Advertisement

பந்தம் – 25

“இதெல்லாம் செகண்ட் இயர் முடிஞ்சி நம்ம எக்ஸாம் முடிஞ்ச உடனே நடந்து இருக்க வேண்டியது. ஆனா பாத்தியா நமக்கு மட்டும் இதோட மூணாவது அன் அபிசியல் பேரவல் பார்ட்டி.’’ சங்கரி மல்லியிடம் புலம்பிக் கொண்டிருந்தாள். 

கொரொனோ இரண்டாம் தொற்று கிட்ட தட்ட ஓய தொடங்கியிருந்த ஜூலை மாதம். முதல் அலை தொடங்கியதிலிருந்தே செவிலியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டிருக்க, தற்சமயம் நேரடியாக தபால் முறையில் பணிமாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டது. 

பணிமாறுதல் அறிவித்ததும், தோழிகள் மூவரும் உற்சாகத்துடனே தங்களுக்கு வேண்டிய இடங்களை நிரப்பி அனுப்பி வைத்தனர். அதை பூர்த்தி செய்து அனுப்பும் போது பெரிதாய் ஒன்றும் அவர்களுக்கு தெரியவில்லை. 

ஆனால் அடுத்த ஒரே வாரத்தில் அவர்கள் கேட்ட, பணியிடத்திற்கு மாறுதல் கொடுத்து அரசாணை வந்துவிட்டிருந்தது. ஜூன் மாத துவக்கத்திலிருந்தே பொது போக்குவரத்துக்கு துவங்கப்பட, தோழிகள் மூவரும் வாரம் ஒரு முறை சொந்த ஊருக்கு பயணம் செய்து திரும்பிக் கொண்டிருந்தனர். 

இப்போது திடும் என, ‘நீங்கள் உங்கள் ஊரை நோக்கி பயணிக்கலாம்.’ என்ற ஆணை வெளியிடப்பட, அது உற்சாகத்தை அள்ளி தருவதற்கு பதில், விழுங்க இயலாத ஏதோ ஒரு பாரத்தை மூவருக்கும் அளித்தது. 

மகிழுக்கு கோயம்புத்தூருக்கும், மல்லிக்கு ஆத்தூருக்கும், சங்கரிக்கு தர்மபுரிக்கு பக்கத்தில் பென்னாகரம் என்ற ஊருக்கும் பணிமாறுதல் கிடைத்திருந்தது. மல்லி தான் அடுத்த வாரத்தில் விடை பெற வேண்டி இருக்கும் என்பதால் பிரிவு உபசார விழாவை கொண்டாட திட்டமிட்டாள். 

வித விதமான உணவு பதார்த்தங்களை இணையத்தில் பதிவு செய்து வாங்கியவர்கள், மொட்டை மாடியில் பௌர்ணமி நிலவின் ஒளியில், பாய் விரித்து அமர்ந்து, தங்கள் பழங் கதைகளை பேசிக் கொண்டே உணவருந்தினர். 

அப்போது தான் சங்கரி அந்த வார்த்தைகளை கூறினாள். உடனே மல்லி, “ஐஞ்சி போய் மூணா ஆச்சு டும் டும் டும்…. இப்போ மூணும் போயி முட்டை ஆச்சு டும் டும் டும்…’’ என போலியான புன்னகையை முகத்தில் தரித்து பாடினாள். 

“ஏய்… சும்மா இருங்கடி. நீங்க வேற டைனானிக் கப்பல் தரையில கவுந்த மாதிரி. நம்ம வாழ்கையில இந்த நொடி இந்த நிமிஷம் அது மட்டும் தான் நிஜம். இப்போ ஒழுங்கா தட்டுல இருக்க சிக்கன் லாலிபாப்பை என்ஜாய் பண்ணுங்க. ரிலீவிங் ஆர்டர் வந்ததும் ஒண்ணா பீல் செஞ்சிக்கலாம்.’’ என்ற மகிழ் ஒரு சிக்கன் துண்டை பிய்த்து வாயில் அத்தகினாள். 

பெயருக்கு உணவை அளந்து கொண்டிருந்த மல்லி, “மறுபடி நம்ம குடும்பம், குழந்தைன்னு ஒண்ணா சேர்ந்து வாழப் போறோம்னு நினச்சா ரொம்ப ரொம்ப சந்தோசமா தான் இருக்கு. ஆனா இனி உங்க ரெண்டு பேரையும் ரொம்ப மிஸ் பண்ணுவேன். சொந்த ஊருக்கு போனதும் ஒரு வாரம் தினம் போன் பேசுவோம். அப்புறம் ரெண்டு நாளைக்கு ஒரு முறை. அது அப்படியே தேஞ்சி வாரம், மாசமாகி, மாசம் பண்டிகை, பர்த்டே விஷ்ல வந்து நிக்கும்.” என்றவள் சற்று இடைவெளி கொடுத்து தன் பேச்சை தொடர்ந்தாள். 

