Advertisement

“நீ… நாலுவேளை சமைச்ச… அதை நாங்க நம்பனும்…’’ என்று மல்லி ராகம் போட, “ஏன் நான் சமைக்க மாட்டேனா…?’’ என சங்கரி சிலிர்த்து கொள்ள, “ஏய்… வந்ததும் ஆரம்பிக்காதீங்கடி. எனக்கு ரொம்ப பசிக்குது. சமைக்கலாம்.’’ என அவள் சமையலறை புக, சோறு என்றதும் தங்கள் பஞ்சாயத்தை ஓரம் கட்டிவிட்டு, ‘அப்பாடா… இன்னைக்கு நல்ல சோறு கிடைக்கும்.’ என்ற நிம்மதியில் அவளை பின் தொடர்ந்தனர். 

நாட்கள் வழமை போல வேகம் எடுக்க தொடங்கியது. நாடெங்கிலும் கொரொனோ தொற்றை தவிர்க்க, தீவிர தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. முன்பு மக்களுக்காய் காத்திருந்த தடுப்பூசி மையங்கள், தற்சமயம் தள்ளு முள்ளு போட்டியில் பிதுங்கி வழிந்தன. 

புகழ் பெற்ற தனியார் பள்ளிக்கு விண்ணப்பிக்க கிளம்புவதை போல, மக்கள் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் தடுப்பூசி மையத்தில் குவிந்து டோக்கன் பெற்று தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். 

முன்பு கொரொனோ கொடுமையில் ஓடிக் களைத்த செவிலிகள் தற்சமயம் இந்த கொரொனோ தடுப்பூசி கொண்டாட்டத்தில் மூச்சு முட்டிப் போயினர். ஆனாலும் அது ஆனந்த களைப்பு. எப்படியோ மீண்டும் வழமை வாழ்வு திரும்பினால் போதும் என்பது மட்டுமே அவர்களின் ஒற்றை வேண்டுதலாய் இருந்தது. 

அன்றைக்கு ஒரு ஞாயிற்றுக் கிழமை. தோழிகள் மூவருக்குமே கொரொனோ தடுப்பூசி பணி என்பதால் அதிகாலை பணிக்கு கிளம்பி, மாலை ஐந்து மணிக்கு தான் அறைக்கு திரும்பி இருந்தனர். 

வீட்டிற்கு தேவைப்படும் காய்கறி மற்றும் பாலை வாங்கிக் கொண்டு மூவரும் சாலையை அடைத்தபடி பேசிக் கொண்டே வந்தனர். சங்கரி மகிழிடம், “ஏண்டி… உங்க மாமாவுக்கு உன் மேல கொஞ்சமாச்சும் அக்கறை இருக்கா. நீ சென்னை வந்து மூணு வாரம் ஆகப் போகுது. தினம் போன்ல மட்டும் தான் குடும்பம் நடத்துறார். ஏன் வந்து துறை உன்னை பார்த்துட்டு போக மாட்டாரோ…?’’ என கேட்டாள். 

“அதானே…! உங்க மாமாவுக்கு தான் நல்லா கார் ஓட்ட தெரியும் இல்ல. கூட இருக்க அந்த அல்லக்கை காரை ஓசி வாங்கிட்டு வந்தா தான் என்னவாம். உங்க மாமாவுக்கு எல்லாம் ரொமான்ஸ்க்கு பத்துக்கு ரெண்டு மார்க் கூட கொடுக்க கூடாது…’’ என்று திட்டிக் கொண்டே நடக்க, மல்லியை உரசிக் கொண்டு, புல்லட் வகை வாகனம் ஒன்று வந்து நின்றது. 

“என்ன கொழுந்தியா… ரோட்டையே குத்தகைக்கு எடுத்த மாதிரி போயிட்டு இருக்கீங்க. ஓரமா போக தெரியாதா…?’’ என்று கேட்டபடி தன் தலையில் இருந்த தலைக் கவசத்தை எடுத்து நின்றான் மாறவர்மன். 

மாற வர்மனை அருகில் கண்டதும், மல்லிக்கு வார்த்தைகள் வாயோடு ஒட்டிக் கொள்ள, “அது… இவ… இல்ல அவ…..’’ என்று தடுமாற, சொல்லாமல் கொள்ளாமல் அத்தனை நெடுந்தொலைவையும் தன் இருசக்கர வாகனத்தில் கடந்து வந்திருந்த கணவனை இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தாள் மகிழ். 

“நீங்க வந்ததெல்லாம் இருக்கட்டும். உங்க வார்த்தை தப்பா இருக்கே. யாருக்கு யார் கொழுந்தியா…?’’ என்று முறை விசாரிப்பில் வந்து நின்றாள் சங்கரி. 

