Advertisement

பந்தம் – 24 

“போயிட்டு வறேன் மல்லி.’’ என முழு திருமண அலங்காரத்தில் கண்களில் தவிப்பு மின்ன தன்னிடம் விடைபெறும் தோழியை இறுக தழுவிக் கொண்டாள் மல்லி. “எல்லாம் நல்லபடியா நடக்கும். தைரியமா இரு.’’ என்று தோழியை தேற்றியவளின் கண்களில் தவிப்பின் நீர். 

மல்லி மனதிற்குள், ‘உனக்கு மட்டும் ஏண்டி இப்படியெல்லாம் நடக்குது.’ என தனக்குள் சொல்லிக் கொண்டாள். தோழியின் உள்ளக்கிடக்கை அவள் விழிகளில் படித்த மகிழ், “விடு மல்லி எது நடக்கணும்னு இருக்கோ, அது நடந்து தான் தீரும். பார்த்துக்கலாம் விடு.’’ எது நடந்தாலும் அதை கடந்து வரும் அதே பழைய திடம் குரலில். 

அதே நேரம் வாயிலில் அவளை அழைத்து செல்ல வந்த மகிழுந்து ஒலி எழுப்ப, “வண்டி வந்துருச்சு போல மல்லி. ஜாக்கிரதை. சங்கரி வந்தா நான் சொல்லிட்டு போனேன்னு சொல்லு. ஒருவாரம் கழிச்சு தான் வருவேன். எதுன்னாலும் கால் பண்ணுங்க. வரட்டுமா…?’’ என்று தோழி விடை பெற, “ஒரு நிமிஷம்…’’ என்ற மல்லி பூஜையறையிலிருந்து திருநீரை எடுத்து வந்து மகிழின் நெற்றியில் தீற்றினாள். 

மல்லியின் கண்கள் இயலாமையில் கலங்க, மகிழின் கண்கள் தவிப்பில் கலங்கியது. “ஒன்னும் இல்ல. பார்த்துக்கலாம் விடு. போயிட்டு வறேன்.’’ என்றவள் தன் பயணப் பொதிகளை எடுத்துக் கொண்டு தனி ஒருத்தியாய் தன் திருமணத்திற்கு கிளம்பினாள். 

வாயில் கதவை தாண்டி, வாகனத்தில் ஏறி அமரும் வரை மல்லி, மகிழையே பார்த்து கொண்டிருந்தாள். ‘இவளுக்கு மட்டும் ஏன் இப்படி…’ என்று எப்போதும் அவளின் துன்பமான நேரங்களில் தோன்றும் அதே வாக்கியம் மீண்டும் அவளுக்கு தோன்றியது. 

மாறனின் குடும்பம் வந்து நிச்சயம் செய்துவிட்டு சென்ற மறுநாள் முதல் கல்யாண பேச்சு வார்த்தை ஒவ்வொரு கட்டமாய் நகர்ந்து கொண்டிருந்தது. முதலில் மூன்று மாதங்கள் கழித்தே திருமணம் என்று யோசித்தவர்கள், திருமண பொருத்தம் பார்க்க சென்ற இடத்தில், இன்னும் பத்து நாட்களில் மாப்பிள்ளைக்கு கங்கன பலன் முடிந்துவிடும் என்று சொல்ல அவசர அவசரமாய் அவர்களின் குல தெய்வ கோவிலில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். 

கிடைக்கும் மூன்று மாத அவகாசத்தில் தன் தந்தையை சமாதனப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த மகிழுக்கு இந்த அவசர திருமணம் அதிர்ச்சியை கொடுத்தாலும், சரி வருவதை அதன் போக்கில் ஏற்றுக் கொள்வோம் என்று மனதை தயார்படுத்திக் கொண்டாள். 

ஆனால் திருமண செய்தியை கேள்விப்பட்ட தோழிகள் தான் அதிர்ந்து போயினர். தற்சமயம் இருக்கும் கொரோனா பெருந்தொற்றில் இவர்களுக்கு விடுப்பு கிடைக்காது என்பதோடு, அவர்களுக்குமே இப்படி ஒரு நெருக்கடி சமயத்தில் விடுப்பு எடுத்து குதூகலித்து வர மனம் ஒப்பவில்லை. 

