Advertisement

பந்தம் – 23 

“இதுக்கு மேல பெட் வேகன்ட் இல்ல. கேசுவாலிட்டி ஸ்ட்ரக்சர்ல கூட பேசன்ட் ரிசீவ் செஞ்சிட்டோம். இனி பேசன்ட் யாரையும் உள்ள ரிசீவ் செய்ய வேண்டாம்.’’ என்று அங்கிருந்த செவிலியிடம் உள்ளார்ந்த சோர்ந்த குரலில் அறிவித்துக் கொண்டிருந்தார் மருத்துவர். 

மல்லியும் அங்கு தான் பணியில் இருந்தாள். முழுக்க மூடிய கவச உடையில், அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தாள். கோவிட் இரண்டாம் அலை மொத்த தலைநகரையும் மூச்சு முட்ட வைத்திருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் மரண ஓலம். 

முதல் அலைபோல, இணை நோய் உள்ளவர்கள், மற்றும் வயதானர்வகளை மட்டும் குறிவைக்காமல், முப்பதை தாண்டிய முதிரா இளைஞர்களை கூட காவு வாங்கிக் கொண்டிருந்தது. அதோடு இந்த டெல்ட்டா வகையில் நுரையீரல் தொற்று தீவிரம் அதிகமாகி அனுமதிக்கப்படும் நோயாளிகளில் அறுபது சதவீத நோயாளிகளுக்கு பிராணவாயு தேவைப்பட்டது. 

மல்லி, மகிழ், சங்கரி மூவரும் சென்னையில் பணியில் இணைந்து மூன்று மாதங்கள் கடந்திருந்தது. அது இரண்டாம் அலை உச்ச கட்டத்தை நெருங்கியிருந்த மே மாதம். அவர்கள் பணியில் இணைந்த பிறகு ஒரு முறை மட்டுமே ஊருக்கு சென்று வந்திருந்தனர்.

அதன் பிறகு இரண்டாம் அலை வேகமெடுக்க, மாநில தேர்தல் முடித்ததும் மீண்டும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக சென்னையின் வாயிற் கதவுகள் இழுத்து மூடப்பட்டன. 

ஆக தங்களின் குடும்பத்தோடான தொடர்பு எல்லாம், தொடுதிரை அலைபேசியோடு முடித்துக் கொண்டனர். “கையை நீட்டுங்க பாட்டி…’’ தனக்கு முன்னால் செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் சுவாசித்துக் கொண்டிருந்த முதிய பெண்மணியிடம் கனிவாக வேண்டினாள் மல்லி. 

அந்த மூதாட்டி, வெகுவாய் சிரமப்பட்டு அனுபவத்தால் சுருங்கிய தன் விரல்களை முன் நீட்டினார். மல்லி தான் கையில் வைத்திருந்த பல்ஸ் ஆக்ஸி மீட்டரை அந்த விரலில் இணைக்க அது அவர் உடலில் இருந்த பிராணவாயுவின் குறை நிலையை அப்பட்டமாய் படம் பிடித்து காட்டியது. 

ஆனாலும் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல், “கஞ்சி வந்துருச்சு பாட்டி. மாஸ்க் எடுத்து விடுறேன். கொஞ்சம் குடிக்கிறீங்களா…?’’ என கேட்டாள். 

‘வேண்டாம்’ என சைகையால் மறுத்தவர், தன் முகத்தில் இருந்த செயற்கை பிராண வாயு தொடர்பை நீக்கும் படி மீண்டும் சைகையில் கேட்டார். 

“வேண்டாம் பாட்டி. கஞ்சி குடிச்சா எடுத்து விடுறேன். இல்லைனா வேண்டாம்.’’ என்றாள். அவர் மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே மல்லி மெதுவாக இணைந்திருந்த இழைகளை விலக்க, மூச்சுக்கு திணறியபடியே, “எனக்கு 82 வயசாச்சு. இனி இது வச்சி என் உசிரை காப்பாத்தாட்டி தான் என்ன…? கொள்ளுப் பேரன் வரைக்கும் நிறைவா பார்த்துட்டேன்…! படுக்கை இல்லாம நிறைய பேரை வெளிய நிறுத்தி வச்சி இருக்காமே. என்னோட படுக்கையை வாழ வேண்டிய சிறுசுக யாருக்காச்சும் கொடுக்க சொல்லு கண்ணு.’’ என்றார். 

அவர் சொல்ல வந்த விசயத்தை சொல்லி முடிக்கும் முன்பே, நிறைய முறை திக்கி திணறி பெருமூச்சு விட்டார். “பாட்டி அப்படியெல்லாம் பேசாதீங்க. உங்களுக்கு ஒண்ணும் ஆகாது. ஒழுங்கா மாஸ்கை போட்டுக்கோங்க.’’ என்றவள் அவருக்கு பிராணவாயு கவசத்தை இணைத்து விட்டு அடுத்த நோயாளியை கவனிக்க சென்றாள். 

