Advertisement

பந்தம் – 21

அலுவலக வளாகத்திற்கு முன் பெரும் படையென மாணவிகள் வரிசை நீண்டிருந்தது. இதற்கு முன் அரசின் செவிலியப் பணியில் இருந்த மாணவிகள் அனைவரும், தங்களின் மேற்கல்வி முடிந்ததும் மீண்டும் செவிலியாய் பொறுப்பேற்க வேண்டிய பணியிடங்களை தேர்வு செய்யும் கலந்தாய்வில் கலந்து கொள்ள காத்திருந்தார்கள். 

கல்லூரியின் இறுதி ஆண்டு தேர்வு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் நிறைவடைந்திருந்தது.  அங்கு நின்று கொண்டிருந்த அனைவர் முகமும் பதட்டத்தில் வேர்த்திருந்தது நடைபெறப் போகும் கலந்தாய்வை எண்ணி. ஆனால் அப்போது கூட வேர்கடலையை தங்கள் வாயில் போட்டு மென்று கொண்டிருந்தது ஐவர் குழு.  

இவர்களுக்கு கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருந்த செந்தாமரை, “இன்னும் கொஞ்ச நேரத்துல கவுன்சிலிங். கொஞ்சமாச்சும் பயம் இருக்கா இவளுகளுக்கு. சொந்த ஊரை வேகன்ட் காட்டுவாங்களோ மாட்டாங்களோன்னு எல்லாரும் பயந்து நின்னுட்டு இருக்கோம். ஆபிஸ் வாசல்னு கூட பார்க்காம, கடலை தொலிய பறக்கவிட்டு தின்னுட்டு இருக்காளுக.  இவளுகளோட…’’ என்று தன் அருகில் இருந்த ரஞ்சனிடம் குறைபட்டுக் கொண்டிருந்தார். 

“சரி விடு தாமரை. இன்னும் ரெண்டு நாள்ல எல்லாரும் அவங்க அவங்க ஊரை பார்த்து கிளம்பப் போறோம். டென்சனா இருந்தா மட்டும் என்ன மாறப் போகுது. நீ மொதோ வெளிய இருக்க மரத்தடியில போய் உக்காரு. கவுன்சிலிங் ஸ்டார்ட் ஆனதும் நான் கூப்பிடுறேன்.’’ என்று மனையாளை மரத்தடி பக்கம் நகர்த்திவிட்டு ஐவர் குழுவை நோக்கி நடந்தார். 

“என்ன கழுதைகளா… ஒன்றை கிலோ கடலையை மொத்தமா மேயுற மாதிரி இருக்கு…!’’ என்று விட்டு மகிழின் கைகளில் இருந்த வேர்கடலையை எடுத்து தன் வாயில் போட்டு கொண்டு, “எப்பவும் ஜாலி தான். எனக்கும் இப்படி இருக்க தான் ஆசை. எங்க என் பொண்டாட்டியை பார்த்தாலே குப்புன்னு வேர்த்துடுது.’’ என்றார். 

உடனே மதி, “தாமரை அக்கா…’’ என ஓங்கி குரல் கொடுக்க, அவர் வாயில் மென்று கொண்டிருந்த கடலை புரைக்கு ஏறி, இரும தொடங்கினார். மரத்தடியில் அமர்ந்திருந்த தாமரை எழுந்து வந்து, “என்ன மதி…?’’ என்று கேட்டதும், “இந்தாங்க…’’ என்று தன் கையில் இருந்த கடலையில் பாதியை அவர் உள்ளங்கைக்கு மாற்றியவர், “சாப்பிடுங்க…’’ என்றாள் பாசமாய். 

அப்போது தான் பீதியில் வெளுத்திருந்த ரஞ்சனின் முகம் சற்றே தெளிந்தது. செந்தாமரை கடலையோடு மரத்தடி நோக்கி நடந்துவிட, “பட்டாசு க்ரூப்புன்னு தெரிஞ்சும் பக்கத்துல வந்தேன் இல்ல என்ன சொல்லணும்.’’ என்றவர், “நீங்க சாப்பிடுங்க நல்லா… சாப்பிடுங்க…’’ என்றுவிட்டு ஓரமாய் நின்று கொண்டிருந்த வேலனை நோக்கி நடந்து விட்டார். 

