Advertisement

“மா… மா…’’ என்ற அவளின் அடுத்த வார்த்தை சுந்தரின் உதடுகளால் உள் இழுக்கப்பட்டது. மல்லி இதற்கு முன் அப்படி ஒரு வேகத்தை சுந்தரிடம் கண்டதில்லை. ஆடைகள் எப்போது அங்கம் நீங்கியது என்பதை கூட அவளால் அறிய முடியவில்லை. 

உடலை தாண்டி ஆன்மாவை நெருங்கி விட துடித்த இறுகிய அணைப்பு. உதட்டின் வழியே உயிரையும் சேர்த்து உறிஞ்சி எடுத்துக் கொள்ள துடித்த இதழ் முத்தம். அவள் உடல் வெண் தாளாக, அவனோ தன் இதழால் ஒரு இடத்தையும் விடாது இதழ் வரிக் கவிதை எழுதினான். 

அறையின் மின் விளக்குகள் ஒளிர்ந்த வண்ணமே இருக்க, முதல் முறையாக மல்லி, தன்னுடன் கூடலில் கலந்திருந்த கணவனின் முகம் பார்த்தாள். அவனோ அவளில் தொலைந்து விட துடிக்கும் காதல் பித்தனாகி இருந்தான். 

‘அச்சுமா… அச்சுமா…’ என்று புலம்பியபடியே அவளுடன் கலந்தவன் கண்களில் கொட்டிக் கிடந்தது அளக்கவியலாத காதல். அந்த காதல் அவளையும் அவனை ஆள தூண்டியது. எப்போதும் தாம்பத்திய பாடத்தில் அடக்கமான மாணவியாக அமைதியாக இருப்பவள், கணவனின் பிடரிக்குள் கைவிட்டு அவனை அருகிழுத்து எட்டிய இடத்தில் எல்லாம் ஆசை தெறிக்க முத்தமிட்டாள். 

அவள் அமைதியாக இருந்தாலே மூச்சு முட்ட காதல் செய்பவன், அவளின் இசைவில் விண்ணை தொட்டிருந்தான். தன் அத்தனை நாள் ஏக்கத்தையும் ஒரே நாளில் தீர்த்துவிடும் மோகத்தில், “அச்சு…’’ என்று அவள் காதுக்குள் தன் தேவை ஓதி, அவள் சிணுங்கல்கள் எதையும் மதிக்காது, அத்தனையையும் பூர்த்தி செய்து கொண்டான். 

“போதும் மாமா… கொஞ்ச நேரம் தூங்க விடுங்க…’’ என்று மல்லி சிணுங்கிய போது, நேரம் நள்ளிரவை தாண்டியிருந்தது. “அடுத்த ஒரு வாரமும் நைட் நல்லா தூங்கிக்கோ…” என்றவன் அவளை அள்ளி தன் மார்பில் போட்டு கொண்டு தலையை கோதி கொடுத்தான். 

ஒய்யாரமாக அவள் தன் கணவன் மார்பில் சாய்ந்திருக்க, அவன் உச்சந்தலையில் முத்தம் கொடுத்தவன், “ஏண்டி உன் பசங்க தான் உன்னை தேடுவாங்களா…? நான் தேட மாட்டேனா…?’’ என்றான் ஏக்கமாய். 

உடனே அவனை நிமிர்ந்து பார்த்து செல்லமாய் அவன் மீசையை பிடித்து இழுத்தவள், “நீங்க எதுக்கு தேடப் போறீங்க…? என்னை திட்டுறதுக்கு தான தேடுவீங்க.’’ என்றாள் விளையாட்டாய். 

அவள் கன்னத்தில் தன் பல் அழுந்த பதியும் படி கடித்தவன், “ஆமா வேற எதுக்கும் நான் உன்னை தேடாம தான் மூணு பசங்க அம்மா அம்மான்னு உன்னை சுத்தி வருதா…?’’ என்றான் மோகமாய். 

