Advertisement

எட்டு மாதங்களுக்கு பின் : 

“இந்த தட்டுல கொஞ்சம் பூவை கிள்ளி வையுங்க மதனி. மொதோ தட்டுல வெத்தலை பாக்கை காணலை. அந்த கவர்ல இருந்தது பாருங்க. எடுத்து வையுங்க.’’ என வந்தவர்களிடம் வேலை வாங்கிக் கொண்டிருந்தார்  ருக்கு. 

எப்பேர்பட்ட காயத்தையும் ஆற்றும் வல்லமை காலத்திற்கு மட்டுமே உண்டு. அது மீண்டும் இங்கு நிரூபணமாகியிருந்தது. மகிழ் பிள்ளை வரம் பெற்றிருந்தாள். அவளுக்கு ஏழாம் மாதம் வளைகாப்பு ஏற்பாடாகி இருந்தது. 

‘இனி அவளுடன்  பேச்சு வார்த்தை இல்லை…’ என்று சொல்லிக் கொண்டிருந்த அவள் தந்தை, கடமைக்கு வந்தவர் போல வாயிலில் இருந்த நாற்காலியில் முகத்தை ‘உர்’ என வைத்து கொண்டு அமர்ந்திருந்தார். 

‘எனக்கும் என் மகளுக்கும் இனி சம்மதம் இல்லை’ என்று சொன்ன ருக்மணியோ மருமகன் வீட்டார் அழைத்ததே போதும் என்று முன்னின்று நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருந்தார். ‘இவர் பெண் வீடா…? மாப்பிள்ளை வீடா…?’ என்ற குழப்பம் வந்திருந்த உறவினர்களுக்கு வந்துவிட்டிருந்தது. 

தன் எட்டு கஜ குரலில் அங்கிருந்த அனைவரையும் அப்படி வேலை ஏவிக் கொண்டிருந்தார். அவரின் இயல்பே அப்படித் தான் என மாறனின் வீட்டு ஆட்களுக்கும் புரிபட்டு விட, அவரை அப்படியே ஏற்றுக் கொண்டனர். 

இரு அண்ணன்மார்களும் குடும்பத்தோடு வருகை தந்திருந்தனர். மகிழின் வீடு சொந்த பந்தங்களால் நிரம்பி வழிய அவள் கண்களோ வாசலில் யார் வரவையோ எதிர்நோக்கி காத்திருந்தது. 

காலையில் இருந்து முப்பதாம் முறையாக, அந்த அலைபேசிக்கு அழைப்பு விடுத்தாள் மகிழ். மூன்று மகிழுந்துகள் எறும்பை போல ஒரே நேர்வரிசையில் ஊர்ந்து கொண்டிருக்க, இரண்டாம் மகிழுந்தில் தன் கணவனுக்கு அருகேயிருந்த மதியின் அலைபேசி அழைத்தது. 

“யா அல்லா… மறுபடி இவளா…? இப்ப எதை சொல்லி சாமாளிக்குறது…!’’ என்று வாய் விட்டு புலம்பியபடி மதி அந்த அழைப்பை ஏற்றாள். “எருமைங்களா எங்கடி இருக்கீங்க. காலைல ஐஞ்சி மணிக்கெல்லாம் சேலத்துல இருந்து கிளம்பிடீங்க தானே. கோயம்பத்தூர் வர மூணு மணி நேரம் ஆகுமா…? எவ்ளோ நேரம் வாசலையே பார்த்துட்டு இருக்கட்டும். மணி பத்தாகப்போகுது. பதினொன்னு டூ பனிரெண்டு வளைகாப்புன்னு படிச்சி படிச்சி தானே சொல்லிட்டு வந்தேன்.’’ என்று உச்சகட்ட கடுப்பில் மகிழ் பொரிந்து தள்ளினாள். 

“ஏய்… சும்மா கத்தாதடி. நாங்க மட்டும்னா பரவாயில்ல. கூட ஒன்பது நண்டு சிண்டு. அது பத்தாதுன்னு இப்போ ரெண்டு சிட்டுக் குருவி. இத்தனையையும் இழுத்துட்டு வரதுக்கே நீ எனக்கு அவார்ட் தரணும். நீ போய் ஒழுங்கா மேடையில உக்காரு. வந்துட்டே இருக்கோம். சும்மா சும்மா போனை போட்டு நீ வேற டென்சன் செய்யாத.’’ என்ற மதி அலைபேசியை துண்டிக்க, மகிழ் பெரிய பெரிய மூச்சுக்கள் எடுத்து தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தாள். 

“வரட்டும் வச்சிக்கிறேன்.’’ என்று மகிழ் கடுப்புடன் அலைபேசியை துண்டித்தவள், தன் முக ஒப்பனையை தொடர்ந்தாள். அதே நேரம் மதினாவின் வண்டிக்குள் அமர்ந்திருந்த பரிபூரணன், “ஆன்ட்டி உச்சா வருது…’’ என்று சொல்ல, “மறுபடியும் முதல்ல இருந்தா…’’ என்று மதி மயக்க நிலைக்கு சென்றாள்.