அதுவரை முயன்று சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்த மல்லி, அவர் நகர்ந்ததும் மெதுவாய் சிரித்தபடி, “பாவம்டி…’’ என்றாள் மதியிடம். அவளோ, “அந்த அக்காவே ஒரு பூனைக்குட்டி. அதை வச்சே அசைன்மென்ட், சார்ட் வொர்க் இப்படி எல்லா வொர்க்கையும் வாங்கிகிட்டு கடைசியா வேர்குதாம் இல்ல இவருக்கு. அதான் சின்னதா ஒரு சவுன்ட் கொடுத்தேன். இப்ப வேர்த்து நடுங்கி நின்னா மட்டும் நேடிவ் பிளேஸ் வேகன்ட் காட்டப் போறாங்களா என்ன…? எல்லாரும் ஏன் இப்படி சாமியாடிட்டு இருக்காங்க.’’ என்றாள். 

“அதாண்டி எனக்கும் புரியல. பாப்போம். நமக்கு நம்ம நம்ம நேடிவ் பிளேஸ் காட்டலைனா எல்லாரும் ஒரே இடத்தை சூஸ் செஞ்சிடலாம்.’’ என்றாள் மகிழ். 

“ஆமாண்டி. அதான் சரி. எல்லாரும் ஒண்ணா இருந்தா ஸ்ட்ரஸ் இல்லாம இருக்கும்.’’ என்றாள் சங்கரி. ரேணு தன் கணவரின் உறவினரான முன்னால் அமைச்சர் ஒருவரின் உதவியோடு தன் சொந்த ஊருக்கு பணி இருப்பிடத்தை உறுதி செய்திருந்தாள். 

அதனால் இந்த பேச்சு வார்த்தையில் அதிகம் ஆர்வம் காட்டாமல் அடங்கி இருந்தாள். வந்ததிலிருந்தே கல்லூரியை கிண்டி கிழங்கெடுத்த ஐவரும், அங்கிருந்த பணி செவிலியர்களில் மிகவும் இளையவர்கள் என்பதால், கடைசியாகவே கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டனர். 

 மதி இவர்களை விட வயதில் பெரியவள் என்பதால் முதலில் அவள் தான் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டாள். அவளுக்கு சேலத்தில் பணி கிடைத்துவிட, அவளுக்கு பின்னால் கலந்தாவில் கலந்து கொண்ட ரேணுவிற்கும் அவளின் ஊரிலேயே பணியானை கிடைத்தது. 

அவளுக்கு பின்னால் இருந்த மற்ற மூவருக்கும் வேறு எந்த ஊர்களையும் தேர்ந்தெடுக்க, வாய்ப்பே வழங்காமல், சிங்கார சென்னையில் புதிதாய் துவங்கியிருந்த கோவிட் மருந்துவமனைகளில் பணியாற்ற ஆணை வழங்கப்பட்டது. 

எப்போதும் தனித்து வசித்து பழகிய மகிழுக்கு அது ஒரு பெரிய பிரச்சனையாக இல்லாது போய் விட , தங்கள் குடும்பத்தை விட்டு பிரிய வேண்டுமே என்று சங்கரியும், மல்லியும் கவலை கொண்டனர்.  

“விடுடி… அடுத்த ஆறுமாசத்துல மறுபடி ஒரு ட்ரான்ஸ்பர் கவுன்சிலிங் வரும். அப்போ நமக்கு நேடிவ் கண்டிப்பா கிடைக்கும்.’’ என்று சங்கரி மல்லியை தேற்றிக் கொண்டிருந்தாள். மகிழும், “தெரியாத வேற வேற ஊருல மூணு பேருக்கும் தனித் தனியா போஸ்டிங் கொடுத்து இருந்தா இன்னும் கஷ்டமா போயிருக்கும்.’’ என்று இருவருக்கும் பொதுவாக தைரியம் சொன்னாள். 

கலந்தாய்வு முடிந்ததும், தோழிகள் ஐவரும் வழக்கமான தேநீர் கடையில் குழுமினர். யார் முகத்திலும் மருந்துக்கும் புன்னகையில்லை. வாடி அமர்ந்திருந்த அவர்களை  கண்ட கடைக்காரர், “என்னாச்சும்மா…?’’ என்று அக்கறையோடு விசாரிக்க, “ஒன்னும் இல்ல அண்ணா. இன்னும் ரெண்டு நாள்ல எங்க காலேஜ் லைப் முடியுது அதான்.’’ என்றாள் மகிழ் விளக்கம் கொடுக்கும் தொனியில். 