கன்னத்தில் இருந்த அவள் எச்சிலை தன் உள்ளங்கை கொண்டு துடைத்து கொண்டே, “கடு கடு சுந்தர் கடுப்பு சுந்தராவே இருந்தா எனக்கு மட்டும் எப்படி தெரியும். இன்னைக்கு மாதிரி நீங்க என்னை கொஞ்சினதே இல்ல…’’ என்றாள் சலுகையாய். 

அவள் கூர் மூக்கை பிடித்து ஆட்டியவன், “அடியே நான் உன்னை கொஞ்சாத நாளே இல்ல. நான் நகர்ந்து படுத்ததும் நீ தூங்கிடுவ. ஆனாலும் நான் உன்னை ஆசை தீர கொஞ்சிட்டு தான் தூங்குவேன்.’’ என்றான். 

“அப்போ அதெல்லாம் கனவு இல்லையா…? ஹா ஹா… சாரி மாமா…. நீங்க பேசுற எல்லா விசயமும் என் மெமரில இருக்கும். ஆனா அதெல்லாம் கனவுன்னு நினச்சிட்டு இருப்பேன். நீங்க நான் முழிச்சிட்டு இருக்கும் போது என்னை கொஞ்ச வேண்டியது தான…?’’ என்றவள் நன்றாக கணவனின் மார்பில்  சாய்ந்தாள். 

‘ஏன் இத்தனை நாள் அவளிடம் இருந்து ஒதுங்கி இருந்தோம்’ என்ற காரணம் சடுதியில் நினைவடுக்கில் ஊற, மனையாளை நகர்த்தி விட்டவன், “உனக்கும் உங்க வீட்டுக்கும் அடங்கி போற ஆளை தானே நீ தேடின. உன்னை காதலிச்சி கொண்டாடப் போற வாழ்க்கை துணையை நீ தேடலையே. அப்புறம் எப்படி எப்பவும் கொஞ்சிட்டே இருக்கணும்னு எதிர் பாக்குற.” என்றவன் குரல் அவனையும் மீறி இறுகிவிட்டிருந்தது. 

உடனே எழுந்து அமர்ந்தவள் அவன் கண்களை நேராய் பார்த்து, “மாமா…! எதை சொல்றதா இருந்தாலும், எனக்கு புரியிற மாதிரி சுத்தி வளைக்காம நேரடியா சொல்லுங்க.’’ என்றாள். 

உடனே தானும் எழுந்து அமர்ந்தவன், “வேண்டாம் அச்சு. இனி அந்த பழைய கதை எல்லாம் வேணாம். நானும் அந்த குப்பையை சுமந்துகிட்டே திரிஞ்சி தான் இத்தனை வருஷ வாழ்கையை வீண் செஞ்சிட்டேன். நீ பேசினது தப்பாவே இருந்தாலும் எனக்கு எப்பவும் உன்னை மட்டும் தான் பிடிக்கும். நீ இல்லாத வாழ்கையை என்னால நினச்சி கூட பார்க்க முடியாது. அதனால இனி நீ முழிச்சிட்டு இருக்கும் போதே கொஞ்சுறேன் சரியா…?’’ என்றவன் மீண்டும் அவளை படுக்கையில் சரிக்க முயன்றான். 

அவன் கைகளை தட்டி விட்டு நிமிர்ந்து அமர்ந்தவள், “சொல்லுங்க மாமா…! அப்படி என்ன நான் தப்பா பேசினேன். அதை நீங்க வருசக் கணக்கா தூக்கிட்டு சுமக்குறதுக்கு.’’ என்றாள் உறுதியான குரலில். 

‘இது சொல்லாமல் முடியாது’ என்பதை உணர்ந்தவன், அவளின் பள்ளிப் பருவத்தில் அவள் மீது காதலில் விழுந்ததையும், உரிய வயது வரும் வரை காத்திருக்க முடிவு செய்து தன் ஆவல்களை அடக்கி தனக்குள்ளாக ஏங்கியதையும்,  அவளின் தாய் திருமணத்திற்கு முன் பேசியதை கேட்டு விலக முயன்றதையும்,  அவள் திருமணத்திற்கு முன் தன் சித்தியுடன் பேசியதை அலைபேசியில் கேட்க நேர்ந்ததையும், அதன் பிறகு தனக்குள் ஒடுங்கிப் போய் கடுமை முக மூடி அணிய நேர்ந்ததையும் சொல்லி முடித்தவன் பார்வையை விட்டத்தில் பதித்து அமர்ந்துவிட்டான்.