ஆம் தோழிகள் நால்வரும் மகிழின் வளைகாப்பு விழாவிற்கு கிளம்பியிருந்தனர். கொரோனா இரண்டாம் அலை ஓய்ந்து, மூன்றாம் அலையும் கிட்ட தட்ட முடிவிற்கு வந்திருந்த பிப்ரவரி மாதம் அது. 

மகிழின் திருமணத்தில் தான் பங்கேற்க முடியவில்லை. வளைகாப்பிற்கு குடும்பமாய் செல்ல வேண்டும் என்று தோழியர் நால்வரும் முடிவு செய்து, தம் தம் கணவர் மற்றும் குழந்தைகளோடு விழாவிற்கு கிளம்பி நின்றனர். 

அதிகாலை ஐந்து மணிக்கே அனைவரும் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் குழுமி இருந்தனர். தோழிகள் நால்வரும் கிட்ட தட்ட ஒரு வருடம் கழித்து நேரடியாக சந்தித்துக் கொண்டதில் உற்சாக பந்தாய் உருமாறி நடு சாலையென்றும் பாராமல் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு ஆனந்த கூத்தாடினர். 

தங்கள் தாய்மார்களின் புதிய அவதாரத்தை கண்டு குழந்தைகளே குழம்பி நின்றனர். அவர்களின் கணவன்மார்களோ, ‘ஆரம்பமே அதகளமா இருக்கே. இன்னும் போயிட்டு வரதுக்குள்ள என்ன என்ன கொடுமையெல்லாம் கண்ல பாக்க வேண்டி வருமோ…?’ என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டனர். 

பின் வாய் விட்டு சொன்னால் உடலில் இருக்கும் உயிரில் தங்கள் சக தர்மினிகள் ஊஞ்சல் கட்டி ஆடிவிடுவார்கள் என்பது அவர்கள் அறியாததா என்ன. ரேணு, மதி, சங்கரி மூவரின் குடும்பமும் மகிழுந்தில் வந்திருக்க, சுந்தர் தன் புல்லட் வண்டியை எடுத்துக் கொண்டு வந்திருந்தான். 

தோழிகள் மல்லியை கேள்வியாய் பார்க்க, மகிழுந்துக்கு ஒரு குழந்தையை பிரித்து கொடுத்தவள், “ஜஸ்ட் 180 கிலோ மீட்டர் தானே. நாங்க புல்லட்ல வந்துடுவோம். எங்க சீனு வண்டி வாடகைக்கு போயிடுச்சி…’’ என்றாள் சிரித்துக் கொண்டே. 

அப்போது தான் மற்ற தோழிகள் அவள் உடையை கவனித்தனர். இரு சக்கர வாகனத்தில் பயணிக்க ஏற்ற வகையில், சற்றே தளர்வான பல்லாசோ வகை சுரிதார் அணிந்திருந்தாள். முடியை குதிரைவாலாக அடக்கியிருக்க, கண்களில் ஒரு குளிர் கண்ணாடி. 

“இவ என்னடி… நேத்து தான் கல்யாணம் முடிஞ்சி ஹனிமூன் போறவ மாதிரி கிளம்பி நிக்குறா…?’’ என்று ரேணு மதியின் காதில் முணுமுணுக்க, மதியோ, “அது கூட பரவாயில்லடி. எப்பவும் ஜிஞ்சர் ஈட்டிங் மங்கி மாதிரி கடுகடுன்னு இருக்க அவ வீட்டுக்காரர் நித்யானந்தா மாதிரி ஈ மோட்ல இருக்குறதை தான் நம்பவே முடியல.’’ என்று தன் பங்கு அதிர்ச்சியை வெளிப்படுத்தினாள். 

ஆனால் இவர்களை எல்லாம் கண்டு கொள்ளாமல், சுந்தரின் பின் இருகால் போட்டு அமர்ந்தவள், தன் மாமனை நெஞ்சோடு அணைத்து கொண்டாள். இருவரும் ஹெல்மெட் அணிந்த மறுநிமிடம் வண்டி எண்பது கிலோ மீட்டர் வேகத்தில் காற்றை கிழித்து கொண்டு பறந்தது. 

மற்ற மூவரும் வாகனங்களில் பின் தொடர, குழைந்தைகள் வண்டி ஓட ஆரம்பித்த பத்தே நிமிடத்தில், “தண்ணி வேணும். உச்சா வருது… பசிக்குது ஸ்நாக்ஸ் வேணும்…’’ என்று தோழியரை படுத்த துவங்கினர். 

போதாக்குறைக்கு முன்னால் பறந்த புல்லட், வழியில் இருந்த இளநீர் கடை, நொங்கு கடை, தர்பூசணி கடை, நாவல் பழ கடை என்று ஒன்றையும் விடாது வாங்கி தனக்கு பின்னால் வந்த வாகனத்தை நிறுத்தி அவர்களுக்கும் கொடுத்து கொண்டே சென்றனர். 

