Advertisement

பந்தம் – 23 

“எல்லா பொண்ணுங்களும் எப்படி டீ ஒரே மாதிரி இருக்கீங்க.’’ என்ற மாறனின் அழுத்த குரல் அலைபேசியில் ஒலிக்க மகிழுக்கு சற்று நேரம் ஒன்றுமே புரியவில்லை. “மாறா…’’ அவள் பதில் கொடுக்க முயல, “ஏய்… உங்க அம்மா எங்க…?’’ என்ற அடுத்த கேள்வி குத்தீட்டியாக வந்து பாய்ந்தது. 

“மாறா…’’ தற்சமயம் மகிழின் குரல் தழு தழுக்க ஆரம்பிக்க, “குடும்ப மொத்தமும் முந்நூறு கிலோ மீட்டர் தாண்டி வந்து நின்னதுக்கு அப்புறம் மொத்தமா எங்க சொந்தக்காரங்க முன்னாடி எங்களை அசிங்கப்படுத்திடீங்க இல்ல…? இதுக்கு தான் நான் தினம் தினம் பயந்தேன். இப்ப அதெல்லாம் உண்மையா ஆயிடுச்சு. நீ இப்படி முதுகுல குத்துவன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. ஏண்டி இப்படி செஞ்ச…?’’ என்று வலியின் இயலாமையுடன் பேச, அவனுக்கு எப்படி தக்க பதில் சொல்வது எனப் புரியாத மகிழின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்திருந்தது. 

தோழி கலங்கி நிற்பதை கண்ட மல்லி ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்து, மகிழின் கையில் இருந்த அலைபேசியை உடனே கைபற்றினாள். “அண்ணா… என்ன ஆச்சு…?’’ என்று மல்லி பதற, “அதை உன் பிரண்டை கேட்டு தெரிஞ்சிக்கோ.’’ என்றவன் வேகமாய் அழைப்பை துண்டித்திருந்தான். 

“என்ன ஆச்சுடி…’’ என்று மல்லி கவலையாய் மகிழின் முகம் பார்க்க, அடுப்பில் வடை சுடும் பணியில் ஈடுபட்டிருந்த சங்கரியும் ஓடி வந்து தோழியின் கரம் பிடித்தாள். தன் தலையில் இருந்த பூவை எடுத்து அருகில் இருந்த மேஜையில் வீசிய மகிழ், “எனக்கு மட்டும் ஏண்டி இப்படியெல்லாம் நடக்குது. மனசளவுல கூட நான் யாருக்கும் தீங்கு நினச்சது இல்லையே…” என்றவள் குலுங்கி அழ ஆரம்பித்தாள். 

தோழிகள் இருவரையும் பதற்றம் தொற்ற, சங்கரி குரலை உயர்த்தி, “ஏய்… என்ன நடந்ததுன்னு சொல்லிட்டு அழுடி. இன்னும் கொஞ்ச நேரத்துல மாப்பிள்ளை வீட்ல இருந்து வந்துடுவாங்க. இப்ப எதுக்கு நீ அழுதுட்டு இருக்க…” என்றாள் பதட்டமாய். 

“அப்படியெல்லாம் இங்க யாரும் வரப் போறதில்லை. அம்மா அவங்க வீட்டுக்கு கூப்பிட்டு ஏதோ பேசி இருக்காங்க. மாறன் ரொம்ப உடஞ்சி போய் பேசுறார். உங்க அம்மா வரலை அப்படிங்கிற உண்மையை ஏன் என்கிட்ட இருந்து மறச்சன்னு கேட்டுட்டு போனை வச்சிட்டார். இனி இங்க எந்த நல்ல காரியமும் நடக்கப் போறதில்லை.’’ என்றாள் தேம்பலுடன். 

“வாயை மூடு எரும. ஏதாச்சும் அச்சாணியமா பேசி வைக்காத. சங்கரி நீ உன் போன்ல இருந்து மாறன் அண்ணாவுக்கு போட்டு அவங்க அம்மாகிட்ட கொடுக்க சொல்லி பேசு. நான் அதுக்குள்ள இவளை சரி செய்றேன்.’’ என்று கட்டளையிட சங்கரி குழப்பமாய் தலை அசைத்துவிட்டு, அலைபேசியோடு கூடத்தை நோக்கி நடந்தாள். 