அடுத்த இருபது நிமிடங்களில் அந்த இடத்திலிருந்து மருத்துவர், “ஸ்டாப்… பேசன்ட் அரஸ்ட்.’’ என குரல் கொடுக்க, மல்லி அங்கே விரையும் போது அந்த மூதாட்டியின் உடலிலிருந்து உயிர் குருவி பறந்திருந்தது. 

பற்களற்ற வாயில் அப்படி ஒரு நிர்மலப் புன்னகை. மல்லி அவருக்கு அணிவித்து சென்றிருந்த பிரணவாயு கவசம், அவர் கைகளில் இருந்தது. யார் கவனத்தையும் கவராது தானாக நீக்கியிருந்தார். 

சில நிமிடங்களில் அவரின் மரணம் உறுதிசெய்யப்பட, கொரொனோ தொற்றால் உயிரிழப்போரை அடக்கம் செய்யும் மாநகராட்சி ஊழியர்களிடம் அவரின் உடல் கவசமிட்டு ஒப்படைக்கப்பட்டது. சில நிமிடங்களில் தொற்று நீக்கம் செய்யப்பட்ட அந்த படுக்கையில் இருபத்தெட்டு வயதான இளைஞன் ஒருவன் அனுமதிக்கப்பட்டான். 

மல்லி இயந்திரம் போல இயங்கிக் கொண்டிருந்தாள். அவள் துறையில் இருந்த அத்தனை செவிலிகளும் தற்சமயம் மனித இயந்திரங்களாகி இருந்தனர். அனைவரின் இதயமும் தற்காலிகமாய் உணர்சிகளை தொலைத்திருந்தது. 

தனக்கான பணி நேரம் முடிந்த பின்பும், நிறைய நோயாளிகள் தொடர்ந்து அனுமதிக்கப்பட்ட காரணத்தினால், மல்லி மேலும் ஒரு மணி நேரம் மருத்துவமனையில் செலவழித்து அடுத்த பணி நேர செவிலிக்கு உதவிய பின்பே தனக்கு ஒதுக்கப்பட்ட விடுதிக்கு திரும்பினாள். 

கொரொனோ பேரலையை முன்னிட்டு தமிழக அரசு மருத்துவ ஊழியர்கள் தங்க தனித்தனி விடுதிகளை ஏற்படுத்தி தந்திருந்தது. அங்கேயே உணவும் வந்துவிட, ஏழு நாட்கள் தொடர் பணி முடிந்ததும், ஏழு நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் முடிந்த பின் கொரொனோ நோய் தொற்று அறிகுறிகள் இல்லையாயின் மீண்டும் கொரொனோ பகுதியில் பணி என்று ஒரே அலைவரிசையில் அவர்கள் வாழ்க்கை சுழன்று கொண்டிருந்தது. 

அந்த சமயத்தில் பிரசவ பகுதி தவிர மருத்துவமனையின் மொத்த படுக்கைகளும் கொரொனோ நோயாளிகளுக்காய் ஒதுக்கப்பட்டது. ஆக தனிமைப்படுத்தும் நாட்கள் முடிந்ததும் அனைவரும் மீண்டும் கொரொனோ பகுதிக்கே பணிக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் இருந்தது. 

‘நான்’ ‘என் குடும்பம்’ என்ற எண்ணத்தை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மொத்த மருத்துவ துறையும் நோயாளிகளை காக்க களத்தில் ஒருமனதாய் இறங்கி இருந்தனர். விடுதிக்கு திரும்பிய மல்லி புறத் தூய்மை பணி முடிந்ததும் சுந்தருக்கு அழைத்தாள். 

கடந்த மூன்று மாதகாலமாக அவர்களின் குடும்பம் அலைபேசியில் தான் நடந்து கொண்டிருக்கிறது. மனையாள் பணி முடிந்து இந்த நேரத்தில் அழைப்பாள் என்று அறிந்திருந்தவன். அவள் அழைத்த அடுத்த நொடி, “அச்சும்மா…’’ என்று உயிர் தீண்டும் குரலோடு அவள் அழைப்பை ஏற்றான். 

“மாமா…’’ என்ற மல்லியின் குரலிலும் அவனை காண முடியாத அன்பின் ஏக்கம் வழிந்தோடியது. “சாப்பிட்டியா…? இன்னைக்கு என்ன சாப்பாடு கொடுத்தாங்க…?’’ என்று கணவன் விசாரிக்க, இவள் பதில் சொல்ல இப்படி இவர்கள் சொந்த பேச்சில் கொஞ்ச நேரம் கழிந்தது. 

