Advertisement

இந்த களேபரத்தில் மல்லியின் தந்தைக்கு கொரொனோ தொற்று ஏற்பட்டு விட மொத்த குடும்பமும் பதறி போனது. சீதை மகளை அலைபேசியில் அழைத்து, “நீ லீவ் போட்டுட்டு உடனே கிளம்பி வாடி. எனக்கு பயமா இருக்கு.’’ என்று அழ, 

“அம்மா…! முதல்ல அப்பாவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க. மாமாவை சி.டி ரிப்போர்ட் எனக்கு அனுப்ப சொல்லு. முதல்ல அப்பாவுக்கு பயம் காட்டாம இரு.’’ என்று தாயை சமாதனப்படுத்தினாள்.    

அடுத்து சுந்தர் அவளுக்கு அழைக்க, “மாமா…! பதறாதீங்க. என்னை மாதிரி தான் ஒவ்வொரு ஹாஸ்பிட்டலையும் அவங்க அவங்க குடும்பம் குழந்தை எல்லாத்தையும் விட்டுட்டு எல்லாரும் வேலை செஞ்சிட்டு இருக்காங்க. இப்போ நான் சடனா கிளம்பி வந்தா… இங்க இருக்க பேசன்ட் எல்லாம் ரொம்ப கஷ்டப்படுவாங்க மாமா. கோவிட் வார்ட்ல என் பிரண்ட் ராதா தான் இருக்கா. நான் பேசிட்டேன். நீங்க அப்பாவை கூட்டிட்டு போங்க.” என்று கணவனுக்கும் திடம் கொடுத்து அனுப்பினாள். 

அங்கு தன் அப்பாவின் நிலை கேள்விக் குறியாய் இருக்க, மல்லி தனக்கு ஒதுக்கப்பட்ட நோயாளிகளை கண்ணும் கருத்துமாய் கவனித்து கொண்டாள். கோதண்டராமனுக்கு முதல் இரு நாட்கள் செயற்கை சுவாசம் தேவைப்பட மொத்த குடும்பமும் பதட்டத்தில் இருந்தது. 

அதன் பிறகு சீரிய கவனிப்பில் மெது மெதுவாக அவர் உடல் நலம் தேறி, பதினான்கு நாட்கள் கழித்து நலம் பெற்று வீட்டிற்கு திரும்பிய பிறகே, மற்றவர்கள் மன நலம் மீண்டது. அந்த செய்தியை கூட மல்லி, “சரி..’’ என்று ஒற்றை வார்த்தையில் கேட்டுக் கொண்டாள். 

இப்படி மல்லியின் வாழ்வு கொரொனோவோடு கழிந்து கொண்டிருக்க, சங்கரியும் மகிழும் கூட அதே மன நிலையில் தான் இருந்தனர். கொரொனோ உச்சகட்டத்தில் இருக்க, மகிழின் தந்தை மகளுக்கு மணம் முடித்தே தீர வேண்டும் என்ற உறுதியான நோக்கத்தில் இருக்க, மகிழ் வேறு வழியின்றி தன் தாயின் உதவியை நாடினாள். 

“நானே கருவேப்பிலை கொத்து கணக்கா ஒத்த பொட்ட பிள்ளைய பெத்து வச்சி இருக்கேன். அந்த வருத்தம் உங்க அப்பனுக்கு கொஞ்சமாச்சும் இருக்கா. நீ அந்த தம்பி போன் நம்பரை கொடு. நான் அவங்க வீட்ல பேசி பாக்குறேன்.’’ என்றதும் மகிழும் தன் தாயிடம் மாறனின் எண்ணை பகிர்ந்தாள். 

அதுவரை எல்லாம் நன்றாக தான் போனது. அவரும் வேறு இரு சொந்தங்களுடன் சென்று அவரின் வீட்டில் பேசி நிச்சய நாள் வரை குறித்துவிட்டு வந்தார். தோழிகளுக்கு வேறு வேறு பகுதியில் விடுதி அறைகள் கொடுக்கப்பட்டிருக்க, மகிழ் அந்த செய்தியை தோழிகளுடன் அலைபேசியில் பகிர்ந்து கொண்டாள். 

தோழிகள் நால்வருக்கும் மகிழின் வாழ்வு மலரப் போவதில் பெரும் மகிழ்வு. அந்த ஊழிப் பெருங் காலத்திலும் அந்த மகிழ்வை தங்கள் மனதோடு கொண்டாடி தீர்த்தனர். தற்சமயம் சென்னைக்கு வர கெடு பிடிகள் அதிகம் இருந்த காரணத்தினால், முன் பதிவு செய்து, மண மகனின் வீட்டிலிருந்து வருவதற்கு பத்து நாட்கள் மேல் ஆகும் என்று சொல்ல, அந்த குறிப்பிட்ட தினத்தில் மகிழின் அம்மாவும் சென்னை வருவது என்று ஏற்பாடானது. 