“நாம வேணும்னு எல்லாம் மறக்க மாட்டோம். குழந்தைங்க படிப்பு, நம்ம வேலை, வீட்டு நிர்வாகம். மாமியார் மூட்டுவலி. கொழுந்தன் கல்யாணம்… சொந்த பந்தம் பஞ்சாயத்து… இதுக்கு நடுவுல நமக்கே நமக்கான நேரம் கிடைக்குறதே அதிசயமா இருக்கும். அப்புறம் எப்படி நம்ம நேரத்தை நட்புக்கு கொடுப்போம். அவ்ளோ தான். இனி எல்லாம் முடிஞ்சது. கொஞ்ச கொஞ்சமா நம்ம நண்பர்களோட சேர்த்து அவங்க நட்பையும் மறந்துடுவோம்.” என்றவள் அருகிருந்து பழச்சாறை எடுத்து ஒரே மடக்கில் அருந்த தோழிகள் உணர்ச்சியில் பிழம்பாய் தகிக்கும் முகத்தை வாயடைத்து போய் பார்த்துக் கொண்டிருந்தனர்.  

கமறிய குரலை தொண்டையை கனைத்து சரி செய்து கொண்டவள், “நாம, மதி ரேணுவ பிரிஞ்சி ஒரு ஆறு மாசம் இருக்குமா…? ஆரம்பத்துல தினம் போன் கால்ஸ். இப்ப நீங்க பண்ணுங்கடின்னு அவ. அவ செய்யட்டும்னு நாம. இவ்ளோ தான் இல்ல… இந்த பொண்ணுங்க பிரண்ட்ஷிப். ஆல்வேஸ் பாசிங் க்ளவுட்ஸ். ஸ்கூல்ல இருந்த பிரண்ட் காலேஜுக்கு வர மாட்டா. காலேஜ் யு.ஜி பிரண்ட் பி.ஜில இருக்க மாட்டா. கடைசியா நமக்கு கல்யாணம் முடிஞ்சி குழந்தை குட்டின்னு வந்துட்டா வாழ்க்கையில் பிரண்டும் இருக்க மாட்டா பிரண்ட்ஷிப்பும் இருக்காது.” 

தற்சமயம் மல்லியின் கண்களில் கண்ணீர் குளம் கட்டிவிட, மகிழ், “ஏய்… மல்லி…’’ என்று அவள் கரம் பற்ற முயல, தோழியின் கையை தடுத்தவள், “குடும்பம், குழந்தை, புருஷன், மாமியார் எல்லாரும் ரொம்ப ரொம்ப முக்கியமானவங்க தான் ஒத்துகிறேன். ஆனா இவங்களை போல தான ரத்த பந்தம் எதுவும் இல்லாம நமக்கு ஒண்ணுன்னா துடிக்கிற பிரண்ட்ஷும். அவங்களை மட்டும் ஏன் பொண்ணுங்க எப்பவும் அம்போன்னு பாதியில விட்டுட்டு போறோம்.” என்றவள் விடையில்லா அந்த கேள்விக்கு விடை கேட்டு தோழியின் முகங்களை பார்த்தாள். 

அவர்களால் மட்டும் என்ன பதில் தந்துவிட முடியும். அவர்கள் மௌனமாய் இருக்க, மல்லியே தொடர்ந்தாள்.  “இதே பசங்களை பாருங்க… பால்வாடியில் இருந்து பிஜி வரை ஒண்ணா படிச்சி… ஒரே கன்சர்ன்ல வேலை வாங்கி… முப்பத்தஞ்சி வயசான கூட, சன்டே பேட்டை தூக்கிட்டு க்ரவுன்ட்டுக்கு போவாங்க மேட்ச் விளையாட. ஏன்னா அவங்க வாழ்க்கையில நடக்குற கல்யாணம் ஒரு இன்ச் கூட அவங்க லைப்பை மாத்துறது இல்ல. அதே தெரு… அதே வீடு… ஆபிஸ் முடிஞ்சி வந்தா அம்மா சுட்டு கொடுக்குற வெங்காய பஜ்ஜி… அதே ஏரியா பிரண்ட்ஸ் கேங். சன்டே மார்னிங் கிரிக்கெட் இல்லனா செட்டில். அதே சன்டே நாம என்ன செஞ்சிட்டு இருப்போம். மட்டன் கிரேவிக்கு கிட்சன்ல சின்ன வெங்காயம் உரிச்சிட்டு இருப்போம்.’’ என்ற மல்லியின் இதழ்களில் விரக்கதியின் புன்னகை.

“ஹே மல்லி…’’ என்று சங்கரி மல்லியை பற்ற, அத்தனை நேரம் அடங்கியிருந்த உணர்ச்சி பிரவாகம் வெடித்து வெளிவந்தது. “நானும் இன்னும் கொஞ்ச நாள்ல உங்களை எல்லாம் மறந்துடுவேன். என் பிள்ளைங்க புருசன்னு அவங்க மட்டும் தான் என் உலகம்னு மாறிடுவேன். நம்ம நட்பை நான் தொலைச்சிடுவேன் சங்கரி. கொஞ்சம் கொஞ்சமா நானே தொலைச்சிடுவேன்.’’ என்ற மல்லி குமுறி குமுறி அழுதாள். 