“அப்போ… இனி நீங்க டெய்லி கடைக்கு வர மாட்டீங்களா…?’’ என கேட்டவரின் முகம் அவர்களை விட சோகமாய் மாற, ஐவர் முகத்திலும் லேசான புன்னகை. “ஐயோ அண்ணா…! அப்படியெல்லாம் தப்பா யோசிக்காதீங்க. அந்த சர்பிகட் இந்த சர்டிபிகேட் அது இதுன்னு எப்படியும் வருசத்துக்கு ரெண்டு முறை இங்க வருவோம். அப்ப கண்டிப்பா உங்க கடைக்கு வந்துட்டு தான் போவோம்.’’ என்றாள் மகிழ். 

அவள் அப்படி சொன்னதும் கடைக்காரரின் முகம் புன்னகையில் விரிந்தது. “இனி உங்க சத்தம் இல்லாம சாயங்கால நேரம் கடை வெறிச்சோடி இருக்க போகுது.’’ என்றவர், தான் கையில் வைத்திருந்த தேநீர் குவளைகளை மேஜையில் வைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தார். 

தேநீர் அருந்தும் நேரத்தில் கூட சலசலக்கும் தோழிகள் அன்றைக்கு மௌனத்தில் ஆழ்ந்தனர். பிரிவாற்றாமை ஒரு மாயப் போர்வையாக அவ்விடத்தை சூழ்ந்திருந்தது. தேநீர் முடிந்த பின்பும் அவர்கள் அப்படியே அமர்ந்திருக்க, மகிழ் தான், “போலாமா… நேரம் ஆச்சு…!’’ என அந்த மௌனத்தை உடைத்தாள். 

எப்போதும் பள்ளிக் கூட குழந்தை போல பையை தூக்கிக் கொண்டு மாலை நேரத்திற்காய் ஆவலாய் காத்திருக்கும் மதி, “மெதுவா தான் போனா என்ன இப்போ…? நாளைக்கு சாயங்காலம் இதே நேரம் நாம எல்லாரும் ஒண்ணா மறுபடி இங்க இருக்க முடியுமா…?’’ என கரகரத்த குரலில் கேட்டாள். 

உடனே அவளின் அருகில் அமர்ந்திருந்த மல்லி, மதியின் கரங்களை பற்றிக் கொள்ள, இடப்புறம் இருந்த சங்கரியின் விழிகளில் பிரிவின் கண்ணீர். சில நொடிகள் என்றாலும் ஐவரின் கண்களும் கலங்கிவிட, முதலில் தன்னை தேற்றிக் கொண்ட மல்லி, “இப்ப என்ன…? அடிக்கடி நேர்ல பாத்துக்க முடியாது அவ்ளோ தானே. டெய்லி நைட் தூங்குறதுக்கு முன்னாடி எல்லாரும் கான்பிரன்ஸ் விடீயோ கால் போட்டு கடலை வறுக்குறோம். சரியா…?’’ என்றாள். 

உடனே மகிழ், “சரி… அப்படி கஷ்டப்பட்டு வறுத்த கடலையை யார்கிட்ட விக்குறது…?’’ என்றாள் சிரிப்புடன். உடனே சங்கரி கலங்கிய விழிகளை துடைத்துக் கொண்டே, “ம்…. டெய்லி போன் சூடாகி வெடிக்கிற அளவுக்கு கடலை போடுற மிஸ்டர் பாண்டியன்கிட்ட தான்.’’ என்றாள். 

உடனே நால்வரும் மாறி மாறி, ஹை பை கொடுத்துக் கொள்ள, மகிழ் செல்லமாய் முகத்தை சுருக்க, அவ்விடத்தில் மீண்டும் புன்னகை மலர்ந்தது. மேலும் ஒரு அரைமணி நேரம் அமர்ந்து அளாவளாவி முடித்தவர்கள், கிளம்ப மனமின்றி தங்கள் ஊரை நோக்கி கிளம்பினர். 

