Advertisement

அந்த இடத்தில் கல்யாண வீட்டிற்கான  களை மெல்ல திரும்பிக் கொண்டிருந்தது. காலையில் இருந்து வெறும் வயிற்றில் இருக்க, எதையாவது வாயில் போடுவோம் என்ற ஆவலில் மகிழ் சமையலறையை எட்டிப் பார்த்தாள். 

அங்கு குணவதி தோசை வார்த்து கொடுக்க, சங்கரி அதை தட்டில் வைத்து, மல்லி வைத்த சாம்பார் தோய்த்து தனக்கு ஒரு வாய், மல்லிக்கு ஒரு வாய் என ஊட்டிக் கொண்டிருந்தாள். மல்லியின் கையில் விஷ்ணுவின் சங்கு சக்கரம் போல, சங்கரி சுட்ட வடை விரலுக்கு இரண்டாக அடைக்கலமாகி இருந்தது. 

அதை தான் ஒரு கடி கடிப்பதும், பின் சங்கரிக்கு ஒரு கடி குடுப்பதும் என, ‘ஒரு வாய் தோசை… ஒரு வாய் வடை’ என காலை சிற்றுண்டியை இருவரும் கபளீகரம் செய்து கொண்டிருந்தனர். மகிழை கண்டதும் இருவர் முகத்திலும் லேசாக அசடு வழிய, ‘இது தான் நீங்க சண்டைப் போட்ட லட்சணமா…?’ என இருவரையும் கேவலமாக ஒரு பார்வை பார்த்தாள். 

“ஹி ஹி… பேசி பேசி… அழுது அழுது… டயர்ட் ஆயிட்டோம். ரொம்ப பசிச்சிருச்சு. அதான் லைட்டா…’’ என மல்லி கண்ணை காட்ட, “நமக்கு சோறு முக்கியம் பாஸ்…’’ என சங்கரி பின் பாட்டு பாடினாள். 

உடனே மகிழ், “எனக்கு…’’ என்றாள் வேகமாய். “லிப்ஸ்டிக் அழியாம பெருசா வாயை திற.’’ என்ற சங்கரி அவளுக்கும் உணவினை ஊட்டிவிட துவங்கினாள். குணவதி மூவரையும் ஆச்சர்யமாய் பார்த்து கொண்டே தோசைகளை தட்டில் அடுக்கி கொண்டிருந்தார். 

 இவர்கள் உண்டு கொண்டிருக்கும் போதே, மாப்பிள்ளை வீட்டாரின் மகிழுந்து வாகன ஒலி வாயிலில் கேட்க, தோழிகள் மூவரும் நேர்நில் நிலையில் எழுந்து நின்றார்கள். மகிழ் அறைக்கு ஓட, மல்லியும் சங்கரியும் தட்டை ஓரமாய் வைத்து விட்டு, கைகழுவிய அடுத்த நொடி வாயிலுக்கு ஓடினர். 

குணாளன் வீட்டின் தலைவராய் வந்தவர்களை வரவேற்க, நல்ல நேரம் குறைவாகவே இருக்க, அவர்கள் வந்தவுடன் சீர் வரிசை தட்டை அடுக்கி, மாப்பிள்ளை மணப் பெண்ணுக்கு நலுங்கு வைத்து, திருநீறு பூசி நிச்சய தாம்பூலத்தை மாற்றினர். 

நடந்து முடிந்த களேபரங்களில் அனைவர் முகத்திலும் வாட்டம் தெரிய, குணாளன் பேசி பேசி நிலையை சரி செய்து கொண்டிருந்தார். மாறனின் தம்பி தன்னிடமிருந்த அலைபேசியில் அந்த அழகிய நிகழ்வுகளை படம் பிடித்துக் கொண்டிருந்தான். 

தோழிகள் இருவரின் கண்களிலும் மன நிறைவு நீராய் தளும்பி அவர்களின் கண்களில் தேங்கி நின்றது. மாறனும், மகிழும் ஒரு வித விறைப்பு நிலையிலே இருப்பதை கண்ட இருவரின் நெற்றியும் சுருங்கியது. 