சற்று நேரம் அங்கு அமைதி மட்டுமே ஆச்சி செய்தது. விடாமல் கணவனின் முகத்தை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த மல்லி, முயன்றும் கட்டுப் படுத்த முடியாமல் வெடித்து சிரித்தாள். சுந்தர் குழப்பமாக மனைவியின் முகம் பார்க்க, வயிற்றை பிடித்து கொண்டு விடாது சிரித்தவள், “மாமா…. ஹா ஹா… ஹையோ… நிஜமா நீங்க என்னை லவ் செஞ்சீங்களா…? ஹா ஹா… அப்போ என் ஜடையை இழுத்து அடிப்பீங்களே அதெல்லாம் சும்மா சீனா…! அன்னைக்கு செல்வியை காப்பாத்தினது கூட என்னை பாலோ செஞ்சி வந்ததால தானா…? என்னால நம்பவே முடியல… ஹா ஹா….’’ மல்லி விடாது சிரித்துக் கொண்டிருந்தாள். 

“ஏண்டி…. நான் எவ்ளோ சீரியஸா ஒரு ப்ளாஷ் பேக் சொல்லி இருக்கேன். நீ என்னடி கொஞ்சம் கூட மதிக்காம சிரிச்சிட்டு இருக்க.’’ என்றான் கடுப்புடன். 

“ஹா ஹா… பின்ன… காதலிச்சேன்… காத்திருந்தேன்னு கதை சொல்லிட்டு… காலேஜ் படிக்கும் போது நான் தான் வலிய வந்து பேசினேன் இல்ல. அப்பவே உங்க அமர காதலை என்கிட்ட சொல்லி இருந்தா… வீட்டுக்கு கல்தா கொடுத்துட்டு உங்க புல்லட் வண்டில ஜாலியா படம் பார்க்க போயிருக்கலாம். அண்ணா பூங்காவுல ஏதாச்சும் ஒரு புதர்ல உக்காந்து திருட்டு முத்தம் கொடுத்து இருக்கலாம். ஒரே ஐஸ்கிரீமை வாங்கி ரெண்டு பேரும் சாப்பிட்டு இருக்கலாம். கோவில் கொடையப்ப உங்க கையால வளையல் போட்டு இருக்கலாம். என்னோட ஆளுன்னு காலேஜ் டைம்லயே என் பிரண்டுங்ககிட்ட உங்களை காட்டி சீன் போட்டு இருக்கலாம். எல்லாம் உங்க வீணாப் போன ரோசத்தால பாழாப்போச்சு…’’ என்றாள் அலுப்பாய். 

“ஏய்… எட்டு வருசமா உன்னை மனசுல சுமந்துகிட்டு அதை வெளிய சொல்ல முடியாம நான் பட்ட அவஸ்தை எனக்கு தாண்டி தெரியும் இன்னைக்கு என் கதையை கேட்டா உனக்கு சிரிப்பா தாண்டி இருக்கும்.’’ என்றவன் திரும்பி படுத்து கொண்டான். 

அவன் அருகில் படுத்து அவனை முதுகோடு அணைத்து கொண்டவள், “மாமா…! எனக்கும் உங்களை மட்டும் தான் பிடிக்கும். செல்வி அவளுக்கு நடந்தது எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டா. அந்த நிமிசத்துல இருந்து எனக்கு உங்க மேல ஒரு மரியாதை வந்தது. கல்யாணம்னு வீட்ல பேச்சு எடுத்ததும் எனக்கு உங்க முகம் தான் மனசுல வந்தது. அதுக்கு பேர் தான் காதலான்னு எனக்கு தெரியாது. ஆனா சொல்லவே முடியாத ஏதோ ஒரு வகையில என் மனசுல உங்களுக்கான இடம் தனியா இருந்தது.’’ என்றவள் கையை இடையில் போட்டு இறுக்கினாள். 