அவளை தேற்ற இயலாது சங்கரியும், மகிழும் அவளை பார்த்துக் கொண்டிருந்தனர். இருவரின் கண்களுமே நட்பின் பிரிவாற்றாமையில் நனைந்திருந்தது. மூவருமே அன்றைக்கு அதிகம் பேசிக் கொள்ளவில்லை. 

உணவு வீணாக கூடாது என்று மகிழ் மிரட்ட, உணவின் சுவையை உணராது உணவை கொறித்தவர்கள் உறங்கிப் போயினர். அடுத்து வந்த ஒரு வாரமும், மூவரும் இயந்திரங்கள் போலவே நடமாடினர். 

இறுதியாய் அவர்கள் எதிர்பார்க்காத அந்த நாளும் வந்தது. சொந்த ஊருக்கு மூவருக்கும் பணி விடுவிப்பு ஆணை வழங்கப்பட, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி நெடு நேரம் அமர்ந்திருந்தனர். அவரவர் மனைவிமாரை அழைத்து செல்ல, கணவன்மார்கள் மகிழுந்தோடு காத்திருக்க, மகிழின் பொருட்கள் யாவும் குட்டி லாரியில் முன்னதாகவே கோயம்பத்தூருக்கு புறப்பட்டிருந்தது. 

வீட்டை பூட்டிவிட்டு, சாவியை வீட்டு உரிமையாளரிடம் கொடுத்துவிட்டு வந்தவள், அங்கிருந்த படியில் அமர, அவளோடு சங்கரியும் மல்லியும் அமர்ந்தனர். யாரும் யாரிடமும் ஒரு வார்த்தை பேசவில்லை. 

சங்கரி ஒரு பக்கமும், மல்லி ஒரு பக்கமும் மகிழின் மடி மீது தலை சாய்த்து கொள்ள, மகிழ் அமைதியாய் அவர்களின் தலையை கோதிவிட்டாள். அங்கிருந்த ஆண்களுக்கும் அவர்களின் பிரிவின் வாதை புரியத்தான் செய்தது. 

ஆக அவர்களை கலைக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சற்று நேரம் அவர்கள் அப்படியே அமைதியில் உறைந்திருக்க, “போலாம். கடைசியா ஒரு குல்பி சாப்பிட்டு கிளம்பலாம்.’’ என்றாள் சோபையான ஒரு புன்னகையுடன். 

“அது என்ன குல்பி. எனக்கு இளநீர் தான் வேணும்.’’ என்று வழமை போல இயற்கை உணவுகள் குறித்த பஞ்சாயத்தோடு தலை நிமிர்ந்தாள் சங்கரி. “போச்சுடா…! இவ்ளோ நேரம் அமைதியா இருந்தீங்களே உலகம் அழியப் போகுதோன்னு பயந்துட்டேன். வாங்க பக்கிங்களா குல்பியையும், இளநீரையும் ஒண்ணா சேர்த்தே சாப்பிடலாம்.’’ என்று விட்டு முன்னால் நடக்க, அவளின் பின் ஒருவரை ஒருவர் முறைத்தபடி இருவரும் பின்னால் நடந்தனர். 

ஆனால் கடையில், மல்லி சங்கரிக்கு குல்பியை நீட்ட, சங்கரி மல்லிக்கு வழுக்கையில் பங்கு கொடுத்து கொண்டிருந்தாள். ‘கடைசி வரை இந்த பீசுகளை திருத்தவே முடியாது.’ என்று மனதிற்குள் அலுத்து கொண்ட மகிழ் தோழிகளை பார்த்து நிறைவாய் புன்னகைத்து கொண்டே தன் இளநீரை பருகி முடித்தாள். 

இவர்களின் கணவன்மார்களும் கிடைத்த இடைவெளியில் இளநீர் அருந்தி முடித்திருக்க, இனியாவது தங்கள் மகிழுந்தில் வந்து ஏறுவார்களா என்பதை போல அவர்களை பார்த்து கொண்டிருதனர். 

“கிளம்பலாம்…’’ என்று மகிழ் சொல்ல, தோழிகள் இருவரும் அவளை தோளோடு கட்டிக் கொண்டனர். “பத்திரம்…’’ என்று மூவரும் மாறி மாறி சொல்லிக் கொண்டு தங்களுக்கான மகிழுந்தை அடைய மேலும் இருபது நிமிடங்கள் ஆனது. 

ஆண்கள் மூவரும் மற்றவர்களிடம் கண்களாலேயே விடை பெற, ஒன்றாக ஒரே வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மகிழுந்துகள், மூன்றும் வேறு வேறு திசை நோக்கி தங்கள் பயணத்தை தொடங்கியது. 

வேறு வேறு திசையில் தான் இனி தங்கள் வாழ்க்கைப் பயணம் என்றுணர்ந்த தோழிகள் மகிழுந்தின் கண்ணாடியில் முகம் பதித்து, மற்ற வாகனம் கண் முன்னால் மறையும் வரை அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். 

Advertisement