“ஊருக்குள்ள நிலவரம் இப்ப எப்படி மாமா இருக்கு…?’’ என மல்லி கேட்க, சற்று நேரம் மௌனம் சாதித்தவன், “இன்னும் பெருசா எந்த மாற்றமும் இல்ல மல்லி. நம்ம ஊர்ல ஆரம்பிச்ச கொரொனோ கேர் செனட்டர்ல மட்டும் இப்ப வரை 180 பேர் அட்மிசன்ல இருக்காங்க. தினமும் நான் உன் தம்பிங்க எல்லாரும் சேர்ந்து தான் மூணு வேளையும் சாப்பாடு தயார் செஞ்சி எடுத்துட்டு போயிட்டு இருக்கோம். சீனு இப்ப எல்லாம் உங்க தோட்டமே கதின்னு கிடக்குறான். உங்க அப்பாவை ஹாஸ்பிடல்ல இருந்து கூட்டிட்டு வந்துட்டாலும், முன்ன மாதிரி முடியலைன்னு சொல்லிட்டு இருக்காரு. அதனால தொழுவத்தை அகில் பாத்துக்கிறான். பழைய மாதிரி இந்த உலகம் எப்ப மாறும்னு ரொம்ப ஏக்கமா இருக்கு மல்லி.’’ என்றான் சுந்தர். 

“அதெல்லாம் கூடிய சீக்கிரம் மாறிடும். நீங்க அதை இதையும் யோசிக்காம நல்லா சாப்பிட்டு உங்க உடம்பை பார்த்துக்கோங்க. அத்தையும் பசங்களும் பத்திரம். நைட்டு நான் வீடியோ கால் போடுறேன். காலைல நம்ம சிவப்பி கன்னு போட்டுச்சுன்னு அத்தை பேசும் போது சொன்னாங்க. அவளையும் போன்ல காட்டிடுங்க.’’ என்றதும் சுந்தர் மனமே இல்லாது அலைபேசியை வைத்தான். 

தனியறையில் தனிமையில் அமர்ந்திருந்தவள் மன நிலையும் கணவனை ஒத்தே இருந்தது. இந்த உலகம் மீண்டும் எப்போது வழமைக்கு மாறும் என்ற ஏக்கம் அவளையும் பீடித்திருந்தது. 

ஆரம்ப நாட்களில் முதன் முதலாக இரண்டாம் அலையில் மரண விகிதம் அதிகரித்த போது, மல்லி உள்ளுக்குள் உடைந்து போனாள். இரவில் கணவனிடம் பேசும் போது கண்ணீர் விட்டு கதறி அழுதாள். 

மனைவியின் மனதை புரிந்து கொண்ட சுந்தர், “மல்லி…! அழறதை நிறுத்து. போன வராம் உன் வார்ட்ல எத்தனை பேர் அட்மிசன்…?’’ என கேள்வி கேட்டு அவள் கேவலை நிறுத்தினான். 

“சரியா சொல்ல முடியலை நான் கேசுவாலிட்டி தினம் சீரியஸா ஒரு முன்னூறு பேராவது என் ஷிப்ட்ல மட்டும் அட்மிசனுக்கு வந்திருப்பாங்க.’’ 

“சரி உன் ஷிப்ட்ல நீ எவ்ளோ டெத் பேஸ் செஞ்ச…?’’ என்று அடுத்த கேள்வியை கேட்க, மீண்டும் தேம்பலுடன், “எட்டு…! ஆனா எல்லாரும் நாப்பதுல இருந்து ஐம்பது வயசுக்குள்ள இருந்த நடுத்தர வயசுக்காரங்க.’’ என்றாள். 

“உன்னால ஓரளவுக்கு ஸ்டேபிலாகி வார்டுக்கு போன 292 பேரை நினச்சி உன்னால சந்தோஷ பட முடியலை தானே. அப்போ இறந்து போன எட்டுப் பேருக்கு மட்டும் ஏன் வருத்தப்பட்டுட்டு இருக்க. இங்க நடக்குற எதுவும் நம்ம கையில இல்ல மல்லி. மரணம் அப்படிங்கிறது ஒரு மரத்துல இருந்து இலை விழுற மாதிரி ரொம்ப ரொம்ப இயல்பான நிகழ்வு. எப்பவும் பழுத்த இலைகள் தான் கீழ விழும்னு இல்ல… புயல் சமயத்துல மரமே சாய கூட வாய்ப்பிருக்கு.” என்று சுந்தர் நிறுத்த, மல்லி ஒரு, “ம்…’’ கொட்டி அவனை பேச வைத்தாள். 