“மகிழ்…! இங்க பாரு…! அழாத. உன்னோட சாய் அப்பா உன்னை சோதிச்சாலும் உன்னை எப்பவும் கை விட மாட்டார். ரொம்ப தூரம் ட்ராவல் செஞ்சி வந்தவங்க… நிச்சயம் செய்யும் போது வீட்டு பெரியவங்க இருக்கணும்னு எதிர்பார்ப்பாங்க தானே. உங்க அம்மா தன்னால முடியாதுன்னா ஆரம்பத்துல சொல்லி இருந்து இருக்கலாம். இப்படி கடைசி நேரத்துல சொல்லி எல்லாரையும் சங்கடத்துல தள்ளிட்டாங்க. சரி போனது போகட்டும் விடு. இந்த ஊர்ல உனக்கு தெரிஞ்ச உங்க சொந்தக்காரங்க இருக்காங்களா…?’’ என கேட்டாள். 

தொடர்ந்து நீரை பொழிந்து கொண்டிருந்த கண்களை அழுந்த துடைத்த மகிழ், “ஒரு சித்தப்பா வீடு இங்க இருக்கு. அவங்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். ஆனா ரொம்ப வருசமா பேச்சு வார்த்தை இல்ல…’’ என்றாள் சங்கடமாய். 

“அதெல்லாம் விடு. அவங்க நம்பர் இருக்கா..?’’ என்றாள் மல்லி. “எங்க பேமிலி க்ரூப்ல இருக்கும்னு நினைக்கிறேன்.’’ என்றாள் மகிழ். “முதல்ல அவங்க நம்பரை எடுத்து பேசு. இங்க நடந்ததை சுருக்கமா சொல்லி உடனே நம்ம வீட்டுக்கு வர முடியுமா கேளு.’’ என்றாள். 

‘எப்படி பேச…’ என மகிழ் தயங்க, “எவ்ளோ தள்ளி இருந்தாலும் ரத்த சொந்தத்துக்கு ஒரு பலம் இருக்கும் மகிழ். நீ கூப்பிட்டு பாரு.’’ என்றாள். 

மகிழ் தன் அலைபேசியை கையில் எடுக்க, சங்கரி வாடிய முகத்துடன் உள்ளே வந்தாள். நேரே மகிழை பார்த்தவள், “உங்க அம்மாவுக்கு எதுக்குடி இந்த வேண்டாத வேலை. அவங்களுக்கும் உனக்கும் இனி எந்த சமந்தமும் இல்லைன்னு நேரா மாறா அண்ணா அம்மாவுக்கு போன் செஞ்சி சொல்லி இருக்காங்க. பாவம் அவங்க அப்படி அழறாங்க. ஏற்கனவே ஒரு பொண்ணு இப்படித்தான் குடும்பத்தை உதறிட்டு வந்து கடைசியா என் பையனையும் உதறிட்டு போனா… அப்பா அம்மா ஆசிர்வாதம் இல்லாம இனி நான் பொண்ணு எடுக்க விரும்பல சாமின்னு சொல்லி சொல்லி அழறாங்க. கூட வந்தவங்க முன்னாடி எவ்ளோ தலையிறக்கமா போயிருக்கும்… பாவம்டி…’’ என்று சங்கரி அழ துவங்க, இப்போது யாரை தேற்றுவது என்ற குழப்பத்திற்கு ஆளானாள் மல்லி. 

“ஏய்… இப்ப நீ எதுக்குடி கண்ல டேமை திறந்துட்டு இருக்க. நான் மகிழை அவங்க சித்தப்பாகிட்ட பேச சொல்லி இருக்கேன். நீ கொஞ்ச நேரம் சும்மா இரு.’’ என்று அதட்டியவள், உடனே மகிழை பார்க்க, மகிழ் சங்கடமாய் தன் சித்தப்பாவிற்கு அழைத்தாள். 

