்பு மட்டும் அப்படியே தான் இருக்கும். அதுக்கு பேர் தான் நட்பு. அது எப்பவும் உயிர்ப்போட தான் இருக்கும். நம்ம மனசுல நினைவுகளா…! அதுக்குன்னு நாம எப்பவும் பிரிஞ்சி இருக்கணும்னு நான் சொல்ல வரல. கண்டிப்பா மன்த்லி ஒன்ஸ் விடீயோ கால் பேசலாம். இயர்லி ஒன்ஸ் குழந்தைகளை நம்ம ஹப்பிகிட்ட விட்டுட்டு பக்கத்துல எங்கயாவது ஜாலியா ஒரு டூர் போயிட்டு வரலாம். ஆனா அதெல்லாம் செஞ்சா மட்டும் தான் நட்போட இருக்கோம்னு சொன்னா அது உண்மையில்ல.’’ என்று நிறுத்த அதில் இருந்த உண்மை அவர்களின் மனம் சுட்டது.  

மீண்டும் மகிழே, “ஏன்னா உண்மையான நட்பு எது இருந்தாலும் இல்லாம போனாலும் அது நம்மளோட தான் இருக்கும். இதயத்துல நியாபக பொக்கிசமா. இந்த போட்டோவை ஏன் சூஸ் செஞ்சேன்னா…நம்ம சந்திப்பு குறைய ஆரம்பிக்கும் போதோ… இல்ல உங்க மனசுக்கு ஆறுதல் தேவைப்படும் போதோ இந்த போட்டோவை எடுத்து பாருங்க. கண்டிப்பா நம்ம காலேஜ் லைப் உங்க மைன்ட்ல ரீவைண்ட் ஆகும். உங்க மனசுல விடு எது வந்தாலும் பாத்துக்கலாம்அப்படிங்கிற நம்பிக்கையை அந்த நினைவுகள் தரும். அது நட்பால மட்டும் தான் முடியும். சோ… இனி பிரிஞ்சி போறோம்… முடிஞ்சி போச்சு அப்படி இப்படின்னு நோ அழுகாச்சி சீன். ஓகே தானே…’’ என்று விட்டு மகிழ் சிரிக்க தோழியர் நால்வரும் அவளை தோளோடு கட்டிக் கொண்டனர்.   

  

“சரி நீ ரெடியாகு. அஞ்சி மணிக்கு வீட்டு பூஜை இருக்கு.’’ என்றாள் மல்லி கரகரத்த குரலோடு. இப்போது நால்வர் முகத்திலும் ஒரு தெளிவு. மாலை வீட்டு பூஜை முடிந்து மகிழ் தன் வீட்டுக்கு, தன் அண்ணன்மார்களோடு அவர்களின் மகிழுந்தில் புறப்பட, மனைவியை மாமியார் வீட்டில் விட்டு வரும் சாக்கில் மாறனும் அவர்களோடு கிளம்பினான். 

தோழிகள் தாங்களும் பயணத்திற்கு தயாராகி வாசலில் வந்து நின்றனர். மகிழின் வாகனம் புறப்பட அது கண்ணில் இருந்து மறையும் வரை கை அசைத்து கொண்டிருந்தனர். தற்சமயம் மற்ற மூவரும் தங்கள் மகிழுந்தில் ஏற, மல்லி தன் கணவனின் வாகனத்தில் ஏறினாள். 

இப்போது ஒரே திசையில் பயணம் என்றாலும், நேரம் வந்ததும் அவரவர் இருப்பிடம் நோக்கி அவரவர் வாழ்க்கை பாதை பிரியத் தான் போகிறது. ஆனாலும் அது குறித்த மனக்கிலேசம் அவர்கள் ஐவர் மனதிலும் இல்லை. 

சாலையில் வாகனம் விரைந்து கொண்டிருக்க, ஐவரின் கைகளிலும் காலத்தின் சாட்சியாய் உறைந்துவிட்ட, அவர்கள் நட்பின் நிழற்படம். அதை அவர்கள் வாஞ்சையோடு தடவிக் கொடுக்க, கல்லூரிக் காலத்தின் மகிழ்வான நினைவுகள் உள்ளத்தின் மேலடுக்கில் வலம் வர துவங்கியது. 

ஐவரின் இதழ்களிலும் நட்பின் புன்னகை பூத்திருக்க, உள்ளத்தில் நட்பின் பெருமிதம் பொங்கி பிரவாகித்து கொண்டிருந்தது. மங்கையராய் பிறந்து, பாங்கியராய் நேசம் கொண்ட அவர்கள் உள்ளத்தில் நட்பின் மகரந்தம் என்றென்றும் மணம் வீசிக் கொண்டிருக்கும். 

பந்தமானது. 

 

           

 

Advertisement