“நீ தினம் முன்னூறு பேருக்கு வைத்தியம் பார்க்க வேண்டியவ. இந்த அழுத்தத்தை உன் மனசுல வச்சிருந்தா உன்னால எப்படி ஈடுபாட்டோட வேலை செய்ய முடியும்…? இனி ஒன்னு செய். நீ ஒரு கருவி. உன்னோட வேலையை மட்டும் கருத்தா செய். நல்லதோ கெட்டதோ அதை மனசுல ஏத்திக்காத. 292 பேர் குணமாகும் போது உனக்கு சந்தோசமும் வேண்டாம். 8 பேர் இறந்து போனா உனக்கு துக்கமும் வேண்டாம். உன் மனசை நிர்மலமா வச்சிக்கோ. காலைல மூச்சு பயிற்சி செஞ்சிட்டு வார்டுக்கு போ. நைட்டு தூங்குறதுக்கு முன்னாடி உனக்கு பிடிச்ச புத்தகம் படிச்சிட்டு தூங்கப்போ. எது வந்தாலும் எதிர்த்து நாம நிக்கணும் மல்லி. கண்ணீர் இங்க எதையும் மாத்தாது. புரியுதா…?’’ என கணவன் கேட்க கண்ணில் வழிந்த நீரை துடைத்து கொண்டே மல்லி மீண்டும், “ம்..’’ என்றாள். 

அதன் பிறகு கணவனும் மனைவியும் இணைந்து பல சவால்களை சந்திக்க நேர்ந்தது. அதுவரை நகரத்தில் மட்டுமே பரவலாயிருந்த கொரொனோ, மட மடவென கிராமத்தின் சந்து பொந்துகளில் எல்லாம் பரவ தொடங்கியது. 

ஊருக்குள் கொரொனோ வேகம் பிடிக்க, அன்றைக்கு வாசலோடு இவர்களை ஒதுக்கி வைத்தவர்கள் எல்லாம், சுந்தரை தேடி வந்து, “ஐயா… சேலம் போய் நெஞ்சு படம் புடிச்சாந்து இருக்கேன். மருமகளை பார்த்து என்னன்னு சொல்ல சொல்லுயா…” என கேட்டு நின்றனர். 

சுந்தரும் அந்த தரவுகளை மனைவிக்கு அனுப்பி அவர்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளை கொடுத்து அனுப்பி வைத்தான். அதோடு கொரொனோ தொற்று ஆயிரக்கணக்கில் பரவ தொடங்க, இவர்கள் ஊருக்குள்ளேயே பிராணவாயு தேவைப்படாத நபர்களுக்கு சிகிச்சை அளிக்க உயர்நிலைப் பள்ளியொன்று தற்காலிக மருத்துவ குடிலாக மாற்றப்பட்டது. 

அவர்களுக்கு தேவைப்படும் உணவை வெளி உணவகத்தில் அரசு தருவிக்க முயல, தன் ஊர் பஞ்சாயத்து தலைவரின் மூலம் அந்த உணவளிக்கும் ஒப்பந்தத்தை பெற்றவன், அதுவரை கொரொனோ நிமித்தமாக ஊருக்குள் வேலையின்றி முடங்கி கிடந்த மக்களுக்கு அந்த வேலை வாய்ப்பை பகிர்ந்து அளித்தான். 

தங்கள் வயலில் விளைந்த நெல்லை அந்த உணவு தயாரிக்கும் திட்டத்திற்கு நன்கொடையாய் வழங்க, இவனை பார்த்து பலரும், முட்டை, பால், காய்கறி என்று தங்களால் இயன்றதை தனமாய் வழங்கினர். 

சமைத்த உணவுகளை அழகாய் பாக்கு மட்டைகளில் அடுக்கி, வாகனத்தின் மூலம் அவனே நேரில் சென்று சிகிச்சை மையத்தில் ஒப்படைத்து விட்டு, தகுந்த பாதுகாப்பு கவசங்களோடு சமூக இடைவெளியை பின்பற்றி அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளின் நலம் விசாரித்து வருவான். 

மனைவி மருத்துவமனைக்குள் போராட, இவன் மருத்துவமனைக்கு வெளியே நின்று கொரொனோவுடன் போர் புரிந்து கொண்டிருந்தான். வேலை பார்க்கும் அத்தனை தொழிலார்களின் கைகளும் கட்டப்பட்டு விட, விவசாயியின் கை மட்டும் தன் மண் கலப்பையை இறுகி பற்றியிருந்தது. 

தன் உண்டி சுருங்கிய போதும், மலர்ந்த முகத்தோடு உலகத்து உயிருக்கு உணவிடுபவன் அல்லவா…? ஆக கொரோனா காலத்திலும் உலகம் ஏர் பின்னது ஆனது உலகம். அகில் மற்றும் சீனுவும் கூட அந்த இக்கட்டான காலத்திலும் தங்கள் நிலை தளராது காத்த விவசாயத்தை கை கொண்டனர். 

Advertisement