“என்னடி சொல்ற. குடும்பம் குட்டியோட உன் கல்யாணத்துக்கு வரணும்னு ப்ளான் செஞ்சி வச்சிருந்தோம். இப்படி ஆகிப் போச்சேடி. என்னவாம் திடீர்னு இவ்ளோ சீக்கிரம் கல்யாணம் வச்சிட்டாங்க…?’’ என்று சங்கரி தன் ஆற்றாமையை வெளிப்படுத்தினாள். 

“இவ மொட்டை மாடியில அவங்க மாமாவுக்கு ஒரு ஸ்பெஷல் கிளாஸ் எடுத்தா இல்ல. அவர் ரெகுலர் ஸ்டூடண்ட் ஆக ஆசைப்பட்டு வீட்டுக்கு ஏதாச்சும் சாம்பிராணி போட்டு இருப்பாரோ…’’ என்று கிண்டலாகவே தன் மனக்கிலேசத்தை பதிவு செய்தாள் மல்லி. 

“ஆமா என் மாமா தானா ரொமான்ஸ் செய்றதும்… கர்நாடகாகாரன் காவேரியை திறந்து விடுறதும் நடக்கவே முடியாத வரலாற்று சம்பவம். அதை முதல்ல தெரிஞ்சிக்கிட்டு அப்புறம் கிண்டல் செய்யுங்க. ஏதோ கங்கன மூகூர்த்தம் முடியப் போகுதாம். அது முடியிறதுக்கு முன்னாடி கல்யாணத்தை வைக்க சொல்லி ஜோசியர் சொல்லி இருக்கார். அதான் இவ்ளோ அவசர அவசரமா கோவில்ல கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சிட்டு இருக்காங்க.” என்றாள் மகிழ். 

“அச்சோ உன் கல்யாண தேதியில எனக்கு கோவிட் ஐ.சி.யூ நைட் டியூட்டி மகிழ்…’’ என்று அலைபேசியில் நாள் காட்டியை பார்த்து சங்கரி அலற, “எனக்கு கூட தான் செகன்ட் ஷிப்ட்…’’ என தன் மதிய நேர பணி குறித்து உள்ளே போய்விட்ட குரலில் தெரிவித்தாள் மல்லி. 

“கோவிட் டைம்ல லீவ் கேட்டாலும் தான் கிடைக்காதே. எதுக்கும் ஒரு ரெண்டு நாள் லீவ் கேட்டு பாருங்கடி.’’ என்றாள் மகிழ் எதிர்பார்ப்புடன். 

சங்கரியும், மல்லியும் சம்மதமாய் தலையை உருட்டி வைத்தனர். ஆனால் அடுத்த இரண்டு நாளில் சங்கரியின் தந்தைக்கு கொரொனோ தொற்று ஏற்பட்டு அவர் உடல்நலம் பாதிக்கப்பட, அவள் அவசர விடுப்பு பெற்று தன் சொந்த ஊருக்கு அடித்து பிடித்து கிளம்பினாள். 

ஒட்டு மொத்த மருத்துவமனையும் ஆள் பற்றாக்குறையில் திணறிக் கொண்டிருக்க, மல்லியின் விடுப்பு விண்ணப்பம் வாயிலிலேயே நிராகரிக்கப்பட்டது. மணப் பெண் என்பதால் மட்டுமே மகிழுக்கு கூட விடுப்பு வழங்கினர். அதுவும் ஐந்து நாட்கள் மட்டுமே. 

சொந்தங்கள் விலகி நிற்க, தன் வாழ்நாளின் மகிழ்வான நிகழ்விற்கு தோழமைகள் கை கோர்த்து உடன் வருவர் என்ற பெரும் நம்பிக்கையில் மகிழ் இருந்தாள். ஆனால் அடுத்து அடுத்து நடந்த சம்பவங்கள் அந்த நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போட்டன. 

மகிழின் சித்தப்பா குடும்பம் திருவிழாவிற்காய் சொந்த ஊருக்கு சென்று இருந்தனர். ஆகவே அவர்கள் நேரடியாய் திருமணத்திற்கு முதல் நாள் அங்கு வந்து விடுவதாய் ஏற்கனவே தெரிவித்து இருந்தனர். 

மீண்டும் ஒரு முறை தாய், தந்தையின் ஆசியின்றி தனி ஒருத்தியாய் மண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்க வேண்டிய நிர்பந்தம் மகிழின் மனதை வருத்த தான் செய்தது. ஆயினும் நடப்பது அத்தனையும் நன்மைக்கே என்ற மந்திரத்தை மனதிற்குள் உருப் போட்டவள் அந்த நாட்களை ஒருவழியாய் கடந்தும் வந்தாள். 