“அப்புறம் அன்னைக்கு உங்க சித்திகிட்ட ஏண்டி அப்படி பேசின…” என்றவன் குரலில் முழுதும் ஆற்றாமை மட்டுமே. “என் மக்கு மாமா…! எங்க சொந்தகாரங்க அத்தனை பேரும் உங்களை கட்டிக்கப் போறேன்னு தெரிஞ்ச நிமிசத்துல இருந்து உங்களை தட்டிக் கழிக்க சொல்லி ஆள் ஆளுக்கு ஒரு வகையில எனக்கு சாம்பிராணி போட்டுட்டு இருந்தாங்க. அவங்க வாயை மூட வைக்க தான் நான் அப்படியெல்லாம் கதை சொல்லிட்டு திரிஞ்சேன். மத்தபடி உள் நோக்கம் ஒன்னும் இல்ல. இதை நீங்க நம்ம கல்யாணம் முடிஞ்சி அன்னைக்கே கேட்டு இருந்தா… இத்தனை வருசமும் நான் தூங்கினதுக்கு அப்புறம் தயங்கி தயங்கி என்னை கொஞ்சி இருக்க வேண்டாம்.’’ என்றாள் கிண்டலாய். 

அவளை பார்த்து திரும்பி படுத்தவன், “உனக்கும் என்னை பிடிக்குமா அச்சு…?’’ என்றான் யுக யுகதிற்குமான காதலை கண்களில் தேக்கி. “எனக்கு உங்களை மட்டும் தான் பிடிக்கும்.’’ என்றாள் மல்லி அதே காதலை கண்களில் பிரதிபலித்து. 

யார் துவங்கியது, யார் முடித்தது என்பது புரியாமலேயே மீண்டும் அங்கு ஒரு அழகான தாம்பத்திய நாடகம் அரங்கேறி முடித்தது. “விடிஞ்சிருச்சு மாமா…’’ என்று மல்லி சிரிக்க, “நாளைக்கே புல்லட் புக் பண்றேன் அச்சு… நாம ஜோடியா சினிமா போலாம். பார்க் புதர்ல உக்காந்து திருட்டு கிஸ் கொடுக்கலாம். ஒரு ஐஸ்கிரீம் வாங்கி ரெண்டு பேரும் சாப்பிடலாம். திருவிழால விக்குற கண்ணாடி வளையல் வாங்கி உன் கைல போட்டு விடுறேன்.’’ என்றான். 

“நாளைக்கு ஈவ்னிங் எனக்கு சென்னைக்கு ட்ரைன்.’’ என்றாள் மல்லி கனத்த குரலுடன். உடனே சுந்தரின் உடல் விரைக்க, மல்லியின் மீதான அவன் அணைப்பு இறுகியது. 

“ஆறு மாசம் தானே மாமா. சீக்கிரம் உங்ககிட்ட ஓடி வந்துடுவேன். அப்புறம் தினம் தினம் நாம தவறவிட்ட காதல் வாழ்கையை வாழ்ந்துடலாம். காதலிக்கும் போது உங்களை கடுப்பாக்கின பிரண்டை, ஏழு வருட திருமண வாழ்க்கைக்கு பின்னும் காதல் வாழ்க்கைன்னு நெருக்கமா நாம எடுத்த செல்பியை ஸ்டேட்டஸா வச்சி கடுப்பேத்தலாம்.’’ என்றாள். 

அவள் உச்சியில் முத்தம் கொடுத்த சுந்தர், “லவ் யூ அச்சுமா…’’ என்றான் உயிர் உருகும் குரலில். “நானும் மாமா…ரொம்ப ரொம்ப….’’ என்றாள் அவனுக்கு குறைவில்லாத அன்பை குரலில் நிறைத்து. 

இவர்கள் காதல் வாழ்க்கைக்கு காத்திருக்க, வரப் போகும் காலம் காலனாய் மாறி சுழன்றடிக்க இருந்ததை இவர்களோடு, மொத்த உலகமும் அறியாதிருந்தது. 

பந்தமாகும்.

      

      

     

    

 

Advertisement