“பின்ன ஊரே இவங்க ரெண்டு பேரையும் ட்வின்ஸ்னு சொல்லிட்டு இருக்கு. என் பொண்டாட்டி கூட வேற அக்கா, தங்கச்சிங்க யாரும் பிறக்கலை. எனக்கும் கேலி பேச, கிண்டல் செய்ய ஆள் வேண்டாமா… அதான் ஒரே நாள்ல ப்ரோமோசன் கொடுத்துட்டேன்.’’ என்று விட்டு மாறன் மகிழை பார்த்து கண்ணடிக்க, மல்லி மிரண்டு போய் சங்கரியின் பின் நின்றாள். 

“ஏய்… அவர் ஓட்றாரு. நீ ஏண்டி ஒதுங்கி வர. நம்ம சங்கம் செஞ்ச சம்பவம் எல்லாம் தெரியாம ஆடு தானா தலையை விடுது. வா… பிரியாணி வச்சிருவோம்.’’ என்று சங்கரி மல்லியின் காதருகில் முணுமுணுக்க, “ஆமா நான் வரும் போது ஏதோ பத்துக்கு ரெண்டு மார்க் போடலாம்னு காதுல விழுந்தது. என்ன மேட்டர் கொழுந்து…’’ என்று மாறன் கேள்வியாய் மல்லியை பார்த்தான். 

மல்லி என்ன பதில் சொல்வது எனப் புரியாது விழிக்க, சங்கரியோ, “மேட்டர் தான் மேட்டர்ன்னு உங்க புது மாமாகிட்ட சொல்லேண்டி.’’ என அவள் காதுக்குள் முணுமுணுத்தாள். “மூட்றியா…’’ என மல்லி வார்த்தைகளை கடித்து துப்ப, “ரோட்ல நின்னு வம்பு வளக்கனுமா புது கொழுந்தியாகிட்ட. வாங்க வீட்டுக் கதவை திறந்து விடுறேன். ரெண்டு பேரும் சாவகாசமா கதை பேசலாம்.’’ என்று விட்டு மகிழ் முன்னால் நடக்க, அவள் குரலில் தென்பட்ட புகைச்சலில் மாறனின் முகத்தில் உற்சாகப் புன்னகை. 

‘இவிங்க அப்பா அம்மா விளையாட்டு விளையாடுறதுக்கு என்னை உருட்டி விளையாடுதுகளே…’ என மனதிற்குள் எண்ணிக் கொண்டவள், ‘லீவ் போட்டுட்டு சுந்தரை தேடி ஓடிற வேண்டியது தான். டயட் இருக்கவ முன்னாடி மட்டன் பிரியாணி கொண்டு வந்து வச்ச மாதிரி இதுக அலம்பல் தாங்கலையே.’’ என மனதிற்குள் புலம்பிக் கொண்டவள், மெதுவாக அவர்களை பின் தொடர்ந்தாள். 

வீட்டை அடைந்ததும், மகிழ் தன் வாயிற்குள் எதையோ முணுமுணுத்தபடி அனைவருக்கும் தேநீர் கலந்து கொண்டிருக்க, “இது எங்க ஊர் பேமஸ் அல்வா… உங்களுக்காக வாங்கிட்டு வந்தேன். சாப்பிடுங்க கொழுந்….’’ என்று மல்லியின் கையில் ஒரு பொட்டலத்தை திணித்தான். 

இனிப்பை கண்டதும் சங்கரி, “இதெல்லாம் அநியாயம்… உங்க பொண்டாட்டி தங்கச்சிக்கு வாங்கிட்டு வந்தீங்களே… உங்களையே தங்கச்சியா நினச்சிட்டு இருக்க எனக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க…?’’ என தன் போராட்டத்தை துவங்கினாள். 

“உங்க கேள்வியே தப்பாச்சே சிஸ்டர். என் பொண்டாட்டி தங்கச்சிக்கு நான் வாங்கிட்டு வந்தா…. என்னோட தங்கச்சிக்கு என் பொண்டாட்டி தானே வாங்கி தரணும்.’’ என்று தட்டை திருப்பி போட்டான். 

சமையலறைக்குள் நின்று கொண்டிருந்த மகிழ், ‘நங்’ என டம்ளரை வேண்டும் என்றே தரையில் போட்டு சத்தத்தை உண்டாக்கியவள், “ஏய் நீ உள்ள வாடி. இத்துப் போன அல்வாவை அதுகளே தின்னட்டும். நான் சூடா வெங்காய பஜ்ஜி போட்டு வச்சி இருக்கேன். அது உனக்கும் எனக்கும் மட்டும் தான்.” என்று சங்கரியை அழைத்தாள். 

‘உங்களால எனக்கு பஜ்ஜி போச்சு…’ என்ற ரீதியில் மல்லி மாறனை முறைக்க, ‘பொறுமை’ என்று கையால் சைகை காட்டியவன், தோழிகள் இருவரும் வெளியே வந்ததும், பூனை நடை நடந்து சமையலறைக்குள் நுழைந்தான். 