மல்லி தான் மகிழை விட மனதிற்குள் மறுகிப் போனாள். இவளுக்கு மட்டும் இந்த கடவுள் சோதனைக்கு மேல் சோதனையை கொடுத்துக் கொண்டே இருக்கிறாரே என அவரோடு மல்லுக்கு நின்றாள். 

மகிழ் புறப்பட வேண்டிய நாளும் வந்தது. இந்த வாழ்க்கை தனக்கு போர்க்களம் ஆகுமா…? அன்றி பூக்களம் ஆகுமா..? என அறியாத மகிழ் துணிச்சலான வீராங்கனையாய் தன் வாழ்நாளின் அடுத்த சவாலை எதிர் கொள்ள தனி ஒருத்தியாய் கிளம்பி நின்றாள். 

அவள் முழு மணப் பெண் அலங்காரத்தில் கிளம்பி நிற்க, மல்லிக்கு ஏனோ வேலு நாட்சியின் உருவம் கண்களில் வந்து போனது. தன் வாழ்கையில் எது நடந்தாலும் இவள் மீண்டு வருவாள்… மீண்டும் வருவாள் என்ற நம்பிக்கை தோன்ற உற்ற தோழியின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத வருத்தம் இருந்தாலும், இனியாவது இவள் வாழ்க்கை பூரணமாய் மலர வேண்டும் என்று மனதார வாழ்த்தி தோழிக்கு திருநீறு பூசி அனுப்பி வைத்தாள். 

மகிழ் கிளம்பிய ஐந்து நிமிடங்களில், சங்கரியும், மதினாவும் மல்லிக்கு இணைப்பு தொலைபேசி அழைப்பில் அழைத்து கொண்டிருந்தார்கள். தோழிகள் மூவரும் மாறி மாறி, தங்களால் மகிழின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டதே என்று சிறிது நேரம் மாறி மாறி புலம்பி தீர்த்தனர். 

அதன் பிறகு தங்களுக்கு தாங்களே சமாதானமும் சொல்லிக் கொண்டு, நிச்சயம் இனி மகிழின் வாழ்வு மலர்ந்து மணம் வீசும் என்று நேர்மறை கருத்துகளை பகிர்ந்த பின்பே அழைப்பை துண்டித்தனர். 

இவர்கள் அழைப்பை துண்டித்ததும் மல்லி தன் கணவனுக்கு அழைத்து, புலம்பி தீர்த்தாள். அவனும் தன்னால் முடிந்த அளவிற்கு சமாதனம் சொல்லி மனையாளை தேற்றி வைத்தான். 

அடுத்தநாள் காலை பிரம்ம முகூர்த்தத்தில் மகிழின் கழுத்தில் மாறன் மங்கள நாண் பூட்ட, தோழிகள் மூவரும் அந்த காட்சியை காணொளி வாயிலாக கண்டு, ஆனந்தத்தில் ஆர்பரித்தனர். 

அன்றைக்கு இரவே அவர்களை தொடர்பு கொண்ட மகிழ், “நீங்க இல்லாதது மட்டும் தாண்டி குறை.’’ என்று குரலில் உவகை பொங்க பேச, தோழி மனமகிழ்வோடு நிம்மதியாய் இருக்கிறாள் என்ற எண்ணமே தோழியரை அமைதி கொள்ள வைத்தது. 

மகிழின் விடுமுறை நாட்கள் மின்னல் வேகத்தில் கடந்து செல்ல, ஆறாம் நாள், தன் செவிலிய சீருடையில் தன் பணிப் பகுதியில் நின்றாள். புதிதாய் மணமான பூரிப்பு முகத்தில் இருந்தாலும், தான் ஆற்ற வேண்டிய கடமை அவள் கண்களின் தெளிவில் இருந்தது. 

தந்தையின் உடல் நலம் மீண்டிருக்க சங்கரியும் வீட்டிற்கு திரும்பியிருந்தாள். மகிழ் வந்து சேரவே, தோழிகள் மூவரும் மீண்டும் மகிழின் வீட்டில் கூடினர். தோழியை கேலி செய்து ரசிக்க கூட அப்போதிருந்த சூழல் அவர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை. 