சமையலறைக்குள் சென்று தங்களுக்குள் குசு குசுவென பேசிக் கொண்டவர்கள், அதன் பிறகு நிச்சயம் முடித்தவர்களுக்கு உணவினை பரிமாற, உண்டு முடித்ததும், மாறனின் தாய் தன் மனகிலேசத்தை சற்று நேரம் அனைவரிடமும் பகிர்ந்து கொண்டிருந்தார். 

அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்த வேளையில் மல்லி மெதுவாக மாறனை நெருங்கினாள். “அண்ணா…! ஊட்டியில இருக்கும் போது நீங்க வாங்கி கொடுத்த ரோஸ் இங்க வந்து பூத்து தள்ளுது. எல்லோ ரோஸ் அத்தனையும் அழகா இருக்கு. வாங்க பார்த்துட்டு வரலாம்.’’ என்று அவனை மாடியை நோக்கி அழைத்து சென்றாள். 

இவர்கள் கல்யாணம் தேதி குறித்த விவாதத்தில் இருக்க, சங்கரி ஏற்கனவே மகிழை மாடிக்கு கடத்தியிருந்தாள். முதல் படி வரிசை முடிந்து, அடுத்த படிக்கான வளைவு தொடங்கும் போது மல்லி, “ணா… இதுல மகிழ் தப்பு எதுவும் இல்லைன்னு உங்களுக்கு நல்லா தெரியும். ஏற்கனவே நிறைய கஷ்டப்பட்டுட்டா. இனியாவது அவளை கலங்காம பார்த்துக்கோங்க அண்ணா. அவங்க அம்மா வராதது உங்களுக்கு எவ்ளோ அதிர்ச்சியோ… அதை விட நூறு மடங்கு அவளுக்கு அதிர்ச்சி. ஆனாலும் உங்க கூட வாழப் போற வாழ்க்கை வேணும்னு முடிவு செஞ்சி தான் அவ அந்த உண்மையை முன்னாடியே உங்ககிட்ட சொல்லல. நான் உங்களை தப்பு சொல்ல வரல. பட் நீங்க எதுவும் ஹார்ஸா பேசி இருந்தா குட்டியா க்யூட்டா ஒரு சாரி சொல்லிடுங்க ப்ளீஸ்…!’’ என்றாள் தலையை சரித்து. 

அவளின் முக பாவத்தில் வாய் விட்டு சிரித்த மாறன், “சரி நான் சாரி கேக்குறேன். ஆனா அதை எப்படி குட்டியா க்யூட்டா கேக்குறது…?’’ என்றான். 

“அச்சோ… எங்க மகிழ் பாவம். உங்களுக்கு புளி போட்டு தேச்சி எல்லாம் என்னால புரிய வைக்க முடியாது. நீங்க க்யூட்டா கேட்டாலும் சரி… குட்டியா கேட்டாலும் சரி… நான் கீழ போறேன். நீங்க கேட்டுட்டு வாங்க…’’ என்றவள் கீழ் நோக்கி ஓட, “சொல்லிட்டு போ மல்லி…’’ என்ற மாறனின் வார்த்தை அவளை துரத்தி வந்தது. 

மல்லி அங்கிருந்து விலகியதும், மாறன் தன் தலையை அழுந்த கோதிக் கொண்டான். வருங்கால மனைவியாகப் போகும் பெண்ணிடம் வாய்த்திருக்கும் முதல் தனிமை. மாறன் மெதுவாக படியேறி மேலே சென்றான். 

வரிசையாக கொடியில் துணிகள் காய்ந்து கொண்டிருக்க, மகிழ் அவனுக்கு முதுகு காட்டி நின்று கொண்டிருந்தாள். எப்படி பேச்சை துவங்குவது எனப் புரியாத மாறன், அவளின் பின் நெருக்கமாக சென்று நின்று மெதுவாக கனைத்தான். 

அமைதியாக இருந்த இடத்தில் திடுமென கேட்ட அந்த ஒலியில் மகிழ் பட்டென திரும்பி பார்த்தாள். இருவரும் ஒருவருக்கு ஒருவர் உரசிக் கொள்ளும் நெருக்கம். ஆனாலும் அது என்னவோ அத்தனை இனிக்கவில்லை மகிழுக்கு. 