அதிலும் மல்லியின் கணவன், அவள் உதட்டை தன் கையால் துடைத்து விடுவது, இளநீர் வழுக்கையை ஊட்டி விடுவது, மனைவி கேட்டாள் என்று நெடுஞ்சாலை புளிய மரத்தில் புளியாங்காய் பறிப்பது என காதல் மன்னனாய் அலப்பறையை காட்டிவர மற்ற தோழிகள் காதில் புகை வராதது மட்டுமே குறை. 

இவர்கள் இளநீர் வாங்கி கொடுத்துவிட்டு பறந்து விட, அடுத்த அரை மணி நேரத்தில் உச்சாவிற்கு வண்டியை நிறுத்தி ஒன்பது குட்டிக்கும் சேவை செய்து வருவதற்குள் தோழிகள் பாடு திண்டாட்டம் ஆனது. 

இது மட்டும் போதாது என்பதை போல, ஈரோட்டின் அருகில், குழந்தைகள் அணியும் பனியன் வகை உடைகளை கிலோ கணக்கு என்று விற்பனைக்கு வைத்திருக்க, எப்போதும் கடையை கண்டால் முண்டியடிக்கும் மதி உள்ளே புகுந்து விட, ஒன்றாக ஒன்பதை மேய்க்கும் பொறுப்பு ரேணு, மற்றும் சங்கரியின் தலையில் விழுந்தது. 

“இவளுகளோட இனி எங்கயும் கிளம்பு கூடாது. முடில. என்னடி இப்படி வச்சி செய்றாளுக.’’ என சங்கரி புலம்பிக் கொண்டே, சாலையின் குறுக்கே ஓட முயன்ற சித்திரனை பிடித்து கொண்டிருந்தாள். ஜான்சி பொறுப்பான அக்காவாய் தன் தம்பி, தங்கையை அழகாய் பக்கத்தில் நிறுத்தி பார்த்து கொண்டாள். 

ரேணு ஜான்சியின் உச்சந்தலையில் முத்தமிட்டு, “பொறுப்பான பிள்ள. சமத்து.’’ என்று சொல்ல, “நம்ம மல்லி மாதிரி குணம்.’’ என்று சங்கரியும் தோழியின் கருத்தை ஆரம்பித்தாள். இப்படி நொறுக்கு தீனி, காலை உணவு, கண்ணில் காணும் வணிக வாளகத்திற்குள் நுழைந்து கொள்முதல், அதோடு வழியில் தென்படும் ஆலயங்களில் தரிசனம் என்று திருவாரூர் தேரை போல அசைந்து அசைந்து இல்லை இல்லை ஊர்ந்து ஊர்ந்து கோயம்பத்தூரை சென்று அடைந்தது அவர்களின் பயணம். 

காலையில் தோழிகள் மூவரும் பட்டில் கிளம்பியிருக்க, தற்சமயம் பிரயாண களைப்பில் நலுங்கிப் போயிருந்தனர். மல்லி மட்டும் நேரடியாக விமானத்தில் வந்து குதித்ததை போல ஒப்பனை சிறிதும் களையாமல் அப்படியே இருந்தாள். 

இவர்கள் வளைகாப்பு வீட்டிற்குள் நுழையும் போது, மகிழுக்கு சொந்தங்கள் வளை அடுக்கி முடித்திருந்தனர். “ஏம்மா இம்புட்டு லேட்டவா வாறது. சீக்கிரம் வந்து வளவிய மாட்டுங்க.’’ என்று மகிழின் தாய் அரட்ட, வேக வேகமாய் தோழிகள் நால்வரும் வரிசையில் நின்று தோழியிடம் கண்களாலேயே மன்னிப்பை வேண்டி வளையலை பூட்ட, அவளோ, ‘இருக்கு உங்களுக்கு’ என்ற முறைப்பை பதிலாய் கொடுத்து கொண்டிருந்தாள்.

அடுத்து பந்தி துவங்க, தோழிகள் பொறுப்பை தங்கள் கைவசம் எடுத்து கொண்டனர். முதலில் பெண், மாப்பிள்ளையை அமர வைத்து, பந்தி பரிமாற மாறன் ஊட்டி விடும் முன், தோழியர் நால்வரும், “முதல்ல நான்… நானும்…’’ என்று போட்டி போட்டுக் கொண்டே, கலவை சாதத்தை மகிழின் வாயில் திணித்தனர். 

மாறன் ஒரு புன்னகையோடு அதை பார்த்துக் கொண்டிருக்க, மகிழும் தன் கையில் உணவு கவளத்தை எடுத்து தோழியர் நால்வருக்கும் ஊட்டிவிட்டாள். “அப்பாடா மகிழை மலை இறக்கியாச்சு.’’ என்று மல்லி குதூகலிக்க, உடனே அவளோ, “யார் சொன்னா…? நான் இன்னும் கோவமா தான் இருக்கேன்…!’’ என்று முகத்தை சுளித்தாள். 

Advertisement