தனக்கு சென்னையில் பணிமாறுதல் கிடைத்திருப்பதை மகிழ் தன் வீட்டாரிடம் பகிர, அவர்களோ உடனடியாக அவளின் திருமணத்தை முடிக்க வேண்டும் என்று நின்றனர். அதுவரை தந்தையிடம் போராடி பார்த்தவள், இறுதியில் வேறு வழியின்றி தன் தாயிடம் நடப்பை தெரிவித்தாள். 

அவரோ, “இங்க பாரு உனக்கும் வயசு ஏறிட்டே போகுது. நீ அந்த பையன் அட்ரஸ் கொடு. நானே தனியாவாவது போய் பேசி முடிச்சிட்டு வரேன். உங்க அப்பா, ஜாதி, சனம்னு இன்னும் அந்த பழைய பஞ்சாங்கத்தை தான் பிடிச்சிட்டு தொங்கிட்டு இருப்பாரு. அதெல்லாம் வேலைக்கு ஆகாது. எனக்கு வேண்டியது எல்லாம், கல்யாணம் செஞ்சி, நீயும் குழந்தை குட்டின்னு சந்தோசமா ஒரு வாழ்க்கை வாழ்றதை பார்க்கணும். அவ்ளோதான்.’’ என்றார். 

மகிழும் முடிந்த வரை தன் தந்தையிடம் வாதாடி பார்த்தவள், இறுதியில் தன் தாயிடம் மாறவர்மனின் வீட்டு முகவரியை கொடுத்து விட்டு அடுத்து என்ன நடந்தாலும் பார்த்து கொள்வோம் என்று சென்னையில் வீடு பார்க்கும் படலத்தை ஆரம்பித்திருந்தாள். 

சங்கரி ஆரம்பத்தில் சோகமாக இருந்த போதும், மீதமிரு தோழிகள் தன்னோடு துணை இருப்பார்கள் தானே என்ற எண்ணத்தில் மனதை தேற்றி கொண்டு சென்னை பயணத்திற்கு தயாராகிவிட்டாள். 

மல்லி தனக்கு சென்னைக்கு பணியிட ஆணை கிடைத்திருப்பதை வீட்டில் சொன்னதும் அங்கு ஒரு பெரிய பூகம்பமே வெடித்தது. அவளின் அம்மா முதல் ஆளாக, “இந்த கருமத்துக்கு தான் மேலயும் படிக்க வேணாம், கீழயும் படிக்க வேணாம்னு தலைப்பாடா அடிச்சிகிட்டேன். யார் என் பேச்சை கேட்டா…? இப்போ அவன் பாட்டுக்கு சென்னைக்கு தூக்கி போட்டுட்டான். இனி என்ன செய்றது…’’ என்று அவர் தன் புலம்பலை தொடர, அவள் தந்தையோ அமைதியாக இருந்து, தன் மனையாளின் கூற்றை ஆமோதித்தார். 

பாரிக்குமே மூன்று குழந்தைகளையும் தான் ஒருவரே கவனித்து, சமையல் மற்றும் குடும்ப வேலைகளையும் நிர்வகிக்க வேண்டும் என்று எண்ணிய மாத்திரத்தில் சற்று கிறுகிறுத்து தான் போனது. 

“நம்ம தொகுதி எம்.எல்.ஏ ராசாக்கண்ணுகிட்ட பேசி நம்ம ஊரு ஆஸ்பத்திரியில வேலை போட சொல்ல முடியாதா சுந்தரு…’’ என மகனிடம் விசாரித்து கொண்டிருந்தார். 

“மா… இப்போ எலக்சன் டைம். எதுவும் செய்ய முடியாது.’’ என்றான் சுந்தர் ஆற்றாமையோடு. மல்லியை கட்டாயப்படுத்தி ஏன் உயர் கல்விக்கு அனுப்பி வைத்தோம் என்று தற்சமயம் மனதிற்குள் வருந்திக் கொண்டிருந்தான். 