‘நீ அப்படி பேசுவாய…?’ என்ற கேள்வியை கண்களில் தாங்கி மாறனைப் பார்த்தாள். அந்த பார்வையை எப்படி எதிர்கொள்வது எனப் புரியாத மாறன், அந்த இடத்தை சுற்றி பார்த்தான். மனித தலைகள் எதுவும் தென்படாது போக, பட்டென மகிழை அருகிருந்த துணிகளின் மறைவிற்குள் இழுத்தான். 

இப்படியொரு தாக்குதலை எதிர்பார்க்காதிருந்த மகிழ் அதிர்ந்து, “அச்சோ… என்ன செய்றீங்க. யாரச்சும் வரப் போறாங்க..’’ என அவன் பிடியிலிருந்து தப்பிக்க முயன்றாள். அவளின் முயற்சியை எளிதாக முறியடித்த மாறன், இறுகி அவளை அணைந்து கொண்டான். 

முதலில் திமிறினாலும், பின்பு முழுதாக அவன் அணைப்பில் அடங்கி நின்றாள் மகிழ். அவளின் போராட்டங்கள் நின்றதும், ஒரு விரலால் அவள் முகம் நிமிர்த்தி தன் கண்களோடு, அவள் கண்கள் கலக்க ஊன்றி பார்த்த மாறன், “என்னால உன்கிட்ட மன்னிப்பு எல்லாம் கேக்க முடியாது மகிழ். ஏன்னா உன்னை எப்பவும் நான் என்னோட காதலியா பார்த்தது இல்ல. பொண்டாட்டிய மட்டும் தான் பார்த்து இருக்கேன். புருஷன் பொண்டாட்டிக்கு நடுவுல மன்னிப்போ, நன்றியோ தேவை இல்லைன்னு நினைக்கிறேன். கடந்த காலத்துல வாங்கின அடி, அப்பப்ப வார்த்தையா வாய் வழியா தெறிச்சி விழுது. அதுல எந்த உள்நோக்கமும் இல்ல. உனக்கு புரியும்னு நம்புறேன்.’’ என்றுவிட்டு அவளையே பார்க்க, மகிழின் முகத்தில் சிறிதும்  இளக்கம் இல்லை. 

“உனக்கு கோபம் போகலையா…? சரி அப்போ உனக்கு வேணும்னா என்னை ரெண்டு அடி அடிச்சிடு.’’ என்றான் பாவமாய். அவள் அப்போதும் அமைதியாகி நிற்கவே, “சரி நான் என்னோட ஸ்டைல்ல வார்த்தையே இல்லாம சாரி சொல்லவா…?’’ என்றான்.

மகிழ் அப்போதும் சிலை போலவே அவன் அணைப்பிற்குள் அடங்கி நின்றாள். இது வேலைக்கு ஆகாது என்று உணர்ந்த மாறன், அவளை பற்றி இருந்த இடையில் தன் கரங்களின் அழுத்தத்தை கூட்டி அவளை இன்னும் சற்று முன்னால் இழுத்து, அவள் துள்ளி விலக யத்தனிக்கும் முன் மிக மிக வன்மையாக அவள் இதழ்களை சிறை செய்தான். 

மகிழின் உடல் முழுவதும் ஒரு நடுக்கம் ஓடி மறைவதை உணர்ந்தவனின் அணைப்பு மேலும் இறுகியது. முதலில் அந்த முத்தத்திற்கு தன்னை ஒப்புக் கொடுக்காத மகிழ், அவன் விரல்கள் தன் கன்னத்தில் நடத்திய மென்மை நாடகத்தில் மெது மெதுவாய் அந்த முத்தத்திற்கு தன்னை ஒப்பு கொடுத்தாள். 

“கீழ…’’ என்ற வார்த்தையோடு சங்கரியின் ஓசை நிற்க, இருவரும் வேக வேகமாக பிரிந்தனர். அதற்குள் அவள், “நான் எதையும் பார்க்கல. நான் எதையுமே பார்க்கல…’’ என்று குரல் கொடுத்துக் கொண்டே தன் கொலுசுகள் சப்பதமாய் ஒலிக்க கீழே ஓடிப் போனாள். 

மகிழ் வெட்கத்தில் நெகிழ அவளை விடுவித்த மாறன், “ஆனாலும் உன் பிரண்டுங்க ரெண்டும் யுனிக் பீஸ் தான்.’’ என்று சிரித்தான். சற்று இடைவெளி கொடுத்து, “முடிலடி…. கல்யாணத்தை சீக்கிரம் வைக்க சொல்லணும்.’’ என்றான் ஆற்றாமையோடு. 