முதல் முயற்சியில் இணைப்பு கிடைக்காது போக, இங்கு மூவருக்கும் ரத்த அழுத்தம் எகிறியது. அடுத்த முயற்சியில் அவர் அழைப்பை ஏற்க, இவளின் குரல் கேட்டதும் அந்த மனிதர், “பொண்ணு குட்டி எப்படிமா இருக்க..?’’ என்று அவர் எப்போதும் அவளை சிறு வயதில் அழைக்கும் செல்ல பெயரில் அழைக்க, மகிழ் மொத்தமாய் உடைத்து போனாள். 

“சித்தப்பா…..’’ என்று அழுது கொண்டே கேவியவள், தன் வாழ்வில் நடந்து முடிந்த சம்பவங்களை கோர்வையாய் சொல்லி விட்டு தேம்ப, இப்போது சங்கரி அலைபேசியை அவளிடமிருந்து பறித்து தான் பேச துவங்கினாள். 

“அப்பா… நீங்க இங்க வந்தா நல்லா இருக்கும் பா. அவ அழறதை பார்த்தா எங்களுக்கு எல்லாம் கஷ்டமா இருக்குப்பா. மாறா அண்ணா வீட்லயும் பிரச்சனை ஆயிடுச்சுப்பா.’’ என்று வருத்தமாய் தெரிவிக்க, தன்னை நிலை படுத்திக் கொண்ட மகிழ் மீண்டும் அலைபேசியை வாங்கிக் கொண்டாள். 

“பொண்ணு குட்டி. என்ன இருந்தாலும் அண்ணி செஞ்சது தப்பு. நீ அழாதடா தங்கம். மாப்பிள்ளை நம்பரை இப்பவே எனக்கு அனுப்பு. அப்படியே உன் வீட்டு லோகேசனையும் வாட்ஸ் அப் பண்ணு. அவருகிட்ட பேசிட்டு, நான் சித்தியையும் பசங்களையும் கூட்டிகிட்டு உடனே அங்க வறேன்.’’ என்றார். 

அவரின் வார்த்தைகள் மகிழுக்கு மலை போன்ற நம்பிக்கையை தந்தது. “ரொம்ப தாங்க்ஸ் சித்தப்பா…’’ என மகிழ் தழுதழுக்க, “கழுத உதை வாங்கப் போற. முதல்ல நம்பரை அனுப்பு.’’ என்றவர் அலைபேசியை வைக்க, தோழிகளின் முகம் அப்போது தான் சற்று தெளிந்தது. 

நட்பு விழுதாக வெளியே தெரிகிறது. சில நேரங்களில் சொந்தம் வேராக கண்ணனுக்கு தெரியாமல் பிண்ணிப் பிணைந்து நம்மை தாங்குகிறது. அந்த பிணைப்பை மகிழ் அந்த நொடி உணர்ந்தாள். 

மகிழின் சித்தப்பவான குணாளன் மாறனுக்கு அழைத்து தன்னை முறைப்படி அறிமுகம் செய்து கொண்டதோடு, அவரின் பெற்றோர்கள் மனம் உருகும் வகையில் அவர்களிடம் பேசவும் செய்தார்.

“அண்ணா… கொஞ்சம் பழங்காலத்து ஆளுங்க சம்மந்தி. ஊரு தனக்காரரு. அந்த வீம்புல இருக்காரு. அண்ணி அண்ணன் பேச்சுக்கு பயந்துகிட்டு குண்டக்க மண்டக்க வார்த்தையை விட்டுப்புட்டாங்க போல. எங்க பாப்பா தங்கம் மாதிரி. நான் தூக்கி வளர்ந்த பிள்ளை. ஒரு குத்தம் சொல்ல முடியாது. நானும் என் பொண்டாட்டியும் சபையில நின்னு பொண்ணை உங்களுக்கு தாரை வார்த்து கொடுக்குறோம். கொஞ்சம் அண்ணி பேசின வார்த்தையை எல்லாம் மனசுல ஏத்திக்கமா கிளம்பி வாங்க. நாங்களும் பாப்பா வீட்டுக்கு தான் கிளம்பிட்டு இருக்கோம்.’’ என்று பேச, அவர்களும் ஒருவாரு மலை இறங்கினர். 