சங்கரியும், மல்லியும் உடனே காய வைக்காத துணியை தேடி மொட்டை மாடிக்கு ஓடினர். “மாமாவாம் மாமா…! ஒன்னும் கிடையாது இவருக்கு.’’ என்று மகிழ் தனக்குள் முணு முணுத்துக் கொண்டிருக்க, “யாருகிட்ட பேசிக்கிட்டு இருக்க பூனைக்குட்டி?’’ என்ற குரலில் திடுக்கிட்டு கலைந்தவள் திரும்ப மாறன் அப்படியே அவளை கைகளில் அள்ளிக் கொண்டான். 

“ஐயோ… ஹால்ல ஆள் இருக்கப்ப…’’ என்று மகிழ் திணற, “ஏய்… அவங்க மொட்டை மாடிக்கு ஓடி ஐஞ்சி நிமிஷம் ஆகுது. நீ அடங்கு…’’ என்றவன் அவளை தனக்குள் அடக்கிக் கொண்டான். மனைவியை கைகளில் அள்ளிக் கொண்டவன், படுக்கை அறை அடைந்து கதவடைக்க, அவனிடம் சண்டை போட வேண்டும் என்ற எண்ணம் கூட மகிழுக்கு மறந்து போனது. 

இருபது நாள் ஏக்கமும், அணைப்பில் இறுக்கமாய் வெளிப்பட, மகிழும் பதிலுக்கு அவனை கட்டிக் கொண்டு, தானும் அவனை எத்தனை தேடினாள் என அவனுக்கு காட்டிக் கொண்டிருந்தாள். அவசர அவசரமான கூடல் தான். ஆனாலும் கலந்து களைத்த பின் இருவருக்குள்ளும் ஒரு நிறைவு. 

“கொழுந்தியாவுக்கு மட்டும் அல்வா வா…’’ என மகிழ் உதட்டை பிதுக்க, பிதுங்கிய உதட்டில் ஆழமாய் முத்தமிட்டவன், “நீ தானடி போன் பேசும் போதெல்லாம் உன் பிரண்ட்ஸ் பத்தி பேசி பேசி கடுப்பேத்துற. அவ வேற போதக் குறைக்கு… ஒண்ணா பிறக்காட்டியும் நாங்க அக்கா தங்கச்சி தான். நீங்க அவளை ரொம்ப நல்லா பாத்துக்கணும்னு தினம் எனக்கு மெசஜ் போட்டு சாவாடிக்குறா. தெரியாம தான் கேக்குறேன் என் பொண்டாட்டிய எனக்கு பார்த்துக்க தெரியாதா. சரியான சுண்டெலி. மாமான்னு சொன்னதும் எடுத்தா பாரு ஓட்டம். இனி மெசேஜ் வரும்.’’ என்று விட்டு மாறன் விழுந்து விழுந்து சிரிக்க, “உங்களை…’’ என்று செல்லமாக அவன் புஜத்தில் குத்தி தன் போலி கோபத்தை தீர்த்துக் கொண்டாள் மகிழ். 

சங்கரியும், மல்லியும் மொட்டை மாடியில் காய்ந்து கொண்டிருந்த துணிகளை எண்ணி முடித்து, பின் அருகிருந்த மின் கம்பியில் கூடியிருந்த காகங்களை எண்ணி முடித்து, அதுவும் போதாது என்று கீழே தெரியும் வீடுகளின் ஜன்னல்களையும் எண்ணி முடித்திருந்தனர். 

“போலாமா…?’’ என்று சங்கரி மல்லியிடம் கேட்க, மல்லியோ, ‘வேண்டாம்’ என்பதாய் தலை அசைத்தவள், “அவங்களா மேல வந்து கூப்பிட்டா போவோம்.’’ என்றாள். 

“ஏய்… இதெல்லாம் அநியாயம். எனக்கு உச்சா வருதுடி.’’ என்று சங்கரி முகத்தை சுளிக்க, “நான் வேணா மறச்சி நிக்குறேன். அப்படி ஓரமா அந்த டேங்க்கிட்ட போறியா…?’’ என தோழியை கடுப்பேற்றினாள். 

“உன்ன…’’ என சங்கரி அவளை துரத்த, “ஏய்… காபி ஆறுது… இன்னும் இங்க என்னடி செஞ்சிட்டு இருக்கீங்க…?’’ என்ற கேள்வியோடு மகிழ் அவர்களை தேடி வந்தாள். கலைந்திருந்த கூந்தலும், லேசாக சிவந்திருந்த முகமும் அவர்களுக்கு ஆயிரம் கதை சொல்ல, “நாங்களா…’’ என அவளை நெருங்கியவர்கள் இடுப்பில் கிச்சி கிச்சி மூட்ட, முதலில் கூச்சத்தில் துள்ளி விலகியவள், பின்பு அவர்களுக்கு அதையே திருப்பிக் கொடுக்க, தோழிகள் மூவரும் சிரித்த படி அந்த மொட்டை மாடியில் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். 

அடுத்த வாரம், அரசு வெளியிடப் போகும் ஆணை தங்களின் இந்த சிரிப்பை பறிக்கப் போகிறது என்பதை தோழிகள் அப்போது அறியவில்லை.              

 பந்தமாகும்.  

         

   

 

Advertisement