ஆள் ஆளுக்கு வெளியே  ஆர்பரித்து கொண்டிருக்க, மல்லி அருகில்லாத நாட்களை எப்படி கடத்தப் போகிறோம் என்ற பெருங்கவலையில் ஆழ்ந்து போனான் சுந்தர். குடும்பமே ஆளுக்கு ஒருவிதத்தில் முகாரி ராகம் பாடிக் கொண்டிருக்க, தன் அன்னையின் கைகளை அருகில் வந்து பற்றிக் கொண்ட ஜான்சி, “மா…! நீ டூட்டிக்கு போனா தான் கொரோனா கூட பைட் செய்ய முடியும் இல்ல. நீ டூட்டிக்கு போ மா. நான் தம்பியை பார்த்துக்கிறேன். சீக்கிரம் கொரோனாவை வின் பண்ணிட்டு வா. அப்போ தான நாங்க எல்லாம் மறுபடியும் ஸ்கூலுக்கு போக முடியும்.” என்றாள்.  

அதுவரை தங்கள் சொந்த பிரச்சனையில் மூழ்கி இருந்த சொந்தம், அப்போது தான் நிலவரத்தை உணர்ந்தது. ‘என்னதான் கற்றாலும், சுய நலமாய் சிந்திப்பதில் நானும் ஒரு சாதாரண மனிதனாக தானே இருக்கிறேன்’ என்று மனதிற்குள் தன்னையே வைது கொண்ட சுந்தர், “சரி… ஆள் ஆளுக்கு புலம்பாதீங்க. மல்லி கூட படிச்ச ரெண்டு பிள்ளைகளும் அங்க தான் வேலை செய்ய போறாங்க. ட்ரைன் எல்லாம் ஓடிட்டு தானே இருக்கு. வாரம் ஒரு முறை ஊருக்கு வந்துடுவா. என்ன ஒரு ஆறு மாசம் தானே. சட்டுன்னு ஓடிரும். தேர்தல் முடிஞ்சதும் கண்டிப்பா மறுபடி ஒரு கவுன்சிலிங் வைப்பாங்க. அதுல மல்லிக்கு நம்ம ஊர் ஜி.எச் கிடைச்சிரும். நடந்ததையே பேசிட்டு இருக்காம இனி ஆக வேண்டியதை பார்ப்போம்.’’ என்ற பிறகே மற்றவர்களின் வாய்ப் பேச்சு ஓய்ந்தது. 

நாளை மாலை சென்னைக்கு கிளம்ப வேண்டும் என்ற எண்ணமே மல்லியை சோர்வடைய செய்தது. மகிழ் மூவருக்கும் சேர்த்து ஒன்றாக ஒரே வீடாக எடுத்து தங்கிவிடலாம் என்று சொல்லியிருந்ததால், மல்லி தனக்கு தேவைப்படும் சுய உடமைகளை மட்டும் எடுத்து வைத்து கொண்டிருந்தாள். 

அடிக்கடி மகனை தூக்கி இடுப்பில் வைத்து கொண்டாள். பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை, மகள்களின் கன்னத்தில் முத்தமிட்டு கொண்டிருந்தாள். அவளை பார்க்கும் போது பாரிக்கே பாவமாக போனது. 

முதலில் அதிக பொறுப்புகளை சுமக்க வேண்டுமே என்று தயங்கியவர் கூட, “இந்தா பிள்ள… சும்மா மருகிட்டு கிடக்காத. எண்ணி ஆறே மாசத்துல ஊருப் பக்கம் வந்துடுவ. நீயா வராட்டியும் என் புள்ள யாரைப் பிடிச்சாவது உன்னை வர வச்சிடுவான். தைரியமா இரு.’’ என்று மருமகளை தேற்ற தொடங்கினார். 

இரவு மூன்று குழந்தைகளுக்கும் தானே உணவை ஊட்டியவள், அவர்கள் உறங்கிய பிறகும் கூட அவர்களை வருடிக் கொடுத்தபடி அருகிருந்தாள். நேரமாகியும் மருமகள் உறங்காது இருப்பதை கண்டவர், “போய் படு போ…’’ என்று அரட்டிய பிறகே மாடி அறையை நோக்கி நடந்தாள். 

மாடி அறைக்குள் நுழைந்ததை மட்டுமே மல்லி அறிந்திருந்தாள். அவள் கதவை பூட்ட திரும்பிய நொடி, சுந்தர் அவளை பின்னிருந்து அணைத்திருந்தான். “மாமா… என்ன செய்றீங்க…’’ என்ற அவளின் பதட்ட கேள்வியை புறம் தள்ளியவன், தானே கதவை பூட்டி விட்டு மனைவியோடு தரையில் விரிக்கப்பட்டிருந்த பாயில் சரிந்தான். 

Advertisement