அவர் உபயோகித்த ‘சம்மந்தி’ என்ற வார்த்தையே அவர்கள் உள்ளத்தை குளிர செய்ய, முதலில் தங்கள் ஆற்றாமையை கொட்டினாலும் இறுதியில் நிச்சயம் செய்ய வருவதாய் அவர்களும் ஒப்புக் கொண்டனர். 

அடுத்து என்ன ஆகுமோ என்ற பீதியில் இருந்த தோழிகளின் முகம் அப்போது தான் சற்றே தெளிந்தது. உடனே சங்கரி, “ஐயோ டைம் ஆச்சு. நான் வடை சுட போறேன்…’’ என்று சமையலறை நோக்கி ஓட, “இந்த பூவை வைடி தலையில. இனி பூவை தொடு… கையை உடைக்கிறேன்.’’ என்று தோழியை வைதபடி அழுகையில் கரைந்த அவளின் ஒப்பனைகளை சரி செய்ய தொடங்கினாள். 

அதே நேரம் சமையலறையில் இருந்த சங்கரி, “ம்… கொஞ்ச நேரத்துல நான் செஞ்ச வடை பாயசம் எல்லாம் சாப்பிட ஆள் இல்லமா வீணா போயிடுமோன்னு திக்குன்னு இருந்தது. நல்ல வேளை மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிளம்பி வராங்க.’’ என்றாள் உற்சாகமாய். 

உடனே மல்லி, “இப்போ எனக்கு வரப் போறவங்க வயிறு எல்லாம் வீணாப் போகப் போகுதேன்னு நினைச்சா திக்குன்னு இருக்கு. அதுக்கு என்ன செய்ய…?’’ என்றாள் கவலையாய். 

உடனே சமயலறையில் இருந்து கரண்டியோடு, காளியை போல விழிகளை உருட்டி எட்டிப்பார்ந்த சங்கரி, “ஆமா… அவங்க வயிறு வீணா தான் போகும். ஆனா அது என்னால இல்ல. நீ வச்சி இருக்கியே சாம்பாருங்குற பேர்ல ஒரு மஞ்ச தண்ணி அதை சாப்பிட்டா கண்டிப்பா வயிறு வீணா தான் போகும்.’’ என்றாள் கடுப்பாய். 

உடனே மகிழை விட்டு எழுந்து நின்ற மல்லி, “மகிழ் நீ தான் சாட்சி. இன்னைக்கு இவ என் சாம்பாரை தொடக் கூடாது.’’ என்றாள் கோபமாய். உடனே சங்கரியும், “வடை உன் வாயுக்கு போச்சு… நின்னு போயிடும் உன் மூச்சு.’’ என்று அடுக்கு வசனம் பேசினாள். 

அதுவரை அழுது கரைந்திருந்த மகிழ், “ஏய்… ஆரம்பிச்சிடீங்களாடி உங்க பஞ்சாயத்தை. தீர்த்து வைக்க நம்ம காதர்பாய் கூட இங்க இல்ல. தயவு செஞ்சி கொஞ்சம் சும்மா இருங்கடி…! ஏற்கனவே அழுது அழுது மேக்கப் போச்சு. இப்ப சிரிக்க சிரிச்சி கலஞ்சிட்டு இருக்கு. முடியல உங்களோட…’’ என்று அலுத்து கொள்ள இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டு உள்ளே சென்றனர். 

அடுத்த அரை மணி நேரத்தில் முதலில் மகிழின் சித்தப்பா தன் குடும்பத்தோடு வந்து விட, அங்கே ஒரு பாசப் போராட்டம் நடந்து முடிந்தது. அவளின் சித்தி குணவதி இவர்களோடு சேர்த்து அடுப்படியை கவனிக்க, வந்திருந்த வாண்டுகள் இருவரும் நெடு நாட்கள் கழித்து சந்தித்த தங்கள் மூத்த தமக்கையுடன் ஒட்டிக் கொண்டனர். 

Advertisement