தோழிகளும் அப்போது தனிமைப்படுத்தல் பகுதியில் இருந்ததால் விடுதி மேலாளரிடம் அனுமதி பெற்று மூவரும் மகிழின் வீட்டில் குழுமினர். நீண்ட நாட்களுக்கு பிறகு நடக்கும் தோழிகள் சந்திப்பு. 

மூவரும் கட்டி பிடித்து, ஒட்டி உறவாடி, ஊர் கதை பேசி பிடித்ததை சமைத்து உண்டு இனிமையாக அந்த இரு நாட்களையும் கழித்தனர். மூன்றாம் நாள் மணமகன் வீட்டில் இருந்து நிச்சயம் செய்ய வருவதாய் ஏற்பாடாகியிருந்தது. 

அதற்கு ஒரு நாள் முன்பு மகிழின் தாய் வருவதாக இருந்தது. அந்த நாளும் வந்தது. இரவு தாய் வந்து விடுவார் என்று மகிழ் எதிர்பார்த்திருக்க, அவரோ அலைபேசியில் அழைத்து, “இங்க உங்க அப்பாரு கூட ஒரே சண்டை மகிழு. என்னால வர முடியாது இப்ப.’’ என்று விட, மகிழ் திகைத்து போனாள். 

“என்னம்மா சொல்ற…? இப்ப வரவங்க உன்னை கேட்டா நான் என்ன சொல்ல…?” என்று அவள் திணற, “உங்க அப்பாரு வந்துட்டாரு. நான் அப்புறம் கூப்பிடுறேன்.’’ என்று வைத்துவிட்டார். 

தோழியின் முகத்திலிருந்தே எதுவோ சரியில்லை என்று உணர்நதவர்கள், “என்னாச்சுடி…?’’ என்று அவள் பக்கம் வந்து நிக்க, “அம்மா இப்ப திடீர்னு வர மாட்டேன்னு சொல்றாங்கடி..” என்றாள் கலங்கிய குரலில். 

மற்ற இருவருக்கும் கூட அந்த செய்தி அதிர்ச்சி தான். சற்று நேரம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டவர்கள், தங்களை சமாதானம் செய்து கொண்டு, “சரி விடு… அம்மாவுக்கு கொரொனோ பாசிடிவ்னு காலைல தான் ரிசல்ட் வந்தது. அதான் வர முடியலைன்னு சொல்லிடலாம்.’’ என மல்லி சொல்ல, அதுவரை கலங்கி நின்று கொண்டிருந்த மற்ற இருவரும் ‘பக்கென’ சிரித்து வைத்தனர். 

மல்லியின் முதுகில் ஓங்கி அடித்த சங்கரி, “அடிப்பாவி கொரொனோவையும் விட்டு வைக்க மாட்டியா நீ…?’’ என்றாள். உடனே மல்லி, “ஆமா இத்தனை நாள் அது நம்மளை வச்சி கும்மி அடிச்சது இல்ல. இனி நாமளும் அப்பப்ப அதை வச்சி கும்மி அடிச்சிற வேண்டியது தான்.’’ என்றாள் கொஞ்சமும் சிரியாமல். 

மற்ற இருவரும் வாய் விட்டு சிரிக்க, “சரி சரி… மகிழ் உன் கையை கொண்டா நான் உனக்கு மெகந்தி போடுறேன். சங்கரி வெங்காயம் காய் எல்லாம் கட் செஞ்சி வை. கெட்டுப் போகாத ஐட்டத்தை எல்லாம் நைட்டே சமச்சி வச்சிடலாம்.’’ என்று சொல்லிக் கொண்டே மகிழின் கைகளை பற்றினாள். 

“சோம்பேறி… வேலை செய்ய சொல்லிடுவாங்களோன்னு மெகந்தி போட போறியா. காய் மட்டும் தான் நான் கட் பண்ணுவேன். நீ தான் சாம்பார் வச்சி பொரியல் தாளிக்கணும்.’’ என்று விட்டு வெங்காய  கூடையை எடுத்து வந்து கூடத்தில் அமர, “நீ தான் வடை சுடணும். நீ சுட்டா தான் உளுந்த வடை புசு புசுன்னு என் கன்னம் மாதிரி வரும். வேற யார் சுட்டாலும்… உன் கன்னம் தான் வரும்.’’ என்று மகிழின் கைகளில் மருதாணி கோலம் வரைத்து கொண்டே சங்கரியை வம்பிழுத்து கொண்டிருந்தாள் மல்லி. 

“அடிங்க… பொரிச்சி எடுக்குற கரண்டில ரெண்டு போட்டா அப்புறம் எல்லாம் புசு புசுன்னு வரும். ஓவரா பேசிட்ட. என்னோட கைக்கும் நீ தான் மெகந்தி போடணும். ரெண்டு கைக்கும். அப்புறம் சோறு ஊட்டி விடணும்.’’ என்றாள் சங்கரி. 

உடனே மகிழ், ‘சோறு ஊட்டி விடுவா சரி. ரெஸ்ட் ரூம் போனா…’’ என்று மகிழ் இழுக்க, “அதெல்லாம் என் கன்னத்தை கமென்ட் செஞ்சவ கவலைப்பட வேண்டிய விஷயம். ஒய் யூ வொரி டியர்…’’ என்று மல்லியின் வயிற்றில் புளியை கரைத்தாள். 