மூவரும் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு அந்த நெருக்கத்தில் தங்கள் மனத் துயரங்களை ஆற்ற முயன்றனர். முதலில் அணைப்பில் இருந்து விலகி நின்ற மல்லி, “என்னம்மா சீக்கிரமா பள்ளியறை பாடத்தை முடிச்சிட்டு ஓடி வந்தாச்சா..’’ என்று குறும்பாய் கண்ணடித்தாள். 

“ஆமா… கொரொனோ கேம்ப் முடியிற வரை கிளாசுக்கு லீவ் விட்டாச்சு.’’ என்று தானும் உல்லாசமாய் சிரித்தாள் மகிழ். “நீ எடுத்த சிங்கிள் கிளாசுக்கே மூணு மாச கல்யாண தேதி பத்து நாள்ல வந்து நின்னது. இப்ப நீ முழுசா வேற பாடத்தை முடிச்சிட்டு வந்து இருக்க… வண்டி கோயம்பத்தூர்ல நிக்குமா…? இல்ல ப்ரேக் இல்லாம சென்னையை நோக்கி பாயுமா…?’’ என்றாள் சங்கரி. 

“ஏய்… கோயம்பத்தூர்ல இப்போ கேசஸ் ரைஸ் ஆயிட்டு இருக்கு. நேத்து கூட டெத் ரேட் கூடிக்கிட்டே இருக்குன்னு ரொம்ப பீல் செஞ்சிட்டு இருந்தார். இங்க போல தான் அங்கயும் மேன் பவர் கம்மி. அதனால இப்போதைக்கு லீவ் இல்ல.’’ என்று சங்கரியின் தலையில் தட்டினாள் மகிழ். 

“ஆண்டவா என் பிரண்ட் ஹனிமூன் கொண்டாடவாச்சும் இந்த கொரொனாவுக்கு ஒரு தற்காலிக என்ட் கார்ட் போடுப்பா…’’ என்று மல்லி தலைக்கு மேல் கைகளை கூப்பி வேண்டுதல் வைக்க அவள் தலையில் வலிக்காமல் கொட்டினாள் மகிழ். 

“இப்போ நான் ஹனிமூன் கொண்டாடுறது தான் ரொம்ப முக்கியமா…? எத்தனை எத்தனை கூலி தொழிலாளிங்க தினம் பட்டினியா கிடக்குறாங்க. எத்தனையோ வயசானவங்க வீதிக்கு வந்துட்டாங்க. எத்தனை லட்சம் குழந்தைங்க ஸ்கூலுக்கும் போக முடியாம வீட்ல முடங்கி கிடக்குறாங்க. இவங்க வாழ்க்கை பழையபடி மாற இந்த கொரோனாவை நாம ஒழிச்சி கட்டியே தீரணும். அதுவரை மகிழுக்கும் மாறனுக்கும் நோ ஹனிமூன்.’’ என்றவள் கொண்டு வந்த உடைகளை தன் அலமாரியில் அடுக்க தொடங்கினாள். 

“அடிப்பாவி. உனக்கும் பாவம் பார்த்து நாங்க பக்கம் பக்கமா டயலாக் பேசினா…  நீ கே.பி சுந்தராம்பாள் மாதிரி என்ன… என்ன… என்னன்னு…? எங்களையே தலை சுத்த வைக்குறியா. ம்… நீ சொன்னதும் சரி தான். வாழ்க்கை பழைய மாதிரி மாறாதான்னு ஏக்கமா தான் இருக்கு. ஆனா இந்த லிஸ்ட்ல இன்னொரு பாவப்பட்ட ஜீவன்களை நீ விட்டுட்ட. அவங்க தான் ஹவுஸ் வைப்ஸ். சமைக்குறோம், துவைக்குறோம், பெருக்குறோம், தூங்குறோம்… மறுநாள் விடிஞ்சா ரிப்பீட் மோட்ல இதே தான். குவாரண்டைன் கொடுத்தா வீட்டுக்கு போகாமா இனி கொரொனோ கூடவே குடும்பம் நடத்தலாம்னு முடிவு செஞ்சிட்டேன். தினமும் எட்டு வேளை சமச்சி முடியல.’’ என்ற அலுத்துக் கொண்ட சங்கரி அருகிலிருந்த இருக்கையில் தொப்பென விழுந்தாள். 

Advertisement