“நானும் என் ஸ்டைல்ல சாரி சொல்லிக்கவா…’’ என்றாள் மகிழ் அவன் கண்களை பார்த்து. அவன் சம்மதமாய் தலை அசைக்க, லேசாய் மேலே எம்பி கூராய் இருந்த அவன் மூக்கின் நுனியை அழுத்தமாய் கடித்துவிட்டு, “ஹே…’’ என்ற அவனின் எதிரொலியை சட்டை செய்யாது படிகளில் இறங்கி ஓடிப் போனாள். 

அதன் பிறகு பேச்சு வார்த்தை முடிந்து, மாலை தேநீர் முடிந்த பின்பே மணமகன் வீட்டார் கிளம்பினர். அதுவரை மணமக்கள் இருவரும் ரகசிய பார்வை பரிமாற்றத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் கிளம்பி போனதும், மகிழின் சித்தி மணப்பெண்ணுக்கு திருஷ்டி சுற்றி வைத்தார். 

இரவு உணவிற்கு பின் குணாளனின் குடும்பமும், அடுத்தநாள் பணி, மற்றும் பள்ளியை முன்னிட்டு தங்கள் இல்லம் திரும்பினர். தோழிகள் மூவரும் ஒரே அறையில் ஒரே கட்டிலில் படுத்து கொண்டு தங்கள் வழமைபடி கதை பேச துவங்கினர். 

மல்லி மதிக்கு அழைக்க, அவள் ரேணுவை அழைப்பில் இணைக்க, சங்கரியும் மல்லியும் மாறி மாறி அன்றைக்கு நடந்த சம்பவங்களை ஏதோ திகில் திரைப்படம் போல தோழிகளுக்கு விவரித்தனர். அவர்கள் மகிழுக்கு வாழ்த்தை தெரிவித்து விட்டு, இது போன்ற நேரத்தில் தங்களால் உடனிருந்து உதவ முடியவில்லையே என வருந்தினர். 

மகிழ் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, திருமணத்தில் பார்த்து கொள்ளலாம் என சொல்லி சமாதனப்படுத்த மேலும் அரை மணி நேரம் மற்ற கதைகளை பேசிவிட்டே அழைப்பை துண்டித்தனர். 

அதன் பிறகு சங்கரி தான் மொட்டை மாடியில் பார்த்த காதல் காவியத்தை சொல்ல, மல்லி மாறன் போல நடிக்க, சங்கரி மகிழை போல வெட்கப்பட்டு நடிக்க, இவர்களின் தொல்லை தாங்க முடியாத மகிழ் தலையணைகள் கொண்டு இருவரையும் மொத்தினாள். 

அடிவாங்கி ஓய்ந்து படுக்கையில் சரிந்த மல்லி, “நீங்க அடிச்ச கூத்துல எனக்கு என் மாமா நியாபகம் வந்துருச்சுடி பக்கிகளா…’’ என்றவள் தன் அலைபேசியை எடுத்து கொண்டு தன் கணவனோடு காதல் கதை பேச பக்கத்து அறைக்குள் நுழைந்தாள். 

சங்கரியும், “இவளுக்கு தான் மாமா இருக்கா… எனக்கும் இருக்கு. நானும் பேசுவேன்.’’ என்றவள் தன் அலைபேசியை எடுத்து கொண்டு படுக்கையில் சரிந்தாள். “கல்யாணம் கட்டி குழந்தை பெத்த கிழடு கட்டைகளே ரொமான்ஸ் செஞ்சா நான் செய்ய மாட்டேனா…” என்ற மகிழ் தானும் தன் அலைபேசியை எடுத்து கொண்டு சங்கரிக்கு அருகில் படுத்து கொண்டு மாறனுக்கு செய்தி அனுப்ப தொடங்கினாள். 

காலம் எப்போதும் நிலையாய் இருப்பதில்லை. மகிழ்ச்சி என்ற பகலாகவும், துக்கம் என்ற இருளாகவும் மாறி மாறி அது எப்போதும் சுழன்று கொண்டே இருக்கிறது. அந்த சுழற்சி இனி அவர்களின் வாழ்விலும் தொடரும். 

பந்தமாகும்.         

 

 

Advertisement