உடனே மல்லி கையை தலைக்கு மேலே தூக்கி ஒரு கும்பிடு போட்டு, “அம்மா தாயே தெரியாம உன் கன்னத்தை ஒடுங்கிப் போன கன்னம்னு கமென்ட் கொடுத்துட்டேன். அது குஷ்பு இட்லி கணக்கா புசு புசுன்னு தான் இருக்கு. போதுமா…! ஆளை விடு தாயி. நல்ல நாள் அதுவுமா கண்ணை அவிச்சி விட்றாத.’’ என்று புலம்ப மகிழ், “உங்களோட பக்கிகளா…’’ என்று மேலே பேச முடியாமல் குலுங்கி சிரித்தாள். 

 

இருபது சொந்தங்கள் கூடி இருந்தால் அந்த நிச்சய இல்லம் என்ன குதூகலத்தில் இருக்குமோ, அந்த குதூகலத்தில் தற்சமயம் குலுங்கிக் கொண்டிருந்தது. இரத்த சொந்தம் ஏதுமின்றி தன் வீட்டில் பொறுப்பாய் வேலை பார்த்து கொண்டு, தன் வலியை தங்கள் வலியாய் உணர்ந்து தன்னை சிரிக்க வைத்து கொண்டிருந்த தோழிகளை மகிழ் கண்களில் நீர் துளிர்க்க வாஞ்சையோடு பார்த்துக் கொண்டிருந்தாள். 

சொந்தம் என்ற பெயரில் அவளுக்கு சில நூறு நபர்கள் உண்டு. நெருங்கிய சொந்தம் என்று பொறுக்கி எடுத்தால் எண்ணிக்கை ஐம்பதிற்கு குறையாது. ஆனாலும் தான் தனிமையில் தவித்து நிற்கும் போது, இறைவன் தோழிகள் என்ற சொந்தத்தை அனுப்பி வைத்து தன்னை ஆசிர்வதித்ததை மகிழ் உள்ளன்போடு எண்ணிப்பார்த்தாள்.

எவ்வித எதிர்பார்ப்புமின்றி உடன் வரும், கை பற்றும், கட்டி கொள்ளும், ஆறுதல் தரும், கண்ணீர் துடைக்கும், சிரிக்க வைக்கும் இந்த நட்பு தான் சொந்தங்களை விட எத்தனை உயர்ந்தது என்பதை மகிழ் அணு அணுவாய் உள்வாங்கிக் கொண்டிருந்தாள். 

விடிய விடிய பேசி, அதி காலையில் அரக்க பறக்க சமைத்து, மணமகளை அலங்கரித்து, வீட்டை அலங்கரித்து, வர்ண கோலம் வரைத்து என்று தோழிகள் பரபரப்பாய் இயங்கி கொண்டிருக்க, மகிழின் உள்ளமோ வந்து நிற்கும் மணமகன் வீட்டார் தன் தாய் குறித்து கேட்டால் என்ன பதில் சொல்வது என்ற சிந்தையிலே உழன்று கொண்டிருந்தது. 

மகிழ் அறியாயது ஒன்று தான். அவளின் தாய் அந்த பாரத்தை மகள் தலையில் ஏற்றாமல், அதிகாலை சென்னை வந்து இறங்கிய மணமகன் வீட்டாருக்கு அழைத்து, “எங்க வீட்டுக்காரர் பேச்சு தாங்க முடியலைங்க. இனி எனக்கும் என் பொண்ணுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.’’ என்று விட, மணமகளை காண்பதற்காய் சொந்த பந்தங்களை மகிழுந்தில் சீர் வரிசையோடு அழைத்து கொண்டு வந்திருந்த மணமகனின் தாய் அவர் பேசிய வார்த்தையில், “இந்த முறையும் மோசம் போயிட்டியே மாறா…’’ என்று தன் கதறலை துவங்க மொத்த இடமும் அமளி துமளிக்கு உள்ளானது. 

அதே நேரம் அங்கு மல்லி மகிழின் தலையில் பூவை சூடிக் கொண்டிருக்க, பூகம்ப செய்தி சுமந்த அலைபேசி அதிர்ந்து ஒலித்தது. சங்கரி அலைபேசியை எட்டிப் பார்த்து, “உங்க மாம்ஸ் தான்..’’ என்று கண்ணடிக்க, புதிதாய் மலர்ந்த வெட்க சிவப்புடன் மகிழ் அந்த அலைபேசியை ஏற்றாள். 

அடுத்தடுத்து அந்த அலைபேசியின் வழி வந்து விழும் வார்த்தைகள் தன் உயிர் உருவப் போகிறது என்பதை அறிந்திராத மகிழின் முகத்தில் இன்னும் சில நொடிகளில் மறைய காத்திருந்த புன்னகை பலமாய் ஒளி வீசிக் கொண்டிருந்தது. 

பந்தமாகும்.      

 

Advertisement